சூர்யா உனக்கு நமஸ்காரம் --- நங்கநல்லூர் J K SIVAN
யாரையாவது ஒருவரை நான் ஆஹா எவ்வளவு புண்யம் பண்ண பாக்கியசாலி என்று கருதுவேனானால் அது நிச்சயம் ஸ்ரீ குழுமணி நாராயண சாஸ்திரி அவர்களைத் தான் . நிச்சயம். அவரைப் போல் எவரும் சேஷாத்திரி ஸ்வாமிகள் அருகே அதிக நேரம் வாழ்க்கையில் கழித்திருக் க இயலவில்லை. நூறு வருஷங்களுக்கு அப்புறம் நம்மைப் போன்றவர்களுக்கு அதால் எவ்வளவு நற்பயன் கிடைத்திருக்கிறது.! ஸ்ரீ சாஸ்திரிகள் அல்லவோ ஸ்வாமிகளோடு தனது அனுபவத்தை நமக்கு காமிராவில் படம் பிடித்தது போல் காட்டுகிறார். எவ்வளவு பக்தர்கள் மனம் அதனால் நிறைந்திருக்கிறது. இது எல்லாமே தெய்வ சங்கல்பம் தான். அவனன்றி ஓர் அணுவும் அசையாது.சேஷாத்ரி ஸ்வாமிகளே ஸாஸ்திரிகளை இதற்கு பயன் படுத்த அனுக்ரஹம் பண்ணி இருக்கலாம்.
மஹான் சேஷாத்திரி ஸ்வாமிகள் அவ்வப்போது சிலருக்கு ஒரு சில குட்டி குட்டி வார்த்தைகள் சொல்வது தான் உபதேசம். எத்தனையோ பேர் அதை லக்ஷியம் செய்யவில்லை. ஏதோ பைத்தியக்காரன் பேத்தல் என்று சிரித்து விட்டு ஹோட்டலில் மசால் வடை சாப்பிட போனவர்கள் தான் முட்டாள்கள். புதையல் கிடைத்தும் பிச்சை எடுப்பவர்கள்.
நன்றாக யோசித்தால், பின்பற்றினால், ஸ்வாமிகளின் ஒரு சில வார்த்தைகள் எவ்வளவு அதீத சக்தி கொண்டவை என்று புலப்படும். ஓரிரு உதாரணங்கள் சொல்கிறேன்.
ஒருவருக்கு அவர் சொன்ன உபதேசம்:
''டேய் , என்ன யோசிக்கிறே? நீ இப்போதி லிருந்து ''ராம ராம மஹா பாஹோ '' ன்னு அடிக்கடி சொல்லிண்டே வா. மோக்ஷம் உடனே உனக்கு ''.
இதென்ன பெரிய உபதேசமா? ஆமாம். இது ஏதோ உளறல் இல்லை. ஆதித்ய ஹ்ருதயத்தில் வரும் வார்த்தை. அகஸ்திய மகரிஷி ஸ்ரீ ராமனுக்கு உபதேசித்த வாக்கு. ராமனுக்கு ராவணனைக் கொல்லும் யுக்தி சக்தி இதனால் அமோகமாக கிடைத்தது. இந்த ஸ்லோகங்களை நாமும் சொல்லி வருவதால் நமது தீமைகள் அழிந்து மோக்ஷ சாதகம் என்கிறார் பூடகமாக சேஷாத்ரி ஸ்வாமிகள்.
''ஆதித்ய ஹ்ருதயம் பாராயணம் பண்ணு . உதய காலத்திலேயே அரை நிமிஷமாவது உட்கார்ந்து சொல்லு. ராக்ஷஸன் சாவான்'' என்று ஒருவருக்கு உபதேசித்தார் ஸ்வாமிகள்.
குழுமணி நாராயண சாஸ்திரி முடிந்தவரை சேஷாத்திரி ஸ்வாமிகளின் நிழலாக அவரை தொடடர்ந்தவர் போல் இருக்கிறது.
மத்தியானம் உச்சி வெயில் நேரத்தில் ஒருநாள் மேலே சொன்ன ஆதித்ய ஹ்ருதயம் பற்றி சாஸ்திரிகளுக்கு ஸ்வாமிகள் உபதேசித்தார். சாஸ்திரி கீழே விழுந்து வணங்கி எழுவதற்குள் சுவாமியைக் காணோம். அவர் சடைச்சி வீட்டு திண்ணைக்கு ஓடிவிட்டார். ஸ்வாமிகள் நமது மனத்தில் உள்ள மலங்கள் விலகி பரிசுத்தமடையும் என்பதைத் தான் ' ராக்ஷஸன் சாவான்' என்கிறார்.
இன்னொருவரிடம் ஸ்வாமிகள் சொன்ன உபதேச வார்த்தை என்ன தெரியுமா?
' நீ சுந்தர காண்டம் வாசி. ஞானம் பிறக்கிறதா இல்லையா பார் '' . இதற்கு அர்த்தம் சொல்லவேண்டாம். சுந்தர காண்டத்தின் மஹிமை தெரியாதவர் யார்.
இன்னொரு பக்தருக்கு ஸ்வாமிகள் வழங்கிய உபதேசம்
''நீ எது தேடியும் பிரயோஜனம் இல்லை. முதலில் ஆசையை ஒழிக்கணும் ''என்று ஒருவருக்கு திடீரென்று உபதேசம் செய்தார் ஸ்வாமிகள். அது இராமாயண சம்பூ காவ்யத்தில் அகஸ்திய முனிவரை வர்ணிக்கும் ஸ்லோகம். அதை ஸ்வாமிகள் நினைவு கூர்ந்து சொன்னது:
''பரித்யக்த ஸர்வாசமபி உபகத தக்ஷிணாசம்''
அதாவது, அகஸ்தியர் நான்கு திசைகளில் மூன்றை விட்டு தெற்கு திசை (தக்ஷிணம்) நோக்கி வந்தவர். இன்னொரு அர்த்தம் எல்லா ஆசைகளையும் விட்டொழித்தாலும் ''தக்ஷிணை'' யாசகம் வாங்குபவர் என்று ஒரு சிலேடை. அது முக்கியமில்லை.
ஸ்வாமிகள் '' இந்த ஸ்லோகத்தை சொல்லி நீங்கள் எல்லோரும் நன்றாக அப்யாசம் பண்ண வேண்டும்'' என்று சொன்னது ' உணவு பிரதானம் இல்லை, ஆசை வேண்டாம். இருப்பதைக் கொண்டு திருப்தியோடு சந்தோஷமாக இரு. பகவான் நாமாவை சொல்'' என்று உணர்த்து வதற்காகவே.
ஒரு முறை தனது கட்டைவிரலை ச் சுண்டி விட்டு ''ராமன் எங்கேயும் வியாபித்திருக்கிறான். அப்படி இருப்பதால் ''ராம ராம ராம ' என்று சதா விடாமல் ஜெபிக்கவேண்டும்'' என உபதேசித்தார்.
ஸ்வாமிகள் இதை நிறைய பேரிடம் சொல்ல காரணம் கலியுகத்தில் இதை விட சிறந்த மோக்ஷ சாதனம் கிடையாது. அதனால் தான் ''சதா'' என்கிறார். இதைச் சொல்ல கால தேச நியமம் ஒன்றும் வேண்டாம்.
ஒருநாள் சாஸ்திரிகளிடம் '' நாராயணா, நீ வா என்னோடு இளையனார் கோவில் மண்டபத்தில் ராத்திரி படுத்துக்கோ '' என்று சொல்லி ஸ்வாமிகளின் திருவடிகளை சாஸ்திரிகள் தனது சிரத்தின் மீது தாங்கி படுத்திருக்கும்போது'' மேற்படி உபதேசம் அவருக்கும் கிடைத்தது.
இனி ஆதித்ய ஹ்ருதயம் ஸ்லோகங்களை அறிவோம்.
No comments:
Post a Comment