Monday, January 22, 2024

Mahabharatam in tamil 314

மஹாபாரதம்(முழுவதும்)-பாகம்-314
துரோண பர்வம்
….
விளக்குகளால் ஒளியூட்டப்பட்ட படைகள்
..
சஞ்சயன் {திருதராஷ்டிரனிடம்} சொன்னான், "ஓ! ஏகாதிபதி {திருதராஷ்டிரரே}, மன்னன் யுதிஷ்டிரனும், பாண்டுவின் மகனான பீமசேனனும் துரோணரின் மகனை {அஸ்வத்தாமனை} அனைத்துப் பக்கங்களிலும் சூழ்ந்தனர்.(1) இதைக் கண்ட மன்னன் துரியோதனன், பரத்வாஜர் மகனின் {துரோணரின்} துணையுடன் அம்மோதலில் பாண்டவர்களை எதிர்த்து விரைந்தான். அப்போது, கடுமையானதும், பயங்கரமானதும், மருண்டோரின் அச்சங்களை அதிகப்படுத்துவதுமான போரொன்று தொடங்கியது.(2) கோபத்துடன் கூடிய யுதிஷ்டிரன், பெரும் எண்ணிக்கையிலான அம்பஷ்டர்கள், மாலவர்கள், வங்கர்கள், சிபிக்கள் மற்றும் திரிகர்த்தர்களை இறந்தோரின் ஆட்சிப்பகுதிகளுக்கு அனுப்பத் தொடங்கினான். பீமனும், அபிஷாஹர்கள், சூரசேனர்கள், போரில் வீழ்த்தக் கடினமான மற்றும் பிற க்ஷத்திரியர்களைச் சிதைத்து, பூமியை இரத்தச் சகதியாக்கினான். ஓ! மன்னா {திருதராஷ்டிரரே}, வெண்குதிரைகளைக் கொண்டவனும், கிரீடத்தால் அலங்கரிக்கப்பட்டவனும் ஆனவன் (அர்ஜுனன்), யௌதேயர்கள், மலையகத்தார், மத்ரகர்கள் மற்றும் மாலவர்களையும் இறந்தோரின் உலகங்களுக்கு அனுப்பினான்.


வேகமாகச் செல்லக்கூடிய கணைகளால் பலமாகத் தாக்கப்பட்ட யானைகள், இரு சிகரங்களைக் கொண்ட மலைகளைப் போலப் பூமியில் கீழே விழத் தொடங்கின.(3-6) நடுக்கத்துடன் நகர்ந்து கொண்டேயிருந்த வெட்டப்பட்ட யானைகளின் துதிக்கைகளால் விரவிக்கிடந்த பூமியானது, நெளியும் பாம்புகளால் மறைக்கப்பட்டதைப் போல அழகாகத் தெரிந்தது.(7) தங்கத்தில் அலங்கரிக்கப்பட்டவையும், விழுந்து கிடந்தவையுமான மன்னர்களின் குடைகளால் மறைக்கப்பட்ட பூமியானது, சூரியன்கள், சந்திரன்கள், நட்சத்திரங்களால் மின்னிக்கொண்டிருக்கும் ஆகாயத்தைப் போலப் பிரகாசமாகத் தெரிந்தது.(8)

அதே நேரத்தில், துரோணரின் தேரருகே கடும் ஆரவாரம் எழுந்து, "கொல்வீராக", "அச்சமற்றுத் தாக்குவீராக", "துளைப்பீராக", "துண்டுகளாக வெட்டுவீராக" என்ற இந்த வார்த்தைகள் கேட்கப்பட்டன. எனினும் சினத்தால் நிறைந்த துரோணர், வலிமைமிக்கச் சூறாவளியானது, திரண்டு வரும் மேகத்திரள்களை அழிப்பதைப் போலத் தம்மை நோக்கி வந்த எதிரிகளை, வாயவ்ய ஆயுதத்தின் மூலம் அழிக்கத் தொடங்கினார். இப்படித் துரோணரால் கொல்லப்பட்ட பாஞ்சாலர்கள், பீமசேனனும், உயர் ஆன்ம பார்த்தனும் பார்த்துக் கொண்டிருக்கும்போதே அச்சத்தால் தப்பி ஓடினர்.(9-11)

அப்போது, கிரீடத்தால் அலங்கரிக்கப்பட்டவனும் (அர்ஜுனனும்), பீமசேனனும், ஓடிக் கொண்டிருக்கும் தங்கள் துருப்புகளைத் தடுத்து, பெரும் தேர்ப்படையின் துணையுடன் துரோணரின் பரந்தப் படையைத் தாக்கினர்.(12) பீபத்சு {அர்ஜுனன்} வலதையும், விருகோதரன் {பீமன்} இடதையும் எனத் தாக்கிய அவர்கள் இருவரும் [1], பரத்வாஜரின் மகன் {துரோணர்} மீது இரு கணைமாரிகளைப் பொழிந்தனர்.(13) சிருஞ்சயர்கள், பாஞ்சாலர்கள் ஆகியோரில் வலிமைமிக்கத் தேர்வீரர்கள், மத்ஸ்யர்களுடனும், சோமகர்களுடனும் கூடி, (துரோணருடனான மோதலில்) ஈடுபட்டுக் கொண்டிருந்த அந்த இரு சகோதரர்களையும் பின்தொடர்ந்து சென்றனர். அதே போல, உமது மகனை {துரியோதனனைச்} சேர்ந்தவர்களும், தாக்குவதில் திறம்பெற்றவர்களும், தேர்வீரர்களில் முதன்மையானோருமான பலர், பெரும் படையின் துணையுடன், (துரோணரை ஆதரிப்பதற்காக) துரோணரின் தேரை நோக்கிச் சென்றனர்.(14,15)

[1] வேறொரு பதிப்பில், "அவர்கள் பாரத்வாஜர் மீது தென்பக்கத்திலும் வடபக்கத்திலும் இரண்டு பெரிய அம்பு வெள்ளத்தால் வர்ஷித்தார்கள்" என்றிருக்கிறது.

அப்போது, கிரீடத்தால் அலங்கரிக்கப்பட்டவனால் (அர்ஜுனனால்) கொல்லப்பட்ட அந்தப் பாரதப் படையானது, உறக்கத்தால் வெல்லப்பட்டும், அந்த இருளால் பீடிக்கப்பட்டும் பிளக்கத் தொடங்கியது.(16) உமது மகன் {துரியோதனன்} மற்றும் துரோணர் ஆகிய இருவரும் அவர்களை அணிதிரட்ட பெருமுயற்சி செய்தனர்.(17) எனினும், ஓ! மன்னா {திருதராஷ்டிரரே}, அந்தத் துருப்புகள் ஓடுவதைத் தடுக்க முடியவில்லை. உண்மையில், அந்தப் பரந்த படையானது, பாண்டு மகனின் {அர்ஜுனனின்} கணைகளால் கொல்லப்பட்டு, உலகமே இருளில் மூழ்கியிருந்த அந்த நேரத்தில் அனைத்துத் திசைகளிலும் தப்பி ஓடத் தொடங்கியது.(18) ஓ! ஏகாதிபதி {திருதராஷ்டிரரே}, விலங்குகளையும், தாங்கள் ஏறிச் சென்ற வாகனங்களையும் கைவிட்ட மன்னர்கள் பலர், அச்சத்தால் வெல்லப்பட்டு அனைத்துப் பக்கங்களிலும் தப்பி ஓடினர்" {என்றான் சஞ்சயன்}.19

சஞ்சயன் {திருதராஷ்டிரனிடம்} சொன்னான், "சோமதத்தன் தன் பெரிய வில்லை அசைப்பதைக் கண்ட சாத்யகி, தன் சாரதியிடம், "சோமதத்தனை நோக்கி என்னைக் கொண்டு செல்வாயாக.(1) ஓ! சூதா, குருக்களில் இழிந்தவனும், பாஹ்லீகன் மகனுமான அந்த எதிரியை {சோமதத்தனைக்} கொல்லாமல் நான் இன்று போரில் இருந்து திரும்புவதில்லை என்று உனக்கு நான் உண்மையாகவே சொல்கிறேன்" என்றான்.(2) இப்படிச் சொல்லப்பட்ட அந்தத் தேரோட்டி, சிந்து இனத்தில் பிறந்தவையும், சங்கு போன்ற வெண்ணிறம் கொண்டவையும், அனைத்து ஆயுதங்களையும் தாங்க வல்லவையும், வேகமானவையுமான அந்தக் குதிரைகளைப் போருக்குத் தூண்டினான்.(3) காற்று, அல்லது மனோ வேகம் கொண்ட அந்தக் குதிரைகள், பழங்காலத்தில் தானவர்களைக் கொல்வதற்காக இந்திரனைச் சுமந்து சென்ற பின்னவனின் {இந்திரனின்} குதிரைகளைப் போல அந்தப் போரில் யுயுதானனை {சாத்யகியைச்} சுமந்து சென்றன.(4)


அந்தச் சாத்வத வீரன் {சாத்யகி}, போரிடுவதற்காக வேகமாக முன்னேறி வருவதைக் கண்ட சோமதத்தன், ஓ! மன்னா {திருதராஷ்டிரரே}, அச்சமில்லாமல் அவனை நோக்கித் திரும்பினான்.(5) மழைத்தாரைகளைப் பொழியும் மேகங்களைப் போலக் கணைமாரிகளை இறைத்த அவன் {சோமதத்தன்}, சூரியனை மறைக்கும் மேகங்களைப் போலச் சிநியின் பேரனை {சாத்யகியை} மறைத்தான்.(6) அம்மோதலில் சாத்யகியும், ஓ! பாரதக் குலத்தின் காளையே {திருதராஷ்டிரரே}, அந்தக் குருக்களின் காளையை {சோமதத்தனை) கணைமாரிகளால் அச்சமில்லாமல் மறைத்தான்.(7) அப்போது சோமதத்தன், அறுபது {60} கணைகளால் அந்த மது குலத்து வீரனின் {சாத்யகியின்} மார்பைத் துளைத்தான். பதிலுக்குச் சாத்யகியும், ஓ! மன்னா {திருதராஷ்டிரரே}, கூர் தீட்டப்பட்ட கணைகள் பலவற்றால் சோமதத்தனைத் துளைத்தான்.(8) ஒருவரையொருவர் கணைகளால் துளைத்துக் கொண்ட அந்தப் போர்வீரர்கள் இருவரும், வசந்தகாலத்தில் மலர்ந்திருக்கும் இரு கின்சுகங்களை {பலாச மரங்களைப்} போலப் பிரகாசமாகத் தெரிந்தனர்.(9)

{மேனி} எங்கும் இரத்தக் கறை படிந்திருந்தவர்களும், குரு மற்றும் விருஷ்ணி குலங்களைச் சேர்ந்த சிறப்புமிக்கவர்களுமான அவ்விரு போர்வீரர்களும், தங்கள் கண்பார்வைகளாலேயே கொன்றுவிடுபவர்களைப் போல ஒருவரையொருவர் பார்த்துக் கொண்டனர்.(10) வட்டமாகச் சுழன்ற தங்கள் தேர்களில் இருந்தவர்களும், பயங்கர முகத்தோற்றங்களைக் கொண்டவர்களுமான அந்த எதிரிகளைக் கலங்கடிப்பவர்கள், மழைத்தாரைகளைப் பொழியும் இரு மேகங்களுக்கு ஒப்பானவர்களாகவே தெரிந்தனர்.(11) தங்கள் உடல்கள் சிதைக்கப்பட்டு, {மேனி} எங்கும் கணைகளால் துளைக்கப்பட்டிருந்த அவர்கள் இரண்டு முள்ளம்பன்றிகளைப் போலத் தெரிந்தனர்.(12) தங்கச் சிறகுகளைக் கொண்ட எண்ணற்ற கணைகளால் துளைக்கப்பட்டிருந்த அந்தப் போர்வீரர்கள் இருவரும், ஓ! ஏகாதிபதி {திருதராஷ்டிரரே}, விட்டிற்பூச்சிகளால் மறைக்கப்பட்ட இரு நெடிய மரங்களைப் போலப் பிரகாசமாகத் தெரிந்தனர்.(13) அவர்களின் மேல் ஒட்டிக் கொண்டிருந்த சுடர்மிக்கக் கணைகளால் பிரகாசமாகத் தெரிந்த உடல்களுடன் கூடிய அவ்விரு வலிமைமிக்கத் தேர்வீரர்களும், அந்தப் போரில் எரியும் பந்தங்களால் அலங்கரிக்கப்பட்ட இரு கோபக்கார யானைகளை போலத் தெரிந்தனர்.(14)

அப்போது அந்தப் போரில், ஓ! ஏகாதிபதி {திருதராஷ்டிரரே}, வலிமைமிக்கத் தேர்வீரனான சோமதத்தன், அர்த்தச்சந்திரக் கணையொன்றால், மாதவனின் {சாத்யகியின்} பெரிய வில்லை அறுத்தான்.(15) மிகத்தேவையான ஒன்றான வேகம் தேவைப்பட்ட அந்த நேரத்தில், பெரும் வேகத்துடன் கூடிய அந்தக் குருவீரன் {சோமதத்தன்}, இருபத்தைந்து கணைகளால் சாத்யகியைத் துளைத்து, மீண்டும் அவனைப் பத்தால் துளைத்தான்.(16) பிறகு சாத்யகி, மேலும் கடினமான ஒரு வில்லை எடுத்துக் கொண்டு, ஐந்து கணைகளால் சோமதத்தனை வேகமாகத் துளைத்தான்.(17) மேலும் ஒரு பல்லத்தை எடுத்த சாத்யகி, ஓ! மன்னா {திருதராஷ்டிரரே}, சிரித்துக் கொண்டே பாஹ்லீகன் மகனின் {சோமதத்தனின்} தங்கக் கொடிமரத்தை அறுத்தான்.(18) சோமதத்தன் தன் கொடிமரம் வெட்டப்பட்டதைக் கண்டாலும், அச்சமில்லாமல் இருபது கணைகளால் அந்தச் சிநியின் பேரனை {சாத்யகியைத்} துளைத்தான்.(19) சாத்வதனும் {சாத்யகியும்} சினத்தால் தூண்டப்பட்டு, அம்மோதலில் க்ஷுரப்ரம் ஒன்றால் சோமதத்தனின் வில்லை அறுத்தான்.(20) மேலும் அவன் {சாத்யகி}, விஷப்பற்களற்ற பாம்பொன்றைப் போல அப்போதிருந்த சோமதத்தனைத் தங்கச் சிறகுகள் கொண்ட நேரான நூறு கணைகளாலும் துளைத்தான்.(21) பெரும்பலங்கொண்டவனும், வலிமைமிக்கத் தேர்வீரனுமான சோமதத்தன், மற்றொரு வில்லை எடுத்துக் கொண்டு, (கணைமாரியால்) சாத்யகியை மறைக்கத் தொடங்கினான்.(22) சினத்தால் தூண்டப்பட்ட சாத்யகியும், சோமதத்தனைப் பல கணைகளால் துளைதான். பதிலுக்குச் சோமதத்தன், தன் கணை மாரியால் சாத்யகியைப் பீடித்தான்.(23)

அப்போது மோதலுக்கு வந்து சாத்யகியின் சார்பாகப் போரிட்ட பீமன், பத்து கணைகளால் பாஹ்லீகன் மகனை {சோமதத்தனைத்} துளைத்தான். எனினும், சோமதத்தன், கூராக்கப்பட்ட கணைகள் பலவற்றால் அச்சமில்லாமல் பீமசேனனைத் தாக்கினான்.(24) பிறகு சினத்தால் தூண்டப்பட்ட சாத்யகி, இடியைப் போலக் கடினமானதும், தங்கக் கைப்பிடி கொண்டதும், பயங்கரமானதுமான புதிய பரிகம் ஒன்றை சோமதத்தனின் மார்பைக் குறிபார்த்து ஏவினான்.(25) எனினும் அந்தக் குருவீரன் {சோமதத்தன்}, தன்னை எதிர்த்து வேகமாக வரும் அந்தப் பயங்கரப் பரிகத்தைச் சிரித்துக் கொண்டே இரண்டு துண்டுகளாக வெட்டினான்.(26) இரும்பாலான உறுதிமிக்க அந்தப் பரிகமானது, இப்படி இரண்டாக வெட்டப்பட்டதும், இடியால் பிளக்கப்பட்ட மலையொன்றின் பெரிய சிகரத்தைப் போலக் கீழே விழுந்தது.(27)

அப்போது சாத்யகி, ஓ! மன்னா, அம்மோதலில் ஒரு பல்லத்தால், சோமதத்தனின் வில்லை அறுத்து, மேலும் அவனது விரல்களுக்கு அரணாக இருந்த தோலுறைகளையும் ஐந்து கணைகளால் அறுத்தான்.(28) பிறகு, ஓ! பாரதரே {திருதராஷ்டிரரே}, மேலும் நான்கு கணைகளால் அந்தக் குரு போர்வீரனின் {சோமதத்தனின்} நான்கு சிறந்த குதிரைகளை யமனின் முன்னிலைக்கு அனுப்பினான். (29) மேலும் அந்தத் தேர்வீரர்களில் புலியானவன் {சாத்யகி} சிரித்துக் கொண்டே மற்றொரு நேரான கணையால், சோமதத்தனுடைய சாரதியின் தலையை அவனது உடலில் இருந்து வெட்டினான்.(30) பிறகு அவன் {சாத்யகி}, நெருப்புபோன்ற பிரகாசம் கொண்டதும், கல்லில் கூராக்கப்பட்டதும், எண்ணெயில் முக்கப்பட்டதும், தங்கச் சிறகுகளைக் கொண்டதுமான ஒரு பயங்கரக் கணையைச் சோமதத்தன் மீது ஏவினான்.(31) சிநியின் பேரனால் {சாத்யகியால்} ஏவப்பட்ட அந்தச் சிறந்த கடுமையான கணை, ஓ! தலைவா {திருதராஷ்டிரரே}, சோமதத்தனின் மார்பின் மீது ஒரு பருந்தைப் போல வேகமாகப் பாய்ந்தது.(32) ஓ! ஏகாதிபதி {திருதராஷ்டிரரே}, வலிமைமிக்கச் சாத்வதனால் {சாத்யகியால்} ஆழத் துளைக்கப்பட்ட அந்தப் பெரும் தேர்வீரன் சோமதத்தன்,  (தனது தேரில் இருந்து) கீழே விழுந்து இறந்தான்.(33) பெரும் தேர்வீரனான சோமதத்தன் அங்கே கொல்லப்பட்டதைக் கண்ட உமது போர்வீரர்கள், தேர்களின் பெருங்கூட்டத்துடன் யுயுதானனை எதிர்த்து விரைந்தனர்.(34)

அதே வேளையில், ஓ! மன்னா {திருதராஷ்டிரரே}, பிரபத்ரகர்கள் அனைவருடனும், பெரும் படையுடனும் கூடிய பாண்டவர்களும், துரோணரின் படையை எதிர்த்து விரைந்தனர்.(35) அப்போது கோபத்தால் தூண்டப்பட்ட யுதிஷ்டிரன், பரத்வாஜர் மகன் {துரோணர்} பார்த்துக் கொண்டிருக்கும்போதே, தன் கணைகளால் பின்னவரின் {துரோணரின்} துருப்புகளைத் தாக்கவும், முறியடிக்கவும் தொடங்கினான்.(36) தமது துருப்புகளை இப்படிக் கலங்கடிக்கும் யுதிஷ்டிரனைக் கண்ட துரோணர், கோபத்தால் கண்கள் சிவந்து, அவனை எதிர்த்து மூர்க்கமாக விரைந்தார்.(37) பிறகு அந்த ஆசான் {துரோணர்} ஏழு கூரிய கணைகளால் பிருதையின் மகனை {யுதிஷ்டிரனைத்} துளைத்தார். கோபத்தால் தூண்டப்பட்ட யுதிஷ்டிரனும் பதிலுக்கு ஐந்து கணைகளால் ஆசானை {துரோணரைத்} துளைத்தான்.(38)

பாண்டுவின் மகனால் {யுதிஷ்டிரனால்} ஆழத் துளைக்கப்பட்டவரான அந்த வலிமைமிக்க வில்லாளி (துரோணர்), ஒருக்கணம் தன் கடைவாயை நாவால் நனைத்தபடி, யுதிஷ்டிரனின் கொடிமரம் மற்றும் வில் ஆகிய இரண்டையும் வெட்டினார்.(39) பெரு வேகம் தேவைப்பட்ட அந்த நேரத்தில், வில்லறுபட்ட அந்த மன்னர்களில் சிறந்தவன் {யுதிஷ்டிரன்}, போதுமான அளவு உறுதியானதும், கடுமையானதுமான மற்றொரு வில்லை எடுத்துக் கொண்டான்.(40) பிறகு அந்தப் பாண்டுவின் மகன் {யுதிஷ்டிரன்}, ஓராயிரம் கணைகளால், துரோணரின் குதிரைகள், சாரதி, கொடிமரம், தேர் ஆகியவற்றுடன் சேர்த்து அவரையும் {துரோணரையும்} துளைத்தான். இவையாவும் மிக அற்புதமாகத் தெரிந்தன.(41) அந்தக் கணைகளின் தாக்குதல்களால் பெரும் வலியை உணர்ந்தவரும், பிராமணர்களில் காளையுமான அந்தத் துரோணர், கீழே தமது தேர்த்தட்டில் அமர்ந்தார்.(42) பிறகு தன் உணர்வுகள் மீண்டு, ஒரு பாம்பைப் போலப் பெருமூச்சு விட்டுக் கொண்டு, பெரும்சினத்தில் நிறைந்த அந்த ஆசான் {துரோணர்}, வாயவ்ய ஆயுதத்தை இருப்புக்கு அழைத்தார்.(43) பிருதையின் வீர மகன் {யுதிஷ்டிரன்}, கையில் வில்லுடன் அம்மோதலில் அச்சமில்லாமல், தான் கொண்டிருந்த அதே போன்ற ஆயுதத்தால் அவ்வாயுதத்தைக் கலங்கடித்தான்.(44) மேலும் அந்தப் பாண்டுவின் மகன் {யுதிஷ்டிரன்}, அந்தப் பிராமணரின் {துரோணரின்} பெரிய வில்லை இரண்டு துண்டுகளாகவும் வெட்டினான். அப்போது க்ஷத்திரியர்களைக் கலங்கடிப்பவரான துரோணர் மற்றொரு வில்லை எடுத்துக் கொண்டார். (45) குரு குலத்தின் காளை (யுதிஷ்டிரன்), பல கூரிய கணைகளால் அந்த வில்லையும் அறுத்தான்.

அப்போது குந்தியின் மகனான யுதிஷ்டிரனிடம் பேசிய வாசுதேவன் {கிருஷ்ணன்}(46), "ஓ! வலிய கரங்களைக் கொண்ட யுதிஷ்டிரரே நான் சொல்வதைக் கேளும். ஓ! பாரதர்களில் சிறந்தவரே, துரோணருடன் போரிடுவதை நிறுத்தும்.(47) துரோணர் உம்மைக் கைப்பற்றவே எப்போதும் முயன்று வருகிறார். நீர் அவருடன் போரிடுவது பொருந்தாது என்றே நான் நினைக்கிறேன்.(48) துரோணரின் அழிவுக்காக எவன் படைக்கப்பட்டானோ, அவனே அவரைக் கொல்வான் என்பதில் ஐயமில்லை. ஆசானை {துரோணரை} விட்டுவிட்டு, மன்னன் சுயோதனன் {துரியோதனன்} எங்கிருக்கிறானோ, அங்கே செல்வீராக.(49) மன்னர்கள் மன்னர்களுடனேயே போரிட வேண்டும், மன்னர்களல்லாத இது போன்றோருடன் அவர்கள் போரிட விரும்பக்கூடாது. எனவே, ஓ! குந்தியின் மகனே {யுதிஷ்டிரரே}, சிறு படையின் உதவியுடன் நானும், தனஞ்சயனும் {அர்ஜுனனும்}, மனிதர்களில் புலியான பீமனும் குருக்களுடன் எங்கே போரிட்டுக் கொண்டிருக்கிறோமோ, அங்கே யானைகள், குதிரைகள், தேர்கள் ஆகியவை சூழ வருவீராக" என்றான் {கிருஷ்ணன்}.(50,51)

வாசுதேவனின் {கிருஷ்ணனின்} இந்த வார்த்தைகளைக் கேட்ட நீதிமானான மன்னன் யுதிஷ்டிரன், ஒருக்கணம் சிந்தித்து, அகல விரித்த வாய்களுடன் கூடிய யமனைப் போல உமது துருப்புகளைக் கொன்றபடி எதிரிகளைக் கொல்பவனான பீமன், எங்கே கடும்போரில் ஈடுப்பட்டுக் கொண்டிருந்தானோ, அந்தப் போர்க்களப் பகுதிக்குச் சென்றான்.(52,53) கோடைகாலத்தின் முடிவில் முழங்கும் மேகங்களுக்கு ஒப்பாகத் தன் தேரின் சடசடப்பொலியால் பூமியை எதிரொலிக்கச் செய்தபடி சென்றவனும், பாண்டுவின் (மூத்த) மகனும், நீதிமானுமான மன்னன் யுதிஷ்டிரன், பீமனின் பக்கத்தில் நிலைகொண்டு, எதிரியைக் கொல்வதில் ஈடுபட்டான்.(54) துரோணரும், அந்த இரவில் தன் எதிரிகளான பாஞ்சாலர்களை எரிக்கத் தொடங்கினார்" {என்றான் சஞ்சயன்}.(55)

சஞ்சயன் {திருதராஷ்டிரனிடம்} சொன்னான், "பூமியானது இருளாலும் புழுதியாலும் மறைக்கப்பட்டுக் கடுமையானதும், பயங்கரமானதுமான அந்தப் போர் நடந்து கொண்டிருந்தபோது, ஓ! மன்னா {திருதராஷ்டிரரே},(1) களத்தில் நின்றிருந்த போராளிகளால் ஒருவரையொருவர் காண முடியவில்லை. அந்த க்ஷத்திரியர்களில் முதன்மையானோர், அனுமானத்தினாலும், (அவர்கள் சொன்ன), தனிப்பட்ட மற்ற பிற பெயர்களாலும் வழிநடத்தப்பட்டு ஒருவரோடொருவர் போரிட்டனர். தேர்வீரர்கள், யானைகள், குதிரைகள், காலாட்படை வீரர்கள் ஆகியோரின் அந்தப் பயங்கரப் படுகொலை நடந்து கொண்டிருந்தபோது, ஓ! பாரதக் குலத்தின் காளையே {திருதராஷ்டிரரே}, துரோணர், கர்ணன், கிருபர், பீமன், பிருஷதன் மகன் {திருஷ்டத்யும்னன்}, சாத்வதன் {சாத்யகி}(2,3) ஆகியோர் {தங்களுக்குள்} ஒருவரையொருவரையும், இருதரப்பின் துருப்புகளையும் பீடித்தனர்.


அந்தத் தேர்வீரர்களில் முதன்மையானோரால் சுற்றிலும் கொல்லப்பட்ட இரு படைகளின் போராளிகளும்,(4) அந்த இரவு நேரத்தில் அனைத்துத் திசைகளிலும் தப்பி ஓடினர். உண்மையில், முற்றிலும் உற்சாகமற்ற இதயங்களுடன் கூடிய அந்தப் போர்வீரர்கள், அணி பிளந்து அனைத்துத் திசைகளிலும் தப்பி ஓடினர்.(5) அப்படி அவர்கள் அனைத்துத் திசைகளிலும் ஓடிச் செல்லும்போதே பெரும் படுகொலைகளுக்கும் ஆட்பட்டனர். ஓ! மன்னா {திருதராஷ்டிரரே}, ஆயிரக்கணக்கான முதன்மையான தேர்வீரர்களும் அந்தப் போரில் ஒருவரையொருவர் கொன்றனர்.(6) இருளில் எதையும் காணமுடியாத போராளிகள் தங்கள் உணர்வுகளை இழந்தனர். இவையாவும் உமது மகனின் {துரியோதனனின்} தீய ஆலோசனைகளின் விளைவாகவே நடக்கின்றன. உண்மையில், உலகமே இருளில் மறைக்கப்பட்டிருந்த அந்நேரத்தில், ஓ! பாரதரே {திருதராஷ்டிரரே}, முதன்மையான தேர்வீரர்கள் உள்ளிட்ட அனைத்து உயிரினங்களும், பீதியால் வெல்லப்பட்டு அந்தப் போரில் தங்கள் உணர்வுகளை இழந்தனர்" {என்றான் சஞ்சயன்}.(7)

திருதராஷ்டிரன் {சஞ்சயனிடம்}, "அவ்விருளால் பீடிக்கப்பட்டும், பாண்டவர்களால் மூர்க்கமாகக் கலங்கடிக்கப்பட்டும், நீங்கள் {உங்கள்} சக்திகளை இழந்திருந்தபோது, உங்களது மனநிலைகள் எவ்வாறு இருந்தன?(8) ஓ! சஞ்சயா, அனைத்தும் இருளில் மூழ்கியிருந்தபோது, பாண்டவத் துருப்புகளும் என்னுடையவையும், மீண்டும் எவ்வாறு கண்களுக்குப் புலப்பட்டன?" என்று கேட்டான்.(9)

சஞ்சயன் {திருதராஷ்டிரனிடம்} தொடர்ந்தான், "அப்போது (கௌரவர்களில்) கொல்லப்பட்டோரில் எஞ்சியோர், அவர்களது தலைவர்களின் உத்தரவுகளின் பேரில் மீண்டும் (கச்சிதமாக [அ] நெருக்கமாக) அணி வகுக்கப்பட்டனர்.(10) துரோணர், தம்மை முன்னணியிலும், சல்லியனைப் பின்புறத்திலும் நிலைநிறுத்தினார். துரோணரின் மகன் {அஸ்வத்தாமன்}, சுபலனின் மகன் சகுனி ஆகியோர் முறையே {அந்தப் படையின்} வலது பக்கத்திலும், இடது பக்கத்திலும் தங்களை நிறுத்திக் கொண்டனர். ஓ! ஏகாதிபதி {திருதராஷ்டிரரே}, மன்னன் துரியோதனன், அவ்விரவில் துருப்புகள் அனைத்தையும் பாதுகாப்பதில் மும்முரமாக ஈடுபட்டான்.(11)

ஓ! மன்னா {திருதராஷ்டிரரே}, காலாட்படை வீரர்கள் அனைவரையும் உற்சாகப்படுத்திய துரியோதனன், அவர்களிடம், "உங்கள் பெரும் ஆயுதங்களை ஒருபுறம் வைத்துவிட்டு, நீங்கள் அனைவரும் உங்கள் கைகளில் சுடர்மிக்க விளக்குகளை எடுத்துக் கொள்வீராக" என்றான்.(12) இப்படி அந்த மன்னர்களில் சிறந்தவனால் {துரியோதனனால்} உத்தரவிடப்பட்டதும், அந்தக் காலாட்படை வீரர்கள் எரியும் விளக்குகளை மகிழ்ச்சியாக ஏந்தினர். வானத்தில் நின்று கொண்டிருந்த தேவர்கள், முனிவர்கள், கந்தர்வர்கள், தெய்வீக முனிவர்கள், வித்யாதரர்கள் மற்றும் அப்சரசுகளின் பல்வேறு இனக்குழுக்கள்,(13) நாகர்கள், யக்ஷர்கள், உரகர்கள், கின்னரர்கள் ஆகியோரும் மகிழ்ச்சியால் நிறைந்து சுடர்மிக்க விளக்குகளை எடுத்துக் கொண்டனர்.

நறுமணமிக்க எண்ணெயால் நிரப்பப்பட்ட பல விளக்குகள், திசைகளின் புள்ளிகள் மற்றும் துணைப்புள்ளிகளின் பாதுகாவலர்களிடம் {லோகபாலர்களிடம்} இருந்து விழுவது தெரிந்தது.(14) துரியோதனனுக்காகக் குறிப்பாக நாரதர் மற்றும் பர்வதரிடம் இருந்து வரும் அத்தகு விளக்குகள் பல அந்த இருளை விலக்கி ஒளியேற்றுவதாகத் தெரிந்தது [1]. அப்போது நெருக்கமாக அணிவகுக்கப்பட்ட அந்த (கௌரவப்) படையானது, அவ்விரவில், அந்த விளக்குகளின் ஒளியாலும்,(15) (போராளிகளின் மேனியில் இருந்த) விலைமதிப்புமிக்க ஆபரணங்களாலும், ஏவப்படும், அல்லது வீசப்படும் சுடர்மிக்க தெய்வீக ஆயுதங்களாலும் மிகப் பிரகாசமாகத் தெரிந்தது. ஒவ்வொரு தேரின் மீதும் ஐந்து விளக்குகள் வைக்கப்பட்டன, மேலும் மதங்கொண்ட ஒவ்வொரு யானையின் மீதும் மூன்று வைக்கப்பட்டன.(16) ஒவ்வொரு குதிரையின் மீதும் ஒரு பெரிய விளக்கு வைக்கப்பட்டது. இப்படியே அந்தப் படையானது, குரு போர்வீரர்களால் ஒளியூட்டப்பட்டது. குறுகிய காலத்திற்குள் அதனதன் இடங்களில் வைக்கப்பட்ட அந்த விளக்குகள் உமது படைக்கு விரைவாக ஒளியூட்டின.(17)

[1] கங்குலியில் "துரியோதனனுக்காக" என்று நேரடி பொருளில் வருவது, வேறொரு பதிப்பில், "கௌரவப் பாண்டவர்கள் நிமித்தமாக நாரத ரிஷியினாலும், பர்வத ரிஷியினாலும் விசேஷமாக அழைக்கப்பட்டிருக்கிற திக்குத் தேவதைகளிடமிருந்து வருகின்ற நல்ல வாசனையுள்ள தைலத்துடன் கூடின தீபங்களும் காணப்பட்டன" என்றிருக்கிறது. மன்மதநாததத்தரின் பதிப்பில், "குருக்களில் முதன்மையானோருக்காக" என்றிருக்கிறது.

தங்கள் கைகளில் எண்ணெய் விளக்குகளைக் கொண்ட காலாட்படை வீரர்களால் இப்படி ஒளியூட்டப்பட்ட துருப்புகள் அனைத்தும், இரவு வானில் மின்னல் கீற்றுகளால் ஒளியூட்டப்பட்ட மேகங்களைப் போல அழகாகத் தெரிந்தன.(18) அந்தக் குரு படையானது இப்படி ஒளியூட்டப்பட்ட போது, நெருப்பின் பிரகாசத்தைக் கொண்ட துரோணர், சுற்றிலும் உள்ள அனைத்தையும் எரித்தபடி தமது தங்கக் கவசத்துடன், சுடர்மிக்கக் கதிர்களைக் கொண்ட நடுப்பகல் சூரியனைப் போல மிகப் பிரகாசமாகத் தெரிந்தார்.(19) அவ்விளக்குகளின் ஒளியானது, தங்க ஆபரணங்கள், போராளிகளின் பிரகாசமான மார்புக் கவசங்கள், விற்கள், நன்கு கடினமாக்கப்பட்ட ஆயுதங்கள் ஆகியவற்றால் பிரதிபலிக்கப்பட்டது.(20) இழைகளால் கட்டப்பட்டிருந்த கதாயுதங்கள், பிரகாசமான பரிகங்கள், தேர்கள், கணைகள், ஈட்டிகள் ஆகியன செல்லும்போது தங்கள் பிரதிபலிப்பால் விளக்குகளின் கூட்டங்களை {பல மடங்காக} மீண்டும் மீண்டும் உண்டாக்கின.(21)

ஓ! மன்னா {திருதராஷ்டிரரே}, குடைகள், சாமரங்கள், கத்திகள், சுடர்மிக்கப் பந்தங்கள், தங்க ஆரங்கள் ஆகியன சுழற்றவோ, அசைக்கவோ படும்போது, அவ்வொளியைப் பிரதிபலித்து மிக அழகாகத் தெரிந்தன.(22) அவ்விளக்குகளின் ஒளியால் ஒளியூட்டப்பட்டும், ஆயுதங்கள், ஆபரணங்கள் ஆகியவற்றின் பிரதிபலிப்பால் ஒளிவீசிக் கொண்டும், ஓ! மன்னா {திருதராஷ்டிரரே}, அந்தப் படையானது காந்தியுடன் சுடர்விட்டது.(23) நன்கு கடினமாக்கப்பட்டவையும், குருதியால் சிவப்பு நிறமடைந்தவையுமான அழகான ஆயுதங்கள், வீரர்களால் வீசப்படும்போது, கோடையின் முடிவில் வானத்தில் தோன்றும் மின்னலின் கீற்றுகளைப் போலச் சுடர்மிக்கப் பிரகாசத்தை உண்டாக்கின.(24) எதிரிகளைத் தாக்கி வீழ்த்துவதற்காக அவர்களை மூர்க்கமாகத் தொடர்ந்து சென்றவர்களும், அவசரமாக விரையும்போது நடுங்கியவர்களுமான போர்வீரர்களின் முகங்கள், காற்றால் தூண்டப்பட்ட மேகத் திரள்களைப் போல அழகாகத் தெரிந்தன.(25) மரங்கள் நிறைந்த காடொன்று தீப்பற்றி எரிகையில், காந்திமிக்கச் சூரியன் உக்கிரமடைவதைப் போல அந்தப் பயங்கர இரவானது கடுமையானதும், ஒளியூட்டப்பட்டதுமான அந்தப் படையால் பிரகாசமடைந்தது.(26)

நமது படை இவ்வாறு ஒளியூட்டப்பட்டதைக் கண்ட பார்த்தர்களும், தங்கள் படைமுழுவதும் உள்ள காலாட்படை வீரர்களை எழுச்சியுறச் செய்து, நம்மைப் போலவே வேகமாகச் செயல்பட்டனர்.(27) ஒவ்வொரு யானையிலும் அவர்கள் ஏழு விளக்குகளை வைத்தனர், ஒவ்வொரு தேரிலும் பத்தை {பத்து விளக்குகளை} வைத்தனர்; ஒவ்வொரு குதிரையின் முதுகிலும் அவர்கள் இரு விளக்குகளை வைத்தனர்; (தங்கள் தேர்களின்) பக்கங்களிலும், பின்புறத்திலும், மேலும் தங்கள் கொடிமரங்களிலும் அவர்கள் பல விளக்குகளை வைத்தனர்.(28) அவர்களது படையின் பக்கங்களிலும், பின்புறத்திலும், முன்புறத்திலும், சுற்றிலும், உள்ளேயும் எனப் பல விளக்குகள் ஒளியூட்டப்பட்டன. குருக்களும் இவ்வாறே செய்ததால், அந்தப் படைகள் இரண்டும் இப்படியே ஒளியூட்டப்பட்டன.(29) அந்தப் படை முழுவதும், யானைகள், தேர்கள் மற்றும் குதிரைப்படை ஆகியவற்றுடன் காலாட்படை கலந்தது. பாண்டு மகனின் படையானது, (காலாட்படை வீரர்களைத் தவிர) தங்கள் கைகளில் சுடர்மிக்கப் பந்தங்களுடன் நின்று கொண்டிருந்த பிறராலும் ஒளியூட்டப்பட்டது.(30) அந்தப் படையானது, நாளை உண்டாக்குபவனின் {சூரியனின்} கண்கவரும் கதிர்களால் ஒளியூட்டப்படுவதைப் போல அந்த விளக்குகளால் இரு மடங்கு ஒளியூட்டப்படு சுடர்மிக்க நெருப்பைப் போலக் கடுமையாகப் பிரகாசித்தது.(31)

அந்த இரு படைகளின் காந்தியும் பூமி, ஆகாயம் மற்றும் திசைப்புள்ளிகள் அனைத்திலும் பரவி பெருகுவதாகத் தெரிந்தது. அந்த ஒளியால் உமது படையும் அவர்களுடையதை {அவர்களது படையைப்} போலத் தனித்தன்மையுடன் காணப்பட்டது.(32) வானத்தை எட்டிய அந்த ஒளியால் விழிப்படைந்த தேவர்கள், கந்தர்வர்கள், யக்ஷர்கள், முனிவர்கள், (தவ) வெற்றியால் மகுடம் சூட்டப்பட்டவர்கள், அப்சரஸ்கள் ஆகியோர் அனைவரும் அங்கே வந்தனர்.(33) அப்போது, தேவர்கள், கந்தர்வர்கள், யக்ஷர்கள், முனிவர்கள், (தவ) வெற்றியால் மகுடம் சூட்டப்பட்டவர்கள், அப்சரஸ்கள், தேவலோகத்திற்குள் நுழையப்போகும் கொல்லப்பட்ட வீரர்களின் ஆவிகள் ஆகியோரால் நிறைந்த அந்தப் போர்க்களமானது இரண்டாவது சொர்க்கத்தைப் போலத் தெரிந்தது.(34) விளக்குகளால் ஒளியூட்டப்பட்ட தேர்கள், குதிரைகள், யானைகள், கோபக்காரப் போராளிகள், கொல்லப்பட்ட, அல்லது மூர்க்கமாகத் திரியும் குதிரைகள் நிறைந்ததும், அணிவகுக்கப்பட்ட போர்வீரர்கள், குதிரைகள், யானைகள் ஆகியவற்றைக் கொண்டதுமான அந்தப் பரந்த படையானது, பழங்காலத்தில் அணிவகுக்கப்பட்ட தேவர்கள் மற்றும் அசுரர்களின் படையைப் போலவே இருந்தது.(35)

தேவர்களைப் போன்ற மனிதர்களுக்கு இடையில் நடந்ததும், சூறாவளியைப் [2] போன்றதுமான அந்த இரவு போரானது, விரையும் ஈட்டிகளைக் கடுங்காற்றாகவும், பெருந்தேர்களை மேகங்களாகவும், குதிரைகள் மற்றும் யானைகளின் கணைப்பொலிகள் மற்றும் பிளிறல்களை முழக்கங்களாகவும், கணைகளை மழையாகவும், போர்வீரர்கள் மற்றும் விலங்குகளின் குருதியையே வெள்ளமாகக் கொண்டிருந்தது.(36) அந்தப் போருக்கு மத்தியில், பிராமணர்களில் முதன்மையான அஸ்வத்தாமன், மழைக்காலத்தின் முடிவில் தன் கடுங்கதிர்களால் அனைத்தையும் எரிக்கும் நடுப்பகல் சூரியனுக்கு ஒப்பாகப் பாண்டவர்களை எரித்துக் கொண்டிருந்தான்" {என்றான் சஞ்சயன்}

சஞ்சயன் {திருதராஷ்டிரனிடம்} சொன்னான், "இருளிலும், புழுதியிலும் மறைக்கப்பட்டிருந்த அந்தப் போர்க்களம் இப்படி ஒளியூட்டப்பட்ட போது, ஒருவரையொருவர் உயிரை எடுக்க விரும்பிய வீரமான போர்வீரர்கள் ஒருவரோடு ஒருவர் மோதிக் கொண்டனர்.(1) ஓ! மன்னா {திருதராஷ்டிரரே}, ஒருவரோடொருவர் மோதிக் கொண்டவர்களும், வேல்கள், வாள்கள் மற்றும் பிற ஆயுதங்களைக் கொண்டவர்களுமான அந்தப் போராளிகள், சினத்தின் ஆளுகையால் ஒருவரையொருவர் {முறைத்துப்} பார்த்துக் கொண்டனர்.(2) ஓ! பாரதரே {திருதராஷ்டிரரே}, எங்கும் சுடர்விட்டுக் கொண்டிருந்த அந்த ஆயிரக்கணக்கான விளக்குகளுடனும், ரத்தினங்களால் அலங்கரிக்கப்பட்ட தங்கக் கொடிமரங்களில் நிறுவப்பட்டவையும், நறுமணமிக்க எண்ணெய் ஊற்றப்பட்டவையுமான தேவர்கள், கந்தர்வர்கள் ஆகியோரின் கண்கவரும் விளக்குகளுடனும் கூடிய அந்தப் போர்க்களமானது, நட்சத்திரங்களால் மினுமினுக்கும் ஆகாயத்தைப்போல இருந்தது.(3,4)


பூமியானது, நூற்றுக்கணக்கான சுடர்மிக்கப் பந்தங்களால் மிக அழகாகத் தெரிந்தது. உண்மையில், அண்ட அழிவின் போது ஏற்படும் காட்டுத்தீயுடன் கூடியதாகவே அந்தப் பூமி தெரிந்தது.(5) சுற்றிலும் இருந்த அந்த விளக்குகளால் திசைப்புள்ளிகள் அனைத்தும் சுடர்விட்டெரிந்து, மழைக்காலத்தின் மாலை வேளையில் விட்டிற்பூச்சிகளால் மறைக்கப்பட்ட மரங்களைப் போலத் தெரிந்தன.(6) அப்போது, ஓ! மன்னா {திருதராஷ்டிரரே}, வீரப்போராளிகள் வீரப்பகைவர்களுடன் போரில் ஈடுபட்டுக் கொண்டிருந்தனர். அந்தக் கடும் இரவில், உமது மகனின் {துரியோதனனின்} உத்தரவுக்கிணங்க யானைகள் யானைகளோடும், குதிரைவீரர்கள் குதிரைவீரர்களோடும், தேர்வீரர்கள் தேர்வீரர்களோடும் மகிழ்ச்சியால் நிறைந்து போரில் ஈடுபட்டனர்.(7,8) நால்வகைப் படைப்பிரிவுகளையும் கொண்டவையான அந்த இரண்டு படைகளுக்கும் இடையில் நடந்த மோதல் பயங்கரமடைந்தது. அப்போது அர்ஜுனன், ஓ! ஏகாதிபதி {திருதராஷ்டிரரே}, மன்னர்கள் அனைவரையும் பலவீனமடையச் செய்தபடியே பெரும் வேகத்துடன் கௌரவப் படைப்பிரிவுகளை அழிக்கத் தொடங்கினான்" {என்றான் சஞ்சயன்}.(9)

திருதராஷ்டிரன் {சஞ்சயனிடம்}, "வெல்லப்பட இயலாதவனான அந்த அர்ஜுனன், கோபத்தால் தூண்டப்பட்டு, (குருக்களின் சாதனைகளைப்) பொறுத்துக் கொள்ள இயலாமல் என் மகனின் {துரியோதனனின்} படைக்குள் ஊடுருவியபோது, உங்கள் மனநிலைகள் எப்படி இருந்தன?(10) உண்மையில், அந்த எதிரிகளை அழிப்பவன் {அர்ஜுனன்} தங்களுக்கு மத்தியில் நுழைந்ததும், {என்} படைவீரர்கள் என்ன நினைத்தனர்? அப்போது பின்பற்றத் தகுந்த நடவடிக்கைகள் எனத் துரியோதனன் எவற்றை நினைத்தான்?(11) அந்த வீரனை {அர்ஜுனனை} எதிர்த்துப் போரிடச் சென்ற அந்த எதிரிகளைத் தண்டிப்பவர்கள் யாவர்? உண்மையில், வெண்குதிரைகளைக் கொண்ட அந்த அர்ஜுனன் (நமது படைக்குள்) நுழைந்த போது, துரோணரைப் பாதுகாத்தவர்கள் யாவர்?(12) துரோணரின் வலது சக்கரத்தையும், இடது சக்கரத்தையும் பாதுகாத்தவர்கள் யாவர்? போரிட்டுக் கொண்டிருந்த அந்த வீரரின் {துரோணரின்} பின்புறத்தைப் பாதுகாத்த வீரர்கள் யாவர்?(13)

உண்மையில் அந்தப் பரத்வாஜரின் மகன் {துரோணர்}, (தன் பாதையில்) எதிரிகளைக் கொன்றபடி செல்கையில், அவருக்கு முன்னணியில் சென்றவர்கள் யாவர்? வலிமைமிக்கவரும், வெல்லப்படமுடியாத வில்லாளியும், பாஞ்சாலர்களுக்கு மத்தியில் ஊடுருவியவரும்,(14) மனிதர்களில் புலியும், பெரும் வீரம் கொண்டவரும், நர்த்தனம் செய்பவரைப் போலத் தன் தேரின் பாதையில் செல்பவரும், சீற்றமிக்கக் காட்டு நெருப்பைப் போலத் தன் கணைகளின் மூலம் பாஞ்சாலத் தேர்க்கூட்டங்களைப் பெருமளவில் எரித்தவருமான துரோணர்,(15) ஐயோ, தன் மரணத்தை எவ்வாறு சந்தித்தார்? நிதானமானவர்களாகவும், வெல்லப்படாதவர்களாகவும், உற்சாகம் நிறைந்தவர்களாகவும், போரில் வலிமையில் பெருகுபவர்களாகவும் என் எதிரிகளை நீ எப்போதும் சொல்லி வருகிறாய். எனினும், என்னுடையவர்களைக் குறித்து நீ அத்தகு வார்த்தைகளில் சொல்வதில்லை. மறுபுறம், கொல்லப்படுபவர்களாகவும், ஒளி இழந்தவர்களாகவும், முறியடிக்கப்பட்டவர்களாகவும் விவரித்து, எப்போதும் தாங்கள் போரிடும் போர்களில் என் தேர்வீரர்கள் தங்கள் தேர்களை இழப்பதாகச் சொல்கிறாய்" என்றான் {திருதராஷ்டிரன்}.(16,17)

சஞ்சயன் {திருதராஷ்டிரனிடம்} தொடர்ந்தான், "போரில் முனைப்போடிருந்த துரோணரின் விருப்பங்களைப் புரிந்து கொண்ட துரியோதனன், ஓ! மன்னா {திருதராஷ்டிரரே}, தனக்குக் கீழ்ப்படியும் தம்பிகளான(18) விகர்ணன், சித்திரசேனன், [1] சுபார்சன், துத்தர்ஷமன், தீர்க்கபாகு ஆகியோரிடமும், அவர்களைப் பின் தொடர்ந்து வந்தோரிடமும் இவ்வார்த்தைகளைச் சொன்னான்:(19) "பெரும் வீரமிக்கவர்களே, வீரர்களே, உறுதியான தீர்மானத்தோடு போராடும் நீங்கள் அனைவரும் துரோணரைப் பின்புறத்தில் இருந்து அவரைப் பாதுகாக்க வேண்டும். ஹிருதிகன் மகன் {கிருதவர்மன்} அவரது வலது சக்கரத்தையும், சலன் அவரது இடதையும் பாதுகாப்பார்கள்" என்றான்.(20) இதைச் சொன்ன உமது மகன் {துரியோதனன்}, முன்னோக்கி நகர்ந்து, எஞ்சியிருந்தவர்களும், துணிவும், வலிமையும் மிக்கவர்களுமான திரிகர்த்த தேர்வீரர்களை முன்னணியில் நிறுத்தியபடி, அவர்களிடம்,(21) "ஆசான் {துரோணர்} கருணைநிறைந்தவராக இருக்கிறார். பாண்டவர்களோ உறுதிமிக்கப் பெரும் தீர்மானத்தோடு போரிடுகின்றனர். போரில் எதிரிகளைக் கொல்லும்போது, ஒன்றாகச் சேர்ந்து அவரை {துரோணரை} நன்கு பாதுகாப்பீராக.(22) துரோணர் போரில் வலிமைமிக்கவராகவும், பெரும் கரநளினமும், பெரும் வீரமும் கொண்டவராக இருக்கிறார். போரில் தேவர்களையே அவரால் வெல்ல முடியும் எனும்போது, பாண்டவர்களையும், சோமகர்களையும் குறித்து என்ன சொல்வது?(23)

[1] துரோண பர்வம் 136ல் விகர்ணன், சித்திரசேனன் ஆகியோர் பீமனால் கொல்லப்பட்டதாக வருகிறது. மன்மதநாததத்தரின் பதிப்பிலும் இவ்விடத்தில இவர்களது பெயர்கள் குறிப்பிடப்படுகின்றன. ஆனால், வேறொரு பதிப்பில் இந்த இடத்தில் வெறும் தம்பியர் என்று குறிப்பிடப்பட்டிருக்கிறதே தவிர அவர்களது பெயர்கள் குறிப்பிடப்படவில்லை.

எனினும், ஒன்றாகச் சேரும் நீங்கள் அனைவரும், இந்தப் பயங்கரப் போரில் பெரும் தீர்மானத்துடன் போராடி, வெல்லப்பட முடியாத துரோணரை அந்த வலிமைமிக்கத் தேர்வீரனான திருஷ்டத்யும்னனிடம் இருந்து பாதுகாப்பீராக.(24) போரில் துரோணரை வெல்ல பாண்டவப் போர்வீரர்கள் அனைவரிலும் திருஷ்டத்யும்னனைத் தவிர, வேறு எவனையும் நான் காணவில்லை.(25) எனவே, நாம் முழு ஆன்மாவோடு பரத்வாஜரின் மகனை {துரோணரைப்} பாதுகாக்க வேண்டும் என நான் நினைக்கிறேன். (நம்மால்) பாதுகாக்கப்படும் அவர், ஒருவர் பின் ஒருவராகச் சோமகர்களையும், சிருஞ்சயர்களையும் நிச்சயம் கொல்வார்.(26) (பாண்டவப்) படைக்குத் தலைமையில் நிற்கும் சிருஞ்சயர்கள் அனைவரும் கொல்லப்பட்டதும், துரோணரின் மகன் {அஸ்வத்தாமர்}, போரில் திருஷ்டத்யும்னனைக் கொல்வார் என்பதில் ஐயமில்லை.(27) அதே போலவே, வலிமைமிக்கத் தேர்வீரனான கர்ணனும், போரில் அர்ஜுனனை வெல்வான். பீமசேனனையும், கவசம் தரித்த பிறரையும் பொறுத்தவரை, அவர்கள் அனைவரையும் போரில் நானே அடக்குவேன்.(28) சக்தியை இழப்பவர்களான பாண்டவர்களில் எஞ்சியோர், பிற போர்வீரர்களால் எளிதாக வீழ்த்தப்படுவார்கள். அதன்பிறகு என் வெற்றி எப்போதும் நீடித்திருக்கும் என்பது தெளிவாகத் தெரிகிறது.(29) இந்தக் காரணங்களுக்காக, வலிமைமிக்கத் தேர்வீரரான துரோணரைப் போரில் பாதுகாப்பீராக" என்றான் {துரியோதனன்}.

ஓ! பாரதர்களின் தலைவரே {திருதராஷ்டிரரே}, இவ்வார்த்தைகளைச் சொன்ன உமது மகன் துரியோதனன்,(30) பயங்கர இருளைக் கொண்ட அந்த இரவில் தன் துருப்புகளைப் போரிடத் தூண்டினான். ஓ! பாரதர்களின் தலைவரே, ஓ! ஏகாதிபதி {திருதராஷ்டிரரே}, அப்போது, வெற்றி மீது கொண்ட விருப்பத்தால் இயக்கப்பட்ட அவ்விரு படைகளுக்கும் இடையில் ஒரு போர் தொடங்கியது.(31) பல்வேறு விதங்களிலான ஆயுதங்களால், அர்ஜுனன் கௌரவர்களையும், கௌரவர்கள் அர்ஜுனனையும் பீடிக்கத் தொடங்கினர். அந்தப் போரில் நேரான கணைகளின் மழையால், துரோணரின் மகன் {அஸ்வத்தாமன்} பாஞ்சாலர்களின் ஆட்சியாளனையும் {துருபதனையும்}, துரோணர் சிருஞ்சயர்களையும் மறைக்கத் தொடங்கினர். (ஒரு புறத்தில்) பாண்டு மற்றும் பாஞ்சாலத் துருப்புகளும், (மறுபுறத்தில்) கௌரவத் துருப்புகளும் போரில் ஒருவரையொருவர் கொன்ற போது, ஓ! பாரதரே {திருதராஷ்டிரரே}, அந்தக் களத்தில் சீற்றமிக்க ஆரவாரம் எழுந்தது. அந்த இரவில் நடைபெற்ற போரானது பயங்கரமானதாகவும், எங்களாலோ, எங்களுக்கு முன் சென்றவர்களாலோ இதற்கு முன் காணப்படாத வகையில் கடுமையானதாகவும் இருந்தது" {என்றான் சஞ்சயன்}.(32-35)

சஞ்சயன் {திருதராஷ்டிரனிடம்} சொன்னான், "கண்மூடித்தனமான படுகொலைகள் நிறைந்த அந்தப் பயங்கரமான இரவுப்போர் நடந்து கொண்டிருந்தபோது, ஓ! மன்னா {திருதராஷ்டிரரே}, பாண்டவர்கள், பாஞ்சாலர்கள் மற்றும் சோமகர்களிடம் தர்மனின் மகனான யுதிஷ்டிரன் பேசினான். உண்மையில், ஓ! மன்னா {திருதராஷ்டிரரே}, மனிதர்கள், தேர்கள் மற்றும் யானைகளை அழிப்பதற்காகத் தன் துருப்புகளுக்கு உத்தரவிட்ட யுதிஷ்டிரன், அவர்களிடம், "துரோணரைக் கொல்வதற்காக அவரை மட்டுமே எதிர்த்து  செல்வீராக" என்றான்.(1-3) ஓ! ஏகாதிபதி {திருதராஷ்டிரரே}, மன்னனின் {யுதிஷ்டிரனின்} உத்தரவின் பேரில் பாஞ்சாலர்களும், சோமகர்களும், பயங்கரக் கூச்சலிட்டபடியே துரோணரை மட்டுமே எதிர்த்து விரைந்தனர்.(4) சினத்தால் தூண்டப்பட்ட நாங்கள், பதிலுக்கு முழங்கியவாறே, எங்கள் ஆற்றல், துணிவு, வலிமை ஆகியவற்றில் சிறந்ததைப் பயன்படுத்திப் போரில் அவர்களை எதிர்த்து விரைந்தோம்.(5)


ஹிருதிகனின் மகனான கிருதவர்மன், மதங்கொண்ட யானையை எதிர்த்து விரையும் மதங்கொண்ட பகை யானையைப் போலத் துரோணரை எதிர்த்துச் சென்று கொண்டிருந்த யுதிஷ்டிரனை எதிர்த்து விரைந்தான்.(6)

சுற்றிலும் கணைமாரியை இறைத்தபடி சென்று கொண்டிருந்த சிநியின் பேரனை {சாத்யகியை} எதிர்த்து, ஓ! மன்னா {திருதராஷ்டிரரே}, போரில் (எதிரிகளை) கலங்கடிக்கும் குரு போர்வீரனான பூரி விரைந்தான்.(7)

விகர்த்தனன் மகனான கர்ணன், ஓ! மன்னா {திருதராஷ்டிரரே}, துரோணரை அடைய சென்று கொண்டிருந்தவனும், வலிமைமிக்கப் போர்வீரனும், பாண்டுவின் மகனுமான சகாதேவனைத் தடுத்தான்.(8)

அந்தப் போரில் மன்னன் துரியோதனன், யமனைப் போலத் தன் தேரில் சென்று கொண்டிருந்தவனும், தேர்வீரர்களில் முதன்மையானவனுமான பீமசேனனை எதிர்த்துத் தானே விரைந்தான்.(9)

சுபலனின் மகனான சகுனி, ஓ! மன்னா {திருதராஷ்டிரரே}, அனைத்து வகைப் போர்முறைகளையும் அறிந்தவனும், போர்வீரர்களில் முதன்மையானவனுமான நகுலனை எதிர்த்து வேகமாகச் சென்றான்.(10)

சரத்வானின் மகனான கிருபர், ஓ! மன்னா {திருதராஷ்டிரரே}, போர்வீரர்களில் முதன்மையான சிகண்டி தன் தேரில் சென்று கொண்டிருந்த போது, அந்தப் போரில் பின்னவனை {சிகண்டியைத்} தடுத்தார்.(11)

தீவிரமாகப் போட்டியிடும் துச்சாசனன், ஓ! மன்னா {திருதராஷ்டிரரே}, மயில்களைப் போலத் தெரிந்த குதிரைகளால் இழுக்கப்பட்டு, உறுதியான தீர்மானத்துடன் (தன் தேரில்) சென்று கொண்டிருந்த பிரதிவிந்தியனைத் தடுத்தான்.(12)

ஓ! ஏகாதிபதி {திருதராஷ்டிரரே}, அஸ்வத்தாமன், நூற்றுக்கணக்கான மாயைகளை அறிந்தவனான ராட்சசன் (கடோத்கசன்) முன்னேறிவந்த போது, பின்னவனை {கடோத்கசனைத்} தடுத்தான்.(13)

விருஷசேனன், அந்தப் போரில் துரோணரைக் கைப்பற்றச் சென்ற துருபதனை, பின்னவனின் {துருபதனின்} துருப்புகள் மற்றும் அவனைப் பின்தொடர்பவர்களுடன் சேர்த்துத் தடுத்தான்.(14)

ஓ! மன்னா {திருதராஷ்டிரரே}, கோபத்தால் தூண்டப்பட்ட மத்ர மன்னன் {சல்லியன்}, ஓ! பாரதரே {திருதராஷ்டிரரே}, துரோணரைக் கொல்வதற்காக வேகமாகச் சென்ற விராடனைத் தடுத்தான்.(15)

அந்தப் போரில் சித்திரசேனன், துரோணரைக் கொல்வதற்காகச் சென்று கொண்டிருந்த நகுலன் மகனான சதானீகன் மீது பல கணைகளை ஏவியும், பெரும் பலத்தைப் பயன்படுத்தியும் பின்னவனை {சதானீகனைத்} தடுத்தான்.

(16) ராட்சசர்களின் இளவரசனான அலம்புசன், ஓ! மன்னா {திருதராஷ்டிரரே}, தேர்வீரர்களில் முதன்மையான அர்ஜுனன் முன்னேறிக் கொண்டிருந்த போது, பின்னவனை {அர்ஜுனனைத்} தடுத்தான்.(17)

பாஞ்சாலர்களின் இளவரசனான திருஷ்டத்யும்னன், பெரும் வில்லாளியான துரோணர் எதிரியைக் கொல்வதில் ஈடுபட்டுக் கொண்டிருந்த போது, பின்னவரை {துரோணரை} மகிழ்ச்சியாகத் தடுத்தான்.(18) பாண்டவர்களின் வலிமைமிக்கத் தேர்வீரர்களில் அப்படி (துரோணரை எதிர்த்துச்) சென்ற பிறரைப் பொறுத்தவரை, ஓ! மன்னா {திருதராஷ்டிரரே}, அவர்களை உமது படையின் பிற தேர்வீரர்கள் பெரும் பலத்துடன் தடுத்தனர்.(19)

அந்தப் பயங்கரப் போரில் யானைப்பாகர்களோடு {வீரர்களோடு} மோதிய {வேறு} யானைப் பாகர்கள், ஆயிரக்கணக்கில் போரிடத் தொடங்கி, ஒருவரையொருவர் கலங்கடித்தனர்.(20) ஓ! ஏகாதிபதி {திருதராஷ்டிரரே}, அந்த நள்ளிரவில் குதிரைகள் ஒன்றையொன்று நோக்கி மூர்க்கமாக விரைந்தபோது, சிறகுகளைக் கொண்ட மலைகளைப் போலத் தெரிந்தன.(21) ஓ! ஏகாதிபதி (திருதராஷ்டிரரே}, வேல்கள், ஈட்டிகள், வாள்கள் ஆகியவற்றுடன் கூடிய குதிரைவீரர்கள் உரக்கக் கூச்சலிட்டபடியே {வேறு} குதிரைவீரர்களுடன் மோதினர்.(22) கதாயுதங்கள், குறுந்தண்டங்கள் {உலக்கைகள்} மற்றும் பல்வேறு வகைகளிலான பிற ஆயுதங்களோடு கூடிய பெரும் எண்ணிக்கையிலான மனிதர்கள் ஒருவரையொருவர் கொன்று குவித்தனர்.(23)

ஹிருதிகனின் மகனான கிருதவர்மன் கோபத்தால் தூண்டப்பட்டு, பொங்கும் கடலைத் தடுக்கும் கண்டங்களை {கரைகளைப்} போலத் தர்மனின் மகனான யுதிஷ்டிரனைத் தடுத்தான்.(24) எனினும் யுதிஷ்டிரன், ஐந்து கணைகளால் ஹிருதிகன் மகனை {கிருதவர்மனைத்} துளைத்து, மீண்டும் இருபதாலும் அவனைத் {கிருதவர்மனைத்} துளைத்து, அவனிடம் {கிருதவர்மனிடம்}, "நில், நிற்பாயாக" என்றான்.(25) அப்போது, ஓ! ஐயா {திருதராஷ்டிரரே}, கோபத்தால் தூண்டப்பட்ட கிருதவர்மன், ஒரு பல்லத்தைக் கொண்டு, நீதிமானான மன்னன் யுதிஷ்டிரனின் வில்லை அறுத்து பின்னவனை {யுதிஷ்டிரனை} ஏழு கணைகளால் துளைத்தான்(26) வலிமைமிக்கத் தேர்வீரனான அந்தத் தர்மனின் மகன் {யுதிஷ்டிரன்} மற்றொரு வில்லை எடுத்துக் கொண்டு, பத்து கணைகளால் ஹிருதிகன் மகனின் {கிருதவர்மனின்} கரங்களையும், மார்பையும் துளைத்தான்.(27)

அப்போது மதுகுலத்தைச் சேர்ந்த அந்தப் போர்வீரன் {கிருதவர்மன்}, ஓ! ஐயா {திருதராஷ்டிரரே} தர்மனின் மகனால் {யுதிஷ்டிரனால்} அந்தப் போரில் துளைக்கப்பட்டு, சினத்தால் நடுங்கியபடியே ஏழு கணைகளால் யுதிஷ்டிரனைப் பீடித்தான்.(28) பிறகு அந்தப் பிருதையின் மகன் {குந்தியின் மகன் யுதிஷ்டிரன்}, தன் எதிரியின் வில்லை அறுத்து, அவனது {கிருதவர்மனின்} கரங்களை மறைத்திருந்த தோலுறைகளயும் அறுத்து, கல்லில் கூராக்கப்பட்ட ஐந்து கூரிய கணைகளை அவன் {கிருதவர்மனின்} மீதும் ஏவினான்.(29) அந்தக் கடுங்கணைகள், தங்கத்தால் அலங்கரிக்கப்பட்டதும் விலைமதிப்புமிக்கதுமான பின்னவனின் {கிருதவர்மனின்} கவசத்தைத் துளைத்துச் சென்று, எறும்புப்புற்றுக்குள் நுழையும் பாம்புகளைப் போலப் பூமிக்குள் நுழைந்தன.(30) கண்ணிமைக்கும் நேரத்திற்குள் மற்றொரு வில்லை எடுத்த கிருதவர்மன், பாண்டுவின் மகனை {யுதிஷ்டிரனை} அறுபது {60} கணைகளாலும், மீண்டும் பத்தாலும் துளைத்தான்.(31) அளவிலா ஆன்மா கொண்ட பாண்டுவின் மகன் {யுதிஷ்டிரன்}, தன் பெரிய வில்லைத் தேரில் வைத்துவிட்டு, பாம்புக்கு ஒப்பான ஈட்டி ஒன்றை கிருதவர்மனின் மீது ஏவினான்.(32) தங்கத்தால் அலங்கரிக்கப்பட்டதும், பாண்டு மகனால் {யுதிஷ்டிரனால்} ஏவப்பட்டதுமான அந்த ஈட்டி, கிருதவர்மனின் வலக்கரத்தைத் துளைத்துச் சென்று பூமிக்குள் நுழைந்தது.(33) அதே வேளையில், பிருதையின் மகன் {யுதிஷ்டிரன்} உறுதிமிக்கத் தனது வில்லை எடுத்துக் கொண்டு நேரான கணைகளின் மழையால் ஹிருதிகன் மகனை {கிருதவர்மனை} மறைத்தான்.(34)

அப்போது, விருஷ்ணிகளில் பெரும் தேர்வீரனும், துணிவுமிக்கவனுமான கிருதவர்மன் கண்ணிமைக்கும் நேரத்திற்குள் யுதிஷ்டிரனைக் குதிரைகளற்றவனாகவும், சாரதியற்றவனாகவும், தேரற்றவனாகவும் ஆக்கினான்.(35) அதன் பேரில் பாண்டுவின் மூத்த மகன் {யுதிஷ்டிரன்}, ஒரு வாளையும், கேடயத்தையும் எடுத்துக் கொண்டான். அப்போது அந்த மதுகுலத்தோன் {கிருதவர்மன்}, அந்தப் போரில் அவ்விரு ஆயுதங்களையும் வெட்டினான்.(36) பிறகு யுதிஷ்டிரன், தங்கத்தால் அலங்கரிக்கப்பட்ட கைப்பிடி கொண்ட ஒரு கடும் ஈட்டியை எடுத்து, அந்தப் போரில் சிறப்புமிக்க ஹிருதிகன் மகன் {கிருதவர்மன்} மீது வேகமாக ஏவினான்.(37) எனினும், ஹிருதிகன் மகன் {கிருதவர்மன்} சிரித்துக் கொண்டே தன் பெரும் கரநளினத்தை வெளிக்காட்டியபடி, யுதிஷ்டிரனின் கரங்களில் இருந்து ஏவப்பட்ட அந்த ஈட்டி தன்னை நோக்கி வந்து கொண்டிருந்த போதே அதை இரண்டு துண்டுகளாக வெட்டினான்.(38)

பிறகு அவன் {கிருதவர்மன்}, அம்மோதலில் ஒரு நூறு கணைகளால் தர்மனின் மகனை {யுதிஷ்டிரனை} மறைத்தான். கோபத்தால் தூண்டப்பட்ட அவன் {கிருதவர்மன்}, கணைமாரிகளைக் கொண்டு, பின்னவனின் {யுதிஷ்டிரனின்} கவசத்தை அறுத்தான்.(39) தங்கத்தால் அலங்கரிக்கப்பட்ட யுதிஷ்டிரனின் கவசமானது, ஹிருதிகன் மகனின் {கிருதவர்மனின்} கணைகளால் வெட்டப்பட்டு, ஓ! மன்னா {திருதராஷ்டிரரே}, ஆகாயத்தில் இருந்து விழும் ஒரு நட்சத்திரக் கூட்டத்தைப் போல, அவனது உடலில் இருந்து கீழே விழுந்தது.(40) கவசம் அறுபட்டு, தேரையும் இழந்து, கிருதவர்மனின் கணைகளாலும் பீடிக்கப்பட்டட தர்மனின் மகன் {யுதிஷ்டிரன்}, போரில் இருந்து விரைவாகப் பின்வாங்கினான்.(41) வலிமைமிக்கத் தேர்வீரனான கிருதவர்மன், தர்மனின் மகனான யுதிஷ்டிரனை வென்ற பிறகு, மீண்டும் துரோணருடைய தேரின் சக்கரத்தைப் பாதுகாக்கத் தொடங்கினான்" {என்றான் சஞ்சயன்}.(42)
….
தொடரும்..
..
மகாபாரதம் தொடர் முழுவதும் படிக்க இந்துமதம் வாட்ஸ்அப் குழுவில் இணைந்திருங்கள்  

No comments:

Post a Comment