Wednesday, March 17, 2021

Bhagavad Gita adhyaya 2 sloka 45 in tamil

Courtesy : Smt.Dr.Saroja Ramnujam

கீதாம்ருதம் - அத்தியாயம் 2

45.த்ரைகுண்ய விஷயா வேதா: நிஸ்த்ரைகுண்யோ பவார்ஜுன
நிர்த்வந்த்வோ நித்யஸத்வஸ்தோ நிர்யோகக்ஷேம ஆத்மவான்
வேதா:- வேதங்கள் , த்ரிகுண்ய விஷயா: - முக்குணங்கள் ஸம்பந்தப்பட்டவை . ஆகையால், அர்ஜுனா, நிர்த்வந்த்வ:- மகிழ்ச்சி ,துயரம் முதலிய இரட்டைகளைக் கடந்து , நிஸ்த்ரிகுண்ய: - முக்குணங்களின் செயல்களில் பற்றின்றி, நித்ய ஸத்வஸ்த: -எப்போதும் சுத்தஸத்வத்தில் நிலை பெற்று, நிர்யோகக்ஷேம;- யோகக்ஷேமத்தை விரும்பாதவனாக , ஆத்மவான் பவ- மனத்தை வசப்படுத்தியவனாக ஆவாயாக.
த்ரை குண்ய விஷயா வேதா: என்று சொல்வதின் பொருள் வேதங்களின் கர்மகாண்டப் பகுதியானது கர்மங்களையும் அவற்றின் பலனையும் குறித்ததாக உள்ளதால், அவை முக்குணங்கள் விஷயமானவை. அதாவது போகங்கள், செல்வங்கள் இவைகளைப் பெற்றுத் தரக்கூடிய கர்மங்களைப் பற்றிக் கூறுகின்றன. அதை விட்டு ஞான காண்டப்பகுதியான உபநிஷதங்களின் சாராம்சத்தை அறியவேண்டும் என்பதே இதன் கருத்து.
உடல், மனம் , புத்தி இவை முக்குணங்களுக்கு உட்பட்டவையே. முக்குணங்களைக் கடப்பது என்றால் செய்யப்படும் கர்மங்களில் தான் கர்த்தா (செய்பவன்), என்ற எண்ணத்தை விடுத்து அவற்றின் பலனில் பற்றற்று செய்வதே நிஸ்த்ரைகுண்யம் எனப்படுகிறது.
நித்ய ஸத்வஸ்த: என்றால் ரஜஸ் தமஸ் இவை இரண்டையும் குறைத்து சத்வ குணத்தில் நிலை பெறுவது.
பலனை எதிர்பார்த்து செய்யும் கர்மங்களால் சுகம், துக்கம் முதலிய இரட்டை அனுபவங்கள் ஏற்படுகின்றன. பலனைக்கருதாது செயலாற்றினால் இவைகளில் இருந்து விடுபட முடிகிறது. இதையே நிர்த்வந்தவ: என்று குறிப்பிட்டுள்ளது.
இதற்கு முன் பெறாததைப் பெறுவது யோகம்,. பெற்றதைக் காப்பது க்ஷேமம். எந்தப்பொருளையும் அடையவோ அதைக் காக்கவோ ஆசைப் படாதே என்கிறார்.
ஆத்மவான் என்பது ஆத்மாவில் நிலை பெற்று மனம் புலன்கள் தேகம் இவைகளை வசப்படுத்துவதைக் குறிக்கும்.

46. யாவானர்த்த உதபானே ஸர்வத: ஸம்ப்லுதோதவே
தாவான் ஸர்வேஷு வேதேஷு ப்ராஹ்மணஸ்ய விஜானத:
விஜானத:ப்ராஹ்மணஸ்ய – ப்ரம்மத்தை அறிந்தவனுக்கு , ஸர்வத:- எல்லாப் புறங்களிலும், ஸம்ப்லுதோதகே- நீர் நிறைந்திருக்கையில் , உதபானே-சிறிய நீர் நிலையில் , யாவான் அர்த்த:- எவ்வளவு ப்ரயோஜனமோ, தாவான் – அவ்வளவே, ஸர்வேஷு வேதேஷு- எல்லா வேதங்களாலும் கிடைக்கிறது.
,எல்லா இடங்களிலும் வெள்ளப்பெருக்கு இருக்கையில் சிறிய நீர் நிலையால் எவ்வாறு ஒரு தேவையும் இல்லையோ அதுபோல ப்ரம்ம ஞானம் அடைந்த பின் வேதங்களால் ஒரு ப்ரயோஜனமும் இல்லை. அதாவது இகபர லோக பலன்களை அடைவது குறித்து செய்யவேண்டிய கர்மங்களைக் கூறும் வேதமானது (கர்மகாண்டம்) ப்ரம்மானந்தமாகிய எல்லையில்லா ஆனந்த வெள்ளம் இருக்கையில் ஒரு சிறு கிணற்றிலோ அல்லது குளத்திலோ கிடைக்கும் நீர் போன்றதே.

  

No comments:

Post a Comment