*தெவிட்டாத விட்டலா-75*
*தோல்*
இதுவரை படித்த பாண்டுரங்கன்
கதைகளில் ஒரு
உண்மை உள்ளே
இழையோடி இருக்கிறதே
கவனித்தீர்களா?
பக்தன் பிராமணனாகத்தான் இருக்க வேண்டும் என்ற நியதி இல்லவே
இல்லை.
மனதில் இறைவனைக் குடி கொண்டவன் யாரா இருந்தாலும்
அவனே பக்தன். பரமனுக்கு
நெருங்கியவன்.
ரோஹிதாஸ் என்கிற பெயர் ஞாபகத்துக்கு வருகிறதா? மிக ருசியான
ஒரு கதை முன்பே உங்களுக்கு வந்து
சேர்ந்திருக்கிறதே.
அவரைப்பற்றி இன்று
இன்னொரு சுவாரசியமான விஷயம்
இங்கு காத்திருக்கிறது
ரோஹிதாசர் மனதை விட்டலனிடம்
கொடுத்து விட்டாலும் அன்றாட
ஜீவனத்துக்கு செருப்பு தைக்கும்
வேலைதான் அவருக்கு தெரிந்தது.
விட்டல பக்தர்களுக்கு இலவசமாக
சந்தோஷத்தோடு உழைப்பவர்.
இப்படி
பாண்டுரங்க பக்தர்களுக்கு இலவச
சேவையால் அன்றாட வருமானம் இன்றி
பட்டினி (அவர் மட்டுமல்ல, இதனால் அவர்
குடும்பமும் கூட) கிடந்தாலும் கவலைப்
படமாட்டார்.
ரோஹிதாசர்
வித்யாசமானவர்.
பிறர்க்கு உழைப்பதில்
உள்ள ஆனந்தத்துக்கு ஈடு எதுவுமில்லை
என்பவர்.
ஹரிநாம சங்கீர்த்தனத்தை
தூர இருந்தே கேட்டு மகிழ்பவர்.
அவரைத்தான் அருகில் நெருங்க விட
மாட்டார்களே அந்தக் காலத்தில்!
விடியற் காலையில் எழுந்ததும் காலை
உணவை முடித்துக் கொள்வார், என்ன
இருக்கிறதோ அதை.
அதற்கப்புறம் தான்
ஸ்நானம், விட்டல நாம ஸ்தோத்ரம்,எல்லாம்.
"என்னய்யா இது? முரண்பாடாக
இருக்கிறதே!
காலையில் எழுந்ததும்
குளித்து விட்டு விட்டலனைத் தொழுத
பின்னரே அல்லவோ காலை ஆகாரம்
உண்ண வேண்டும்?
வண்டியை தூக்கி
மாட்டுக்கு முன்னாலே பூட்டுகிறீரே?"
என்று கேட்பவர்க்கு
அவர் சொன்ன
பதில்:
"இறைவனை பசியோடு இருக்கும் வயிற்றுடன் தொழுதால் மனசு
வயிற்றின் மீது தான் இருக்குமே தவிர
விட்டலன் மேல் செல்லாதே!
அதை முதலில் திருப்திப் படுத்தி விட்டால்
என்னுடைய ஆனந்தமான வழிபாட்டுக்கு
இடைஞ்சல் வராதே!"
உணவு தான் மனிதனின் உடலையும்
உள்ளத்தையும் ஆட்டிப்படைக்கிறது
என்று உணர்ந்தவர்கள் இதை ஒப்புக்
கொள்வார்கள் என்பார் ரோஹிதாசர்.
குட்டிச்சாத்தானை உபாசிக்கும்
மந்திரவாதி தனக்கு
என்ன வேண்டும்
என்று அதைக் கேட்கும் முன் அதற்கு
முதலில் ஒரு பலி
போட்டு விடுவான்.
அதில் திருப்தி அடைந்து அவன் கேட்கும்
செயலுக்கு குட்டிச்சாத்தான் அடி
பணியும்.
வயிறு என்கிற
குட்டிச்சாத்தானுக்கு எதையோ முதலில்
இட்டு நிரப்பினால் உள்ளத்தால்
விட்டலனை வழிபடுவதில் வயிறு தொந்தரவு பண்ணாது என்பார் ரோஹி தாசர்.
ஒரு நாள் இவ்வாறு ரோஹிதாசர்
வழக்கம் போல் தன்னுடைய பிரத்யேக
விட்டலன் வழிபாட்டை தொடங்கிக்
கொண்டிருந்தார்.
செருப்பு தைப்பவர்
அல்லவா? எல்லாவற்றிற்கும்
குட்டி குட்டி
தோல் பைகள் வைத்திருப்பார்.
ஒன்றில்
சாளக்ராமம், ஓன்றில் பூஜைக்கு
தண்ணீர். ஒன்றில் பூஜா சாமக்ரியைகள்.
அவர் வீட்டுக்கு அருகே ஒரு ப்ரோஹித
பிராமணர் வசித்து வந்தார்.
பக்கத்து வீட்டில் அந்த
மாச விசேஷ நாட்கள், திதி, வாரம், யோகம் அமாவாசை, கிருத்திகை,
சதுர்த்தி, எல்லாம் சொல்லி அவர்கள்
குறித்து வைத்துக் கொள்வார்கள்.
அவர்கள் கொடுக்கும் தக்ஷிணையோடு
செல்வார்.
அந்த பிராமணர் ரோஹிதாசர்
எதிரே துளசி மாடத்தில் சாய்ந்து
கொண்டு அவரை கவனித்தார்.
அவரைக்
கண்டதும் ரோஹிதாசர் எழுந்து அவரை
விழுந்து வணங்கினார்.
மிகவும் அருவருப்போடு அந்த பிராமணர்
ரோஹிதாசரைப் பார்த்து, "ஹே, மகாபாவி! விட்டலன் பேரைச் சொல்லிக்
கொண்டு ஒரு தோல் மீது
உட்கார்ந்திருக்கிறாய். என்ன பலன்
எதிர்பார்க்கிறாய்? நாங்கள் எவ்வளவு
சுத்தமாக பக்தியோடு பூஜை பண்ணும்
விட்டலன் சாளிக்ராமத்தை ஒரு தோல்
பையில் திணித்து வைத்திருக்கிறாய்?
மூவுலகும் போற்றும் அவனை,
வைகுண்ட வாசியை, நாற்றமெடுக்கும்
தோல் பையிலா திணிப்பது? பால்
கடலில் சயனிப்பவனை, புண்ய நதி
ஜலத்தில் அபிஷேகம் செய்யப்படும்
அவனை ஒரு தோல்பை கிண்ணத்தில்
அழுக்கு நீரில் முழுக்கி எடுக்கிறாயே,
உன் பாபத்தை எங்கு கொண்டு
தொலைக்கப் போகிறாய்?"
"சுவாமி, எனக்கு சாஸ்த்ரங்கள்
தெரியாது. யோசித்து பார்த்ததில் தோல்
சம்பந்தமில்லாமல் எதுவுமில்லை என்று
தோன்றுகிறதே.
பஞ்சாம்ருத
அபிஷேகத்திற்கு தேவையான பால்,
தயிர், நெய் போன்றவை தோல் உள்ள
காராம் பசுவினாலே
தான் கிடைக்கிறது.
காய், பழம், இலை, எல்லாம் தோல்
உள்ளவைதான். விட்டலனுக்கு
வாசிக்கும் வாத்தியங்கள் தோலினால்
செய்யப்பட்டவை.
மான் தோல் தான்
சுத்தமானது.
மகரிஷிகள் கூட
உபயோகிப்பவை. சாக்ஷாத் பரமசிவன்
கூட புலித்தோலை ஆடையாக
கொண்டவர்.
பிராமணர், க்ஷத்ரியர்,
வைஸ்யர் போன்ற நாலு வர்ணத்தாரும்
எவருமே தோல் இல்லாமல் இல்லையே.
நாக்கு வேதம் சொல்கிறதே, அதுவும்
தோல் தான்.
தோல் மூடிய கையினால்
அர்ச்சனை, பூஜை செய்கிறோம்,
சாப்பிடுகிறோம்.
நமது உடல் தோலினால்
ஆனது அதற்குள்ளே தான் ஆத்ம நாதனாக விட்டலன் உறைகிறான்.
நீங்கள் இந்த முட்டாளுக்குப்
புரியும்படியாக சொன்னால்,
தவறிருந்தால் உடனே
மாற்றிக்கொள்கிறேன்" என்றார்
ரோஹிதாசர்.
"எதிர்த்து பேசுகிறாயா? முட்டாளே!
ஜீவனாகிய பரமாத்மா இருப்பதால் தான்
தோலுக்கு மதிப்பு.
செத்த பிணத்தின்
தோலை உபயோகிக்கிறாய். வேதாந்தமா
பேசுகிறாய்?" என்றார் பிராமணர்.
"சுவாமி இந்த செத்த மிருகத்தின் தோல்
பையில் தான் விட்டலனே இருக்கிறான்
என்னோடு.
அவன் ஜீவன் இல்லையா?
குழந்தை தாயின் தோலிலிருந்து தானே
பிறக்கிறது. குழந்தை பிறந்த பின் தாய்
பிணமா? உலகத்தில் எண்ணற்ற
உயிர்கள் நிமிஷந்தோறும் தோன்றி
மறைகின்றன. உலகம் பிணமா?
சாளக்ராமத்தை தோலில் வைத்ததால்
விட்டலனுக்கு அவமரியாதையா.
அலட்சியமா, எல்லாமே அவனாக
இருக்கும்போது எது அவனில்லாதது?
எதில் அவனில்லை?"
"நீ பிராமணனுக்கு ஈடாவாயா? உன்
வறட்டு வேதாந்தம், நாங்கள் பூஜை
செய்யும் அளவுக்கும், நாங்கள் மந்திரம்,
வேதம், எல்லாம் சொல்லும் அளவுக்கு
உயர்த்துமா உன்னை? உயர்ந்த
ஜாதியாக்கிவிடுமா? பூணலின் மகிமை
புரியுமா உனக்கு?
பூணல் உண்டா
உனக்கு?" என்றார் பிராமணர்.
"சுவாமி, விட்டலன் நான் பூணல் போட்டிருந்தால் தான் என்னை
ஏற்றுக்கொள்வான் என்றிருந்தால்
எனக்கு அவனே பூணல் போட்டு
விட்டிருப்பானே. பாருங்கள்!" என்று
தனது கூரான கத்தியால் மார்பிலிருந்து
வயிறு வரை கீரிப்பிளந்தார்.
உள்ளே
வெண்மையான முப்புரி நூல் இடது
வலமாக தோன்றியது.
பிராமணருக்கு கண்களை நம்பவே
முடியவில்லை. நடுங்கினார்.
நாக்கு வரண்டது. தழுவி தழுக்க, "நான் என்ன
அபசாரம் செய்துவிட்டேன்! நீ ஒரு
உண்மையான சிறந்த விட்டல பக்தன்
என்பதை உணராமல்
உன் மனம்
வலிக்கும்படியாக பேசிவிட்டேனே?!''
என்று அந்த பிராமணர் ரோஹிதாசர்
காலில் விழுந்தார்.
அவர் பாதங்களை
கெட்டியாக பிடித்து கண்களில் ஒற்றிக்
கொண்டார்.
விட்டலன் அருளால்
ரோஹிதாசர் பிளந்து காட்டிய மார்பு
ஒன்று சேர்ந்தது.
No comments:
Post a Comment