Monday, December 30, 2024

16th thiruppavai tamil explanation

திருப்பாவை 16 – நாயகனாய் நின்ற
.
ஸ்ரீமதே இராமானுஜாய நம:
ஸ்ரீமத் வரவரமுநயே நம:
.
நாயகனாய் நின்ற நந்தகோப னுடைய
கோயில் காப்பானே! கொடித்தோன்றும் தோரண
வாயில் காப்பானே! மணிக்கதவம் தாள் திறவாய்!
ஆயர் சிறுமிய ரோமுக்கு அறைபறை
மாயன் மணிவண்ணன் நென்னலே வாய்நேர்ந்தான்
தூயோமாய் வந்தோம் துயிலெழப் பாடுவான்
வாயால் முன்னம் முன்னம் மாற்றாதே அம்மாநீ!
நேய நிலைக்கதவம் நீக்கேலோர் எம்பாவாய்!
.
இதற்கு முந்தைய பத்து பாசுரங்களில், பத்து கோபிகைகளை – ஆய்ப்பாடியைச் சேர்ந்த பெண்பிள்ளைகளை எழுப்பிய ஆண்டாள், அவர்களுடன் நந்தகோபருடைய இல்லத்திற்கு வந்து சேர்ந்தாள். பகவான் க்ருஷ்ணன் இருக்கக்கூடிய அந்த திருமாளிகையில், க்ஷேத்ராதிபதிகள், துவார பாலகாதிபதிகள் என்று கட்டுக்காவல் அதிகமாக இருக்கிறது. அங்கே வாயிலில் இருக்கும் முதல் நிலை, இரண்டாம் நிலை காவல் காப்போர்களை இரைஞ்சி, அவர்களுடைய உயர்வைச் சொல்லி, உள்ளே செல்ல அனுமதி கேட்கிறார்கள். இங்கே இவர்களுக்கு உள்ளே இருக்கும் கண்ணன் தான் உத்தேஸ்யம் என்றாலும், அதை அடைய நடுவில் என்ன தடை நேருமோ என்று பயந்து, எதிர்படுகிறவர்களை எல்லாம் அடிபணிந்து வேண்டுகிறார்கள்.
.
நந்தகோபர் ஆய்ப்பாடி கோபாலர்களுக்கெல்லாம் நாயகர். அவருடைய திருமாளிகையில், கோவிலுக்கு த்வஜ ஸ்தம்பத்தைப்போல, கொடிக்கம்பம், தோரணங்களால் அலங்கரிக்கப்பட்ட வாயில், அதில் மணிக்கதவம் என்று அழகாக இருக்கிறது. இவற்றுக்கு காவலும் இருக்கிறது. இதற்கு முந்தைய சில பாசுரங்களைப் போல், இந்த பாசுரத்திலும் பூர்வாசார்யர்கள் தம் உரைகளில், ஆண்டாளுடைய குழுவும், காவலாளிகளும் பேசுவதாக ஆச்சர்யமாக அருளியிருக்கிறார்கள்.
.
இவர்கள் கண்ணன் மேலுள்ள த்வரையினால், விடிந்தும் விடியாத காலைப்பொழுதில், கிளம்பி வந்திருக்கிறார்கள். நந்தகோபரின் காவல்காரர்களை பரமனின் ரக்ஷணத்துக்கு சஹாயம் செய்பவர்களாக கொண்டு, அவர்கள் பெயரைச் சொல்லி அழைக்காமல், அவர்களது கார்யத்தை, அதன் பெருமையைச் சொல்லி அப்பேர்ப்பட்ட இடத்தில் இருப்பவர்களே, எங்களை கதவைத்திறந்து உள்ளே அனுமதியுங்கள் என்று கேட்கிறார்கள்.
.
நாயகனாய் நின்ற நந்தகோபருடைய கோயில் காப்போனே! கொடித்தோன்றும் தோரண வாயில் காப்பானே! என்று காவலர்களை அழைத்து, மணிக்கதவை திறந்து எங்களை உள்ளே செல்ல அனுமதியுங்கள் என்று இறைஞ்சுகிறார்கள். 'பயமுள்ள க்ஷேத்ரத்திலே மத்யராத்ரத்திலே' வந்து மணிக்கதவம் தாள் திறவாய்! என்று கேட்கிறீர்களே! நீவிர் யாவர்' என்று காவலாளிகள் கேட்கிறார்கள். பயமுள்ள க்ஷேத்ரம் என்று ஆய்ப்பாடியை பூர்வாசார்யர் திருஅயோத்தியோடு ஒப்பிட்டு குறிப்பிடுகிறார்.
.
இது ராமனுக்கு அனுகூலமான அவனுக்கு ஒரு ஆபத்துக்களும் ஏற்படுத்தாத அயோத்தி அல்ல – இது ஆய்ப்பாடி, இங்கே கண்ணனுக்கு எத்தனையோ ஆபத்துக்கள் முளைத்துக் கொண்டே இருக்கின்றன. முளைக்கும் பூண்டுகளெல்லாம் விஷப்பூண்டுகளாய் இருக்கின்றன. அசையும் சகடம், அசையாத மரம், பெண் உருவில் பூதனை, குதிரை, யானை, கொக்கு என்று எல்லாம் கண்ணனுக்கு தீமை செய்யக்கூடியதாய் இருக்கிறது. அதனால் நாங்கள் விழிப்புடன் காவல் காக்க வேண்டியிருக்கிறது. நீங்கள் யார் என்றும் எதற்காக வந்திருக்கிறீர்கள் என்றும் சொல்லுங்கள் என்று கேட்க, ஆண்டாள், 'நாங்கள் ஆயர் சிறுமியரோம்!' என்று பதில் சொல்லுகிறாள். இதற்கு காவலாளிகள், நீங்கள் சிறுமிகள் என்றோ, ஆயர் குலத்தவர் என்றோ பார்த்து நாங்கள் உங்களை அனுமதிக்க முடியாது. பெண்களிலே சூர்ப்பநகை போன்ற அரக்கிகள் இருந்திருக்கிறார்கள். ஆயர் குலத்தவராக பூதனை வேடமிட்டு கண்ணனை கொல்ல வந்தாள். ஆகவே நீங்கள் ஆய்ப்பாடி சிறுமிகளாகவே இருந்தாலும், இந்த நேரத்துக்கு வந்தது ஏன்? என்று கேட்கிறார்கள் காவலாளிகள்.
.
ஆண்டாள் அதற்கு பதிலாக 'அறை பறை' என்று நாங்கள் எங்கள் பாவை நோன்புக்கு பறை போன்ற சாதனங்களைப் பெற்றுப் போகவே வந்தோம். அவற்றைத் தருவதாக அந்த மாயன் மணிவண்ணனே, எங்களுக்கு வாக்கு கொடுத்திருக்கிறான். அதன் பொருட்டு, அவனிடம் அவற்றைப் பெற்றுபோக, தூய்மையான மனத்தினராய் வந்தோம் – துஷ்க்ருத்யங்கள் செய்யும் எண்ணம் சிறிதும் இல்லை, என்று ஆண்டாள் சொல்கிறாள். சரி, பெருமானே வாக்கு கொடுத்தானோ! அப்படியானால் சரி, ஆனாலும் சந்தேகம் இருக்கிறது என்று காவலாளிகள் தர்ம சங்கடத்தில் தவிக்க, இவர்கள், 'வாயால் முன்னம் முன்னம் மாற்றாதே அம்மா!' என்று கதறுகிறார்கள். மாற்றி மாற்றி பேசாதே, உள்ளே அவன் இருக்க, வெளியே நாங்கள் இருக்க, ஏற்கனவே தவித்து போயிருக்கிறோம். எங்களை இதற்கு மேலும் சோதிக்காதீர்கள் என்று பதறுகிறார்கள்.
.
இதற்கு மனமிரங்கிய காவலர்கள், சரி போங்கள் என்று அனுமதிக்கிறார்கள். ஈஸ்வரன் இருக்கும் இந்த மாளிகையில், அசேதனங்கள் கூட அவனுக்கு அனுகூலமாக இருக்கின்றன. இந்த கதவு இருக்கிறதே, வெளியே க்ருஷ்ண விரோதிகள் வந்தால் அனுமதிக்காமலும், உள்ளே நுழைந்து விட்ட பக்தர்களை, வெளியே விடாது அவனுடனே இருக்க பண்ணுவதுமாக அசேதனங்கள் கூட அவனிடத்தில் ப்ரேமை கொண்டிருக்கின்றன. 'அநதிகாரிகளுக்கு அவனை உள்ளபடி காட்டாதேப்போலே, ஆத்மஸ்வரூபம், ஸ்வைவலக்ஷண்யத்தாலே, அதிகாரிகளுக்கும் பகவத் விஷயத்தை மறைக்கக் கடவதாயிருப்பது' என்று சொல்கிறார் பூர்வாசார்யர். இந்த கதவுகள் தம் இயல்பால் பகவத் பக்தர்களுக்கும் உள்ளே விட மறுப்பவையாய் இருக்கின்றன. அதனால் இந்த க்ருஷ்ண ப்ரேமையுள்ள கதவை நீங்களே திறந்து உதவுங்கள் – நேச நிலைக்கதவம் நீக்கேலோர் எம்பாவாய்! என்று கேட்க, காவலர்களும் திறந்து இவர்களை உள்ளே அனுமதிக்கிறார்கள்.
.
ஸ்ரீ ஆண்டாள் திருவடிகளே ஸரணம்.🙏
.
ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்.🙏

திருப்பாவையின் உள்ளுறைப் பொருள்--ஸ்வாபதேச அர்த்தம் --பதிவு 17
        🙏👌🙏👌🙏👌🙏👌
பாசுரம் -16:

"நாயகனாய் நின்ற நந்த கோபனுடைய,
கோயில் காப்பானே ! கொடித் தோன்றும் தோரண
வாசல் காப்பானே !மணிக் கதவம் தாள் திறவாய் !
ஆயர் சிறுமியரோ உமக்கு அறை பறை,
மாயன் மணி வண்ணன் நென்னலே வாய் நேரந்தான் !
தூயோமாய் வந்தோம் ,துயில் எழப் பாடுவான்!
வாயால் முன்னம் முன்னம் மாற்றாதே, அம்மா நீ !
நேச நிலைக் கதவம், நீக்கேலோ ரெம்பாவாய் !"

இப் பாசுரத்தில்,முன்பு உணர்த்தினவர்களும், உணர்ந்தவர்
களும் எல்லாரும் கூடி பகவத் அனுபவத்துக்கு தேசிகனான ஆச்சார்யன் திரு மாளிகையிலே புக்கு அங்கு கோயில் காப்பானையும் வாசல் காப்பானையும் எழுப்புகிறார்
கள்.ஆச்சார்ய சம்பந்த கடகரை முன்னிட்டு--ஆச்சார்யனை தொழுகையும் பெரியோர் செயல் இறே !

நாயகனாய் நின்ற, நந்த கோபனுடைய,கோயில் காப்பானே !
👍👍👍👍👍👍👍👍👍👍
"நாயகனாய் நின்ற"--
தன்னுடைய சேஷித்வம்
(ஸ்வாமித்வம்) சித்திக்கைக்காக தனக்கு புறம்பாய் இருப்பான், ஒரு சேஷியை தேடிப் போக வேண்டி இருக்கை அன்றிக்கே,தானே சேஷித்வ நிலைப்பாட்டிலே நிற்கிற

"நந்த கோபனுடைய"--
பகவத் அனுபவ ஜனித, ஆனந்த நிர்பரனாய்,சம் ஸ்ரீ தர ரஷகனான ஆச்சார்யன் உடைய

"கோயில் காப்பானே !"--
கோயில் உண்டு-அவனுக்கு பிரகாசமாக விளக்கும் இருப்பிடமான திருமந்தரம் ! அதை தகுதியில்லாதவர்கள்/விவரம் இல்லாதவர்கள்  செவிப் படுத்தாதபடி-ரக்ஷிக்கும் ஆசார்ய ஸ்வாமிகள்.

கொடித் தோன்றும் தோரணவாசல் காப்பானே !
⛩️⛩️⛩️⛩️⛩️⛩️⛩️⛩️⛩️⛩️
இவனுடைய ரஷகத்வம் விளங்கும்படியாக  நின்றுள்ள,
அகார நாம சப்த அர்த்தங்களைக் காக்கும் ஆசார்ய ஸ்வாமிகளே!

(கோபுர வாசல் போன்ற வெளிப்புறத்து வாசலைக் காப்பவன்-கோயில் காப்பானென்றும், த்வஜஸ்தம்பத்தி னருகிலுள்ள வாசல் போன்ற உட்புறத்து வாசலைக் காப்பவன் – வாசல்காப்பான்
என்றும் இங்குக் கூறப்படுகின்றன.
இவ் வாயர் மாதர் கடகரையே
(கொண்டு சேர்க்கும் சேவகர்/தூதுவர்) சேஷியாகக் கருதும் அதிகாரிகள் ஆகையால்
அவர்களை நாயகர் என்கிறார்கள்.
ஒருவன் ஒரு ரத்நத்தைத் தந்தால் அதன் விலையின் மேன்மையை அறிய அறிய,அதனைக் கொடுத்தவன் பக்கலில் அளவற்ற ஆதரம் பிறக்குமாறு போல,
கடகர் முகமாக எம்பெருமானைப் பக்கலில் பெருநன்றி பாராட்டுவர்)

கண்ணபிரான் கோயில் காப்பானே!" என்னாமல்,"நந்தகோபனுடைய கோயில காப்பானே" என்றது –
பரமபதத்தில் எம்பெருமான் ஸ்வதந்த்ரனாயிருந்து பட்டபாடு தீர
நந்தகோபற்குப் பிள்ளையாய் பிறந்து
பார தந்திரியத்தைப் பேணியதால், அவன் திருவுள்ளம் உகக்கும் என்பதற்காக..

" கண்ணபிரானுடைய கோயில்" என்றால்,இவன் நந்தகோபருடைய அபிமாநத்தில் ஒதுங்கியிருக்கை
யாகிற பாரதந்திரியம் பரிமளிக்க வழியில்லையே.

கோயில் காப்பானே என்பது அவன் செய்யும் செயலைக் காட்டும் தாழ்ந்த சொல் போலத் தோன்றினும்,'அந்தக் கைங்கர்யப் பேற்றைப் பெற்ற உனது பாக்கியமே பாக்கியம்' என்று இவர்கள் கொண்டாடும் படியாம்.

அக் கோயில் காப்பானும் இங்ஙன் விளித்தலையே தனக்குப் பரம புருஷார்த்தமாக நினைப்பவன்.
மேலும் இப்படி சேஷ விருத்தியடி
யாக வரும் பெயரே ஆத்மாவுக்கு ஸ்வரூப அநு ரூபமென்னும்
சாஸ்த்ரார்த்தமும் வெளிபட்டவாறாம்.

தோரண வாசலுக்குக் "கொடித்தோன்
றும்" என்னும் அடைமொழி இட்டதற்குக் கருத்து:-
திருவாய்ப் பாடியிலுள்ள மாளிகைகள் எல்லாம் ஒரு படிப்பட்டுத் தோற்றுதலால்,
நடுநிசியில் அலமந்துவரும் ஆயர்மாதர் நின்று தடுமாறாதே'இது நந்தகோபர் திருமாளிகை' என்று சடக்கென உணர்ந்து தெளிந்து வருதற்காகக் கொடிகட்டி வைக்கப்
பட்டிருக்குமாம்.

பெருவிடாய்ப் பட்டவர்க்குத் தண்ணீர்ப் பந்தல்கள் நெடுந்
தூரத்தினின்றும் தோற்றவேணும்
ன்று, தார்மிகர்கள் கொடிகட்டித் தோரணம் நாட்டுவரன்றோ ?

வாசல் காப்பானே !
கொடியுந் தோரணமும் அசேதநமாத
தால் அவை எம்மை அழைக்கவும் மாட்டா,உள்ளே கொண்டு புகவும் மாட்டா' இனி நீ ஞானமுடைய சேதநன் என்கைக்கு ப்ரயோஜநமாக எங்களை உள்ளே போகவிடு என்கிறார்கள்.

பண்டொரு சமயம் கண்ணபிரான், "அர்ஜுனன் சுபத்ரையைக் கொண்டு போக நீங்கள் அநுமதி பண்ணுங்கள்" என்று வாசல் காப்போரை நியமித்திருந்தது போல,
"பெண்களை உள்ளே புகவிடு" என்று இவ்வாசல் காப்பானுக்கும் நியமித்திருக்கக் கூடுமென்று இவர்களின் நினைவு போலும்.

மணிக் கதவம் தாள் திறவாய் !
    🏛🏛🏛🏛🏛🏛🏛
ஞான ஆனந்த ஸ்வரூபன் ஆகையாலே,ஸ்லாக்கியமாய் இருந்துள்ள ஆத்ம ஸ்வரூப அனுபவத்தையும்,அதனால் வரும் ஸ்வ ஸ்வாதந்த்ர்ய பிரதி பத்தியையும் தவிர்த்து, அருளாய் !!

கதவின் இனிமையிலே எங்கள் கண்ணும் நெஞ்சும் மயங்க வொண்ணாமல் கதவைத் திறந்து
எம்மை உள்ளே புகவிடாய் என்கிறார்கள்.

'பயமுள்ள தேசத்தில்,அர்த்த ராத்திரியில் வந்து எழுப்புகிறவர்கள் யார்' என வாசல் காப்போன் கேட்க,

"அச்சந் தவிர்ப்பான் இருக்குமிடத்தில் அஞ்சவேண்டிய அவசியம் என்ன?" என இவர்கள் கேட்க

அதற்கு, அவன்,
"யுகம் த்ரேதா யுகமாய்,
காலம் நல்லடிக் காலமாய்,
தகப்பனார் சம்ப்ராந்தகனாய்,
பிள்ளைகள் தாங்களும் ஆண் புலிகளாய்,
அவர்கள் தாம் ,வழியே போய்,
 வழியே வருமவர்களுமாய்,
ஊரும் திருவயோத்யையாய், இருந்தமையாலே ராமாவதாரத்தில் அச்சமற்றிருந்தது'.

ஆனால் தற்போது
காலம் கலிக்குத் தோள்தீண்டியான த்வாபராந்தமாய்,
தகப்பனார் பசும்புல் சாவ மிதியாத பரமசாதுவான நந்தகோபராய்,
பிள்ளைகள் சிறுவராய்,
பின்னையும் தீம்பரில் தலைவராய்,
இருப்பிடம் இடைச்சேரியாய்,
அதுதான் கம்சனுடைய ராஜ்யத்திற்கு மிகவும் அணித்தாய்,
அவனுக்கு இறையிருக்கும் ஊராய்,
அவன் தான் பரம சத்துருவாய்,
எழும் பூண்டெல்லாம் அசுரமயமாய்
இருக்க.
அச்சங் கெட்டிருக்கும் இடம் அல்லவோ இது !' என,

இவர்கள்,"நாங்கள் பெண்பிள்ளைகள் அல்லோமோ" என,
அவன்'சூர்ப்பணகை பெண் அன்றோ' என

ஆயர் சிறிமியரோ உமக்கு !
👎👎👎👎👎👎👎👎
"அவள் ராக்ஷஸி, நாங்கள் இடைப்பெண்கள். அவளப் போல எங்களைக் கருதலாமோ?" ,

எம்பெருமானே உபாயம் உபேயம்-என்று-அத்யவசித்து இருக்கும் ஜ்ஞான ஜன்மாக்கள் திரு வம்சத்திலே பிறந்த, பகவத் அனன்யார்ஹ சேஷ பூதர்களான எங்களுக்கு அஞ்ச வேண்டுமோ? " என

அதற்கு அவன், 'ஆய்ப்பெண்களா? பூதனை ஆய்ப்பெண்ணல்லளோ? அவள் செய்துபோன தீமையை நீங்கள் அறியீரோ? நன்றாகச் சொன்னீர்கள்' ஆய்ச்சிகளுக்கென்றோ மிகவும் அஞ்ச வேண்டும்' என்றும்,
'சிறுமியாய் இருந்தால் மட்டும் நம்ப முடியுமா ? வத்ஸாசுரன் என்னும் அசுரன்  கன்று வடிவில் வந்து தானே நலியப் பார்த்தான்.நான் உங்கள்  பருவங் கொண்டு நம்ப மாட்டேன்.
சரி;நீங்கள் வந்தக் காரியத்தைச் சொல்லுங்கள்' என்றான்

         அறை பறை
🙏👣🙏👣🙏👣🙏👣🙏👣
இவர்கள்,"த்வநிக்கிற வாத்தியம் வேண்டி வந்தோம்
/புருஷார்த்தம் வேண்டி வந்தோம்" என

அவன்,'ஆகில் திருப் பள்ளி உணர்ந்த அநந்தரம் விண்ணப்பம் செய்து தருவிக்கிறேன்'-என

மாயன், மணி வண்ணன் ! நென்னலே வாய் நேரந்தான் !
🙏💎💎💎💎👍👍👍👍🙏
ஆஸ்ரித பரதந்த்ரனாய்,சுலபனாய்
கண்ணுக்கினிய வடிவை உடையவனான எம்பெருமான்,
நேற்றே பறை தருகிறேன் என்று மனப் பூர்வகமாக சொல்லி வைத்தான்

வாசல் காப்பான்--'எம்பெருமான் உங்கள் காரியத்தைச் செய்து தருவதாக அருளிச் செய்தானேலும் அவன் எங்களை இங்கு வைத்தற்கு ஒரு பயன் வேண்டாவோ? எங்கள் பணிக்கு அவனோ கடவான்?
வந்தவர்களின் ஸ்வரூப ஸ்வபாவங்
களை ஆராய்வதற்கென்றே, நியமிக்கப் பெற்றுள்ள நாங்கள் உங்கள் எண்ணத்தை ஆராய்ந்து
உணராமல் விடமுடியாது.

'நீங்கள் சொல்வதை வைத்துப் பார்த்
தால் நீங்கள் பிரயோஜனாந்தரபரர்
(பறை என்னும் காரியத்தை வேண்டி வந்தவர்கள்) அன்றோ' என,

"தூயோமாய் வந்தோம்" –
👌👌👌👌👌👌👌👌
பறை என்றது வியாஜ்ய மாத்ரம்--ஒரு சாக்காகச் சொன்னோமே அன்றி,
நாங்கள் அநந்ய பிரயோஜனராய் வந்தோம்.
"நீ வருந்தி ஆராயவேண்டும்படி நாங்கள் வரவில்லை; இங்ஙனே அஞ்சும்படி கருத்துக்குற்றம் உடையோம் அல்லோம்;
உபாயாந்தரபரராயும் உபேயாந்தரபரராயும் வந்தோம் அல்லோம்;அத்தலைக்குப் பல்லாண்டு பாடுகையே பரம புருஷார்த்தமாக நினைத்து வந்தோம்."

தூயோம்---தூய்மையுடையோம்--
தூய்மையானது – தங்கள் தலையிலுஞ் சில அதிகப் பிரசங்கங்களை ஏறிட்டுக் கொள்ளாமல்,'நம்முடைய ரக்ஷணத்திற்கு அவனே கடவன்' என்றிருக்கும் அத்யவஸாய விசேஷம்.

அவன்'அநந்ய பிரயோஜனருக்கு கர்த்தவ்யம் என்ன' என –

துயில் எழப் பாடுவான்-
     📯🎷🎸🎻🎺📯
திருப்பள்ளி எழுச்சி பாட வந்தோம் –
கண்ணபிரான் உணர்ந்து எழும் போதான அழகுக்கு மங்களாசாஸநம் பண்ணவந்தோம் என்றபடி.

இவர்களது இனிமையான பேச்சை ரசித்திருந்த வாசல் காப்போன்  நில்லுங்கள் திறக்கிறேன் என உறுதியாகச் சொல்லாமல் இருந்தமை கண்ட இவர்கள்.

வாயால் முன்னம் முன்னம் மாற்றாதே அம்மா !  
  👋👋👋👋👋👋👋👋👋
வாக்காலே முந்துற முன்னம் எங்களை வெறுக்க வேண்டாம். எங்களை வெறுப்பதாக,நெஞ்சால் நினைத்தாய் ஆகிலும், வாயால் வெறுத்துப் பேசாது  ஒழிய வேணும்.

இங்ஙனம்  இயம்பிய இவ்வாய்ச்சிகளின் ஆர்த்தியின் கணத்தையும் எண்ணத் தூய்மை
யையும் ஆராய்ந்தறிந்த
அவ்வாசல் காப்பான், 'ஆகில் நான் உங்களை மறுக்கவில்லை;கதவைத் தள்ளிக்கொண்டு போங்கள்' என,

 நீ நேச நிலைக் கதவம் நீக்கேல் !
    👉🏽👉🏽👉🏽👉🏽👉🏽👉🏽👉🏽
நீ வா எனிலும்,சினேக உக்தமான நிலையை உடைய கதவைத் திறந்து விடாய் ! நீ எம்பெருமான் இடத்திலே பிரேம அதிசயத்தாலே அநாதிகாரி
களுக்கு அவனை உள்ளபடி காட்டாதாப் போலே,ஆத்ம ஸ்வரூப வைலஷண்யத்தாலே,
அதிகாரிகளுக்கும் பகவத் விஷயத்தை மறைக்கக் கடவதாய் இறே இருப்பது இந்தக் கதவு.
ஆதலால் நீ திறந்து விடுவாயாக, என்கிறார்கள்.

(அடியேன் பார்த்தசாரதி ராமாநுஜ தாசன்)

No comments:

Post a Comment