Saturday, March 30, 2024

4 vedas - sivavakkiyar

சிவவாக்கியர்  -  நங்கநல்லூர்  J K  SIVAN

பொன்னில்  வடித்த எழுத்து

சிவ வாக்கியர் ஒரு தனி ரக ஞானி. அவரது பாடல்கள்  ஒரு  தெளிந்த, ஆழமான,  நீரோடை போல சலசல என்று  ஒரே சீராக ஓடுபவை.  ஆழ்ந்து சிந்திக்க வைக்கும் கருத்து, தத்துவம் எல்லாம் ரொம்ப  எளிய தமிழில்  நாலே வரியில் தருவார்.
ஒரே வரி  ரெண்டு தடவை  திரும்பவும் வந்தாலும் அர்த்தம்  பிரமாதம். ஒரு சில சாம்பிள் பாடல்கள் படித்தாலே  அவர் திறமை புரியுமே.  ஒரு பானை சோற்றுக்கு  ஒரு சோறு  பதம் இல்லையா?

''ஸார்,  நான் நாலு வேதமும் படிச்சவன் என்று மார் தட்டிக் கொள்வோர்களில் ஒருவர்  எனக்குத்தெரிந்த  கிழக்கு தெரு மூணாம் நெம்பர்  வீட்டில் வாசலில் திண்ணையில் எப்போதும்   சீட்டாடிக்கொண்டு  நாலு பேரோடு  வம்படிக்கும் சுப்ரமணிய  சர்மா.  பிறர் தன்னை  அதிகம் படித்தவன்  விஷயம் தெரிந்தவன் என்று சொல்ல வேண்டும் என்று ஆசைப்படுபவர்.  சொல்ல வைப்பவர்.  தனக்கு எல்லாம் தெரியும் என்கிற மமதை  அவரிடம் ஏராளம் இருந்ததில் என்ன ஆச்சர்யம்.
வேதத்தின் உட்பொருளான பிரம்மத்தை, பரம்பொருளை,  அறிந்தவர் எத்தனை பேர்?  
ஞானத்தை தரும் பரமனின் திருவடிகளை அதில் உணர்ந்து வணங்குபவர் எத்தனை பேர்?
வேதம் என்ற எழுத்தும் அதை மனதில் நெட்டுரு போட்ட தும் மட்டுமே அறிந்த முட்டாள்களே, உங்கள் செயல் எது போல தெரியுமா?   பால் தெரிகிறது, அதை பார்க்கும்  போதெல்லாம் அதனுள் தான்  தயிர்  வெண்ணெய் நெய்  எல்லாம் மறைந்திருக்கிறது என்ற எண்ணம், உண்மை மனதில் தோன்றாதவர்களைப்  போல.

மறையில் மறைந்திருக்கும் மாயவனை அறிந்து போற்றி வணங்கவேண்டும்.  தனது நெஞ்சிலே நஞ்ஜை நிறுத்திக் கொண்ட  நீல கண்டன் நமது நெஞ்சிலேயும் உள்ளானே. அந்த ஹாலஹால விஷமுண்ட  காலகாலனை அறவே மறந்துவிட்டு, ஐயோ காலன் வந்துவிடுவான்,ஆயுளைப்  பறித்துக்கொண்டு போய்விடுவான் என்று  அஞ்சி நடுங்கி ஓடுகிறீர்களே,  கால சம்ஹார மூர்த்தியை நினைத்தால்  கனவிலும் காலன்  நெருங்கமாட்டானே,  வேடிக்கையாக இருக்கிறதா?
பாரதி சொன்னானே  ''காலா என்னருகில் வா உன்னை என் காலால் உதைக்கிறேன்''  என்று அந்த  தைர்யம் வேண்டாமா நமக்கு? என்கிறார்  சிவ வாக்கியர்.                                
                                                           
''நாலுவேதம் ஓதுவீர் ஞான பாதம் அறிகிலீர்
பாலுள் நெய் கலந்தவாறு பாவிகாள் அறிகிலீர்
ஆலம்உண்ட கண்டனார் அகத்துளே இருக்கவே
காலன் என்று சொல்லுவீர் கனாவிலும் அதில்லையே''
 
இன்னும் கொஞ்சம் உயர்ந்த யோக தத்வமும்   சொல்கிறார் சிவவாக்கியர்.   ப்ரம்ம  ஞானி யார்?  பிறக்கும் போதிலிருந்து  உள்ளே விளங்குகின்ற நாடி, பிராணனை, தூங்குகின்ற பாம்பாக சொல்வார்களே, அந்த குண்டலினியை பிராணாயாமத்தால் மூலாதார  சக்கரத் திலிருந்து மெள்ள மேலே எழுப்பி உச்சந்தலை  கபாலத்தில் உள்ள சஹஸ்ராரம் வரை கொண்டு சென்று  தாமரைத்  தேன் துளிகளை, அம்ருதத்தை ருசிப்பவன். அப்படிப்பட்ட யோக சக்தி கொண்ட யோகி, வயதற்றவன், விருத்தாப்பியனாகவோ, பாலகனாகவோ,  எப்படி இருந்தாலும்  அவன்  தேகம்  எப்போதும் ஜொலிக்கும்.   
காஞ்சி  மஹா பெரியவா பரமாச்சார்யரை   பார்த்திருக்கி றீர்களா?  --,அவர் தேகத்தை போல  தங்கமாக ஜொலிக்கும்.   அப்படியென்றால்  கல்ப கோடி வருஷம்  தவயோகியாக  உள்ள  பரமேஸ்வரனை ''பொன்னார் மேனியனே'' என்று  மனக்கண்ணால் கண்டு  ஏன் பாடினார்கள் என்று புரிகிறதா.  சிவன்  சதாசிவன். சதா த்யானத்தில்  மோனத்தவத் தில் லயிப்பவன்.  ஆனந்த  தாண்டவராயன்.
இது கற்பனை அல்ல. சர்வ சத்தியம், சத்தியம் சத்தியம் -  அந்த சிவன் மேல், பார்வதி  மேல் சத்தியம் என்கிறார்  சிவவாக்கியர்.             
 ''உருத்தரித்த நாடியில் ஓடுங்குகின்ற வாயுவைக்
கருத்தினால் இருத்தியே கபாலம் ஏற்ற வல்லீரேல்
விருத்தரும் பாலராவர் மேனியும் சிவந்திடும்
அருள் தரித்த நாதர் பாதம் அம்மை பாதம்உண்மையே.''

No comments:

Post a Comment