தினம் ஒரு ஸ்லோகம் 19.11.2024.
கார்த்திகை 4
🚩🚩🚩🚩🚩🙏🙏🙏🙏🙏🚩🚩🚩🚩🚩
ஆதி சங்கரர் அருளிய ஸ்லோகங்கள்.
ஸுப்ரமண்ய புஜங்கம்
22.ப்ரணம்யாஸக்ருத்பாத யோஸ்தே பதித்வா
ப்ரஸாத்ய ப்ரபோ ப்ரார்தயே நேகவாரம்
ந வக்தும் க்ஷமோஹம் ததாநீம் க்ருபாப்தே
ந கார்யாந்தகாலே மநாகப்யுபேக்ஷா
ஹே ப்ரபோ!உமது கால்களில் வீழந்து நமஸ்கரித்து கெஞ்சிப் பலமுறை பிரார்த்தித்துக் கொள்கிறேன். கிருபா ஸமுத்திரமே!அந்த கடைசீ காலத்தில் நான் சொல்ல முடியாமல் போகலாம். ஒரு போதும் என்னை கைவிடலாகாது.
தெய்வத்தின் குரல்
"சங்கர சம்பிரதாயம்" :
ஞானரீதியில் பெளத்தமும் அத்வைதமும் ஒரே மாதிரிதான் என்று இவ்விரு ஸித்தாந்தகளையும் சேர்த்து ஆக்ஷேபிக்கிற விசிஷ்டாத்வைதிகள், த்வைதிகள் ஆகியோர் சொல்வதுண்டு. நம் ஆசார்யாளையே மாறுவேஷத்திலிருக்கிற பெளத்தர் — "ப்ரச்சன்ன பெளத்தர்" — என்று அவர்கள் சொல்வதுண்டு. ஆனால், இந்த அபிப்பிராயம் சரியே இல்லை. பெளத்தம், அத்வைதம் இரண்டும் லோகத்தை மாயை என்று சொல்வதாலும், அத்வைதத்தில் ரொம்பவும் ஞானநிலை அடைந்தபோது அங்கே ஈச்வர உபாஸனையும் நின்றுவிடுவதாலும் இப்படி ஆசார்யாளையே "மாறுவேஷ பெளத்தர்" என்று சொல்பவர்கள் சொன்னாலும், கொஞ்சம் யோசனை பண்ணிப் பார்த்தாலும் இது ரொம்பப் பிசகு என்று தெரியும். லோகம் மாயை என்கிறபோது, ஆசாரியாள் பெளத்தர்கள் மாதிரி எல்லாம் ஒரே சூன்யம் என்று சொல்லிவிடவில்லை. லோகம் தாற்காலிக உண்மைதான். அதையே பரம ஸத்தியமாக எண்ணிவிடக் கூடாது என்றுதான் சொன்னார். மாயையான இந்த லோகம் சூனியத்தில் கரைந்து போய்விடுவதல்ல; மாறாக லோகம் நிரந்தர ஸத்யமல்ல என்று தெரிந்து கொள்கிறபோது, இந்த லோகமும் அதை மாயையாகத் தெரிந்துகொள்கிற நாமும்கூடப் பரம ஸத்யமும் பூர்ணமுமான பிரம்மமே என்று தெரியும் என்றார். பெளத்தர்களின் மோக்ஷமான நிர்வாணம் என்பது எதுவுமே இல்லாத சூனிய நிலை. ஆசார்யாளின் மோக்ஷமான அத்வைதமோ பேருண்மையாகவும், பேரறிவாகவும், பேரானந்தமாகவும், அதாவது ஸத்-சித்-ஆனந்தமாக ஆகிவிடுகிற பரிபூரண நிலை. இந்த இரண்டையும் ஒன்றென்பது தப்பு.ஆசார்யாளின் பெருமை என்ன? அவர் எல்லா மார்க்கங்களையும், ஸித்தாந்தங்களையும் ஒவ்வொரு 'லெவலி'ல் ஒப்புக்கொண்டு, இவை எல்லாமும் சேர்ந்து உச்சத்தில் ஞானமார்க்கத்தில் கொண்டு விடுகிறது என்று காட்டியதுதான். பெளத்தர்கள் வேதகர்மாக்களை விட்டவர்கள்; ஆக்ஷேபித்தவர்கள். ஆசாரியாளோ வேத கர்மாக்களை விசேஷமாக ஆதரித்தவர். "வேதோ நித்யம் அதீயதாம்; தத் உதிதம் கர்மஸு அநுஷ்டீயதாம்" என்பதுதான் அவருடைய 'உபதேச ஸார'த்துக்கு ஆரம்பமே ஆகும். ஞானம் வரும் முன்பு மனஸ் ஒருமைப்பட வேண்டும். இதற்கு பக்தி உபாஸனை அவசியம். பகவானிடம்தான் மனஸ் அப்படியே ஒருமுகப்பட்டு நிற்கும் என்பதால், பக்தியைப் பூர்வாங்கமாக விதித்தார். அதற்கும் முந்திக் கர்மாநுஷ்டானம் ரொம்பவும் அவசியம். வேதம் சொன்னபடி, கர்மாவிலேயே ஈடுபட்டிருக்கிறபோதுதான் சித்தத்தின் அழுக்குகள் போகும் என்றார். கர்மா செய்யச் செய்யத்தான் சித்த சுத்தி ஏற்படும். சித்த சுத்தி ஏற்பட்டபின் செய்கிற பக்தியால் அந்தச் சித்தமானது ஒருமுகப்படும். அப்புறம்தான், இப்படி ஒருமுகப்பட்ட மனம் தன்னையே இழந்து கொண்டு பரம ஸத்தியமான ஞானத்தில் கரைய முடியும் என்று ஆசார்யாள் வரிசைப்படுத்திக் கொடுத்திருக்கிறார்.கர்மாவைச் சொல்லும் பூர்வ மீமாம்ஸை, ஈச்வரனைச் சொல்லும் நையாயிக மதம் [நியாயக் கொள்கை], கர்மாவும் ஈச்வரனுமில்லாத பெளத்தத்தின் தியான விசாரம், எல்லாம் ஆசார்யாளின் அத்வைதத்தில் இருக்கின்றன. ஆனாலும் இவர்கள் ஒவ்வொரு லெலவலை மட்டும் பிடித்துக் கொண்டு, அந்த லெவலோடு நின்று விட்டபோது, ஆசார்யாள்தான் எல்லாவற்றையும் ஸமன்வயப்படுத்தி [இசைவித்துக்] கொடுத்தார். மற்ற ஸித்தாந்தங்கள் ஒரு லெவலில் மட்டும் நின்று விடுவதால் அவற்றோடு சண்டையும் போட்டார். வைதிக கர்மா ஆசார்யாளுக்கு ஸம்மதம்தான். ஆனாலும், 'பக்தியும் வேண்டாம், ஞானமும் வேண்டாம்' என்று பூர்வ மீமாம்ஸகர்கள் இருந்ததது அவருக்கு ஸம்மதமில்லை. 'நீங்கள் செய்கிற கர்மா தானாக பலன் தந்துகொள்ள முடியாது. கர்மா ஜட வஸ்து. ஆனதால் கர்மாவுக்குப் பலன் தருவது ஈச்வரனே. அவன்தான் லோக வியாபாரம் ஒரு ஒழுங்காக நடப்பதற்காக வேதத்தின் மூலம் கர்மாக்களையே கொடுத்திருக்கிறான். எந்தக் கர்மா செய்தாலும், அந்தப் பலனை அவனிடம்தான் ஒப்பிக்க வேண்டும் லோக க்ஷேமத்துக்காக நமக்கு அவன் தந்திருக்கிற கர்மாவை, நாம் நிஷ்காம்யமாக [ஆசை வாய்ப்படாமல்] செய்து, அவனுக்கே அர்ப்பணம் பண்ணவேண்டும், அப்படிப் பண்ணினால்தான் கர்மாவால் நமக்குக் கிடைக்கிற பலனைவிடப் பெரிதாக, இந்தக் கர்மபலத் தியாகத்தால் சித்த சுத்தி என்ற மஹா பெரிய பலன் கிடைக்கும்" என்று மீமாம்ஸகர்களுக்கு ஆச்சர்யாள் எடுத்துச் சொன்னார். அதே மாதிரி, நையாயிகர்களிடமும், "ஈச்வரன் இருக்கத்தான் வேண்டும் என்று தர்க்க ரீதியில் நிரூபித்து மட்டும் பிரயோஜனம் இல்லை. அந்தத் தர்க்கம் அநுபவமாக வேண்டும். ஈச்வரனை நேருக்கு நேர் அநுபவிப்பது என்பது, கடைசியில் அவனைத் தவிர வேறொன்றுமில்லை என்ற அநுபவத்தில்தான் கொண்டு விட்டாக வேண்டும். அதாவது, அவனுக்கு பேதமாக நாமும் இல்லை என்கிற அத்வைதாநுபவம்தான் ஈச்வர பக்தியின் முடிவு" — என்று வாதம் பண்ணி ஸ்தாபித்தார்.🙏🙏🚩🚩
No comments:
Post a Comment