கல்லெடித்துக் கல்மாரி காத்தாய ! என்றும்
காமறுபூங் கச்சியூ ரகத்தாய் என்றும்
விலிறுத்து மெல்லிய தோள் தோய்ந்தாய் என்றும்
வெஃகாவில் துயிலமர்ந்த வேந்தே என்றும்
மல்லடர்த்து மல்லரையன் றட்டாய் என்றும்
மா கீண்ட கைத்தலத்தென் மைந்தா என்றும்
சொல்லெடுத்துத் தன் கிளியைச் 'சொல்லே' என்று
துணை முலை மேல் துளி சோரச் சோர்கின்றாளே!
திருநெடுந்தாண்டகம் 2064
கல் மலையை எடுத்து இந்திரன் பெய்வித்த கல் மழையைத் தடுத்தவன் என்றும், அழகிய காஞ்சியில் ஊரகத்தில் நின்றருளியவன் என்றும், வில் முறித்து சீதாப் பிராட்டியைக் கைப் பிடித்தாய் என்றும், திருவெஃகாவில் பள்ளி கொண்டருளும் அரசனே என்றும், கிருஷ்ணாவதாரத்தில் மல்லர்களை ஒழித்தவனே என்றும், குதிரை வடிவம் கொண்டு கேசியைக் கிழித்தழித்த திருக்கைகளை உடையவனே என்றும் தன் கிளியை நோக்கி திரு நாமத்தின் முதற்சொல்லை எடுத்துக் கொடுத்து சொல் என்று சொல்லி, அது சொல்லத் தொடங்கியவுடன் இரு கொங்கைகளின் மேலும் கண்ணீர் பெறுகப் பெற்று துன்புறுகிறாள்.
சிறப்புப் பொருள் : இந்திரன் கல் மழை பொழிந்ததை கல்லாகிய மலையை குடையாகப் பிடித்துக் காத்தவன், நீர் மழை பொழிந்திருந்தால் கடலையே குடையாக எடுத்துப் பிடித்துக் காத்திருப்பான்.
கொங்கை எனக் குறிப்பிடுவது உள்ளுறையில் பக்தியைக் குறிப்பிடுவதாகும்.
No comments:
Post a Comment