Thursday, August 10, 2017

Vaikal Maadakovil temple

சிவாயநம. திருச்சிற்றம்பலம்.
*கோவை.கு.கருப்பசாமி.*
பதியும் பணியே பணியாய் அருள்வாய்.
■■■■■■■■■■■■■■■■■■■■■■■■■
      *(தல தொடர். 51)*
☘ *சிவ தல அருமைகள், பெருமைகள் தொடர்.* ☘
◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆
☘ *வைகல் மாடக்கோயில்.* ☘
■■■■■■■■■■■■■■■■■■■■■■■■■
*இறைவன்:*
பெயர்வைகல் நாதர், சண்பகாரண்யேஸ்வரர்.

*இறைவி:* கொம்பியல்கோதை, வைகலாம்பிகை, சாகா கோமளவல்லி.

சோழ நாட்டின் காவிரி தொன் கரையில் அமைந்துள்ள 128 தலங்களுள் 33- வதாகப் போற்றப்படுகிறது.

*இருப்பிடம்:*
கும்பகோணத்திலிருந்து காரைக்கால் செல்லும் பாதையில் திருநீலக்குடித் தாண்டி, பழி அஞ்சிய நல்லூர் கூட்டுரோடு எனும் இடத்தில் வலப்புறமாகப் பிரிந்து செல்லும் சாலையில் நாட்டார் வாய்க்காலைக் கடக்க வேண்டும். 
பின் பழி அஞ்சிய நல்லூரை அடைந்து, மேலும் இரண்டு கி.மீ அதே சாலையில் சென்றால் வைகலை அடையலாம்.
கோனேரி ராஜபுரத்திலிருந்து வடமேற்காக நான்கு கி.மீ தொலைவு.

*பெயர்க்காரணம்:*
வைகல் என்பது ஊரின் பெயர். வை-- குறுமை; கல்-- மலை; சிறிய மலைபோல் செய்குன்றின் மேல் அமைந்த மாடக் கோவில்.

வைகல் என்ற இந்த சிறிய கிராமத்தில் 3 சிவாலயங்கள் இருக்கின்றன. 

1)ஊரின் தென்புறமுள்ள திருமால் வழிபட்ட விசுவநாதர் ஆலயம், 

2) பிரமன் வழிபட்ட பிரமபுரீசுவரர் ஆலயம், 

3) ஊரின் மேற்கு திசையிலுள்ள வைகல்நாதர் ஆலயம் - இதுவே மாடக்கோயில்.

சிவபெருமானின் 3 கண்களைப் போல் விளங்கும் இந்த விசுவநாதர் கோவில், பிரம்மபுரீஸவரர் கோவில் மற்றும் வைகல்நாதர் கோவில் ஆகியவற்றில் ஊரின் மேற்கே அமைந்துள்ள வைகல்நாதர் ஆலயமே தேவாரப் பதிகம் பெற்ற தலம் என்ற பெருமையைப் பெற்றதாகும். கோச்செங்கட் சோழன் முற்பிறவியில் சிலந்தியாய் இருந்து திருவானைக்கா இறைவனுக்கு வலைப்பந்தல் அமைத்து வழிபட்டு இறைவன் அருளால் சோழ நாட்டின் பேரரசனாக பிறக்கும் பேறு பெற்றான். 

முற்பிறவியில் தான் சிலந்தியாக இருந்து செய்த சிவத்தொண்டிற்கு யானை இடையூறாக இருந்த காரணத்தினால் யானை ஏறாத மாடக் கோவில்களைக் கட்டினான். 

இத்தலத்தில் உள்ள ஆலயம் கோச்செங்கட் சோழன் கட்டிய அத்தகைய மாடக் கோவில்களுள் ஒன்றாகும்.

தேவாரப் பதிகம் பெற்ற இந்த ஆலயமும், இவ்வூரிலுள்ள மற்ற இரண்டு ஆலயங்களும் திருமால், பிரம்மா, திருமகள் ஆகியோராலும், இந்திரன் முதலான தேவர்களாலும் அகத்தியர் போன்ற முனிவர்களாலும் வழிபடப் பெற்ற பெருமைக்குரியதாக திகழ்கின்றன.

இக்கோவில் மாடக் கோவில் அமைப்பில் உள்ளதால் இத்தலம் வைகல் மாடக்கோவில் என வழங்கப்படுகிறது.

கிழக்கு பார்த்த சந்நதி.

வைகல் மணாளன் என்ற அப்பர் திருவாக்கிற்கு ஏற்றபடி அம்பாள் சுவாமிக்கு வலப்பாகத்தில் கிழக்கு.நோக்கி மணப்பெண் கோலத்தில் விளங்குகிறாள்.

கட்டைக் கோபுரத்தைக் கடந்து கோயில் வாயிலை அடைந்ததும் விநாயகரைக் காணுகிறோம்.

அவருக்கேயுரிய வணக்கத்தைச் செலுத்திக் கொள்கிறோம்.

மாடக்கோவில் என்ற பெயருக்கு ஏற்றவாறு பெரிய மேடை மீது கோவில் திகழ்வதைக் கண்டு ஆனந்தமாய் உள் நுழைகிறோம்.

இத்தலத்திற்கு ஒரு பிராகாரம் மட்டுமே உள்ளன.

சுவாமி சந்நிதி மிக்க தெய்வீகப் பொழிவோடு திகழ்ந்ததை உள்ளமுருக வேண்டி வணங்கினோம்.

அம்பாளை வலம் வந்ததில், கொம்பியல் கோதை என்ற பெயருக்கு ஏற்றபடி அசைந்தாடும் பூம்கொம்பு போல தெற்கு நோக்கி அழகுறக் அருளைப் பொழிந்ததை  மனம் பொங்க விம்மி வணங்கினோம்.

 மேற்குப் பிராகாரத்தில் கன்னி மூலையில் தல விநாயகர் விளங்க தலையில் குட்டிக் கனிந்து வணங்கலை கொடுத்தோம்.

வடக்குப் பிராகாரத்தில் சனிபகவான், பைரவர், சூரியன் இருக்க தொடர்ந்து வணக்கம் செய்து நகர்ந்தோம்.

*தல அருமை:*
சிவனின் மூன்று கண்களைப் போன்று இவ்வூரில் மூன்று கோயில்கள் விளங்குகின்றன.விசாலாட்சி அம்பாள் உடனாய விஸ்வநாதர் கோயில் வலக்கண் போல ஊரின் தென்பால் விளங்குகிறது.

பிருகந்நாயகி (பெரியநாயகி) உடனாய பிரம்மபுரீஸ்வர சுவாமி (பிரம்மன் வழிபட்டது) இடக்கண் போலத் திகழ்கிறது.

கொம்பியல் கோதை உடனாய வைகல் நாதர் எழுந்தருளி விளங்கும் மாடக்கோயில். இது நெற்றிக்கண் போல விளங்குகிறது. இதுவே தேவாரம் பதிகம் பெற்றது.

இவ்வூரிலுள்ள மூன்று ஆலயங்களும் திருமால், பிரம்மன், திருமகள், இந்திரன், அகத்தியர்  ஆகியோரால் வழிபடப்பட்டன.

*பிரம்மபுரீஸ்வரர் கோவில்:*
இக்கோவிலில் சுவாமி கிழக்கு நோக்கியும், அம்பிகை தெற்கு நோக்கியும் உள்ளனர்.

சுவாமி பிரம்ம தேவனால் பூசிக்கப் பெற்ற.மூர்த்தி.

நான்கு வேதங்களையும் மாலைகளாக்கி நான்முகன், பெருமானுக்கு அணிவித்தான் என இத்தல புராணத்திற்கேற்ப சிவலிங்க பாணத்தில் நான்கு வெண்கோடுகள் திகழ்கின்றன.

*தல பெருமை:*
முன்னொரு காலத்தில் பூமிதேவி தன்னை விரும்பி மணம் செய்து கொள்ளுமாறு திருமாலை வேண்டினாள்.

திருமாலும் அதற்கு இசைந்து நிலமகளான பூமிதேவியை மணம் புரிந்து கொண்டார்.

திருமால் மேல் கோபம் கொண்ட திருமகள் சண்பகவனமாகிய இத்தலம் வந்து சிவபெருமானை கடுந்தவம் புரிந்து வழிபட்டாள். 

திருமாலும், பூமி தேவி  ஆகியோர் திருமகளை அடையும் பொருட்டு இத்தலம் வந்து அவர்களும் சிவபெருமானை வழிபட்டனர்.

திருமாலைத் தேடி வந்த பிரம்மாவும் இத்தலம் வந்து சிவபெருமானை வழிபட்டார்.

சிவபெருமான் திருவருளால் திருமால் திருமகளையும், நிலமகளையும் தன் இரு மனைவியராக அடையும் பேறு பெற்றார். பிரம்மாவிற்கும் அருள் புரிந்தார் என்பது இத்தலத்தின் மூன்று கோவிலகளையும் இணைத்துக்கூறும் புராண வரலாறாகும்.

இவ்வாலயத்திற்கு இராஜகோபுரம் இல்லை. கிழக்கில் ஒரு நுழைவாயில் மட்டும் உள்ளது. தெற்கு வெளிப் பிரகாரத்தில் உள்ள படிகள் மூலம் ஏறி மாடக்கோவிலின் முன்புற மேடையை அணுகலாம். முன்புற மேடையில் இறைவன் சந்நிதியை நோக்கி நந்தி மண்டபம் உள்ளது.

தனது பிடியைத் தேடி வருந்திய களிறு ஒன்று ஈசற்புற்றைத் தன் கொம்புகளால் சிதைத்தது.

புற்று அழிய ஈசல்கள் வெளிக்கிழம்பி வந்து, புற்றினை அழித்த யானையின் உடலைக் கடித்துக் கொன்றன.

தன் களிற்றை ஈசல் அழித்ததைக் கண்டு வருந்திய பிடியும், யாணையைக் கொன்ற ஈசல்களும் இத்தலத்து இறைவனை வழிபட்டு அருள் பெற்றன.

*தேவாரம் பாடியவர்கள்:*
*சம்பந்தர்*3-ல் ஒரே ஒரு பதிகம் மட்டும் பாடியுள்ளார்.

சம்பந்தர் இத்தலத்து இறைவன் மேல் பாடிய பதிகத்தில் இக்கோவில் கோச்செங்கட் சோழனால் கட்டப்பெற்றதையும், வைகல் ஊரின் மேற்கில் உள்ள கோவில் என்றும் குறிப்பிட்டுப் பாடியுள்ளார். 

மேலும் தன் பதிகத்தின் 10-வது பாடலில் இத்தலம் வடமலையான கயிலைமலைக்கு இணையான தலம் என்றும் சிறப்பித்துப் பாடியுள்ளார் இதோ.....

*1.*துளமதி யுடைமறி தோன்று கையினர் இளமதி யணிசடை எந்தை யாரிடம் உளமதி யுடையவர் வைக லோங்கிய வளமதி தடவிய மாடக் கோயிலே. 

*2.*மெய்யகம் மிளிரும்வெண் ணூலர் வேதியர் மையகண் மலைமக ளோடும் வைகிடம் வையகம் மகிழ்தர வைகல் மேற்றிசைச் செய்யகண் வளவன்முன் செய்த கோயிலே.

*3.*கணியணி மலர்கொடு காலை மாலையும் பணியணி பவர்க்கருள் செய்த பான்மையர் தணியணி உமையொடு தாமுந் தங்கிடம் மணியணி கிளர்வைகல் மாடக் கோயிலே.

*4.*கொம்பியல் கோதைமுன் அஞ்சக் குஞ்சரத் தும்பிய துரிசெய்த துங்கர் தங்கிடம் வம்பியல் சோலைசூழ் வைகல் மேற்றிசைச் செம்பியன் கோச்செங்க ணான்செய் கோயிலே.

*5.*விடம்அடை மிடற்றினர் வேத நாவினர் மடமொழி மலைமக ளோடும் வைகிடம் மடவனம் நடைபயில் வைகல் மாநகர்க் குடதிசை நிலவிய மாடக் கோயிலே. 

*6.*நிறைபுனல் பிறையொடு நிலவு நீள்சடை இறையவ ருறைவிடம் இலங்கு மூவெரி மறையொடு வளர்வுசெய் வாணர் வைகலில் திறையுடை நிறைசெல்வன் செய்த கோயிலே. 

*7.*எரிசரம் வரிசிலை வளைய ஏவிமுன் திரிபுரம் எரிசெய்த செல்வர் சேர்விடம் வரிவளை யவர்பயில் வைகல் மேற்றிசை வருமுகி லணவிய மாடக் கோயிலே. 

*8.*மலையன இருபது தோளி னான்வலி தொலைவுசெய் தருள்செய்த சோதி யாரிடம் மலர்மலி பொழிலணி வைகல் வாழ்வர்கள் வலம்வரு மலையன மாடக் கோயிலே. 

*9.*மாலவன் மலரவன் நேடி மால்கொள மாலெரி யாகிய வரதர் வைகுஇடம் மாலைகொ டணிமறை வாணர் வைகலில் மாலன மணியணி மாடக் கோயிலே. 

*10.*கடுவுடை வாயினர் கஞ்சி வாயினர் பிடகுஉரை பேணிலார் பேணு கோயிலாம் மடம் உடையவர் பயில் வைகல் மாநகர் வடமலை அனைய நல் மாடக் கோயிலே. 

*11.*மைந்தன திடம்வைகல் மாடக் கோயிலைச் சந்தமர் பொழிலணி சண்பை ஞானசம் பந்தன தமிழ்கெழு பாடல் பத்திவை சிந்தை செய்பவர் சிவலோகஞ் சேர்வரே.

*பூசை:*
காமீக, ஆகம முறையில் (11-- 12 மணி) ஒரு கால பூசை.

தரிசனம்--காலை 6.00 மணி முதல் இரவு 7.00 மணி வரை.

*அஞ்சல் முகவரி:*
அருள்மிகு, வைகல் நாதர் திருக்கோயில்,
வைகல் மேலையூர் 
அஞ்சல்--612 101
வழி- ஆடுதுறை, 
தஞ்சை மாவட்டம்,

*தொடர்புக்கு:*
வி.சுப்பிரமணிய குருக்கள்.
0435-- 2465616
90034 69859

         திருச்சிற்றம்பலம்.

*நாளைய தலம்...திருநல்லம்.*

■■■■■■■■■■■■■■■■■■■■■■■■■
*அடியார்களுக்குத் தொண்டு செய்யுங்கள், இறைவன் அவர்களுக்குள்ளிருக்கிறான்.*

No comments:

Post a Comment