உ
சிவாயநம திருச்சிற்றம்பலம்.
பதியும் பணியே பணியாய் அருள்வாய்.
கோவை கு.கருப்பசாமி
______________
தினமும் ஒரு பாடல் பெற்ற தல தரிசனம்:
(நேரில் சென்று தரிசித்ததைப் போல..................)
______________
தேவாரம் பாடல் பெற்ற தல எண்:215
பாடல் பெற்ற சிவ தல தொடர்:
சிவ தல அருமைகள் பெருமைகள்:
விருந்திட்ட ஈஸ்வரர் திருக்கோயில், திருக்கச்சூர் ஆலக்கோவில்:
________________
தேவாரம் பாடல் பெற்ற தலங்களில் தொண்டை நாட்டில் அமைந்துள்ள முப்பத்திரண்டு தலங்களுள் இத்தலம் இருபத்து ஐந்தாவது தலமாகப் போற்றப் படுகிறது.
இறைவன்: கச்சபேஸ்வரர், விருந்திட்ட ஈஸ்வரர், மருந்தீஸ்வரர்.
இறைவி: அஞ்சனாட்சி, கன்னி உமையாள்.
தல விருட்சம்: கல்லால மரம்.
தல தீர்த்தம்: கூர்ம தீர்த்தம் (ஆமை).
ஆகமம்: காமீக ஆகமம்.
தேவாரம் பாடியவர்கள்:
சுந்தரர். ஏழாம் திருமுறையில் ஒரே ஒரு பதிகம் மட்டும்.
இருப்பிடம்:
சென்னை எழும்பூர் செங்கல்பட்டு ரயில் மார்க்கத்தில் உள்ள சிங்கபெருமாள் கோவில் ரயில் நிலையத்தில் இருந்து சுமார் இரண்டு கி.மி. தொலைவில் இந்த தலம் இருக்கிறது.
சென்னை செங்கல்பட்டு தேசீய நெடுஞ்சாலையில் சிங்கப்பெருமாள்கோவில் சென்று அங்கிருந்து ஸ்ரீபெரும்புதூர் செல்லும் சாலையில் திரும்பி ரயில்வே கேட்டைத் தாண்டி சுமாராக ஒரு கி.மி. தூரம் சென்ற பின் வலதுபுறம் ஒரு சாலை பிரியும்.
இந்தச் சாலையில் மேலும் ஒரு கி.மி. தூரம் சென்றால் திருக்கச்சூர் ஆலயத்தை அடையலாம். ஊருக்கு நடுவே கோவில் இருக்கிறது.
சிங்கப்பெருமாள்கோவில் பேருந்து நிறுத்தத்தில் இருந்து ஆட்டோ மூலம் செல்வது நல்லது.
இல்லாவிடில் சுமார் இரண்டு கி.மி. தொலைவு நடந்து செல்ல வேண்டும்.
அஞ்சல் முகவரி:
அருள்மிகு விருந்திட்ட ஈஸ்வரர் திருக்கோயில்,
திருக்கச்சூர் அஞ்சல்,
(வழி) சிங்கபெருமாள் கோவில்,
செங்கல்பட்டு வட்டம்.
காஞ்சீபுரம் மாவட்டம்.
PIN - 603 204
ஆலயப் பூஜை காலம்:
தினமும் காலை 8.00 மணி முதல் நண்பகல் 11.30 மணி வரையிலும், மாலை 5.30 மணி முதல் இரவு 8.30 மணி வரையிலும் ஆலயம் திறந்திருக்கும்.
கோவில் அமைப்பு:
திருக்கச்சூர் தலம் ஆலக்கோவில் என்ற பெயருடனும் அழைக்கப்படுகிறது.
இவ்வாலயத்தின் மூலவர் கச்சபேஸ்வர்ர் இருந்தாலும் இவ்வாலயம் தியாகராஜசுவாமி திருக்கோயில் என்றே அழைக்கப்படுகிறது.
தொண்டை நாட்டிலுள்ள பாடல் பெற்ற சிவஸ்தலங்களில் தியாகராஜர் சந்நிதி உள்ள கோயில்களில் இத்தலக் கோயிலும் ஒன்றாகும்.
கிழக்கு திசை நோக்கி அமைந்துள்ள இந்த ஆலயத்திற்கு சென்றபோதுதான் தெரிந்து கொண்டோம். இத்திருக்கோயிலுக்கு இராஜகோபுரம் கிடையாது.
கோவிலுக்கு எதிரில் ஒரு பெரிய தீர்த்தக் குளம் இருப்பதைக் கண்டோம். இந்தத் தீர்த்தம் கூர்ம தீர்த்தம் ஆகும்.
அவ்விடம் அகழ்ந்து சென்று, தீர்த்தத்தை வாரியெடுத்து சிரசிலிட்டு இறைவனை நினைந்து வணங்கிக் கொண்டு நகர்ந்தோம்.
திருமால் கூர்மாவதாரம் எடுத்தபோது இக்குளத்தை ஏற்படுத்தியதாக கூறினார்கள்.
இக்குளத்திற்கு அருகில் பதினாறு கால் மண்டபம் இருந்ததைக் கண்டோம். இந்த மண்டபத்தில்தான் சுந்தரர் பசிக் களைப்பால் படுத்திருந்தாராம்.
மண்டபத் தூண்களில் அழகிய சிற்பங்கள் வடிவமைக்கப்பட்டுள்ளதைப் பார்த்துவிட்டு ஆலயத்தை நோக்கி நடந்தோம்.
கிழக்கிலுள்ள நுழைவாயில் வழியாக உள்ளே சென்றவுடன் கிழக்கு வெளிப் பிரகாரத்தில் கொடிமரமிருக்க, நெடுஞ்சான்கிடையாய் விழுந்து சிரம் கரங்கள் செவிகள் புஜங்கள் பூமியில் புரள வணங்கியெழுந்து நிமிர்ந்தோம்.
அடுத்தகருந்த நந்தியாரை வணங்கிக் கொண்டு, ஈசனைத் தொழு உள் புக அனுமதியும் வேண்டிக் கொண்டு நகர்ந்தோம்.
இதற்கடுத்தாற்போலிருந்த பலிபீடத்தருகாக வந்து நின்று நம் ஆணவமலம் ஒழிய பிரார்த்தித்து வணங்கிக் கொண்டு நகர்ந்தோம்.
தெற்கு வெளிப் பிரகாரத்தில் இருபத்தேழு தூண்களை உடைய நட்சத்திர மண்டபம் இருந்தது.
நட்சத்திர மண்டபத்தைக் கடந்து நேரே சென்றோம் அங்கு நேரே தியாகராஜர் சந்நிதி இருந்தது. சிரமேற் கைகுவித்து வணங்கிக் கொண்டு நகர்ந்தோம்.
இவர் உபயவிடங்கர் ஆவார்.
மகாவிஷ்ணுவிற்கு இத்தலத்தில் இறைவன் தனது நடனத்தைக் காட்டி அருளியுள்ளார்.
நட்சத்திர மண்டபத்தில் உள்ள ஒரு தூணில் ஆமை உருவில் மகாவிஷ்ணு சிவலிங்கத்தை வழிபடும் சிற்பம் ஒன்று இருக்கிறது.
மண்டபத்தில் உள்ள தெற்கு வாயில் வழியே உள்ளே சென்றால் இறைவி அஞ்சனாட்சியின் சந்நிதி இருக்கிறது.
அம்பாள் சந்நிதி முன் உள்ள மண்டபத்திதிலிருந்து மற்றொரு கிழக்கு நோக்கிய வாயில் வழியாக உள்ளே சென்றபோது, கருவறையில் கிழக்கு நோக்கிய சந்நிதியில் இறைவன் கச்சபேஸ்வரர் காட்சியருளிக் கொண்டிருந்தார்.
மனமுருக பிரார்த்தனை செய்து வணங்கிக்கொண்டு அர்ச்சகரிடம் வெள்ளிய விபூதியைப் பெற்றுக் கொண்டு வெளிவந்தோம்.
திருமாலுக்கு அருளிய இத்தல ஈசன், ஓர் சுயம்பு லிங்கமாவார். சுவாமியின் கருவறை அகழி போன்ற அமைப்பைக் கொண்டது.
அடுத்து, அம்பாள் சந்நிதிக்குச் சென்றோம். அம்பாள், அஞ்சனாட்சி நான்கு கரங்களுடன் நின்ற நிலையில் அருள்மழை பொழிந்த வண்ணமிருந்தாள்.
இங்கேயும் மனமுருக பிரார்த்தனை செய்து வணங்கிக்கொண்டு அர்ச்சகரிடம் குங்குமப் பிரசாதம் பெற்றுக் கொண்டு வெளிவந்தோம்.
வெளிவந்ததும், அம்மன் சந்நிதியைச் சுற்றி வலம் செய்யும் அமைப்புடன் இருக்க வலம் செய்து கொண்டோம்.
கருவறை சுற்றில் தென்கிழக்கில் வடக்கு நோக்கிய நால்வர் சந்நிதி காணக் கிடைத்ததும், தானாகவே சிரசுமேல் கைகள் உயர்ந்தன. உயர்த்திக் கூப்பிய கைகளுடன் வணங்கி நகர்ந்தோம்.
கருவறை சுற்று வலம் வரும்போது வடக்குச் சுற்றின் வடகிழக்கு மூலையில் நடராஜர் சந்நிதி கொண்டு காட்சிதந்தார்.
நன்றாக பெருமானைப் பார்த்து வணங்கிக் கொண்டோம். இவரின் ஆடல் நயக் கோலத்தைக் காணும் போதெல்லாம் நம் கண்கள் ஈரமாகும். அவ்வளவு அன்பு இவர் மீது.
கருவறை கோஷ்ட மூர்த்திகளாக விநாயகர் இருந்தார், விடுவோமா? சடுதியில் காதுகளைப் பிடித்துத் திருகி தோப்புக்கரணமிட்டுக் தொழுது வணங்கிவிட்டு நகர்ந்தோம்.
அடுத்து, தட்சினாமூர்த்தி, மகாவிஷ்ணு, பிரம்மா, துர்க்கை ஆகியோர்களைக் கண்டு ஒவ்வொருவரையும் தொடர்ச்சியாக வணங்கிக் கொண்டு நகர்ந்தோம்.
வடக்கு வெளிப் பிரகாரத்தில் கிழக்கு நோக்கிய முருகன் சந்நிதியும், விருந்திட்ட ஈஸ்வரர் சந்நிதியும் அமைந்திருக்கின்றன. கைதொழுது வணங்கிக் கொண்டு அருட்பிரசாதமும், விபூதிப்பிரசாதமும் பெற்றுத் திரும்பினோம்.
விருந்திட்ட ஈஸ்வரர் சந்நிதிக்கு அருகே வடக்கு நோக்கிய சுந்தரர் சந்நிதியும் அமைந்திருந்தன.
முன் வந்து நின்று, பயபவ்யத்துடன் கூனக்குறுக குனிந்தபடி வணங்கிக் கொண்டோம்.
வடக்கு வெளிப் பிரகாரத்தில் தெற்கு நோக்கிய பைரவர் சந்நிதியும் இருந்தது. கூப்பிய கைகளுடன் சிறிது நேரம் தியாணித்து வணங்கிக் கொண்டு திரும்பினோம்.
இத்தலத்திலுள்ள இந்த பைரவர் சந்நிதி மிகவும் சிறப்பான சக்தியை கொண்டவர் என அருகிருந்தோர் கூறினர்.
இத்தலம் ஒரு திருப்புகழ் வைப்புத் தலம். இங்கு முருகப் பெருமான் ஒரு முகமும், நான்கு திருக்கரங்களும் கொண்டு இரு தேவியருடன் எழுந்தருளியுள்ளார்.
இத்தல விருட்சமான ஆலமரம் மக நட்சத்திரத்திற்குரிய மரமாகும். ஆகவே மக நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் இத்தல இறைவனை வழிபடுவது மிகவும் விசேஷமானது என்கின்றனர்.
தல அருமை:
அமிர்தம் கிடைப்பதற்காக தேவர்களும், அசுரர்களும் பாற்கடலை கடைந்தார்கள்.
மந்தார மலையை மத்தாக்கி, வாசுகி பாம்பைக் கயிறாக்கி பாற்கடலைக் கடையும் சமயத்தில் மந்தார மலை கனம் தாங்காமல் மூழ்கத் தொடங்கியது.
அது கடலில் மூழ்காமல் இருக்க திருமால் ஆமை (கச்சபம்) வடிவெடுத்து மந்தார மலையின் அடியில் சென்று மலையை தாங்கி நின்றார்.
திருமால் இவ்வாறு ஆமை உருவில் மலையின் கனத்தைத் தாங்கக்கூடிய ஆற்றலைப் பெற இத்தலத்திற்கு வந்து சிவபெருமானை வழிபட்டதாக வரலாறு கூறுகிறது.
ஆமை (கச்சபம்) வடிவத்தில் மஹாவிஷ்னு சிவபெருமானை வழிபட்டதால் இத்தலம் திருக்கச்சூர் என்று பெயர் பெற்றது.
இத்தலம் ஆதிகச்சபேஸம் என்றும் அழைக்கப்படுகிறது. இத்தலத்தில் உள்ள கூர்ம தீர்த்தத்தில் நீராடி பிரதோஷ நாட்களில் கச்சபேஸ்வரரை வணங்கினால் எல்லா தோஷங்களும் நீங்கும்.
செல்வம், கல்வி, இன்பம் கிடைக்கும் என்று தல புராணம் கூறுகிறது.
சிவபெருமான் சுந்தரருக்காக தனது கையில் திருவோடு ஏந்தி பிச்சை எடுத்து சுந்தரரின் பசியைப் போக்கிய தலம் என்ற பெருமையும் திருக்கச்சூருக்கு உண்டு.
இத்தலத்திற்கு வந்த சுந்தரர் ஆலயத்தினுள் சென்று சிவபெருமானை பக்தியுடன் வழிபட்டு வெளி வந்தார்.
வெகு தொலைவில் இருந்து திருக்கச்சூர் வந்த காரணத்தினால் களைப்பும் அதனுடன் பசியும் சேர்ந்து தள்ளாடியபடி கோவிலின் வெளியே உள்ள மண்டபத்தில் படுத்து கண்கள் அயர்ந்தார்.
சுந்தரரின் நிலையைக் கண்ட இறைவன் கச்சபேஸ்வரர் ஓர் அந்தணர் உருவில் சுந்தரரின் தோளைத் தட்டி எழுப்புகிறார்.
அவரை உட்காரச் சொல்லி வாழை இலை விரித்து அன்னம் பரிமாறி குடிக்க நீரும் கொடுக்கிறார்.
அன்னம் பலவித நிறங்களுடனும் பலவகை சுவையுடனும் இருப்பதைக் கண்ட சுந்தரர் காரணம் கேட்கிறார்.
சமைத்து உணவு கொண்டுவர நேரம் இல்லாததால் பல வீடுகளுக்குச் சென்று பிச்சை வாங்கிவந்து உண்வு கொடுத்ததாக அந்தணர் சொல்கிறார்.
அந்தணர் செயலில் நெகிழ்ந்து போன சுந்தரர் எதிரே உள்ள குளத்திற்குச் சென்று கைகளைக் கழுவிக் கொண்டு திரும்பி வந்து பார்த்தால் அந்தணர் மாயமாய் மறந்து போயிருக்கக் கண்டார்.
இறைவனே தனக்காக திருக்கச்சூர் வீதிகளில் தனது திருவடிகள் பதிய நடந்து சென்று பிச்சையெடுத்து அன்னமிட்டதை நினைத்து இறைவனின் கருணையைக் கண்டு மனம் உருகினார் சுந்தரர்.
தல பெருமை:
அமிர்தம் பெறுவதற்காக, திருப்பாற்கடலைக் கடைந்த போது, திருமால் கச்ச (ஆமை) வடிவம் எடுத்தார்.
அமுத கடையும் மந்தரமலைக்கு கீழாகத் தாங்கியிருந்து உதவிடும் ஆற்றல் பெற்றார்.
இத்தலத்திலிருக்கும் ஈசனை திருமால் வழிபட முனைந்தபோது, அவர் உண்டாக்கிய தீர்த்தம்தான் இங்கிருக்கும் தீர்த்தங்களில் ஒன்றான கூர்ம தீர்த்தம் ஆகும்.
சிவகங்கை தீர்த்தம் என மற்றொரு தீர்த்தம் இருந்ததெனவும் கூறுவர்.
அறுபது ஆழம் உள்ள ஒளஷத தீர்த்தக் கிணறும் இங்கு இருக்கிறது.
திருமண் மருந்து:
இத்தலம் கொடிமரத்தின் கீழே திருநீறு போன்ற தோன்றுதல் துயரமான திருமண் கிடைக்கிறது.
நோய் ஒழிக்கும் அருமருந்தாக இத்திருமண் இருப்பதால், எந்நோயாயினும் இத்திருமண்ணை உட்கொள்கின்றனர் மக்கள்.
சுந்தரர் தேவாரம்:
பண் :கொல்லிக் கௌவாணம்.
1.🔔முதுவாய் ஓரி கதற முதுகாட்
டெரிகொண் டாடல் முயல்வானே
மதுவார் கொன்றைப் புதுவீ சூடும்
மலையான் மகள்தன் மணவாளா
கதுவாய்த் தலையிற் பலிநீ கொள்ளக்
கண்டால் அடியார் கவலாரே
அதுவே யாமா றிதுவோ கச்சூர்
ஆலக் கோயில் அம்மானே.
🙏🏾பெரிய வாயை உடைய நரிகள் கூப்பிடப் புறங் காட்டில் தீயை ஏந்தி ஆடுதலைச் செய்பவனே , கொன்றையினது தேன் ஒழுகுகின்ற புதிய பூவைச் சூடுகின்ற , மலையான் மகள் மணவாளனே , திருக்கச்சூரில் உள்ள ஆலக் கோயிலில் எழுந்தருளியிருக்கின்ற பெருமானே , நீ சென்று , முரிந்த வாயையுடைய ஓட்டில் பிச்சை ஏற்றலைக் கண்டால் உன் அடியவர் கவலைகொள்ளாரோ ?
2.🔔கச்சேர் அரவொன் றரையில் அசைத்துக்
கழலுஞ் சிலம்புங் கலிக்கப் பலிக்கென்
றுச்சம் போதா ஊரூர் திரியக்
கண்டால் அடியார் உருகாரே
இச்சை யறியோம் எங்கள் பெருமான்
ஏழேழ் பிறப்பும் எனையாள்வாய்
அச்சம் மில்லாக் கச்சூர் வடபால்
ஆலக் கோயில் அம்மானே.
🙏🏾எங்கள் பெருமானே , இருவகை ஏழ் பிறப்புக் களிலும் என்னை ஆளாகக் கொண்டு ஆள்பவனே , திருக்கச்சூரின் வட பகுதிக்கண் உள்ள ஆலக்கோயிலில் எழுந்தருளியிருக்கின்ற அச்சம் இல்லாத பெருமானே , நீ , அழகிய பாம்பு ஒன்றைக் கச்சாகக் கட்டி , கழலும் சிலம்பும் காலில் நின்று ஒலிக்க , பிச்சைக் கென்று , ஞாயிறு உச்சம் ஆகவும் ஊர்தோறும் திரிதலைக் கண்டால் , உன் அடியவர் மனம் உருகமாட்டாரோ ! உன் விருப்பம் இன்னது என்பதனை யாம் அறிய மாட்டோம் .
3.🔔சாலக் கோயில் உளநின் கோயில்
அவைஎன் தலைமேற் கொண்டாடி
மாலைத் தீர்ந்தேன் வினையுந் துரந்தேன்
வானோ ரறியா நெறியானே
கோலக் கோயில் குறையாக் கோயில்
குளிர்பூங் கச்சூர் வடபாலை
ஆலக் கோயிற் கல்லால் நிழற்கீழ்
அறங்க ளுரைத்த அம்மானே.
🙏🏾தேவரும் அறிய ஒண்ணாத நிலையையுடையவனே , அழகுடையதும் , குறைவில்லாததும் ஆகிய , குளிர்ந்த அழகிய திருக்கச்சூர் வடபால் ஆலக்கோயிலில் எழுந்தருளி யிருக்கின்ற , கல்லால் நிழற்கீழ் நால்வர் முனிவர்க்கு அறங்களை உரைத்த பெருமானே , உனது கோயிலாகப் பல கோயில்கள் இம் மண்ணில் உள்ளன ; அவற்றை யெல்லாம் என்தலைமேல் வைத்துப் புகழ்ந்து , மயக்கமுந் தீர்ந்தேன் ; வினையையும் ஓட்டினேன் ; இங்குள்ள கோயிலைப் புகழ்ந்து , நீ இரந்து சோறிடப்பெற்றேன் .
4.🔔விடையுங் கொடியுஞ் சடையும் உடையாய்
மின்னேர் உருவத் தொளியானே
கடையும் புடைசூழ் மணிமண் டபமுங்
கன்னி மாடங் கலந்தெங்கும்
புடையும் பொழிலும் புனலுந் தழுவிப்
பூமேல் திருமா மகள்புல்கி
அடையுங் கழனிப் பழனக் கச்சூர்
ஆலக் கோயில் அம்மானே.
🙏🏾இடப வாகனத்தையும் , இடபக்கொடியையும் , சடை முடியையும் உடையவனே , திருமேனியினது மின்னல்போலும் ஒளியையுடையவனே , எங்கும் , அழகியவாயில்களையும் , நிறைந்த மணிமண்டபங்களையும் , அழிவில்லாத மாடங்களையும் கொண்டு , சூழ உள்ள இடங்களிலும் சோலைகளையும் , நீர் நிலைகளையும் பெற்று விளங்குதலால் , தாமரைமேல் இருக்கும் பெருமை வாய்ந்த திருமகள் நீங்காது பற்றி உறைகின்ற , வயல்களையுடைய பண்ணை சூழ்ந்த திருக்கச்சூரில் உள்ள , ஆலக்கோயிலில் எழுந்தருளியிருக்கின்ற பெரு மானே , இஃது உன்கருணை இருந்தவாறேயோ !
5.🔔மேலை விதியே விதியின் பயனே
விரவார் புரமூன் றெரிசெய்தாய்
காலை யெழுந்து தொழுவார் தங்கள்
கவலை களைவாய் கறைக்கண்டா
மாலை மதியே மலைமேல் மருந்தே
மறவே னடியேன் வயல்சூழ்ந்த
ஆலைக் கழனிப் பழனக் கச்சூர்
ஆலக் கோயில் அம்மானே.
🙏🏾மேம்பட்டதாகிய அறநெறியாயும் , அதன் பயனாயும் உள்ளவனே , பகைவரது திரிபுரங்களை எரித்தவனே , காலையில் எழுந்து உன்னை வணங்குவாரது மனக்கவலையை அடியோடு நீக்குபவனே , நீலகண்டத்தை யுடையவனே , மாலைக் காலத்தில் தோன்றும் சந்திரன்போல்பவனே , மலைமேல் இருக்கின்ற மருந்து போல்பவனே , வயல்கள் நிறைந்த , கரும்பாலையை உடைய இடங்களைக் கொண்ட பண்ணையை உடைய திருக்கச்சூரில் உள்ள ஆலக் கோயிலில் எழுந்தருளியிருக்கின்ற பெருமானே , அடியேன் உன்னை மறவேன் .
6.🔔பிறவாய் இறவாய் பேணாய் மூவாய்
பெற்ற மேறிப் பேய்சூழ்தல்
துறவாய் மறவாய் சுடுகா டென்றும்
இடமாக் கொண்டு நடமாடி
ஒறுவாய்த் தலையிற் பலிநீ கொள்ளக்
கண்டால் அடியார் உருகாரே
அறவே யொழியாய் கச்சூர் வடபால்
ஆலக் கோயில் அம்மானே.
🙏🏾பிறவாதவனே , இறவாதவனே , யாதொன்றையும் விரும்பாதவனே , மூப்படையாதவனே , இடபத்தை ஏறிப் பேயாற் சூழப்படுதலை விடாதவனே , மறதி இல்லாதவனே , என்றும் சுடு காட்டையே இடமாகக்கொண்டு நடனம் ஆடுபவனே , திருக்கச்சூரில் வடபால் உள்ள ஆலக்கோயிலில் எழுந்தருளியிருக்கின்ற பெருமானே , நீ , உடைந்த வாயையுடைய ஓட்டில் பிச்சை ஏற்றலைக் கண்டால் , உன் அடியவர் மனம் வருந்தமாட்டாரோ ? இதனை அறவே ஒழி .
7.🔔பொய்யே உன்னைப் புகழ்வார் புகழ்ந்தால்
அதுவும் பொருளாக் கொள்வானே
மெய்யே எங்கள் பெருமான் உன்னை
நினைவா ரவரை நினைகண்டாய்
மையார் தடங்கண் மடந்தை பங்கா
கங்கார் மதியஞ் சடைவைத்த
ஐயா செய்யாய் வெளியாய் கச்சூர்
ஆலக் கோயில் அம்மானே.
🙏🏾மை பொருந்திய பெரிய கண்களையுடைய மங்கை பங்காளனே , கங்கையையும் , ஆத்திப் பூவையும் , சந்திரனையும் சடையில் வைத்துள்ள தலைவனே , செம்மைநிறம் உடையவனே , வெண்மைநிறம் உடையவனே , திருக்கச்சூரில் உள்ள ஆலக்கோயிலில் எழுந்தருளியிருக்கின்ற பெருமானே , உன்னைப் புகழ்கின்றவர்கள் பொய்யாகவே புகழ்ந்தாலும் , அதனையும் மெய்யாகவே கொண்டு அருள்செய்கின்றவனே , எங்கள் பெருமானாகிய உன்னை மெய்யாகவே நினைக்கின்ற அடியவரை நீ நினை .
8.🔔ஊனைப் பெருக்கி உன்னை நினையா
தொழிந்தேன் செடியேன் உணர்வில்லேன்
கானக் கொன்றை கமழ மலருங்
கடிநா றுடையாய் கச்சூராய்
மானைப் புரையு மடமென் னோக்கி
மடவா ளஞ்ச மறைத்திட்ட
ஆனைத் தோலாய் ஞானக் கண்ணாய்
ஆலக் கோயில் அம்மானே.
🙏🏾காட்டில் உள்ள கொன்றை மலர் , மணங் கமழ மலரும் புதுமணம் வீசுதலை உடையவனே , மானை நிகர்த்த இளைய மெல்லிய பார்வையை யுடையவளாகிய உமையவள் அஞ்சும்படி போர்த்துள்ள யானைத்தோலை உடையவனே , உயிர்களுக்கு ஞானக்கண்ணாய் விளங்குபவனே , திருக்கச்சூரில் உள்ளவனே , ஆலக் கோயிலில் எழுந்தருளியிருக்கின்ற பெருமானே , கீழ்மையுடையேனும் , அறிவில்லாதேனும் ஆகிய யான் , உடம்பை வளர்க்கும் செயலில் நின்று , உன்னை நினையாது விட்டேன் .
9.🔔காதல் செய்து களித்துப் பிதற்றிக்
கடிமா மலரிட் டுனையேத்தி
ஆதல் செய்யும் அடியார் இருக்க
ஐயங் கொள்ளல் அழகிதே
ஓதக் கண்டேன் உன்னை மறவேன்
உமையாள் கணவா எனையாள்வாய்
ஆதற் கழனிப் பழனக் கச்சூர்
ஆலக் கோயில் அம்மானே.
🙏🏾உமையம்மைக்குக் கணவனே , உனது தன்மைகளைப் பெரியோர் சொல்ல அறிந்து உன்னை மறவாதேனாகிய என்னையும் அடியாருள் வைத்து ஆள்கின்றவனே , விளைதலை யுடைய கழனிகளையுடைய பண்ணையையுடைய திருக்கச்சூரில் உள்ள ஆலக்கோயிலில் எழுந்தருளியிருக்கின்ற பெருமானே , உன் பால் பேரன்புகொண்டு , அதனால் இன்பம்மீதூரப்பெற்று , தம்மை யறியாது வரும் சொற்களைச் சொல்லி , மணம்பொருந்திய மலர்களைத் தூவி உன்னைப் போற்றி செய்து உயர்வடைகின்ற அடியவர்கள் உனக்கு வேண்டும் பணிகளைச் செய்ய அவாவியிருக்க , நீ சென்று பிச்சை ஏற்பது அழகிதாமோ ? ஆகாதன்றே ?
10.🔔அன்னம் மன்னும் வயல்சூழ் கச்சூர்
ஆலக் கோயில் அம்மானை
உன்ன முன்னு மனத்தா ரூரன்
ஆரூ ரன்பேர் முடிவைத்த
மன்னு புலவன் வயல்நா வலர்கோன்
செஞ்சொல் நாவன் வன்றொண்டன்
பன்னு தமிழ்நூல் மாலை வல்லா
ரவர்என் தலைமேற் பயில்வாரே.
🙏🏾அன்னங்கள் நிலைத்து வாழும் வயல்கள் சூழ்ந்த திருக்கச்சூரில் உள்ள ஆலக்கோயிலில் எழுந்தருளியிருக்கின்ற பெருமானை , அவனது கருணையையே நினைகின்ற மனத்தினால் , ` ஆரூரன் ` என்று , திருவாரூர் இறைவனது பெயரைத் தலையில் வைத்துள்ள மிக்க புலமையுடையவனும் , செவ்விய சொல்லால் அமைந்த பாடல்களைப் பாடவல்ல நாவன்மையுடையவனும் , வயல்களை உடைய திருநாவலூருக்குத் தலைவனும் வன்றொண்டனும் ஆகிய நம்பியாரூரன் பாடிய , தமிழ் இலக்கணம் அமைந்த இப்பாமாலையைப் பாட வல்லவர் , என் தலைமேல் எப்பொழுதும் இருத்தற்கு உரியராவர் .
திருச்சிற்றம்பலம்.
திருவிழாக்கள்:
சித்திரை பெருவிழா.
மாசி மாதம் பிரமோற்சவ நிகழ்வில், ஒன்பதாம் நாளில் இறைவன் பிச்சை பெற்று சுந்தரருக்கு அமுதிட்ட ஐதீக விழா நடக்கிறது.
தொடர்புக்கு:
044- 2746 4325
93811 86389
முரளிதர குருக்கள்.
044- 2746 3514
தேவாரம் பாடல் பெற்ற தலங்களில் தொண்டை நாட்டில் அமைந்துள்ள நாளைய தலப்பதிவு ஞானபுரீஸ்வரர் திருக்கோயில், திருஇடைச்சுரம்.
_______________
அடியார்களுக்குத் தொண்டு செய்யுங்கள் இறைவன் அவர்களுக்குள்ளிருக்கிறான்.
No comments:
Post a Comment