Wednesday, January 8, 2025

Ramana maharishi teachings

மக்கள் கேள்வி மஹரிஷி பதில் -
நங்கநல்லூர் J K SIVAN

அவர் ஒரு எளிமையான யோகி, கிழிந்த துணியைக் கூட முடிச்சு போட்டு உடுத்துபவர். கோவணாண்டி. மௌன ஞானி. பிரம்மத்தை உணர்ந்தவர். பேதமில்லா தவர். பதினாறு வயதில் சன்யாசியாக திருவண்ணா மலையில் அருணாசலேஸ்வரர் ஆலயத்தில் நுழைந்த வர் கடைசி வரை ஆத்மஞானியாக எண்ணற்றவர்க்கு ஆத்மோபதேசம் பண்ணிய பகவான் ரமண மஹரிஷி. அப்பப்போ பேசுவார். பக்தர்கள் கேள்விகளுக்கு பதிலளிப்பார்.
இனி சில கேள்வி பதில்கள்:

''எனக்கு நிம்மதியாக இருக்க உபதேசம் பண்ணுங்கள் சுவாமி'''

' எதுவும் வேண்டாம் என்ற நிலையில் நீ திடமாக இருந்தால் உனக்கு தேவையானது உன்னைத் தானாகவே தேடி வரும் ''

''பகவான் அனுக்கிரஹம் பண்ணினால் வீட்டைத் துறந்து காட்டுக்கு போய் தவம் பண்ண விருப்பம்''

''வீட்டையோ ஊரையோ துறந்து போகலாம். ஆத்மா வை விட்டு எங்கும் போகமுடியாது. உன் ஆத்மாவை விட்டு தனியாக வீடோ, ஊரோ இருந்தால் நீ அதை விட்டு போகலாம். நான் எல்லாத்தையும் விட்டுட்டேன் சந்நி யாசி ன்னு நினைக்கிறவன் சந்நியாசி இல்லை. மனசிலே வீடு குடும்பம், உலகம் ஊர் என்று நினைப்பு இருந்தால் காட்டிலே இருந்தாலும் வீட்டிலே இருந்தாலும் ஒண்ணு தான். குடும்பத்தில் உழன்று கொண்டிருந்தா லும் மனது பூரா ஆத்ம விசாரத்தில் ஈடுபடுபவன் தான் சந்நியாசி. நான் தான் எல்லாவற்றையும் பண்ணுபவன் என எண்ணுபவன் கடைத்தேறமுடியாது.''

''பகவான், இரு புருவங்களுக்கும் மத்தியில் பகவான் இருக்கிறார். அங்கே மனதை செலுத்தவேண்டும் என்று படித்தேன். அது முடியுமா, சரியா?'''

'கடவுள் எங்கோ ஒரு உடம்பின் பாகத்தில் தான் இருக்கி றார் என்று எண்ணுவது மடமை. யோகிகள் மனதை ஒருமைப் படுத்த அவ்வாறு பயிற்சிகள் மேற்கொள் வார்கள். நான் யார் என்று விடாமல் விசாரம் பண்ணு வது சுலபமான வழி. ஆத்மாவை அதன்மூலம் அறிய லாம். மனது கட்டுப்படும்.''

''ஸ்வாமி. எனக்கு ரொம்ப வேலை. அதனால் எனக்கு தியானம் செய்ய மறந்து போகிறது. அப்பப்போ ஒரு சில நிமிஷங்கள் தான் தியானம் பண்ண முடிகிறது. நான் இப்படி அடிக்கடி மறந்து போவதால் தியானம் தடை படுவதால் பண்ணாததால் எப்படி முன்னேறு வது?''

''கவலை வேண்டாம். ஆத்மானுபவம் ஒரே நாளில் கை கூடாது. மனதளவில் முன்னேற்றம் படிப்படியாக தான் அடையலாம். ஒவ்வொருநாளும் அடாடா இன்னிக்கு தியானம் பண்ணவில்லையே என்று ஐந்து மணிக் கொருதரமாவது நினைப்பாய், அப்புறம் நாலு மணிக் கொருதரம், அப்புறம் ரெண்டு மணிக்கொருதரம் என்று குறைந்து கொன்டே வரும். ஆகவே தியானம் பண்ண வேண்டும் என்ற ஆர்வம் சீக்கிரம் உன்னை ஆத்ம விசாரத்தில் அடிக்கடி, ஈடுபட வைக்கும். அது சரி, ஏன் நீ ''நான் ஏன் தியானம் செய்யவில்லை, ஏன் நான் வேலை செய்யவில்லை என்று எல்லாம் நினைக்கிறாய்? நான் செய்கிறேன், செய்தேன் , ''நான்'' செய்யவில்லை என்ற எண்ணம் உடலின் காரியங்களோடு ஆத்மாவை இணைப்பதை விட்டுவிட வேண்டும். இப்படி தன்னு ணர்வு இன்றி செய்யும் எண்ணும் எல்லாம் ஆத்ம விசாரமாகிய தியானத்தில் மனதை ஈடுபடுத்தும்.''

'' மகரிஷி, உங்கள் அருளால் நாங்கள் ஆத்மானுபவம் பெற்று மற்றோர்க்கும் உலகில் எடுத்து சொல்ல முடியுமா?'''

''நீ முதலில் யார் என்று உணரவேண்டும். மற்றவர்க ளுக்கு உபதேசிக்கவேண்டும் என்ற எண்ணம் விடுபட வேண்டும். நீ ஆத்மாவை உணர்ந்தபின் உலகமோ, மற்றவர்களோ இருக்கமாட்டார்கள். எல்லாமே ஆத்மா, ப்ரம்மம், அது நீ, என்றானபின் மற்றவர் எங்கே, உலகம் எங்கே? ப்ரம்ம ஞானம் அடையும் முன்பு மற்றவர்க்கு உபதேசம் செய்வது குருடன் குருடனுக்கு வழி காட்டு வது போலத்தான். எல்லோருமே நீ என்று ஆனபின் உன் கண்ணே எல்லோருடைய கண்களாகிவிடுமே.''

No comments:

Post a Comment