Thursday, December 12, 2024

Swami haridas of Akbar regime

ஹரே கிருஷ்ணா 🙏🏻🙏🏻
 
ஸ்ரீரங்கநாதரின் சன்னிதியில் அர்ச்சகராகப் பணியாற்றி வந்தவர் கிருஷ்ண பட்டர். 

ஒருமுறை இவரது இல்லத்தில் சில நாட்கள் தங்கியிருந்த புரந்தரதாசர், கிருஷ்ண பட்டரின் மகள் பிரேமாவுக்கு, சரிகமபதநி சப்த ஸ்வரங்களைப் போதித்தார். 

இதன் பின்னர், கர்நாடக சங்கீதத்தில் சிறந்து விளங்கிய பிரேமா, கோயிலில் ஆழ்வார் பாசுரங்களைப் பாடி வந்தாள். 

அவள் பாடுவதைக் கேட்கும் அனைவரும் மெய் மறப்பார்கள். 

இந்த நிலையில் ஏழ்மை நிலையில் இருந்த கிருஷ்ணபட்டர் தனது மகளை தூரத்து உறவுக்காரப் பையன் ஒருவனுக்கு மணம் முடித்துக் கொடுத்தார். 

அவனோ குடிகாரன், சூதாடி, இதைத் தாமதமாக உணர்ந்த பட்டர், தவித்து மனம் மருகினார். ஆனால், பிரேமா மனம் தளரவில்லை. 

பகவான் ஸ்ரீகிருஷ்ணரிடம் அளவற்ற பக்தி கொண்டிருந்த அவள் ராமாயணம், பாகவதம் ஆகியவற்றைத் தொடர்ந்து படித்து வந்தாள். 

அவளுக்கு அழகிய ஆண் குழந்தை பிறந்தது. 

அவனுக்கு ராமகிருஷ்ணன் எனப் பெயரிட்டு வளர்ந்தாள்.

இந்த நிலையில் மது போதையில் காவிரி வெள்ளத்தில் சிக்கி இறந்தான் அவன் கணவன். 

மகளின் நிலை குறித்த கவலையால் மனம் உடைந்து போன கிருஷ்ண பட்டரும் இறந்து போனார். 

கணவனையும், தந்தையையும் இழந்த பிரேமா, ஸ்ரீரங்கத்தில் இருக்கப் பிடிக்காமல் குழந்தையுடன் வாரணாசிக்குச் சென்றாள். 

அங்கு தர்மசத்திரம் ஒன்றில் தொண்டாற்றி வந்தாள். 

காசியில் அனைவரும் அவளை, பிரேமா பாய் என்றே அழைத்தனர். 

அப்போது அவளின் மகன் ராமகிருஷ்ணனுக்கு வயது பத்து. தமிழ், இந்தி ஆகிய மொழிகளில் சரளமாகப் பேசுவதில் திறன் பெற்றிருந்தான் அவன். 

மேலும், தனது தாயிடம் கர்நாடக சங்கீதமும் கற்று வந்த ராமகிருஷ்ணன் உபன்யாசம், கலாட்சேபம் போன்றவற்றைக் கூறக்கேட்டு ஸ்ரீகிருஷ்ண பக்தனாகவும் விளங்கினான்.

ஒருநாள் சத்திரத்துக்கு அடியார்கள் சிலர் வந்தனர். 

அவர்களை பக்தியுடன் வரவேற்றாள் பிரேமா பாய். 

இவர்களுக்கு உணவளித்து உபசரிக்கலாம். 

எனில், கங்கைக் கரையில் தினமும் நடக்கும் பாகவத உபன்யாசத்தைக் கேட்க முடியாது. 

விருந்தினர்களை உபசரிக்காமல் இருப்பது தவறு. 

என்ன செய்வது? என்று தவித்தாள். சிறிது நேரம் யோசித்தவள். 

அடியவர்களுக்கு தாம் உணவளிப்பது, பாகவதம் கேட்க மகன் ராமகிருஷ்ணனை அனுப்பி பிறகு அவனிடம் விவரமாய் தாம் கேட்டுத் தெரிந்து கொள்வது என்று முடிவு செய்தாள். 

அதன்படி, ராமகிருஷ்ணனை பாகவதம் கேட்க அனுப்பினாள். 

உபன்யாசம் முடிந்து வீடு திரும்பிய ராமகிருஷ்ணனிடம், உபன்யாசத்தில் இன்று பவுராணிகர் என்ன சொன்னார்? 

என்று ஆவலுடன் கேட்டாள்.

அம்மா! கிருஷ்ண பரமாத்மாவின் பிறப்பு, வளர்ப்பு, லீலைகள் ஆகியவற்றைப் பற்றிக் கூறும் தசம ஸ்கந்தம் பற்றி விளக்கினார். 

குழந்தை கண்ணன் புழுதியில் விளையாடியது, வெண்ணெயைத் திருடி உண்டது, யசோதா துரத்தியும் பிடிபடாமல் ஓடியது ஆகியவற்றை விவரித்தார். 

கோலைக் கையிலெடுத்து அடிக்கப்போவதாய் யசோதா பயமுறுத்துகிறாள். 

குழந்தைக் கண்ணன் அழத் தொடங்குகிறான். 

ஏதேனும் ஒரு வகையில் கண்ணனைத் தண்டிக்க எண்ணி அவனை உரலோடு பிணைத்துக் கட்டுகிறாள் யசோதா. ஆனால், குறும்புக்காரக் கண்ணனோ கட்டிய உரலையும் சேர்த்து இழுத்தபடி வீட்டின் பின்புறம் சென்று ரெட்டையாக நின்ற மருத மரங்களுக்கு இடையே புகுந்தான். 

உபன்யாசத்தில் இன்று இதைத்தான் சொன்னார் என்றான்.

இதைக் கேட்டு உணர்ச்சிவசப்பட்ட பிரமோ பாய், மெய் மறந்தாள். 

நான் கண்ணனின் காலத்தில் இருப்பதாகவே எண்ணிக் கொண்டாள். 

கண்ணா! 

உன்னையா உரலில் கட்டிப் போட்டார்கள்? 

கயிறு இறுக்கி உன் வயிறு வலிக்குமே நீ மர இடுக்குகளில் நுழைந்து செல்லும் போது ஏதாவது பூச்சிகள் உன்னைக் கடித்தால் என்னாவது ? 

என்னால் இதைப் பார்த்துக் கொண்டு சும்மா இருக்க முடியாது. 

இப்போதே கயிறை அவிழ்த்து விடுகிறேன். 

என்றவாறு கங்கையை நோக்கி ஓடினாள். 

அம்மா... அம்மா என்று கூவியபடி சிறுவன் ராமகிருஷ்ணனும், அவளது பக்தியைக் கண்டு வியந்த அடியவர்களும் அவளைப் பின்தொடர்ந்தனர். 

பிரேமா பாய் கங்கை நதியில் குதித்தாள். 

அவள் விழுந்த இடத்தில் இருந்து ஓர் ஒளிப் பிழம்பு விண்ணை நோக்கிச் சென்றது. 

ஜோதி வடிவாகச் செல்லும் பிரேமா பாயை அனைவரும் வணங்கினர்.

தந்தையைக் காவிரியிலும் தாயை கங்கையிலும் இழந்த ராமகிருஷ்ணன், தான் பிறந்த பூமியான ஸ்ரீரங்கத்துக்கு வந்தான். 

அங்கு அரங்கன் சன்னிதியில் கிருஷ்ண சைதன்ய மகாபிரபு பக்தர்களுடன் ஆடிப்பாடி ஆனந்த நிலையில் இருப்பதைக் கண்டு பரவசமுற்றான். 

நாடெங்கும் போய் பக்தியைப் பரப்பிய மகானான சைதன்ய மகாபிரபுவுடன் இணைந்து அவரைப் பின்தொடர்ந்தான். 

மொகாலய படையெடுப்பின்போது, பெர்ஷியா நாட்டுக்குச் சென்று மறைந்திருக்க வேண்டிய நிர்ப்பந்தம் ஏற்பட்டபோது, பெர்ஷியன் சங்கீதத்தைக் கற்றுத் தேறிய ராமகிருஷ்ணன் திரும்பி வந்ததும் குருவின் ஆணைப்படி பிருந்தாவனத்தை அடைந்து ஸ்ரீகிருஷ்ண நாம சங்கீர்த்தனம், பாகவத சேவை என்று தனது வாழ்நாளைக் கழித்தான்.

இந்த ராமகிருஷ்ணனே பிற்காலத்தில் தீட்சை பெற்று, ஸ்வாமி ஹரிதாஸ் என்ற பெயரில் புகழ்பெற்றார். 

இவர் உருவாக்கியதே ஹிந்துஸ்தானி சங்கீதம். 

அக்பர் சபையில் ஆஸ்தான வித்வானாகத் திகழ்ந்த, தான்சேன் சங்கீதம் பயின்றது ஸ்வாமி ஹரிதாஸிடம்தான் என்பது குறிப்பிடத்தக்கது.

ஜெய் ஸ்ரீராம்
ஸர்வம் கிருஷ்ணார்பணமஸ்து.🌹

No comments:

Post a Comment