Tuesday, August 20, 2024

Love - Positive story

அன்பும் கருணையும்
பிறருக்கு உதவவே.

நான் காலேஜ் படிக்கும் போது நானும் என் தந்தையும் சர்க்கஸ் பார்க்க சென்றோம்.

டிக்கட் வாங்குவதற்காக வரிசையில் 
நின்று கொண்டிருந்தோம். 

கடைசியாக எங்களுக்கும் டிக்கட் கவுண்ட்டருக்கும் இடையில் ஒருவர் 
மட்டுமே நின்று கொண்டிருந்தார். 

அவருடன் வந்த அவருடைய குடும்பம் என்னை மிகவும் ஈர்த்தது. 

மொத்தம் எட்டு குழந்தைகள் இருந்தார்கள், அனைவருமே பணிரெண்டு வயதுக்கு உள்ளானவர்கள். 

அவர்கள் உடை அணிந்தவிதம் மிகவும் டாம்பிகமாக இல்லாவிட்டாலும் மிகவும் நேர்த்தியாக இருந்தது.

அந்த குழந்தைகள் மிகவும் நேர்த்தியாக நடந்து கொண்டார்கள்.வரிசையாக இரண்டு இரண்டு பேராக அவர்கள் பெற்றோர்கள் பின்னால் நின்று கொண்டு வந்தார்கள். 

அவர்கள் அங்கிருந்த மிருகங்களையும், ஜோக்கர்களின் புகைப் படத்தையும் பார்த்து ஆர்வத்துடன் பேசிக் கொண்டு வந்தார்கள்.

இன்னும் சிறிது நேரத்தில் தாங்கள் அவற்றை நேரிடையாக காணப் போவதை பற்றி பேசி மகிழ்ந்து கொண்டு வந்தார்கள். 

அவர்கள் பேச்சிலிருந்து, அவர்கள் இதுவரை சர்க்கஸுக்கு இதற்க்கு முன் வந்ததில்லை என்பது நன்றாக புரிந்தது, அவர்களுடைய மிக பெரிய வாழ்க்கை சந்தோஷமாக இதனை கருதினார்கள். 

அந்த குழந்தைகளின் பெற்றோர் மிகவும் பெருமையோடும் பூரிப்போடும்  வரிசையின் முதலில் நின்று கொண்டிருந்தார்கள். 

அந்த தாய் அவளது கணவனின் 
கைகளை நன்றி உணர்வோடு பற்றிக் கொண்டிருந்தாள். அவள் கணவன் அவனது குடும்பத்தின் சந்தோஷத்தை கண்டு மகிழ்ந்து கொண்டிருந்தான். 

கவுண்டரில் இருந்த பெண் அந்த நபரிடம் எத்தனை டிக்கட் வேண்டும் என்று கேட்டாள். உடனே அவர் குழந்தைக்கான டிக்கட் எட்டு, பெரியவர்களுக்கான டிக்கட் இரண்டு என்று கூறினார். கவுண்டரில் இருந்த பெண்ணும் அதற்கான பணத்தை கணக்கிட்டு கூறினாள்.

அவர் அவருடைய மனைவியிடம் நீ குழந்தைகளை அழைத்துக் கொண்டு முன்னே செல் என்று கூறிவிட்டு, மீண்டும் அந்த கவுண்டரில் இருந்த பெண்ணிடம் எவ்வளவு தொகை என்று கேட்டார். 

அந்த நபரிடம் போதுமான பணம் இருக்கவில்லை. அவருக்கு இந்த சூழ்நிலையை எப்படி சமாளிப்பது என்று தெரியவில்லை. சந்தோஷத்தில் இருக்கும் தன குழந்தைகளிடம் எப்படி சென்று இதனை கூறுவது என்று புரியாமல் தவித்தார். 

இதனை எல்லாம் பார்த்துக் கொண்டிருந்த என் தந்தை, அவரது பாக்கேட்டிலிருந்து ஒரு நூறு ரூபாய் தாளை எடுத்து தரையில் போட்டார். (நாங்கள் ஒன்றும் சொல்லிக் கொள்ளும் படி பெரிய செல்வந்தர் 
எல்லாம் இல்லை). 

என் தந்தை குனிந்து அந்த பணத்தை தரையில் இருந்து எடுத்து, அங்கிருந்த நபரிடம் கொடுத்துவிட்டு, "சார், 
இந்த பணம் உங்க பாக்கெட்டிலிருந்து 
கீழே விழுந்துவிட்டது" என்றார். 

அந்த நபருக்கு நன்றாக புரிந்தது என் தந்தையின் உதவும் மனநிலை. அவர் எங்களிடம் யாசகம் கேட்கவில்லை, எனினும் அந்த கையறுந்த நிலையில் அவரால் அதை மறுக்க முடியவில்லை. 

அவர் எனது தந்தையின் கண்களை நேராக பார்த்து, என் தந்தையின் இரணடு கைகளையும்  பணத்துடன் கைகளுக்குள் வைத்து கண்களில்  ஒரு சொட்டு கண்ணீர் சிந்தியவாறே, "நன்றி... மிக்க நன்றி சார், இந்த பணம் எனக்கும் என் குடும்பத்தாருக்கும்  இப்பொழுது மிகவும் மதிப்பில்லாதது" என்றார். 

நானும் என் தந்தையும் பைக்கில் வீட்டிற்கு திரும்பினோம். என் தந்தை அவருக்கு கொடுத்த அந்த பணத்தில் தான் நாங்க சர்க்கஸுக்கு போக நினைத்து வைத்து இருந்த பணம்.  

அன்றிரவு நாங்கள் சர்க்கஸுக்கு செல்லவில்லை என்றாலும், நாங்கள் அடைந்த சந்தோஷத்திற்கு, மனநிறைவுக்கும் அளவே இல்லை. 

அன்று நான் கற்றுக் கொண்டேன்.
 "பிறருக்கு உதவுவதில்" உள்ள சந்தோஷத்தின் மதிப்பை. 

அன்பு எனப்படுவது.. "பிறரிடம் இருந்து பெறுவதில் இல்லை, பிறருக்கு கொடுப்பதிலேயே உள்ளது". 

katherine Hepburn என்பவரின்
ஆங்கில பதிவு.தமிழாக்கம் நண்பர்.. மனோகர்

No comments:

Post a Comment