Tuesday, January 7, 2025

Vittobha Swamigal

ஒரு அற்புத ஞானி - நங்கநல்லூர் J K SIVAN சேஷாத்ரி ஸ்வாமிகள்  
அதிசய சந்நியாசி விடோபா ஸ்வாமிகள்
விடோபா ஸ்வாமிகளை பற்றி முன்பே சொல்லி இருக்கி றேன். ஞாபகம் இருக்கலாம். ரொம்ப நாளாகி விட்ட து. இருந்தாலும் விடோபா ஸ்வாமிகள் பற்றி சற்று நினைவூட்டுவது எனது கடமை. அவர் ஒரு ஜீவன் முக்தர். அவதூதர். த்ரிகால ஞானி. பேச்சு ரொம்ப கிடையாதே. விடோபா ஸ்வாமிகள் ஒரு யோகப்ரஷ்டர் என்றும் சந்தேகமற கூறலாம். \அடிக்கடி ''நாஸ் பான்'' என்று முணுமுணுப்பார். 
உடனே நிறைய பேர் மூக்குப்பொடியும் தண்ணீரும் கேட்கிறார் என்று கொண்டு வந்து கொட்டுவார்கள். தொடமாட்டார். தூர கொட்டிவிடுவார். ஊருக்கு கடைசியில் சகல சாக்கடைகளும் சங்கமமாகும் ஒரு பள்ளம். கொசு பட்டாளம் நிறைந்த அந்த அசுத்த துர்கந்த இடத்தில் தான் ஸ்வாமிகள் நிரந்தர வாசம். அந்த வடபுரக் கால்வாய் கரை இடம் தான் செக்கடி மேடு. காற்று மழை இடி வெய்யில் எல்லாமே சமமாக ஏற்று திறந்த வெளியில் வாழ்ந்தார். பசியோ தாகமோ கிடையாது. யார் எது கொடுக்க விருப்பமோ கொஞ்சம் வாயில் திணிக்க வேண்டும். அவரைப் பற்றி தெரிந்த நாய் காக்கைகள் அவர் திறந்த வாயிலிருந்து அந்த பக்ஷணங்களை கவ்விச் செல்லும். நல்ல பக்ஷணங்கள் அவர் வாயில் திணிப்பதை பார்த்துக் கொண்டிருக்கும் மாடு மேய்க்கும் சிறுவர்கள் கூட சில சமயங்களில் அவற்றை எடுத்து தின்பார்கள். எப்போதாவது தாக மெடுத்தால் சாக்கடை ஜலத்தை இரு கைகளாலும் ஏந்தி குடிப்பார். நம்மால் இதை எல்லாம் செய்ய முடியுமா என்று நினைத்துப் பார்க்க கூட பயமாக இருக்கிறது. விடோபா தேக நினைவே இல்லாத ஒரு யோகி. அந்த ஊர் வியாபாரிகள் நெய் , வெண்ணெய் , பால், தயிர், பழங்கள் எது விற்பாதானாலும் முதலில் அவருக்கு நைவேத்தியம் காட்டிவிட்டு, சிறிது அவர் எதிரே வைத்துவிட்டு விற்பார்கள்.அன்று முழுதும் அமோக விற்பனை என்பார்கள். 
ஒரு சமயம் என்ன நடந்தது தெரியுமா?
பெரிய மழை விடாது புயலோடு கலந்து வீசி நாட்கணக்கில் விடாமல் பெய்தது. எங்கிருந்தெல்லாமோ மழை நீர் நிரம்பி சாக்கடைகள் பொங்கி வழிந்தன. எல்லாமாக கலந்து ஓடி வந்து செக்கடிமேட்டில் பள்ளத்தில் வெள்ளமாக ஓடின. கரையில் அமர்ந்திருந்த விடோபாவையும் காணோமே. ஓஹோ அவரையும் வெள்ளம் அடித்துக் கொண்டு போய் விட்டதோ?
மழை விட்டதும் ஸ்வாமிகளைத் தேடினார்கள். எங்கோ தூரத்தில் ஒரு பள்ளத்தில் கழுத்து வரை புதையுண்டு தலை மட்டும் சற்று வெளியே தெரிய விடோபா சேற்றில் கிடந்தார்.இறந்து விட்டார் என்று பயந்து மண்ணைத் தோண்டி ஸ்வாமியை பல மணி நேரங்கள் போராடி மண்ணிலிருந்து பறித்து மீட்டார்கள். ஏழு எட்டு மணி நேரம் புதையுண்டு கிடந்த ஸ்வாமிகள் வெளியே எடுக்கப் பட்டதும் ஒன்றுமே நடக்காதது போல் நடந்து செக்கடி மேட்டுக்கு மீண்டும் சென்று விட்டார். அங்கேயே வழக்கம் போல் ஒரு மேட்டில் உட்கார்ந்து கொண்டு அங்குமிங்கும் புதிதாக எதையோ பார்ப்பது போல் பார்த்தார். பேசவில்லை.
 இன்னொரு அதிசயம் சொல்கிறேன்.
இதே போல் புயல் காற்று ஒருநாள் வீசியது. ஒரு பெரிய புளிய மரம் பல வருஷங்கள் வளர்ந்த அந்த பிரம் மாண்ட மரம், அதன் அடியில் உட்கார்ந்திருந்த விடோபா ஸ்வாமிகள் மீது வேரோடு சாய்ந்து விழுந்தது. மாபெரும் மரம் அதன் அடர்ந்த கிளைகள் அவர் மீது. யாராயிருந்தாலும் அந்த பகாசுர மரத்தடியில் நசுக்கினால் தக்காளி சட்னிதான். 
 ''அடாடா, ஸ்வாமிகள் போய் விட்டாரே'' என்று எல்லோ ரும் அலறி அடித்துக் கொண்டு ஓடி வந்து மரத்துடன் போராடி '' சரி, ஸ்வாமிகள் தான் போய்விட் டார்.அவர் உடலையாவது சகல மரியாதை களோடு அடக்கம் செய்வோமென்று கவலையோடும் துக்கத்தோடும் கிளைகள், மரங்கள், இலைகளை எல்லாம் பிரயாசைப் பட்டு விலக்கினார்கள் . மரத்துக்கு கீழே கண்ணை மூடி த்யானத்தில் இருந்த விடோபா ஸ்வாமிகள் அவர்களை விழித்துப் பார்த்துவிட்டு எழுந்து அனாயாசமாக நடந்து சென்று விட்டார். ஒரு சிறு கீறல் காயம் எதுவுமே அவர் உடலில் இல்லை.! என்ன ஆச்சர்யம்.
இன்னொரு சிறிய செய்தியுடன் முடித்துக் கொள்கி றேன்.
ஒரு சர்க்கஸ் கோஷ்டி போளூருக்கு வந்தது. மராட்டியர்கள் அவர்கள். விடோபா மராட்டியர் அல்லவா? மேலும் ஒரு மஹான்,யோகி, ஞானி என்று அறிந்து சர்க்கஸ் கோஷ்டியார்கள் சர்க்கஸ் கொட்ட கைக்கு ஸ்வாமியை எப்படியோ அழைத்துப் போக விரும்பினார்கள். விடாமல் அவரை அழைத்து தொந்தரவு செய்தும் அவர் சர்க்கஸுக்கு போக சம்மதிக்கவில்லை. அவரை எப்படியாவது தூக்கிக் கொண்டு போவது என்று முடிவெடுத்து அவர்கள் முதலாளி விடோபா ஸ்வாமிகளை வணங்கி தூக்க முயற்சித்தார். மஹா பலம் பொருந்திய அந்த பயில்வா னால் ஸ்வாமிகளை ஒரு அங்குலம் கூட அசைக்க முடியவில்லை. அவரைத் தூக்கிய பயில்வானுக்கு மூச்சைப் பிடித்து தூக்க முயற்சித்ததில் மாரடைப்பு வந்து விடும்போல் ஆகிவிட்டது. இரண்டு மூன்று பலிஷ்டர்கள், வஸ்தாதுகள் வந்து ஒன்றாக சேர்ந்து முயற்சித்து தூக்கியும் அசைக்க முடியவில்லை. அப்படியே அவரை சாஷ்டாங்கமாக வணங்கி பால் பழம் எல்லாம் அளித்து அவர் ஆசி வேண்டினார்கள். சிரித்துக்கொண்டே இருந்த விடோபா அவர்களை ஆசிர்வதித்தார்.

No comments:

Post a Comment