ராமனோடு நடப்போம்...(25)
....அனுகூலமான சூழ்நிலை உருவானதால், நினைத்ததை விட விரைவாகப் பாலை ப்ரதேசத்தை மூவரும் கடந்திருந்தார்கள்..
இப்பொழுது...
கனி மரங்கள் அடர்ந்த அழகிய சோலையும், அதை ஒட்டி, ஒரே சீராக ஓடிக்கொண்டிருந்த கருத்த யமுனையும் அவர்களது கண்களுக்கு இலக்காகின..
யமுனையை எப்படிக் கடந்து செல்வது என்பது ராமனின் இப்போதைய யோசனையாக இருந்தது..
"லக்ஷ்மணா...
கங்கையைக் கடக்க நமக்கு குகன் உதவி செய்தாற்போல், இந்த யமுனையைக் கடக்க நமது உதவிக்கு யாருமில்லையே...
என்ன செய்வது?.." என்று தன் எண்ணத்தைத் தம்பியிடம் வெளிப்படுத்தினான் ராமன்...
"ராமண்ணா... கவலையே படாதீர்கள்..
கண்ணிமைக்கும் நேரத்தில் ஒரு தெப்பத்தை உண்டாக்கிவிடுவேன்..
என் இரண்டு தோள்களே போதும்...துடுப்பே தேவையில்லை.."
என்று உற்சாகத்துடன் பதிலுரைத்தான் ஸௌமித்ரேயன்..
வந்த களைப்பு தீர, முதலில் மூவரும் யமுனையில் நீராடி, பின் சோலைக் கனிகளைக் கொண்டு தம் பசியாறினர்..
ராமனும், சீதையும் அமர்ந்து பேசிக்கொண்டிருக்க, அந்த ஆதிசேஷ அம்ஸத்தின் கைவண்ணத்தில் அழகான தெப்பம் ஒன்று உருவாக ஆரம்பித்தது..
கண்கள் லக்ஷ்மணன் உண்டாக்குகிற தெப்பத்தின் மீதே பதிந்திருக்க,
ராமன்...
ஸீதை கேட்கிற கேள்விகளுக்கெல்லாம் பதில் சொல்லிக் கொண்டிருந்தான்...
"இப்பொழுது நான் என்ன கேட்டேன்?..
நீங்கள் என்ன பதில் சொல்கிறீர்கள்?.."
...தற்போது பொய்யாகச் சிணுங்கினாள் ஸீதை..
ராமனின் கவனம் இப்பொழுதுதான் ஸீதையின் மீது திரும்பியது...
"நீ என்ன கேட்டாய்?..
நான் என்ன சொன்னேன் ஸீதே?.."
...என்று ஸீதையிடமே வினவினான் ராமன்..
"இந்தப் புதுமாதிரியான புஷ்பம் என் கூந்தலுக்கு அழகாயிருக்கிறதா?.." என்று கேட்டேன்...
அதற்கு நீங்கள் சொன்ன பதில்..."
...நாணத்தோடு தலை கவிழ்ந்தாள் ஸீதை..
...தெப்பத்தை உருவாக்க, தனியொருவனாக லக்ஷ்மணன் படுகிற ஸ்ரமங்களை பார்த்துக்கொண்டிருந்த ராமன்,
அவன் படுகிற ஸ்ரமங்களின் களைப்புதீர, அவனை இறுகத் தழுவி இதம் தர வேண்டும் என்று மனதுள் எண்ணியவாறிருந்தான்..
"ஒருவேளை, லக்ஷ்மணனின் விஷயத்தில் நான் நினைத்திருந்ததைதான், இவளது கேள்விக்கான விடையாகச் சொல்லிவிட்டேனோ?.."
...தனக்குள்ளாகக் கேட்டுக் கொண்டான் ராமன்...
"ஆம்!" என்றது ஸீதையின் வெட்கம்..
தன் செயலை எண்ணி ராமனுக்கும் சிரிப்பு வர, ஸீதையின் பொய்கோபம் இச்சமயம் ஒரு துளி கூடியது..
ஆனால், ராமன் இப்போது மிக அழகாகச் சமாளித்தான்...
"ஒரு விஷயம் பார்த்தாயா ஸீதே?..
தன்னுடைய பர்த்தா தன்னிடம் ப்ரீதியுடன் இருப்பதைதான் எல்லா ஸ்த்ரீகளும் ஆசைப்படுகிறார்கள்...
ஆனால்... அதை அந்தப் புருஷன் சொல்லிக் காட்டும்போது மட்டும், அவர்களுக்குப் பொல்லாத வெட்கம் வந்து, இல்லாத கோபமும் ஏறிட்டுக் கொள்கிறது..."
ஸீதை வேகவேகமாய் இடைமறித்தாள்..
"ரகுவீரரே...ஏதேது...
தாம் எல்லாப் பெண்களையும் அறிந்தவர் போலல்லவா பேசுகிறீர்கள்!..
இதுவெல்லாம் எங்கு கற்றீர்?.."
...தெப்ப வேலையை அப்பொழுதுதான் முடித்து நிமிர்ந்த லக்ஷ்மணனின் செவிகளில், ஸீதை கடைசியாகக் கூறிய "இதுவெல்லாம் எங்கு கற்றீர்?.." என்பதுமட்டும் தெளிவாக வந்து விழுந்தது..
...தான் தெப்பத்தை உண்டாக்கியது குறித்துதான் ஸீதாமாதா ஸ்லாகித்துப் பேசுகிறார்கள் என்று எண்ணிக் கொண்ட லக்ஷ்மணன்.... ரொம்பவும் சகஜமாக,
"மாதே!..யாரும் கற்றுத் தரத் தேவையில்லை..
கண் பார்த்தால் போதும்.. கற்றுக் கொண்டுவிடலாம்.." என்று வார்த்தை சொல்லியதும்,
ராமனும், சீதையும் தம்மையும் மீறி, கண்களில் நீர் வருமளவுக்குச் சிரித்து மகிழ்ந்தனர்..
இப்பொழுதும்கூட தனது பதிலில்தான் அவர்கள் அவ்வளவு ஆனந்தமும் நிறைவும் அடைந்ததாக எண்ணிக் கொண்ட அந்த அப்பாவி லக்ஷ்மணன்,
தம்பதிகள் இருவரையும் தெப்பத்தில் ஸர்வ ஜாக்ரதையாக அமரவைத்து, தன் தோள்களாகிற துடுப்பை வீசிவீசி, நீரைக் கிழித்துக் கொண்டு வெகுவேகமாக முன்னேறினான்...
அந்த ஸௌமித்ரேயன் தெப்பத்தைச் செலுத்திய வேகத்தில்...பார்த்துக் கொண்டிருக்கும்போதே, அவர்கள் யமுனையைக் கடந்து விட்டிருந்தனர்..
மறுகரையிலும் கொஞ்ச தூரத்திற்கு ஒரு சிறு பாலை பரவியிருந்தது...
ஆனால் இச்சமயம் அந்திப்போது நெருங்கிக் கொண்டிருந்ததால், அதைக் கடப்பதொன்றும் அவர்களுக்கு ஸ்ரமமாயிருக்கவில்லை...
மாலை மங்குவதற்கு முன் சித்ரகூடத்தை அடைந்துவிட வேண்டும் என்கிற எண்ணமே மூவர் மனதிலும் இப்போது இருந்ததால், அவர்கள் நடையில் அது ப்ரதிபலித்தது..
அந்த மனோ வேகமே அவர்களை வழிநடத்த, அடைய வேண்டிய இலக்கை அவர்கள் அடைந்ததற்கான அடையாளமாய்,
...பச்சைப் போர்வையைப் போர்த்துக் கொண்டிருந்த ஒரு நெடிதுயர்ந்த மலையும், அதன் உச்சியிலே இளைப்பாறிக்கொண்டிருந்த ஒரு அழகான இளம்பிறையும்... தற்போது அவர்களை ஆசையோடு வரவேற்றன...
வளரும்...
No comments:
Post a Comment