Thursday, October 17, 2024

Hanuman's surrender to Rama & the benefits

மனு என்பது சமஸ்கிருத வார்த்தை, மனு என்பது மனிதனை குறிக்கும் சொல்

கவனித்தால் உலகில் முதன் முதலில் மனிதனை குறிக்கும் சொல்லாக சமஸ்கிருதம் இருந்திருக்கின்றது, அது மனு என அழைத்ததில் இருந்துதான் man, men போன்ற வார்த்தைகளெல்லாம் வந்திருக்கின்றன‌

இன்னும் ஆழமாக நோக்கினால் மனித பண்பு என சொல்லபடும் Human என்பதன்பொருள் மனித சாயல் என்பதாகும், அதாவது மனுசாயல்

Human எனும் வார்த்தையினை கொஞ்சம் கவனித்தால் அது ஹனுமன் (Hanuman) என்பதை அழகாக தொடும் , 
ஹனுமன் என்பதற்கு மானிட சாயல் கொண்டவன் என பொருள்

ஆக மனு, ஹனுமன் போன்ற வார்த்தையில் இருந்தே man, men, human போன்ற பெயர்களெல்லாம் வந்து அது பெரும்பான்மை (சீன, லத்தீன், ஆங்கிலம்,தமிழ்) மொழிகளில் அப்படியே பொருந்துகின்றது 

சீன மொழியில் மனிதன் என்றால் நன்ரன் என பெயர், அதாவது நரன் எனும் சொல்லின் திரிபு இது சமஸ்கிருத பெயர்

இதிலிருந்து என்ன தெரிகின்றது?

உலகின் மூத்த மொழி சமஸ்கிருதமாக இருக்கலாம் என்பது தெரிகின்றது அல்லது சமஸ்கிருத பாதிப்பு எல்லா மொழியிலும் உண்டு என்பதும் தெரிகின்றது

அந்த அளவு பழமையானது சமஸ்கிருதம் என்றால் இந்துக்களின் பாரம்பரியம் தொன்மையும் அதனைவிட மிக மிக பழமையானது

அப்படிபட்ட பழமையான இந்துமதத்தின் ஒரு தெய்வம் அந்த அனுமன், இன்றும் என்றும் வணங்கபடும் ஞானதத்துவம் அந்த அனுமன்

இந்துக்களின் புராணம் ஒவ்வொன்றும் ஆயிரமாயிரம் தத்துவங்கள் அடங்கிய ஞான கலைகூடம், அதன் ஒவ்வொரு சிற்பமும் ஒவ்வொரு தத்துவத்தை அழகாய் சுமந்து நிற்கின்றன‌

பல்லாயிரம் அழகிய தத்துவஞான சிற்பங்களில் அனுமனுக்குரிய இடம் மகா உயரமானது, அவனின் வாழ்வும் சஞ்சீவியாக அவன் வீற்றிருக்கும் நிலையும் வாழ்வின் மிகபெரிய தத்துவார்த்தங்களை விளக்கி நிற்பது

அவன் ராமன் முன் தன்னை புள்ளியாக குறுக்கி இருக்கலாம், ஆனால் ஆன்மீக வரலாற்றில் மாபெரும் விஸ்வரூபமாக வியாபித்து நிற்கின்றான், அவனை உயர்ந்து பார்த்தால் அவன் கால்மட்டுமே பார்த்து முடிக்கா அளவு பிரமாண்டமான விஸ்வரூபம்.

இந்து புராணத்தில் அந்த அனுமன் ஒரு அற்புத பிறப்பு, தத்துவ சிறப்பு. மாபெரும் தத்துவமெல்லாம் அவனில் அடங்கியிருக்கின்றன.

அவனை வணங்கி அவன் பக்தியில் மெல்ல நீந்துவது ஒரு சுகம், ஒரு ஏகாந்தம்.

அந்த கிட்கிந்தா அன்று மிகபெரும் வல்லரசாக அன்று விளங்கிற்று , ஆனானபட்ட ராவணனையே அசால்ட்டாக தூக்கி வந்த வீரர்களின் நாடாக இருந்தது. அனுமனும் ஜாம்பவானும் வாலியும் மாபெரும் வீரர்களாக இருந்தாலும் அங்கு ஒன்று மட்டும் இல்லாமல் இருந்தது

அதன் பெயர் நிம்மதி.

அனுமன் அன்று அந்நாட்டின் வீரர்களில் ஒருவனாயினும் தன்பலம் அறியாத யானையாய் இருந்தார், அவனைபற்றி அறிந்த ஜாம்பவானும் சரியான நேரம் வரும் வரை சொல்லவில்லை, காரணம் அதற்கு முன்பே அனுமனின் பலம் அனுமனுக்கு தெரிந்திருந்தால் காட்சிகளே மாறியிருக்கும்

காலநேரம் வாய்த்தது, அனுமன் மாபெரும் வீரனாயினும் ஒரு அவதார , உதாரண மனிதனை அவன் மனம் தேடிகொண்டிருந்தது. அந்நேரம் சுக்ரீவனும் மனைவியினை பிரிந்து அண்ணனின் துரோகத்தால் புலம்பிகொண்டிருந்த நேரம்.

அந்நேரமே ராமனும் அங்கு வருகின்றான், ராமனின் துயரமும் சுக்ரீவனின் துயரமும் ஒன்று போல் இருந்தாலும் ராமனிடம் இருந்த உயர்ந்த பண்புகளும், கலங்கா நிலையும் வீரமும் அவனை கவர்கின்றன.

தம்பியின் மனைவியுடன் ராஜ்யத்தை பறித்த வாலிமுன்னால் , ராஜ்ஜயத்தையே தம்பிக்கு கொடுத்துவிட்டு அதனால் கானகம் புகுந்து மனைவியும் பிரிந்து வரும் மாவீரன் ராமன் அவனுக்கு தெய்வமாய் தெரிகின்றான்

தம்பி மனைவியினையும் அபகரித்த அயோக்கியன் முன்னால் ராஜ்யத்தினை தம்பிக்கு விட்டு கொடுத்துவிட்டு ஏக பத்தினி விரதனாக மனைவியினை ஏங்கி தவிக்கும் ராமன் அவனுக்கு மகா உத்தமனாக தெரிகின்றான்

இப்படியும் ஒரு மனிதன் உண்டா? ராஜ்யத்தையே தம்பிக்கு கொடுக்கும் ஒரு மனம் உண்டா? அரசனில் ஒரு மனைவியோடு வாழ்பவன் உண்டா? அதுவும் மாவீரனிடம் உண்டா என்ற அந்த உணர்வில் அவன் பாதம் பணிகின்றான், பணிந்தே இருந்தான்

அந்த நிமிடமே ராமனை குருவாகவே ஏற்றுகொண்டான், அந்த குருவின் அருளில் தன்னை உணர்ந்தான், தன் பலம் உணர்ந்தான், தான் யாரென உண்மை அவனுக்கு புரிந்தது தன்னிலை அடைந்தான்.

ராமன் கால்பட்டு உயிர்பெற்றாள் அகலிகை, அதே பாதம் பணிந்து மாயை அகற்றி தன்னிலை விளங்க பெற்றான் அனுமன்

ஆம் தனக்கான குரு என ராமனை அவன் ஏற்றுகொண்ட மாத்திரத்தில் அவன் பலமும் அவன் அவதார நோக்கமும் அவனுக்கு புரிந்தது

ராமன் வாலியினை வீழ்த்தி சுக்ரீவனிடம் அரசை ஒப்படைத்து தர்மத்தை நிலைநாட்டியபொழுதும் இனி ராமனே தன் அரசன் என பணிந்து நிற்கின்றான்

தர்மம் தவறாதவன் அனுமன், சுக்ரீவனின் அரசும் மனைவியும் அவனுக்கு கிடைத்ததை போல ராமபிரான் இழந்ததும் அவனுக்கு கிடைக்க வேண்டும் என தவியாய் தவிக்கின்றான், ஆம் அவனுக்கு நன்றி இருந்தது

அந்த நிலையில்தான் ராமனுக்கு அவன் ஏதாவது செய்யதுடிக்கும் நிலையில்தான் ராமனின் அருளில்தான் அவன் யாரென அவனுக்கு உணர்த்துகின்றான் ஜாம்பவான், ராமனை அண்டியோருக்கு எல்லாம் கைகூடும் என்பது அதுதான்.

அந்த நொடியில் விஸ்வரூபம் எடுக்கும் அனுமன் சீதையினை கண்டு கொழும்பினை எரித்து ராவணனை அடித்து நொறுக்கும் நிலைக்கு வந்தாலும் ராமன் கையால் ராவணன் அழியவேண்டும் என வந்து ராமன் முன் செய்தியோடு நிற்கின்றான்

ராமனுக்கு அவன் வாழ்வில் கிடைத்த ஒரே ஒரு நல்ல செய்தி சீதை இருக்குமிடம் தெரிந்த செய்தி அந்த செய்தியினை சொன்னவன் அனுமன்

குடியும் கும்மாளமாக இருந்த சுக்ரீவனிடம் மதுவின் கொடுமையினை சொல்லி மதுசாலையினை ஒழித்தவன் அனுமன்

வரலாற்றில் மதுவுக்கு எதிராக முதலில் போராடியவனாக அவனே அறியபடுகின்றான், மதுவும் போதையும் ராமனின் வெற்றிக்கு தடையாக கூடாது எனும் எதிர்பார்ப்பில் அதனை செய்தான் அனுமன்

அத்தோடா நின்றான்?

ராமனின் ஒவ்வொரு அடியிலும் அவனோடு நடக்கின்றான், போரில் ராமன் உயிர்காக்க மலையினை தூக்கி வந்தவனும் அவனே. குருபக்தி என்றால் என்ன என்பது அங்கே விளங்கிற்று

போர் முடிந்து ராமன் அயோத்தி திரும்புகையில் தனக்கு உதவிய ஒவ்வொருவருக்கும் நாடும் பரிசும் வழங்குகின்றான், அனுமனோ எல்லாவற்றையும் மறுத்து ராமனே போதும் என அவனோடு செல்கின்றான்

அவதாரங்கள் ஒரு காலமும் தனியே வராது என்பதையும் அது அவதரிப்பதற்கு முன்னும் பின்னும் சில துணை அவதாரங்களும் தனிவரம் பெற்ற பெரும் சக்திமிக்கவர்களும் வருவார்கள் என்பதை பல இடங்களில் சொன்ன இந்துமதம் ராமாயணம் எனும் பெரும் இதிகாசத்திலும் சொல்லிற்று

வஷிஷ்டர் விஸ்வாமித்திரர் என ஞானியர் ஒருபக்கம், லட்சுமணன் போன்ற சகோதரன் ஒருபக்கம், என பல துணை சக்திகளோடு வந்த ராமனுக்கு பெரும் பலமாய் திகழ்ந்தது அந்த அனுமனின் வருகை

பல்லாயிரம் அழகிய தத்துவஞான சிற்பங்களில் அனுமனுக்குரிய இடம் மகா உயரமானது, அவனின் வாழ்வும் சஞ்சீவியாக அவன் வீற்றிருக்கும் நிலையும் வாழ்வின் மிகபெரிய தத்துவார்த்தங்களை விளக்கி நிற்பது

அவன் ராமன் முன் தன்னை புள்ளியாக குறுக்கி இருக்கலாம், ஆனால் ஆன்மீக வரலாற்றில் மாபெரும் விஸ்வரூபமாக வியாபித்து நிற்கின்றான், அவனை உயர்ந்து பார்த்தால் அவன் கால்மட்டுமே பார்த்து முடிக்கா அளவு பிரமாண்டமான விஸ்வரூபம்.

இந்து புராணத்தில் அந்த அனுமன் ஒரு அற்புத பிறப்பு, தத்துவ சிறப்பு. மாபெரும் தத்துவமெல்லாம் அவனில் அடங்கியிருக்கின்றன.

பாரதத்தில் அர்ஜூனனுக்கும் கண்ணனுக்குமான பந்தம் இத்தகையானதே, உன்னை சரணடைந்தேன் எனும் ஒப்பற்ற நிலை அது.

ராமன் அரசு ஏற்பதையும் அவன் மனைவியோடு அரியணையில் அமர்வதையும் மனமார கண்டு வணங்கி நிற்கும் அனுமனின் மகிழ்ச்சி பற்றி சொல்ல வார்த்தையில்லை என்கின்றான் கம்பன்

ராமனின் குணநலன்களால் , தான் கண்ட நல்லவன் என்பதால் தயக்கமே இன்றி அவனை தெய்வமாக ஏற்றுகொள்கின்றான் அனுமன்.

எல்லோருக்கும் எல்லாம் கொடுத்துவிட்டோமே, கூடவே இருந்தவனும் அசோகவனத்துக்கே தன்னை தேடிவந்தவனுமான அனுமனுக்கு ஒன்றும் கொடுக்கவில்லையே என வருந்திய சீதா அவனுக்கொரு முத்து மாலையினை கொடுக்கின்றாள்

அதை ஆசையாக வாங்கியவன் அதை ஒவ்வொரு முத்தாக உடைக்கின்றான், சபையோர் கண்டிக்க, சீதையே ஆத்திரபட்டு ஏன் உடைத்தாய்? ஆணவமா? கோபமா? எம் மேல் குற்றமா? என சீறுகின்றாள்

அனுமன் அமைதியாக சொல்கின்றான் "அந்த முத்துக்களில் ராமனும் சீதைபடமும் உள்ளே இருக்குமா என தேடவே உடைத்தேன், அதில் இல்லை" என்கின்றான் அனுமன்

இதென்ன பைத்தியகாரதனம்? உடைத்துவிட்டு காரணமா சொல்கின்றாய் என கேள்வி திரும்பவர, ஆம் ராமன் சீதை படம் இல்லா எதுவும் எனக்கு தேவை இல்லை என்கின்றான் அனுமன், அப்படியானால் நீ என்ன கையில் கதை வைத்திருக்கின்றாயா பரமன் படம் வைத்திருக்கின்றாயா என கேள்விவர தன் நெஞ்சை கிழித்து "இங்கிருன்றது பாருங்கள்" என அவன் சொல்லும்பொழுது சபையே அமைதியாயிற்று

ஆம் தான் கண்ட உத்தமனை தன் நெஞ்சிலே சுமந்தவன் அவன், நெஞ்சில் படமா வந்தது? அல்ல அவன் கொண்ட பக்தியினை தெய்வம் எல்லோருக்கும் காட்டிற்று.

அவன் நம்பினான் தன் நெஞ்சில் ராமனும் சீதையும் உண்டு என மனமார நம்பி தன் நெஞ்சையே கிழித்தும் காட்டினான், ராமனின் அருள் அவன் பக்தியினை உலகுக்கு மெய்பித்தும் காட்டிற்று.

அனுமனை விட இன்னொரு ராமபக்திமான் ஏது?

வைகுண்டம் செல்லும் ராமன் அவனையும் அழைக்கின்றான், "ராமா வைகுண்டத்தில் இதே ராமனாக இருப்பாயானால் வருவேன்" என்கின்றான் அனுமன், அல்ல அங்கு நான் விஷ்ணு என ராமன் சொல்ல, எனக்கு விஷ்ணு வேண்டாம் இந்த உருவமே வேண்டும், உன்னை இன்னொரு உருவத்தில் பார்க்கமாட்டேன், நான் இங்கேயே இருந்துவிடுகின்றேன் என பூமியில் அமர்கின்றான்

ஆம் நீ மாறினாலும் நான் மாறமாட்டேன் என் பக்திமாறாது என பூமியில் அமரும் அவன் சொன்னது என்னவென்றால் வைகுண்டம் சென்றால் ராமனை மறந்து பரந்தாமன் பக்தியில் கலந்துவிடுவேனே, ராமனை மறந்து அந்த ஒருவாழ்வு தேவையா? என்பதே அவன் ஏக்கமாய் இருந்தது

அவன் பக்தியில் உருகி அவனை கட்டி அணைக்கும் ராமன் அவனுக்கு நித்திய சஞ்சீவி வரத்தை அருளிவிட்டு தன் பெயர் சொல்லும் இடமெல்லாம் அனுமனும் இருப்பதாக வரமருளிவிட்டே விண்ணகம் சென்றான்

அந்த அனுமன் ஆபத்பாந்தவனாக ராம நாமம் சொல்லி தன்னை தேடுவோருக்கு நலமருளி பூமியிலே இன்னும் இருக்கின்றான், இன்றும் ராமபக்தர்களின் காவல் அவனே

செருக்குற்றோரின் ஈகோ எனும் கவுரவத்தை தற்பெருமையினை உடைப்பதில் அனுமனுக்கு அலாதி பிரியம், அவன் மாபெரும் பலசாலி என்றாலும் செருக்கு கொண்டதில்லை

ராவணின் செருக்கினை இலங்கையில் உடைத்தான், அவன் ஏற்றிவைத்த தீயில் லங்காபுரி அழிந்தபொழுது கலங்கி நின்றான் ராவணன்

மகாபாரதத்து வரும் அனுமன், பீமனின் செருக்கை உடைத்தான், அர்ஜூனனின் தலைகணத்தை
உடைத்தான்

இறுதியில் அர்ஜூனன் தேரில் கொடியாக வந்து துரியோதனின் செருக்கை கவுரவர் மொத்த செருக்கையும் உடைத்தான்

ஆம் போரில் கவுரவர்களின் குறி அர்ஜூனன் தேர் மேலே இருந்தது, அதை நொறுக்கினால் அவனை வீழ்த்தலாம் என பெரும் முயற்சி எடுத்தார்கள், அவனை காத்தது கண்ணனும் அனுமனுமே

போர் முடிந்து இருவரும் நீங்கியபின் அந்த தேர் உடனே எரிந்ததை பாரதம் சொல்கின்றது

அனுமன் வாழ்வு சொல்வதென்ன?

பெரும் பலசாலியாயினும் காலம் வரும்வரை அடங்கி இரு, உன் பலம் நல்லோருக்கு மட்டுமே பயன்பட வேண்டும்

நல்லோருடன் சேர்ந்தால் பலசாலியின் பலம் அனுமன் போல் அதிகரிக்கின்றது, செய்யகூடாதன செய்தால் பெரும் பல்சாலியாயினும் வாலிபோல் அழிவார்கள்

நிச்சயம் அனுமனின் இடம் வாலிக்குரியது, வாலியிடம் ராமன் ஒருவார்த்தை சொன்னால் ராவணனை பார்வையிலே மிரட்டி சீதையின மீட்டு கொடுத்திருப்பான் வாலி. ஆனால் அவனின் அகங்காரமும் தலைககணமும் ராமனிடம் அவனை சேரவிடவில்லை.

ஒரு அயோக்கினை அழிக்க இன்னொரு அயோக்கியனின் ஆதரவை பெற ராமனும் விரும்பவில்லை

தன்னடக்கமான அனுமன் அதைபெற்றான், ஆம் சேரிடம் அறிந்து சேர்தல் வேண்டும்

நல்லோர் காலடி பணிந்தால் ஒருவனுக்கு தான் யாரென புரியும், தன் பலம் புரியும், மாபெரும் சாதனைகளை செய்யும் பலம் வரும். ராமனை அண்டியபின் அனுமன் அதைத்தான் செய்தான்

நன்றி எனும் குணத்துக்கும் அனுமனை விட யாருமில்லை, தன்னிலை உணர செய்து தன் பலத்தை தனக்கு காட்டிய ராமனை அவன் காலமெல்லாம் பணிந்தே நின்றான்

ஞான குருவாக ராமனை ஏற்றபின் நல்லோர்க்கும் நியாய தர்மங்களுக்கு மட்டுமே தன் சக்தியினை இன்றுவரை பயன்படுத்துகின்றான் அனுமன்

அவனை அண்டிய நல்லோருக்கு இன்றுவரை பலன் கிட்டுகின்றது. தன்னிடம் வருவோர் ராமனை நினைக்க வேண்டும் என்பதற்காக எங்கெல்லாம் அவன் இருக்கின்றானோ அங்கெல்லாம் ராமனையும் சுமந்து நிற்கின்றான்

அனுமனின் வாழ்வு சொல்வது ஒன்றுதான், முழுமனதோடு ஆண்டவனை தேடினால் நியாயமான வேண்டுதல்களோடு அவன் பாதம் பணிந்தால் அது யாராக இருந்தாலும் வாழ்வு உண்டு

அந்த தேடலை தலைகணத்தினை அகற்றிவிட்டு தேடல் வேண்டும், தலைகணம் இருக்கும் யாருக்கும் கடவுள் அருள் கிட்டாது, கிட்டினாலும் நிலைக்காது

அனுமன் ஆத்திகர்களுக்கு மட்டுமல்ல, நாத்திகர்களுக்கும் பதிலே

டார்வினின் தியரிபடி குரங்கிலிருந்து மனிதன் பிறந்தான் என்பார்கள் நாத்திகர், குரங்கு குரங்காகவே இருத்தல் எப்படி என்றால் அந்த அரிதான குரங்குவகை மனிதனாய் மாறிவிட்டது என்பார்கள்

அனுமன் அந்த முன்னோர் வகையாக இருக்கலாம் என வரலாற்றில் நிற்கின்றான் சாட்சியாக‌

ஆம் விஞ்ஞானம் எப்படியும் சொல்லட்டும், அனுமனின் ஆத்தீக சாட்சி சொல்வதென்ன?

கடவுளை அண்டினால் குரங்கும் தெய்வமாகலாம்

ஆம் மனித மனம் ஒரு குரங்கு, அது ஓரிடத்தில் நிற்காது தாவிகொண்டே இருக்கும்

ஆனால் அந்த மனதை அடக்கி இறைவன்பால் முழுமையாக கொஞ்சமும் சிதறலின்றி திருப்பினால் மனிதமனம் கடவுள் வாழும் ஆலயமாகும்

அனுமனை கற்பனை என்பவர்கள் சொல்லிகொண்டிருக்கட்டும், அவனை தெய்வம் என்பவர்கள் நம்பிகொண்டிருக்கட்டும்

ஆனால் அனுமனின் தத்துவங்களை யாரும் மறுக்க முடியாது

நட்பு, பக்தி, வீரம், விசுவாசம் என எல்லாவற்றுக்கும் பெரும் உதாரணம் அவனே

பகவானை எதிர்த்து வல்லமை மிக்க பெரு வீரர்கள் எல்லாம் அழிய, அவனை அண்டிய குரங்கு தெய்வமாயிற்று என உலகுக்கு சொல்பவனும் அவனே

கர்வம் ஒரு மனிதனை அழிக்கும், கர்வமின்றி காட்டபடும் பக்தி ஒரு மனிதனை தெய்வமாக்கும் என சொல்பவனும் அவனே

நாடு நிலம் ஆட்சி அதிகாரத்துக்கு ஆசைபடாமல் உண்மை பக்தியுடன் பகவானை பின்செல்பவர் தெய்வமாவர் என சொல்பவனும் அவனே

நல்லவனாய் இரு நல்லவனோடு இரு, உனக்கான குருவுக்கு காத்துகொண்டே இரு. உண்மையான ஞான குரு வழிகாட்ட வரும்பொழுது சட்டென பிடித்து விட்டுவிடாமல் பின்செல் என வாழ்ந்து காட்டிய ஞான அடையாளமும் அவனே

மனம் ஒரு குரங்கு அதை பக்தியால் கட்டிவைத்தால் அது தெய்வமாகும் என சொல்பவனும் அவனே

சிந்திக்க சிந்திக்க மானிட வாழ்வுக்கு ஏகபட்ட தத்துவங்களை கொடுத்தவன் அனுமன் எனபது புரியும்

ஒவ்வொரு மனிதனுக்கும் கிடைக்க வேண்டியது அனுமன் போன்ற ஊழியனே, அப்படி ஒரு ஊழியன் கிடைப்பவன் உலகையே வெல்வான்

ஆம் அலுவலகத்திலோ இல்லை வேலையிடத்திலோ அனுமனாக விசுவாசமாக இருந்து பாருங்கள், உங்கள் நிலை வெகுவிரைவில் உயரும்

வேலையினை பக்தியாக செய்து பாருங்கள் பெரும் இடம் அடைவீர்கள், அனுமன் தத்துவம் அதைத்தான் சொல்கின்றது, அனுமன் என்பது "தன் வேலையில் கவனமாயிருப்பவன் அரசன் அருகில் அமர்வான்" எனும் தத்துவ வடிவம்

உழைக்கும் மானிடன் அனுமனை அனுதினமும் வணங்கி இதை மனதில் கொள்வது நலம்

ஒவ்வொரு எஜமானனும் அனுமன் போல் வேலைக்காரனை தேடவேண்டும், ஒவ்வொரு வேலைக்காரனும் அனுமன் போல் விசுவாசமாக கிடைத்தல் வேண்டும் என்பதில் இருக்கின்றது அனுமனின் பெருமை

அப்படி ஒரு அருள் இறைவனால் மட்டுமே வழங்கபட முடியும்.

அனுமனுக்கு ஏன் கோவில் அமைத்தது இந்துமதம்?

ஒவ்வொரு மனிதனும் பகவானிடம் தன்னை அனுமன் நிலையில் வைத்து வேண்டினால் , தன்னை அனுமனாக பாவித்து வேண்டினால் அவன் எல்லா நலனையும் அருள்வான் என்றே இந்துமதம் அனுமனுக்கு கோவிலை அனுமதித்திருக்கின்றது

ஆம் அக்கோவிலில் அனுமன் இடத்தில் நாம் நம் மனதை நிறுத்தி பகவானிடம் வேண்டுதல் வேண்டும், அப்படி முழுக்க சரணடைந்து பரம்பொருளை தியானித்து வேண்டல் வேண்டும்

அப்பொழுது பகவானின் அனுக்கிரகம் கிடைக்கும், அது கிடைத்த பட்சத்தில் நித்திய சஞ்சீவியான அனுமன் விஸ்வரூபமெடுத்து நம்மை காப்பான்

அனுமனை போல பக்திகொண்டு ராமநாமத்திலும் அவன் பக்தியிலும் மூழ்கினால் ஒவ்வொருவருக்கும் அனுமனை போல ஆயிரம் யானை பலம் வரும் என்பதே அவன் ஆலயம் சொல்லும் தத்துவம்.

அனுமன் என்பவன் சரணாகதியின் தத்துவம், ஒரு நல்ல குருவிடம் தன்னை ஒப்படைப்பவன் தெய்வ நிலைக்கு உயர்வான் எனும் மாபெரும் போதனையின் கண் கண்ட பிம்பம்.

நல்ல குருவிடம் தன்னை முழுமையாக ஒப்படைத்தவன், சந்தேகமின்றி அவரின் தூய பாதங்களை சரணடைந்து அதிலே காத்திருப்பவனுக்கு எல்லா நலமும் வாழ்வும் அருளும் பலமும் கிடைக்கும், குருவின் பலமெல்லாம் அவன் சீடரிலும் வெளிபட்டு நிற்கும் என்பதை உலகுக்கு உணர்த்தி நிற்பவன் அனுமன்

அவன் குருதட்சனைதான் சீதையினை சந்தித்து அவள் கொடுத்த மோதிரத்தை ராமனிடம் கொடுத்த அந்த சம்பவம், ராமனுக்கு மறுவாழ்வு கொடுத்ததே அந்த இடம்தான்

ஆம் குருவினை மனமார நம்பி பணிந்து நின்றால் மாபெரும் காரியங்களை சாதிக்கலாம், நல்ல குருவினை கொடுக்க அனுமனிடம் வேண்டுங்கள்

அந்த குரு கிடைத்ததும் அவரை அனுமன் ராமனை கொண்டாடியது போல் கொண்டாடுங்கள், ஏற்கனவே கிடைத்தவர்கள் அனுமன் போல் அவரை பின்பற்றி நிலைத்து நில்லுங்கள்.

நல்ல குருவின் அருள் கிடைத்தால் எந்த கவலை மலையினையும் சுமக்கலாம், எந்த பிறவி கடலையும் தாண்டலாம், நல்லோரின் கண்ணீரை காலமெல்லாம் துடைக்கலாம், எந்த அயோக்கியனையும் அழிக்கலாம் என்பதே அனுமரின் வாழ்வு சொல்லும் மிகபெரிய போதனை.

சுயநலம் அறவே அன்றி தெய்வத்திடம் சரணடைதல் என்பது எல்லா அதிசய கதவுகளையும் திறக்கும் சாவி என்பதை நிரூபித்து நிற்கின்றான் அனுமன்

ராமனால் சுக்ரீரிவன் நாடு அடைந்தான், விபீஷ்னனும் நாடு அடைந்தான், இன்னும் யார் யாரோ என்னவெல்லாமோ பெற்றனர், ஆனால் ராமனிடம் எதுவும் வேண்டாத, சுயநலமற்ற அனுமன் ஒருவனே பெரும் புகழையும் வல்லமையும் நித்திய சஞ்சீவி வரத்தையும் பெற்றான், அழிந்துவிடும் சாம்ராஜ்யங்களை விட இறைவன் பாதமே அழியா பெரும் நிலையினை கொடுத்து தெய்வ நிலைக்கு உயர்த்தியது.

அனுமன் ஜெயந்தியினை இவைகளை மனதால் சிந்தித்தால் எல்லா வளமும் பெறலாம், அழியா புகழோடு நித்திய சிரஞ்சீவிகோலமும் கிட்டும்

அனுமன் என்றோ வாழ்ந்துவிட்டு சென்ற வாயுபுத்திரன் அல்ல, ஏதோ ஒரு காலத்தில் ராமாயணத்திலும் மகாபாரத்திலும் வாழ்ந்துவிட்டு சென்றவனும் அல்ல‌

அவன் நித்திய சஞ்சீவி அன்றும் இன்று என்றும் ராமனின் ஆலயமும் ராமவழிபாடும் நிறைந்திருக்கும் இத்தேசத்தில் சஞ்சீவி

அனுமன் நித்திய சஞ்சீவி என்பது ஒன்றும் கற்பனை அல்ல,அது நிஜம் முழுக்க நிஜம்

எங்கெல்லாம் ராமன் நாமும் பகவான் விஷ்ணுவின் வடிவங்களும் அவன் வழிபாடுகளும் உண்டோ அங்கெல்லாம் அவன் இருப்பான்

ராமாயணத்தில் ராமனுக்கு மட்டுமல்ல, மகாபாரதத்தில் அர்ஜூனன் தலைக்கு மேல் கொடியாக மட்டும் அல்ல அவன் அன்றும் என்றும் இன்றும் இந்த தர்மத்தை காத்து வருகின்றான்

சமண பவுத்த அதர்ம காலங்களில் தன் சக்தியால் இந்துக்களை காத்தவன் அவன்

எந்த இந்துமன்னர்களெல்லாம் ஆப்கானியருக்கு எதிரான தர்மயுத்தத்தில் அவனை தேடினார்களோ அவர்களெல்லாம் வென்றார்கள்

அது நாயக்க மன்னர்கள் வெற்றியில் தெரிந்தது, அவனால் தென்னகம் மீண்டது. அந்த வெற்றிக்கு காரணமே அனுமந்தையா என்பவரின் வீரம் என்கின்றது வரலாறு

ஆப்கானியரை தீவிரமாக எதிர்த்தாலும் தொடக்கத்தில் தடுமாறினான் வீரசிவாஜி அவனுக்கு ராமதாஸர் வடிவில் வந்து ஊக்கம் அளித்து வெற்றிமேல் வெற்றி கொடுத்தது அனுமானே

ஒருகட்டத்தில் சிவாஜி மொகலாயரின் முற்றுகையில் காட்டில் சிக்கியபொழுது ஆயிரம் வானரங்கள் வடிவில் வந்து ஆச்சரியமாக மீட்டதும் அனுமானே

இந்தியாவில் இன்று ராமர்கோவில் எழுந்து ஜொலிக்கவும் அந்த "ஜெய் ஸ்ரீ ராம்" மந்திரமே காரணம் 

இன்றும் உயரபறக்கும் இந்துதேசத்தின் செயற்கை கோள்களின் சக்தி மகேந்திரகிரி மலையில்தான் தயாராகின்றது, ஆம் அனுமன் எங்கிருந்து இலங்கைக்கு வானில் தாவினானோ அந்த மகேந்திரகிரி மலை

ஆம், அனுமன் என்றும் இத்தேசத்தின் காவலன், எக்காலமும் காவலன். இந்துக்களுக்கு எதிரான போர் இங்கு எப்பொழுதெல்லாம் உண்டோ, ராமனும் கண்ணனும் தங்கள் அறப்போரால் காத்த சனாதான தர்மத்துக்கு எப்பொழுதெல்லாம் ஆபத்து உண்டோ அப்பொழுதெல்லாம் அதை காக்கத்தான் அவன் பூமியில் அழிவே இல்லாமல் சுற்றிகொண்டிருக்கின்றான்

அந்த ஆபத்பாந்தவனை "ஜெய் ஸ்ரீ ராம்" என சொல்லி அழைக்கும்பொழுதெல்லாம் ஓடிவந்து தர்மத்தை அவன் காத்து கொண்டிருக்கின்றான், அந்த மந்திரம் ஒலிக்கும் இடமெல்லாம் அவன் இருப்பான்

அந்த "ஜெய் ஸ்ரீ ராம்" ஸ்லோகம் ஓங்கி ஒலிக்கட்டும், அதில் அனுமன் எழும்பட்டும் தேசம் முழு வலிமையும் பலமும் பெறட்டும் தர்மம் துலங்கி ஒளிரட்டும்

இந்துஸ்தானத்தின் எல்லா மக்களுக்கும், அனுமன் பக்தியில் வழிவழியாய் வந்த அந்த பெரும் மக்களுக்கும், ஞானத்தின் வடிவும் பக்தியும் பெரும் வடிவும் தர்மத்தின் காவலுமான அனுமன் ஜெயந்தியின் வாழ்த்துக்கள்

No comments:

Post a Comment