Saturday, January 20, 2024

Mahabharatam in tamil 312

மஹாபாரதம்(முழுவதும்)-பாகம்-312
துரோண பர்வம்
….
கடோத்கசனின் மகனைக் கொன்ற அஸ்வத்தாமன்!
..
{சஞ்சயன் திருதராஷ்டிரனிடம் தொடர்ந்தான்}, "அதேவேளையில், பெரும் காந்தி கொண்டவனும், கரிய மைக்குவியலுக்கு ஒப்பானவனுமான கடோச்கசனின் மகன் {அஞ்சனபர்வன்}, முன்னேறி வந்து கொண்டிருந்த துரோணரின் மகனை {அஸ்வத்தாமனைக்} காற்றின் வழியைத் தடுக்கும் மலைகளின் அரசனை (மேருவைப்) போலத் தடுத்தான்.(80) பீமசேனனின் பேரனான அஞ்சனபர்வனின் கணைகளால் பீடிக்கப்பட்ட அஸ்வத்தாமன், பெரும் மேகத்திலிருந்து கொட்டும் மழைத்தாரைகளைத் தாங்கிக் கொள்ளும் மேரு மலையைப் போலத் தெரிந்தான். ஆற்றலில் ருத்ரனுக்கோ, உபேந்திரனுக்கோ இணையான அஸ்வத்தாமன், அப்போது சினத்தால் நிறைந்தான்.(81,82) ஒரு கணையால் அவன் {அஸ்வத்தாமன்} அஞ்சனபர்வனின் கொடிமரத்தை வெட்டினான்; மேலும் இரண்டால் அவனது {அஞ்சனவர்வனின்} இரு சாரதிகளையும், மேலும் மூன்றால் அவனது திரிவேணுகத்தையும் [5] வெட்டினான்.(83) பிறகும் அவன் {அஸ்வத்தாமன்} அந்த ராட்சசனின் {அஞ்சனபர்வனின்} வில்லைத் தன் கணை ஒன்றாலும், நான்கு பிற கணைகளால் அவனது குதிரைகள் நான்கையும் வெட்டினான்.


[5] தேர், வண்டி முதலியவற்றில் சாரதி அமர்வதற்கு உள்ள இடம்.

தேரற்றவனாகச் செய்யப்பட்ட அஞ்சனபர்வன் ஒரு கத்தியை எடுத்துக் கொண்டான். அந்த ராட்சசன் கைகளில் இருந்ததும், தங்க நட்சத்திரங்களால் அலங்கரிக்கப்பட்டிருந்ததுமான அந்தக் கத்தியை மற்றொரு கூரிய கணையால் அஸ்வத்தாமன் இரண்டு துண்டுகளாக வெட்டினான். அப்போது அந்த ஹிடிம்பையின் பேரன் {அஞ்சனபர்வன்}, தங்கத்தால் அலங்கரிக்கப்பட்ட ஒரு கதாயுதத்தைச் சுழற்றி அஸ்வத்தாமன் மீது வீசினான். எனினும், துரோணரின் மகன் {அஸ்வத்தாமன்}, அதைத் தன் கணைகளால் தாக்கி, பூமியில் விழச் செய்தான். உயரப் பறந்து வானத்தை அடைந்த அஞ்சனபர்வன், கரிய மேகம் ஒன்றைப் போல முழங்கத் தொடங்கினான்.(84-86) அங்கே ஆகாயத்தில் இருந்த படியே அவன் {அஞ்சனபர்வன்} தன் எதிரியின் மீது மரங்களைப் பொழிந்தான். மேகத் திரள்களைத் தன் கதிர்களால் துளைக்கும் சூரியனைப் போலவே, மாயைகளின் கொள்ளிடமாக ஆகாயத்தில் இருந்த அந்தக் கடோத்கசன் மகனை {அஞ்சனபர்வனை} அஸ்வத்தாமன் தன் கணைகளால் துளைத்தான். பெரும் சக்தியைக் கொடையாகக் கொண்ட அந்த ராட்சசன் {அஞ்சனபர்வன்} தங்கத்தால் அலங்கரிக்கப்பட்ட தன் தேருக்கு மீண்டும் கீழிறங்கி வந்தான்.(87,88) பிறகு அவன் {அஞ்சனபர்வன்} பூமியின் பரப்பில் உள்ள நெடிய அழகிய மை மலை ஒன்றை {மலை போன்ற மைக்குவியவலைப்} போலத் தெரிந்தான். அப்போது, பழங்காலத்தில் அசுரன் அந்தகனைக் கொன்ற மகாதேவனைப் போல, இரும்பு கவசத்துடன் கூடிய பீமனுடைய மகனின் {கடோத்கசனின்} மகனை {அஞ்சனபர்வனைத்} துரோணரின் மகன் {அஸ்வத்தாமன்} கொன்றான்.

வலிமைமிக்கத் தனது மகன் {அஞ்சனபர்வன்}, அஸ்வத்தாமனால் கொல்லப்பட்டதைக் கண்ட கடோத்கசன், துரோணரின் மகனிடம் {அஸ்வத்தாமனிடம்} வந்து, காட்டுத்தீயைப் போலப் பாண்டவத் துருப்புகளை எரித்து வந்த அந்தச் சரத்வான் மகளின் {கிருபியின்} வீர மகனிடம் {அஸ்வத்தாமனிடம்} இவ்வார்த்தைகளைச் சொன்னான்.(89-91) கடோத்கசன், "நில்லும், ஓ! துரோண மகனே {அஸ்வத்தாமா} நில்லும். என்னிடம் இருந்து நீர் உயிருடன் தப்ப முடியாது. கிரௌஞ்சனை அழித்த அக்னியின் மகனை {கார்த்திகேயனைப்} போல இன்று நான் உம்மைக் கொல்லப் போகிறேன்" என்றான்.(92) அதற்கு அஸ்வத்தாமன், "ஓ! மகனே {கடோத்கஜா}, செல்வாயாக, ஓ! தெய்வீக ஆற்றல் கொண்டவனே {கடோத்கசா}, பிறருடன் போரிடுவாயாக. ஓ! ஹிடிம்பையின் மகனே {கடோத்கசா}, தந்தை மகனுடன் போரிடுவது முறையாகாது [6].(93) ஓ! ஹிடிம்பையின் மகனே, நான் உன்னிடம் எந்தக் கோபமும் கொள்ளவில்லை. எனினும், ஒருவனது கோபம் தூண்டப்படும்போது, ஒருவன் தன்னையே கூடக் கொன்றுகொள்ளக் கூடும் [7]" என்றான் {அஸ்வத்தாமன்}.(94)

[6] "பாண்டவர்களும் அஸ்வத்தாமனும் துரோணரின் சீடர்கள் என்பதால் அவர்கள் சகோதரர்களைப் போன்றவர்களே. எனவே, கடோத்கசன் பீமனின் மகன் என்பதால், அவன் அஸ்வத்தாமனுக்குச் சகோதரனின் மகனாவான்" என இங்கே விளக்குகிறார் கங்குலி.

[7] வேறொரு பதிப்பில், "ரோஷத்துடன் கூடிய பிராணியானது தன்னைக் கூட ஹிம்சித்துக் கொள்ளுமல்லவா?" என்றிருக்கிறது. மன்மதநாததத்தரின் பதிப்பில், "ஓர் உயிரினம் சினத்தால் தூண்டப்படும்போது, (அப்போது) அது தன்னையே கொன்று கொள்ளக்கூடும்" என்றிருக்கிறது.

சஞ்சயன் {திருதராஷ்டிரனிடம்} தொடர்ந்தான், "இந்த வார்த்தைகளைக் கேட்ட கடோத்கசன், தன் மகனின் வீழ்ச்சியால் துயரத்தில் நிறைந்து, கோபத்தால் தாமிரம் போல் கண்கள் சிவந்து, அஸ்வத்தாமனை அணுகி,(95) "ஓ! துரோண மகனே {அஸ்வத்தாமா}, நான் போருக்குப் பயந்த இழிந்தவன் என்பதைப் போல இவ்வார்த்தைகளால் என்னை அச்சுறுத்துகிறீரா? இந்த உமது வார்த்தைகள் முறையற்றனவாகும்.(96) உண்மையில், கொண்டாடப்படும் குருக்களின் குலத்தில் பீமரால் பெறப்பட்டவன் நான். போரில் ஒருபோதும் புறமுதுகிடாத வீரர்களான பாண்டவர்களின் மகன் நான்.(97) பலத்தில் பத்து கழுத்தோனுக்கு (ராவணனுக்கு) இணையான ராட்சசர்களின் மன்னன் நான். நில்லும், ஓ! துரோண மகனே நில்லும். நீர் என்னிடம் இருந்து உயிரோடு தப்ப முடியாது.(98) நான் இன்றைய போர்க்களத்தில் போரிடும் உமது விருப்பத்தை அகற்றுவேன்" என்றான் {கடோத்கசன்}.

சினத்தால் கண்கள் சிவக்க அஸ்வத்தாமனுக்கு இப்படி மறுமொழிகூறிய அந்த வலிமைமிக்க ராட்சசன் {கடோத்கசன்}, யானைகளின் இளவரசனை எதிர்த்துச் செல்லும் சிங்கம் ஒன்றைப் போலத் துரோணரின் மகனை எதிர்த்து மூர்க்கமாக விரைந்தான்.(99) பிறகு கடோத்கசன், போரில் பயன்படும் தேரொன்றின் அக்ஷத்தின் {ஏர்க்காலின்} அளவுடைய கணைகளை, தேர்வீரர்களில் காளையான அந்தத் துரோணரின் மகன் {அஸ்வத்தாமன்} மீது மழைத்தாரைகளைப் பொழியும் ஒரு மேகத்தைப் போலப் பொழிந்தான். எனினும், துரோணரின் மகன் {அஸ்வத்தாமன்}, அந்தக் கணை மழை தன்னை அடையும் முன்பே அவற்றைத் தன் கணைகளால் விலக்கினான்.(100, 101) அந்நேரத்தில் ஆகாயத்தில் கணைகளுக்கிடைய (போராளிகளைப் போல) ஒரு மோதல் நடைபெற்றுக் கொண்டிருந்தது.

அப்போது அந்த இரவு ஆகாயம், விட்டில் பூச்சிகளைப்(கூட்டங்களைப்) போல அந்த ஆயுதங்களின் மோதலால் உண்டான பொறிகளால் பிரகாசமாக ஒளிர்ந்தது. அந்தப் போரில் தன் ஆற்றலில் செருக்குடைய துரோணரின் மகனால் {அஸ்வத்தாமனால்} தன் மாயை விலக்கப்பட்டதைக் கண்ட கடோத்கசன், மீண்டும் தன்னைக் கண்களுக்குப் புலப்படாதவனாக ஆக்கிக் கொண்டு {மீண்டும்} ஒரு மாயையை உண்டாக்கினான்.(102,103) சிகரங்களும், மரங்களும் நிறைந்ததும், சூலங்கள், வேல்கள், வாள்கள், கனமான தண்டங்கள் ஆகியன தடையில்லாமல் பாயும்படியான ஓர் அருவியைக் கொண்டதுமான ஒரு மலையின் வடிவத்தை அவன் {கடோத்கசன்} ஏற்றான்.(104) கரிய மைத் திரளைப் போலிருந்த அந்த மலையையும், அதிலிருந்து பாயும் எண்ணற்ற ஆயுதங்களையும் கண்ட துரோணரின் மகன் {அஸ்வத்தாமன்}, சற்றும் அசையவில்லை. அப்போது பின்னவன் {அஸ்வத்தாமன்} வஜ்ர ஆயுதத்தை {வஜ்ராஸ்திரத்தை} [8] இருப்புக்கு அழைத்தான்.(105,106) அவ்வாயுதத்தால் தாக்கப்பட்ட அந்த மலைகளின் இளவரசன் வேகமாக அழிந்தான்.

[8] "இடியின் சக்தியைக் கொண்ட ஆயுதம் {அஸ்திரம்}" எனக் கங்குலி இங்கே விளக்குகிறார்.

பிறகு அந்த ராட்சசன் {கடோத்கசன்}, ஆகாயத்தில் வானவில்லுடன் கூடிய நீல மேகங்களாகி அந்தப் போரில் துரோணரின் மகன் மீது கற்கள் மற்றும் பாறைகளாலான மழையை மூர்க்கமாகப் பொழியத் தொடங்கினான்.(107) அப்போது ஆயுதங்களை அறிந்த மனிதர்களில் அனைவரிலும் முதன்மையான அந்த அஸ்வத்தாமன், வாயவ்ய ஆயுதத்தைக் குறி பார்த்து, ஆகாயத்தில் எழுந்த அந்த நீல மேகத்தை அழித்தான்(108) மனிதர்களில் முதன்மையான அந்தத் துரோண மகன் {அஸ்வத்தாமன்} திசைகளின் புள்ளிகள் அனைத்தையும் தன் கணைகளால் மறைத்து, நூறாயிரம் {100,000} தேர்வீரர்களைக் கொன்றான். பிறகு அவன் {அஸ்வத்தாமன்}, சிங்கங்கள், அல்லது புலிகள், அல்லது மதங்கொண்ட ஆற்றலைக் கொண்ட யானைகளுக்கு ஒப்பான ராட்சசர்களில், சிலர்கள் யானைகளில் ஏறியும், சிலர் தேர்களிலும், சிலர் குதிரைகளிலும் எனப் பெரும் எண்ணிக்கையில் வந்தவர்களின் துணையுடன், வில்லை வளைத்துக் கொண்டு தன்னை நோக்கி வரும் கடோத்கசனைக் கண்டான்.(109-111) அந்த ஹிடிம்பையின் மகன் {கடோத்கசன்}, பயங்கர முகங்கள், தலைகள் மற்றும் கழுத்துகள் கொண்ட தன் தொண்டர்கள் துணையுடன் இருந்தான்.(112) அந்த ராட்சசர்களில் பௌலஸ்தியர்கள் மற்றும் யாதுதானர்களும் இருந்தனர் [9]. அவர்கள் ஆற்றலில் இந்திரனுக்கு இணையானவர்களாக இருந்தனர். அவர்கள் பல்வேறு வகைகளிலான ஆயுதங்களை ஏந்தியவர்களாகவும், பல்வேறு விதங்களிலான கவசங்களைப் பூண்டவர்களாகவும் இருந்தனர்.(113) பயங்கர முகத்தோற்றங்களைக் கொண்ட அவர்கள் சினத்தில் பெருகியவர்களாகவும் இருந்தனர். உண்மையில் போரில் எளிதில் வெல்லப்பட முடியாதவர்களான அந்த ராட்சசர்களின் துணையுடனேயே போருக்கு கடோத்கசன் வந்தான்.(114)

[9] இவர்கள் ராட்சசர்களில் வேறு வகையினர் என்று இங்கே கங்குலி விளக்குகிறார். வேறொரு பதிப்பில் இவர்கள், "புலஸ்திய வம்சத்தில் தோன்றியவர்களும், தமோ குணத்தினால் மூடப்பட்டவர்களும் ஆவர்" என்று சொல்லப்பட்டுள்ளது.

அவர்களைக் கண்ட உமது மகன் துரியோதனன் மிகவும் உற்சாகமற்றவனாக ஆனான். அவனிடம் {துரியோதனனிடம்} துரோண மகன் {அஸ்வத்தாமன்}, "ஓ! துரியோதனா, பொறுப்பாயாக. உனக்கு அச்சம் தேவையில்லை.(115) உனது இந்த வீரச் சகோதரர்களுடனும், இந்திரனின் ஆற்றலைக் கொண்ட இந்தப் பூமியின் தலைவர்களுடனும் ஒருபுறமாக நிற்பாயாக. நீ தோல்வியடைய மாட்டாய். நான் உனக்கு உண்மையாகவே சொல்கிறேன். அதே வேளையில் உன் துருப்புகளுக்கும் நீ உறுதியளிப்பாயாக {ஆறுதலளிப்பாயாக}" என்றான் {அஸ்வத்தாமன்}.(116) அதற்குத் துரியோதனன், "உமது இதயம் பெரியதென்பதால், நீர் சொல்வதை நான் அற்புதமாகக் கருதவில்லை. ஓ! கௌதமர் மகனின் {கிருபரின்} மகனே {அஸ்வத்தாமரே}, நீர் எங்களிடம் கொண்ட மதிப்பு பெரியதே" என்றான் {துரியோதனன்}.(117)

சஞ்சயன் {திருதராஷ்டிரனிடம்} தொடர்ந்தான், "அஸ்வத்தாமனிடன் இவ்வார்த்தைகளைச் சொன்ன அவன் {துரியோதனன்}, பிறகு சுபலனின் மகனிடம் {சகுனியிடம்}, "பெரும் வீரமிக்க நூறாயிரம் தேர்வீரர்கள் சூழத் தனஞ்சயன் {அர்ஜுனன்} போரில் ஈடுபடுகிறான். அறுபதாயிரம் தேர்களுடன் நீர் அவனை எதிர்த்துச் செல்வீராக. கர்ணன், விருஷசேனன், கிருபர், நீலன், வடக்கத்தியர் {வடநாட்டு அரசர்கள்}, கிருதவர்மன், புருமித்ரனின் மகன்கள், துச்சாசனன், நிகும்பன், குண்டபேதி, புரஞ்சயன், திருடரதன், பதாகின், ஹேமபுஞ்சகன் {ஹேமகம்பனன், [ஹேமபுஷ்யகன்]}, சல்லியன், ஆருணி, இந்திரசேனன், சஞ்சயன், விஜயன், ஜெயன், கமலாக்ஷன், பரகிராதின், ஜெயதர்மன் {ஜெயவர்மன்}, சுதர்சனன் ஆகியோரும் [10] மேலும் அறுபதாயிரம் காலாட்படை வீரர்களுடன் உம்மைத் தொடர்ந்து வருவார்கள்.(118-122)

[10] வேறொரு பதிப்பில் இந்தப்பட்டியலில் கூடுதலாகச் சுதாபனன், பராக்கிரமன் ஆகியோர் இருக்கின்றனர். மன்மதநாததத்தரின் பதிப்பில் புருகிரமன் என்ற ஒருவன் மட்டுமே கூடுதலாக இருக்கிறான். கங்குலியில் வரும் ஹேமபுஞ்சகன் என்ற பெயர் வேறொரு பதிப்பில் ஹேமகம்பனன் என்றும், மன்மதநாததத்தரின் பதிப்பில் ஹேமபுஷ்யகன் என்றும் இருக்கிறது.

அம்மானே {சகுனியே}, தேவர்களின் தலைவன் அசுரர்களைக் கொல்வதைப் போலவே, பீமன், இரட்டையர் {நகுலன் மற்றும் சகாதேவன்} மற்றும் நீதிமானான மன்னன் யுதிஷ்டிரன் ஆகியோரை நீர் கொல்வீராக. உம்மிடமே வெற்றி குறித்த நம்பிக்கை எனக்கு இருக்கிறது.(123) ஏற்கனவே துரோணர் மகனின் {அஸ்வத்தாமனின்} கணைகளால் ஆழத்துளைக்கப்பட்ட அவர்களின் அங்கங்கள் அனைத்தும் மிகவும் சிதைக்கப்பட்டுள்ளன. ஓ! மாமனே {சகுனியே}, அக்னியின் மகன் (கார்த்திகேயன்) அசுரர்களைக் கொன்றதைப் போலவே குந்தியின் மகன்களைக் கொல்வீராக" என்றான் {துரியோதனன்}.(124) உமது மகனால் {துரியோதனனால்} இப்படிச் சொல்லப்பட்ட சகுனி, ஓ! மன்னா {திருதராஷ்டிரரே}, பாண்டவர்களை அழிப்பதற்காக வேகமாகச் சென்று, உமது மகன்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தினான்" {என்றான் சஞ்சயன்}.(125)

{சஞ்சயன் திருதராஷ்டிரனிடம் தொடர்ந்தான்}, "அதேவேளையில், ஓ! மன்னா {திருதராஷ்டிரரே}, (பழங்காலத்தில்) சக்ரனுக்கும் {இந்திரனுக்கும்}, பிரகலாதனுக்கும் இடையில் நடந்ததைப் போல அவ்விரவில், அந்த ராட்சசனுக்கும் {கடோத்கசனுக்கும்}, துரோணரின் மகனுக்கும் {அஸ்வத்தாமனுக்கும்} இடையிலான போர் நடைபெற்றது.(126) சினத்தில் நிறைந்த கடோத்கசன், நஞ்சையோ, நெருப்பையோ போன்ற பத்து கடுங்கணைகளால் துரோணர் மகனின் {அஸ்வத்தாமனின்} மார்பைத் தாக்கினான்.(127) பீமசேனன் மகனால் {கடோத்கசனால்} ஏவப்பட்ட அந்தக் கணைகளால் ஆழத் துளைக்கப்பட்ட அஸ்வத்தாமன், புயலால் அசைக்கப்பட்ட நெடிய மரம் ஒன்றைப் போலத் தன் தேர்த்தட்டில் நடுங்கிக் கொண்டிருந்தான்.(128) கடோத்கசன் மீண்டும் ஒரு பல்லத்தைக் கொண்டு துரோண மகனின் {அஸ்வத்தாமனின்} கைகளில் இருந்த பிரகாசமான வில்லை வெட்டினான்.(129) பிறகு பெருங்கடினத்தைத் தாங்கவல்ல மற்றொரு வில்லை எடுத்துக் கொண்ட பின்னவன் {அஸ்வத்தாமன்}, (தன் எதிரியின் மீது) மழைத்தாரைகளைப் பொழியும் மேகங்களைப் போலக் கூரிய கணைகளைப் பொழிந்தான்.(130) பிறகு அந்தச் சரத்வான் மகளின் {கிருபியின்} மகன் {அஸ்வத்தாமன்}, ஓ! பாரதரே {திருதராஷ்டிரரே}, வானுலாவுபவையும், எதிரிகளைக் கொல்பவையும், தங்கச் சிறகுகளைக் கொண்டவையுமான கணைகள் பலவற்றை வானுலாவும் அந்த ராட்சசன் {கடோத்கசன்} மீது ஏவினான்.(131)


அப்போது அஸ்வத்தாமனின் அந்தக் கணைகளால் பீடிக்கப்பட்டவையும், அகன்ற மார்பினரான ராட்சசர்களைக் கொண்டவையுமான அந்தப் பெரிய படை, சிங்கங்களால் பீடிக்கப்பட்ட மதயானைக் கூட்டத்தைப் போலத் தெரிந்தது.(132) குதிரைகள், சாரதிகள், யானைகள் ஆகியவற்றுடன் கூடிய அந்த ராட்சர்களைத் தன் கணைகளால் எரித்த அவன் {அஸ்வத்தாமன்}, யுக முடிவில் உயிரினங்களை எரிக்கும் புகழத்தக்க அக்னியைப் போலச் சுடர்விட்டெரிந்தான்.(133) தன் கணைகளால் ஒரு முழு அக்ஷௌஹிணி ராட்சசத் துருப்புகளை எரித்த அஸ்வத்தாமன், முந்நகரத்தை {திரிபுரத்தை} [11] எரித்த தெய்வீக மகேஸ்வரனைப் போலப் பிரகாசமாக ஒளிர்ந்தான்.(134) வெற்றியாளர்களில் முதன்மையான அந்தத் துரோணர் மகன் {அஸ்வத்தாமன்}, உமது எதிரிகளை எரித்து, யுகமுடிவின் போது உயிரினங்கள் அனைத்தையும் எரிக்கும் யுக நெருப்பைப் போலப் பிரகாசமாக ஒளிர்ந்தான்.(135)

[11] "திரிபுராசுரனின் நகரமான திரிபுரம்" எனக் கங்குலி இங்கே விளக்குகிறார்.

அப்போது சினத்தால் நிறைந்த கடோத்கசன், "துரோணரின் மகனைக் கொல்வீராக" என்று சொல்லி அந்தப் பரந்த ராட்சசப் படையைத் தூண்டினான்.(136) பிரகாசமான பற்களையும், பெரிய முகங்களையும், பயங்கரத் தன்மைகளையும், அகன்ற வாய்களையும், நீண்ட நாக்குகளையும், கோபத்தால் சிவந்த கண்களையும் கொண்ட அந்தப் பயங்கர ராட்சசர்கள், கடோத்கசனின் அந்தக் கட்டளைக்குக் கீழ்ப்படிந்தனர்.(137) தங்கள் சிங்க முழக்கங்களால் பூமியை நிறைத்து, பல்வேறு வகை ஆயுதங்களை எடுத்துக் கொண்ட அவர்கள் துரோணரின் மகனை {அஸ்வத்தாமனைக்} கொல்வதற்காக அவனை எதிர்த்து விரைந்தனர்.(138) பயங்கர ஆற்றலைக் கொண்ட அந்த ராட்சசர்கள், கோபத்தால் கண்கள் சிவந்து, அஸ்வத்தாமனின் தலை மீது நூற்றுக் கணக்கான, ஆயிரக்கணக்கான ஈட்டிகள், சதக்னிகள், பரிகங்கள், அசனிகள், நீண்ட வேல்கள் {சூலங்கள்}, கோடரிகள், கத்திகள், கதாயுதங்கள், குறுங்கணைகள் {பிண்டிபாலங்கள்}, கனமான தண்டாயுதங்கள், போர்க்கோடரிகள், பராசங்கள், வாள்கள், வேல்கள் {தோமரங்கள்}, குணபங்கள், பளபளப்பான கம்பனங்கள், ஸ்தூலங்கள் {புசுண்டிகள்}, ஏவுகணைகள், கற்கள், (சூடான) பாகு நிறைந்த பாத்திரங்கள், எஃகால் ஆன ஸ்தூணங்கள் {தூண்கள்}, உலக்கைகள் மற்றும் பயங்கரமான வடிவத்துடன் கூடியவையும் எதிரிகளை அழிக்கவல்லவையான அனைத்தையும் வீசினார்கள்.(139-142)

துரோணர் மகனின் {அஸ்வத்தாமனின்} தலையில் விழுந்து கொண்டிருந்த, அந்த ஆயுதங்களின் அடர்த்தியான கணைமாரியைக் கண்ட உமது போர்வீரர்கள் மிகவும் துன்புற்றனர்.(143) எனினும், துரோணர் மகன் {அஸ்வத்தாமன்}, ஆகாயத்ததில் எழுந்த மேகத்தைப் போலத் தெரிந்ததும், இடியின் பலத்தைக் கண்டதுமான அந்தப் பயங்கர ஆயுத மழையைத் தன் கூரிய கணைகளால் அச்சமற்றவகையில் அழித்தான்.(144) பிறகு அந்த உயர் ஆன்ம துரோணர் மகன் {அஸ்வத்தாமன்}, தங்கச் சிறகுகளைக் கொண்டவையும், தெய்வீக ஆயுதங்களின் சக்தியை மந்திரங்களால் ஈர்த்திருந்தவையுமான பிற ஆயுதங்களால் வேகமாக ராட்சசர்களில் பலரைக் கொன்றான்.(145) அந்தக் கணைகளால் பீடிக்கப்பட்டவர்களும், அகலமான மார்பைக் கொண்டவர்களுமான அந்த ராட்சசர்களின் பெரும்படை, சிங்கங்களால் பீடிக்கப்பட்ட மதங்கொண்ட யானைகளின் கூட்டத்தைப் போலத் தெரிந்தது.(146)

அப்போது, துரோணர் மகனால் {அஸ்வத்தாமனால்} இப்படிப் பீடிக்கப்பட்ட அந்த வலிமைமிக்க ராட்சசர்கள், சீற்றத்தால் நிறைந்து, முன்னவனை {அஸ்வத்தாமனை} எதிர்த்து விரைந்தனர்.(147) அந்த ராட்சசர்களின் இளவரசன் {கடோத்கசன்} பார்த்துக் கொண்டிருந்தபோதே, தன் சுடர்மிக்கக் கணைகளால் அந்த ராட்சசப் படையை எரித்தவனும், உயர்ந்த வலிமைமிக்க ஆயுதங்களை அறிந்தவனுமான அந்தப் போர்வீரன் {அஸ்வத்தாமன்}, தனியாகவும், ஆதரவற்றவனாகவும் இருந்து கொண்டே, உயிருடன் கூடிய வேறு எந்த உயிரினங்களும் செய்ய முடியாத அருஞ்செயல்களைச் செய்ததால், அப்போது துரோணரின் மகனால் வெளிக்காட்டப்பட்ட ஆற்றலானது மிக அற்புதமானதாக இருந்தது.(148,149) ராட்சசப் படையை எரித்துக் கொண்டிருந்த போது, அந்தத் துரோணரின் மகன் {அஸ்வத்தாமன்}, யுகமுடிவில் அனைத்தையும் எரிக்கும் சம்வர்த்தக நெருப்பைப் போல அந்தப் போரில் பிரகாசமாக ஒளிர்ந்தான்.(150)

உண்மையில், ஓ! பாரதரே {திருதராஷ்டிரரே}, அந்த ஆயிரக்கணக்கான மன்னர்கள் மற்றும் பாண்டவர்களுக்கு மத்தியில், கடும் நஞ்சுமிக்கப் பாம்புகளுக்கு ஒப்பான தன் கணைகளால், அந்தப் போரில் அவர்களது படைகளை எரிப்பதில் ஈடுபட்டுக் கொண்டிருந்த துரோணரின் மகனை {அஸ்வத்தாமனைப்} பார்க்கவல்ல சக்தி, வலிமைமிக்க ராட்சச இளவரசனான அந்த வீர கடோத்கசனைத் தவிர வேறு எவனிடமும் இல்லை.(151,152) ஓ! பாரதர்களின் தலைவரே {திருதராஷ்டிரரே}, கோபத்தால் கண்களை உருட்டிக் கொண்டும், உள்ளங்கைகளைத் தட்டிக் கொண்டும், தன் (கீழ்) உதட்டைக் கடித்துக் கொண்டும் இருந்த அந்த ராட்சசன் {கடோத்கசன்}, தன் தேரோட்டியிடம், "துரோணர் மகனிடம் {அஸ்வத்தாமரிடம்} என்னைச் சுமந்து செல்வாயாக" என்றான்.(153)

வெற்றிக் கொடிகளைக் கொண்ட அந்த உறுதிமிக்கத் தேரில் ஏறிச் சென்ற அந்த எதிரிகளைக் கொல்பவன் {கடோத்கசன்}, துரோணரின் மகனுடன் {அஸ்வத்தாமனுடன்} மீண்டும் ஒரு தனி மோதலை விரும்பி, பின்னவனை {அஸ்வத்தாமனை} எதிர்த்துச் சென்றான். பயங்கர ஆற்றலைக் கொண்ட அந்த ராட்சசன் {கடோத்கசன்}, சிங்க முழக்கமொன்றை முழங்கி, அந்த மோதலில் துரோணரின் மகன் {அஸ்வத்தாமன்} மீது, தெய்வீகக் கைவண்ணம் {வேலைப்பாடு} கொண்டதும், எட்டு மணிகளுடன் கூடியதுமான ஒரு பயங்கர அசனியை[12] ஏவினான்.(154-156) எனினும் துரோணரின் மகன் {அஸ்வத்தாமன்}, தன் வில்லை விட்டுவிட்டுத் தேரில் இருந்து கீழே குதித்து, அதை {அந்த அசனியைப்} பிடித்து, மீண்டும் கடோத்கசன் மீதே அதைத் திருப்பி வீசினான். அதே வேளையில் கடோத்கசன், தன் தேரில் இருந்து வேகமாகக் கீழே இறங்கினான்.(157) பளபளக்கும் பிரகாசம் கொண்ட அந்த உறுதி மிக்க அசனியானது, குதிரைகள், சாரதி, கொடிமரம் ஆகியவற்றோடு கூடிய அந்த ராட்சசனின் வாகனத்தைச் சாம்பலாக்கி, பூமியைத் துளைத்து அவளுக்குள் {பூமிக்குள்} நுழைந்தது.(158) தன் தேரில் இருந்து கீழே குதித்து, தெய்வீகக் கைவண்ணம் கொண்ட அந்தப் பயங்கர அசனியைப் பிடித்த அந்தத் துரோணர் மகனின் {அஸ்வத்தாமனின்} அருஞ்செயலைக் கண்டு உயிரினங்கள் அனைத்தும் மெச்சின.(159)

[12] "அசனி என்றால் உண்மையில் இடி அல்லது வஜ்ரம் என்று பொருள். ஒருவேளை இஃது ஒரு வகை இரும்பு கதாயுதமாக இருக்கலாம்" என்று கங்குலி இங்கே விளக்குகிறார்.

அப்போது, ஓ! மன்னா {திருதராஷ்டிரரே}, திருஷ்டத்யும்னன் தேருக்குச் சென்ற அந்தப் பீமசேனன் மகன் {கடோத்கசன்}, இந்திரனின் பெரிய வில்லுக்கு ஒப்பான ஒரு பயங்கர வில்லை எடுத்துக் கொண்டு, சிறப்புமிக்கத் துரோணரின் மகன் மீது கூரிய கணைகள் பலவற்றை ஏவினான்.(160) திருஷ்டத்யும்னனும், கடும் நஞ்சுமிக்கப் பாம்புகளுக்கு ஒப்பானவையும், தங்கச் சிறகுகளைக் கொண்டவையுமான முதன்மையான கணைகள் பலவற்றை அஸ்வத்தாமனின் மார்பில் ஏவினான். பிறகு துரோணரின் மகன் {அஸ்வத்தாமன்} ஆயிரக்கணக்கான குறுங்கணைகளையும் {பிண்டிபாலங்களையும்}, நீண்ட கணைகளையும் {நாராசங்களையும்} ஏவினான்.(161,162) எனினும், கடோத்கசன் மற்றும் திருஷ்டத்யும்னன் ஆகிய இருவரும், நெருப்பின் தீண்டலுக்கு ஒப்பான தங்கள் கணைகளால் அஸ்வத்தாமனின் கணைகளைத் தாக்கி அவற்றைக் கலங்கடித்தனர். (ஒரு புறத்தில்) மனிதர்களில் சிங்கங்களான அந்த இருவர், (மறுபுறத்தில்) துரோணரின் மகன் {அஸ்வத்தாமன்} என அவர்களுக்கு இடையில் மிகக் கடுமையாக நடைபெற்ற அந்தப் போரானது, ஓ! பாரதக் குலத்தவரே {திருதராஷ்டிரரே}, போராளிகள் அனைவரையும் மகிழ்ச்சியில் ஆழ்த்தியது. அப்போது, ஆயிரம் தேர்கள், முன்னூறு யானைகள் மற்றும் ஆறாயிரம் குதிரைகள் ஆகியவற்றுடன் அந்த இடத்திற்குப் பீமசேனன் வந்தான்.(163, 164) எனினும், துரோணரின் அற மகன் {அஸ்வத்தாமன்}, களைப்பறியா ஆற்றலுடன் தொடர்ந்து பீமனின் வீர மகனுடனும் {கடோத்கசனுடனும்}, {பின் தொடர்ந்து வரும்} தொண்டர்களுடன் கூடிய திருஷ்டத்யும்னனுடனும் போரிட்டான்.

ஓ! பாரதரே {திருதராஷ்டிரரே}, அந்நேரத்தில் அத்தகு அருஞ்செயல்களை உயிரினங்கள் அனைத்தில் எவையும் செய்ய முடியாது எனும் அளவுக்குத் துரோணர் மகனால் {அஸ்வத்தாமனால்} வெளிக்காட்டப்பட்ட ஆற்றல் மிக அற்புதமானதாக இருந்தது.(165-167) பீமசேனன், ஹிடிம்பையின் மகன் {கடோத்கசன்}, பிருஷதன் மகன் {திருஷ்டத்யும்னன்}, இரட்டையர் {நகுலன் மற்றும் சகாதேவன்}, தர்மனின் மகன் {யுதிஷ்டிரன்}, விஜயன் {அர்ஜுனன்} மற்றும் அச்யுதன் {கிருஷ்ணன்} ஆகியோர் பார்த்துக் கொண்டிருக்கும்போதே, குதிரைகள், சாரதிகள், தேர்கள், யானைகள் ஆகியவற்றுடன் கூடிய ஒரு முழு அக்ஷௌஹிணி ராட்சசத் துருப்புகளைக் கண்ணிமைக்கும் நேரத்திற்குள் தன் கூரிய கணைகளால் அவன் {அஸ்வத்தாமன்} அழித்தான்.(168,169) நேராகச் செல்லும் (அஸ்வத்தாமனின்) கணைகளால் ஆழத் துளைக்கப்பட்ட யானைகள், சிகரங்களற்ற மலைகளைப் போலக் கீழே பூமியில் விழுந்தன. வெட்டப்பட்டு நடுங்கிக் கொண்டிருந்த துதிக்கைகளால் விரவிக் கிடந்த பூமியானது நெளியும் பாம்புகளால் நிறைந்திருப்பதைப் போல அழகாகத் தெரிந்தது. தங்கத் தண்டுகள் மற்றும் அரசக் குடைகளால் விரவிக் கிடந்த பூமியானது, யுக முடிவின் போது கோள்கள், நட்சத்திரங்கள், நிலவுகள் மற்றும் சூரியன்கள் பலவற்றால் விரவிக்கிடக்கும் ஆகாயத்தைப் போல மிகப் பிரகாசமாகத் தெரிந்தது.(170, 171)

அப்போது துரோணரின் மகன் {அஸ்வத்தாமன்}, வேகமான ஓடையுடன் கூடிய குருதிப்புனல் ஒன்றை அங்கே ஓடச் செய்தான். யானைகள், குதிரைகள் மற்றும் போராளிகளின் குருதியே அதன் {அந்த ஆற்றின்} நீரானது. நெடிய கொடிமரங்கள் அதன் தவளைகளாகின. பேரிகைகள் அதன் பெரும் ஆமைகளாகின; குடைகள் அதன் அன்ன {அன்னப்பறவை} வரிசையாகின; அபரிமிதமான சாமரங்கள் அதன் நுரைகளாகின; கங்கங்கள், கழுகுகள் ஆகியன அதன் முதலைகளாகின; அபரிமிதமான ஆயுதங்கள் அதன் மீன்களாகின; பெரும் யானைகள் கரையில் கிடக்கும் அதன் கற்கள் மற்றும் பாறைகளாகின; யானைகளும், குதிரைகளும் அதன் சுறாக்களாகின; தேர்கள் அதன் நிலையில்லாத கரைகளாகின; கொடிகள் அதன் அழகிய மர வரிசைகளாகின. கணைகளைத் தன் (சிறு) மீன்களாகக் கொண்ட அந்தப் பயங்கர ஆறு, வேல்கள், ஈட்டிகள், வாள்கள் ஆகியவற்றைத் தன் பாம்புகளாகக் கொண்டிருந்தது; மஜ்ஜை மற்றும் இறைச்சியைச் சேறாகவும், தலையற்ற உடல்களை  மிதக்கும் தெப்பங்களாகவும் கொண்டிருந்தது. (மனிதர்கள் மற்றும் விலங்குகளின்) மயிர்களால் அடைக்கப்பட்ட அஃது அவற்றைப் பாசியாகக் கொண்டிருந்தது. மேலும் அது மருண்டோரை அச்சங்கொள்ளவும், உற்சாகமிழக்கவும் செய்தது. போராளிகளின் ஓலம் அதன் பயங்கர முழக்கமாக இருந்தது. இரத்த அலைகளே அதன் பரப்பில் தெரிந்தன.(172-177) காலாட்படை வீரர்களால் நிறைந்து பயங்கரமாக இருந்த அது, கடலான யமனின் வசிப்பிடத்தை நோக்கிப் பாய்ந்து கொண்டிருந்தது.

ராட்சசர்களைக் கொன்ற துரோணரின் மகன் {அஸ்வத்தாமன்}, பிறகு, தன் கணைகளால் ஹிடிம்பையின் மகனை {கடோத்கசனைப்} பீடிக்கத் தொடங்கினான்.(178) மீண்டும் சினத்தால் நிறைந்தவனும், பலமிக்கவனுமான அந்தத் துரோணர் மகன் {அஸ்வத்தாமன்}, கணைகள் பலவற்றால், விருகோதரன் {பீமன்} மற்றும் பிருஷதன் {துருபதன்} மகன்கள் உள்ளிட்ட வலிமைமிக்கத் தேர்வீரர்களான பார்த்தர்களைத் துளைத்த பிறகு, துருபதன் மகன்களில் ஒருவனான சுரதனைக் {சுருதனைக்} கொன்றான். பிறகும் அவன் {அஸ்வத்தாமன்}, சத்ருஞ்சயன் என்ற பெயர் கொண்ட சுரதனின் தம்பியையும் கொன்றான்.(179,180) மேலும் அவன் {அஸ்வத்தாமன்}, பலானீகன், ஜயானீகன், ஜயன் ஆகியோரையும் கொன்றான். சிங்க முழக்கம் செய்த துரோணரின் மகன் {அஸ்வத்தாமன்}, மீண்டும் கூரிய கணையொன்றால் பிருஷத்ரனையும், அதன் பிறகு செருக்குமிக்கச் சந்திரசேனனையும் கொன்றான். பிறகும் அவன் {அஸ்வத்தாமன்} பத்து கணைகளால் குந்திபோஜனின் பத்து மகன்களைக் கொன்றான்.(181,182) மேலும் அந்தத் துரோணரின் மகன் {அஸ்வத்தாமன்}, ஓ! மன்னா {திருதராஷ்டிரரே}, சுருதாயுஷை யமனின் வசிப்பிடத்திற்கு அனுப்பிவைத்தான். அவன் {அஸ்வத்தாமன்}, அழகிய சிறகுகளையும், கண்களையும் {!} கொண்ட மூன்று பிற கூரிய கணைகளால் வலிமைமிக்கச் சத்ருஞ்சயனைச் {!} சக்ரனின் {இந்திரனின்} வசிப்பிடத்திற்கு அனுப்பினான் [13].

[13] "இதற்கு முந்தைய மூன்று சுலோகங்களைப் பொறுத்தவரை, வங்கம் மற்றும் பம்பாய்ப் பதிப்புகளுக்கிடையே சில வேறுபாடுகள் காணப்படுகின்றன" என இங்கே விளக்குகிறார் கங்குலி. அதனால்தான் சத்ருஞ்சயன் இருமுறை சொல்லப்படுகிறான் போலும். இவையும், சுருதாயுஷ் பற்றிய குறிப்பும் வேறு பதிப்பில் இல்லை. மன்மதநாததத்தரின் பதிப்பில் கங்குலியில் உள்ளதைப் போலவே இருக்கிறது.

பிறகு சினத்தால் நிறைந்த அஸ்வத்தாமன், கடுமையானதும், நேரானதுமான ஒரு கணையைத் தன் வில்லின் நாணில் பொருத்தினான்.(183,184) பிறகு அவன் {அஸ்வத்தாமன்}, அந்த நாணைத் தன் காது வரை இழுத்து, கடுமையானதும், யமனின் தண்டத்திற்கு ஒப்பானதுமான அந்தச் சிறந்த கணையால் கடோத்கசனைக் குறிபார்த்து வேகமாக ஏவினான்.(185) அழகிய சிறகுகளைக் கொண்ட அந்த வலிமைமிக்கக் கணை, ஓ! பூமியின் தலைவா {திருதராஷ்டிரரே}, அந்த ராட்சசனின் {கடோத்கசனின்} மார்பைத் துளைத்துக் கடந்து சென்று பூமிக்குள் நுழைந்தது. அதன்பேரில் கடோத்கசன் அந்தத் தேரிலேயே கீழே விழுந்தான். அவன் விழுவதைக் கண்டு, அவன் இறந்துவிட்டான் என்று நம்பியவனும், வலிமைமிக்கத் தேர்வீரனுமான திருஷ்டத்யும்னன், துரோணர் மகனின் {அஸ்வத்தாமனின்} முன்னிலையில் இருந்து அவனை {கடோத்கசனை} அகற்றி, மற்றொரு தேரில் அவனைக் கிடத்தச் செய்தான்.(187)

இப்படியே, ஓ! மன்னா {திருதராஷ்டிரரே}, யுதிஷ்டிரனின் தேர்ப்படையானது போரில் இருந்து புறமுதுகிட்டது. அப்போது, தன் எதிரிகளை வென்ற துரோணரின் வீர மகன் {அஸ்வத்தமான்} உரக்கச் சிங்க முழக்கமிட்டான். ஓ! ஐயா {திருதராஷ்டிரரே}, உமது மகன்கள் அனைவராலும், மனிதர்கள் அனைவராலும் அவன் {அஸ்வத்தாமன்} வழிபடப்பட்டான்.(188) நூற்றுக்கணக்கான கணைகளால் துளைக்கப்பட்டும், சிதைக்கப்பட்டும் இறந்து கிடந்த ராட்சசர்களின் உடல்களால் விரவிக் கிடந்த பூமியானது, மலைச் சிகரங்களால் விரவிக் கிடப்பதைப் போலப் பயங்கரத் தோற்றத்தை அடைந்து கடக்கமுடியாததாக ஆனது.(189) சித்தர்கள், கந்தர்வர்கள், பிசாசர்கள், நாகர்கள், பறவைகள், பித்ருக்கள், அண்டங்காக்கைகள், அங்கே பெரும் எண்ணிக்கையிலான மனித ஊனுண்ணிகள், பேய்கள், அப்சரஸ்கள், தேவர்கள் ஆகியோர் அனைவரும் துரோணரின் மகனை {அஸ்வத்தாமனைப்} புகழ்வதில் ஒன்று சேர்ந்தனர்" {என்றான் சஞ்சயன்}.(190)

சஞ்சயன் {திருதராஷ்டிரனிடம்} சொன்னான், "துருபதனின் மகன்களும், குந்திபோஜனின் மகன்களும், ஆயிரக்கணக்கான ராட்சசர்களும் துரோணரின் மகனால் {அஸ்வத்தாமனால்} கொல்லப்படுவதைக் கண்ட யுதிஷ்டிரன், பீமசேனன், பிருஷதன் மகனான திருஷ்டத்யும்னன், யுயுதானன் {சாத்யகி} ஆகியோர் ஒன்றாகத் திரண்டு தங்கள் இதயங்களைப் போரில் உறுதியாக நிறுத்தினர்.(1,2) அப்போது அந்தப் போரில் சாத்யகியைக் கண்ட சோமதத்தன், ஓ! பாரதரே {திருதராஷ்டிரரே}, மீண்டும் சினத்தால் நிறைந்து, பின்னவனை {சாத்யகியை} அடர்த்தியான கணைமாரியால் மறைத்தான்.(3) வெற்றியை விரும்பிய இரு தரப்பினரான உமது போர்வீரர்களுக்கும், எதிரியுடைவர்களுக்கும் இடையில் கடுமையானதும், காண்பதற்கு மிக அற்புதமானதுமான ஒரு போர் நடந்தது.(4) சாத்யகியின் சார்பாகப் போரிட்ட பீமன், அந்தக் கௌரவ வீரனை {சோமதத்தனைப்} பத்து கணைகளால் துளைத்தான். எனினும் சோமதத்தன் பதிலுக்கு ஒரு நூறு கணைகளால் அந்த வீரனை {பீமனைத்} துளைத்தான்.(5)


அப்போது சினத்தால் நிறைந்த சாத்வதன் {சாத்யகி}, நகுஷனின் மகனான யயாதியின் உயரிய நற்குணங்கள் அனைத்தையும் கொண்டவனும், தன் மகனின் மரணத்தால் பீடிக்கப்பட்டிருந்தவனுமான அந்த முதிய போர்வீரனை {சோமதத்தனை}, இடியின் சக்தியைக் கொண்ட பத்து கூரிய கணைகளால், துளைத்தான். பெரும் பலத்துடன் அவனை {சோமதத்தனைத்} துளைத்த அவன் {சாத்யகி}, மீண்டும் ஏழு கணைகளால் அவனைத் தாக்கினான்.(6,7) பிறகு சாத்யகிக்காகப் போரிட்ட பீமசேனன், புதியதும், கடினமானதும், பயங்கரமானதுமான பரிகம் ஒன்றை சோமதத்தனின் தலை மீது வீசினான்.(8) சாத்யகியும் சினத்தால் நிறைந்து, அந்தப் போரில் நெருப்புக்கு ஒப்பான காந்தியையும், தங்கச் சிறகுகளையும் கொண்ட ஒரு கூரிய கணையைச் சோமதத்தனின் மார்பில் ஏவினான்.(9) பரிகம் மற்றும் கணை ஆகிய இரண்டும் அடுத்தடுத்து வீர சோமதத்தனின் உடலில் பாய்ந்தன. அதன்பேரில் வலிமைமிக்க அந்தத் தேர்வீரன் கீழே விழுந்தான்.(10)

பாஹ்லீகன், தன் மகன் (சோமதத்தன்) மயக்கத்தில் வீழ்ந்ததைக் கண்டு, மழைக்காலத்து மேகத்தைப் போலக் கணை மாரிகளை இறைத்தபடி சாத்யகியை நோக்கி விரைந்தான்.(11) அப்போது பீமன், சாத்யகிக்காக ஒன்பது கணைகளால் சிறப்புமிக்கப் பாஹ்லீகனைப் பீடித்து, போரின் முன்னணியில் இருந்த அவனைத் {பாஹ்லீகனைத்} துளைத்தான்.(12) அப்போது, பிரதீபனின் வலிமைமிக்க மகன் (பாஹ்லீகன்) கோபத்தால் நிறைந்து, இடியை வீசும் புரந்தரனை {இந்திரனைப்} போலப் பீமனின் மார்பில் ஈட்டி ஒன்றை வீசினான். அதனால் தாக்கப்பட்ட பீமன் (தன் தேரில்) நடுங்கியபடியை மயக்கமடைந்தான். பிறகு, தன் உணர்வுகள் மீண்ட அந்த வலிமைமிக்க வீரன் {பீமன்}, தன் எதிராளியின் {பாஹ்லீகனின்} மீது ஒரு கதாயுதத்தை வீசினான்.(14) பாண்டுவின் மகனால் {பீமனால்} வீசப்பட்ட அந்தக் கதாயுதம் பாஹ்லீகனின் தலையைக் கொய்ததால், மின்னல் தாக்கி வீழ்த்தப்பட்ட மரம் ஒன்றைப் போல அவன் {பாஹ்லீகன்} பூமியில் உயிரற்று கீழே விழுந்தான்.(15)

மனிதர்களில் காளையான அந்த வீரப் பாஹ்லீகன் கொல்லப்பட்டதும், ஆற்றலில் தசரதன் மகனான ராமனுக்கு இணையானவர்களான உமது மகன்களில் பத்து பேர் பீமனைப் பீடிக்கத் தொடங்கினர்.(16) அவர்கள் நாகதத்தன், திருதரதன் {த்ருடரதன்}, வீரபாகு {மஹாபாகு}, அயோபுஜன், திருதன் {த்ருடன்}, சுஹஸ்தன், விரஜஸ், பிரமாதன் {பிரமாதி}, உக்ரன், அனுயாயி ஆகியோராவர்.(17) அவர்களைக் கண்ட பீமசேனன் சினத்தால் நிறைந்தான். பிறகு அவன் {பீமன்}, பெரும் கடினத்தைத் தாங்கவல்ல கணைகள் பலவற்றை எடுத்துக் கொண்டான். அடுத்தடுத்து அவர்களில் ஒவ்வொருவரையும் குறிபார்த்த அவன் {பீமன்}, அவர்கள் மீது அந்தக் கணைகளால் ஏவி, அவர்கள் ஒவ்வொருவரின் முக்கிய அங்கங்களையும் தாக்கினான்.(18) அவற்றால் துளைக்கப்பட்ட அவர்கள், சக்தியையும் உயிரையும் இழந்து, சூறாவளியால் முறிக்கப்பட்டு மலையின் முகடுகளில் இருந்து விழும் நெடிய மரங்களைப் போலத் தங்கள் தேர்களில் இருந்து கீழே விழுந்தனர் [1].(19)

[1] சேனாதிபதி, ஜலசந்தன், சுஷேணன்{?}, உக்கிரன், வீரபாகு, பீமன், பீமரதன், சுலோசனன் ஆகிய 8 பேரை பீஷ்ம பர்வம் பகுதி 64ல் 4ம் நாள் போரிலும், சுநாபன், ஆதித்யகேது, பஹ்வாசி, குண்டதாரன், மஹோதரன், அபராஜிதன், பண்டிதகன், விசாலாக்ஷன் ஆகிய 8 பேரை பீஷ்ம பர்வம் பகுதி 89ல் 8ம் நாள் போரிலும், வியுதோரோஷ்கன், அநாதிருஷ்டி, குண்டபேதின் {?}, விராஜன், தீர்கலோசனன் {தீப்தலோசனன்}, தீர்க்கபாகு, சுபாகு, கன்யாகத்யஜன் {மகரத்வஜன்}, ஆகிய 8 பேரை பீஷ்ம பர்வம் பகுதி 97ல் அதே 8ம் நாள் போரிலும், குண்டபேதி {?}, சுஷேணன் {?}, தீர்க்கநேத்திரன், பிருந்தாரகன், அபயன், ரௌத்ரகர்மன், துர்விமோசனன், விந்தன், அனுவிந்தன், சுவர்மன், சுதர்சன் ஆகிய 11 பேரை துரோண பர்வம் பகுதி 126ல் 14ம் நாள் போரிலும், துர்ஜயன் என்று ஒருவனைத் துரோணபர்வம் பகுதி 132ல் அதே 14ம் நாள் போரிலும், துர்முகன் என்ற ஒருவனைத் துரோணபர்வம் பகுதி 133ல் அதே 14ம் நாள் போரிலும், துர்மர்ஷணன், துஸ்ஸஹன், துர்மதன், துர்த்தரன், ஜயன் ஆகிய ஐவரை துரோண பர்வம் பகுதி 134ல் அதே 14ம் நாள் போரிலும், சித்ரன், உபசித்ரன், சித்ராக்ஷன், சாருசித்ரன், சராஸனன், சித்ராயுதன், சித்ரவர்மன் ஆகிய எழுவரை துரோண பர்வம் பகுதி 135ல் அதே 14ம் நாள் போரிலும், சத்ருஞ்சயன், சத்ருஸஹன், சித்ரன், சித்ராயுதன். த்ருடன், சித்ரசேனன், விகர்ணன் ஆகிய எழுவரை துரோண பர்வம் பகுதி 136ல் அதே 14ம் நாள் போரிலும், துர்மதன் மற்றும் துஷ்கர்ணன் ஆகி இருவரை துரோண பர்வம் பகுதி 154ல் அதே 14ம் நாள் இரவு போரிலும், நாகதத்தன், திருடரதன், வீரபாகு {மஹாபாகு}, அயோபுஜன், திருதன், சுஹஸ்தன், விரஜஸ், பிரமாதன், உக்ரன், அனுயாயி ஆகியோரை இப்போது துரோணபர்வம் பகுதி 156ல் அதே 14ம் நாள் இரவுப் போரிலும் சேர்த்து பீமன் இதுவரை திருதராஷ்டிரன் மகன்களில் 68 பேரைக் கொன்றிருக்கிறான். இந்தப் பதினான்காம் நாள் போரில் மட்டும் 44 பேரைக் கொன்றிருக்கிறான். துரோண பர்வம் பகுதி 132 மற்றும் 133ல் கொல்லப்பட்ட துர்ஜயன், துர்முகன் இருவரும் ஒருவரேயெனில் பீமன் 14-நாள் போரில் மொத்தமாக 67 பேரையும் 14ம் நாள் போரில் மட்டும் இதுவரை 43 பேரையும் கொன்றிருக்கிறான்.

அந்தப் பத்து கணைகளால் உமது மகன்கள் பத்து பேரைக் கொன்ற பீமன், கணைகளின் மாரியால் கர்ணனுக்குப் பிடித்தமான மகனை {விருஷசேனனை} மறைத்தான்.(20) அப்போது கர்ணனின் தம்பியும், கொண்டாடப்படுபவனுமான விருகரதன், பீமனைப் பல கணைகளால் துளைத்தான். எனினும் அந்த வலிமைமிக்கப் பாண்டவன் {பீமன்} அவனை {விருகரதனை} வெற்றிகரமாக வெளியேற்றினான் {கொன்றான்}.(21) அடுத்ததாக உமது மைத்துனர்களில் {சகுனியின் சகோதரர்களில்} ஏழு தேர்வீரர்களைத் தன் கணைகளால் கொன்ற வீரப் பீமன், சதசந்திரனை பூமியில் நசுக்கினான் {கொன்றான்}.(22) வலிமைமிக்கத் தேர்வீரனான சதசந்திரனின் கொலையைப் பொறுத்துக் கொள்ள முடியாதவர்களான சகுனியின் சகோதரர்கள், கவாக்ஷன், சரபன், விபு, சுபகன், பானுதத்தன் ஆகிய ஐந்து வலிமைமிக்கத் தேர்வீரர்கள் பீமசேனனை நோக்கி விரைந்து, கூரிய கணைகளால் அவனைத் தாக்கினர். மழையால் தாக்கப்படும் மலை ஒன்றைப் போல இப்படி அந்தக் கணைகளால் தாக்கப்பட்ட பீமன் தன் ஐந்து கணைகளால் அந்த வலிமைமிக்க ஐந்து மன்னர்களையும் கொன்றான்.(24) அவ்வீரர்கள் கொல்லப்பட்டதைக் கண்ட மன்னர்களில் முதன்மையானோர் பலர் நடுங்கத் தொடங்கினர்.(25)

அப்போது கோபத்தால் நிறைந்த யுதிஷ்டிரன், குடத்தில் பிறந்தவரும் (துரோணரும்), உமது மகன்களும் பார்த்துக் கொண்டிருக்கும்போதே உமது படையணிகளை அழிக்கத் தொடங்கினான்.(26) உண்மையில் யுதிஷ்டிரன், தன் கணைகளால், அம்பஷ்டர்கள், மாலவர்கள், துணிவுமிக்கத் திரிகர்த்தர்கள் மற்றும் சிபிக்கள் ஆகியோரை யமனின் உலகங்களுக்கு அனுப்பத் தொடங்கினான்.(27) அபிஷாஹர்கள், சூரசேனர்கள், பாஹ்லீகர்கள், வசாதிகள் ஆகியோரை வெட்டிய அவன் {யுதிஷ்டிரன்}, பூமியை சதையாலும், குருதியாலும் சகதியாக்கினான்.(28) மேலும் அவன் ஒரு நொடிப்பொழுதிற்குள்ளேயே, ஓ! மன்னா {திருதராஷ்டிரரே}, பெரும் எண்ணிக்கையிலான யௌதேயர்கள், மாலவர்கள், மத்ரகர்கள் ஆகியோரைக் கணைகள் பலவற்றின் மூலம் யமனின் ஆட்சிப்பகுதிகளுக்குள் அனுப்பினான்.(29) அப்போது யுதிஷ்டிரனின் தேரருகே, "கொல்வீர், பிடிப்பீர், கைப்பற்றுவீர், துளைப்பீர், துண்டுகளாக வெட்டுவீர்" என்று எழுந்த உரத்த ஆரவராம் கேட்கப்பட்டது.(30)

இப்படி உமது துருப்புகளை முறியடித்துக் கொன்றுவரும் அவனை {யுதிஷ்டிரனைக்} கண்ட துரோணர், உமது மகனால் {துரியோதனனால்} தூண்டப்பட்டுக் கணை மாரியால் யுதிஷ்டிரனை மறைத்தார்.(31) பெருங்கோபத்தில் நிறைந்திருந்த துரோணர், வாயவ்ய ஆயுதத்தால் யுதிஷ்டிரனைத் தாக்கினார். எனினும் அந்தப் பாண்டுவின் மகன் {யுதிஷ்டிரன்}, அதே போன்ற தன் ஆயுதத்தால் அந்தத் தெய்வீக ஆயுதத்தைக் கலங்கடித்தான். தமது ஆயுதம் கலங்கடிக்கப்பட்டதைக் கண்ட பரத்வாஜர் மகன் {துரோணர்}, கோபத்தால் நிறைந்து, பாண்டுவின் மகனை {யுதிஷ்டிரனைக்} கொல்ல விரும்பி வாருணம், யாம்யம், ஆக்நேயம், துவாஷ்டரம், சாவித்ரம் ஆகிய பல்வேறு தெய்வீக ஆயுதங்களை யுதிஷ்டிரன் மீது ஏவினார். எனினும், அறநெறி அறிந்தவனான அந்த வலிய கரங்களைக் கொண்ட பாண்டவன் {யுதிஷ்டிரன்}, குடத்தில் பிறந்தவரால் {துரோணரால்} ஏவப்பட்டவையோ, அல்லது தன்னை நோக்கி ஏவப்பட இருந்தவையோவான அந்த ஆயுதங்கள் அனைத்தையும் அச்சமற்ற வகையில் கலங்கடித்தான். அப்போது தன் சபதத்தை நிறைவேற்ற முயன்று கொண்டிருந்த அந்தக் குடத்தில் பிறந்தவர் {துரோணர்}, ஓ! பாரதரே {திருதராஷ்டிரரே}, உமது மகனின் {துரியோதனனின்} நன்மைக்காகத் தர்மனின் மகனை {யுதிஷ்டிரனைக்} கொல்ல விரும்பி ஐந்திரம், பிராஜாபத்ய ஆயுதங்களை இருப்புக்கு அழைத்தார்.(32-36)

யானை, அல்லது சிங்கத்தின் நடையையும், அகன்ற மார்பையும், அகன்ற சிவந்த கண்களையும், (துரோணரின் சக்திக்கு) சற்றும் குறையாத சக்தியையும் கொண்ட அந்தக் குரு குலத்தில் முதன்மையானவன் {யுதிஷ்டிரன்}, மாஹேந்திர ஆயுதத்தை இருப்புக்கு அழைத்தான். அதைக்கொண்டே துரோணரின் ஆயுதத்தை அவன் கலங்கடித்தான்.(37) தன் ஆயுதங்கள் அனைத்தும் கலங்கடிக்கப்படுவதைக் கண்ட துரோணர், கோபத்தால் நிறைந்து, யுதிஷ்டிரனின் அழிவை அடைய விரும்பி, பிரம்மாயுதத்தை இருப்புக்கு அழைத்தார்.(38) அடர்த்தியான இருளில் மூழ்கி இருந்த எங்களால் என்ன நடக்கிறது என்பதைப் பார்க்க முடியவில்லை. அனைத்து உயிரினங்களும் கூட, ஓ! ஏகாதிபதி {திருதராஷ்டிரரே}, பெரும் அச்சத்தில் நிறைந்தன.(39) பிரம்மாயுதம் உயர்த்தப்படுவதைக் கண்ட குந்தியின் மகன் யுதிஷ்டிரன், ஓ! மன்னா {திருதராஷ்டிரரே}, தன் பிரம்மாயுதத்தைக் கொண்டு அதைக் கலங்கடித்தான்.(40) அப்போது அனைத்து வகைப் போர்முறைகளையும் அறிந்த மனிதர்களில் காளையரான அந்தப் பெரும் வில்லாளிகள் துரோணர் மற்றும் யுதிஷ்டிரன் ஆகிய இருவரையும் போர்வீரர்களில் முதன்மையான அனைவரும் பாராட்டினர்.(41)

பிறகு, சினத்தால் தாமிரமாகக் கண்கள் சிவந்த துரோணர், யுதிஷ்டிரனைக் கைவிட்டு வாயவ்யா ஆயுதத்தால் துருபதனின் படைப்பிரிவை எரிக்கத் தொடங்கினார்.(42) பீமசேனனும், சிறப்புமிக்கப் பார்த்தனும் {அர்ஜுனனும்} பார்த்துக் கொண்டிருந்த போதே துரோணரால் கொல்லப்பட்ட பாஞ்சாலர்கள், அச்சத்தால் தப்பி ஓடினர்.(43) அப்போது கிரீடத்தால் அலங்கரிக்கப்பட்டவனும் (அர்ஜுனனும்), பீமசேனனும் தங்கள் துருப்புகள் ஓடுவதைத் தடுத்து, இரு பெரும் தேர்க்கூட்டங்களுடன் பகைவரின் படையோடு திடீரென மோதினர்.(44) பீபத்சு {அர்ஜுனன்} வலதை {வலது பக்கத்தைத்} தாக்க, விருகோதரன் {பீமன்} இடதை {இடது பக்கத்தைத்} தாக்க [2] எனப் பரத்வாஜரின் மகன் {துரோணர்}, இரு வலிமைமிக்கக் கணை மாரிகளுடன் மோதினார்.(45)

[2] வேறொரு பதிப்பில், "பீபத்சு தென்புறத்திலும், விருகோதரன் வடபுரத்திலும் பாரத்வாஜர் மீது பெரிய இரண்டு அம்பு வெள்ளங்களை வர்ஷித்தார்கள்" என்றிருக்கிறது. மன்மதநாததத்தரின் பதிப்பில் கங்குலியில் உள்ளதைப் போலவே இருக்கிறது.

அப்போது கைகேயர்கள், சிருஞ்சயர்கள், பெரும் சக்தி கொண்ட பாஞ்சாலர்கள் ஆகியோர், ஓ! மன்னா {திருதராஷ்டிரரே}, மத்ஸ்யர்கள் மற்றும் சாத்வதர்கள் ஆகியோரோடு கூடி அந்தச் சகோதரர்கள் இருவரையும் பின்தொடர்ந்து சென்றனர்.(46) பிறகு கிரீடத்தால் அலங்கரிக்கப்பட்டவனால் (அர்ஜுனனால்) கொல்லப்பட்ட அந்தப் பாரதப் படை உறக்கத்தாலும், இருளாலும் பீடிக்கப்பட்டுப் பிளக்கத் தொடங்கியது.(47) துரோணரும் உமது மகனும் {துரியோதனனும்}, அவர்களை அணிதிரட்ட முயன்றனர். எனினும், ஓ! மன்னா {திருதராஷ்டிரரே}, ஓடிக்கொண்டிருந்த அந்தப் போராளிகள் தடுக்கப்பட முடியாதவர்களாக இருந்தனர்" {என்றான் சஞ்சயன்}.(48)

….
தொடரும்..
..
மகாபாரதம் தொடர் முழுவதும் படிக்க இந்துமதம் வாட்ஸ்அப் குழுவில் இணைந்திருங்கள்  

No comments:

Post a Comment