Saturday, September 21, 2024

meikandaar - spiritual story

அதிகம் அறியப்படாத  ஞானி -  நங்கநல்லூர்  J K  SIVAN 

மெய்கண்டார் என்ற பேர்  தெரியுமா? கேள்விப்பட்டதுண்டா?  சத்தியமாக  எனக்கு  அவரைப் பற்றி நேற்று  சாயங்காலம் வரை தெரியாது. அப்புறம் தெரிந்து கொண்டது வியப்பு மிக்கது.
சிவஞான போதம் எழுதிய  சித்தர்,  ப்ரம்ம ஞானி.  மெய் கண்டார் என்றாலே  சத்தியத்தை,உண்மையை உணர்ந்தவர் என்று தான் அர்த்தம். அப்படியென்றால் அவருடைய பெயர் என்ன ?  யாருக்கு தெரியும்?
திருப்பெண்ணாகடம் என்ற சிவக்ஷேத்ரத்தில் அச்சுதகளப்பாளர் என்ற  தனவந்தர் வாழ்ந்து வந்தாலும் சந்தோஷம் இல்லை. என்ன இருந்தும் என்ன பயன். குழந்தை இல்லையே?
அவர் குரு சகலாகம பண்டிதர் பஞ்சாக்ஷர ஜபம் பண்ணிப்  பார்த்தார். திருமுறை படித்தார்.  அதில் சம்பந்தரின் திருவெண்காட்டுப் பதிகப்பாடல் வந்தது. "பேயடையா..." எனும் அப்பாடலில் மகப்பேறு கிடைக்கும் என்று இருந்ததால்  திருவெண்காட்டுக்கு போய்   மூன்று குளங்களில் (சோம குளம் சூர்ய குளம், அக்னிகுளம்) ஸ்னானம் பண்ணி  தியானம் பண்ணினார்.  ஒருநாள் அவர் கனவில்   ஈஸ்வரனே தோன்றி  "தேவாரம் திருமுறைகள் பாராயணம் பண்ணி  பஞ்சாக்ஷர ஜபம் பண்ணின உனக்கு சம்பந்தனைப் போல  ஒரு பிள்ளை பிறப்பான்'' என்று அருளினார். திருவெண்காட்டுக்கு  ஸ்வேதாரண்யம் என்று பெயர்.  அங்கே பிறந்த மகனுக்கு  ''ஸ்வேதவனப் பெருமான்" என்ற பெயர் வைத்தார். 
குழந்தையின் தாய் மாமன் காங்கேய பூபதி   குழந்தையைத் திருவெண்ணெய் நல்லூருக்கு எடுத்துச் சென்று வளர்த்தார். சுவேதவனருக்கு  ரெண்டு வயசில் ஒரு அதிசயம். 
கைலாசத்திலிருந்து பறந்து வந்துகொண்டிருந்த  பரஞ்சோதி  திருவெண்ணை நல்லூருக்கு மேலே வந்தபோது விமானம் தடைப்பட்டது. கீழே இறங்கிய  பரஞ்சோதி ஞானக்குழந்தையாகிய சுவேதவனரைக் கண்டு ஆசிர்வதித்து, முப்பொருள் உண்மையை உபதேசித்து, "மெய்கண்டார்" என்று  பட்டம் சூட்டினதால் நாம் இனி  ஸ்வேதவனரை மெய்கண்டார் என்று அறிவோம்.

மெய்கண்டாரின்  பன்னிரெண்டு சூத்திரங்களால்   ஆன   சைவ சித்தாந்தப் பேருண்மைகள்  தான் சிவஞான போதம். 

மெய்கண்டார்  சைவ வெள்ளாளர் குலத்தில் பிறந்து  கிபி 13 ஆம் நூற்றாண்டின் முற்பகுதியில் வாழ்ந்தவர் என்கிறார்கள். மெய்கண்டாரின் பிரதம சிஷ்யர் அருணந்தி சிவாச்சாரியார். அவரே ஒருகாலத்தில் குரு வாக இருந்த சகலாகம பண்டிதர். குரு சிஷ்யனானார். 

மெய்கண்டதேவர் ஐப்பசி மாத சுவாதி நட்சத்திரத்தில் முத்தியடைந்தார். இவரின் குருபூஜை  வருஷாவருஷம் சிறப்பாக  கொண்டாடப்படுகிறது. 
 சிவஞான போதம் என்பது என்ன?
பரஞ்சோதி  முனிவர் ஒரு அத்வைதி.  அவர் ஸ்வேதவனனுக்கு  சிவஞானத்தை  உபதேசித்து நமக்கு அவரை பிறகு மெய் கண்டாராக தந்தார். தமிழில் இது தான்  முதல் சித்தாந்த சாத்திர நூல். சிவபெருமானைப் பற்றிய ஞானம் தான் சிவஞான போதம் 12 சூத்திரங்களும் 40 வரிகளும்  கொண்ட  உயர்ந்த அத்வைத தத்வ நூல். திருவெண்ணெய் நல்லூரில் உறையும் பொள்ளாப்பிள்ளையார்  வணக்கம், அவையடக்கம் என்ற இரு பாடல்களும் கொண்டது. இரண்டு அதிகாரங்கள், நான்கு இயல்கள், பன்னிரண்டு சூத்திரங்கள் கொண்டது. 
1. பொது அதிகாரம்1. பிரமாண இயல்- 3 சூத்திரங்கள்
2. இலக்கண இயல்- 3 சூத்திரங்கள்
2. உண்மை அதிகாரம்3. சாதன இயல்- 3 சூத்திரங்கள்
4. பயனியல்- 3 சூத்திரங்கள்
இதற்கு மேல் அதற்குள் போனால் அப்புறம் நான் எதை எழுதினாலும் படிக்க மாட்டர்கள். நீங்களே  தெரிந்து கொள்ளுங்கள்.

No comments:

Post a Comment