Sunday, January 7, 2024

Mahabharatam in tamil 301

மஹாபாரதம்(முழுவதும்)-பாகம்-301
துரோண பர்வம்
….
துரியோதனனின் ஆற்றல்!
..
திருதராஷ்டிரன் {சஞ்சயனிடம்}, "ஓ! சஞ்சயா, (அர்ஜுனனை நோக்கிச்) சாத்யகி சென்ற போது, அவனைக் கொல்வதற்கோ, தடுப்பதற்கோ என் படையில் வலிமைமிக்கத் தேர்வீரர்கள் எவரும் இல்லையா? கலங்கடிக்கப்பட இயலாத ஆற்றலையும், சக்ரனுக்கு {இந்திரனுக்கு} நிகரான ஆற்றலையும் கொண்ட அவன் {சாத்யகி}, தானவர்களுக்கு மத்தியில் பெரும் இந்திரனைப் போலத் தனியொருவனாகவே போரில் சாதனைகளை அடைந்துவிட்டான். அல்லது, ஒருவேளை சாத்யகி சென்ற பாதை வெறுமையாக இருந்ததா? ஐயோ, உண்மையான ஆற்றலைக் கொண்ட அவன் {சாத்யகி} தனி ஒருவனாகவே எண்ணற்ற தேர்களை நசுக்கிவிட்டானே! ஓ! சஞ்சயா, சிநியின் பேரன் {சாத்யகி}, போரில் தன்னோடு போராடிக் கொண்டிருந்த பரந்த படையின் ஊடாகத் தனியொருவனாக எப்படிக் கடந்து சென்றான் என்பதை எனக்குச் சொல்வாயாக" என்றான் {திருதராஷ்டிரன்}.
சஞ்சயன் {திருதராஷ்டிரனிடம்} சொன்னான், "ஓ! மன்னா {திருதராஷ்டிரரே}, தேர்கள், யானைகள், குதிரைகள், காலாட்படைவீரர்கள் ஆகியவற்றால் நிறைந்த உமது படையின் கடும் முயற்சிகளும் ஆரவாரமும் யுக முடிவில் காணப்படுவதற்கு ஒப்பாக இருந்தன. ஓ! கௌரவங்களை அளிப்பவரே {திருதராஷ்டிரரே}, கூடியிருந்த உமது படையானது (தினமும்) கூட்டமாகத் திரளும் போது, அந்த உமது படையைப் போன்று மற்றொரு கூட்டமானது பூமியில் இதற்கு முன் இருந்ததில்லை என்றே எனக்குத் தோன்றியது. அங்கே வந்த தேவர்களும், சாரணர்களும், "இந்தக் கூட்டம் இதன் வகையில் பூமியில் இறுதியானதாக இருக்கும்" என்றனர். உண்மையில், ஓ! மன்னா {திருதராஷ்டிரரே}, ஜெயத்ரதன் கொல்லப்பட்ட நாளில் துரோணரால் அமைக்கப்பட்டதைப் போல அதற்கு முன் அப்படியொரு வியூகம் அமைக்கப்பட்டதில்லை. போரில் ஒருவரையொருவர் எதிர்த்து விரைந்த போது, பெரும் கூட்டமாக இருந்த அந்தப் படைவீரர்களின் ஆரவாரமானது சூறாவளியால் கொந்தளித்த பெருங்கடலுக்கு ஒப்பானதாக இருந்தது. ஓ! மனிதர்களில் சிறந்தவரே {திருதராஷ்டிரரே}, உமது படையிலும், பாண்டவர்களின் படையிலும் நூற்றுக்கணக்கிலும், ஆயிரக்கணக்கிலும் மன்னர்கள் இருந்தனர். போரில் ஈடுபடும்போது கடும் செயல்களைச் செய்யும் அந்தக் கோபக்கார வீரர்களால் உண்டாக்கப்பட்ட ஒலியானது பிரமாண்டமானதாகவும், மயிர்ச்சிலிர்ப்பை ஏற்படுத்துவதாகவும் இருந்தது.
அப்போது, ஓ! ஐயா {திருதராஷ்டிரரே}, பீமசேனன், திருஷ்டத்யும்னன், நகுலன், சகாதேவன், நீதிமானான மன்னன் யுதிஷ்டிரன் ஆகியோர், "வருவீராக, தாக்குவீராக, விரைவீராக. துணிச்சல்மிக்க மாதவனும் {சாத்யகியும்}, அர்ஜுனனும் பகைவரின் படைக்குள் நுழைந்து விட்டனர். ஜெயத்ரதனின் தேர் அருகே அவர்கள் எளிதில் செல்ல என்ன செய்ய வேண்டுமோ அதைச் செய்வீராக" என்று உரக்கக் கூச்சலிட்டனர். இதைச் சொல்லியே அவர்கள் படைவீரர்களைத் தூண்டினர். மேலும் அவர்கள், "சாத்யகியும், அர்ஜுனனும் கொல்லப்பட்டால், குருக்கள் தங்கள் நோக்கங்களை அடைவர், நாமோ வீழ்த்தப்படுவோம். எனவே அனைவரும் ஒன்று சேர்ந்து பெருங்கடலைப் போன்ற இந்த (எதிரிப்) படையைக் கடலைக் கலங்கடிக்கும் மூர்க்கமான காற்றைப் போல வேகமாகக் கலங்கடிப்பீராக" என்றனர்.
ஓ! மன்னா {திருதராஷ்டிரரே}, பீமசேனன், பாஞ்சாலர்களின் இளவரசன் {திருஷ்டத்யும்னன்} ஆகியோரால் தூண்டப்பட்ட போர்வீரர்கள், தங்கள் உயிர்களைத் துச்சமாக மதித்துக் கௌரவர்களைத் திக்குமுக்காடச் செய்தனர். பெரும் சக்தியைக் கொண்ட அவர்கள் அனைவரும் போரில் மரணத்தை விரும்பி, ஆயுதங்களின் விளிம்பிலோ, முனையிலோ சொர்க்கத்தை எதிர்பார்த்துத் தங்கள் நண்பர்களுக்காகப் போரிடுவதில் தங்கள் உயிர்களைக் குறித்துக் கிஞ்சிற்றும் கருதிப்பார்க்கவில்லை.
அதேபோல, ஓ! மன்னா {திருதராஷ்டிரரே}, உமது போர்வீரர்களும் பெரும் புகழை விரும்பியும், போரில் உன்னதத் தீர்மானத்தைக் கொண்டும், போரிடும் உறுதியுடன் களத்தில் நின்றனர். கடுமையானதும், பயங்கரமானதுமான அந்தப் போரில் சாத்யகி அனைத்துப் போராளிகளையும் வென்று அர்ஜுனனை நோக்கிச் சென்றான். போர்வீரர்களின் கவசங்களில் பிரதிபலித்த சூரியனின் கதிர்களால் போராளிகள் தங்கள் விழிகளை அவற்றில் இருந்து விலக்காமல் இருந்தனர்.
துரியோதனனும், ஓ! மன்னா {திருதராஷ்டிரரே} போரில் கடுமையாகப் போராடிக் கொண்டிருந்த உயர் ஆன்ம பாண்டவர்களின் வலிமைமிக்கப் படைக்குள் ஊடுருவினான். ஒரு பக்கத்தில் அவனையும் {துரியோதனனையும்}, மறுபக்கத்தில் பிறரையும் கொண்டு அவர்களுக்கிடையில் நடந்த அந்த மோதல் மிகக் கடுமையானதாக இருந்தது. அந்நிகழ்வின் போது நேர்ந்த பேரழிவு பெரியதாக இருந்தது" {என்றான் சஞ்சயன்}.
திருதராஷ்டிரன் {சஞ்சயனிடம்}, "அந்தப் பாண்டவப் படை இப்படிப் போருக்குச் சென்ற போது, அதற்குள் ஊடுருவிய துரியோதனன் பெரும் துயரில் நிறுத்தப்பட்டிருக்க வேண்டும். ஓ! சூதா, அவன் {துரியோதனன்} களத்தில் புறமுதுகிடவில்லை என நான் நம்புகிறேன். பயங்கரப் போரில் தனி ஒருவனுக்கும் பலருக்கும் இடையில் நடந்த அம்மோதல், அதிலும் அந்தத் தனி ஒருவன் {துரியோதனன்} மன்னன் எனும்போது அஃது {அம்மோதல்} ஒவ்வாதது எனவே எனக்குத் தோன்றுகிறது. அதையும்தவிர, பெரும் ஆடம்பரத்திலும், செல்வத்திலும், உடைமைகளிலும் வளர்க்கப்பட்ட துரியோதனன் மனிதர்களின் மன்னனுமாவான். தனியொருவனாகப் பலருடன் மோதிய அவன் {துரியோதனன்} போரிடுவதில் இருந்து புறமுதுகிடவில்லை என்றே நான் நம்புகிறேன்" என்றான் {திருதராஷ்டிரன்}.
சஞ்சயன் {திருதராஷ்டிரனிடம்} சொன்னான், "ஓ! மன்னா {திருதராஷ்டிரரே}, தனி ஒருவனுக்கும், பலருக்கும் இடையில் நடந்த அம்மோதலில், உமது மகன் {துரியோதனன்} செய்த அற்புதமான போரை நான் உரைக்கையில் நீர் கேட்பீராக. உண்மையில், ஒரு யானையால் தடாகத்தில் உள்ள தாமரைக்கூட்டங்கள் கலங்கடிக்கப்படுவதைப் போல அந்தப் போரில் துரியோதனனால் பாண்டவப்படை கலங்கடிக்கப்பட்டது. அந்தப் படை உமது மகனால் {துரியோதனனால்} இப்படிக் கலங்கடிக்கப்படவதைக் கண்ட பாஞ்சாலர்கள், பீமசேனனின் தலைமையில் அங்கே விரைந்தனர்.
துரியோதனன், பத்து கணைகளால் பீமசேனனையும், மூன்றால் {மும்மூன்றால்} இரட்டையர்கள் {நகுலன் மற்றும் சகாதேவன் ஆகிய} ஒவ்வொருவரையும், ஏழால் மன்னன் யுதிஷ்டிரனையும் துளைத்தான். மேலும் அவன் விராடனையும், துருபதனையும் ஆறு கணைகளாலும், சிகண்டியை நூறாலும் துளைத்தான். திருஷ்டத்யும்னனை இருபது கணைகளால் துளைத்த அவன் {துரியோதனன்}, திரௌபதியின் மகன்கள் ஐவரில் ஒவ்வொருவரையும் மூன்று {மும்மூன்று} கணைகளால் தாக்கினான். அவன் {துரியோதனன்}, உயிரினங்களைக் கோபத்தில் கொல்லும் யமனைப் போலவே அந்தப் போரில் யானைகள் மற்றும் தேர்வீரர்கள் உள்ளடங்கிய, நூற்றுக்கணக்கான பிற போராளிகளைத் தன் கடுங்கணைகளால் வெட்டினான். பண்பட்ட பயிற்சியால் ஏற்பட்ட தன் திறனின் விளைவாகவும், தன் ஆயுதங்களின் பலத்தாலும் அவன் {துரியோதனன்} தனது எதிரிகளைத் தாக்கி வீழ்த்துவதில் ஈடுபட்டிருக்கையில், குறிபார்க்கும்போதோ, தன் கணைகளைத் தொடுக்கும்போதோ இடையறாமல் தன் வில்லை வட்டமாக வளைத்துக் கொண்டிருக்கும் நிலையிலேயே அவன் {துரியோதனன்} தெரிந்தான். உண்மையில் அவன் {துரியோதனன்} தன் எதிரிகளைக் கொல்வதில் ஈடுபட்டிருக்கையில், தங்கத்தால் அலங்கரிக்கப்பட்ட கைப்பிடியைக் கொண்ட அவனது உறுதிமிக்க வில்லானது, எப்போதும் வட்டமாக வளைக்கப்பட்ட நிலையிலேயே மக்களால் காணப்பட்டது.
அப்போது மன்னன் யுதிஷ்டிரன், உமது மகன் {துரியோதனன்} போரில் போராடிக் கொண்டிருந்தபோது, ஓ! குரு குலத்தவரே {திருதராஷ்டிரரே}, பின்னவனின் வில்லை இரு பல்லங்களால் அறுத்தான். மேலும் யுதிஷ்டிரன் சிறப்பானவையும், முதன்மையானவையுமான பத்து கணைகளால் அவனையும் {துரியோதனனையும்} ஆழத் துளைத்தான். எனினும் அந்தக் கணைகள் துரியோதனனின் கவசங்களைத் [1] தொட்டதும் விரைவில் துண்டுகளாக நொறுங்கின. பிறகு, விருத்திரனைக் கொன்ற சக்ரனைப் பழங்காலத்தில் தேவர்களும், பெரும் முனிவர்களும் சூழ்ந்து கொண்டதைப் போல மகிழ்ச்சியால் நிறைந்த பார்த்தர்கள் யுதிஷ்டிரனைச் சூழ்ந்து கொண்டனர்.
[1] அது துரோணரால் பூட்டப்பட்ட கவசமாகும். பார்க்க: துரியோதனனுக்குக் கவசம் பூட்டிய துரோணர்
பிறகு, உமது வீர மகன் {துரியோதனன்} மற்றொரு வில்லை எடுத்துக் கொண்டு, பாண்டுவின் மகனான மன்னன் யுதிஷ்டிரனிடம், "நில், நிற்பாயாக" என்று சொல்லி அவனை {யுதிஷ்டிரனை} எதிர்த்து விரைந்தான். பெரும்போரில் இப்படி முன்னேறும் உமது மகனை {துரியோதனனைக்} கண்ட பாஞ்சாலர்கள், மகிழ்ச்சியாக, வெற்றியில் நம்பிக்கையுடன் அவனை வரவேற்க முன்னேறினர். அப்போது (குரு) மன்னனை {துரியோதனனைக்} காக்க விரும்பிய துரோணர், விரைந்து வருபவர்களான பாஞ்சாலர்களைச் சூறாவளியால் விரட்டப்படும் மழைநிறைந்த மேகத் திரள்களை ஏற்கும் ஒரு மலையைப் போல வரவேற்றார்.
பிறகு, ஓ! மன்னா {திருதராஷ்டிரரே}, பாண்டவர்களுக்கும், உமது வீரர்களுக்கும் இடையில் அங்கே நிகழ்ந்த போரானது, ஓ! வலிமைமிக்கக் கரங்களைக் கொண்டவரே, மிகக் கடுமையானதாகவும், மயிர்ச்சிலிர்ப்பை ஏற்படுத்துவதாகவும் இருந்தது. (யுக முடிவில் ஏற்படும்) ருத்ரனின் விளையாட்டுக்கு ஒப்பாக அனைத்து உயிரினங்களுக்கும் அங்கே ஏற்பட்ட பேரழிவு பயங்கரமானதாக இருந்தது. அப்போது, தனஞ்சயன் {அர்ஜுனன்} இருந்த இடத்தில் பெரும் ஆரவாராம் ஒன்று எழுந்தது. அவ்வாரவாரமானது, ஓ! தலைவா {திருதராஷ்டிரரே}, பிற ஒலிகளுக்கெல்லாம் மேலாக எழுந்து மயிர்ச்சிலிர்ப்பை உண்டாக்கியது. இப்படியே, ஓ! வலிமைமிக்கக் கரங்களைக் கொண்டவரே, அர்ஜுனனுக்கும், உமது வில்லாளிகளுக்கும் இடையிலான போர் நடந்தது. இப்படியே உமது படைக்கு மத்தியில் சாத்யகிக்கும், உம்மவர்களுக்கும் இடையிலான போரும் நடந்தது. மேலும் இப்படியே துரோணருக்கும், அவரது எதிரிகளுக்கும் இடையிலான போரும் வியூகத்தின் வாயிலில் தொடர்ந்தது. உண்மையில், ஓ! பூமியின் தலைவரே {திருதராஷ்டிரரே}, அர்ஜுனன், துரோணர், வலிமைமிக்கத் தேர்வீரனான சாத்யகி ஆகியோர் அனைவரும் கோபத்தால் தூண்டப்பட்டிருந்த போது இப்படியே அந்தப் பேரழிவும் பூமியில் தொடர்ந்தது" {என்றான் சஞ்சயன்}.
சஞ்சயன் {திருதராஷ்டிரனிடம்} சொன்னான், "ஓ! மன்னா {திருதராஷ்டிரரே}, அந்த நாளின் பிற்பகலில் மேகங்களைப் போன்ற ஆழ்ந்த முழக்கங்களால் வகைப்படுத்தபட்ட ஒரு பயங்கரப்போரானது துரோணருக்கும், சோமகர்களுக்கும் இடையில் மீண்டும் நடந்தது. மனிதர்களில் முதன்மையான துரோணர், சிவப்புக் குதிரைகளுடன் கூடிய தமது தேரில் ஏறிப் போரிடும் நோக்கோடு பாண்டவர்களை எதிர்த்து மிதமான வேகத்தில் விரைந்தார். ஓ! மன்னா {திருதராஷ்டிரரே}, பெரும் வில்லாளியும், வலிமையும், பலமும் கொண்டவரும், சிறப்புமிக்கக் குடம் ஒன்றில் பிறந்த வீரரும், உமக்கு ஏற்புடையதைச் செய்வதில் ஈடுபடுபவருமான பரத்வாஜரின் வீர மகன் {துரோணர்}, ஓ! பாரதரே {திருதராஷ்டிரரே}, அழகிய சிறகுகளைக் கொண்ட தமது கூரிய கணைகளால், முதன்மையான தேர்வீரர்கள் பலரைத் தாக்கி வீழ்த்தியபடி அந்தப் போரில் விளையாடுவதாகவே தெரிந்தது.
அப்போது, கைகேயர்களில் வலிமைமிக்கத் தேர்வீரனும், ஐந்து சகோதரர்களில் மூத்தவனும், போரில் தடுக்கப்பட முடியாதவனுமான பிருஹத்க்ஷத்திரன் அவரை {துரோணரை} எதிர்த்து விரைந்தான். கூரிய கணைகள் பலவற்றை ஏவிய அவன் {பிருஹத்க்ஷத்திரன்}, கந்தமாதன மலையின் மீது மழைத்தாரைகளைப் பொழியும் பெரும் மேகத் திரள்களைப் போல ஆசானை {துரோணரைப்} பெரிதும் பீடித்தான். அப்போது, ஓ! மன்னா {திருதராஷ்டிரரே}, கோபத்தால் தூண்டப்பட்ட துரோணர், தங்கச் சிறகுகளைக் கொண்டவையும், கல்லில் கூராக்கப்பட்டவையுமான பதினைந்து கணைகளை அவன் {பிருஹத்க்ஷத்திரன்} மீது ஏவினார். எனினும், அந்தக் கேகயர்களின் இளவரசன் {பிருஹத்க்ஷத்திரன்}, கடும் நஞ்சுமிக்கக் கோபக்காரப் பாம்புகளைப் போன்றவையும், துரோணரால் ஏவப்பட்டவையுமான அந்தக் கணைகள் ஒவ்வொன்றையும் தன் ஐந்து கணைகளால் மகிழ்ச்சியாக வெட்டினான். அவனால் {பிருஹத்க்ஷத்திரனால்} வெளிப்படுத்தப்பட்ட கரநளினத்தைக் கண்ட அந்தப் பிராமணர்களில் காளை {துரோணர்}, எட்டு நேரான கணைகளை அவன் {பிருஹத்க்ஷத்திரன்} மீது ஏவினார். துரோணரின் வில்லில் இருந்து ஏவப்பட்ட அந்தக் கணைகள், தன்னை நோக்கி வேகமாக வருவதைக் கண்ட பிருஹத்க்ஷத்திரன், அந்தப் போரில் தன் கூரிய கணைகள் பலவற்றால் அவற்றைத் தடுத்தான். ஓ! மன்னா {திருதராஷ்டிரரே}, பிருஹத்க்ஷத்திரனால் மிகக் கடினமான காரியம் அடையப்பட்டதைக் கண்ட உமது துருப்புகள் ஆச்சரியத்தில் நிறைந்தன.
அப்போது பிருஹத்க்ஷத்திரனை மெச்சிய துரோணர், அந்தப் போரில், தடுக்கப்பட முடியாத, பிரம்மம் என்று அழைக்கப்பட்ட தெய்வீக ஆயுதத்தை {பிரம்மாஸ்திரத்தை} இருப்புக்கு அழைத்தார். கேகயர்களின் இளவரசன் {பிருஹத்க்ஷத்திரன்} போரில் துரோணரால் பிரம்மாயுதம் ஏவப்பட்டதைக் கண்டு, ஓ! ஏகாதிபதி, அதைத் தன் பிரம்மாயுதத்தால் கலங்கடித்தான். இப்படி அவ்வாயுதம் கலங்கடிக்கப்பட்ட பிறகு, ஓ! பாரதரே {திருதராஷ்டிரரே}, பிருஹத்க்ஷத்திரன், தங்கச் சிறகுகளைக் கொண்டவையும், கல்லில் கூராக்கப்பட்டவையுமான அறுபது கணைகளால் அந்தப் பிராமணரை {துரோணரைத்} துளைத்தான். அப்போது, மனிதர்களில் முதன்மையானவரான துரோணர், பலமிக்கக் கணையொன்றால் கேகயர்களின் இளவரசனை துளைத்ததில், அது பின்னவனின் {பிருஹத்க்ஷத்திரனின்} கவசத்தை ஊடுருவி (அவனது உடலைக்கடந்து) பூமிக்குள் நுழைந்தது. அந்தப் போரில், ஓ! மன்னர்களில் சிறந்தவரே {திருதராஷ்டிரரே}, கருநாகமொன்று எறும்புப் புற்றைத் துளைத்துச் செல்வதைப் போலவே, அந்தக் கணை கேகய இளவரசனின் உடலைத் துளைத்துச் சென்று பூமிக்குள் நுழைந்தது.
ஓ! ஏகாதிபதி {திருதராஷ்டிரரே}, துரோணரின் கணைகளால் ஆழத்துளைக்கப்பட்ட அந்தக் கேகயர்களின் இளவரசன் {பிருஹத்க்ஷத்திரன்}, சினத்தால் நிறைந்து, தன் அழகிய கண்களை உருட்டியபடி, தங்கச் சிறகுகளைக் கொண்டவையும் கல்லில் கூராக்கப்பட்டவையுமான எழுபது கணைகளால் துரோணரைத் துளைத்தான். மற்றொரு கணையால் துரோணரின் தேரோட்டியுடைய முக்கியப் பகுதிகளைப் பெரிதும் பீடித்தான். ஓ! ஐயா, பிருஹத்க்ஷத்திரனின் கணைகளால் துளைக்கப்பட்ட துரோணர், கேகயர்களின் இளவரசனுடைய தேரின் மீது கூரிய கணைகளின் மழையைப் பொழிந்தார். வலிமைமிக்கத் தேர்வீரனான பிருஹத்க்ஷத்திரனை நிதானத்தை இழக்கச் செய்த துரோணர், பிறகு சிறகுகள் படைத்த நான்கு கணைகளால் முன்னவனின் {பிருஹத்க்ஷத்திரனின்} நான்கு குதிரைகளைக் கொன்றார். மற்றொரு கணையால் அவர், பிருஹத்க்ஷத்திரனின் தேரோட்டியை அவனது தேர்த்தட்டில் இருந்து விழச் செய்தார். மேலும் இரு கணைகளால் தம் எதிரியின் கொடிமரம், குடை ஆகியவற்றைப் பூமியில் வீழ்த்திய அந்தப் பிராமணர்களில் காளை {துரோணர்}, தமது வில்லில் இருந்து நன்கு ஏவப்பட்ட மூன்றாவது கணையொன்றால் பிருஹத்க்ஷத்திரனையும் மார்பில் துளைத்தார். அதன்பேரில், இப்படி மார்பில் தாக்கப்பட்ட பின்னவன் {பிருஹத்க்ஷத்திரன்} தன் தேரில் இருந்து கீழே விழுந்தான்.
பிருஹத்க்ஷத்திரனின் படுகொலையின் பேரில் சினத்தால் நிறைந்த கைகேயர்களில் வலிமைமிக்கத் தேர்வீரனான சிசுபாலன் மகன் {திருஷ்டகேது}, ஓ! மன்னா {திருதராஷ்டிரரே}, தன் தேரோட்டியிடம், "ஓ! தேரோட்டியே, கவசம் தரித்தவரும், கைகேய மற்றும் பாஞ்சாலப் படைகளைக் கொல்வதில் ஈடுபடுபவருமான துரோணர் இருக்கும் இடத்திற்குச் செல்வாயாக" என்றான். அவனது {திருஷ்டகேதுவின்} இவ்வார்த்தைகளைக் கேட்ட அந்தத் தேரோட்டி, விரைவில் அந்தத் தேர்வீரர்களில் முதன்மையானவனைக் காம்போஜ இனத்தைச் சேர்ந்த வேகமான குதிரைகளில் துரோணரிடம் அழைத்துச் சென்றான். அப்போது சேதிகளில் காளையான அந்தத் திருஷ்டகேது, வலிமையில் பெருகி, சுடர்மிக்க நெருப்பை நோக்கிச் செல்லும் பூச்சியைப் போலவே தன் அழிவுக்காகத் துரோணரை நோக்கி விரைந்தான். விரைவில் அவன் துரோணரையும், அவரது குதிரைகளையும், தேரையும், கொடிமரத்தையும் அறுபது கணைகளால் துளைத்தான். உறங்கும் புலியை எழுப்பும் ஒருவனைப் போல மீண்டும் அவன் {திருஷ்டகேது}, பிற கூரிய கணைகள் பலவற்றால் அவரை மீண்டும் தாக்கினான். பிறகு துரோணர், கழுகின் இறகுகளைக் கொண்ட கூரிய க்ஷுரப்ரம் ஒன்றால் அந்தப் போரில் போராடிக் கொண்டிருந்த அந்தப் போர்வீரனின் {திருஷ்டகேதுவின்} வில்லை நடுவில் அறுத்தார். அப்போது மற்றொரு வில்லை எடுத்துக் கொண்ட பலமிக்கத் தேர்வீரனான அந்தச் சிசுபாலன் மகன் {திருஷ்டகேது}, கங்கங்கள் மற்றும் மயில்களின் இறகுகளாலான சிறகுகள் கொண்ட கணைகள் பலவற்றால் துரோணரைத் துளைத்தான். பிறகு துரோணர் நான்கு கணைகளால் திருஷ்டகேதுவின் நான்கு குதிரைகளைக் கொன்று, சிரித்துக் கொண்டே பின்னவனின் {திருஷ்டகேதுவின்} தேரோட்டியுடைய தலையை அவனது உடலில் இருந்து அறுத்தார். பிறகும் அவர் இருபத்தைந்து கணைகளால் திருஷ்டகேதுவையும் துளைத்தார்.
அப்போது, அந்தச் சேதிகளின் இளவரசன் {திருஷ்டகேது}, விரைவாகத் தன் தேரில் இருந்து கீழே குதித்து ஒரு கதாயுதத்தை எடுத்துக் கொண்டு, ஒரு கோபக்காரப் பாம்பைப் போல அதைப் பரத்வாஜரின் மகன் {துரோணர்} மீது வீசினான். இரும்பின் பலத்தைக் கொண்டதும், தங்கத்தால் அலங்கரிக்கப்பட்டதுமான அந்தக் கனமான கதாயுதம், மரணத்தைப் போலத் தன்னை நோக்கி வருவதைக் கண்ட பரத்வாஜர் மகன் {துரோணர்}, பல்லாயிரம் கூரிய கணைகளால் அதை வெட்டினார். பல கணைகளைக் கொண்டு பரத்வாஜர் மகனால் {துரோணரால்} வெட்டப்பட்ட அந்தக் கதாயுதம், ஓ! ஐயா, ஓ! கௌரவரே {திருதராஷ்டிரரே}, தன்னொலியால் பூமியில் எதிரொலித்தபடி கீழே விழுந்தது. தன் கதாயுதம் கலங்கடிக்கப்பட்டதைக் கண்டவனும், கோபம் நிறைந்தவனும், துணிச்சல்காரனுமான திருஷ்டகேது ஒரு வேலையும் {வேல்}, தங்கத்தால் அலங்கரிக்கப்பட்ட ஈட்டியையும் ஏவினான். அந்த வேலை ஐந்து கணைகளால் வெட்டிய துரோணர், மேலும் ஐந்து கணைகளால் அந்த ஈட்டியையும் வெட்டினார். அந்த ஏவுகணைகள் இரண்டும் இப்படி வெட்டப்பட்டு, கருடனால் கிழித்துச் சிதைக்கப்பட்ட இரு பாம்புகளைப் போலக் கீழே பூமியில் விழுந்தன.
அப்போது பரத்வாஜரின் வீர மகன் {துரோணர்}, அந்தப் போரில், பரத்வாஜரின் அழிவுக்காகவே போரிட்டுக் கொண்டிருந்த திருஷ்டகேதுவை அழிப்பதற்காக அவன் மேல் கூரிய கணை ஒன்றை ஏவினார். அந்தக் கணையானது, அளவிலா சக்தி கொண்ட திருஷ்டகேதுவின் கவசத்தையும், மார்பையும் துளைத்துக் கடந்து, தாமரைகள் நிறைந்த தடாகத்தில் பாயும் ஓர் அன்னத்தைப் போலப் பூமிக்குள் நுழைந்தது. பசியுடன் கூடிய காடையானது சிறு பூச்சி ஒன்றை விழுங்குவதைப் போலவே வீரத் துரோணரும் அந்தப் போரில் திருஷ்டகேதுவை விழுங்கினார் {கொன்றார்}. சேதிகளின் ஆட்சியாளனுடைய {திருஷ்டகேதுவின்} கொலையை அடுத்து, உயர்ந்த ஆயுதங்களை அறிந்தவனான அவனது மகன், கோபத்தால் தூண்டப்பட்டு, தன் தந்தையின் சுமையைச் சுமக்க முனைந்தான். துரோணர் சிரித்துக் கொண்டே, வலிமைமிக்கப் பெரிய புலியொன்று ஆழ்ந்த கானகத்தில் ஒரு மான்குட்டியைக் கொல்வதைப் போலத் தன் கணைகளால் அவனையும் யமலோகம் அனுப்பி வைத்தார்.
ஓ! பாரதரே {திருதராஷ்டிரரே}, இப்படிப் பாண்டவர்கள் {அளவில்} குறைக்கப்பட்டபோது, ஜராசந்தனின் வீர மகன் {சகாதேவன்} துரோணரை நோக்கி விரைந்தான். சூரியனை மறைக்கும் மேகங்களைப் போல அவன் தன் கணைகளின் மாரியால் விரைவாக வலிமைமிக்கத் துரோணரை கண்ணுக்குப் புலப்படமுடியாதவராகச் செய்தான். அவனது கரநளினத்தைக் கண்டவரும், க்ஷத்திரியர்களைக் கலங்கடிப்பவருமான துரோணர், தம் கணைகளை நூற்றுக் கணக்கிலும், ஆயிரக்கணக்கிலும் ஏவினார். அந்தப் போரில் தனது தேரில் நின்றிருந்த, அந்த முதன்மையான தேர்வீரனை {ஜராசந்தன் மகனான சகாதேவனை} (தமது கணைகளால்) மறைத்த அந்தத் துரோணர், வில்லாளிகள் அனைவரும் பார்த்துக் கொண்டிருக்கும்போதே ஜராசந்தன் மகனை {சகாதேவனை} விரைவாகக் கொன்றார். உண்மையில், யமனுக்கு ஒப்பான அந்தத் துரோணர், உயிரினங்களுக்கு நேரம் நேர்கையில் அவற்றை விழுங்கும் அந்தகனைப் போலவே தன்னை அணுகிய அனைவரையும் விழுங்கினார் {கொன்றார்}.
பிறகு, ஓ! ஏகாதிபதி {திருதராஷ்டிரரே}, அந்தப் போரில் தன் பெயரை அறிவித்துக் கொண்ட துரோணர், பல்லாயிரம் கணைகளால் பாண்டவர்களை மறைத்தார். துரோணரால் ஏவப்பட்டவையும், கல்லில் கூராக்கப்பட்டவரையும், அவரது பெயர் பொறிக்கப்பட்டவையுமான அந்தக் கணைகள், போரில் நூற்றுக்கணக்கான மனிதர்களையும், யானைகளையும், குதிரைகளையும் கொன்றன. சக்ரனால் {இந்திரனால்} கொல்லப்பட்ட அசுரர்களைப் போலத் துரோணரால் இப்படிக் கொல்லப்பட்ட பாஞ்சாலர்கள், குளிரால் பீடிக்கப்பட்ட பசுமந்தையைப் போல நடுங்கத் தொடங்கின. உண்மையில், ஓ! பாரதக் குலத்தின் காளையே {திருதராஷ்டிரரே}, அந்தப் பாண்டவப்படை இப்படித் துரோணரால் கொல்லப்பட்ட போது, மிகப் பரிதாபகரமான துயர ஓலம் அங்கிருந்து எழுந்தது. சூரியனால் சுட்டெரிக்கப்பட்டும், அந்தக் கணைகளால் கொல்லப்பட்டும் பாஞ்சாலர்கள் கவலையில் நிறைந்தனர். அந்தப் போரில் பரத்வாஜர் மகனின் {துரோணரின்} கணைமழையால் மலைத்துப்போன பாஞ்சாலர்களில் வலிமைமிக்கத் தேர்வீரர்கள், முதலைகளால் தொடை கவ்வப்பட்டவர்களைப் போலவே தங்களை உணர்ந்தனர்.
அப்போது, ஓ! மன்னா {திருதராஷ்டிரரே}, சேதிகள், சிருஞ்சயர்கள், காசிகள், கோசலர்கள் ஆகியோர் போரிடும் விருப்பத்தால் பரத்வாஜர் மகனை எதிர்த்து மகிழ்ச்சியாக விரைந்தனர். சேதிகள், பாஞ்சாலர்கள் மற்றும் சிருஞ்சயர்கள் தங்களுக்குள் ஒருவருக்கொருவர், "துரோணர் கொல்லப்படுகிறார், துரோணர் கொல்லப்படுகிறார்" என்றனர். இவ்வார்த்தைகளைச் சொல்லிக் கொண்டே அவர்கள் அந்த வீரரை {துரோணரை} நோக்கி விரைந்தனர். உண்மையில், அந்தச் சிறப்புமிக்கத் துரோணரை யமனுலகுக்கு அனுப்ப விரும்பிய அந்த மனிதர்களில் புலிகள் அனைவரும் தங்கள் உச்சபட்ச வலிமையை அவர் {துரோணரின்} மேல் செலுத்தினர். அப்போது பரத்வாஜரின் மகன் {துரோணர்}, போரில் மூர்க்கமாகப் போராடிக் கொண்டிருந்த துணிச்சல் மிக்க வீரர்களை, அதிலும் குறிப்பாகச் சேதிகளில் முதன்மையானோரைத் தமது கணைகளால் இறந்தோருடைய மன்னனின் {யமனின்} முன்னிலைக்கு அனுப்பினார்.
சேதிகளில் முதன்மையானோர் அழிக்கப்பட்ட பிறகு, துரோணரின் கணைகளால் பீடிக்கப்பட்ட பாஞ்சாலர்கள் நடுங்கத் தொடங்கினர். துரோணரின் அந்த அருஞ்செயல்களைக் கண்ட அவர்கள், ஓ! பாரதரே {திருதராஷ்டிரரே}, பீமசேனனையும், திருஷ்டத்யும்னனையும் உரக்க அழைத்து, "இந்தப் பிராமணர் {துரோணர்} கடுமையான தவங்களைப் பயின்று, பெரும் தவத்தகுதியை அடைந்திருக்கிறார் என்பதில் ஐயமில்லை. போரில் சினத்தால் தூண்டப்பட்டிருக்கும் இவர் {துரோணர்} க்ஷத்திரியர்களில் முதன்மையானோரை எரிக்கிறார். ஒரு க்ஷத்திரியனின் கடமை போராகும்; ஒரு பிராமணருக்கு {அந்தக் கடமையானது} உயர்ந்த தவமாகும். தவத்தகுதியும், கல்வியும் கொண்ட ஒரு பிராமணர், தன் பார்வையாலேயே அனைத்தையும் எரிக்கும் வல்லமை பெற்றவராவார். க்ஷத்திரியர்களில் முதன்மையானோர் பலர், ஓ! பாரதரே {திருதராஷ்டிரரே}, கடக்க முடியாதவையும், கடுமையான நெருப்பைப் போன்றவையுமான துரோணரின் ஆயுதங்களை அடைந்து வெடித்து எரிகின்றனர். சிறப்புமிக்கத் துரோணர், தமதளவிலான வலிமை, துணிவு மற்றும் விடாமுயற்சி ஆகியவற்றால் அனைத்து உயிரினங்களையும் மலைக்கச் செய்து, நமது துருப்புகளைக் கொன்று வருகிறார்" என்றனர் {பாஞ்சால வீரர்கள்}.
அவர்களின் இந்த வார்த்தைகளைக் கேட்டவனும், க்ஷத்திரியக் கடமைகளை முறையாகப் பின்பற்றுபவனுமான வலிமைமிக்க க்ஷத்திரதர்மன், அம்பு பொருத்தப்பட்ட துரோணரின் வில்லை அர்த்தச்சந்திரக் கணையொன்றால் கோபத்துடன் அறுத்தான். க்ஷத்திரியர்களைக் கலங்கடிப்பவரான துரோணர், மேலும் கோபமடைந்து, தாம் எறிந்த {முறிந்த} வில்லை விடக் கடினமானதும், பிரகாசமானதுமான மற்றொரு வில்லை எடுத்துக் கொண்டார். பகைவரின் படையணிகளை அழிக்கும் கூர்முனைக் கணையொன்றை அதில் பொருத்திய ஆசான் {துரோணர்}, பெரும்பலத்துடன் தமது வில்லின் நாணைக் காதுவரை இழுத்து அந்த இளவரசனின் மீது ஏவினார். அந்தக் கணையானது க்ஷத்திரதர்மனைக் கொன்றுவிட்டு பூமிக்குள் நுழைந்தது. மார்பு பிளக்கப்பட்ட அவன் {க்ஷத்திரதர்மன்} தனது வாகனத்தில் இருந்து கீழே பூமியில் விழுந்தான். திருஷ்டத்யும்னனுடைய மகனின் கொலையை அடுத்து (பாண்டவத்) துருப்புகள் நடுங்கத் தொடங்கின.
அப்போது வலிமைமிக்கச் சேகிதானன் துரோணரின் மீது பாய்ந்தான். பத்து கணைகளால் துரோணரைத் துளைத்த அவன், மேலும் ஒரு கணையால் அவரது நடுமார்பைத் துளைத்தான். மேலும் அவன் {சேகிதானன்} நான்கு கணைகளால் துரோணரின் தேரோட்டியையும், மேலும் நான்கால் அவரது நான்கு குதிரைகளையும் துளைத்தான். பிறகு ஆசான் {துரோணர்} பதினாறு கணைகளால் சேகிதானனின் வலக்கரத்தைத் துளைத்து, பதினாறால் அவனது கொடிமரத்தையும், ஏழால் அவனது தேரோட்டியையும் துளைத்தார். தேரோட்டி கொல்லப்பட்டதும், சேகிதானனின் குதிரைகள் அந்தத் தேரைத் தங்களுக்கும் பின்னால் இழுத்துக் கொண்டு தப்பி ஓடின. சேகிதானனின் குதிரைகள் பரத்வாஜர் மகனின் {துரோணரின்} கணைகளால் துளைக்கப்பட்டதையும், சாரதியை இழந்த அவனது தேரையும் கண்ட பாஞ்சாலர்களும், பாண்டவர்களும் பெரும் அச்சத்தால் நிறைந்தனர். பிறகு துரோணர், ஓ! ஐயா {திருதராஷ்டிரரே}, போரில் ஒன்றுசேர்ந்திருந்த பாஞ்சாலர்களையும், சிருஞ்சயர்களையும் அனைத்துப் பக்கங்களிலும் முறியடித்துக் கொண்டு மிகப் பிரகாசமாகத் தெரிந்தார்.
முழுதாக எண்பத்தைந்து வயதும், கரிய நிற மேனியும், காது வரை தொங்கிய வெண்மயிரும் கொண்டவரான மதிப்புக்குரிய துரோணர், தன் தேரில் ஏறி பதினாறு வயது இளைஞனைப் போலப் போரில் திரிந்து கொண்டிருந்தார் [1]. உண்மையில் எதிரிகள், ஓ! மன்னா {திருதராஷ்டிரரே}, போரில் அச்சமற்று திரிந்து எதிரியைக் கொல்லும் துரோணரை, வஜ்ரதாரியான இந்திரனேயன்றி வேறு யாருமில்லை என்றே கருதினர். அப்போது, ஓ! ஏகாதிபதி {திருதராஷ்டிரரே}, பெரும் நுண்ணறிவைக் கொண்டவனும், வலிமைமிக்கக் கரங்களைக் கொண்டவனுமான துருபதன், "பசியுடன் கூடிய புலியொன்று சிறு விலங்குகளைக் கொல்வதைப் போல இவர் {துரோணர்} க்ஷத்திரியர்களைக் கொன்றுவருகிறார். பாவியும், தீய ஆன்மா கொண்டவனுமான துரியோதனன், (தனது அடுத்த உலகாக) மிக மோசமான உலகங்களையே அடைவான் என்பது உறுதியானதாகும். அவனது பேராசையின் காரணமாகவே க்ஷத்திரியர்களில் முதன்மையானோர் பலர், போரில் கொல்லப்பட்டுக் குருதியில் புரண்டு, நாய்களுக்கும் நரிகளுக்கும் உணவாகிச் சிதைந்த காளைகளைப் போலக் களத்தில் கிடக்கின்றனர்" என்றான். இவ்வார்த்தைகளைச் சொன்னவனும், ஓர் அக்ஷௌஹிணி துருப்புகளுக்குத் தலைவனுமான துருபதன், ஓ! ஏகாதிபதி {திருதராஷ்டிரரே}, பார்த்தர்களைத் தனக்குத் தலைமையில் நிறுத்திக் கொண்டு, துரோணரை நோக்கி வேகமாக விரைந்தான்" {என்றான் சஞ்சயன்}.
[1] வேறொரு பதிப்பில், "காது வரையில் நரைத்த மயிருள்ளவரும், கரிய நிறமுள்ளவரும், நானூறு பிராயமுள்ளவரும், கிழவருமான துரோணர் பதினாறு வயதுள்ளவன் போல ரணகளத்தில் நாற்புறங்களிலும் சஞ்சரித்தார்" என்றிருக்கிறது. மன்மதநாததத்தரின் பதிப்பிலோ, "காது வரை தொங்கும் நரைத்து வெளுத்த மயிருடனும், நீல நிறத்துடனும், முழுமையாக எண்பத்தைந்து வயதுடனும் கூடிய மதிப்புக்குரிய துரோணர், அதிக வயதையே சுமந்து கொண்டிருந்தாலும், பதினாறு வயது இளைஞனைப் போலக் களத்தில் நகர்ந்து கொண்டிருந்தார்" என்றிருக்கிறது. துரோணரின் வயது எண்பத்தைந்தா? நானூறா?, அவரது நிறம் கருப்பா? நீலமா? என்பவை ஒவ்வொரு பதிப்பிலும் முரண்பட்டே இருக்கின்றன. கங்குலியின் பதிப்பில் விராட பர்வம் பகுதி 43ல் விராடப் போரின் போது அர்ஜுனன் 65 ஆண்டுகளாக காண்டீவத்தை வைத்திருந்ததாக ஒரு குறிப்பு இருக்கிறது. அர்ஜுனன் ஆயுள் முழுவதும் வைத்திருந்ததே அந்த 65 ஆண்டுகள் என்று கொண்டாலும் துரோணருக்கு வயது 85 என்பது இதனால் கேள்விக்குரியதாகவே ஆகிறது.
….
தொடரும்..
..
மகாபாரதம் தொடர் முழுவதும் படிக்க இந்துமதம் வாட்ஸ்அப் குழுவில் இணைந்திருங்கள்

No comments:

Post a Comment