மஹாபாரதம்(முழுவதும்)-பாகம்-313
துரோண பர்வம்
….
திருஷ்டத்யும்னனை வென்ற அஸ்வத்தாமன்
..
சஞ்சயன் {திருதராஷ்டிரனிடம்} சொன்னான், "சினத்தில் பெருகியிருந்த பாண்டவர்களின் அந்தப் பரந்த படையைக் கண்டு, அதைத் தடுக்கப்பட முடியாததாகக் கருதிய உமது மகன் துரியோதனன், கர்ணனிடம் இவ்வார்த்தைகளில் பேசினான்:(1) "ஓ! நண்பர்களிடம் அர்ப்பணிப்பு கொண்டவனே, உன் நண்பர்களைப் பொறுத்தவரை இப்போது (உன் உதவி மிகவும் தேவைப்படும்) நேரம் வந்துவிட்டது. ஓ! கர்ணா, என் போர்வீரர்கள் அனைவரையும் போரில் காப்பாயாக.(2) சினத்தில் நிறைந்தவர்களும், சீறும் பாம்புகளுக்கு ஒப்பானவர்களுமான பாஞ்சாலர்கள், கைகேயர்கள், மத்ஸ்யர்கள், வலிமைமிக்கத் தேர்வீரர்களான பாண்டவர்கள் ஆகியோர் அனைவராலும் இப்போது நமது போராளிகள் அனைத்துப்பக்கங்களிலும் சூழப்பட்டிருக்கின்றனர்.(3) அதோ {பார்}, வெற்றியை விரும்பும் பாண்டவர்கள் மகிழ்ச்சியில் முழங்கிக் கொண்டிருக்கின்றனர். பாஞ்சாலர்களின் பரந்த தேர்ப்படையானது சக்ரனின் {இந்திரனின்} ஆற்றலைக் கொண்டுள்ளதாகும்" என்றான் {துரியோதனன்}.(4)
கர்ணன் {துரியோதனனிடம்}, "பார்த்தனை {அர்ஜுனனைக்} காப்பதற்காகப் புரந்தரனே {இந்திரனே} இங்கு வந்தாலும், வேகமாக அவனையும் {இந்திரனையும்} வென்று, அந்தப் பாண்டுவின் மகனை {அர்ஜுனனை} நான் கொல்வேன்.(5) {இதை} நான் உண்மையாகவே சொல்கிறேன். ஓ! பாரதா {துரியோதனா}, உற்சாகங்கொள்வாயாக. பாண்டுவின் மகன்களையும், கூடியிருக்கும் அனைத்துப் பாஞ்சாலர்களையும் நான் கொல்வேன்.(6) பாவகனின் {அக்னியின்} மகன் {கார்த்திகேயன்} வாசவனுக்கு {இந்திரனுக்கு} வெற்றியைப் பெற்றுத் தருவதைப் போலவே நானும் உனக்கு வெற்றியைப் பெற்றுத் தருவேன். எதிர்வந்திருக்கும் இந்தப் போரில் உனக்கு ஏற்புடையது எதுவோ, அதையே நான் செய்வேன்.(7) பார்த்தர்கள் அனைவரிலும் பல்குனனே {அர்ஜுனனே} பலவானாவான். சக்ரனின் {இந்திரனின்} கைவண்ணம் {வேலைப்பாடு} கொண்ட மரண ஈட்டியை {சக்தி ஆயுதத்தை} அவன் மீது வீசுவேன்.(8) ஓ! கௌரவங்களை அளிப்பவனே {துரியோதனா}, அந்தப் பெரும் வில்லாளி {அர்ஜுனன்} இறந்ததும், அவனது சசோதரர்கள் உன்னிடம் சரணடைவார்கள், அல்லது மீண்டும் காட்டுக்குச் செல்வார்கள்.(9) ஓ! கௌரவ்யா {துரியோதனா}, நான் உயிரோடிருக்கையில் எந்தத் துயரிலும் ஒருபோதும் ஈடுபடாதே. ஒன்று சேர்ந்திருக்கும் பாண்டவர்கள் அனைவரையும், ஒன்றுகூடியிருக்கும் பாஞ்சாலர்கள், கைகேயர்கள் மற்றும் விருஷ்ணிகள் அனைவரையும் போரில் நான் வெல்வேன். என் கணைமாரிகளின் மூலம் அவர்களை முள்ளம்பன்றிகளாக்கி, பூமியை நான் உனக்கு அளிப்பேன்" என்று மறுமொழி கூறினான் {கர்ணன்}.(11)
சஞ்சயன் {திருதராஷ்டிரனிடம்} தொடர்ந்தான், "கர்ணன் இவ்வார்த்தைகளைச் சொல்லிக் கொண்டிருக்கும்போது, வலிமைமிக்கக் கரங்களைக் கொண்ட சரத்வான் மகன் {கிருபர்}, சிரித்துக் கொண்டே சூதனின் மகனிடம் {கர்ணனிடம்} இவ்வார்த்தைகளைச் சொன்னார்:(12) "ஓ! கர்ணா, உன் பேச்சு நன்றாக இருக்கிறது. வார்த்தைகள் மட்டுமே வெற்றிக்கு வழிவகுக்கும் என்றால், ஓ! ராதையின் மகனே {கர்ணா}, உன்னைப் பாதுகாவலனாகக் கொள்ளும் இந்தக் குருக்களில் காளை {துரியோதனன்}, போதுமான அளவு பாதுகாப்பு கொண்டவனாகவே கருதப்படுவான்.(13) ஓ! கர்ணா, குரு தலைவனின் {துரியோதனனின்} முன்னிலையில் நீ அதிகமாகத் தற்புகழ்ச்சி செய்து கொள்கிறாய். ஆனால் உண்மையில் உன் ஆற்றலோ, (தற்புகழ்ச்சி நிறைந்த உனது பேச்சுகளின்) எந்த விளைவுகளோ எப்போதும் காணப்பட்டதில்லை.(14) பாண்டுவின் மகன்களுடன் போரில் நீ மோதுவதைப் பல நேரங்களில் நாங்கள் கண்டிருக்கிறோம். அந்தச் சந்தர்ப்பங்கள் ஒவ்வொன்றிலும், ஓ! சூதனின் மகனே {கர்ணா}, பாண்டவர்களால் நீ வெல்லப்பட்டாய்.(15) கந்தர்வர்களால் திருதராஷ்டிரன் மகன் {துரியோதனன்} (கைதியாகக்) கொண்டு செல்லப்பட்ட போது, அந்தச் சந்தர்ப்பத்தில் முதல் ஆளாக ஓடிய ஒரே ஆளான உன்னைத் தவிரத் துருப்புகள் அனைத்தும் போரிடவே செய்தன [1].(16)
[1] வேறொரு பதிப்பில், "கந்தர்வர்களால் திருதராஷ்டிர புத்திரன் கவரப்பட்ட காலத்தில் எல்லாச் சேனைகளும் போர்புரிந்தன. அப்போது நீ ஒருவன் மாத்திரம் முந்தி ஓடிவிட்டாய்" என்றிருக்கிறது.
விராடனின் நகரத்திலும், நீயும், உன் தம்பியும் உள்பட ஒன்று சேர்ந்திருந்த கௌரவர்கள் அனைவரும் போரில் பார்த்தனால் வெல்லப்பட்டனர்.(17) பாண்டுவின் மகன்களில் பல்குனன் {அர்ஜுனன்} என்ற ஒரே ஒருவனுக்குக் கூடப் போர்க்களத்தில் நீ இணையாகமாட்டாய். அப்படியிருக்கையில், கிருஷ்ணனைத் தங்களின் தலைமையில் கொண்ட பாண்டு மகன்கள் அனைவரையும் நீ எவ்வாறு வெல்லத் துணிவாய்?(18) ஓ! சூதனின் மகனே {கர்ணா}, நீ மிகவும் அதிகமாகத் தற்புகழ்ச்சியில் ஈடுபடுகிறாய். எதையும் சொல்லாமல் நீ போரில் உன்னை ஈடுபடுத்திக் கொள்வாயாக. தற்பெருமையில் ஈடுபடாமல் ஆற்றலை வெளிப்படுத்துவதே நல்லோரின் கடமையாகும்.(19) ஓ! சூதனின் மகனே, ஓ! கர்ணா கூதிர்காலத்தின் வறண்ட மேகங்களைப் போல எப்போதும் முழங்கிக் கொண்டு, பொருட்படுத்தத் தகாதவனாகவே உன்னை நீ காட்டிக்கொள்கிறாய். எனினும், இதை மன்னன் {துரியோதனன்} புரிந்து கொள்ளவில்லை.(20)
ஓ! ராதையின் மகனே {கர்ணா}, பிருதையின் மகனை {அர்ஜுனனைக்} காணும்வரைதான் நீ முழங்கிக் கொண்டிருப்பாய். பார்த்தன் {அர்ஜுனன்} அருகில் வருவதைக் கண்டதும் உன் முழக்கங்கள் அனைத்தும் மறைந்துவிடும்.(21) உண்மையில் நீ பல்குனனின் {அர்ஜுனனின்} கணைகள் அடையும் தொலைவுக்கு வெளியே இருக்கும் வரையே முழங்கிக் கொண்டிருக்கிறாய். பார்த்தனின் {அர்ஜுனனின்} கணைகளால் நீ துளைக்கப்படும்போது, இந்த உனது முழக்கங்கள் மறைந்துவிடுகின்றன.(22) க்ஷத்திரியர்கள் தங்கள் கரங்களின் மூலம் தங்கள் மாண்பைக் காட்டுவர். பிராமணர்கள் பேச்சு மூலமாக {தமது மாண்பைக் காட்டுவர்}; அர்ஜுனன் தன் வில்லின் மூலமாக {தன் மாண்பைக்} காட்டுவான்; ஆனால் கர்ணனோ, ஆகாயத்தில் அவன் கட்டும் கோட்டைகளின் மூலம் {தன் மாண்பைக்} காட்டுவான்.(23) (போரில்) ருத்ரனையே மன நிறைவு கொள்ளச் செய்த அந்தப் பார்த்தனை {அர்ஜுனனைத்} தடுக்கவல்லவன் எவன் இருக்கிறான்?" என்றார் {கிருபர்}.
இப்படிச் சரத்வான் மகனால் {கிருபரால்} கோபம் தூண்டப்பட்டவனும், அடிப்பவர்களில் முதன்மையானவனுமான கர்ணன், கிருபருக்குப் பின்வரும் விதத்தில் பதிலளித்தான்:(24) "வீரர்கள் எப்போதும் மழைக்காலத்து மேகங்களைப் போல முழங்கி, நிலத்தில் இடப்பட்ட விதைகளைப் போல வேகமாகக் கனிகளை {பலன்களைத்} தருவார்கள்.(25) போர்க்களத்தில் பெரும் சுமைகளைத் தங்கள் தோள்களில் ஏற்கும் வீரர்கள், தற்புகழ்ச்சி நிறைந்த பேச்சுகளில் ஈடுபடுவதில் நான் எக்குறையும் காணவில்லை. சுமையைத் தாங்கிக் கொள்ள மனதால் தீர்மானிக்கும் ஒருவனது செயல் நிறைவேறுவதில் விதியே அவனுக்கு உதவி செய்கிறது.(26,27) பெரும் சுமையைச் சுமக்க இதயத்தால் விரும்பும் நான், போதுமான உறுதியை எப்போதும் ஒன்றுதிரட்டுகிறேன்.(28)
ஓ! பிராமணரே {கிருபரே}, போரில் கிருஷ்ணன் மற்றும் சாத்வதர்களுடன் கூடிய பாண்டுவின் மகன்களைக் கொன்ற பிறகு இத்தகு முழக்கங்களில் நான் ஈடுபட்டால் உமக்கென்ன?(29) வீரர்கள் எவரும் கூதிர்க்காலத்து மேகங்களைப் போலக் கனியற்ற {பலன்றற} வகையில் முழங்குவதில்லை. தன் சொந்த வலிமையை அறிந்தே விவேகிகள் முழக்கங்களில் ஈடுபடுகின்றனர்.(30) ஒன்றாகச் சேர்ந்து, உறுதியுடன் போரிட்டு வரும் கிருஷ்ணன் மற்றும் பார்த்தனை {அர்ஜுனனை} இன்றைய போரில் வெல்ல என் இதயத்தில் தீர்மானித்திருக்கிறேன். ஓ! கௌதமரின் மகனே {கிருபரே}, அதற்காகவே நான் முழங்குகிறேன்.(31) ஓ! பிராமணரே {கிருபரே}, என் இந்த முழக்கங்களின் கனியைப் பார்ப்பீராக. போரில் தங்களைப் பின்தொடர்பவர்கள் {தொண்டர்கள்}, கிருஷ்ணன் மற்றும் சாத்வதர்கள் ஆகிய அனைவரோடும் சேர்ந்த பாண்டுவின் மகன்களைக் கொன்று, ஒரு முள்ளும் {எந்த எதிரியும்} இல்லாத முழுப் பூமியை நான் துரியோதனனுக்கு அளிப்பேன்" என்றான் {கர்ணன்}. (32)
கிருபர் {கர்ணனிடம்}, "செயல்கள் இல்லாமல் உன் சிந்தனைகளையே கண்டுபிடித்துச் சொல்லும் உனது இந்தப் பிதற்றல்களை நான் சிறிதும் கணக்கில் கொள்ளவில்லை. நீ எப்போதும் கிருஷ்ணர்கள் {கருப்பர்களான கிருஷ்ணன், அர்ஜுனன்} இருவரையும், நீதிமானான மன்னன் யுதிஷ்டிரனையும் மதிப்பு குறைவாகவே பேசுகிறாய்.(33) ஓ! கர்ணா, போரில் திறம்பெற்ற அவ்விரு வீரர்களைத் தன் தரப்பில் எவன் கொண்டிருக்கிறானோ, அவன் வெற்றி அடைவது உறுதி. உண்மையில், தேவர்கள், கந்தர்வர்கள், யக்ஷர்கள், மனிதர்கள், நாகர்கள், பறவைகள் ஆகிய அனைவரும் கவசம் பூண்டு வந்தாலும், கிருஷ்ணனும், அர்ஜுனனும் வீழ்த்தப்பட முடியாதவர்களே. தர்மனின் மகனான யுதிஷ்டிரன், பிராமணர்களிடம் அர்ப்பணிப்பு கொண்டவனாவான். அவன் உண்மைநிறைந்த பேச்சு கொண்டவனாகவும், தற்கட்டுப்பாடு கொண்டவனாகவும் இருக்கிறான். பித்ருக்களையும், தேவர்களையும் அவன் துதிக்கிறான். அவன் {யுதிஷ்டிரன்} உண்மை மற்றும் அறப்பயிற்சிகளில் அர்ப்பணிப்புடன் இருக்கிறான்.
மேலும் அவன் {யுதிஷ்டிரன்} ஆயுதங்களில் திறம்பெற்றவனாகவும் இருக்கிறான். பெரும் நுண்ணறிவு கொண்ட அவன், நன்றியறிவுள்ளவனாகவும் இருக்கிறான்.(34-36) அவனது {யுதிஷ்டிரனது} தம்பியர் அனைவரும் பெரும் வலிமை கொண்டவர்களாகவும், அனைத்து ஆயுதங்களையும் நன்கு பயின்றவர்களாகவும் இருக்கின்றனர். அவர்கள் தங்கள் மூத்தோரின் சேவையில் அர்ப்பணிப்புடன் இருக்கின்றனர். ஞானமும், புகழும் கொண்ட அவர்கள் தங்கள் செயல்பாடுகளில் நீதியுள்ளவர்களாக {அறவோராக} இருக்கின்றனர்.(37) அவர்களது சொந்தங்கள் மற்றும் உறவினர்கள் அனைவரும் இந்திரனின் ஆற்றலைக் கொண்டவர்களாக இருக்கின்றனர். தாக்குவதில் திறமையான அவர்கள் அனைவரும் பாண்டவர்களிடம் மிகவும் அர்ப்பணிப்புடன் இருக்கின்றனர்.
திருஷ்டத்யும்னன், சிகண்டி, துர்முக்ஷன் மகனான ஜனமேஜயன் {தௌர்முகி}(38), சந்திரசேனன், மத்திரசேனன், கீர்த்திவர்மன், துருவன், தரன், வசுசந்திரன், சுதேஜனன்,(39) துருபதனின் மகன்கள், வலிமைமிக்க உயர்ந்த ஆயுதங்களை அறிந்தவனான துருபதன், மத்ஸ்யர்களின் மன்னன் {விராடன்}, அவர்களுக்காக {பாண்டவர்களுக்காக} உறுதியுடன் போராடும் அவனது {விராடனின்} தம்பியர்(40) அனைவரும், கஜானீகன், சுருதானீகன், வீரபத்திரன், சுதர்சனன், சுருதத்வஜன், பலானீகன், ஜயானீகன், ஜயப்பிரியன்,(41) விஜயன், லப்தலாக்ஷன், ஜயாஸ்வன், காமராஷன், விராடனின் அழகிய சகோதரர்கள்,(42) இரட்டையர் (நகுலன் மற்றும் சகாதேவன்), திரௌபதியின் மகன்கள் (ஐவர்), ராட்சசன் கடோத்கசன் ஆகியோர் அனைவரும் பாண்டவர்களுக்காகவே போரிடுகின்றனர். எனவே, பாண்டுவின் மகன்கள் அழிவைச் சந்திக்கமாட்டார்கள்.(43)
இவர்களும், இன்னும் பிற (வீரர்களின்) கூட்டத்தினர் பலரும் பாண்டுவின் மகன்களுக்காகவே போரிடுகின்றனர். தேவர்கள், அசுரர்கள் மற்றும் மனிதர்களுடன் கூடியதும், யக்ஷர்கள் மற்றும் ராட்சசர்களின் குழுக்கள் அனைத்துடன் கூடியதும், யானைகள், பாம்புகள் மற்றும் பிற உயிரினங்கள் அனைத்துடன் கூடியதுமான மொத்த அண்டமே, பீமன் மற்றும் பல்குனன் {அர்ஜுனன்} ஆகியோரின் ஆயுத ஆற்றலில் அழிக்கப்படும் என்பதில் ஐயமில்லை.(44,45) யுதிஷ்டிரனைப் பொறுத்தவரை, கோபம் நிறைந்த தன் கண்களால் மட்டுமே அவனால் மொத்த உலகையும் எரித்துவிட முடியும். ஓ! கர்ணா, அளவிலா வலிமை கொண்ட சௌரியே {கிருஷ்ணனே} யாவருக்காகக் கவசம் பூண்டானோ அந்த எதிரிகளை எவ்வாறு நீ வெல்லத் துணிவாய்? ஓ! சூதனின் மகனே {கர்ணா}, நீ எப்போதும் சௌரியுடன் {கிருஷ்ணனுடன்} போரில் மோதத் துணிகிறாய் என்பது உன் பங்குக்குப் பெரும் மடமையாகும்" என்றார் {கிருபர்}.(46,47)
சஞ்சயன் {திருதராஷ்டிரனிடம்} தொடர்ந்தான், "(கிருபரால்) இப்படிச் சொல்லப்பட்ட ராதையின் மகனான கர்ணன், ஓ! குரு குலத்தின் காளையே {திருதராஷ்டிரரே}, சிரித்துக் கொண்டே சரத்வானின் மகனான ஆசான் கிருபரிடம் இந்த வார்த்தைகளைச் சொன்னான்:(48) "ஓ! பிராமணரே {கிருபரே}, பாண்டவர்களைக் குறித்து நீர் சொன்ன வார்த்தைகள் அனைத்தும் உண்மையே. இவையும், இன்னும் பிற நற்குணங்களும் பாண்டு மகன்களிடம் காணப்படவே செய்கின்றன.(49) பார்த்தர்கள், வாசவனின் {இந்திரனின்} தலைமையிலான தேவர்களாலும், தைத்தியர்களாலும், யக்ஷர்களாலும், ராட்சசர்களாலும் வெல்லப்பட முடியாதவர்களாகவே இருக்கின்றனர்.(50) ஆனாலும், வாசவன் {இந்திரன்} என்னிடம் கொடுத்துள்ள ஈட்டியின் {சக்தியின்} உதவியால் நான் பார்த்தர்களை வெல்வேன். ஓ! பிராமணரே {கிருபரே}, சக்ரனால் {இந்திரனால்} எனக்குக் கொடுக்கப்பட்டுள்ள ஈட்டியானது கலங்கடிக்கப்பட முடியாதது என்பதை நீர் அறிவீர்.(51) அதைக் கொண்டு போரில் நான் சவ்யசச்சினை {அர்ஜுனனைக்} கொல்வேன். அர்ஜுனனின் வீழ்ச்சிக்குப் பிறகு, கிருஷ்ணனும், அர்ஜுனனோடு பிறந்த சகோதரர்களும், அர்ஜுனன் (அவர்களுக்கு உதவி செய்ய) இல்லாமல் பூமியை {பூமியின் அரசுரிமையை} அனுபவிக்க முடியாதவர்களாகவே இருப்பார்கள்.(52) எனவே, அவர்கள் அனைவரும் அழிவையே அடைவார்கள். கடல்களுடன் கூடிய இந்தப் பூமியானவள், குருக்களின் தலைவன் {துரியோதனன்} எந்த முயற்சியையும் செய்யாமலேயே அவனுடைய உடைமையாகவே இருப்பாள்.(53) {நல்ல} கொள்கையால் இவ்வுலகில் அனைத்தும் அடையத்தக்கதே என்பதில் ஐயமில்லை.(54) ஓ! கௌதமரே {கிருபரே}, இதை அறிந்தே நான் இந்த முழக்கங்களில் {கர்ஜனைகளில்} ஈடுபடுகிறேன்.
உம்மைப் பொறுத்தவரை, நீர் முதியவராகவும், பிறப்பால் பிராமணராகவும், போரில் திறனற்றவராகவும் இருக்கிறீர்.(55) பாண்டவர்களிடம் நீர் மிகுந்த பாசம் கொண்டிருக்கிறீர். இதன் காரணமாகவே நீர் என்னை இப்படி அவமதிக்கிறீர். ஓ! பிராமணரே, மீண்டும் இதுபோன்ற வார்த்தைகளை என்னிடம் சொன்னீரெனில், ஓ! இழிந்தவரே {கிருபரே}, என் கத்தியை உருவி உமது நாவை அறுத்துவிடுவேன்.(56) ஓ! பிராமணரே {கிருபரே}, ஓ! தீய புரிதல் கொண்டவரே, துருப்புகள் அனைத்தையும், கௌரவர்களையும் அச்சுறுத்தவே நீர் பாண்டவர்களைப் புகழ விரும்புகிறீர்.(57) ஓ! கௌதமரே {கிருபரே}, இதைப் பொறுத்தவரை, நான் என்ன சொல்கிறேன் என்பதைக் கேளும்.(58) போரில் திறனுடையவர்களான துரியோதனன், துரோணர், சகுனி, துர்முகன், ஜயன், துச்சாசனன், விருஷசேனன், மத்ரர்களின் ஆட்சியாளர் {சல்லியர்}, {கிருபராகிய} நீர், சோமதத்தர், பீமன், துரோணரின் மகன் {அஸ்வத்தாமன்}, விவிம்சதி ஆகிய அனைவரும் இங்கே கவசமணிந்து நிற்கின்றனர்.(59,60) சக்ரனின் {இந்திரனின்} ஆற்றலைக் கொண்டிருந்தாலும், போரில் இவர்களை வெல்லத்தக்க எந்த எதிரி இருக்கிறான்? நான் பெயர் சொன்ன வீரர்கள் அனைவரும், ஆயுதங்களில் திறனுடையவர்களும், பெரும் வலிமை கொண்டவர்களும், சொர்க்கத்தில் அனுமதி வேண்டுபவர்களும் [2], அறநெறியறிந்தவர்களும், போரில் திறம்பெற்றவர்களுமாவர்.(61) போரில் அவர்கள் தேவர்களையே கொல்லவல்லவர்களாவர். வெற்றியை விரும்பும் துரியோதனனுக்காகக் கவசமணிந்து பாண்டவர்களைக் கொல்வதற்காகப் போர்க்களத்தில் தங்கள் நிலைகளை இவர்கள் ஏற்பார்கள்.(62) வலிமைமிக்க மனிதர்களின் வழக்கில் கூட வெற்றியென்பது விதியைச் சார்ந்தே இருக்கிறது என்று நான் கருதுகிறேன்.(63)
[2] போர்க்களத்தில் வீழ்ந்து சொர்க்கத்தில் அனுமதி வேண்டுபவர்கள் என்று பொருள் கொள்ள வேண்டுமெனக் கங்குலி இங்கே விளக்குகிறார்.
வலிய கரங்களைக் கொண்ட பீஷ்மரே நூற்றுக்கணக்கான கணைகளால் துளைக்கப்பட்டுக் கிடக்கிறார் எனும்போதும், விகர்ணன், ஜெயத்ரதன்,(64) பூரிஸ்ரவஸ், ஜயன், ஜலசந்தன், சுதக்ஷிணன், தேர்வீரர்களில் முதன்மையான சலன், பெரும் சக்தி கொண்ட பகதத்தன்(65) ஆகிய இவர்களும், தேவர்களாலும் வெல்லப்பட முடியாதவர்களும், (பாண்டவர்களைவிட) வலிமைமிக்கவர்களுமான வீரர்கள் அனைவரும், பாண்டவர்களால் கொல்லப்பட்டுப் போர்க்களத்தில் கிடக்கின்றனர்(66) எனும்போதும், ஓ! மனிதர்களில் இழிந்தவரே, இவையாவும் விதியின் விளைவு என்பதைவிட நீர் வேறு என்ன நினைக்கிறீர்? ஓ! பிராமணரே, யாரை நீர் புகழுகிறீரோ, அந்தத் துரியோதனனின் எதிரிகளைப் பொறுத்தவரையும் கூட, அவர்களில் துணிச்சல்மிக்க வீரர்கள் நூற்றுக்கணக்கிலும், ஆயிரக்கணக்கிலும் கொல்லப்பட்டிருக்கின்றனர்.(67) குருக்கள் மற்றும் பாண்டவர்கள் ஆகிய இரு படைகளும் எண்ணிக்கையில் குறைந்துவருகின்றன.(68) நான் இதில் பாண்டவர்களின் ஆற்றலைக் காணவில்லை. ஓ! மனிதர்களில் இழிந்தவரே, யாரை நீர் வலிமைமிக்கவர்களாக எப்போதும் கருதுகிறீரோ,(69) அவர்களுடன் நான் என் முழு வலிமையைப் பயன்படுத்தித் துரியோதனனின் நன்மைக்காகப் போரில் போராடுவேன். வெற்றியைப் பொறுத்தவரை, அது விதியைச் சார்ந்ததே" என்றான் {கர்ணன்}.(70)
சஞ்சயன் {திருதராஷ்டிரனிடம்} சொன்னான், "தன் மாமன் {கிருபர்}, கடுமையான மற்றும் அவமதிக்கும் வகையிலான வார்த்தைளில் சூதனின் மகனால் {கர்ணனால்} இப்படிச் சொல்லப்படுவதைக் கண்ட அஸ்வத்தாமன், தன் கத்தியை உயர்த்திக் கொண்டு, பின்னவனை {கர்ணனை} நோக்கி மூர்க்கமாக விரைந்தான்.(1) சீற்றத்தால் நிறைந்திருந்த அந்தத் துரோணரின் மகன் {அஸ்வத்தாமன்}, குரு மன்னன் {துரியோதனன்} பார்த்துக் கொண்டிருக்கும்போதே, மதங்கொண்ட யானையை நோக்கிச் செல்லும் சிங்கம் ஒன்றைப் போலக் கர்ணனை நோக்கி விரைந்தான்.(2)
அஸ்வத்தாமன் {கர்ணனிடம்}, "ஓ! மனிதர்களில் இழிந்தவனே {கர்ணா}, அர்ஜுனனிடம் உண்மையில் உள்ள குணங்களையே கிருபர் சொல்லிக் கொண்டிருந்தார். எனினும், தீய புரிதல் கொண்டவனான நீ, துணிவுமிக்க என் மாமனை {கிருபரை} வன்மத்துடன் {கெட்ட நோக்கத்துடன்} நிந்திக்கிறாய்.(3) செருக்கும், துடுக்கும் கொண்ட நீ, உலகத்தின் வில்லாளிகள் எவரையும் போரில் கருதிப்பாராமல் {மதிக்காமல்} உன் ஆற்றலை இன்று தற்புகழ்ச்சி செய்கிறாய்.(4) போரில் உன்னை வென்ற அந்தக் காண்டீவந்தாங்கி {அர்ஜுனன்}, நீ பார்த்துக் கொண்டிருந்த போதே ஜெயத்ரதனைக் கொன்றபோது, உன் ஆற்றல் எங்கே சென்றது? உன் ஆயுதங்கள் எங்கே சென்றன?(5) ஓ! சூதர்களில் இழிந்தவனே, முன்னர்ப் போரில் மகாதேவனையே எதிர்த்தவனை {அர்ஜுனனை} வெல்லப்போவதாக உன் மனதில் வீணான நம்பிக்கை கொள்கிறாய்.(6) தேவர்களும், அசுரர்களும் ஒன்று சேர்ந்து இந்திரனைத் தங்கள் தலைமையில் கொண்டு வந்த போதும், கிருஷ்ணனை மட்டுமே தன் கூட்டாளியாகக் கொண்டவனும், ஆயுததாரிகள் அனைவரிலும் முதன்மையானவனுமான அர்ஜுனனை வெல்ல முடியவில்லை.(7) ஓ! சூதா {கர்ணா}, இந்த மன்னர்களுடன் கூடிய நீ, உலக வீரர்களில் முதன்மையானவனும், வெல்லப்படாதவனுமான அர்ஜுனனை போரில் வெல்வாய் என எவ்வாறு நம்பிக்கை கொள்கிறாய்?(8) ஓ! தீய ஆன்மா கொண்ட கர்ணா, இன்று (நான் உன்னை என்ன செய்யப் போகிறேன் என்பதைப்) பார். ஓ! மனிதர்களில் இழிந்தவனே, ஓ! இழிந்த அறிவு கொண்டவனே, நான் இப்போது உன் உடலிலிருந்து உன் தலையை வெட்டப் போகிறேன்" என்றான் {அஸ்வத்தாமன்}.(9)
சஞ்சயன் {திருதராஷ்டிரனிடம்} தொடர்ந்தான், "இப்படிச் சொன்ன அஸ்வத்தாமன் கர்ணனை நோக்கி மூர்க்கமாக விரைந்தான். அப்போது, பெரும் சக்தி கொண்ட மன்னனும் {துரியோதனனும்}, மனிதர்களில் முதன்மையானவரான கிருபரும் அவனை {அஸ்வத்தாமனைப்} பிடித்துக் கொண்டனர்.(10)
அப்போது கர்ணன் {துரியோதனனிடம்}, "தீய புரிதல் கொண்டவனான இந்த இழிந்த பிராமணன் {அஸ்வத்தாமன்}, தன்னைத் துணிச்சல்மிக்கவனாக நினைத்துக் கொண்டு, போரில் தன் ஆற்றல் குறித்துத் தற்புகழ்ச்சி செய்கிறான். ஓ! குருக்களின் தலைவா {துரியோதனா}, அவனை {அஸ்வத்தாமனை} விடு. அவன் என் வலிமையைச் சந்திக்கட்டும்" என்றான்.(11)
அஸ்வத்தாமன் {கர்ணனிடம்}, "ஓ! சூதன் மகனே {கர்ணா}, ஓ! தீய புரிதல் கொண்டவனே, (உன் குற்றமான) இஃது எங்களால் மன்னிக்கப்படுகிறது. எனினும், உன்னில் எழுந்திருக்கும் இந்தச் செருக்கைப் பல்குனன் {அர்ஜுனன்} தணிப்பான்" என்றான்.(12)
துரியோதனன் {அஸ்வத்தாமனிடம்} , "ஓ! அஸ்வத்தாமரே, உமது கோபத்தைத் தணிப்பீராக. ஓ! கௌரவங்களை அளிப்பவரே, மன்னிப்பதே உமக்குத் தகும். ஓ! பாவமற்றவரே, சூதன் மகனிடம் {கர்ணனிடம்} நீர் கோபங்கொள்ளக் கூடாது.(13) உம் மீதும், கர்ணன், கிருபர், துரோணர், மத்ரர்களின் ஆட்சியாளன் {சல்லியர்}, சுபலனின் மகன் {சகனி} ஆகியோர் மீதும் பெரும் சுமை இருக்கிறது. ஓ! பிராமணர்களில் சிறந்தவரே {அஸ்வத்தாமரே}, உமது கோபத்தை விடுவீராக.(14) அதோ, ராதையின் மகனுடன் {கர்ணனுடன்} போரிட விரும்பி பாண்டவத் துருப்புகள் அனைத்தும் வந்து கொண்டிருக்கின்றன. உண்மையில், ஓ! பிராமணரே, அதோ நம் அனைவரையும் அறைகூவி அழைத்துக் கொண்டே அவர்கள் வருகின்றனர்" என்றான் {துரியோதனன்}.(15)
சஞ்சயன் {திருதராஷ்டிரனிடம்} தொடர்ந்தான், "கடுஞ்சினம் கொண்டிருந்தவனும், இப்படி மன்னனால் தணிக்கப்பட்டவனுமான அந்த உயர் ஆன்ம துரோணர் மகன் {அஸ்வத்தாமன்}, ஓ! ஏகாதிபதி {திருதராஷ்டிரரே}, தன் கோபத்தை அடக்கிக் கொண்டு (கர்ணனை) மன்னித்தான்.(16) அமைதியான மனநிலையையும், உன்னத இதயத்தையும் கொண்ட கிருபர், ஓ! ஏகாதிபதி {திருதராஷ்டிரரே}, மென்தன்மை கொண்டவராததால், மீண்டும் அவனிடம் {கர்ணனிடம்} வந்து இவ்வார்த்தைகளைச் சொன்னார்.(17) கிருபர், "ஓ! தீய இதயம் கொண்ட சூதன் மகனே {கர்ணா}, (உன் குற்றமான) இஃது எங்களால் மன்னிக்கப்படுகிறது. எனினும், உன்னில் எழுந்திருக்கும் இந்தச் செருக்கைப் பல்குனன் {அர்ஜுனன்} தணிப்பான்" என்றார்.(18)
சஞ்சயன் {திருதராஷ்டிரனிடம்} தொடர்ந்தான், "அப்போது பாண்டவர்களும், ஆற்றலுக்காகக் கொண்டாடப்படுபவர்களான பாஞ்சாலர்களும் ஒன்று சேர்ந்து உரக்கக் கூச்சலிட்டபடியே ஆயிரக்கணக்கில் வந்து கொண்டிருந்தனர்.(19) தேர்வீரர்களில் முதன்மையானவனும், பெரும் சக்தி கொண்டவனும், தேவர்களுக்கு மத்தியில் உள்ள சக்ரனைப் போல முதன்மையான குருவீரர்கள் பலரால் சூழப்பட்டவனுமான கர்ணனும், தன் கரங்களின் வலிமையை நம்பி வில்லை வளைத்துக் கொண்டு காத்திருந்தான். உரத்த சிங்க முழக்கங்களால் வகைப்படுத்தப்படுவதும், மிகப் பயங்கரமானதுமான ஒரு போர் கர்ணனுக்கும், பாண்டவர்களுக்கும் இடையில் அப்போது தொடங்கியது.(20,21)
பிறகு, ஓ! ஏகாதிபதி {திருதராஷ்டிரரே}, பாண்டவர்களும், தங்கள் ஆற்றலுக்காகக் கொண்டாடப்படுபவர்களான பாஞ்சாலர்களும்,(22) வலிமைமிக்கக் கரங்களைக் கொண்ட கர்ணனைக் கண்டு, "அதோ கர்ணன் இருக்கிறான்", "இந்தக் கடும் போரில் கர்ணன் எங்குப் போனான்",(23) "ஓ! தீய புரிதல் கொண்டவனே, ஓ! மனிதர்களில் இழிந்தவனே, எங்களுடன் போரிடுவாயாக" என்று உரத்தக் கூச்சலிட்டனர். ராதையின் மகனை {கர்ணனைக்} கண்ட பிறர், கோபத்தால் தங்கள் கண்களை அகல விரித்துக் கொண்டு,(24) "சிறு மதியும், திமிரும் கொண்ட இழிந்தவனான இந்தச் சூதன் மகன் {கர்ணன்}, கூடியிருக்கும் மன்னர்களால் கொல்லப்பட வேண்டும். இவன் வாழ வேண்டிய அவசியம் இல்லை.(25) பாவம் நிறைந்த இந்த மனிதன், பார்த்தர்களுடன் எப்போதும் மிகுந்த பகையுடன் இருக்கிறான். துரியோதனனின் ஆலோசனைகளுக்குக் கீழ்ப்படியும் இவனே இந்தத் தீமைகள் அனைத்திற்கும் வேராக இருப்பவன்.(26) இவனைக் கொல்வீராக" என்றனர்.
இத்தகு வார்த்தைகளைச் சொன்ன பெரும் க்ஷத்திரியத் தேர்வீரர்கள், பாண்டுவின் மகனால் தூண்டப்பட்டு, அவனைக் {கர்ணனைக்} கொல்வதற்காக அவனை நோக்கி விரைந்து, அடர்த்தியான கணைமாரியால் அவனை மறைத்தனர். வலிமைமிக்கப் பாண்டவர்கள் அனைவரும் வருவதைக் கண்ட சூதன் மகன் {கர்ணன்} அப்போது நடுங்காதவனாகவும், அச்சங்கொள்ளாதவனுமாக இருந்தான்.(27,28) உண்மையில், ஓ! பாரதக் குலத்தின் காளையே {திருதராஷ்டிரரே}, யமனுக்கு ஒப்பான துருப்புகளின் அற்புதக் கடலைக் கண்டவனும், வலிமைமிக்கவனும், வேகமான கரங்களைக் கொண்டவனும், போரில் வெல்லப்படாதவனும், உமது மகன்களுக்கு நன்மை செய்பவனுமான அந்தக் கர்ணன், கணைகளின் மேகங்களால் அந்தப் படையை அனைத்துப் பக்கங்களிலும் தடுக்கத் தொடங்கினான். பாண்டவர்களும், கணைமாரியை ஏவியபடி அந்த எதிரியுடன் போரிட்டனர்.(29-31) நூற்றுக்கணக்காகவும், ஆயிரக்கணக்காகவும் தங்கள் விற்களை அசைத்து வந்த அவர்கள், பழங்காலத்தில் சக்ரனுடன் போரிட்ட தைத்தியர்களைப் போலவே அந்த ராதையின் மகனுடன் {கர்ணனுடன்} போரிட்டனர்.(32) எனினும், வலிமைமிக்கக் கர்ணன், அனைத்துப் பக்கங்களிலும் பூமியின் தலைவர்களால் பொழியப்பட்ட கணைகளை, அடர்த்தியான தன் கணைமாரியால் விலக்கினான்.(33) ஒவ்வொருவரின் அருஞ்செயல்களுக்கும் எதிர்வினையாற்றிய அந்த இரு தரப்புக்கும் இடையில் நடைபெற்ற போரானது, பழங்காலத்தில் தேவர்களுக்கும் அசுரர்களுக்கும் இடையில் நடைபெற்ற பெரும்போரில் சக்ரனுக்கும் தானவர்களுக்கும் இடையிலான மோதலுக்கு ஒப்பாக இருந்தது.(34)
தன் எதிரிகள் அனைவரும் உறுதியுடன் போரிட்டாலும், போரில் அவனைத் {கர்ணனைத்} தாக்க முடியாத அளவுக்குப் போரிட்ட சூதனின் மகனிடம் அப்போது நாங்கள் கண்ட கரநளினம் மிக அற்புதமானதாக இருந்தது.(35) (பகை) மன்னர்களால் ஏவப்பட்ட கணைகளின் மேகங்களைத் தடுத்தவனும், வலிமைமிக்கத் தேர்வீரனுமான அந்த ராதையின் மகன் {கர்ணன்}, (தன் எதிரிகளின்) நுகத்தடிகள், ஏர்க்கால்கள், குடைகள், கொடிமரங்கள் மற்றும் குதிரைகள் ஆகியவற்றின் மீது தன் பெயர் பொறிக்கப்பட்ட பயங்கரக் கணைகளை ஏவினான். பிறகு கர்ணனால் பீடிக்கப்பட்ட அந்த மன்னர்கள் தங்கள் பொறுமையை இழந்து,(36,37) குளிரால் பீடிக்கப்பட்ட பசு மந்தையைப் போலக் களத்தில் திரியத் தொடங்கினர். பெரும் எண்ணிக்கையிலான குதிரைகள், யானைகள் ஆகியவையும், தேர்வீரர்களும் கர்ணனால் தாக்கப்பட்டு உயிரையிழந்து கீழே விழுவது அங்கே காணப்பட்டது. ஓ! மன்னா {திருதராஷ்டிரரே}, புறமுதுகிடாத வீரர்களுடைய தலைகள் மற்றும் கரங்களால் அந்த மொத்தக் களமும் விரவி கிடந்தது. ஓ! ஏகாதிபதி {திருதராஷ்டிரரே}, இறந்தோர், இறந்து கொண்டிருந்தோர், ஓலமிடும் போர்வீரர்கள் ஆகியோருடன் கூடிய அந்தப் போர்க்களம், யமனின் ஆட்சிப் பகுதிக்குரிய தன்மையை ஏற்றது.
அப்போது, ஓ! மன்னா {திருதராஷ்டிரரே}, கர்ணனின் ஆற்றலைக் கண்ட துரியோதனன்,(39-41) அஸ்வத்தாமனிடம் சென்று அவனிடம், "கவசம் பூண்ட கர்ணன், (பகை) மன்னர்கள் அனைவருடனும் போரில் ஈடுபடுவதைப் பாரும்.(42) கர்ணனின் கணைகளால் பீடிக்கப்படும் பகைவரின் படை, கார்த்திகேயனின் {முருகனின்} சக்தியால் மூழ்கடிக்கப்பட்ட அசுரர்களின் படையைப் போலவே முறியடிக்கப்படுவதைப் பாரும்.(43) நுண்ணறிவு கொண்ட கர்ணனால் போரில் தன் படை வெல்லப்படுவதைக் கண்ட பீபத்சு {அர்ஜுனன்}, சூதன் மகனை {கர்ணனைக்} கொல்லும் விருப்பத்துடன் அதோ வருகிறான்.(44) எனவே, நாம் அனைவரும் பார்த்துக் கொண்டிருக்கும்போதே அந்தப் பாண்டுவின் மகன் {அர்ஜுனன்}, வலிமைமிக்கத் தேர்வீரனான இந்தச் சூதன் மகனை {கர்ணனைக்} கொல்வதைத் தடுக்கும் வகையில் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட வேண்டும்" என்றான் {துரியோதனன்}.(45)
(இப்படிச் சொல்லப்பட்டவர்களான) துரோணரின் மகன் {அஸ்வத்தாமன்}, கிருபர், சல்லியன், பெரும் தேர்வீரனான ஹிருதிகன் மகன் {கிருதவர்மன்} ஆகியோர் அனைவரும், தைத்திய படையை நோக்கிச் சக்ரன் {இந்திரன்} வருவதைப் போலவே (தங்களை நோக்கி) வரும் குந்தியின் மகனை {அர்ஜுனனைக்} கண்டு, சூதனின் மகனைக் {கர்ணனைக்} காப்பதற்காகப் பார்த்தனை {அர்ஜுனனை} எதிர்த்துச் சென்றனர். அதே வேளையில், பாஞ்சாலர்களால் சூழப்பட்ட பீபத்சு {அர்ஜுனன்}, ஓ! ஏகாதிபதி {திருதராஷ்டிரரே}, விருத்திராசுரனை எதிர்த்துச் சென்ற புரந்தரனை {இந்திரனைப்} போலவே கர்ணனை எதிர்த்துச் சென்றான்" {என்றான் சஞ்சயன்}.(46,47)
திருதராஷ்டிரன் {சஞ்சயனிடம்}, "ஓ! சூதா {சஞ்சயா}, யுக முடிவின்போது தோன்றும் அந்தகனைப் போலத் தெரிந்தவனும், வெறியால் தூண்டப்பட்டவனுமான பல்குனனை {அர்ஜுனனைக்} கண்ட பிறகு, விகர்த்தனன் {சூரியன்} மகனான கர்ணன் அடுத்து என்ன செய்தான்?(48) உண்மையில், வலிமைமிக்கத் தேர்வீரனும், வைகர்த்தனன் மகனுமான கர்ணன் எப்போதும் பார்த்தனை {அர்ஜுனனை} அறைகூவி அழைப்பவனாக இருக்கிறான். உண்மையில் அவன் {கர்ணன்}, பயங்கரமான பீபத்சுவை {அர்ஜுனனை} வெல்லத்தக்கவன் என்று எப்போதும் தன்னைச் சொல்லிக் கொள்கிறான். ஓ! சூதா, எப்போதும் தனக்குக் கொடிய எதிரியாக இருப்பவனை {அர்ஜுனனை} இப்படித் திடீரெனச் சந்தித்தபோது, அந்தப் போர்வீரன் {கர்ணன்} என்ன செய்தான்?" என்று கேட்டான் {திருதராஷ்டிரன்}.(49,50)
சஞ்சயன் {திருதராஷ்டிரனிடம்} தொடர்ந்தான், "எதிரி யானையை நோக்கி வரும் மற்றொரு யானையைப் போலத் தன்னை நோக்கி வரும் பாண்டுவின் மகனை {அர்ஜுனனைக்} கண்ட கர்ணன், அச்சமில்லாமல் தனஞ்சயனை {அர்ஜுனனை} எதிர்த்துச் சென்றான்.(51) எனினும் பார்த்தன் {அர்ஜுனன்}, இப்படிப் பெரும் வேகத்தோடு வரும் கர்ணனைத் தங்கச் சிறகுகள் கொண்ட நேரான கணைகளின் மழையால் விரைவாக மறைத்தான். கர்ணனும் தன் கணைகளால் விஜயனை {அர்ஜுனனை} மறைத்தான்.(52) பாண்டுவின் மகன் {அர்ஜுனன்} மீண்டும் கணை மேகங்களால் கர்ணனை மறைத்தான். அப்போது சினத்தால் நிறைந்த கர்ணன், மூன்று கணைகளால் அர்ஜுனனைத் துளைத்தான்.(53) கர்ணனின் கர நளினத்தைக் கண்ட வலிமைமிக்கத் தேர்வீரனான அர்ஜுனனால் அதைப் பொறுத்துக் கொள்ள முடியவில்லை.
எதிரிகளை அழிப்பவனான அவன் {அர்ஜுனன்}, கல்லில் கூராக்கப்பட்டவையும், சுடர்மிக்க முனைகளைக் கொண்டவையுமான நேரான முப்பது கணைகளைச் சூதனின் மகன் {கர்ணன்} மீது ஏவினான். பெரும் வலிமையையும், சக்தியையும் கொண்ட அவன் {அர்ஜுனன்}, சிரித்துக் கொண்டே, மற்றொரு நீண்ட கணையால் அவனது {கர்ணனின்} இடக்கரத்தின் மணிக்கட்டையும் துளைத்தான். அப்போது, பெரும் பலத்துடன் இப்படித் துளைக்கப்பட்ட அந்தக் கரத்தில் இருந்து கர்ணனின் வில் விழுந்தது.(54-56) கண்ணிமைக்கும் நேரத்திற்குள் அந்த வில்லை எடுத்துக் கொண்ட வலிமைமிக்கக் கர்ணன், மீண்டும் பல்குனனை {அர்ஜுனனைக்} கணை மேகங்களால் மறைத்து பெரும் கரநளினத்தை வெளிப்படுத்தினான்.(57) அப்போது சிரித்தபடியே தனஞ்சயன் {அர்ஜுனன்}, ஓ! பாரதரே {திருதராஷ்டிரரே}, சூதன் மகனால் {கர்ணனால்} ஏவப்பட்ட அந்தக் கணை மாரியைத் தன் கணைகளால் கலங்கடித்தான். ஒருவரையொருவர் அணுகிய பெரும் வில்லாளிகளான அவர்கள் இருவரும், ஒருவர் செய்த சாதனைகளுக்கு மற்றவர் எதிர்வினையாற்ற விரும்பி, தொடர்ந்து ஒருவரையொருவர் கணைமாரிகளால் மறைத்தனர்.(59) கர்ணன் மற்றும் அந்தப் பாண்டுவின் மகன் {அர்ஜுனன்} ஆகியோருக்கிடையில் நடைபெற்ற அந்தப் போரானது, பருவகாலத்தில் உள்ள பெண் யானைக்காக இரு காட்டு யானைகளுக்கு இடையில் நடக்கும் போரைப் போல மிக அற்புதமானதாக இருந்தது.(60)
அப்போது, வலிமைமிக்க வில்லாளியான பார்த்தன் {அர்ஜுனன்}, கர்ணனின் ஆற்றலைக் கண்டு, விரைவாகப் பின்னவனின் {கர்ணனின்} வில்லை அதன் கைப்பிடியில் அறுத்தான்.(61) மேலும் அவன் {அர்ஜுனன்}, பெரும் எண்ணிக்கையிலான பல்லங்களால் சூதன் மகனின் {கர்ணனின்} நான்கு குதிரைகளையும் யமனுலகு அனுப்பிவைத்தான். பிறகும் அந்த எதிரிகளை எரிப்பவன் {அர்ஜுனன்}, கர்ணனுடைய தேரோட்டியின் தலையை அவனது உடலில் இருந்து அறுத்தான்.(62) பாண்டு மற்றும் பிருதையின் மகனான அவன் {அர்ஜுனன்}, வில்லற்றவனாக, குதிரையற்றவனாக, சாரதியற்றவனாக இருந்த கர்ணனை நான்கு கணைகளால் துளைத்தான்.(63) மனிதர்களில் காளையான அந்தக் கர்ணன், அக்கணைகளால் பீடிக்கப்பட்டு, குதிரைகளற்ற அந்தத் தேரில் இருந்து வேகமாகக் கீழே குதித்துக் கிருபருடைய தேரில் ஏறிக் கொண்டான்.(64)
ஓ! பாரதக் குலத்தின் காளையே {திருதராஷ்டிரரே}, ராதையின் மகன் {கர்ணன்} வெல்லப்பட்டதைக் கண்ட உமது போர்வீரர்கள், அனைத்துத் திசைகளிலும் தப்பி ஓடினர்.(65) அவர்கள் ஓடுவதைக் கண்ட மன்னன் துரியோதனன் அவர்களைத் தடுத்து இவ்வார்த்தைகளைச் சொன்னான்:(66) "வீரர்களே, ஓடாதீர். க்ஷத்திரியர்களில் காளையரே போரில் நிலைப்பீராக. போரில் பார்த்தனை {அர்ஜுனனைக்} கொல்வதற்காக நானே இப்போது செல்லப் போகிறேன்.(67) கூடியிருக்கும் பாஞ்சாலர்களோடு சேர்த்துப் பார்த்தனை {அர்ஜுனனை} நானே கொல்லப் போகிறேன். காண்டீவதாரியோடு {அர்ஜுனனோடு} இன்று நான் போரிடும்போது,(68) யுக முடிவில் தோன்றும் யமனுக்கு ஒப்பான என் ஆற்றலைப் பார்த்தர்கள் காணப் போகின்றனர். வெட்டுக்கிளிகளின் கூட்டத்திற்கு ஒப்பாக ஏவப்படும் என் ஆயிரக்கணக்கான கணைகளை இன்று பார்த்தர்கள் காண்பார்கள். கோடை காலத்தின் முடிவில் மேகங்களால் பொழியப்படும் மழைத்தாரைகளைப் போன்ற அடர்த்தியான கணைமாரிகளை ஏவியபடி, கையில் வில்லுடன் இருக்கும் என்னைப் போராளிகள் காணப் போகின்றனர். நான் இன்று பார்த்தனை {அர்ஜுனனை}, என் நேரான கணைகளால் வெல்லப் போகிறேன்.(69-71) வீரர்களே, பல்குனன் {அர்ஜுனன்} மீது நீங்கள் கொண்டுள்ள அச்சத்தை விட்டு விட்டுப் போரில் நிலைப்பீராக. மகரங்களின் வசிப்பிடமான கடலால், தன் கரைகளை மீற முடியாதததைப் போல, என் ஆற்றலுடன் மோதப் போகும் பல்குனனால் {அர்ஜுனனால்} அதைத் தாங்கிக் கொள்ளவே முடியாது" என்றான் {துரியோதனன்}.(72) இப்படிச் சொன்ன மன்னன் {துரியோதனன்}, கோபத்தால் கண்கள் சிவந்து, பெரும் படையால் சூழப்பட்டு, பல்குனனை {அர்ஜுனனை} நோக்கிச் சினத்துடன் சென்றான்.
இப்படிச் சென்ற வலிமைமிக்கக் கரங்களைக் கொண்ட துரியோதனனைக் கண்ட சரத்வான் மகன் {கிருபர்},(73,74). அஸ்வத்தாமனை அணுகி இவ்வார்த்தைகளைச் சொன்னார்: "அதோ, வலிமைமிக்கக் கரங்களைக் கொண்ட துரியோதனன், கோபத்தால் தன் உணர்வுகளை இழந்து,(75) சுடர்மிக்க நெருப்பை நோக்கி விரைய விரும்பும் பூச்சி ஒன்றைப் போல, பல்குனனுடன் போரிட விரும்பி செல்கிறான். மன்னர்களில் முதன்மையான இவன் {துரியோதனன்}, நாம் பார்த்துக் கொண்டிருக்கும்போதே, பார்த்தனுடனான {அர்ஜுனனுடனான} இந்தப் போரில் தன் உயிரை விடுவதற்கு முன் (மோதலுக்கு விரைவதில் இருந்து) அவனைத் தடுப்பாயாக. பார்த்தனின் கணைகள் செல்லும் தொலைவுக்குள் இல்லாதவரை மட்டுமே துணிவுமிக்க குரு மன்னனால் {துரியோதனனால்} இந்தப் போரில் உயிருடன் இருக்க முடியும். சற்று முன்பே சட்டையுரித்த பாம்புகளுக்கு ஒப்பான பார்த்தனின் {அர்ஜுனனின்} பயங்கரக் கணைகளால் சாம்பலாக எரிக்கப்படுவதற்கு முன் மன்னன் {துரியோதனன்} தடுக்கப்பட வேண்டும். ஓ! கௌரவங்களை அளிப்பவனே {அஸ்வத்தாமா}, நாம் இங்கே இருக்கும்போது, தனக்கெனப் போரிட எவரும் இல்லாதவனைப் போல மன்னனே {துரியோதனனே} போரிடச் செல்வது பெரிதும் முறையற்றதாகத் தெரிகிறது. புலியோடு மோதும் யானையைப் போல, கிரீடத்தால் அலங்கரிக்கப்பட்டவனுடன் (அர்ஜுனனுடன்} போரில் ஈடுபட்டால், இந்தக் குரு வழித்தோன்றலின் {துரியோதனனின்} உயிரானது பெரும் ஆபத்துக்குள்ளாகும்." என்றார் {கிருபர்}.
தன் தாய்மாமனால் {கிருபரால்} இப்படிச் சொல்லப்பட்டவனும், ஆயுததாரிகள் அனைவரிலும் முதன்மையானவனுமான துரோணரின் மகன் {அஸ்வத்தாமன்},(76-81) துரியோதனனிடம் விரைந்து சென்று அவனிடம் இந்த வார்த்தகளைச் சொன்னான்: "ஓ! காந்தாரியின் மகனே {துரியோதனா}, ஓ! குருவின் வழித்தோன்றலே {துரியோதனா}, நான் உயிரோடு இருக்கையில், உனது நன்மையை எப்போதும் விரும்புபவனான என்னை அலட்சியம் செய்துவிட்டு, போரில் நீ ஈடுபடுவது உனக்குத் தகாது. பார்த்தனை வெல்வது குறித்து நீ கவலைப்படத் தேவையில்லை. பார்த்தனை {அர்ஜுனனை} நான் தடுப்பேன். ஓ! சுயோதனா {துரியோதனா}, இங்கேயே நிற்பாயாக" என்றான் {அஸ்வத்தாமன்}.(82,83)
துரியோதனன் {அஸ்வத்தாமனிடம்} சொன்னான், "ஆசான் (துரோணர்), பாண்டுவின் மகன்களைத் தமது மகன்களைப் போலவே எப்போதும் பாதுகாக்கிறார். நீரும் என் எதிரிகளான அவர்களிடம் எப்போதும் தலையிடுவதில்லை.(84) அல்லது, என் தீப்பேற்றால் கூடப் போரில் உமது ஆற்றல் எப்போதும் கடுமைடையாது இருந்திருக்கலாம். யுதிஷ்டிரன், அல்லது திரௌபதி மீது உமக்குள்ள பாசமும் இதற்குக் காரணமாக இருக்கலாம். உண்மையான காரணத்தை அறியாதவனாக நான் இருக்கிறேன்.(85) என்னை மகிழ்விக்க விரும்பிய என் நண்பர்கள் அனைவரும் வெல்லப்பட்டுத் துயரில் மூழ்குவதால், பேராசை கொண்டவனான எனக்கு ஐயோ {என்னை நிந்திக்க வேண்டும்}.(86) ஓ! கௌதமர் மகளின் {கிருபியின்} மகனே {அஸ்வத்தாமரே}, ஆயுதங்களை அறிந்தவர்களுள் முதன்மையானவரும், போரில் மகேஸ்வரனுக்கு ஒப்பானவருமான உம்மைத் தவிர, எதிரியை அழிக்கத்தகுந்த போர்வீரன் வேறு எவன் இருக்கிறான்?(87) ஓ! அஸ்வத்தாமரே, என்னிடம் மகிழ்ச்சி {கருணை} கொண்டு, என் எதிரிகளை அழிப்பீராக. உமது ஆயுதங்கள் செல்லும் தொலைவுக்குள் நிற்க தேவர்களோ, தானவர்களோ கூடத் தகுந்தவர்களல்லர்.(88)
ஓ! துரோணரின் மகனே {அஸ்வத்தாமரே}, பாஞ்சாலர்களையும், சோமகர்களையும் அவர்களைப் பின்தொடர்ந்து செல்வோருடன் சேர்த்துக் கொல்வீராக. எஞ்சியோரைப் பொறுத்தவரை, உம்மால் பாதுகாக்கப்படும் நாங்கள் அவர்களைக் கொல்வோம்.(89) ஓ! பிராமணரே, பெரும் புகழைக் கொண்ட சோமகர்களும், பாஞ்சாலர்களும் காட்டு நெருப்பைப் போல அதோ என் துருப்புகளுக்கு மத்தியில் திரிகின்றனர்.(90) ஓ! வலிமைமிக்கக் கரங்களைக் கொண்டவரே, கிரீடத்தால் அலங்கரிக்கப்பட்டவனால் (அர்ஜுனனால்) பாதுகாக்கப்பட்டால், கைகேயர்கள் நம் அனைவரையும் அழித்துவிடுவார்கள் என்பதால் அவர்களையும் {கைகேயர்களையும்} தடுப்பீராக.(91) ஓ! அஸ்வத்தாமரே, ஓ! எதிரிகளைத் தண்டிப்பவரே, வேகமாக அங்கே செல்வீராக. அந்த அருஞ்செயலை இப்போது நிறைவேற்றுவீரோ, பிறகு நிறைவேற்றுவீரோ, ஓ! ஐயா, அஃது உம்மால் நிறைவேற்றப்பட வேண்டும்.(92) ஓ! வலிமைமிக்கக் கரங்களைக் கொண்டவரே, பாஞ்சாலர்களின் அழிவுக்காகவே பிறந்தவர் நீர். உமது ஆற்றலை வெளிப்படுத்தி, இவ்வுலகைப் பாஞ்சாலர்களற்றதாகச் செய்யப் போகிறீர்.(93) (தவ) வெற்றியால் மகுடம் சூட்டப்பட்ட மரியாதைக்குரியவர்கள் இப்படியே {உம்மைக் குறித்துச்} சொல்லியிருக்கின்றனர். அவர்கள் சொன்னபடியே அஃது ஆகட்டும். எனவே, ஓ! மனிதர்களில் புலியே {அஸ்வத்தாமரே}, பாஞ்சாலர்களை, அவர்களைப் பின்தொடர்பவர்கள் அனைவருடன் சேர்த்துக் கொல்வீராக.(94)
வாசவனைத் தங்கள் தலைமையில் கொண்ட தேவர்களே கூட, உமது ஆயுதங்கள் செல்லும் தொலைவுக்குள் வந்தால் நிலைக்க முடியாது எனும்போது, பார்த்தர்களையும், பாஞ்சாலர்களையும் குறித்து என்ன சொல்வது? இந்த எனது வார்த்தைகள் அனைத்தும் உண்மையே.(95) ஓ! வீரரே {அஸ்வத்தாமரே}, சோமகர்களுடன் சேர்ந்திருக்கும் பாண்டவர்கள், போரில் உமக்கு ஈடாக மாட்டார்கள் என்று நான் உமக்கு உண்மையாகவே சொல்கிறேன்.(96) செல்வீர், ஓ! வலிமைமிக்கக் கரங்களைக் கொண்டவரே, செல்வீராக. எந்தத் தாமதமும் வேண்டாம். பார்த்தனின் {அர்ஜுனனின்} கணைகளால் பீடிக்கப்பட்டுப் பிளந்து ஓடும் நமது படையைப் பாரும்.(97) ஓ வலிமைமிக்கக் கரங்களைக் கொண்டவரே, ஓ! கௌரவங்களை அளிப்பவரே {அஸ்வத்தாமரே}, தெய்வீக சக்தியின் துணையுடன் கூடிய நீர் பாண்டவர்களையும், பாஞ்சாலர்களையும் பீடிக்கத் தகுந்தவராவீர்" என்றான் {துரியோதனன்}.(98)
சஞ்சயன் {திருதராஷ்டிரனிடம்} சொன்னான், "துரியோதனனால் இப்படிச் சொல்லப்பட்டவனும், போரில் வீழ்த்த கடினமான போர்வீரனுமான துரோணரின் மகன் {அஸ்வத்தாமன்}, தைத்தியர்களை அழிப்பதில் ஈடுபட்ட இந்திரனைப் போல எதிரியை அழிப்பதில் தன் இதயத்தை நிலைநிறுத்தினான்.(1) வலிமைமிக்கக் கரங்களைக் கொண்ட அஸ்வத்தாமன் உமது மகனுக்குப் பதிலளிக்கும வகையில், "ஓ! குருவின் வழித்தோன்றலே {துரியோதனா}, இது நீ சொல்வதுபோலத்தான் இருக்கிறது.(2) எனக்கும், என் தந்தைக்கும் {துரோணருக்கும்} எப்போதும் பாண்டவர்கள் அன்புக்குரியவர்களே. அதே போல நாங்கள் இருவரும் அவர்களின் அன்புக்குரியவர்களே. எனினும் போரில் அவ்வாறு இல்லை.(3) எங்கள் உயிரைக் குறித்த கவலையில்லாமல் எங்கள் வலிமையின் அளவுக்கு நாங்கள் அச்சமற்ற வகையில் போரிடுகிறோம். என்னாலும், கர்ணன், சல்லியன், கிருபர், ஹிருதிகன் மகன் {கிருதவர்மன்} ஆகியோராலும்,(4) ஓ! மன்னர்களில் சிறந்தவனே {துரியோதனா}, கண்ணிமைக்கும் நேரத்திற்குள் பாண்டவர்ப்படையை அழித்துவிட முடியும். போரில் நாங்கள் இல்லையென்றால், ஓ! குருக்களில் சிறந்தவனே, ஓ! வலிமைமிக்கக் கரங்களைக் கொண்டவனே {துரியோதனா}, பாண்டவர்களாலும் கண்ணிமைக்கும் நேரத்திற்குள் குரு படையை அழித்துவிட முடியும். நாங்கள் பாண்டவர்களுடன் எங்கள் சிறப்பான சக்தியைப் பயன்படுத்திப் போரிடுகிறோம், அதே போல அவர்களும், அவர்களுடையதில் சிறந்ததைப் பயன்படுத்தி எங்களோடு போரிடுகிறார்கள்.(5,6)
ஓ! பாரதா {துரியோதனா}, சக்தியோடு மோதும் சக்தி சமன்படுத்தப்படுகிறது {தணிவடைகிறது}. பாண்டு மகன்கள் உயிரோடுள்ள வரையும், பாண்டவப்படை வெல்லப்பட்ட இயலாததாகும்.(7) என்னால் உனக்குச் சொல்லப்படும் இஃது உண்மையானதாகும். பாண்டுவின் மகன்கள் பெரும் வலிமை படைத்தவர்களாவர். மேலும் அவர்கள் தங்களுக்காகப் போரிடுகின்றனர்.(8) ஓ! பாரதா {துரியோதனா}, {அப்படியிருக்கையில்}, ஏன் அவர்களால் உன் துருப்புகளைக் கொல்ல முடியாது. எனினும், ஓ! மன்னா {துரியோதனா}, நீ பேராசைமிக்கவனாக இருக்கிறாய். ஓ! கௌரவா {துரியோதனா}, நீ வஞ்சகனாகவும் இருக்கிறாய்.(9) வீணாகப் பிதற்றுபவனாகவும், அனைத்தையும் சந்தேகப்படுபவனாகவும் இருக்கிறாய். இதன் காரணமாகவே, நீ எங்களையும் சந்தேகிக்கிறாய். ஓ! மன்னா {துரியோதனா}, பாவம் நிறைந்த ஆன்மாவாகவும், பாவத்தின் வடிவமாகவும் நீ இருக்கிறாய் என்றே நான் நினைக்கிறேன்.(10) பாவம்நிறைந்த இழிந்த சிந்தனைகளைக் கொண்டிருப்பதாலேயே நீ எங்களையும், பிறரையும் சந்தேகிக்கிறாய். என்னைப் பொறுத்தவரை, உன் நிமித்தமாக உறுதியுடன் போரிடும் நான் என் உயிரையும் விடத் தயாராக இருக்கிறேன்.(11)
ஓ! குருக்களின் தலைவா {துரியோதனா}, நான் இப்போதும் உனக்காகவே போரிடச் செல்கிறேன். நான் எதிரியுடன் போரிட்டு, பெரும் எண்ணிக்கையிலான பகைவர்களைக் கொல்வேன்.(12) பாஞ்சாலர்கள், சோமகர்கள், கைகேயர்கள் ஆகியோருடனும், பாண்டவர்களுடனும், ஓ!எதிரிகளைத் தண்டிப்பவனே, உனக்கு ஏற்புடையதைச் செய்யவே நான் போரிடுவேன்.(13) இன்று என் கணைகளால் எரிக்கப்படும், சேதிகள், பாஞ்சாலர்கள், சோமகர்கள் ஆகியோர், சிங்கத்தால் பீடிக்கப்படும் பசுமந்தையைப் போல அனைத்துப் பக்கங்களிலும் தப்பி ஓடுவர்.(14) இன்று, தர்மனின் அரச மகனும் {யுதிஷ்டிரனும்}, சோமகர்கள் அனைவரும் என் ஆற்றலைக் கண்டு, மொத்த உலகமும் அஸ்வத்தாமன்களால் நிறைந்திருப்பதாகக் கருதுவார்கள்.(15) தர்மனின் மகனான யுதிஷ்டிரன், போரில் (என்னால்) கொல்லப்படும் பாஞ்சாலர்களையும், சோமகர்களையும் கண்டு உற்சாகமற்றவனாக ஆவான்.(16) ஓ! பாரதா {துரியோதனா}, போரில் என்னை அணுகும் அனைவரையும் நான் கொல்வேன். ஓ! வீரா {துரியோதனா}, என் கரங்களின் வலிமையால் பீடிக்கப்படும் அவர்களில் எவரும் இன்று என்னிடம் இருந்து உயிருடன் தப்ப முடியாது" என்றான் {அஸ்வத்தாமன்}.(17)
உமது மகன் துரியோதனனிடம் இவ்வாறு சொன்ன அந்த வலிய கரத்தோன் {அஸ்வத்தாமன்} போரிடச் சென்று வில்லாளிகள் அனைவரையும் பீடித்தான்.(18) உயிர்வாழும் அனைவரிலும் முதன்மையான அவன் {அஸ்வத்தாமன்} உமது மகன்களுக்கு ஏற்புடையதைச் செய்ய இப்படியே முயன்றான். அப்போது, கௌதமர் மகளின் {கிருபியின்} மகன் {அஸ்வத்தாமன்}, பாஞ்சாலர்களிடமும், கைகேயர்களிடம்,(19) "வலிமைமிக்கத் தேர்வீரர்களே, அனைவரும் என் உடலைத் தாக்குங்கள். உங்கள் கரங்களின் நளினத்தை வெளிக்காட்டியபடி என்னுடன் உறுதியாகப் போரிடுங்கள்" என்று சொன்னான்.(20)
அவனால் {அஸ்வத்தாமனால்} இவ்வாறு சொல்லப்பட்ட போராளிகள் அனைவரும், ஓ! மன்னா {திருதராஷ்டிரரே}, மழைத்தாரைகளைப் பொழியும் மேகங்களைப் போலத் துரோணரின் மகன் {அஸ்வத்தாமன்} மீது ஆயுதமழையைப் பொழிந்தனர்.(21) அம்மழையைக் கலங்கடித்த துரோணரின் மகன் {அஸ்வத்தாமன்}, திருஷ்டத்யும்னனும், பாண்டுவின் மகன்களும் பார்த்துக் கொண்டிருக்கும்போதே அந்தப் போரில் துணிச்சல்மிக்க வீரர்களில் பத்து பேரை கொன்றான்.(22) அப்போது போரில் கொல்லப்பட்ட பாஞ்சாலர்களும், சோமகர்களும், துரோணரின் மகனை {அஸ்வத்தாமனைக்} கைவிட்டு விட்டு அனைத்துத் திசைகளிலும் தப்பி ஓடினர்.(23) துணிச்சல்மிக்கப் போர்வீரர்களான பாஞ்சாலர்களும், சோமகர்களும் தப்பி ஓடுவதைக் கண்ட திருஷ்டத்யும்னன், ஓ! மன்னா {திருதராஷ்டிரரே}, அந்தப் போரில் துரோணரின் மகனை {அஸ்வத்தாமனை} எதிர்த்து விரைந்தான்.(24) மழைநிறைந்த மேகங்களின் முழக்கத்திற்கு ஒப்பான சக்கரச் சடசடப்பொலி கொண்டவையும், தங்கத்தால் அலங்கரிக்கப்பட்டவையுமான தேர்களில் ஏறிவந்தவர்களும், துணிச்சல்மிக்கவர்களும், புறமுதுகிடாதவர்களுமான தேர்வீரர்கள் நூறு பேர் சூழச் சென்ற பாஞ்சால மன்னன் மகனான வலிமைமிக்கத் தேர்வீரன் திருஷ்டத்யும்னன், தனது போர் வீரர்கள் கொல்லப்படுவதைக் கண்டு துரோணரின் மகனிடம் {அஸ்வத்தாமனிடம்}, இந்த வார்த்தைகளைச் சொன்னான்,(25,26) "ஆசானின் மூட மகனே [1], அற்பப் போராளிகளைக் கொல்வதில் யாது பயன்? நீர் வீரரென்றால், என்னோடு போரிடுவீராக.(27) நான் உம்மைக் கொல்வேன். தப்பி ஓடாமல் ஒரு கணம் காத்திருப்பீராக" என்றான்.
[1] வேறொரு பதிப்பில், "ஆச்சார்யபுத்திரரே, உமக்கு மங்களம் உண்டாகட்டும். மற்றவர்களைக் கொல்வதால் உமக்கு என்ன பயன்?" என்று இருக்கிறது. "மூடமகனே" என்ற வார்த்தை இல்லை. மன்மதநாததத்தரின் பதிப்பில், "ஓ ஆசானின் மகனே, ஓ தீய புரிதல் கொண்டவரே, சாதாரணப் படைவீரரைகளை ஏன் கொல்கிறீர்?" என்று கேட்பதாக வருகிறது. இங்கும் "மூட மகனே", "Foolish son" என்பது இல்லை.
இதைச் சொன்னவனும், பெரும் ஆற்றலைக் கொண்டவனுமான திருஷ்டத்யும்னன், பயங்கரமானவையும், கூரியவையும், முக்கிய அங்கங்களைத் துளைக்கவல்லவையுமான கணைகள் பலவற்றால் ஆசானின் மகனை {அஸ்வத்தாமனைத்} தாக்கினான். வேகமாகச் செல்லவல்லவையும் தங்கச் சிறகுகளையும், கூரிய முனைகளையும் கொண்டவையும், ஒவ்வொரு எதிரியின் உடலையும் துளைக்கவல்லவையுமான அந்தக் கணைகள், சுதந்திரமாக உலவும் வண்டுகள், தேனைத்தேடி மலர்ந்திருக்கும் மரத்திற்குள் நுழைவதைப் போல, தொடர்ந்த சரமாகச் சென்று அஸ்வத்தாமனின் உடலுக்குள் ஊடுருவின.(28-30) ஆழத்துளைக்கப்பட்டுச் சினத்தில் பெருகி, மிதிக்கப்பட்ட பாம்பைப் போலச் செருக்குடனும், அச்சமற்றும் கையில் வில்லுடன் சென்ற துரோணரின் மகன் {அஸ்வத்தாமன்} தன் எதிரியிடம் {திருஷ்டத்யும்னனிடம்} (31), "ஓ! திருஷ்டத்யும்னா, என் முன்பிருந்து விலகாமல் ஒருக்கணம் காத்திருப்பாயாக. என் கூரிய கணைகளால் விரைவில் நான் உன்னை யமனின் வசிப்பிடத்திற்கு அனுப்புவேன்" என்றான்.(32)
இவ்வார்த்தைகளைச் சொன்னவனும், பகைவீரர்களை வெல்பவனுமான அந்தத் துரோணரின் மகன் {அஸ்வத்தாமன்}, தன் பெரும் கரநளினத்தை வெளிப்படுத்தி, கணைகளின் மேகங்களால் அனைத்துப் பக்கங்களிலும் பிருஷதனின் மகனை {திருஷ்டத்யும்னனை} மறைத்தான்.(33) இப்படித் துரோணர் மகனால் {அஸ்வத்தாமனின்} (கணைகளால்) அம்மோதலில் மறைக்கப்பட்டவனும், போரில் வீழ்த்தக் கடினமானவனுமான பாஞ்சால இளவரசன் {திருஷ்டத்யும்னன்}, துரோணர் மகனிடம்,(34) "ஓ! பிராமணரே, நீர் என் பிறப்பையோ, என் சபதத்தையோ அறியவில்லை. ஓ! தீய புரிதல் கொண்டவரே, துரோணரை முதலில் கொன்ற பிறகு, நான் உம்மைக் கொல்கிறேன்.(35) துரோணர் இன்னும் உயிரோடு இருப்பதால் நான் இன்று உம்மைக் கொல்ல மாட்டேன். ஓ! தீய புரிதல் கொண்டவரே, இந்த இரவு கடந்து, பொழுது நன்றாக விடிந்ததும், முதலில் உமது தந்தையைப் போரில் கொன்று, பிறகு உம்மையும் ஆவிகளின் உலகத்திற்கு [2] அனுப்புவேன். இதையே நான் விரும்புகிறேன்.(36-37) எனவே, என் எதிரே அதுவரை நின்று பார்த்தர்கள் மீது நீர் கொண்டிருக்கும் வெறுப்பையும், குருக்களிடம் நீர் கொண்ட அர்ப்பணிப்பையும் வெளிக்காட்டிக் கொண்டிருப்பீராக. உம்மால் என்னிடம் இருந்து உயிரோடு தப்ப முடியாது(38) ஓ! மனிதர்களில் இழிந்தவரே, எந்தப் பிராமணன், பிராமண நடைமுறைகளைக் கைவிட்டு, க்ஷத்திரிய நடைமுறைகளுக்குத் தன்னை அர்ப்பணித்துக் கொள்கிறானோ, அவன் க்ஷத்திரியர்கள் அனைவராலும் கொல்லத்தகுந்தவன் ஆகிறான்" என்று சொல்லி முழங்கினான் {திருஷ்டத்யும்னன்}.(39)
[2] வேறொரு பதிப்பில், "யமலோகம்" என்றும், மன்மதநாததத்தரின் பதிப்பில், "இறந்து போனோருடைய ஆவிகளின் உலகம்" என்றும் இருக்கிறது.
அவமதிக்கும் வகையில் இப்படிக் கடுமொழியில் பிருஷதன் மகனால் {திருஷ்டத்யும்னனால்} சொல்லப்பட்ட அந்தப் பிராமணர்களில் சிறந்தவன் (அஸ்வத்தாமன்) தன் சினமனைத்தையும் திரட்டிக் கொண்டு, "நில், நிற்பாயாக" என்று சொல்லித்(40) தன் கண்களாலேயே பிருஷதன் மகனை எரித்துவிடுபவனைப் போல அவனைப் {திருஷ்டத்யும்னனைப்} பார்த்தான். ஒரு பாம்பைப் போல (சீற்றத்துடன்) பெருமூச்சு விட்ட அந்த ஆசானின் மகன் {அஸ்வத்தாமன்}, அப்போது அந்தப் போரில் திருஷ்டத்யும்னனை (கணைமாரியால்) மறைத்தான்.(41) எனினும், வலிமைமிக்கக் கரங்களைக் கொண்டவனும், தேர்வீரர்களில் சிறந்தவனும், பாஞ்சாலத் துருப்புகள் அனைத்தாலும் சூழப்பட்டவனுமான அந்தப் பிருஷதன் மகன் {திருஷ்டத்யும்னன்}, அந்த மோதலில் துரோணரின் மகனுடைய கணைகளால் இப்படித் தாக்கப்பட்டாலும், தன் சக்தியைச் சார்ந்திருந்து நடுங்காதிருந்தான். பதிலுக்கு அவன் {திருஷ்டத்யும்னன்} பல கணைகளை அஸ்வத்தாமன் மீது ஏவினான்.(42,43) உயிரைப் பணயமாகக் கொண்ட அந்தச் சூதாட்டத்தில் {போரில்} ஈடுபட்ட அந்த வீரர்கள், ஒருவரையொருவர் பொருத்துக் கொள்ள முடியாமல், ஒருவரையொருவர் தடுத்துக் கொண்டு, கணைமாரிகளையும் தடுத்தனர்.(44) மேலும் அந்தப் பெரும் வில்லாளிகள், சுற்றிலும் அடர்த்தியான கணைமாரிகளைப் பொழிந்தனர்.
துரோணர் மற்றும் பிருஷதன் மகன்களுக்கிடையில் அச்சத்தைத் தூண்டும் வகையில் நடைபெற்ற அந்தக் கடும்போரைக் கண்ட சித்தர்கள், சாரணர்கள் மற்றும் வானுலாவும் உயிரினங்கள் ஆகியோர் அவர்களை உயர்வாகப் பாராட்டினர். ஆகாயத்தையும், திசைகளின் புள்ளிகள் அனைத்தையும் கணை மேகங்களால் நிறைத்து,(45,46) அடர்த்தியான இருளை உண்டாக்கிய அந்த வீரர்கள் இருவரும் (எங்களால் காணப்படாத நிலையிலேயே) ஒருவரோடொருவர் தொடர்ந்து போரிட்டனர். போரில் நர்த்தனம் செய்பவர்களைப் போலத் தங்கள் விற்களை வட்டமாக வளைத்துக் கொண்டு,(47) ஒருவரையொருவர் கொல்லும் உறுதியான ஆவலோடு இருந்த அந்த வலிமைமிக்கக் கரங்களைக் கொண்ட போர்வீரர்கள், அனைவரின் இதயமும் அச்சங்கொள்ளும் வகையில், குறிப்பிடத்தகுந்த சுறுசுறுப்புடனும், திறனுடனும் அழகாகப் போரிட்டனர்.(48) அந்தப் போரில் ஆயிரக்கணக்கான முதன்மையான போர்வீரர்களால் பாராட்டப்பட்டுக் காட்டில் உள்ள இரு காட்டு யானைகளைப் போல இப்படி உறுதியாகப் போரிட்டுக் கொண்டிருந்த அவர்களைக் கண்ட படைகள் இரண்டும் மகிழ்ச்சியால் நிறைந்தன. சிங்க முழக்கங்கள் அங்கே கேட்கப்பட்டன, போராளிகள் அனைவரும் தங்கள் சங்குகளை முழக்கினர்.(49,50)
நூற்றுக்கணக்கான, ஆயிரக்கணக்கான இசைக்கருவிகள் இசைக்கத் தொடங்கின. மருண்டோரின் அச்சங்களை அதிகரிக்கச் செய்யும் அந்தக் கடும் போரானது,(51) குறுகிய காலத்திற்கு மட்டுமே சமமாக இருந்ததைப் போலத் தெரிந்தது. ஓ! மன்னா {திருதராஷ்டிரரே}, அப்போது துரோணரின் மகன் {அஸ்வத்தாமன்}, விரைந்து சென்று உயர் ஆன்மப் பிருஷதன் மகனின் {திருஷ்டத்யும்னனின்} வில், கொடிமரம், குடை, பார்ஷினி சாரதிகள், முதன்மைச் சாரதி மற்றும் குதிரைகள் நான்கையும் வெட்டினான்.(52,53) பிறகு அளவிலா ஆன்மாக் கொண்ட அந்தப் போர்வீரன் {அஸ்வத்தாமன்}, தன் நேரான கணைகளின் மூலம் பாஞ்சாலர்களை நூற்றுக்கணக்கிலும், ஆயிரக்கணக்கிலும் ஓடச் செய்தான்.(54) போரில் வாசவனுக்கு ஒப்பான துரோணர் மகனின் {அஸ்வத்தாமனின்} சாதனைகளைக் கண்ட பாண்டவப் படையானது, ஓ! பாரதக் குலத்தின் காளையே {திருதராஷ்டிரரே}, அச்சத்தால் நடுங்கத் தொடங்கியது.(55)
துருபதன் மகனும் {திருஷ்டத்யும்னனும்}, பல்குனனும் {அர்ஜுனனும்} பார்த்துக் கொண்டிருக்கும்போதே, நூறு பாஞ்சாலர்களை நூறு கணைகளாலும், மூன்று முதன்மையான மனிதர்களை மூன்று கூரிய கணைகளால் கொன்றவனும், வலிமைமிக்கத் தேர்வீரனுமான அந்தத் துரோணர் மகன் {அஸ்வத்தாமன்}, தன் எதிரில் இருந்த பெரும் எண்ணிக்கையிலான பாஞ்சாலர்களைக் கொன்றான்.(56,57) அப்போது போரில் இப்படிக் கொல்லப்பட்டவர்களான பாஞ்சாலர்களும், சிருஞ்சயர்களும், துரோணரின் மகனை {அஸ்வத்தாமனைக்} கைவிட்டு விட்டுத் தங்கள் கிழிந்த கொடிகளுடன் தப்பி ஓடினர்.(58) அப்போது, வலிமைமிக்கத் தேர்வீரனான அந்தத் துரோணர் மகன் {அஸ்வத்தாமன்}, போரில் தன் எதிரிகளை வென்றுவிட்டு, கோடை காலத்தின் முடிவில் வரும் மேகத் திரள்களைப் போல உரக்க முழங்கினான்.(59) பெரும் எண்ணிக்கையிலான எதிர்களைக் கொன்றுவிட்டு, யுக முடிவின் போது, உயிரினங்கள் அனைத்தையும் எரிக்கும் சுடர்மிக்க நெருப்பைப் போல அஸ்வத்தாமன் பிரகாசமாகத் தெரிந்தான்.(60) போரில் ஆயிரக்கணக்கான எதிரிகளை வீழ்த்திய பிறகு கௌரவர்கள் அனைவராலும் பாராட்டப்பட்ட துரோணரின் வீர மகன் {அஸ்வத்தாமன்}, எதிரிகளை வென்ற தேவர்களின் தலைவனை {இந்திரனைப்} போல அழகில் சுடர்விட்டெரிந்தான்" {என்றான் சஞ்சயன்}.(61)
….
தொடரும்..
..
மகாபாரதம் தொடர் முழுவதும் படிக்க இந்துமதம் வாட்ஸ்அப் குழுவில் இணைந்திருங்கள்
No comments:
Post a Comment