Saturday, March 30, 2024

Poonthanam

மோதிர அதிசயம் – நங்கநல்லூர் J K SIVAN
உங்களுக்கு தான் தெரியுமே. நம் ஊரில் எண்ணற்ற சிதம்பரம், பழனி, மதுரை என்று ஊர்கள் பெயர் கொண்ட எத்தனையோ மனிதர்கள் இருப்பது போல் மலையாள தேசத்தில் வீட்டுப் பெயர் கொண்ட நிறைய பேர் இருக்கிறார்கள். மலப்புரம் அருகே கீழாத்தூர் என்கிற ஊரில் இப்படி பூந்தானம் என்ற வீட்டு பெயர் கொண்ட ஒருவர் இருந்தார். அவருக்கு பெற்றோர் வைத்த பெயர் யாருக்கும் தெரியவில்லை. பரம கிருஷ்ண பக்தர். பக்கம் பக்கமாக நிறைய கிருஷ்ணன்மீது இனிமையாக மலையாளத்தில் ஸ்லோகங்கள் எழுதிக் குவித்தவர். பாவம் ஒரு குறை அவருக்கு வெகுநாளாக. மடியில் வைத்துக் கொஞ்ச ஒரு பிள்ளை இல்லையே?.கிருஷ்ணனிடம் முறையிட்டால் வீண் போகுமா? ஒரு பிள்ளை பிறந்தான். அவனுக்கு தக்க பிராயத்தில் அன்ன பிராசனம் ஏற்பாடு தடபுடலாக நடந்தது. சில நேரங்களில் நமது வாழ்க்கையில் கொஞ்சம் கூட எதிர் பாராத சில நிகழ்வுகள் ஏற்பட்டு நாம் நிலை குலைந்து போகிறோமல்லவா? இத்தகைய ஒரு இக்கட்டான சூழ்நிலை பூந்தானத்தையும் விடவில்லை.
சொந்தம், சுற்றம், அக்கம் பக்கம் எல்லாரையும் கூப்பிட்டு அனைவரும் அனைவருமே வந்தாயிற்று. ஜே ஜே என்று ஜனங்கள் எல்லாரும் கூடியிருக்க அன்ன பிராசனம் நடக்க வேண்டிய நேரத்துக்கு ஒரு மணி முன்பாக அந்த குழந்தை இறந்து விட்டது. எவ்வளவு பெரிய பேரிடி. எப்படி பட்ட சோகம்??
"என்னப்பனே கிருஷ்ணா என்னடா இது? கதறினார் பூந்தானம் கிருஷ்ணனிடம்.
குருவாயூரப்பன் என்ன செய்தான்?
"பூந்தானம் உனக்கு கவலையே வேண்டாம். நானே உங்கள் பிள்ளை இனிமேல், எங்கே உங்கள் மடி, காட்டு வந்து உட்காருகிறேன்
குட்டி கிருஷ்ணன் பூந்தானம் மடியில் வந்து அமர்ந்து கொண்டான். "படுத்து கொள்ளட்டுமா" என்றான். தன்னை மறந்து ஆனந்த பரவசத்தில் பூந்தானத்தின் உள்ளத்திலிருந்து தெள்ளிய எளிய மலையாள கவிதை பிறந்தது.
"நம் உள்ளத்தில் என்றும் வந்து நடமாட கிருஷ்ணன் இருக்கும் போது தனியாக நமக்கு என்று ஒரு பிள்ளை எதற்கு?"என்று பூந்தானம் மனம் அமைதிகொண்டதும் கடல் மடையென்ன கவிதை பிறந்து அனைவரும் அந்த பக்த ரசத்தில் மூழ்க இது ஒருவருக்கு பிடிக்க வில்லை. அவர் தான் நாராயணீயம் எழுதிய பிரபல மேல்பத்தூர் நாராயண பட்டத்ரி தான் அவர். குருவாயுரப்பன் மீது நாராயணீயம் எழுதியவர்.
"இவனெல்லாம் ஒரு கவிஞனா சம்ஸ்க்ரிதம் தெரியாதவன், இலக்கணம் தெரியாதவன்" என்று பூந்தானத்தை இகழ்ந்தார். குருவாயூரில் குடி கொண்டுள்ள கிருஷ்ணனுக்கு இது பிடிக்குமா? சும்மா இருப்பானா? என்ன செய்தான் தெரியுமா?
அடுத்த தடவை பட்டாத்ரி குருவாயூரில் தரிசனம் செய்ய வந்தபோது
"பட்டத்ரி, நான் சொல்கிறேனே என்று வருத்தப் படாதே. எனக்கென்னமோ உன் ஸம்ஸ்க்ரித இலக்கணம் தோய்ந்த ஸ்லோகங்களை காட்டிலும் பூந்தானத்தின் மலையாள பாஷையில் உள்ள பக்தி பூர்வ ஸ்லோகங்கள் ரொம்ப பிடிக்கிறதே நான் என்ன செய்யட்டும்" என்றான் கிருஷ்ணன். அதற்கப்பறம் பட்டத்ரி ஓடிச் சென்று பூந்தானத்தின் காலில் விழுந்து மன்னிப்பு கேட்டார் என்பது சாதாரண விஷயம்.
பூந்தானத்துக்கு ஸ்ரீமத் பாகவத பாராயணம் பரம சந்தோஷமான விஷயம். அவரிடமிருந்து பாகவத புஸ்தகத்தை பிரிக்கவே முடியாது. முடிந்த போதெல்லாம் தனது 90 வயசிலும், நூற்றுக்கணக்கான மைல்கள் நடந்து குருவாயூர் போய் தரிசனம் செய்வார். அக்காலத்தில் நடந்து போகும்போது இருட்டு, காட்டுப்பாதையில் தான் நடக்கவேண்டும். இப்போது போல் பாதைகளோ தெரு விளக்கோ, சௌகர்யங்களோ கிடையாது. கள்வர்,கொள்ளைக்காரர்கள் பயம் எல்லோருக்கும் உண்டு. பகலில் நடப்பதற்கே பயந்து கொண்டு தான் நடப்பார்கள்.
ஒருநாள் பூந்தானம் குருவாயூருக்கு நடக்கும்போது வழியில் சில கள்வர்கள் பூந்தானத்தை வழிமறித்தார்கள். தன்னிட
மிருந்த ஒரு மோதிரம், சொல்ப பணத்தை கொடுத்துவிட்டார். அவர் தோளில் ஒரு சிறிய பை தொங்குவதைப் பார்த்த கள்வர்கள் அதை பிடுங்கிக் கொண்டார்கள். கதறினார் பூந்தானம். அது அவரை ஒரு வினாடி நேரமும் பிரியாத ஸ்ரீமத் பாகவத புத்தகம். அது தான் அவர் சொத்து. அதை கள்வர்களிடம் பறிகொடுக்க அவர் விரும்பவில்லை.
"ஐயா, அந்த பையில் இருப்பது என்னுடைய பாராயண புத்தகம், ஸ்ரீமத் பாகவதம். வேறு ஒன்றுமில்லை. தயவு செய்து என்னிடம் கொடுங்கள்"
"அந்த புத்தகத்தில் ஏதோ ரகசியமாக ஒளித்து வைத்திருக்கிறான், அதனால் தான் அதைக்கொடுக்க மறுக்கிறான்" என்று கள்வர்கள் அதைத் திரும்ப தரவில்லை.
வேறு வழியின்றி " ஹரே கிருஷ்ணா, என் செல்வமே, ஆபத் பாந்தவா, நீ தான் எனக்கு உதவவேண்டும். உன்னைப்பற்றிய அந்த புத்தகம் எனக்கு எப்போதும் வேண்டுமே. தெய்வமே அதை மீட்டுக்கொடு " என்று கதறினார்.
அமைதியான அந்த காட்டுப் பகுதியில் எங்கோ குதிரையின் குளம்பு ஒலி கேட்டது. அடுத்த சில நிமிஷங்களில் ஒரு குதிரை வீரன் ஆயுதங்களோடு அங்கே தோன்றினான். கள்வர்கள் அவனை எதிர்கொள்ள முயற்சிப்பதற்குள் அத்தனைபேரையும் தாக்கி காயப்படுத்தினான் அந்த வீரன். அவனிடமிருந்து தப்பினால் போதும் என்று பூந்தானத்திடம் திருடிய அனைத்து பொருள்கள் அந்த புத்தகப்பை எல்லாவற்றையும் அவரிடமே போட்டுவிட்டு இருளில் கள்வர்கள் ஓடிவிட்டார்கள்.
ஆச்சர்யத்தோடு அந்த வீரனை வணங்கிய பூந்தானம் "ஐயா, தெய்வம் போல் வந்து எனக்கு உதவிய நீ யாரப்பா?"என்று கேட்டார்.
"நான் இந்த ஊர் ராஜாவின் ஒரு மந்திரி. இந்த பகுதி வழியாக வந்தபோது உங்கள் குரல் கேட்டு ஏதோ ஆபத்து என்று இங்கே வந்தேன். நான் போய் வருகிறேன்" என்று சொன்னான் அந்த குதிரை வீரன்.
"ஐயா , தயவு செய்து என் நன்றி காணிக்கையாக நான் கொடுக்கும் இந்த ஒரு சிறு வஸ்துவை நீங்கள் ஏற்று அங்கீகரிக் கவேண்டும்" என்று ஒரு சிறு மோதிரத்தை (கள்வர்கள் கவர்ந்து திருப்பி கொடுத்ததை) அந்த வீரனிடம் கொடுத்தார் பூந்தானம்.
"சரி அப்படியே ஆகட்டும்" என்று அந்த குதிரை வீரன் சிரித்துக்கொண்டே ஏற்று அந்த மோதிரத்தை தனது விரலில் அணிந்து கொண்டான்.
"குருவாயூர் நீங்கள் போகும்வரை உங்களுக்கு ஒரு ஆபத்தும் வராமல் நான் பாதுகாப்பேன். நீங்கள் பயமில்லாமல் செல்லலாம்" என்று சொல்லிவிட்டு குதிரை மேல் சென்றுவிட்டான் அந்த வீரன்.
குருவாயூரில் பிரதம அர்ச்சகர் கனவில் அன்றிரவு குருவாயூரப்பன் தோன்றி "நாளை கோவிலில் என் ஒரு விரலில் ஒரு மோதிரம் இருப்பதைக் காண்பீர்கள். அதை நாளை கோவிலுக்கு வரும் பூந்தானம் என்பவரிடம் கொடுத்துவிடவும் "என்று கட்டளையிட்டான்.
ஆச்சர்யத்தில் திளைத்து, திகைத்து, விழித்துக்கொண்ட அர்ச்சகர் அப்புறம் தூங்கவில்லை. எப்போது பொழுது விடியும் என காத்திருந்து சந்நிதிக்கு வழக்கமான நேரத்தில் ஓடினார். சந்நிதியை திறந்து முதலில் குருவாயூரப்பன் கை விரல்களை கவனித்தார். "அட, குருவாயூரப்பன் கனவில் சொன்னபடியே அவன் ஒரு மோதிரத்தை விரலில் அணிந்திருப் பதைக் கண்டு அதிசயித்தார். ஜாக்கிரதையாக அதை கழற்றி வைத்துக்கொண்டு பூந்தானம் வருவதற்கு ர காத்திருந்தார்.
"ஹரே கிருஷ்ணா, ஹரே கிருஷ்ணா" என்று கண்களில் ஆனந்த கண்ணீருடன் பூந்தானம் தரிசனம் செய்தபோது அர்ச்சகர் அவரிடம் வந்து,
"ஸ்வாமி , இந்தாருங்கள் குருவாயூரப்பன் இதை உங்களிடம் தரச் சொன்னான்"
மோதிரத்தை கொடுத்து, நடந்ததைச் சொன்னபோது, "அட இது என் மோதிரமாயிற்றே, , நான் ஒரு குதிரை வீர மந்திரிக்கு அல்லவோ நேற்று கொடுத்தேன். அது எப்படி இங்கே வந்தது? என்று யோசித்தார். பரம கிருஷ்ண பக்தரான பூந்தானத் துக்கு குதிரை வீரனாக வந்து கூப்பிட்ட குரலுக்கு உதவியவன் குருவாயூரப்பனே என்று புரிந்தது. ஆனந்தத்தில் பேச முடியவில்லை. கண்ணீர் பெருகியது.
ஸ்ரீமத் பாகவதத்தில் 11.19.9ல் ஒரு ஸ்லோகம் :
तापत्रयेणाभिहतस्य घोरे सन्तप्यमानस्य भवाध्वनीश । पश्यामि नान्यच्छरणं तवाङ्‍‍घ्रि-द्वन्द्वातपत्रादमृताभिवर्षात् ॥ ९ ॥
tāpa-trayeṇābhihatasya ghore santapyamānasya bhavādhvanīśa paśyāmi nānyac charaṇaṁ tavāṅghri-dvandvātapatrād amṛtābhivarṣāt
தாப-த்ரயேணாபிஹதஸ்ய கோரே சாந்தாப்யமானஸ்ய பவத்வநீஷ பஷ்யாமி நாந்யச் சரணாம் தவங்ரி-
த்வந்த்வதபத்ராத் அம்ருதாபிவர்ஷாத்"
"ஹே கிருஷ்ணா, ஜென்ம மரண உபாதைகளில் அவதிப்பட்டு உழல்கிறேன். சகல துன்பங்களையும் சந்திக்கிறேன். நிர்க்கதியாக நிற்கும் எனக்கு உன் தாமரைப் பாதங்கள் எப்படி ஆனந்தமானவை தெரியுமா? அம்ருத மழையில் நனையும்போது உன் தாமரைப் பாதங்கள் தான் எனக்கு அம்ருதம் சொட்டும் குடை மாதிரி."🎉8

No comments:

Post a Comment