Friday, July 17, 2020

Rescue by Kamakshi-Periyavaa

!!"காஞ்சி மகா பெரியவாள்"!! 

            !!காமாக்ஷி காளியானாள்!! 

சாமிநாத குருக்கள்  ரொம்ப நல்லவர். அடிக்கடி முருகன் ஸ்தோத்திரங்கள் பாடல்கள் அருமையாக பாடிக்காட்டுவார்.நல்ல குரல் என்பதால் ரசிப்பேன்.

வெயில் தாங்க முடியவில்லை என்று  கையில் ஒரு  புத்தகத்தால் விசிறிக்கொண்டு எதிரே உட்கார்ந்தார்.  சில்லென்று மோர் கொடுத்ததும் ஒரே மூச்சில் குடித்தார். மின் விசிறிக்கு  கீழே அமர்ந்தார். 

அவர் கையில் இருந்த புத்தகத்தில் பெரியவா படம் . '' மஹா பெரியவாளின் திவ்யமங்கள சரித்ரம் – 42 [ஸ்வயாநுபூதி - எங்கும் நிறைந்த பராஶக்தி அனுக்ரஹ அனுபவங்கள்] நன்றி: திருமதி கௌரி சுகுமார்  என்று போட்டிருந்ததை படித்தேன்.  விறுவிறுப்பாக இருந்தது.

அதன் சாராம்சம் தான் கீழே சுருக்கி தந்துள்ளேன்.

 கல்கத்தாவில்தான் நக்ஸலைட்டுகள் அதிகம் இருந்தார்கள்.அங்கே பெரியவாளிடம் மிகவும் பக்தி பூண்ட ஒரு குடும்பம். குழந்தைகள் எல்லோரும் லீவுக்கு, தமிழ்நாட்டில் இருந்த அத்தை வீட்டுக்குச் சென்றிருந்தார்கள். கணவனும் மனைவியும் மட்டும் கல்கத்தாவில்.  வழக்கம் போல், காலை கணவன் ஆபீஸ் போனதும், அந்த அம்மா வீட்டின் மற்ற வேலைகளை கவனித்துக் கொண்டிருந்தபோது, வாஸலில் காலிங் பெல் அடித்தது.

மெல்லக் கதவைத் திறந்த அவளைத் தள்ளிக்கொண்டு திமுதிமுவென்று நாலைந்து தடித் தாண்டவராயன்கள் உள்ளே நுழைந்ததில் வெலவெலத்துப் போய்விட்டாள்...!அவர்கள் கைகளில் கத்திகள். அதிர்ச்சியில் கண்கள் நிலை குத்தி பேச்சு அடை பட்டது அவளுக்கு. 

கொடிய  கம்சன்கள். என்ன எதிர்பார்க்க முடியும் அவர்களிடம். பயங்கரவாதிகள் அந்த அம்மாவிடம் பெங்காலியில்  மிரட்டினார்கள்.

"கத்தி ஊரைக் கூட்டாமல்,  உள்ளே போய்  எங்கள் எல்லாருக்கும், நல்ல டீ போட்டுக் கொண்டுவா!.."

அவள்என்ன சொல்வாள், செய்வாள்?  அவர்கள் பேச்சு புரிந்ததோ புரியவில்லையா.  டீ  என்ற ஒரு வார்த்தை அவளை  உள்ளே நகர வைத்தது. இது நான் கடைசியாக  இந்த வீட்டில்  டீ  போடுவது என்று தோன்றினாலும்  பேசாமல் அவர்களுக்கு டீ போட்டு கொடுத்தாள்.

பிறகு மெல்ல அவர்களிடம் தனக்குத் தெரிந்த ஹிந்தியில்...

"நா.... என் கொழந்தேளுக்கு ஒரே ஒரு ஃபோன் பண்ணிக்கட்டுமா?"

அப்படிக் கெஞ்சியபோது, அவள் குரல் அவளுக்கே கேட்கவில்லை.

"சலோ! கரோ!.."

பெரிய் ..ய்ய மனஸோடு அனுமதி கொடுத்தனர்.

குழந்தைகளை எதுவும் சொல்லி பயமுறுத்தாமல், பயத்தையும் துக்கத்தையும் கஷ்டப்பட்டு அடக்கிக் கொண்டபடியே பேசினாள்....

" கொழந்தேளா.... நாந்தான் அம்மா பேசறேன்! சமத்தா இருங்கோ! பெரியவாளை மறக்காதீங்கோ! நாளைக்கு எந்த மாதிரி ந்யூஸ் வந்தாலும், அதுவும்.... ஸ்வாமி குடுத்தது-ன்னு எடுத்துக்கணும்...."

அழுகையையும் கஷ்டப்பட்டு அடக்கிக் கொண்டு பேசிவிட்டு, ஹாலுக்கு வந்தாள்.

"என்னை ஒரே போடாகப் போட்டுக் கொன்னுடுங்கோ! வேற ஒண்ணும் பண்ணிடாதீங்கோ!.."

அவர்களிடம் சொல்லிக்கொண்டே, ஹாலில் சுவரில் அருகருகே மாட்டியிருந்த பெரியவா படத்துக்கும், காளி தேவியின் படத்துக்கும் நமஸ்காரம் செய்தாள்.

"பெரியவா! உங்க பாதாரவிந்தமே   ஶரணாகதி!"

மனஸ், ஶரீரம் ரெண்டையுமே.... பெரியவா திருவடியில் போட்டுவிட்டு, நமஸ்கரித்தாள்.

"பெரியவா..காப்பாத்துங்கோ! இன்னிக்கி ஏகாதஸி ! இன்னிக்கின்னு இப்டியொரு ஸோதனையா? நீங்கதான் கதி!.."

மனஸ் உருகி ப்ரார்த்தித்துக் கொண்டாள்.

அப்போதுதான் அந்த பேரதிஸயம் நடந்தது!

அந்த பயங்கரவாதிகள், இவள் யாருடைய படத்தை நமஸ்காரம் செய்கிறாள், என்று பார்த்தார்கள்.
ஒன்று, அவர்களுக்குத் தெரிந்த மஹாகாளி! அவளுக்குப் பக்கத்தில்....

இது என்ன தேவி ரூபம்!

மஹாகாளியை விட மஹா கோரமாக!... மஹா பயங்கரமாக!...

இத்தனை பயங்கரமான உருவத்தோடு பவதாரிணியை இதுவரை பார்த்ததில்லையே!.... பயங்கரவாதிகளே பயந்து போனார்கள்!

அவர்களும் மஹாகாளியின் பக்தர்கள்தான்!

"நாம் தினமும் வணங்கும் மஹாகாளிக்கு பக்கத்தில் ரெண்டாவதாக இத்தனை உக்ரமான காளி எப்படி வந்தாள்?..."

மனஸ் கிடுகிடுக்க.... அப்படியே ஸ்தம்பித்து போனார்கள்!

லோக ஜனனியல்லவா? அவளுடைய குழந்தைகள் என்பதால், கொஞ்சவும் செய்வாள்; தவறு செய்யும்போது, பயமுறுத்தவும் செய்வாள்.

மஹா மஹா உக்ரமான பவதாரிணியை பார்த்ததும், விதிர்விதிர்த்துப் போய் கீழே நமஸ்காரம் பண்ணிக் கொண்டிருக்கும் அம்மாவைப் பார்த்தால், அவளையும் அந்த உக்ரகாளிகையாகவே பார்க்கும் பரிபக்குவத்தை, அந்த காஞ்சி காளி, அந்த க்ஷணம் அவர்களுக்குக் குடுத்திருந்தாள்.

ஆம்! காஞ்சீபுரத்திலிருந்தபடியே...மகா பெரியவா என்கிற  மஹா காளி .. அந்த பக்குவத்தை அனுக்ரஹித்துவிட்டாள்!

"மா....! தேவீ....! ஹமே க்ஷமா கரோ!..."

அலறிக்கொண்டு, அந்த அம்மாவின் காலில் தடால் தடாலென்று விழுந்து கும்பிடு போட்டுவிட்டு, கதவைத் திறந்து கொண்டு ஒரே ஓட்டமாய் ஓடிவிட்டனர்!

அந்த அம்மாவுக்கு, ஒன்றுமே புரியாவிட்டாலும், பெரியவாளுடைய கருணா லீலையை நினைத்து நினைத்து அழுவதைத் தவிர, ஒன்றுமே செய்ய முடியவில்லை.

உடனேயே கணவருக்கு ஃபோன் பண்ணி விஷயத்தை திக்கித் திணறி சொன்ன கொஞ்ச நேரத்தில் அவரும் பதறிக்கொண்டு வீட்டுக்கு வந்தார். தம்பதி இருவரும் தாமதிக்காமல் காஞ்சீபுரம் ஓடி வந்தனர்.

பெரியவா ஸன்னதியில் எப்போதும் போல் கூட்டம். இவர்கள் முறை வந்து நமஸ்காரம் பண்ணிவிட்டு எழுந்ததும், பெரியவா சிரித்துக் கொண்டே..கேட்டார்...

"என்ன? காமாக்ஷி காப்பாத்தினாளா?...."

அந்த அம்மாவோ.... ஆனந்தத்தில், அடக்க முடியாமல் அழுதாள்....

ஶரணாகத வத்ஸலன், அவ்யாஜ கருணாமூர்த்தி, ஆபத்பாந்தவன், .....என்ற நாமங்கள் ரூபம் தாங்கி, தண்ட கமண்டலுவோடு, தங்கள் முன்.... காஷாயம் அணிந்து.... அந்த காமாக்ஷி அமர்ந்திருப்பதை எண்ணியெண்ணி, அவளுடைய அந்த தாயன்பில் கரைந்தார்கள்.

என்ன சாமிநாதா,  இந்த கட்டுரை அசாத்தியமாக இருக்கிறதே. இதுவரை படித்ததே இல்லை இந்த விஷயத்தை என்றேன்.  அதுதான் சுவாமி இதை உங்களுக்கு கொடுக்க வெயிலில் வந்தேன்.  உங்களிடம் கொடுத்தா  ஆயிரக்கணக்கானவளுக்கு கொடுத்த மாதிரி இல்லையா. நிறைய பேர் கிட்ட  பெரியவா போய் சேர்வாளே. என்கிறார்.

''பகவானே''....என்னை இப்படியே  வை.........

ஜெய ஜெய சங்கர ஹர ஹர சங்கர. மஹா பெரியவா திருவடிகள் சரணம்.🙏🙏🙏

No comments:

Post a Comment