*Source:ஸ்ரீ குருகிருபா விலாஸம்*
*தொகுத்தவர்*
*ஸ்ரீ ஞானானந்த பாரதீ ஸ்வாமிகள் (முன்னாள் ஸ்ரீ ஆர். கிருஷ்ணஸ்வாமி அய்யர், திருநெல்வேலி)*
*7. ஆத்ம நிஷ்டை*
ஸ்ரீமத ஆசார்யாரவர்களுக்குஸ்வபாவமாகவும் பால்லம் முதல் பழக்கத்தினாலும் ஆடம்பரத்திலாவது வீண் பேச்சிலாவது எப்பொழுதும் ருசி கிடையாது. அனாவசியமாய் ஒரு கார்யமுமில்லாமல் வெறும் குதூஹலத்துடன் வருபவர்களிடம் ஸல்லாபம் செய்வதை விரும்புவதில்லை. ஆனால் ஸம்ஸார பந்தத்திலிருந்து விடுதலையடைய வேண்டுமென்ற தீவிரமான எண்ணத்துடன் அதற்குத் தகுந்த ஸாதனம் கற்றுக்கொள்ள வேண்டுமென்ற சிரத்தையுடன் தம்மை அண்டுபவர்களுக்கு எப்பொழுதும் கருணையுடன் இடம் கொடுத்து அவர்களுக்கு வேண்டிய உபதேசாதிகளைச் செய்து வழிகாட்டியாயிருந்து அவர்களை கிருதார்த்தர்களாகச் செய்ய எப்பொழுதும் ஸித்தமாயிருந்தார்கள். அப்படியிருந்தும் அத்யாத்ம சிரேயஸ்ஸை கருதி அவர்களிடம் நெருங்குபவர்கள் அநேகமாய் இல்லை என்றே சொல்ல வேண்டும். தங்களுக்கு ஏதேனும் வியாதி முதலான தொந்தரவுகள் இருந்தால் சிருங்கேரி போவார்கள். இல்லையானால் வேடிக்கையாய் அங்குள்ள விசித்திர அழகுகளைப் பார்க்கப் போவார்கள். அந்தக் காக்ஷிகளின் மத்தியில் ஆசார்யாரையும் சேர்த்துப் பார்ப்பார்கள். அப்பேர்ப்பட்டவர்களிடம் பேசிக் கொண்டிருப்பது வீண் ஆயுஸ்க்ஷயம் என்றே ஆசார்யாரின் எண்ணம்.
ஒரு நாள் கொஞ்சம் சிரமப்பட்டு ஆசார்யாரவர்களை தனித்து தரிசனம் செய்ய அனுமதி பெற்று பேசிக் கொண்டிருக்கையில், "சிருங்கேரிக்கு வரும் அநேக சிஷ்யர்களுக்கு தங்களை நேரில் தரிசித்து உபதேசமோ ஆசீர்வாதமோ தைர்யமோ பெற்றுப் போக இடமில்லாமல் போவதில் அவர்கள் வருத்தமடைகிறார்கள். அவர்களுக்கு கொஞ்சம் இடம் கொடுத்து அனுக்ரஹித்தால் நல்லது" என்று நான் சொல்லும்படி ஏற்பட்டது. ஸ்ரீமத் ஆசார்யார் "அது ஸரியல்ல. என்னுடன் பேச வருகிறவர்களுக்கு எவ்விஷயங்களில் ருசியோ அவைகளில் எனக்கு ருசி இல்லை. என்ன '' அது எனக்கு ருசியிருக்கும் விஷயத்தில் அவர்களுக்கு ருசி இல்லை. அவர்களுக்கு பேட்டி கொடுப்பதில் யாருக்கு பிரயோஜனம்?'' என்றார்கள். அதற்கு வாஸ்தவமாயிருக்கலாம். இருந்தாலும் சிலர்களாவது தங்களுடைய ஸத்கதிக்கு தங்கள் ஸஹாயத்தைத் தேடி வருவார்கள்" என்றேன், நான் "என் ஸஹாயத்தையா தேடி வருகிறார்கள்? இருக்கலாம். ஆனால் அவர்களுடைய வியாதிகளையும் மனக்கவலையையும் நிவர்த்தி செய்து கொடுக்கவல்லவா என்னிடம் வருகிறார்கள். என்னை வைத்தியராகவும் மாந்திரிகராகவும் அல்லவா நினைத்து என் ஸஹாயத்தைத் தேடுகிறார்கள் ? இதற்காகவா ஸ்ரீமத் பகவத்பாதாள் இந்தப் பீடத்தை ஏற்படுத்தினார்கள்?" என்று ஸ்ரீமத் ஆசார்யார் கேட்க, நான் "அத்யாதம சிரேயஸ்ஸை உத்தேசித்தும் சிலர்கள் வருவதுண்டு. அவர்களுக்கும் தங்களை தரிசிக்க அவகாசமில்லாமல் போய் விடுகிறது" என்றேன்.அதற்கும் அவர்கள் "அப்படி வாஸ்தவமாக தீவிரமாக அத்யாத்ம விஷயமாக என் ஸஹாயத்தை அபேக்ஷிக்கிறதாயிருந்தால் நான் இடம் கொடுக்கவில்லை யென்றிருந்தாலும் முண்டிக்கொண்டு என்னிடம் வந்து விடுவார்கள்'' என்று சொல்லிவிட்டுப் புன்சிரிப்புடன் 'நீ இப்பொழுது செய்திருக்கிற மாதிரி" என்று சேர்த்தார்கள். இதற்குமேல் நான் சொல்வது உசிதமில்லையென்று நிறுத்திக் கொண்டேன். அவர்களுடைய மனோபாவத்திற்கும் ஸாமான்ய ஜனங்களின் மனோபாவத்திற்கும் வித்யாஸம் வெகு ஜாஸ்தியாயிருப்பதால் அவர்களுடைய நிலையைக் கலைக்க யத்தனிப்பதே அபசாரமாகும்.
*Source:ஸ்ரீ குருகிருபா விலாஸம்*
*Continuation from yesterday's posting*
ஒரு ஸமயம் அவர்கள் தனித்து ஏகாந்தமாய் உட்கார்ந்திருந்த ஸமயம் நான் அவர்களிடம் போகும்படி ஸம்பவித்தது. என்னை உட்காரும்படி ஸம்ஞை காட்டிவிட்டு மௌனமாகவே சுமார் இருபது நிமிஷம்வரை இருந்துவிட்டார்கள். அந்த ஸமயம் நான் அடைந்த மனஸ் சாந்தியையும் ஆனந்தத்தையும் வர்ணிக்க முடியாது. பிறகு அவர்கள் முகத்தில் லேசாக புன்சிரிப்பு உலாவுவதுபோல் தோன்றினதினால் நிமிர்ந்து பார்த்தேன். அவர்கள் ''சொல்லட்டுமா?" என்று கேட்டார்கள். "யுக்தம்போல் செய்கிறது' என்றேன். பிறகு அவர்கள்,
'நான் ஆனந்தமாய் இருந்துவரும்போது ஒரு மனோவிருத்தி ஏற்பட்டு அதைக் கலைத்தது. நீ ஸமீபத்தில் உட்கார்ந்து கொண்டிருப்பதால் என்னை பேச வேண்டுமென்று எதிர்பார்க்கிறாயோ என்று தோன்றிற்று. நீ எதிர்ப்பார்ப்பதை நிறைவேற்றுவதானால் பேசவேண்டுமென்ற தீர்மானத்திற்கு வந்தேன். ஆனால் பேசுகிறது என்ற வினைச்சொல் ஒரு விஷயத்தை அபேக்ஷிக்குமே என்ற ஞாபகம் வந்தது. பேசவேண்டுமானால் விஷயத்தையல்லவா முதலில் தீர்மானித்துக் ஆகையால் கொள்ள வேண்டும் என்று தோன்றிற்று. ஜகத்திலுள்ள விஷயங்கள் எல்லாம் இரண்டு பிரிவுகளுக்குள் அடங்கிவிடும் என்பது ஞாபகத்திற்கு வந்தது. ஒன்றுஸத், மற்றொன்று அஸத். ஸத் என்பது பிரஹ்மம், அஸத் என்பது நாமரூப பிரபஞ்சம். இவ்விரண்டிற்குள் ஒன்றைப்பற்றித்தான் பேசவேண்டும். ஆனால் ஸத்தான பிரஹ்மம் என்பது வாக்குக்கும் மனதுக்கும் எட்டக்கூடியதில்லையென்று வேதாந்தம் ஸந்தேஹத்திற்கு இடமன்னியில் சொல்வதால் பிரஹ்மத்தைப் பற்றிப் பேசுவது ஸாத்தியமில்லை. மற்றொன்றாகிய அஸத்தான பிரபஞ்சத்தைப் பற்றித்தான் பேசவேண்டும். ஆனால் பிரபஞ்ச விஷயமாகவும் வேதாந்தம் சொல்லும்போது அது அநிர்வசநீயம், அதாவது எப்படியென்று வாக்கினால் எடுத்துச் சொல்லக்கூடியதில்லை என்பதையும் வற்புறுத்தியிருப்பதால் அதுவும் பேச்சுக்கு விஷயமாகாதல்லவா. பேச்சுக்கு விஷயமாகக் கூடியதாக மூன்றாவது பதார்த்தமோ இல்லை. ஆகையால் பேச்சுக்கு யாதொன்றும். விஷயமே இல்லை என்று ஏற்பட்டது. விஷயமில்லாததால் பேச்சுக்கு இடமில்லை என்ற முடிவுக்கு வந்தவுடன் இந்த முடிவுக்கு வர இவ்வளவு மனோவிருத்திகளுக்கு இடம் கொடுத்திருப்பது அனாவசியமில்லையா என்று தோன்றிற்று. ஒரு வண்டிக்காரன் சுங்கான் (வரி) கொடுக்காமலிருக்கக் கருதி ராத்திரி பூராவும் வண்டியை மூலை முடுக்குகள் வழியாய் ஓட்டிக் கொண்டுபோய் பொழுது விடிகிற சமயத்தில் சுங்கான் கட்டிடத்தின் வாசலில் வந்து சேர்ந்தான் என்று சொல்வார்கள். இது ஞாபகத்திற்கு வர கொஞ்சம் சிரிப்பு வந்திருக்கும். நீ நிமிர்ந்து பார்த்தாய்" என்று சொல்லிவிட்டு மறுபடியும் மௌன நிலையில் இருந்துவிட்டார்கள். கிரந்தங்களின் மூலமாய் அறியக்கூடியவைகளைவிட ஜாஸ்தியான விஷயங்கள் இவ்வார்த்தையில் அடங்கி இருக்கவில்லையா? இதைக் கேட்டவுடன் எனக்கே தன்னைத் தெரியாமல் ஸ்ரீமத் ஆசார்யார் பேசினால் நல்லதென்றுஎண்ணியிருப்பேனோ என்று ஸந்தேகம் ஏற்பட்டது. ஆத்ம நிஷ்டையில் ஆனந்தமாயிருந்த அவர்களை நான் போய் உட்கார்ந்தபடியால் அல்லவா பஹிர்முகமாகச் செய்தேன். அது அபசாரம் இல்லையா? என்று தோன்றி உடனே நமஸ்கரித்து விடைபெற்றுச் சென்றேன்.
*To be continued..*