Friday, January 19, 2024

don't leave me Krishna kunti stuti in tamil


குந்தி தேவி - நங்கநல்லூர் J K SIVAN

 ஸ்ரீமத் பாகவதம் 1.8.32

''போகாதே போகாதே என் கண்ணா ''

நமக்கு ரொம்ப ரொம்ப பிடித்தவர்கள் சிலநாளோ பல நாளோ நம்முடன் தங்கி இருந்து விட்டு ராஜி அத்தை ஒரு நாள் காலையில் ''நான் ஊருக்கு போய்வரட்டுமாடி மறுபடியும் எப்போ முடியறதோ அப்போ பாக்கலாம் '' என்று விடை பெறும் போது நமக்கு துளியும் அவர்களைப் பிரிய மனம் இடம் கொடுப்பதில்லை. வாசலில் குதிரை வண்டி நிற்கிறது. அத்தை பக்கத்தில் பிரயாண மூட்டை . வாசல் வரை வீட்டில் அத்தனை பேரும் வந்து கண்கள் கலங்க, ' ஜாக்கிரதையா போய்ட்டு சீக்கிரம் வா அத்தை '' என்று தலை ஆட்டும்போதும் ''இன்னும் கொஞ்சநாள் இங்கே இரேன்'' என்று மீண்டும் வேண்டுகிறோம். ''இல்லேடிம்மா, நான் கண்டிப்பா போயே ஆகணும்''

நாம் கெஞ்சுவதற்கு அர்த்தம் கிடையாது. உதட்டிலிருந்து வரும் வார்த்தை இல்லை அது. அன்பின், பாசத்தின் நேசத்தின் மன நெருக்கத்தின் வெளிப்பாடு. இனிமேல் ஒவ்வொரு நாளும் விடிகாலையிலேயே கமகம என்று சமையல் காட்டிலிருந்து சுகமான சாம்பார் ரசம் கொதிக்கும் மணம் வராது. ராம ஸ்லோகம் கேட்காது. தூணின் மேல் சாய்ந்து கொண்டு கால்களை நீட்டிக்கொண்டு தாழ்வாரத்தில் அவளைச் சுற்றிலும் குழந்தைப் பாட்டாளங்களுக்கு சொல்லும் ராமாயண பாரத கதைகள் சொல்லும் குரல் கேட்காதே. காலம்பரமோ,சாயந்திரமோ, பட்டு மிளகாய்ப்பொடி நல்லெண்ணையில் தடவி சிகப்பு வேஷம் போட்டுக்கொண்ட மல்லிப்பூ இட்லி வாழை இலை ஏட்டில் விழாது. வெள்ளையாக தேங்கா சட்னி ருசியாக எப்போது மந்தார இலையில் மீண்டும் சாப்பிட முடியும்?. அத்தை வைக்கும் சுண்டக்கா வத்தக்குழம்பு, மொளகு வாழைப்பூ கூட்டு, கொத்தவராங்கா உசிலி, தனி ஸ்பெஷல் மதிப்பு கொண்டது. வெறும் சாப்பாட்டுக்கா நாவின் ருசிக்காக இதை சொல்லவில்லை. எந்த காரியம் செய்தாலும் ராஜி அத்தை காரியங்களில் தெய்வீகம் இருக்கும். 

இப்படித்தான் குந்தி பல ஆயிரம் வருஷங்கள் முன்பு தங்களுடைய, அது தான் பாண்டவர்களுடைய ளது, அனைத்து துன்பங்களிலும் கூடவே யிருந்து ஆபத்துக்களிலிருந்து மீட்ட கிருஷ்ணன் ஹஸ்தினாபுரத்திலிருந்து துவாரகைக்கு திரும்பும் சமயம் துடித்தாள்.  
 ''அப்போ, அத்தை நான் துவாரகைக்கு போய்வரட்டுமா ?"' என்று கேட்கும்போது  
 ''சரிப்பா, ஜாக்கிரதையாக போய் வா. ஊருக்கு போய் சேர்ந்ததும் கடுதாசி போடு '' என்று நாம் மெஷின் போல் சொல்வது அல்ல இது.
 குந்தியால் நம்மைப்போல இப்படி நா கூசாமல் சொல்ல முடியுமா?
கிருஷ்ணனை வாயார போற்றி அவன் செய்த உதவிகள், அவனது மஹிமை அனைத்தையும் நினைவு கூர்வது தான் இந்த குந்தியின் பிரார்த்தனை. வேத வியாசர் வெகு அற்புதமாக மகாபாரதத்தின் தொடர்ச்சியாக இந்த ஸ்ரீமத் பாகவதத்தில் இதை உணர்த்துகிறார். இதுவரை 31 ஸ்லோகங்கள் ரசித்தோம். இன்று இன்னும் 8 ஸ்லோகங்கள் .

केचिदाहुरजं जातं पुण्यश्लोकस्य कीर्तये । यदो: प्रियस्यान्ववाये मलयस्येव चन्दनम् ॥१५॥ 8.32
kecid āhur ajaṁ jātaṁ puṇya-ślokasya kīrtaye yadoḥ priyasyānvavāye malayasyeva candanam

வேத வியாசர் மலய மலைகளில் இருக்கும் சந்தனமரங்கள் வீசும் சந்தன கமகம வாசனை காற்றில் கலந்து வருவதைச் சொல்கிறார். எதிலும் நம்மைப் போல் ஜனிக்காத நாராயணன் ஒரு சிறந்த ராஜ குடும்பத்தை தேர்ந்தெடுத்து அதில் பிறக்கிறான். மஹாராஜா யது வை கிருஷ்ண பக்தனாக பிடிக்கும் என்பதால் யது குல நந்தனனாக அவதரித்தான். என்னென்னவோ மரங்கள் தோன்றும் மலய மலைச்சாரலில் அழகிய வாசமிகுந்த சந்தனமரமாக கிருஷ்ணன் பிறந்தான் என்று குந்தி சொல்வதாகவும் வியாசர் சொல்கிறாரே..

अप्यद्य नस्त्वं स्वकृतेहित प्रभो जिहाससि स्वित्सुहृदो sनुजीविन: । येषां न चान्यद्भवत: पदाम्बुजात्परायणं राजसु योजितांहसाम् ॥२२ 8.37
apy adya nas tvaṁ sva-kṛtehita prabho jihāsasi svit suhṛdo 'nujīvinaḥ yeṣāṁ na cānyad bhavataḥ padāmbujāt parāyaṇaṁ rājasu yojitāṁhasām

குந்திக்குள் உள்ளே மனஸாக்ஷி என்கிற பக்ஷி சொல்லிவிட்டது. இது தான் கடைசியாக அவள் கிருஷ்ணனைப் பார்ப்பது.. இனி அவன் தரிசனம் இந்த ஜென்மத்தில் அவளுக்கு கிடைக்கப் போவதில்லை. அவள் வாயிலிருந்து உதிரும் வார்த்தைகள் இவை. எப்படி துடிப்பாள் குந்தி என்று உங்களுக்குப் புரிந்தால் நான் எழுதும் அடுத்த வாக்கியம் படிக்கமுடியாமல் கண்களில் ஜலம் தாரையாக பெருகுமே .

''கிருஷ்ணா, என் தெய்வமே, உன் கடமை எல்லாம் முடிந்துவிட்டதா?. அவ்வளவு தானா? இனி எங்களை பிரியப் போகிறாயா? நம் உறவு ஒரு முடிவுக்கு வந்துவிட்டதா?, அந்த எண்ணத்தையே என்னால் ஜீரணிக்க முடியவில்லையே. எங்களை, பாண்டவர்களை, விட்டு நீ செல்லப்போகிறாயா? நாங்கள் உன்னையே அல்லவோ நம்பி வாழ்கிறோம். எங்கள் மூச்சே உன்னால் தான் எங்களுக்குள் செயல்படுகிறது. உன் கருணை ஒன்றே அல்லவோ எங்களை காக்கிறது. கிருஷ்ணா. நீ யன்றி வேறு யார் உண்டு சொல்? கிருஷ்ணா. காக்கும் தெய்வம் நீ ஒருவன் தானே. எங்களை சுற்றி இருந்த அத்தனை பேரும் விரோதிகளாகவே தானே இருந்தார்கள். நீ ஒருவன் அல்லவோ எங்களை அரவணைத்தவன். உன்னை எப்படி ''போய் வா மகனே போய்வா '' என்று சொல்வேன். அவ்வளவு சீக்கிரம் மறந்துவிடும்படியாகவா நீ எங்களுக்கு உதவியவன்.
எனக்கு துன்பம் தொடரட்டும், துயரம் நீடிக்கட்டும், உன்னை அவ்வப்போது நினைப்பேன் உன் அருள் பார்வை என்மீது படுமே என்ற நம்பிக்கை. அதுவே எனக்கு ஸ்வர்க்கம், மோக்ஷம், அழியாத செல்வம்.

இந்த உலகத்தில் ஏன் கஷ்டம் எங்களுக்கு என்றால் உலகமே கஷ்டமயமானது. என்னதான் கஷ்டம் சூழ்ந்திருந்தாலும் ''கிருஷ்ணா'' என்ற உன் பெயருக்கு தான் எவ்வளவு சக்தி அப்பா!! அத்தனை துன்பங்களும் சூரியன் முன் பனித்துளி தான். ஹரே கிருஷ்ணா என்ற வார்த்தையே பெரிய தபோபல சக்தி அல்லவா?

கிருஷ்ணனுக்கு பிரியாவிடை தருகிறாள் குந்தி தேவி. கிருஷ்ணன் என்ற விஷ்ணுவின் அவதாரம் முடிவுக்கு வந்துவிட்ட நேரம் அது... ஆனால் கிருஷ்ணன் அவதாரம் முடிந்துவிட்டதே தவிர நம்முள் என்றும் கிருஷ்ணன் தொடர்கிறான்.

என்னுயிரே கிருஷ்ணா, நீ செய்த விஷமங்கள் ஒன்றா இரண்டா? எந்த அளவுக்கு தாங்க முடியாதபடி இருந்திருந்தால், யசோதை உன்னை கோபத்தோடு, ஒரு கயிற்றால் கட்டி நகராமல் இருக்கச் செய்திருப்பாள்? நடிப்பின் சிகரமே, என் மனக்கண்ணால் அந்த காட்சியைக் காண்கிறேன். கண்களில் பயம், அதையும் முழுக அடிக்கும் அளவு கண்ணீர், தேம்பி தேம்பி அழுகிறாய். புறங்கையால் கண்ணை கசக்குகிறாய். கண்களில் யசோதை இட்ட மை கரைகிறது. கன்னத்தில் கருப்பு நதியாக வழிகிறது. நீயா பயப்படுபவன்!

பிறப்பற்றவன் பிறந்தாய். ராஜ்யபாரம் சுமக்கவா? 'ராஜா' க்களின் பாரம் குறைக்கவா? எந்தகாலத்திலோ வசுதேவரும் தேவகியும் தவமிருந்து வேண்டியதின் பலனாய் நீ அவர்கள் மகனாக பிறந்தவன். ஒரு கல்லில் ரெட்டை மாங்காய். துஷ்ட நிக்ரஹம் சிஷ்ட பரிபாலனம். உன்னிடம் ப்ரம்மா வேண்டியதும் இந்த குறை தீர்க்கத்தானே.

உன்னை அனவரதமும் வேண்டி பிரார்த்தனை செய்பவர்களுக்கு உன் தாமரைத் திருவடிகள் பணிந்தவர்க்கு ஜனனமரண துன்பமே இல்லையே.

''என்னுயிரே, கிருஷ்ணா, நீ செய்த விஷமங்கள் ஒன்றா இரண்டா? எந்த அளவுக்கு தாங்க முடியாதபடி இருந்திருந்தால், யசோதை உன்னை கோபத்தோடு, ஒரு கயிற்றால் கட்டி நகராது இருக்க செயதிருப்பாள்? நடிப்பின் சிகரமே, என் மனக்கண்ணால் அந்த காட்சியை காண்கிறேன். கண்களில் பயம், அதையும் முழுக அடிக்கும் அளவு கண்ணீர், தேம்பி தேம்பி அழுகிறாய். புறங்கையால் கண்ணை கசக்குகிறாய். கண்களில் யசோதை இட்ட மை கரைகிறது. கன்னத்தில் வழிகிறது. நீயா பயப்படுபவன்! எல்லாம் வேஷம்.

No comments:

Post a Comment