Monday, December 30, 2024

Story of Appaya dikshitar

மகான் ஸ்ரீஅப்பைய தீட்சிதர்  

ஒருமுறை காஞ்சிபுரத்தில் இவர் செய்த யாகத்தில் அந்நாளைய வழக்கப்படி 17 ஆடுகளை பலி கொடுத்தார். 

இதில் அவருக்கு விருப்பமில்லை என்றாலும் மற்றவர்கள் கேட்டுக்கொண்டதால் இந்த பலி கொடுக்கும்படி ஆனது. 

இதைக் கண்டித்து அங்கு வந்த சில அறிஞர்கள் இவருடன் வாதம் செய்தனர். 

உயிர் இழந்த ஆடுகள் புனித யாகத்தின் விளைவாக சொர்க்கத்தைத்தான் அடைந்து இருக்கின்றன என்று அப்பையர் கூறினார். 

கடுமையான வாதத்தில் அப்பையர் வென்றாலும், ஆடுகள் யாகத்தில் பலியானது அவருக்கு உறுத்தலை தந்தது. 

எனவே தனது ஆன்மபலத்தால் ஆடுகளின் நிலையை நோக்கினார். 

அப்போது அவை மாலைகள் அணிந்து சொர்க்கம் புகுவதைக் கண்டார். 

தான் மட்டும் இல்லாது, தன்னுடன் வாதம் செய்த அத்தனை பேரையும் அந்தக் காட்சியை காணும்படிச் செய்தார். 

அவரைத் திட்டிய அத்தனை பேரும் மனம் திருந்தி இவரை வணங்கினர். 

ஒரு முறை ஸ்ரீரங்கம் சென்ற போது அவரைக் கோவிலுக்குள் செல்ல அனுமதிக்கவில்லை. ஹரியும் ஹரனும் ஒன்றே, சிவ வைஷ்ணவ பேதம் கூடவே கூடாது என்று சொல்லிப் பார்த்தார் தீக்ஷிதர். ஆனால் கோவில் அர்ச்சகர்கள் இவரது வாதத்தை ஏற்கவில்லை. உடனே திருமாலை சிவனாக எண்ணி இவர் பாடலானார். உடனே திருமாலே சிவச் சின்னங்களுடன் அங்குள்ள வைணவர்களுக்குக் காட்சியளிக்க அனைவரும் தீக்ஷிதரது மேன்மையை உணர்ந்து அவரை கோவிலுக்குள் மரியாதையுடன் அழைத்துச் சென்று கௌரவப்படுத்தினர் 

சென்னையில் அவர் வந்து சில காலம் தங்கி இருந்தார். அவர் தங்கி இருந்த இடம் வேத ஸ்ரேணி. இப்போது அது பெயர் மருவி வேளச்சேரி ஆகி விட்டது. அங்கு கருணாம்பிகை சமேத தண்டீஸ்வரர் ஆலயத்தின் அருகே ஒரு குளத்தை வெட்டினார். அங்கு அம்மனின் காலடியில் ஸ்ரீசக்ரத்தையும் ஸ்தாபித்தார். அவர் அமைத்த குளம் அப்ளாங்குளம் என்று பெயர் மருவி இன்று ஐ ஐ டி காம்ப்ளெக்ஸில் உள்ளது.  

சின்ன பொம்ம நாயக்கரின் அரசவையில்  அரசர் உள்ளிட்ட யார் வந்தாலும், வணங்கினாலும் தமது இடது கரத்தை தூக்கியே ஆசீர்வதிப்பார். 

இது அவரின் எதிரிகளுக்கு எரிச்சலை தந்தது. 

அரசரிடம் இது பற்றி புகார் தெரிவித்ததுடன், அப்படிச் செய்வது மற்றவர்களை அவமதிப்பதுபோல் ஆகும் என்றும் கூறினர். 

இது குறித்து விசாரணையும் வந்தது. சகல சாஸ்திரங்களிலும் புலமை கொண்ட அப்பையர்,  'வேத வேதாந்த விஷயங்களில் புலமை கொண்ட, ஆச்சார அனுஷ்டானங்களில் சிரத்தை கொண்ட, ஒரு உண்மையான பிராமணனின் வலது கரத்தில் அக்கினி வசிப்பார் என்பது வேதம் சொல்லும் உண்மை. எனவேதான்தான் வலது கரத்தால் ஆசீர்வதிப்பதில்லை என்றும், அவ்வாறு வலக்கரத்தால் ஆசீர்வதித்தால் அவர்கள் எரிந்து போவார்கள்' என்றும் கூறினார். 

இது பொய் என்று அவரது எதிரிகளால் சொல்லப்பட்டது. இதனால் அதை மெய்ப்பிக்க வேண்டிய நிலைக்கு அப்பையர் வந்தார். 

அரசர் உருவம் வரையப்பட்ட துணியை தமது வலது கரம் தூக்கி அவர் ஆசீர்வதித்தார். 

அவ்வளவுதான் அந்த துணி திகுதிகுவென எரியத்தொடங்கியது. அரசர் உள்ளிட்ட அனைவரும் அவரிடம் மன்னிப்புக்கோரி தீயை அணைக்குமாறு கேட்டுக்கொண்டனர். 

ஒரு முறை சின்ன பொம்ம நாயக்கர் விலை உயர்ந்த சால்வையை தீட்சிதருக்கு அணிவித்தார். 

மறுநாள் யாகத்தில் அந்த சால்வையை ஸ்ரீநடராஜருக்கு ஆகிருதியாக 
அக்னி குண்டத்தில் போட்டார். 

மன்னரை அவமதித்ததாக சொல்லி
மன்னர் முன் நிறுத்தப்பட்டார்.
மன்னர் ஏன் இப்படி சால்வையை  தீயில் போட்டீர்கள்
என்னை அவமானப்படுத்தும் செயலில் ஈடுபட்டீர்கள் என்றார். 

அதற்கு தீட்சிதர்
அந்த சால்வை என்னிடம் இருப்பதை விட சிதம்பரம் ஸ்ரீ நடராஜபிரானிடம் இருப்பதே மேல் என நினைத்து அவருக்கு அனுப்பிவிட்டேன் என்றார். 

நீங்கள் வேண்டுமானால் போய் 
சிதம்பரத்தில் பாருங்கள் என்றார். 

மறுநாள் காலை சிதம்பரம் சென்றார் மன்னர்.
கோவிலை திறந்த தில்லை வாழ் தீட்சிதர்கள் 
இறைவனின் மேல் சால்வை இருப்பதை கண்டு அதிர்ந்தனர். 

மன்னரும் அந்த சால்வையை கண்டு அதிர்ந்தார்.
ஊர் திரும்பிய மன்னர் அப்பைய தீட்சிதரின் கால்களில் வீழ்ந்து நமஸ்கரித்தார். 

வாழ்நாள் எல்லாம் சிவப்பணி செய்து வாழ்ந்த இந்த மகான், தில்லை சிவபெருமானோடு கலந்து மோட்சம் அடைந்தார். சைவசமயம் வளர்ச்சிக்கும் மக்களின் ஆன்மிக வழிப்பாட்டிற்கும் பாடசாலை அமைத்து ஆன்மிக நூல்களையும் வழங்கி சேவை செய்த அப்பைய  தீட்சிதர் இந்து மதத்தின் மாணிக்கக் கல் என்றே போற்றப்படுகிறார். 

அவர் மஹாவிஷ்ணுவிடம் தனக்குள்ள பக்தியைக் காண்பிக்கும் வண்ணம் வரதராஜ ஸ்தவம் என்ற நூலை இயற்றினார். அவரது அபீதகுசாம்பாள் ஸ்தோத்திரம் அவருக்கு தேவியிடம் உள்ள பக்தியைக் காண்பிக்கிறது. சூரியனிடம் உள்ள பக்தியினால் ஆதித்ய ஸ்தோத்ர ரத்தினத்தை அவர் இயற்றினார்ஆதிசங்கர பகவத்பாதாளின் பிரம்மசூத்ர பாஷ்யத்திற்கு வாசஸ்பதி மிஸ்ரர் என்பவர் இயற்றிய பாமதி என்ற உரை மிகவும் போற்றப்படும் ஒரு உரையாகும். அதற்கு அமலானந்தர் என்பவர் கல்பதரு என்ற சற்று கடினமான ஒரு உரையை எழுதியுள்ளார். இந்த கல்பதருவை அனைவரும் புரிந்துக் கொள்ளும் வகையில் எளிதாக்கி அப்பைய தீக்ஷிதர் பரிமளம் என்ற ஒரு உரையை எழுதினார். இது மிகவும் பிரசித்தி பெற்ற நூலாகும். 

வயதான காலத்தில் ஒரு நாள் அவர் சிதம்பரம் நடராஜரை தரிசிக்கச் சென்று பஞ்சாக்ஷரத்தை ஜபித்தவாறே படியேறியதை கோவில் தீக்ஷிதர்கள் பார்த்தனர். அன்று சைத்ர பூர்ணிமை. காலை முதல் முகூர்த்தம். நடராஜரின் கற்பூர நீராஜன சமயம். அப்போது அவர் சந்நிதியில் அப்படியே நடராஜரோடு ஐக்கியமானதை அவர்கள் கண்டனர். 

அப்போது அவர் கூறிய ஸ்லோகம் :- ஆபாதி ஹாடகஸபா நடபாத பத்ம 

  ஜ்யோதிர்மயோ மனஸிமே தருணாருனோஓ(அ)யம் 

இதன் பொருள் :- வானில் பொன் ஒளியோடு சூரியன் திகழ்வதைப் போல நடராஜரின் திவ்ய பொற்றாமரையின் அழகு என் கண்ணைப் பறிக்கிறது…." இப்படி பாதி ஸ்லோகம் சொல்லும் போதே அவர் நடராஜருடன் கலந்தார். இதன் மீதி பாதியை அவரது சகோதரரின் பேரனான  நீலகண்ட தீக்ஷிதர் பின்னால் நிறைவு செய்தார். 

அப்பைய தீக்ஷிதர் 1593ஆம் ஆண்டு 73ஆம் வயதில் நடராஜருடன் கலந்தார்.

இவரது அதிஷ்டானம்
கும்பகோணம் மயிலாடுதுறை சாலையில் உள்ள திருவாலங்காட்டில் காவிரிகரையில் 
உள்ள விநாயகர் கோவில் முன் 
அமைந்துள்ளது.

தீட்சிதருடைய கடைசி காலத்தில் அவருக்கு ஒருவித வயிற்று வலி (சூலை நோய்) அவரை மிகவும் வாட்டி வதைத்தது.
அவர் சிறந்த யோக சக்திகள் உடையவராதலால், தியானம் செய்யவோ அல்லது யாராவது முக்கியப்பட்டவருடன் பேச வேண்டியிருந்தாலோ, ஒரு தர்ப்பை புல்லை அருகே போட்டு , அந்த புல்லின் மேல் அந்த வலியை தன் தவ சக்தியால் இறக்கி வைத்துவிட்டு, தன் வேலையில் ஈடுபடுவாராம்...!
அந்தப் புல்  அது பாட்டுக்கு இப்படி அப்படி என்று துள்ளிக்கொண்டே இருக்குமாம். பிறகு வேலை முடிந்தவுடன் புல்லிடமிருந்து அந்த வலியை திரும்ப தனக்குள் வாங்கிக் கொள்வாராம்.
         ஒரு சமயம் அவர்  ஒரு பண்டிதருடன்  வாதத்தில் ஈடுபட நேர்ந்தபோது, வழக்கம் போல, தமது வலியை தற்காலிகமாக தர்ப்பை புல்லின் மேல் இறக்கி வைத்துவிட்டு வாதம் புரியலானார்.
     புல்லும் அது பாட்டுக்கு துள்ள ஆரம்பித்தது. ....ஒரு கட்டத்தில் வாதம் மிகவும் தீவிரமடைய, உட்கார்ந்திருந்த இருவரும் நின்றுகொண்டு வாதம் புரியலாயினர். புல்  துள்ளுவது அதிகரித்து , சற்று உயரமாகவே துள்ள ஆரம்பித்தது.
     இதை ஆச்சரியத்துடன் கண்ணுற்ற  அந்த பண்டிதர் தீட்சிதரிடம், 
"இவ்வளவு தவ வலிமை கொண்ட நீங்கள் ஏன் நிரந்தரமாக அந்த வலியை போக்கிகொள்ளக்கூடாது? எதற்கு புல்லின் மீது இறக்கி வைத்துவிட்டு திரும்பவும் ஏற்றுக்கொள்கிறீர்கள்?" 
என்று கேட்டார்.
"இந்த வயிற்று வலி என் கர்ம வினையால் எனக்கு வந்தது. ...நமது முந்தைய செயல்களினால் ஏற்படும் கர்ம வினையை எப்படியும் அனுபவித்துத் தான் ஆகவேண்டும். ....அதிலிருந்து தப்பிக்க எண்ணக் கூடாது. முற்பிறப்பில் நான் செய்த சிறு பாவத்தின் பலன் தான் இந்த சூலை நோய். ..! இப்போது நான் இதை அனுபவிக்கவில்லை எனில், இதை அனுபவிப்பதற்காக இன்னொரு பிறவி எடுக்க நேரிடும். ! அதற்காகத் தான் புல்லின் மீது இறக்கி வைத்துவிட்டு திரும்பவும் ஏற்றுக்கொள்கிறேன்!" என்றாராம்.

இவர் எழுதிய மிகப் பிரபலமான மார்க்கபந்து ஸ்தோத்ரம் வேலூர் பக்கத்தில் உள்ள விரிஞ்சிபுரம் மார்க்கபந்தீஸ்வரர் ஆலயத்தில் எழுதப்பட்டது

No comments:

Post a Comment