Friday, March 30, 2018

Rameswaram Temple

சிவாயநம திருச்சிற்றம்பலம்.
பதியும் பணியே பணியாய் அருள்வாய்.
*கோவை கு. கருப்பசாமி.*
-------------------------------------------------------
*தினமும் ஒரு பாடல் பெற்ற தல தரிசனம்:*
(நேரில் சென்று தரிசித்ததைப் போல..................)
---------------------------------------------------------
*தேவாரம் பாடல் பெற்ற தல எண்: 251*

*பாடல் பெற்ற சிவ தல தொடர்:*

*சிவ தல அருமைகள் பெருமைகள்:*

*இராமநாதசுவாமி திருக்கோயில், இராமேஸ்வரம்:*
--------------------------------------------------------
தேவாரம் பாடல் பெற்ற தலங்களில் பாண்டிய நாட்டில் அமைந்துள்ள பதினான்கு தலங்களில் இத்தலம் எட்டாவது தலமாகப் போற்றப் படுகிறது.

*🌙இறைவன்:*
இராமநாதசுவாமி.

*💥இறைவி:* பர்வத வர்த்தினி.

*🌴தல விருட்சம்:*

*🌊தல தீர்த்தம்:* அக்னி சமுத்திரம் உள்பட இருபத்திரண்டு தீர்த்தங்கள்.(தீர்த்த விபரங்கள் கீழே)

*🔥ஆகமம்:*

*📔தேவாரம் பாடியவர்கள்:*
திருநாவுக்கரசர் - 1
திருஞானசம்பந்தர் - 2

*🛣இருப்பிடம்:*
இந்த திருத்தலம் இராமேஸ்வரம் தீவில் இருக்கிறது.

சென்னை, மதுரை, திருச்சி ஆகிய இடங்களில் இருந்து ரயில் வசதி உண்டு. பேருந்து வசதியும் மதுரை, திருச்சியில் இருந்து இருக்கிறது.

*✉அஞ்சல் முகவரி:*
அருள்மிகு இராமநாதசுவாமி திருக்கோயில்,
இராமேஸ்வரம்,
இராமநாதபுரம் மாவட்டம்,
PIN - 623 526
---------------------------------------------------------
*📣குறிப்பு:*
இத்துடன் பாடல் பெற்ற
தலங்களின் தொடர்ச்சி 250-வது ஆகும். இன்னும் 24- தலங்கள் பதிய வேண்டியுள்ளது.

பாடல் பெற்ற தலங்களின் முன்ன பதிந்த பதிவுகள் அழிந்து விட்டது என்றும், சேமிக்கத் தவறி விட்டேன் என்றும், இடையிலுள்ள பல பதிவுகள் காணவில்லை என்றும் திரும்ப திரும்ப அனுப்பச் சொல்லி தினமும் நிறைய பேர்கள் கேட்கிறார்கள்.

அடியேன் கட்டிட பெயின்டிங் வேலைக்குச் செல்பவன். அன்றன்றைய பதிவை அன்றன்றே இரவில் பதிவை டைப் செய்து அனுப்பி வருகிறேன். ஒருநாள்  பதிவின் டைப்புக்கு மூன்று மணி நேரம் ஆகிறது.

திரும்பத் திரும்ப அனுப்ப எனக்கு சிரமமாக உள்ளது. தயவு செய்து பொறுத்துக் கொள்ளவும். ஆகையால், விடுபட்ட பதிவை தேவைப்படுவோர், அடியேனுடைய முகநூல்-க்குச் சென்று தேவையான பதிவுகளை பதவிறக்கம் செய்து கொள்ளுமாறு தாழ்மையுடன் கேட்டுக் கொள்கிறேன்.

*அடியேன் முகநூல்கள்:*
1) karuppa Samy
2) painted polish Gmail.com
3) அவனே எல்லா அசைவும்
இதில் ஏதேனும் ஒரு முகநூலில் சென்று தருவித்துக் கொள்ளுமாறு தாழ்மையுடன் கேட்டுக் கொள்கிறேன்.
---------------------------------------------------------
*இரண்டு லிங்கங்கள்:*
இராமநாத சுவாமி ஆலயத்தில் மூலஸ்தானத்தில் இரண்டு லிங்கங்கள் வைத்து வழிபடப்பட்டு வருகின்றன.

ஒன்று சீதா பிராட்டியார், அக்னித் தீர்த்தக் கரையில் உள்ள மண்ணால் செய்து வழி பட்ட லிங்கமாகும். இந்த லிங்கத்தை (இராமர் வழிபட்டதால்)
ராமலிங்கம் என்று அழைக்கப் படுகின்றது.

மற்றொன்று கைலாயமலையில் இருந்து அனுமான் கொண்டு வந்தது, இந்த லிங்கத்தை விசுவலிங்கம் என்று அழைக்கப் படுகின்றது.

அனுமார் கொண்டுவந்த விசுவலிங்கம் முதலில் கொண்டு வர முனைந்ததால், அதனையே முதலில் வழிபட வேண்டும் என ராமர் சொல்லி வைத்ததால் அவ்வாறே இன்றளவும் தொடர்கிறது.

*பயன்பாடு:*
இந்தியாவில் மிகவும் தெய்வீகத்  தன்மையுடையதாக கருதப்படும் கோவில்களில் இராமேஸ்வரம் ஒன்றாகும்.

இராமேஸ்வரம் கோ விலுக்கு வந்து மூலவர் ராமநாதரை வழிபடுவதும், அக்னி தீர்த்தம் என்று அழைக்கப்படும் சமுத்திரக் கரையில் நீராடுவதும் ஒவ்வொரு இந்துவும் தன் வாழ்நாளில் செய்ய வேண்டிய முக்கிய கடமையாக கருதப்படுகிறது.

இறந்தவர்களுக்காக திதி, தர்ப்பணங்கள் செய்வதற்கு உகந்த திருத்தலங்களில் இராமேஸ்வரம் ஒரு முக்கிய தலம் ஆகும்.

மூர்த்தி, தலம், தீர்த்தம் ஆகிய மூன்றாலும் சிறப்பு பெற்ற ஸ்தலம் இராமேஸ்வரம்.

இந்தியாவில் உள்ள பன்னிரண்டு ஜோதிர்லிங்கத் தலங்களுள் இராமேஸ்வரம் தலமும் ஒன்று.

இந்தியாவில் உள்ள புண்ணியத் தலங்களுள் நான்கு தலங்களையே வட இந்தியாவில் உள்ளோர் மிகச் சிறப்பாகக் கருதுகின்றனர்.

அவைகள், வடக்கே பத்ரிநாதம், கிழக்கே ஜகந்நாதம், மேற்கே துவாரகநாதம், தெற்கே இராமநாதம். இவற்றுள் முதல் மூன்று தலங்களும் வைணவத் தலங்களாகும். நான்காவதான இராமநாதம் ஒன்றே சிவ தலம்.

இத்தலத்தில் இராமநாதர் ஜோதிர்லிங்க மூர்த்தியாக திகழ்கிறார். இந்த ஜோதிர்லிங்கம் சுவாமி சன்னதியின் முதல் கிழக்கு பிரகாரத்தில் உள்ள சிறிய சன்னதியில் இருக்கிறது.

இலங்கைமீது படையெடுத்து இராவணாதி அரக்கர்களை வென்று, அயோத்திக்குத் திரும்பும் வழியில், இராமபிரான் இராவணனைக் கொன்றதனால் ஏற்பட்ட பிரமஹத்தி தோஷத்தைப் போக்கிக்கொள்வதற்கு இராமேஸ்வரத்தில் இறைவனை வழிபட்டார்.

சீதாப்பிராட்டியினால் மணலில் அமைக்கப்பட்ட சிவலிங்கத்தைப் பிரதிஷ்டை செய்து வழிபட்டார் என்றும் புராண வாயிலாக அறியப்படுகிறது.

இராமபிரான் சிவலிங்கம் ஸ்தாபித்து அவரை வழிபட்ட காரணத்தினால் இத்தலத்திற்கு இராமேஸ்வரம் என்று பெயர் ஏற்பட்டது.

வடக்கே உள்ள காசியும் தெற்கே உள்ள இராமேஸ்வரமும் இந்துக்களின் சிறந்த புண்ணிய தலங்களாகக் கருதப்படுகின்றன.

காசிக்கு புனிதப் பயணம் சென்றவர்கள் இராமேஸ்வரம் தலத்திற்கு வந்து தனுஷ்கோடி தீர்த்தத்தில் நீராடி இராமநாதரை வழிபட்டால் தான் காசி தலப் பயணம் முழுமை அடைந்ததாகும் என்பது இந்து சமயத்தினரின் மரபு.

இராமாயணத் தொடர்புடைய இராமலிங்கத்தை வழிபட இந்தியாவின் பல்வேறு மொழிகள் பேசும் மக்கள், பல்வேறு மாநிலங்களிலிருந்தும் வருகின்றனர்.

எனவே, இராமேஸ்வரக் கோவிலை இந்தியாவின் ஒருமைப்பாட்டிற்குரிய ஒரு சிறந்த ஆன்மீக சின்னமாகக் கருதலாம்.

சுவாமி சந்நிதி முன் உள்ள
சுதை வேலைப்பாட்டால்
ஆன இந்த நந்திபெருமான் இருபத்திரண்டு அடி
நீளமும், பன்னிரண்டுஅடி அகலத்தையும்,
பதினேழு அடி உயரத்தையும் கொண்டது

*கோவில் அமைப்பு:*
இராமேஸ்வரம் திருக்கோவில் சுமார் பதினைந்து  ஏக்கர் நிலப்பரப்பில் அமைந்துள்ள ஒரு பெரிய கோவிலாகும்.

இராமேஸ்வரம் கோவிலின் கிழக்கு கோபுரமே மிகவும் உயரமானது. இதன் உயரம் சுமார் நூற்று இருபத்திறு அடி ஆகும்.

மேற்கில் உள்ள கோபுரம் சுமார் எழுபத்தெட்டு அடி உயரம் கொண்டவையாகும்.

இக்கோவிலின் நான்கு பக்கமும் வாயில்கள் அமைந்திருந்தாலும் வடக்கு, தெற்கு வாயில்கள் போக வர உபயோகத்தில் இல்லை.

ஆலயத்தினுள் இராமலிங்கம், காசி விஸ்வநாதர் பர்வதவர்த்தினி, விசாலாட்சி, நடராஜர் ஆகிய இவருக்கும் தனித்தனியே விமானக்கள் அமைந்திருக்கின்றன.

சுவாமியின் சந்நிதி கிழக்கு நோக்கி அமைந்துள்ளது.

இச்சந்நிதியில் சீதாதேவியால் உருவாக்கப்பட்டு இரமபிரானால் பிரதிஷ்டை செய்யப்பட்ட இராமலிங்கர் சிவலிங்கத் திருமேனியுடன் காட்சி அளிக்கிறார்.

இந்த சிவலிங்கத் திருமேனியில் அனுமனின் வால் தழும்பு இருப்பதை இன்றும் காணலாம்.

சுவாமி சந்நிதிக்கு இடதுபுறம் காசி விஸ்வநாதர் சந்நிதி இருக்கிறது. இதுவே அனுமன் கொண்டு வந்து பிரதிஷ்டை செய்யப்பட்ட சிவலிங்கமாகும்.

மூலவர் கருவறையின் முன்மண்டபத்தில் இராமர், சீதை, லட்சுமணன் ஆகியோர் திரு உருவங்கள் இருக்கின்றன.

இவர்களுக்கு எதிரே தெற்கு நோக்கியபடி தனியே ஒரு ஆஞ்சநேயரும் காட்சிதருகிறார்.

அம்பிகை பர்வதவர்த்தினியின் சந்நிதி இராமநாதரின் வலப்பக்கம் அமைந்திருக்கிறது.

அம்பிகை கோவிலின் வடமேற்கு மூலையில் பள்ளிகொண்ட பெருமாள் ஆகாயத்தை நோக்கியபடி சயனத் திருக்கோலத்தில் சேவை சாதிக்கிறார்.

தென்மேற்கு மூலையில் சந்தானகணபதியின் சந்நிதி அமைந்திருக்க, விடுவோமா? சடுதியில் காதுகளைப் பிடித்துத் திருகி தோப்புக்கரணமிட்டுக் தொழுது வணங்கிவிட்டு நகர்ந்தோம்.

ஆலயத்தின் வெளிப் பிரகாரத்தில் வடகிழக்கு மூலையில் நடராஜர் சந்நிதி இருந்தது.

இராமநாதர் சந்நிதிக்கு பின்புறம் இரண்டாவது மற்றும் மூன்றாவது பிரகாரங்களுக்கிடையே சேதுமாதவர் சந்நிதி இருந்தது.

தினமும் காலை ஐந்து மணிக்கு ராமநாதசுவாமி சன்னதியில், ஆதிசங்கரர் பிரதிஷ்டை செய்த ஸ்படிக லிங்கத்திற்கு அபிஷேகம் நடக்கிறது.

இந்த அபிஷேகத்தை தரிசிக்க கட்டணம் உண்டு.

பர்வதவர்த்தினி அம்பிகை பீடத்திற்கு கீழே ஆதிசங்கரர் ஸ்தாபித்த ஸ்ரீசக்ரம் இருக்கிறது.

சக்தி பீடங்களில் இது "சேதுபீடம்" ஆகும்.

இந்த ஆலயத்தின் மற்றொரு சிறப்பு 1212 தூண்களைக் கொண்ட இக்கோவிலின் மூன்றாம் பிரகாரம் ஆகும்.

உலகிலேயே மிக நீளமான பிரகாரம் என்ற பெருமையைப் பெற்ற இப்பிரகாரம் உலகப்பிரசித்தி பெற்றதாகும்.

முத்துவிஜயரகுநாத சேதுபதி அவர்களால்  தொடங்கப்பட்ட பிரசித்தி பெற்ற மூன்றாம் பிரகாரம் அமைக்கும் பணி, முத்துராமலிங்க சேதுபதி அவர்களால் கட்டி முடிக்கப்பட்டது.

இந்த பிரகாரம் வெளிப்புறத்தில் கிழக்கு, மேற்காக 690 அடியும், வடக்கு தெற்காக 435 அடி நீளமும் கொண்டது. உள்புறத்தில் கிழக்கு மேற்காக 649 அடியும், வடக்கு தெற்காக 395 அடி நீளமும் கொண்டது.

இந்த பிரகாரத்தில் ராமபிரானுக்கு கடலில் பாலம் (சேது பாலம்) அமைக்க உதவி செய்ய வந்த நளன், நீலன், கவன் ஆகிய மூன்று வானரர்களின் பெயரால் லிங்க சன்னதிகள் இருக்கின்றன.

மேலும் இங்கு பதஞ்சலி ஐக்கியமான நடராஜர் சன்னதியும் உள்ளன.

இந்த நடராஜர் ருத்திராட்ச மண்டபத்தில் அழகுடன் எழுந்தருளியுள்ளார்.

*கோவில் தீர்த்தம்:*
இராமேஸ்வரம் கோவிலில் சுவாமி தரிசனத்தை விட தீர்த்தமாடுவது தான் மிக சிறப்பாக கருதப்படுகிறது.

ஆலயத்தின் உள்ளே 22 தீர்த்தங்களும், வெளியே 22 தீர்த்தங்களும் உள்ளன.

ஆலயத்தின் உள்ளே உள்ள தீர்த்தங்கள் எல்லாம் கிணறுகளாகவே அமைந்துள்ளன.

அக்னி தீர்த்தம் என்று கூறப்படும் இராமேஸ்வரம் சமுத்திரக் கரையில் முதலில் தீர்த்தமாடுதலைத் தொடங்கி பின்பு ஆலயத்தினுள் மற்ற தீர்த்தங்களில் நீராட வேண்டும்.

முற்காலத்தில் தனுஷ்கோடியில் முதலில் நீராடி அதன் பின்பு, ராமேஸ்வரம் வந்து தீர்த்தமாடும் வழக்கம் இருந்து வந்தது.

தனுஷ்கோடி பல வருடங்களுக்கு முன்பு புயலில் அழிந்த பிறகு, கோயில் முன்புள்ள அக்னி தீர்த்தக்கடலில் நீராடும் வழக்கம் தொடங்கப்பட்டு விட்டது.

அக்னி தீர்த்தம் என்று கூறப்படும் சமுத்திரக் கரையில் தான் முன்னோர்களுக்கு தர்ப்பணங்கள், பிதிர்கடன்கள் நிறைவேற்றப்படுகின்றன.

*கோயிலுக்குள் உள்ள இருபத்திரண்டு தீர்த்தங்கள்:*
*1. மகாலட்சுமி தீர்த்தம் :* இத்தீர்த்தத்தில் நீராடுவதால் சகல ஐஸ்வர்யமும் உண்டாகும்.

*2.சாவித்திரி தீர்த்தம்,3.காயத்ரி தீர்த்தம்,4.சரஸ்வதி தீர்த்தம்:* இம்மூன்று தீர்த்தங்களில் நீராடுவதால் மத சடங்குகளை தவறவிட்டவர், சந்ததியில்லாதவர் இஷ்ட சித்தியைப் பெறலாம்.

*5.சங்கு தீர்த்தம்:* இத்தீர்த்தத்தில் நீராடுவதால் செய்நன்றி மறந்த சாபம் நீங்கப் பெற்று விடும்.

*6.சக்கர தீர்த்தம்:* இத்தீர்த்தத்தில் நீராடுவதால் ஊனம், குருடு, செவிடு ஆகியவை நீங்கி சௌக்கியம் கிட்டும்.

*7.சேது மாதவ தீர்த்தம்:* இத்தீர்த்தத்தில் ஸ்ரீராமபிரானால் சகலலெட்சுமி கடாட்சமும், சித்த சக்தியும் கிடைக்கும்.

*8.நள தீர்த்தம்:* இத்தீர்த்தத்தில் நீராடுவதால் எத்துறையிலும் வல்லுனர் ஆகலாம், 

*9.நீல தீர்த்தம்:* இத்தீர்த்தத்தில் நீராடுவதால் சமஸ்தயாக பலனையும் அடைந்து சொர்க்கலோக பதவி கிடைக்கும்.

*10.கவாய தீர்த்தம்:* இத்தீர்த்தத்தில் நீராடுவதால் மனவலிமை , தேக ஆரோக்கியம் உண்டாகும்.

*11.கவாட்ச தீர்த்தம்:* இத்தீர்த்தத்தில் நீராடுவதால் நரகத்திற்கு செல்லலும் சூழ்நிலை வரா. 

*12.கந்தமாதன தீர்த்தம்:* இத்தீர்த்தத்தில் நீராடுவதால் மகாதரித்திரம் நீங்கி ஐஸ்வர்ய சித்தி பெறலாம்.

*13.பிரம்மஹத்தி விமோசன தீர்த்தம்:*
இத்தீர்த்தத்தில் நீராடுவதால் பிரம்மஹத்தி தோஷங்களும், பாவங்களும் நிவர்த்தியாவதடன், பில்லி சூனியமும் நீங்கிவிடும்.

*14.கங்கா தீர்த்தம்,15.யமுனை தீர்த்தம்,16.கயாத்ரி தீர்த்தம்:* இம்மூன்று தீர்த்தங்களில் நீராடுவதால் எப்பிறவியிலும் செய்த பாவங்கள் நீங்கிவிடும்.

*17.சர்வ தீர்த்தம்:* இத்தீர்த்தத்தில் நீராடுவதால் பிறவிக்குருடு, நோயும் நரை திரையும் நீங்கி வளமடையலாம்.

*18.சிவ தீர்த்தம்:* இத்திர்த்தத்தில் நீராடுவதால் சகல சௌபாக்கியமும் கிடைக்கும்.

*19.சாத்யாம்ருத தீர்த்தம்:* இத்திர்த்தத்தில் நீராடுவதால் ஆயுள் விருத்தி உண்டாகும், பிராமண சாபம் நிவர்த்தியாகும்.

*20.சந்திர தீர்த்தம்:* இத்திர்த்தத்தில் நீராடுவதால் கலையார்வம் பெருகும்.

*21.சூரிய தீர்த்தம்:* இத்திர்த்தத்தில் நீராடுவதால் முதன்மை ஸ்தானம் கிடைப்பதுடன் ரோகங்கள் நிவர்த்தியாகும்.

*22.கோடி தீர்த்தம்:* இத்திர்த்தத்தில் நீராடுவதால் முக்தி (மறுபிறவி இல்லாத நிலை) கிடைக்கும். இந்நீரானது இராமநாதசுவாமி மற்றும் எல்லா சுவாமி அம்பாள் ஆகியவர்கள் அபிஷேகத்திற்கு பயன்படுத்தப்படுக்கிறது.

கோடி திர்த்தத்தில் நிராடியபின் இவ்வூரில் இரவு தங்கலாகாது என்பது சம்பிரதாயம்.
 
*தல யாத்திரை மரபு:*
காசி மற்றும் ராமேஸ்வரம் யாத்திரையானது, வாழ்வில் முக்கியத் துவம் வாய்ந்தது.

காசி, ராமேஸ்வரம் யாத்திரை செல்பவர்கள் முதலில் ராமேஸ்வரத்தில் அக்னி தீர்த்தத்தில் நீராட வேண்டும்.

பின்பு, இந்தத் தீர்த்தத்தைக் கொஞ்சமும், அக்னி தீர்த்தக் கடல் மணல்  கொஞ்சத்தையும் எடுத்து சேகரித்து வைத்துக் கொண்டு யாத்திரை செய்து காசிக்குச் செல்ல வேண்டும்.

காசிக்குச் சென்று, ராமேஸ்வரத்தில் சேகரித்துக் கொண்டு வந்த மணலையும்  கங்கையில் மணலை போட்டுவிட்டு, அக்னி தீர்த்த்தை காசி விஸ்வநாதருக்கு  அபிஷேகம் செய்யவேண்டும்.

பிறகு காசியிலிருந்து கங்கை தீர்த்தத்தைச் சேகரித்து ஏடுத்து வந்து இராமேஸ்வர இராமநாதருக்கு அபிஷேகம் செய்ய வேண்டும். இதுதான் மரபு. இதுதான் புண்ணியம். இப்படித்தான் செய்ய வேண்டும். 

இப்படி செய்து முடித்தால்தான் காசி ராமேஸ்வர யாத்திரை செய்த பலனும் பயனும் உண்டு.

இராமேஸ்வர தலத்தை மட்டும் தரிசிப்பவர்களுக்கு இம்மரபு இல்லை.

பொருளாதார சூழ்நிலையில் எல்லோராலும் காசி ராமேஸ்வர யாத்திரை பயணம் செய்ய முடியாது.

ஆதலால் காசிக்குச் செல்ல முடியாதவர்கள், ராமேஸ்வரஸ்வரம் வந்து ஈசனை வணங்கி, இத்திருக்கோயிலிலேயே விற்பனை செய்யப்படும் கங்கை தீர்த்தம் வாங்கி சுவாமிக்கு அபிஷேகிக்கக் கொடுக்கலாம்.

மானசீகமாக காசிவிசுவநாதரை நினைந்து வணங்கி, கங்கை இத்தீரத்தத்தை அபிஷேகிப்பதால் காசி விசுவநாதரை வணங்கித் தரிசித்த பேறு பெறுநர்.

இங்கு கோயில் கொண்டுள்ள அம்பாள் பர்வத வர்த்தினி, கருணைக்கடல். சாந்த சொரூபினி. அம்பிகை பீடத்திற்கு கீழே ஆதிசங்கரர் நிறுவிய ஸ்ரீசக்ரம் இருக்கிறது.

அம்பிகைக்கு சித்திரைப் பிறப்பன்று மட்டும் சந்தனக் காப்பு அலங்காரம் செய்வது வழக்கம்.

அம்பாள் சந்நிதியின் பிராகாரத்தில் ஆதிசேஷன் மீது பள்ளி கொண்ட கோலத்தில் அழகுறக் காட்சி தருகிறார் திருமால்!

பல்லாயிரக்கணக்கான ருத்ராட்சங்கள் சேர்த்துப் பின்னப்பட்ட பந்தலின் கீழ் நடராஜர் காட்சி தருவது அற்புதம்.

யோகக் கலையில் தேர்ச்சி பெறவும், நாகதோஷ நிவர்த்திக்காகவும் இந்த சந்நிதியில் நாகவடிவில் உள்ள பதஞ்சலி முனிவரிடம் வேண்டிக்கொள்கிறார்கள் பக்தர்கள்.

*சிறப்பு:*
ஸ்படிக லிங்க தரிசனம். கருவறையில் உள்ள ஆதிசங்கரர் ஸ்தாபித்த ஸ்படிக லிங்கத்திற்கு தினமும் காலை 5.00  முதல் 6.00 மணி வரை  சிறப்பு தரிசனம் நடைபெறும்.

இது வேறு எந்தத் தலத்துக்கும் இல்லாத சிறப்பு.

இந்த ஸ்படிக லிங்கத்தைத் தரிசனம் செய்து, புண்ணிய தீர்த்தத்தில் வழிபட்டால், பித்ருக்களின் சாபத்தில் இருந்து விடுபடலாம்.

மேலும், பித்ருக்களின் ஆசீர்வாதம் கிடைக்குமாம். வாழ்வில் சந்ததி பலத்துடன் வாழலாம் என்கிறார்கள் ஆச்சார்யர்கள்.

*ஜோதிர்லிங்கம்:*
சிவபெருமான் ஜோதி ரூபமாக காட்சியளிக்கும் பன்னிரண்டு தலங்கள் இந்தியாவில் உள்ளன.

அதில் ஒன்று இராமேஸ்வரம். மற்ற பதினோரு தலங்களும் பிற மாநிலங்களில் உள்ளன.

விபீஷணன், இராமருக்கு உதவி செய்ததன் மூலம் இராவணனின் அழிவிற்கு அவனும் ஒரு காரணமாக இருந்தான்.

இந்தப் பாவம் நீங்க, இங்கு இலிங்கப் பிரதிஷ்டை செய்து வழிபட்டான்.

அவனுக்கு காட்சி தந்த சிவன்,  அவனது பாவத்தைப் போக்கியதோடு, ஜோதி ரூபமாக மாறி இந்த இலிங்கத்தில் ஐக்கியமானார்.

இதுவே, *ஜோதிர்லிங்கம்* ஆயிற்று. இந்த இலிங்கம் சுவாமி சன்னதி பிரகாரத்தில் மேற்கு நோக்கி  இருக்கிறது.

இத்தலத்தில் ராமநாதர் ஜோதிர்லிங்க மூர்த்தியாக திகழும் சிவன் சன்னதியில் பெருமாளுக்குரிய தீர்த்தம் பிரசாதமாக இங்கு தரப்படுவது சிறப்பு.

அக்னி தீர்த்தம் என்று கூறப்படும் இராமேஸ்வரம் சமுத்திரக் கரையில் முதலில் தீர்த்தமாடுதலைத் தொடங்கி பின்பு ஆலயத்தினுள் மற்ற தீர்த்தங்களில் நீராட வேண்டும்.

ஆலயத்தின் உள்ளே உள்ள தீர்த்தங்கள் எல்லாம் கிணறுகளாகவே அமைந்துள்ளன.

சீதையின் கற்பை நிரூபிப்பதற்காக,  அவளை அக்னிப் பிரவேசம் செய்யச் செய்தார் ராமர். 

சீதையைத் தொட்ட பாவம் நீங்க, அக்னிபகவான் இங்கு கடலில் நீராடி தோஷம் நீங்கப்பெற்றார். எனவே, இந்த தீர்த்தம் அக்னி தீர்த்தம் என்று அழைக்கப்படுகிறது.

சீதையின் கற்புத்திறன் அக்னியையே சுட்டதாகவும், அந்த  வெம்மை தாளாத அக்னி இந்தக் கடலில் மூழ்கி தனது வெப்பத்தை தணித்ததாகவும் சொல்லப்படுகிறது.

இராமநாதசுவாமி திருக்கோவிலில் உள்ள இருபத்தி இரண்டு தீர்த்தக்  கிணறுகளே இத்தல தனிச்சிறப்பு ஆகும்.

இந்த கிணறுகள் அனைத்தும் இராமரால் உருவாக்கப்பட்டவை என்று நம்பப்படுகிறது. இராமர் எய்த அம்புகள் விழுந்த ஒவ்வொரு  இடத்திலும் ஒரு கிணறு உருவானதாம்.

இந்தக் கிணறுகள் ஒவ்வொன்றும் தனித்தன்மை வாய்ந்தவை. அருகருகே இருந்தபோதும், ஒவ்வொரு கிணற்றின் நீருக்கும் சுவை, நிறம், உப்புத்தன்மை, அடர்த்தி ஆகியவை மாறுபட்டு தெரிகிறது.

*தல அருமை:*
இலங்கையில் ராமாயண யுத்தம் முடிந்து, சிவபக்தனான ராவணனை மாய்த்த பின் ராமர் சீதையுடன் திரும்பி வரும் வழியில், இராவண சம்ஹாரத்தினால் தனக்கேற்பட்ட பிரம்மஹத்திதோஷம் நீங்க அகத்திய முனிவரிடம் யோசனை கேட்டார்.

அகத்திய முனிவர் தோஷம் நீங்க ராமேஸ்வரம் கடற்கரையில் சிவலிங்கத்தை பூஜை செய்து வழிபட்டால்  பிரம்மஹத்திதோஷம் நீங்குமென்று சொன்னார்.

ராமர் ஆஞ்சநேயரிடம் கைலாச பர்வதத்திற்கு சென்று சிவலிங்கம் கொண்டு வரும்படி கூறினார்.

ஆஞ்சநேயர் தனக்கு ஒன்றும், இராமருக்கும் ஒன்றுமாக இரண்டு லிங்கங்களைப் கொண்டு வரும் பொழுது காலதாமதம் ஆனது.

சிவலிங்கப் பிரதிஷ்டைக்கு குறிப்பிட்டிருந்த நேரத்திற்குள் ஆஞ்சநேயர் திரும்பி வராததால் சீதை கடற்கரையில் உள்ள மணலால் ஒரு சிவலிங்கம் உருவாக்கித் தந்தாள்.

இராமபிரான் அந்த சிவலிங்கத்தை குறித்த நேரத்தில் பிரதிஷ்டை செய்து தனது பூஜையை முடித்தார்.

இத்தலத்தில்  இராமர் முதலில் பிரதிஷ்டை செய்த இராமலிங்கேஸ்வரரே மூலவராக உள்ளார்.

ஆஞ்சநேயர், தான் வருவதற்குள் மணலால் ஆன ராமலிங்கம் பிரதிஷ்டை செய்யப்பட்டதைக் கண்டு கோபமுற்று தன் பலம் கொண்ட வாலால் சுற்றி பெயர்த்து எடுக்க முயன்று, வால் அருந்து சுமார் முப்பத்தேழு கி.மீட்டர் தூரத்தில் மேற்கே போய் விழுந்துள்ளார்.

அந்த இடமே, ராமநாதபுரதிற்கும் இடைப்பட்ட பகுதியாகும் (வால்+அருந்த+தரவை) *வாலாந்தரை* ஆயிற்று.

இராமபிரான் ஆஞ்சநேயரை சமாதானப்படுத்தி, ஆஞ்சநேயர் கொண்டுவந்த விஸ்வலிங்கத்தை, முதலில் பிரதிஷ்டை செய்த ராமலிங்கத்திற்கு அருகில் பிரதிஷ்டை செய்தார்.

மேலும் அனுமன் கொண்டு வந்த விஸ்வலிங்கத்திற்கே முதற் பூஜை நடைபெற வேண்டும் என்றும் கட்டளையிட்டார். 

அதன்படி, இப்போதும் விஸ்வநாதருக்கு பூஜை செய்யப்பட்ட பின்பே, சீதாவால் உருவாக்கப்பட்ட இராமநாதருக்கு பூஜை நடக்கிறது.

அனுமன் தாமதமாக கைலாயத்திலிருந்து கொண்டு வந்த லிங்கத்திற்கு, "விஸ்வநாதர்" என்று திருநாமம் சூட்டப்பட்டுள்ளது.

*வழிபட்டோர்கள்:*
இராமர்,சீதை, இலட்சுமணர், ஆஞ்சநேயர்.

*நடைதிறப்பு:*
காலை 4.30 மணி முதல் பகல் 1.00 மணி வரை, மாலை 3.00 மணி முதல் இரவு 9.00 மணி வரை.

*பூஜை விவரம்:* ஆறுகாலபூஜைகள், பள்ளியறை தீபாராதனை காலை 5.00 மணி, ஸ்படிகலிங்க தீபாராதனை காலை 5.10 மணி, திருவனந்தல் தீபாராதனை காலை 6.00 மணி, விளாபூஜை காலை 7.00 மணி,
காலசந்தி காலை 10.00 மணி,
உச்சிகாலம் பகல் 12.00 மணி,
சாயரட்சை மாலை 6.00 மணி, 
அர்த்தஜாமம் இரவு 8.30 மணி,
பள்ளியறைபூஜை இரவு 8.45 மணி.

*திருவிழாக்கள்:*
ஆனி - ராமலிங்க பிரதிஷ்டைதிருவிழா,
ஆடி - திருக்கல்யாண உற்சவம்,
மாசி -மஹாசிவராத்திரி திருவிழா,
வைகுண்ட ஏகாதசி,
ராமநவமி,
தை அமாவாசை நாட்களில் கோதண்டராமர் கருடவாகனத்தில் அக்னி தீர்த்தத்தில் எழுந்தருளி தீர்த்தம் அளிப்பார்.

*தொலைபேசி எண்:*
04573 - 221223,
04573 - 221255,
04573 - 221292.

*சம்பந்தர் தேவாரம்:*
பண்: பழம்பஞ்சுரம்.

1.🔔திரிதரு மாமணி நாகமாடத் திளைத்தொரு தீயழல்வாய்
நரிகதிக்க வெரியேந்தி யாடு நலமே தெரிந்துணர்வார்
எரிகதிர் முத்த மிலங்குகான லிராமேச் சுரமேய
விரிகதிர் வெண்பிறை மல்குசென்னி விமலர் செயுஞ்செயலே.

🙏அரிய மாணிக்கங்களையுடைய நாகங்களைப் படமெடுத்து ஆடுமாறு தம் உடலில் அணிந்துள்ளவர் சிவபெருமான். அவர் மகாசங்கார காலத்தில் நரிகள் ஊளையிடும் சுடுகாட்டில் நெருப்பேந்தி நடனம் செய்வார்.  மிக்க ஒளியுடைய முத்துக்கள் விளங்கும் சோலைகள் சூழ்ந்த இராமேச்சுரம் என்னும் திருத்தலத்தில் விரும்பி வீற்றிருந்தருளுகின்ற, ஒளிக்கதிர் வீசும் வெண்மையான பிறைச்சந்திரனைச் சடைமுடியில் தரித்த, இயல்பாகவே பாசங்களின் நீங்கியவரான சிவபெருமானின் அச்செயல், உயிர்கள் இளைப்பாறும் பொருட்டுச் செய்யப்படும் அருட்செயல் என்பதை உணர்ந்தவர்களே மெய்ஞ்ஞானிகள் ஆவர்.

2.🔔பொறிகிளர் பாம்பரை யார்த்தயலே புரிவோ டுமைபாடத்
தெறிகிள ரப்பெயர்ந் தெல்லியாடுந் திறமே தெரிந்துணர்வார்
எறிகிளர் வெண்டிரை வந்துபேரு மிராமேச் சுரமேய
மறிகிளர் மான்மழுப் புல்குகையெம் மணாளர் செயுஞ்செயலே.

🙏வெண்ணிற அலைகள் துள்ளிவீசும் கடலுடைய இராமேச்சுரத்தில் விரும்பி வீற்றிருந்தருளுகின்ற, இள மான்கன்றையும், மழுவையும் ஏந்தியுள்ள சிவபெருமான் புள்ளிகளையுடைய பாம்பை இடையிலே கட்டிக் கொண்டு, பக்கத்திலே சுருண்ட கூந்தலையுடைய உமாதேவி பாட, அதற்கேற்ப விரலால் தெறித்துப் பண்ணும் யாழ் முதலியவற்றின் இசை ஒலிக்க, நள்ளிரவில் நடனமாடும் செயலின் உண்மையைத் தெரிந்து உணர்பவர் மெய்ஞ்ஞானிகளாவர் .

3.🔔அலைவளர் தண்புனல் வார்சடைமே லடக்கி யொருபாகம்
மலைவளர் காதலி பாடவாடி மயக்கா வருமாட்சி
இலைவளர் தாழை முகிழ்விரியு மிராமேச் சுரமேயார்
தலைவளர் கோலநன் மாலைசூடுந் தலைவர் செயுஞ்செயலே.

🙏தழைகளை உடைய தாழை மரங்கள் மலர்களை விரிக்கும் திருஇராமேச்சுரத்தில் விரும்பி வீற்றிருந்தருளுகின்ற, அழகிய தலைமாலைகளைச் சூடிய, தலைவராகிய சிவபெருமான் தமது நீண்ட சடைமுடிமேல் அலைபெருகிவரும் கங்கைநீரை அடக்கி, ஒரு பாகமாக அமைந்த மலையிலே வளர்ந்த உமாதேவி பாட, நடனமாடித் தம் தன்மை இதுவென்று பிறர் அறியாதவாறு செய்து வரும் அருஞ்செயலின் மாட்சியை மெய்ஞ்ஞானிகளே உணர்வர்.

4.🔔மாதன நேரிழை யேர்தடங்கண் மலையான் மகள்பாடத்
தேதெரி யங்கையி லேந்தியாடுந் திறமே தெரிந்துணர்வார்
ஏதமி லார்தொழு தேத்திவாழ்த்து மிராமேச் சுரமேயார்
போதுவெண் டிங்கள்பைங் கொன்றைசூடும் புனிதர் செயுஞ்செயலே.

🙏குற்றமற்ற அடியவர்கள் தொழுது போற்றத் திருஇராமேச்சுரம் என்னும் திருத்தலத்தில் விரும்பி வீற்றிருந்தருளுகின்ற, அரும்பு போன்ற இள வெண்ணிறப் பிறைச்சந்திரனையும், கொன்றை மலரையும் சூடியுள்ள புனிதரான சிவபெருமான், பெரிய கொங்கை களையுடையவளாய், ஒளிபொருந்திய ஆபரணங்களை அணிந்த, பெரிய கண்களையுடைய, மலையான்மகளான உமாதேவி பாட, ஒளிபொருந்திய நெருப்பை உள்ளங்கையிலேந்தி நடனமாடும் செயலின் திறத்தைத் தெரிந்துணர்வார் சிவஞானிகளாவர் .

5.🔔சூலமோ டொண்மழு நின்றிலங்கச் சுடுகா டிடமாகக்
கோலநன் மாதுடன் பாடவாடுங் குணமே குறித்துணர்வார்
ஏல நறும்பொழில் வண்டுபாடு மிராமேச் சுரமேய
நீலமார் கண்ட முடையவெங்கள் நிமலர் செயுஞ்செயலே.

🙏ஏலம் முதலிய செடிகளையுடைய நறுமணம் கமழும் சோலைகள் சூழ்ந்த திருஇராமேச்சுரம் என்னும் திருத்தலத்தில் விரும்பி வீற்றிருந்தருளுகின்ற நீலகண்டமுடைய, இயல்பாகவே பாசங்களின் நீங்கியவரான எங்கள் சிவபெருமான், சூலம், ஒளி பொருந்திய மழு ஆகியவற்றை ஏந்திச் சுடுகாட்டை இடமாகக் கொண்டு அழகிய உமாதேவி அருகில் நின்று பாட, நடனம் செய்யும் குணத்தைக் குறித்துணர்பவர் சிவஞானிகளாவர் .

6.🔔கணைபிணை வெஞ்சிலை கையிலேந்திக் காமனைக் காய்ந்தவர்தாம்
இணைபிணை நோக்கிநல் லாளோடாடு மியல்பின ராகிநல்ல
இணைமலர் மேலன்னம் வைகுகான லிராமேச் சுரமேயார்
அணைபிணை புல்கு கரந்தைசூடும் அடிகள் செயுஞ்செயலே.

🙏சிறந்த தாமரை மலர்களில் அன்னங்கள் வாழும் சோலைகள் சூழ்ந்த திருஇராமேச்சுரம் என்னும் திருத்தலத்தில் விரும்பி வீற்றிருந்தருளுகின்ற, சேர்த்துக் கட்டப்பெற்ற கரந்தைமாலை சூடிய சிவபெருமான், ஐம்மலர்க்கணைகளைத் தொடுக்க வில்லைக் கையில் ஏந்திய மன்மதனை எரித்தவர். அப்பெருமான் மான் போன்ற மருண்ட கண்களையுடைய உமாதேவியோடு நடனமாடும் இயல்புடையவர் .

7.🔔நீரினார் புன்சடை பின்புதாழ நெடுவெண் மதிசூடி
ஊரினார் துஞ்சிருள் பாடியாடும் உவகை தெரிந்துணர்வார்
ஏரினார் பைம்பொழில் வண்டுபாடு மிராமேச் சுரமேய
காரினார் கொன்றைவெண் டிங்கள்சூடுங் கடவுள் செயுஞ்செயலே.

🙏வண்டுகள் பாடும் அழகிய சோலைகள் சூழ்ந்த திருஇராமேச்சுரம் என்னும் திருத்தலத்தில் விரும்பி வீற்றிருந்தருளுகின்ற , கார்காலத்தில் மலரும் கொன்றையையும் , வெண்ணிறப் பிறைச் சந்திரனையும் சூடியவரான சிவபெருமான் , கங்கையைத் தாங்கிய புன்சடை பின்புறம் தொங்க , மிக்க வெண்ணிறப் பிறைச்சந்திரனைச் சூடி , உலகமே உறங்கும் நள்ளிரவில் பாடி ஆடும் உவகையின் செயல் தன்மையை உணர்பவர் சிவஞானிகளாவர் .

8.🔔பொன்றிகழ் சுண்ணவெண் ணீறுபூசிப் புலித்தோ லுடையாக
மின்றிகழ் சோதியர் பாடலாடன் மிக்கார் வருமாட்சி
என்றுநல் லோர்கள் பரவியேத்து மிராமேச் சுரமேயார்
குன்றினா லன்றரக் கன்றடந்தோ ளடர்த்தார்கொளுங் கொள்கையே.

🙏என்றும் நல்லோர்கள் போற்றி வணங்கும் திருஇராமேச்சுரம் என்னும் திருத்தலத்தில் விரும்பி வீற்றிருந்தருளுகின்ற, கயிலைமலையால் அன்று இராவணனின் அகன்ற வலிமையான தோள்களை அடர்த்த சிவபெருமான், நறுமணமிக்க அழகிய திருவெண்ணீற்றினைத் திருமேனியில் பூசி, புலித்தோலாடை அணிந்து, மின்னல் போன்று ஒளிரும் செவ்வண்ணத்தராய், பாடி ஆடி வரும் செயலின் பெருமையை உணர்பவர் சிவஞானிகளாவர்.

9.🔔கோவல னான்முக னோக்கொணாத குழக னழகாய
மேவல னொள்ளெரி யேந்தியாடு மிமையோ ரிறைமெய்ம்மை
ஏவல னார்புகழ்ந் தேத்திவாழ்த்து மிராமேச் சுரமேய
சேவல வெல்கொடி யேந்துகொள்கையெம் மிறைவர் செயுஞ்செயலே.

🙏அம்பு எய்தலில் வல்ல இராமபிரான் புகழ்ந்து ஏத்திவாழ்த்தும் திருஇராமேச்சுரம் என்னும் திருத்தலத்தில், விரும்பி வீற்றிருந்தருளுகின்ற, இடபம் பொறித்த வெற்றிக் கொடியை ஏந்திய சிவபெருமான், திருமால், பிரமன் இவர்களால் அறியப்படாதவர். இளமையும், அழகும் அமைந்த திருவுருவினர். ஒளி பொருந்திய நெருப்பைத் தம் கையிலேந்தி ஆடுகின்ற, தேவர்கட்கெல்லாம் இறைவனான அப்பெருமானின் அருட்செயலின் மெய்ம்மையை அறிவோர் சிவஞானிகளாவர்.

10.🔔பின்னொடு முன்னிடு தட்டைச்சாத்திப் பிரட்டே திரிவாரும்
பொன்னெடுஞ் சீவரப் போர்வையார்கள் புறங்கூறல் கேளாதே
இன்னெடுஞ் சோலைவண் டியாழ்முரலு மிராமேச் சுரமேய
பன்னெடு வெண்டலை கொண்டுழலும் பரமர் செயுஞ்செயலே.

முதுகிலும், மார்பிலும் தடுக்கை அணிந்து, ஒதுக்கப்பட்ட இடங்களில் திரியும் சமணர்களும், பொன் போன்ற சீவரம் என்னும் ஆடையைப் போர்த்த புத்தர்களும் கூறும் புறங்கூற்று மொழிகளைக் கேளாமல், யாழிசை போல் வண்டுகள் ஒலிக்கும் சோலைகளை உடைய திருஇராமேச்சுரம் என்னும் திருத்தலத்தில் விரும்பி வீற்றிருந்தருளி, பல்லையுடைய பெரிய மண்டையோட்டில் பலியேற்றுத் திரியும் சிவபெருமான் செய்யும் செயல்களைக் கேட்டு உணர்ந்து, அவரை வழிபட்டு உய்திபெறுங்கள்.

11.🔔தேவியை வவ்விய தென்னிலங்கை யரையன் றிறல்வாட்டி
ஏவியல் வெஞ்சிலை யண்ணல்நண்ணு மிராமேச் சுரத்தாரை
நாவியன் ஞானசம் பந்தனல்ல மொழியா னவின்றேத்தும்
பாவியன் மாலைவல்லா ரவர்தம்வினை யாயின பற்றறுமே.

         திருச்சிற்றம்பலம்.

🙏சீதாதேவியைக் கவர்ந்த தென்னிலங்கை மன்னனான இராவணனின் வலிமையை அழித்து , அம்பு எய்யும் வில்லேந்திய இராமபிரான் வழிபட்ட திருஇராமேச்சுரம் என்னும் திருத்தலத்தில் , விரும்பி வீற்றிருந்தருளுகின்ற சிவபெருமானை , நாவலராகிய ஞானசம்பந்தர் , நல்ல மொழியால் போற்றிப் பாடிய பாட்டின் இலக்கணம் வாய்ந்த இப்பாமாலையை , ஓதி வழிபட வல்லவர்களின் வினைகள் , முற்றிலும் அழியும் .

            திருச்சிற்றம்பலம்.

தேவாரம் பாடல் பெற்ற தலங்களில் பாண்டிய நாட்டில் அமைந்துள்ள நாளைய தலப்பதிவு *ஆடானை நாதர் திருக்கோயில், திருவாடானை.*

---------------------------------------------------------
*அடியார்களுக்குத் தொண்டு செய்யுங்கள் இறைவன் அவர்களுக்குள்ளிருக்கிறான்.*

No comments:

Post a Comment