Saturday, September 21, 2024

Thondaradipodi Azhwar

பன்னிரு ஆழ்வார்கள் : 08

தொண்டர‌டிப்பொடி ஆழ்வார் : 02

மலர்கள் அதிகாலை பூத்து மனம்வீசி நிற்பவை; அந்த மணம் நல்ல உற்சாகமும் தனிப்பெரும் சக்தியும் கொடுப்பவை.

அப்படி மலர்களை அதிகாலை பகவானுக்கு தூவி, மாலை சாற்றி வழிபட்ட விப்ரநாராயணர் பின் தொண்டரடிப்பொடியாழ்வார் என்றான பின் அதே பகவானை காலை திருப்பள்ளி  எழுச்சி பாட முனைந்தார்.

அதிகாலையிலே முதல் குரல் பகவானுக்கு தன்னுடையதாக இருத்தல் வேண்டும் என அவர் பாடினார், அற்புதமான அந்த திருப்பள்ளி  எழுச்சி பாடல்கள் அவராலே கொடுக்கப்பட்டன‌.

லௌகீகமாக திருப்பள்ளி எழுச்சி என்பது ஒருவன் அதிகாலையிலே எழுந்து தயாராகி இறைவனை வழிபடும் அவசியத்தை சொல்வது; ஆன்மீகமாக அது மனதில் இருக்கும் தெய்வத்தை உணரச்செய்வது; ஆத்மாவில் இருந்து இறைவனை மனதில் எழச்செய்யும் பாடல்.

இராமாயணத்தில் ஒரு கதை உண்டு.

ஸ்ரீ ராமபிரானை யாகத்தை காக்கும் பொருட்டு விசுவாமித்திர மகரிஷி அழைத்துச் சென்ற காலத்தில், அந்த ஸ்ரீராமர் நித்திரை செய்யும் அழகைக் கண்டு அனுபவித்து, "கௌசல்யா சுப்ரஜா ராமா" எனத் துயிலெழுப்பிய காட்சி போல் தானும் பாட விழைகின்றார்.

அதன் பெயரே பொருத்தமான தலைப்பாக மாறிவிடுகின்றது திருப்பள்ளி எழுச்சி.
இந்த திருப்பள்ளி எழுச்சியின் பெருமை கொஞ்சமல்ல‌.

"தமேவமத்வா பரவாஸுதேவம்
ரங்கேசயம் ராஜவதர்கணீயம்-
ப்ராபோதகீம் யோக்ருத ஸூக்திமாலாம்
பக்தாங்க்ரிரேணும் பகவந்த மீடே"

ஸ்ரீவைகுண்டத்தில் வீற்றிருக்கும் பரவாசு தேவனாகிய (வாஸூதேவன் என்றால் பெருமாள். பரவாஸுதேவன் என்றால் இந்த உலகிற்கெல்லாம்  அப்பாற்பட்ட, ஈரேழு உலகங்களையும் காப்பவன்,  ஆண்டு வருபவன், அதிபதி என்று பொருள் கொள்ள வேண்டும்) எம்பெருமானே ராஜாதி ராஜனாக காவேரிக் கரையில் திருவரங்கத்தில் பள்ளி கொண்டுள்ளான் என்பதை முழுமையாக உணர்ந்து அவனை துயில் எழுப்பும் பாசுர மாலையை அருளிச்செய்த தொண்டரடிப் பொடியாழ்வாரை போற்றி வணங்குகிறேன்.

ஒரு அரசனைப் போல் பூஜிக்கத் தகுந்தவரும், ஸ்ரீரங்கத்தில் பள்ளி கொண்டிருக்கும் பெருமாளுமான பரவாஸுதேவனான பெருமாளை,  திருப்பள்ளியெழுச்சி (திவ்யபிரபந்தம்) பாடி எழுப்பிய  பரமபக்தரான இந்த பக்தாங்க்ரிரேணு (பக்தாங்க்ரிரேணு என்பது தொண்டரடிப் பொடியாழ்வாரை குறிக்கும்) ஆழ்வாரை நான் துதிக்கிறேன் என  திருமலையாண்டான் 
இந்தத் தனியனில்  கூறியுள்ளார்.

"காவேரி விரஜா சேயம், வைகுண்டம் ரங்க மந்திரம், சவாசுதேவோ ரங்கேச, பிரத்யஷம் பரமம் பதம்" என்பது ஸ்லோகம்.

வைஷ்ணவர்கள் இல்லங்களில் இந்த ஸ்லோகம் தினம் காலையில் சொல்லாமல் இருக்க மாட்டார்கள்.

"பொங்கோதம் சூழ்ந்த புவனியும், விண்ணுலகும் அங்காகும் சோராமே ஆள்கின்ற எம்பெருமான் செங்கோலுடைய திருவரங்க செல்வனார் " என்று நாச்சியார் திருமொழியில் சொல்கின்றாள் ஆண்டாள்.

இந்த திருபள்ளி எழுச்சியின் பாடல்களை காணலாம்,

"கதிரவன் குணதிசைச் சிகரம் வந்து அணைந்தான   
கனை இருள் அகன்றது காலை அம் பொழுதாய்
மது விரிந்து ஒழுகின மா மலர் எல்லாம்
 வானவர் அரசர்கள் வந்து வந்து ஈண்டி
எதிர்திசை நிறைந்தனர் இவரொடும் புகுந்த
இருங் களிற்று ஈட்டமும் பிடியொடு முரசும்
அதிர்தலில் அலை-கடல் போன்றுளது எங்கும்
அரங்கத்தம்மா பள்ளி எழுந்தருளாயே  "

எம்பெருமானே, அரங்கத்து அண்ணலே, கதிரவன் கீழ்த் திசையின் உச்சியிலே வந்து சேர்ந்தான். அதனால்  மிகுந்த இருள் மெல்ல அகல்கின்றது, விடிகாலை நேரம் மலர்கள் மலர்கின்றன. தேன் அவற்றிலிருந்து ஒழுகுகின்றது.

வானவர் அரசர்கள் எல்லாரும் வந்து தங்களை வணங்க நெருங்கினர். இவர்களுடன் ஆண் யானைகளும், பெண் யானைகளும் வந்து ஒலி எழுப்புகின்றன. முரசும் முழங்குகிறது; இது கடலோசை போல் கேட்கிறது ஐயனே!! அனைவரையும் காக்க பள்ளி எழுந்தருள வேண்டும்.

அடுத்தப் பாடல்,

"சுடரொளி பரந்தன சூழ்திசை யெல்லாம்
துன்னிய தாரகை மின்னொளி சுருங்கி
படரொளி பசுத்தனன் பனிமதி இவனோ
பாயிறுள் அகன்றது பைம்பொழில் கமுகின்
மடல் இடைக் கீறி வண் பாளைகள் நாற
வைகறை கூர்ந்தது மாருதம் இதுவோ
அடல் ஒளி திகழ்தரு திகிரியந் தடக்கை
அரங்கத்தம்மா பள்ளி எழுந்தருளாயே"

எம்பெருமானே, பார்க்கும் திசையெல்லாம் சூரிய ஒளி படர்கின்றது, விண்மீன்கள் ஒளி, நிலவின் ஒளி ஆகியவை குறைகின்றது. தோட்டங்களில் உள்ள பாக்கு மரங்கள் இலைகள் விரிந்து அதன் நறுமணத்துடன் காற்று மெதுவாக வீசுகிறது. 

ஒளிவீசும் சக்கரத்தை ஏந்தும் வலிமையான கைகள் உடைய அரங்கநாதா, துயில் எழுவாய்.

இன்னும் அழகாகப் பாடுகின்றார்,

"அந்தரத்து அமரர்கள் கூட்டங்கள் இவையோ
அருந்தவ முனிவரும் மருதரும் இவரோ
இந்திரன் ஆனையும் தானும் வந்து இவனோ
எம்பெரு மானுன் கோயிலின் வாசல்
சுந்தரர் நெருக்க விச்சாதரர் நூக்க
இயக்கரும் மயங்கினர் திருவடி தொழுவான்
அந்தரம் பாரிடம் இல்லை மற்றிதுவோ
அரங்கத்தம்மா பள்ளி எழுந்தருளாயே"

அதாவது காலையிலே கோவிலின் முன் வேறு யார் யார் வந்து நெருக்கியடித்துக் கொண்டு நிற்கிறார்கள் என்று பட்டியலிடுகிறார். வானில் உள்ள தேவர்கள், சனகாதி முனிவர்கள், சப்தரிஷிகள், இந்திரன், அவரது ஐராவத யானை, யட்சர்கள் ஆகிய பலர். வானம், பூமி ஆகியவற்றின் இடமில்லாமல் இவர்கள் யாவரும் வந்து குழுமி உள்ளனர். ஆகவே பள்ளி எழுந்து கொள்வாய்.

அடுத்துப் பாடுகின்றார்,

"ஏதமில் தண்ணுமை எக்கம் மத்தளியே
யாழ்குழல் முழவமோடு இசைதிசை கெழுமி
கீதங்கள் பாடினர் கின்னரர் கெருடர்கள்
கந்தருவர் அவர் கங்குலுள் எல்லாம்
மாதவர் வானவர் சாரணர் இயக்கர்
சித்தரும் மயங்கினர் திருவடி தொழுவான்
ஆதலில் அவர்க்கு நாளோலக்கம் அருள
அரங்கத்தம்மா பள்ளி எழுந்தருளாயே"

எம்பெருமானே எழுந்து பாராய் யார் யார் வந்து நிற்கின்றனர்? கின்னரர், கருடன், கந்தர்வர்கள் ஆகியோர் பறை, ஒற்றைத் தந்தி வாத்தியம், மத்தளம், வீணை, புல்லாங்குழல் ஆகியவற்றின் உதவியுடன் இசை முழக்கம் இடுகின்றனர். 
ரிஷிகளும், தேவர்களும், சாரணர், யக்‌ஷர்கள், சித்தர் ஆகியோர் உன்னை வணங்க வந்துள்ளனர். அவர்களுக்கு நாளொலக்கம் (சிம்மாசனத்தில் அமர்ந்து எல்லோரையும் அருள்பாலித்து விசாரிப்பது) அருளுவாயாக. ஆகவே அரங்கா, பள்ளி எழுந்தருள்வாய்.

"கடிமலர்க் கமலங்கள் மலர்ந்தன இவையோ
கதிரவன் கனைகடல் முளைத்தனன் இவனோ
துடியிடையார் சுரி குழல் பிழிந்து உதறித்
துகிலுடுத்து ஏறினர் சூழ்புனல் அரங்கா
தொடையொத்த துளவமும் கூடையும் பொலிந்து
தோன்றிய தோள்தொண்ட ரடிப் பொடி என்னும்
அடியனை அளியன் என்றருளி உன் அடியார்க்கு
ஆட்படுத்தாய் பள்ளி எழுந்தருளாயே"

பகவானே, காவிரியால் சூழப்பட்ட திருவரங்கனே, தாமரைகள் மலர்கின்றன‌. சூரியன் உதிக்கின்றான். துடி (உடுக்கு போன்ற) இடை கொண்ட பெண்கள் காவிரியில் குளித்து நனைந்த முடியைப் பிழிந்து உதறிவிட்டு தன் ஆடைகளை அணிகின்றனர். நன்கு தொடுக்கப்பட்ட துளசி மாலையையும் பூக்களையும் தோளில் சுமந்த தொண்டரடிப்பொடி என்ற என்னை அடியார்க்கு அடியார் ஆக்கவேண்டும், எம் அரங்கனே பள்ளி எழுவாய்.

திருப்பள்ளி எழுச்சிபாடும் தொண்டரடிப்பொடியாழ்வார் திருமாலுக்கு "திரு மாலை" எனும் பாமாலையினை பாசுரமாக சாற்றி பாடுகின்றார்.

அது எவ்வளவு அழகானது என்றால் " திருமாலை அறியாதார் திருமாலையே அறியார் " என்று சொல்லும்படி, அதாவது தொண்டரடிப் பொடியாழ்வார் அருளிய திருமாலை என்ற பாசுரங்கள் பற்றி தெரிந்து கொள்ளாதவர்கள் அந்த எம்பெருமானைப் பற்றியே அறியாதவர்கள் என்று சொல்லும்படி உருக்கமானது.

"மற்றொன்றும் வேண்டா மனமே மதிளரங்கர்
கற்றினம் மேய்த்த கழலிணைக்கீழ்,- உற்ற
திருமாலை பாடும்சீர்த் தொண்டரடிப்பொடியெம்
பெருமானை எப்பொழுதும் பேசு"

என் நெஞ்சமே, ஏழு பதில்களை உடைய திருவரங்கத்தில் எழுந்தருளி இருப்பவனும்; பசுக்கூட்டங்களை மேய்த்தவனுமான எம்பெருமானுடைய இருதிருவடிகளிலும் ஊன்றிய பக்தியை உடையவரும்; திருமாலை என்ற இந்த பிரபந்தத்தை பாடுபவரும்; கலியாண குணங்கள் பொருந்தியவரும்; தொண்டரடிப் பொடி என்று அழைக்கப்படுபவருமான எங்களுடைய சுவாமியை எப்பொழுதும் சிந்திப்பாயாக,  அதை தவிர வேறு எது வேண்டும்?

வேதங்கள் உரைப்பதெல்லாம் ஒருவன் தன் கர்ம பலன்களாகிய பாவ புண்ணியத்தை துறந்து பகவானை அடைந்து நித்தியகாலமும் அங்கு நித்யஸூரிகளைப் போல் நிற்கவேண்டும் என்பதே, மானுட பிறப்பின் தத்துவம் அது, அந்த தத்துவத்தை போதிக்கின்றார் தொண்டரடிப் பொடியாழ்வார்.

அதையே திருமாலை என்ற இந்த திவ்யப்ரபந்தத்திற்கு மூலப்பொருள் ஆக்கினார்.

"காவலிற் புலனை வைத்துக் கலிதனைக் கடக்கப் பாய்ந்து,
நாவலிட் டுழிதரு கின்றோம் நமன்தமர் தலைகள் மீதே,
மூவுல குண்டு மிழ்ந்த முதல்வ நின் நாமம் கற்ற ஆவலிப் புடைமை கண்டாய் 
அரங்கமா நகரு ளானே"

பகவானின் திருநாமம் எம பயத்தை போக்கிவிடும் என்பதை மிக அழகாக‌ திருநாமம் கற்றதனால் எமன் தலை மீது சந்தோஷமாக சப்தம் போட்டு நடப்போம் என்று இந்த பாசுரத்தில் ஆழ்வார் சொல்கிறார். இந்த பாசுரம் திருநாமத்தின் புனிதத்தன்மையையும் நமக்கு விளக்குகிறது.

எல்லா உலகங்களையும் பிரளய காலத்திலே திருவயிற்றிலே வைத்து பாதுகாத்து பின்னர் வெளிப்படுத்திய உலகிற்கு காரணம் பூதனே, உன்னுடைய திருநாமத்தை கற்றதனால் உண்டான கர்வத்தினாலே ஐம்புலன்களையும் காவல் இல்லாமல் கண்டபடி திரிய விட்டு, அப்படி இருந்தும் பல பாவங்களையும் வாசனையுடன் உதறித் தள்ளி வெற்றி கூச்சலிட்டு எமன் அவனுடைய தூதர்கள் ஆகிய இவர்களின் தலைகளின் மேலே அடியிட்டு திரிகின்றோம் அறிவாயாக.

இன்னொரு பாடல் உண்டு.

"பச்சை மா மலை போல் மேனி பவளவாய் கமலச் செங்கண் 
அச்சுதா அமரர் ஏறே, ஆயர் தம் கொழுந்தே என்னும் 
இச் சுவை தவிர யான் போய் இந்திரலோகம் ஆளும் 
அச் சுவை பெறினும் வேண்டேன்,அரங்க மா நகருளானே"

முதல் பாசுரத்தில் திருநாம வைபவம், எம பயத்தை போக்கிவிடும் என்று சொன்ன ஆழ்வார் இந்த இரண்டாவது பாசுரத்தில் பெருமாளின் வடிவழகினை ரசித்துப் பாடுகிறார், ஏனென்றால், பயம் சென்ற பின் தான் எதையுமே ரசிக்க முடியும் என்பது உலக வழக்கு.

இப்பாடலில் ஆழ்வார் பரமபதத்தையே மறுப்பது போல் உள்ள இந்த பாசுரத்திற்கு முன்னால், பரமபதத்தை மறுத்தவர்களில் சிலர் உள்ளனர். அவர்களில் முதலாவதாக உள்ளவர், திருவடி என்று மிகுந்த பக்தியுடன் அழைக்கப்படும் ஸ்ரீ அனுமன்.

 இராமாயணத்தில், அனுமன், "பாவோ நாந்யத்ர கச்சதி " இராமனை விட்டு எனது நினைவானது வைகுந்தநாதனிடம் கூட செல்வதில்லை என்றார். இவர் வைகுந்தம் செல்லாமல், இந்த உலகத்திலேயே எங்கெல்லாம் ஸ்ரீராம நாமம் ஒலிக்கிறதோ, அங்கெல்லாம் பக்திப் பரவசத்துடன் கண்களில் நீர் மல்கக் காட்சி தந்துகொண்டு இருக்கிறார், அதைத்தான் இந்த ஸ்லோகம் சொல்கின்றது.

"யத்ர யத்ர ரகுநாத கீர்த்தனம் தத்ர தத்ர க்ருதமஸ்த காஞ்சலிம்
பாஷ்பவாரி பரிபூர்ண லோசனம், மாருதிம் நமத ராக்ஷஸாந்தகம்"

எங்கெல்லாம் ராம நாமம் அங்கெல்லாம் நான் இருப்பேன் என்கிறான் அனுமன். அதுவே தனக்கு இன்பத்தை தரும் என்றும், பரமபதம் தனக்கு வேண்டாம், ராமநாமம் இந்த பூமியில் போதும் என்பது அனுமனின் வேண்டுதல்.

அதாவது வைகுண்டத்தில் பகவானோடு இருப்பதைக் காட்டிலும் அனுமனுக்கு இங்கே அவன் நாமத்தை சொல்லித் திரிவது ஆனந்தமானது, அப்படியே வைகுண்டம் செல்லும் அளவு தான் புண்ணிவான் அல்ல என தன்னை தானே தாழ்த்தும் அந்த மனோபாவமும் உயர்ந்தது.

அந்த சாயலில்தான் பாடுகின்றார் தொண்டரடிப்பொடியாழ்வார்.

"வேத நூல் பிராயம் நூறு  மனிசர் தாம் புகுவ ரேலும்
பாதியும் உறங்கிப் போகும் நின்றதில் பதினையாண்டு
பேதை பாலகனதாகும் பிணி பசி மூப்புத் துன்பம்
ஆதலால் பிறவி வேண்டேன் அரங்கமா நகர் உளானே"

வேதங்கள் எல்லோரும் பொதுவாக நூறு ஆண்டுகள் வாழ்வார்கள் என்றும், அதில் மனிதர்கள் எவராவது நூறு ஆண்டுகள் வாழ்ந்தால், அதில் பாதியாகிய ஐம்பது ஆண்டுகள் தூக்கத்திலும், மீதி ஐம்பது ஆண்டுகளை குழந்தை, சிறுவயது மற்றும் இளமை அல்லது வாலிப வயது போன்ற பருவங்களைக் கடந்து வந்தாலும், நோய், பசி, முதுமை போன்ற கொடுமைகளுக்கு தள்ளப்பட்டு விடுவதாலும், திருநாமங்களை சொல்லி அனுபவிப்பதற்கு நேரம் இல்லாமல் மொத்த காலத்தையும் இழந்துவிடுவதால், தனக்கு இந்த பிறவி வேண்டாம் என்று அரங்கனிடம் ஆழ்வார் முறையிடும் பாசுரம் இது.

இதற்கு முந்தைய பாசுரத்தில் ஸ்ரீவைகுந்தம் வேண்டாம் என்றவர், பூலோக வைகுந்தம் எனப்படும் திருஅரங்கம் தவிர வேறு எந்த இடமும் இவ்வுலகத்தில் வேண்டாம் என்று இந்த பாடலில் சொல்கிறார்.

ஆழ்வாரைப் பொறுத்தவரை இந்த உலகத்தில் உள்ள துன்பங்களை சொல்லி பெருமானிடம் முறையிடுவதைவிட, திருநாமங்களை சொல்லும் காலம் குறைந்துவிட்டதே என்று உருகுகின்றதை தன்னுடைய அனுபவமாக சொல்லும் பாசுரம் இது.

இன்னும் பாடுகின்றார்,

"நமனும் முற்கலனும் பேச நரகில் நின்றார்கள் கேட்க 
நரகமே சுவர்க்கம் ஆகும் நாமங்கள் உடையன் நம்பி
அவனது ஊர் அரங்கம் என்னாது அயர்த்து வீழ்ந்து அளிய மாந்தர்
கவலையுள் படுகின்றார் என்று அதனுக்கே கவல்கின்றேனே"

இப்பாசுரத்தில் ஆழ்வார் தான் அரங்கனை அவன் திருநாமங்களை நினையாத, தங்கள் நாவில் நவிலாத மக்களையும், அவர்களது அறியாமையினையும் அதனால் அவர்கள் படும் துன்பங்களையும் எண்ணி, அந்த பகவான் எப்படிப்பட்ட கருணைக்கடல், பிறப்பறுக்கும் மாயப் பிரான்.

அந்த அழகன், அமுதன், அரங்கன் என்று இவன் நாமங்களை எண்ணி அடையும் நன்மைகளை இழந்து  
மாந்தர்  வீணே பிறவியை பலனின்றி போகச் செய்துஅழியும் விஷயங்களில் ஈடுபட்டு  தானும் அழிவதை எண்ணி கவலை படுகிறேன் என்று சிந்திக்கின்றார்.

இதற்கு முத்கலன் கதையினை நினைவு கூறுகின்றார், முத்கலன்  எனும் ஒரு மகாபாவி அக்காலத்தில் இருந்தான் அவனும்  தன் அந்திம காலத்தில் பகவானை அவரின் திவ்ய நாமம் சொல்லி அந்த புண்ணிய பலனாக சுவர்க்கம் பேறு பெற்று அங்கே செல்லுமுன் சில காரியங்களுக்காக முன்செய்த வினைக்காக நரகம் சென்றான்.

நரகத்தில் எமனே பூர்ணகும்ப மரியாதையுடன் வரவேற்றான், அது  கண்டு ஆச்சரியமாக கேட்டான் முக்தலன், தர்மராஜனே!! எனக்கா தாங்களே பூர்ணகும்ப மரியாதையுடன் வரவேற்பு தருகிறீர்கள்?! நானோ ஒரு மகாபாவி தண்டனை தருவீர்கள் என்று எதிர்பார்த்தேன்!! ஆனால் இது எனக்கு அதிசயமாக இருக்கிறது?

எமன் சொன்னான், பகவான் நாமத்திடம் நீர் சரணடைந்ததால் நரக தண்டனை நீங்கி வைகுண்டம் செல்கின்றீர் நாம் உம்மை அனுப்பி வைக்கின்றோம் என்றான்.

ஆம். பகவான் நாமத்தின் பெரும் பாக்கியத்தை சக்தியினை சொல்லும் காட்சி அது, அதைத்தான் பாடுகின்றார் தொண்டரடிப்பொடியாழ்வார்.

'வண்டினம் முரலும் சோலை மயிலினம் ஆலும் சோலை
கொண்டல் மீதுஅணவும் சோலை குயிலினம் கூவும் சோலை
அண்டர்கோன் அமரும் சோலை  அணி திருவரங்கம் என்னா
மிண்டர் பாய்ந்து உண்ணும் சோற்றை  விலக்கி நா(ய்)க்கு இடுமின்நீரே"

வண்டினங்கள் ஏகப்பட்ட தேனை உண்ட மயக்கத்தால் ரீங்காரமிட்டும் , மயில்கள் நர்த்தனமாடியபடியும் , மேகக்கூட்டங்கள் சூழ்ந்து கவிழ்ந்தும்  நின்றிட, குயிலினங்கள் கூவியப்படி உள்ளதுமான சோலை, பல அண்டங்களுக்கும் (உலகங்களுக்கும்) வைகுண்ட வாசம் புரிபவர்களுக்கும் அரசனான திருமால் விரும்பி அமர்ந்திட்ட சோலை, ஆபரணமாக விளங்கும் திருவரங்கம் என்று  சொல்லாத அறிவிலிகள்(நன்றி மறந்தவர்கள்) , பாய்ந்து சோற்றை மட்டும் உண்பவர்களை தவிர்த்து , நீங்கள் நா(ய்)க்கு சோற்றை இடுகின்றீர்கள் என்கின்றார்.

அதாவது திருவரங்கத்தில் இருக்கும் நாதனை பணிந்து வைகுண்டம் செல்ல வேண்டிய வாழ்வில் அவனை பற்றாமல் ஏதேதோ செய்து பிறவியினை வீணடிக்கின்றீர்கள் என்பதை இதைவிட அழகாக சொல்லமுடியாது.

"குடதிசை முடியை வைத்துக்  குணதிசை பாதம் நீட்டி
வடதிசை பின்பு காட்டித் தென்திசை இலங்கை நோக்கி,
கடல்நிறக் கடவுள் எந்தை அரவணைத் துயிலுமா கண்டு,
உடல்எனக்கு உருகுமாலோ என்செய்கேன் உலகத்தீரே"

 கடல் போல கரிய நிறம் கொண்ட ரங்கநாதனின் அழகை எப்படி சொல்லுவேன்? மேற்கில் தலையும், கிழக்கில் திருவடியும் நீட்டியபடி, வடக்கில் முதுகை காட்டி துயில்கிறான். தெற்கிலுள்ள இலங்கையைப் பார்த்தபடி இருக்கும் அவனது அழகு உருவம் கண்டு உள்ளமும், உடலும் உருகி விட்டது. செய்வதறியாமல் திகைத்து நிற்கிறேன்.

மானுடரே நீங்களும் அப்படி அவனை வந்து சரணடையுங்கள் என்பது பாடலின் பொருள்.

(குடதிசை என்றால் மேற்கு திசை காவிரித்தாய் காவேரி அங்குதான் தொடங்கும்.)

திருவரங்கத்தில் அண்ணல் எழுந்தருளும் போது இருபுறமும் அரங்கனுக்கு மாலையிட்டது போல இயற்கையிலே அமைந்து எம்பிராட்டியின் அரவணைப்பில் அரவு அணையில் துயில் கொண்டிருக்கும் அரங்கன் மேற்கில் குடதிசையில் தனது திருமுடியை வைத்து..

குணதிசை எனும் கிழக்கு திக்கில் பாதம் நீட்டி தன் திருவடி சம்மந்தத்தை தொண்டரடிப் பொடியாழ்வாருக்கு அருளியுள்ளார்.

ஆழ்வார் பிறந்த ஊர் திருமண்டங்குடி கிழக்கு திசையில் உள்ளது. தனது திருவடி அருளை மகிமையை ஆழ்வாருக்கு அருளி, தென் திசை நோக்கி விபீஷ்ணனுக்கு அருள்வது போல தனக்கும் உங்களுக்கும் அருள்வார் என்பது பாடலின் பொருள்.

"கங்கையிற் புனித மாய காவிரி நடுவு பாட்டு,
பொங்கு நீர் பரந்து பாயும் பூம்பொழி லரங்கந் தன்னுள்,
எங்கள் மாலிறை வனீசன் கிடந்ததோர் கிடக்கை கண்டும்,
எங்ஙனம் மறந்து வாழ்கேன் ஏழையே னேழை யேனே"

காவேரி முன்பு பிரம்மனிடம் கடும் தவம் புரிந்து கங்கையுடன் சமம் என்ற நிலையை அடைந்தது, பின்  ஸ்ரீரங்கவிமானம் திருவரங்கத்தில் நிறுவப்பட்ட பின் அவள் கங்கையை விட உயர்ந்தவள் என்ற பெருமையை அடைந்ததாள்.

இதனை ஒரு பாடல் சொல்கின்றது.

"கரை புரண்டு ஓடும் காவிரி ஆறே
ஆற்றிடை கிடப்பதோர் ஐந்தலை அரவே
அவ்வரவம் சுமப்பதோ அஞ்ஜன மலையே
அம்மலை பூத்ததோர் அரவிந்த வனமே.
அரவிந்த மலர் தரும் அதிசயம் உளதே"

எனும்  பிள்ளை பெருமாள் ஐயங்கார் அருளிய  இந்தப் பாடல் பிரசித்தி. அதை தனக்கே உரிய பாணியில் பாடுகின்றார் தொண்டரடிப்பொடியாழ்வார்.
                                
"ஊரிலேன் காணியில்லை உறவு மற்றொருவர் இல்லை
பாரில் நின் பாதமூலம் பற்றிலேன் பரம மூர்த்தி
காரொளி வண்ணனே என் கண்ணனே கதறுகின்றேன்
ஆருளர்க் களைகண் அம்மா அரங்க மாநகருளானே"

இங்கே மூன்று வகைகளில் சம்பந்தம் இல்லாத தன் வருந்தத்தக்க நிலையை முன் வைக்கிறார்.

முதலலாவது, தனக்கு திவ்விய தேசம் ஒன்றில் பிறந்து பரமனுக்குச் சேவை செய்யவும் வாய்க்கவில்லை என்கிறார். இரண்டாவது, (காணியில்லை) தனக்கான காணி நிலம் வாய்க்கப் பெற்றிருந்தால், அதைப் பார்க்கச் சென்று வரும் காலத்தில், இடையில் ஏதாவது திவ்ய தேசப் பெருமாளைக் கண்டு தரிசிக்க தனக்கு வாய்த்திருக்கும், அதுவும் இல்லை.

மூன்றாவது, (உறவு மற்றொருவர் இல்லை) திவ்ய தேசங்களில் வாசம் செய்யும் உறவினர்கள், நண்பர்கள் இருந்திருந்தால், அவ்வடியவருடன் சேர்ந்து ஒரு திவ்ய தேசப் பெருமாளுக்குத் தொண்டு செய்யும் பேறு தனக்குக் கிட்டியிருக்கும், ஆனால் அதற்கும் கொடுத்து வைக்கவில்லை என்று ஆழ்வார் சொல்லி, பரமனின் திருவடிகளை பற்ற முடியாத தன் கையறு நிலையை அந்தப் பரந்தாமனிடமே எடுத்துரைக்கிறார் ஆழ்வார்.

இப்படி தனக்கு எதுவும் அங்கே இல்லை என்றாலும் பரமபக்தியுடன் திருமாலிடத்தில் திளைக்கும் தன்மை அவரிடம் இருக்கிறது . இரண்டாவது, அவனை விடுத்து, வேறு ஆதரவோ, ஆதாரமோ தனக்கு இல்லவே இல்லை என்கின்றார்.

அடுத்தப்பாடல் இதோ,

"பழுதிலா ஒழுகலாற்றுப் பல சதுப்பேதிமார்கள்
இழிகுலத்தவர்கள் ஏலும் எம் அடியார்கள் ஆகில்
தொழுமினீர்! கொடுமின் கொண்மின் என்று நின்னோடும் ஒக்க
வழிபட அருளினாய் போலும் மதிள் திருவரங்கத்தானே"

அதாவது மதில் திருவரங்கத்தானே, பிரம்மன் முதல் தங்கள் அளவும் நீண்டு வருகிற வம்ச பரம்பரையில் ஒரு குற்றமும் இல்லாதவர்களாய் நான்கு வேதங்களையும் ஓதுகின்றவர்களே நமக்கு அடிமைப்பட்டவர்கள் என்று இருக்கும் பாகவதர்கள் கீழான குலத்தில் பிறந்தவர்களே ஆனாலும் நீங்கள் அவர்களை தொழுங்கள் உங்களிடம் உள்ள சிறந்த பொருள்களை அவர்களுக்கு உபதேசியுங்கள்.

அவர்களிடம் இருந்த சிறந்த பொருள் உண்டானால் கேட்டு தெளியுங்கள் என்று அருளிச்செய்து உனக்கு சமமாக அவர்களை ஆராதிக்கும் படியாக அறிவிச் செய்தாய் அன்றோ எனப் பொருள்.

இனி அடுத்தப் பாடல்

"அமரவோர் அங்கம் ஆரும் வேதம் ஓர் நான்கும் ஓதித்
தமர்களில் தலைவராய சாதி அந்தணர்களேலும்
நுமர்களைப் பழிப்பராகில் நொடிப்பதோர் அளவில் ஆங்கே
அவர்கள் தாம் புலையர் போலும் அரங்கமா நகருளானே"

அதாவது அரங்கம நகருளானே! ஒப்பற்ற ஆறு வேத அங்கங்களையும் நிகரற்ற நான்கு வேதங்களையும் நெஞ்சில் பதியும்படி ஓதி உன் அடியார்களின் முதல்வராய் பிராமண சாதியை சார்ந்தவர்கள் ஆயினும் தேவரையினுடைய அடியார்களை அவர்களுடைய பிறப்பு நோக்கி பழித்தால் அந்த நொடியிலேயே அந்த பிராமணர்கள் அப்பொழுதே சண்டாளர்களாவர் எனப் பொருள்.

தொண்டரடிப்பொடியாழ்வார் ஆழ்வார்கள் வரிசையில் உருக்கமானப் பாடல்களை பாடியவர், இன்றும் எல்லா பெருமாள் கோவில்களிலும் பாடப்படும் திருப்பள்ளி எழுச்சி அவருடையது.

தனக்கு மலர்சூட்டி அழகுபார்த்த பக்தனை காலமெல்லாம் தனக்கு திருப்பள்ளி எழுச்சி பாடும் பக்தனாக அந்தப் பெருமாள் தன் திருவிளையாடலை நடத்தி உயர்த்திய பெரும் வரலாறு அவருடையது.

திருவரங்கம் செல்லும் போது அவரை நினைந்து மலர்சாற்றி அவர் பாசுரம் பாடி வழிபடுங்கள். பலனெல்லாம் வந்து சேரும்.

அதிகாலையில் அவரின் திருப்பள்ளி எழுச்சி பாடி பகவானை வணங்கினால் போதும் அவரை முன்னிட்டு எல்லா பலன்களும் வந்து சேரும்.

தேவதேவியும் நற்கதி பெறவேண்டி அரங்கன் கோயிலில் பணிசெய்து நற்கதி அடைந்தது போல, நீங்களும் உங்களால் இயன்ற பணிகள் செய்து அரங்கன் அருள் பெற்றுக் கொள்ளுங்கள்.

"மண்டங்குடியதனை வாழ்வித்தான் வாழியே.
மார்கழியிற் கேட்டைதனில் வந்துதித்தான் வாழியே.
தெண்டிரை சூழரங்கரையே தெய்வமென்றான் வாழியே.
திருமாலையொன்பதஞ்சுஞ் செப்பினான் வாழியே.
பண்டு திருப்பள்ளியெழுச்சிப் பத்துரைத்தான் வாழியே.
பாவையர்கள் கலவிதனைப் பழித்தசெல்வன் வாழியே.
தொண்டுசெய்து துளபத்தால் துலங்கினான் வாழியே.
தொண்டரடிப் பொடியாழ்வார் துணைப்பதங்கள் வாழியே"

தொண்டரடிப் பொடியாழ்வார் திருவடிகளே சரணம்.

No comments:

Post a Comment