""வடுகநம்பியின் குரு பக்தி ""
வடுக நம்பியோடு ராமானுஜர் அரங்கனை சேவிக்கச் செல்லுகிறார். இப்போது ஒருமுறை அரங்கனைப் பார்த்துவிட்டு சில மணி நேரம் கழித்து இன்னொரு முறை அரங்கனைப் பார்த்தால் கூட அப்போது வேறு ஒரு பாசுரம் சொல்லித்தான் அரங்கனை அனுபவிப்பார் ராமானுஜர்.
அந்த அளவுக்கு அரங்கனையும், ஆழ்வார்களின் பாசுரங்களையும் இரண்டறக் கலந்து தனக்குள் இணைத்துக் கொண்டிருப்பவர் அவர்.
அந்த வகையில்தான் அமலனாதிபிரான் தொகுப்பிலிருந்து, 'நீண்ட அப் பெரியவாய கண்கள் என்னைப் பேதைமே செய்தனவே' என்று குறிப்பிடுகிறார் ராமானுஜர்.
ஆக ராமானுஜரைப் போன்ற மிகப்பெரிய மேதைகளையே பேதைமை எனப்படுகிற மயக்கத்தில் தள்ளுகிற ஒரு விதமான வேதியியல் விசித்திரத்தை நடத்துகிறது அரங்கனின் அந்த நீண்ட அப்பெரிய கண்கள்.
இதைச் சொன்னதற்கு வடுக நம்பிகள் சற்றும் அலட்டிக் கொள்ளாமல் இருக்கவே, 'என்ன வடுக நம்பி, அரங்கனின் கண்கள் உம்மை பேதைமை செய்யவில்லையா?' என்று கேட்கிறார்.
அதற்கு வடுக நம்பிகள், 'இல்லை சுவாமி... எம்மை ஒன்றும் செய்யவில்லை' என்று சொன்ன வடுகநம்பிகள், 'நான் அரங்கனைப் பார்த்தால்தானே அவனது கண்கள் என்னை பேதைமை செய்ய நேரிடும், நான் தான் அவனைப் பார்க்கவே இல்லையே?' என்கிறார்.
ராமானுஜருக்கு கொஞ்சமாக இருந்த சந்தேகம் அதிகமானது.
'வடுக நம்பி..என்ன சொல்லுகின்றீர்? நான் அரங்கனைப் பார்த்துக் கொண்டிருக்கிறேன். என் பக்கத்தில் நீர் நிற்கின்றீர். நீரும் தானே அரங்கனைப் பார்த்துக் கொண்டிருக்கிறீர்? அவரைப் பார்க்காமல் வேறு என்ன பார்த்துக் கொண்டிருக்கிறீர்' என்று ராமானுஜர் கேட்க..
வடுக நம்பி வாய்விட்டு சிரித்து, அதே அமலனாதிபிரான் பாசுரத்தில் இருந்து இன்னொரு பாசுரத்தின் ஈற்றடியை மட்டும் ராமானுஜரிடம் சொன்னார்.
'என் அமுதினைக் கண்ட கண்கள் மற்றொன்றினைக் காணாவே' என்கிறார் வடுக நம்பிகள்.
அதற்கு ராமானுஜரிடம் விளக்கமும் சொல்கிறார் வடுகநம்பிகள்.
''என் அமுது என்றால் அது ராமானுஜராகிய தாங்கள் மட்டுமே... என் அமுதினைக் காணும் என் கண்கள் அதே நேரத்தில் இன்னொன்றினைக் காணாது. ராமானுஜர் என்ற அமுதின் வடிவழகை நான் பருகிக் கொண்டிருக்கும்போது...
அரங்கனின் கண்கள் கூட எமக்குத் தெரியவில்லை சுவாமி' என்று சொல்ல ராமானுஜரே அசந்துவிட்டார்.
இன்னொரு சம்பவம். சேரன் மடத்தில் ராமானுஜருக்காக வடுகநம்பி பால் காய்ச்சிக் கொண்டிருக்கிறார்.
அப்போது வாசலில் இருந்து ராமானுஜர் குரல் கொடுக்கிறார். 'ஓய்... வடுகநம்பி... வாருமய்யா... நம்பெருமாள் வீதியுலா வந்து கொண்டிருக்கிறார்' என்று கூப்பிடுகிறார்.
அப்போது பால் அடுப்பில் இருக்கிறது. அது எப்போது பொங்குமோ என்று தெரியாத நிலையில் இருக்கிறது. ஒருவேளை ராமானுஜர் அழைப்பை ஏற்று வடுகநம்பிகள், வாசலுக்குச் சென்று பெருமாளை தரிசித்துக் கொண்டிருந்தால் அதற்குள் பால் பொங்கி வழிந்துவிடும். இதை யோசித்த வடுகநம்பிகள், 'நீங்கள் தரிசியுங்கள் எனக்கு வேலை இருக்கிறது' என்கிறார்.
ஆனால் விடாமல் ராமானுஜர் கூப்பிட்டுக் கொண்டே இருக்கவே...
'சுவாமி... நீர் வேண்டுமானால் உமது பெருமாளைப் பார்த்துக் கொள்ளுங்கள்.
நானும் அந்த பெருமாளைப் பார்க்க வந்துவிட்டால் என் பெருமாளை யார் பார்ப்பது?' என்று கேட்டார் வடுக நம்பிகள். அவர் எம், பெருமாள் என்று சொன்னது ராமானுஜரைத்தான்.
அதாவது ராமானுஜரே தம் பெருமாள் என்று கருதியிருக்கிறார் வடுக நம்பிகள்.
இதுமட்டுமல்ல...இன்னொரு சம்பவத்தையும் பார்ப்போம்.
சேரன் மடத்தில் ஒவ்வொரு நாளும் ராமானுஜர் அமுது செய்த பிறகு அதாவது சாப்பிட்ட பிறகு மிச்சம் இருக்கும் பிரசாதத்தை சிஷ்யர்களுக்கு தருவது வழக்கம். ராமானுஜர் இன்று மிச்சம் வைத்த சேஷம் எனப்படும் பிரசாதம் தமக்குக் கிடைக்குமோ என்று மடத்தில் இருக்கும் சிஷ்யர்கள் எல்லாரும் காத்துக் கொண்டிருப்பார்கள்.
அப்படி ஒருமுறை ராமானுஜர் சாப்பிட்டு மிச்சம் வைத்த சாதத்தை எல்லாருக்கும் கொடுத்தது போல வடுக நம்பிக்கும் கொடுத்திருக்கிறார் ராமானுஜர்.
அப்போது அதை இரு கைகளாலும் வாங்கி சாப்பிட்டுவிட்டு, தன் தலையில் துடைத்துக் கொண்டுவிட்டார் வடுக நம்பி. அதாவது கோயில்களில் பிரசாதம் கொடுத்தால் அதை சாப்பிட்டுவிட்டு கை கழுவ மாட்டார்கள் பெரியவர்கள்.
அப்படியே தலையில் தடவிக் கொண்டுவிடுவார்கள். அதுதான் அந்த பிரசாதத்துக்கு செய்யும் மரியாதை.
அதே மாதிரி தனது அமுது பிரசாதத்தை வடுக நம்பிகள் மதித்ததைப் பார்த்து ராமானுஜர் கோபப்பட்டார். 'வடுக நம்பிகளே.. முதலில் கைகளை அலம்புங்கள்' என்று உத்தரவிட்டார்
ராமானுஜர். அதன்படியே கைகளை அலம்பிக்கொண்டார் வடுக நம்பிகள்.
மறுநாள் அரங்கநாதன் சந்நிதியில்...ராமானுஜர் , வடுக நம்பிகள் உட்பட அனைவரும் இருந்தனர்.
அப்போது அங்கே பிரசாதம் வழங்கப்பட்டது. வடுக நம்பிகள் பிரசாதத்தை வாங்கி சாப்பிட்டுவிட்டு உடனே போய் கையை அலம்பினார்.
இதைப் பார்த்த ராமானுஜர், 'என்ன செய்கிறீர் வடுக நம்பி?' என்று கேட்டார்.
'ஆம் சுவாமி. நேற்று தாங்கள் சொன்னதைச் செய்தேன். எனக்கு தங்கள் பிரசாதத்தை விட பெருமாள் பிரசாதம் முக்கியமல்ல.
தங்களை சேவித்தால் நான் பெருமாளையும் சேவித்த மாதிரி ஆகும். ஆனால் பெருமாளை மட்டும் சேவித்தால் தங்களை சேவித்ததாக ஆகாது' என்றார் வடுக நம்பிகள்.
அப்போதுதான் ராமானுஜர், 'நாம் உம்மிடம் தோற்றோம்' என்று சொல்லி வடுக நம்பியை வாரியணைத்துக் கொண்டார்.
ஆக ராமானுஜர், தானே தன் வாயால், 'நாம் உம்மிடம் தோற்றோம்' என்று ஒருவரிடம் ஒப்புக் கொண்டார் என்றால் அது வடுக நம்பிகளிடம்தான். அதுவும் வடுக நம்பியின் ஆச்சாரிய பக்தியிடம் ராமானுஜர் தோற்றிருக்கிறார்.
!! ஸ்ரீமதே ராமானுஜாய நமோ நமஹ!!🙏
ஓம் நமோ நாராயணாய 🙏
No comments:
Post a Comment