Sunday, January 28, 2024

மஹாபாரதம் 318

மஹாபாரதம்(முழுவதும்)-பாகம்-318
துரோண பர்வம்
….
கடோத்கசனின் இறுதி மூச்சு
..
சஞ்சயன் {திருதராஷ்டிரனிடம்} சொன்னான், "பயங்கரச் செயல்களைப் புரியும் அலாயுதன் போருக்கு வந்ததைக் கண்ட கௌரவர்கள் அனைவரும் மகிழ்ச்சியால் நிறைந்தனர்.(1) அதே போலத் துரியோதனனைத் தங்கள் தலைமையில் கொண்ட உமது மகன்களும், கடலைக் கடக்க விரும்பும் தெப்பமற்ற மனிதர்கள், ஒரு தெப்பத்தைச் சந்திப்பதைப் போல (மகிழ்ச்சியால்) நிறைந்தனர்.(2) உண்மையில் குரு படையில் இருந்த மன்னர்கள், இறந்து மீண்டும் பிறந்தவர்களைப் போலத் தங்களைக் கருதிக் கொண்டனர். அவர்கள் அனைவரும் அலாயுதனை மரியாதையுடன் வரவேற்றனர்.(3) பயங்கரமானதும், மனித சக்திக்கு அப்பாற்பட்டதும், கடுமையானதுமாக இருந்தாலும், காண்பதற்கு இனிமையானதுமான அந்தப் போர் அவ்விரவில் கர்ணனுக்கும், அந்த ராட்சசனுக்கும் {கடோத்கசனுக்கும்} இடையில் நடைபெற்றுக் கொண்டிருந்த போது,(4) பிற க்ஷத்திரியர்கள் அனைவருடன் கூடிய பாஞ்சாலர்கள் சிரித்துக் கொண்டே பார்வையாளர்களாகப் பார்த்துக் கொண்டிருந்தனர். அதே வேளையில் உமது படைவீரர்கள், ஓ! மன்னா {திருதராஷ்டிரரே}, (தங்கள் தலைவர்களாலும்), துரோணர், துரோணரின் மகன் {அஸ்வத்தாமன்}, கிருபர் மற்றும் பிறரால் களம் முழுவதும் பாதுகாக்கப்பட்டாலும், "யாவும் தொலைந்தன" என்று உரக்க ஓலமிட்டனர்.(5) உண்மையில், ஹிடிம்பை மகனின் {கடோத்கசனின்} அந்தச் சாதனைகளைக் கண்ட உமது போர்வீரர்கள் அனைவரும் அச்சத்தால் கலங்கி, ஓலங்களிட்டு கிட்டத்தட்ட தங்கள் உணர்வுகளை {சுய நினைவை} இழந்தனர்.(6) ஓ! மன்னா {திருதராஷ்டிரரே}, உமது துருப்புகள் அனைத்தும் கர்ணன் உயிர்வாழ்வான் என்பதில் நம்பிக்கை இழந்தனர்.(7)


அப்போது துரியோதனன், பெரும் துன்பத்தில் வீழ்ந்த கர்ணனைக் கண்டு, அலாயுதனை அழைத்து, அவனிடம்:(8) "அதோ விகர்த்தனன் மகன் கர்ணன், ஹிடிம்பையின் மகனோடு {கடோத்கசனோடு} போரிட்டு, போரில் தன் வலிமைக்கும், ஆற்றலுக்கும் தகுந்த சாதனைகளை அடைந்து வருகிறான்.(9) அந்தப் பீமசேனன் மகனால் {கடோத்கசனால்} பல்வேறு வகைகளிலான ஆயுதங்களால் தாக்கிக் கொல்லப்பட்டு, யானையால் முறிக்கபட்ட மரங்களைப் போல (களத்தில் கிடக்கும்) துணிச்சல்மிக்க மன்னர்களைப் பார்.(10) இந்தப் போரில் என் அரசப் போர்வீரர்கள் அனைவரிலும், ஓ! வீரா {அலாயுதா}, உனது அனுமதியுடன் என்னால் ஒதுக்கப்படும் இந்தப் பங்கு {கடோத்கசனைக் கொல்லும் காரியம்} உன்னுடையதாக இருக்கட்டும். உன் ஆற்றலை வெளிப்படுத்தி, இந்த ராட்சசனைக் கொல்வாயாக.(11) ஓ! எதிரிகளை நசுக்குபவனே, இந்த இழிந்த கடோத்கசன், அவனை நீ முடிப்பதற்கு {கொல்வதற்கு} முன்பே, மாயா சக்திகளின் துணையுடன் விகர்த்தனன் மகனான கர்ணனைக் கொல்லாதிருக்கட்டும்" என்றான் {துரியோதனன்}.(12) மன்னனால் {துரியோதனனால்} இப்படிச் சொல்லப்பட்டவனும், கடும் ஆற்றலையும், வலிமைமிக்கக் கரங்களையும் கொண்ட அந்த ராட்சசன் {அலாயுதன்}, "அப்படியே ஆகட்டும்" என்று சொல்லி கடோத்கசனை எதிர்த்து விரைந்தான்.(13)

அப்போது பீமசேனன் மகன் {கடோத்கசன்}, ஓ! தலைவா {திருதராஷ்டிரரே}, கர்ணனைக் கைவிட்டு விட்டு, தன்னை நோக்கி வரும் எதிரியைத் தன் கணைகளால் கலங்கடிக்கத் தொடங்கினான்.(14) பிறகு அந்தக் கோபக்கார ராட்சச இளவரசர்களுக்குள் நடந்த போரானது, பருவ காலத்தில் உள்ள பெண்யானைக்காகக் காட்டில் போரிட்டுக் கொள்ளும் மதங்கொண்ட இரு யானைகளுக்கு ஒப்பாக இருந்தது.(15) அந்த ராட்சசனிடம் இருந்து விடுபட்டவனும், தேர்வீரர்களில் முதன்மையானவனுமான கர்ணன், சூரியப்பிரகாசம் கொண்ட தன் தேரில் ஏறி பீமசேனனை எதிர்த்து விரைந்தான்.(16) சிங்கத்துடன் போரிடும் காளை பீடிக்கப்படுவதைப் போல அந்தப் போரில் கடோத்கசன், அலாயுதனுடன் போரிடுவதைக் கண்டவனும், தாக்குபவர்களில் முதன்மையானவனுமான பீமன், முன்னேறி வரும் கர்ணனை அலட்சியம் செய்துவிட்டு, கணைமேகங்களை இறைத்தபடியே சூரியப்பிரகாசம் கொண்ட தன் தேரில் அலாயுதனை நோக்கி விரைந்தான்.(17,18) பீமன் முன்னேறுவதைக் கண்ட அலாயுதன், ஓ! தலைவா {திருதராஷ்டிரரே}, கடோத்கசனைக் கைவிட்டுவிட்டு, பீமனை எதிர்த்துச் சென்றான்.(19)

அப்போது ராட்சசர்களை அழிப்பவனான அந்தப் பீமன், ஓ! தலைவா {திருதராஷ்டிரரே}, அந்த ராட்சசர்களின் இளவரசனை {அலாயுதனை} நோக்கி மூர்க்கமாக விரைந்து, கணைகளால் அவனை மறைத்தான்.(20) அதே போல எதிரிகளைத் தண்டிப்பவனான அலாயுதனும், கல்லில் கூராக்கப்பட்ட நேரான கணைகளால் அந்தக் குந்தியின் மகனை {பீமனை} மீண்டும் மீண்டும் மறைத்தான்.(21) பயங்கர வடிவங்களைக் கொண்டவர்களும், பல்வேறு ஆயுதங்களைத் தரித்திருந்தவர்களும், உமது மகன்களின் வெற்றியை விரும்பியவர்களுமான வேறு ராட்சசர்கள் அனைவரும் கூடப் பீமசேனனை எதிர்த்து விரைந்தனர்.(22) இப்படி அவர்களால் தாக்கப்பட்ட வலிமைமிக்கப் பீமசேனன், ஐந்து கூரிய கணைகளால் அவர்கள் ஒவ்வொருவரையும் துளைத்தான்.(23) பிறகு, பீமசேனனால் இப்படி வரவேற்கப்பட்டவர்களும், தீய புரிதலைக் கொண்டவர்களுமான அந்த ராட்சசர்கள், உரத்த ஓலமிட்டபடியே அனைத்துப் பக்கங்களிலும் தப்பி ஓடினர்.(24) தன்னைப் பின்தொடர்ந்து வந்தவர்கள் பீமனால் அச்சுறுத்தப்பட்டதைக் கண்ட அந்த வலிமைமிக்க ராட்சசன் {அலாயுதன்}, பீமனை எதிர்த்து மூர்க்கமாக விரைந்து, கணைகளால் அவனை மறைத்தான்.(25)

பிறகு பீமசேனன், கூர்முனை கணைகளால் அந்தப் போரில் தன் எதிரியை பலவீனமடையச் செய்தான். பீமனால் அவனை {அலாயுதனை} நோக்கி ஏவப்பட்ட கணைகளில், சிலவற்றை அப்போரில் வெட்டிய அலாயுதன், பிறவற்றை {கையில்} பிடித்தான். பிறகு பயங்கர ஆற்றலைக் கொண்ட பீமன், அந்த ராட்சசர்களின் இளவரசனை {அலாயுதனை} நிலையாகப் பார்த்து,(26,27) வஜ்ரத்தின் சீற்றத்தைக் கொண்ட கதாயுதம் ஒன்றைப் பெரும் பலத்துடன் அவன் {அலாயுதன்} மீது வீசினான். நெருப்பின் தழலைப் போன்ற அந்தக் கதாயுதமானது, அந்த மனித ஊனுண்ணியை {அலாயுதனை} நோக்கி சென்றபோது,(28) அவன் {அலாயுதன்} தன் கதாயுதம் ஒன்றால் அதைத் தாக்கினான். அதன்பேரில், (முன்னதைக் கலங்கடித்த) பின்னது {அலாயுதனின் கதாயுதமானது} பீமனை நோக்கிச் சென்றது. பிறகு அந்தக் குந்தியின் மகன் {பீமன்}, அந்த ராட்சசர்களின் இளவரசனை {அலாயுதனைக்} கணை மழையால் மறைத்தான்.(29) அந்த ராட்சசனோ, கூரிய தன் கணைகளால் பீமனின் அந்தக் கணைகள் அனைத்தையும் கலங்கடித்தான். பிறகு, பயங்கர வடிவங்களைக் கொண்ட அந்த ராட்சசப் போர்வீரர்கள் அனைவரும் (அணிதிரண்டு மீண்டும் போரிட வந்து),(30) தங்கள் தலைவனின் ஆணையின் பேரில் (பீமனுடைய படையின்) யானைகளைக் கொல்லத் தொடங்கினர். பாஞ்சாலர்கள், சிருஞ்சயர்கள், குதிரைகள், (பீமனுடைய படையின்) பெரும் யானைகள் ஆகியவை(31) அந்த ராட்சசர்களால் பெரிதும் பீடிக்கப்பட்டு மிகவும் கலக்கமடைந்தன.

அந்தப் பயங்கரப் போரை (பீமனுக்கும் அந்த ராட்சசர்களுக்கும் இடையிலான அம்மோதலைக்) கண்டவனும்,(32) மனிதர்களில் முதன்மையானவனுமான வாசுதேவன் {கிருஷ்ணன்}, இவ்வார்த்தைகளைத் தனஞ்சயனிடம் {அர்ஜுனனிடம்} சொன்னான்: "அந்த ராட்சசர்களின் இளவரசனிடம் {அலாயுதனிடம்} வசப்படும் வலிமைமிக்கப் பீமரைப் பார்.(33) ஓ! பாண்டுவின் மகனே {அர்ஜுனா}, ஏதும் ஆலோசியாமல், விரைவாகப் பீமரைத் தொடர்ந்து செல்வாயாக. அதே வேளையில், திருஷ்டத்யும்னன், சிகண்டி, யுதாமன்யு மற்றும் உத்தமௌஜஸ் ஆகிய இந்த வலிமைமிக்கத் தேர்வீரர்கள்,(34) திரௌபதியின் மகன்களோடு சேர்ந்து கொண்டு கர்ணனை எதிர்த்துச் செல்லட்டும். ஓ! பாண்டுவின் மகனே {அர்ஜுனா}, நகுலன், சகாதேவன், வீர யுயுதானன் {சாத்யகி} ஆகியோர்,(35) உனது உத்தரவின் பேரில் பிற ராட்சசர்களைக் கொல்லட்டும். உன்னைப் பொறுத்தவரை, ஓ! வலிமைமிக்கக் கரங்களைக் கொண்டவனே, துரோணரைத் தலைமையில் கொண்ட இந்தப் படைப்பிரிவைத் தடுப்பாயாக. ஓ! வலிமைமிக்கக் கரங்களைக் கொண்டவனே, இப்போது நம்மை அச்சுறுத்திக் கொண்டிருக்கும் ஆபத்தானது பெரியதாக இருக்கிறது" என்றான் {கிருஷ்ணன்}.

கிருஷ்ணன் இப்படிச் சொன்னதும், உத்தரவுக்கேற்றபடியே அந்தத் தேர்வீரர்களில் முதன்மையானோர்,(36,37) விகர்த்தனன் மகனான கர்ணனை எதிர்த்தும், (குருக்களுக்காகப் போரிடும்) பிற ராட்சசர்களை எதிர்த்தும் சென்றனர். பிறகு முற்று முழுதாக வளைக்கப்பட்ட தன் வில்லில் இருந்து ஏவப்பட்டவையும், கடும் நஞ்சுமிக்கப் பாம்புகளுக்கு ஒப்பானவையுமான சில கணைகளால்,(38) ராட்சசர்களின் அந்த வீர இளவரசன் {அலாயுதன்}, பீமனின் வில்லை அறுத்தான். அடுத்ததாக அந்த வலிமைமிக்க மனித ஊனுண்ணி, ஓ! பாரதரே {திருதராஷ்டிரரே}, பீமன் பார்த்துக் கொண்டிருக்கும்போதே, சில கூரிய கணைகளால் பின்னவனின் {பீமனின்} குதிரைகளையும், சாரதியையும் கொன்றான். குதிரைகளும், சாரதியும் அற்ற பீமன், தன் தேர்த்தட்டில் இருந்து இறங்கி,(39,40) உரக்க முழங்கியபடியே தன் எதிரியை நோக்கி ஒரு கனமான கதாயுதத்தை வீசினான். அந்தக் கனமான கதாயுதமானது, பயங்கர ஒலியுடன் அந்த மனித ஊனுண்ணியை {அலாயுதன்} நோக்கிச் சென்ற போதே,(41) அவன் {அலாயுதன்} தன் கதாயுதத்தால் அதைக் கலங்கடித்தான். பிறகு பின்னவன் {அலாயுதன்} உரக்க முழங்கினான்.

அந்த ராட்சசர்களின் இளவரசனுடைய {அலம்புசனுடைய} பயங்கரமான, வலிமைமிக்க அருஞ்செயலைக் கண்ட பீமசேனன்,(42) மகிழ்ச்சியால் நிறைந்து மற்றொரு கடும் கதாயுதத்தைப் பிடித்தான். அந்த மனிதப் போர்வீரனுக்கும் {பீமனுக்கும்}, அந்த ராட்சசனுக்கும் இடையில் நடைபெற்ற போரானது பயங்கரத்தை அடைந்தது.(43) அவர்களது கதாயுத வீச்சுகளின் மோதலால் பூமியானது பயங்கரமாக நடுங்கியது. தங்கள் கதாயுதங்களைத் தூக்கி எறிந்த அவர்கள் மீண்டும் ஒருவரோடு ஒருவர் போரிட்டனர்.(44) அவர்கள் தங்கள் கைமுட்டிகளை இறுக பற்றிக் கொண்டு இடிமுழக்கம் போன்ற ஒலி கொண்ட குத்துகளால் ஒருவரையொருவர் தாக்கிக் கொண்டனர். சினத்தால் தூண்டப்பட்ட அவர்கள், தேர் சக்கரங்கள், நுகத்தடிகள், அக்ஷங்கள் {அச்சுகள்}, அதிஸ்தானங்கள் {ஆசனங்கள்}, உபஷ்கரங்கள் ஆகியவற்றையும், இன்னும் தங்கள் வழியில் இருந்த எதையும் எடுத்துகொண்டு ஒருவரோடொருவர் மோதினர். இப்படி ஒருவரோடொருவர் மோதி, குருதியில் நனைந்த அவர்கள் இருவரும், பெரும் வடிவங்களைக் கொண்ட மதங்கொண்ட இரண்டு யானைகளைப் போலத் தெரிந்தனர். அப்போது, பாண்டவர்களின் நன்மையில் எப்போதும் அர்ப்பணிப்புடன் கூடிய ரிஷிகேசன் {கிருஷ்ணன்}, அம்மோதலைக் கண்டு, பீமசேனனைக் காப்பதற்காக ஹிடிம்பையின் மகனை {கடோத்கசனை} அனுப்பினான்" {என்றான் சஞ்சயன்}.(45-47)

சஞ்சயன் {திருதராஷ்டிரனிடம்} சொன்னான், "அந்தப் போரில் பீமன், அந்த மனித ஊனுண்ணியால் {அலாயுதனால்} தாக்கப்படுவதைக் கண்ட வாசுதேவன் {கிருஷ்ணன்}, கடோத்கசனை அணுகி, அவனிடம் இந்த வார்த்தைகளைச் சொன்னான்:(1) "ஓ! வலிய கரங்களைக் கொண்டவனே, ஓ! பெரும் காந்தி கொண்டவனே, போரில் துருப்புகள் அனைத்தும், நீயும் பார்த்துக் கொண்டிருக்கும்போதே, பீமர் அந்த ராட்சசர்களால் பலமாகத் தாக்கப்படுவதைப் பார்.(2) தற்சமயம் கர்ணனைக் கைவிட்டுவிட்டு, ஓ! வலிய கரங்களைக் கொண்டவனே {கடோத்கசா}, விரைவாக அலாயுதனைக் கொல்வாயாக. கர்ணனை நீ பிறகு கொல்லலாம்" என்றான் {கிருஷ்ணன்}.(3)

அந்த விருஷ்ணி குலத்தோனின் {கிருஷ்ணனின்} இவ்வார்த்தைகளைக் கேட்ட வீரக் கடோத்கசன், கர்ணனைக் கைவிட்டுவிட்டு, மனித ஊனுண்ணிகளின் இளவரசனும், பகனின் தம்பியுமான அந்த அலாயுதனுடன் மோதினான்.(4) ஓ! பாரதரே {திருதராஷ்டிரரே}, மனித ஊனுண்ணிகளான அலாயுதன் மற்றும் ஹிடிம்பையின் மகன் {கடோத்கசன்} ஆகிய இருவருக்கிடையில் அந்த இரவில் நடந்த போரானது கடுமையானதாகவும், பயங்கரமானதாகவும் இருந்தது.(5)


அதேவேளையில், வலிமைமிக்கத் தேர்வீரனான யுயுதானன் {சாத்யகி}, நகுலன், சகாதேவன் ஆகியோர் பயங்கரத் தோற்றம் கொண்டவர்களும், வில்தரித்துத் தங்களை நோக்கி மூர்க்கமாக விரைந்தவர்களும், அலாயுதனின் போர்வீரர்களுமான வீர ராட்சசர்களைக் கூரிய கணைகளால் துளைத்தனர்.(6,7) கிரீடத்தால் அலங்கரிக்கப்பட்டவனான பீபத்சு {அர்ஜுனன்}, ஓ! மன்னா {திருதராஷ்டிரரே}, அந்தப் போரில் அனைத்துப் பக்கங்களிலும் தன் கணைகளை ஏவியபடியே க்ஷத்திரியர்களில் முதன்மையானோர் பலரை வீழ்த்தத் தொடங்கினான்.(8) அதே வேளையில், அந்தப் போரில் கர்ணன், ஓ! மன்னா {திருதராஷ்டிரரே}, மன்னர்கள் பலரையும், திருஷ்டத்யும்னன், சிகண்டி மற்றும் பிறரின் தலைமையிலான பாஞ்சாலர்களில் வலிமைமிக்கத் தேர்வீரர்கள் பலரையும் கலங்கடித்தான்.(9) (கர்ணனால்) கொல்லப்படும் அவர்களைக் கண்டவனும், பயங்கர ஆற்றலைக் கொண்டவனுமான பீமன், அந்தப் போரில் தன் கணைகளை ஏவியபடியே கர்ணனை நோக்கி வேகமாக விரைந்தான்.(10) பிறகு, நகுலன், சகாதேவன் ஆகிய அந்தப் போர்வீரர்களும், வலிமைமிக்கத் தேர்வீரனான சாத்யகியும், ராட்சசர்களைக் கொன்றுவிட்டு, சூதனின் மகன் {கர்ணன்} இருந்த இடத்திற்குச் சென்றனர்.(11) அவர்கள் அனைவரும் கர்ணனோடு போரிடத் தொடங்கிய அதே வேளையில், பாஞ்சாலர்கள் துரோணரோடு மோதினர்.

அப்போது சினத்தால் தூண்டப்பட்ட அலாயுதன், ஒரு பெரிய பரிகத்தைக் கொண்டு எதிரிகளைத் தண்டிப்பவனான கடோத்கசனை தலையில் தாக்கினான். பெரும் ஆற்றலைக் கொண்ட பீமசேனனின் வலிமைமிக்க மகன் {கடோத்கசன்},(12,13) அந்தப் பரிகத்தின் தாக்குதலால் குறை மயக்க நிலையில் காணப்பட்டு, அசைவற்றவனாகக் கீழே அமர்ந்தான். சுய நினைவு மீண்ட பின்னவன் {கடோத்கசன்}, பிறகு அம்மோதலில், தங்கத்தாலும், நூறு மணிகளாலும் அலங்கரிக்கப்பட்டதும், சுடர்மிக்க நெருப்பைப் போலத் தெரிந்ததுமான கதாயுதம் ஒன்றைத் தன் எதிரியின் மீது வீசினான். கடுஞ்சாதனைகளைச் செய்யும் அவனால் பலமாக வீசப்பட்ட அந்தக் கதாயுதம், அலாயுதனின் குதிரைகள், சாரதி மற்றும் உரத்த சடசடப்பொலி கொண்ட அவனது தேர் ஆகியவற்றை நொறுக்கியது. மாயையை அறிந்தவனும், குதிரைகள், சக்கரங்கள், அக்ஷங்கள், கொடிமரம் மற்றும் கூபரம் ஆகிய அனைத்தும் தூள்தூளாக நொறுக்கப்பட்டவனுமான பின்னவன் {அலாயுதன்}, தனது தேரில் இருந்து கீழே குதித்தான். தன் மாயையைப் பயன்படுத்திய அவன் அபரிமிதமான இரத்த மழையைப் பொழிந்தான்.(14-17)

அப்போது வானமானது, மின்னலின் கீற்றுகளுடன் கூடிய கார்மேகத் திரள்களால் பரவியிருப்பதாகத் தெரிந்தது. உரத்த வெடிச்சத்தங்கள் மற்றும் மேகங்களில் உரத்த முழக்கங்களுடன் கூடிய இடி மழையின் ஒலி ஆகியன அப்போது கேட்கப்பட்டன.(18) அந்தப் பயங்கரப் போரில் "சட சட" எனும் உரத்த ஒலியும் கேட்கப்பட்டது. ராட்சசன் அலாயுதனால் உண்டாக்கப்பட்ட அந்த மாயையைக் கண்ட ராட்சசன் கடோத்கசன்,(19) உயரப் பறந்து, தன் மாயையைக் கொண்டு அதை {அலம்புசனின் மாயையை} அழித்தான். மாயா சக்திகளைக் கொண்ட அலாயுதன், தன் மாயையானது தன் எதிரியினுடையதைக் கொண்டு அழிக்கப்பட்டதைக் கண்டு,(20) கடோத்கசன் மீது கனமான கல் மழையைப் பொழியத் தொடங்கினான். பிறகு அவர்கள் இரும்பு பரிகங்கள், சூலங்கள், கதாயுதங்கள், குறுந்தண்டங்கள் {உலக்கைகள்}, சம்மட்டிகள் {முத்கரங்கள்}, பினாகங்கள், வாள்கள், வேல்கள், நீண்ட சூலங்கள், கம்பனங்கள், நீளமாகவும், அகன்ற தலை கொண்டதாகவும் கூரிய கணைகள் {நாராசங்கள் மற்றும் பல்லங்கள்}, போர்க்கோடரிகள், அயாகுதங்கள் {இரும்புத் தடிகள்}, குறுங்கணைகள் {பிண்டிபாலங்கள்}, பசுவைப் போன்ற தலைகள் கொண்ட ஆயுதங்கள் {கோசீர்ஷங்கள்} மற்றும் உலூகலங்கள் {உரல்கள்} போன்ற பல்வேறு ஆயுதங்களால் ஒருவரையொருவர் தாக்கிக் கொண்டனர்.(21-24) மேலும் அவர்கள் இங்குதி {வன்னி மரம்}, பதரி {இலந்தை}, மலர்ந்திருக்கும் கோவிதாரம், பல்க்ஸம் {பலாசம்}, அரிமேதம், பிலாக்ஷம் {கல்லிச்சி}, ஆலம், அரசம் போன்ற மரங்களாலும் மற்றும் பல்வேறு வகைகளிலான உலோகங்களால் {தாதுவகைகளால்} அலங்கரிக்கப்பட்ட பல்வேறு மலைச்சிகரங்களாலும் ஒருவரையொருவர் தாக்கிக் கொண்டனர்.(25-27) அந்த மரங்கள் மற்றும் மலைச்சிகரங்களின் மோதலானது, இடிமுழக்கத்தைப் போலப் பேரொலியோடு இருந்தது.

உண்மையில், பீமனின் மகனுக்கும் அலாயுதனுக்கும் இடையில் நடைபெற்ற அந்தப் போரானது, ஓ! மன்னா, ஓ! ஏகாதிபதி {திருதராஷ்டிரரே}, பழங்காலத்தில், குரங்குகளின் இளவரசர்களான வாலி மற்றும் சுக்ரீவன் ஆகிய இருவருக்கும் இடையில் நடந்ததைப் போல மிகப் பயங்கரமானதாக இருந்தது.(28) பல்வேறு வகைகளிலானவையும், கூரிய கத்திகளைப் போன்ற கடுமையானவையுமான பிற ஆயுதங்கள் மற்றும் கணைகள் ஆகியவற்றால் அவர்கள் ஒருவரையொருவர் தாக்கிக் கொண்டனர். பிறகு ஒருவரையொருவர் எதிர்த்து விரைந்த அந்த வலிமைமிக்க ராட்சசர்கள், தங்களில் மற்றவரின் மயிரைப் பிடித்தனர்.(29,30) ஓ! மன்னா {திருதராஷ்டிரரே}, பெரும் உடல்படைத்த அந்தப் போர்வீரர்கள் இருவரும், தங்கள் உடல்களில் உண்டான காயங்களோடும், வழிந்த இரத்தத்தோடும் மழையைப் பொழியும் இரண்டு மேகத் திரள்களைப் போல இருந்தனர்.(31) அப்போது வேகமாக விரைந்த ஹிடிம்பையின் மகன் {கடோத்கசன்}, அந்த ராட்சசனை {அலாயுதனை} உயரத் தூக்கிச் சுழற்றி தரையில் அடித்து, {பிறகு} அவனது பெரிய தலையை அறுத்தான்.(32) பிறகு, அந்த வலிமைமிக்கக் கடோத்கசன், இரு காதுகுண்டலங்களால் அலங்கரிக்கப்பட்ட அந்தத் தலையை எடுத்துக் கொண்டு உரக்க முழங்கினான்.(33) எதிரிகளைத் தண்டிப்பவனும், பெரும் உடல் படைத்தவனுமான அந்தப் பகனின் தம்பி {அலாயுதன்} இப்படிக் கொல்லப்பட்டதைக் கண்ட பாஞ்சாலர்களும், பாண்டவர்களும் சிங்க முழக்கமிடத் தொடங்கினர்.(34)

அந்த ராட்சசனின் {அலாயுதனின்} வீழ்ச்சிக்குப் பிறகு, அந்தப் பாண்டவர்கள், ஆயிரக்கணக்கான பேரிகைகளையும், பதினாயிரக்கணக்கான சங்குங்களையும் அடித்து முழக்கினர்.(35) அப்போது அந்த இரவானது பாண்டவர்களின் வெற்றியைத் தெளிவாகக் குறிப்பிட்டது. சுற்றிலும் பந்தங்களால் ஒளியூட்டப்பட்டு, இசைக்கருவிகளால் எதிரொலிக்கப்பட்ட அந்த இரவனாது மிகப் பிரகாசமாகத் தெரிந்தது.(36) பிறகு பீமசேனனின் அந்த வலிமைமிக்க மகன் {கடோத்கசன்} கொல்லப்பட்ட அலாயுதனின் தலையைத் துரியோதனன் முன்பாக வீசினான்.(37) வீர அலாயுதன் கொல்லப்பட்டதைக் கண்ட துரியோதனன், ஓ! பாரதரே {திருதராஷ்டிரரே}, தன் துருப்புகள் அனைத்துடன் சேர்ந்து கவலையில் நிறைந்தான்.(38) முந்தைய சச்சரவை நினைவில் கொண்டு துரியோதனனிடம் தானாக வந்த அலாயுதன், அவனிடம் {துரியோதனனிடம்} பீமனைப் போரில் கொல்லப் போவதாகச் சொல்லியிருந்தான்.(39) அந்தக் குரு மன்னனும் {துரியோதனனும்}, பீமனின் கொலை உறுதியானது என்று கருதியும், தன் தம்பிகள் அனைவரும் நீண்ட வாழ்நாளோடு இருப்பார்கள் என்றும் நம்பினான்.(40) அந்த அலாயுதன், பீமசேனன் மகனால் {கடோத்கசனால்} கொல்லப்பட்டதைக் கண்ட மன்னன் {துரியோதனன்}, (தன்னையும், தன் தம்பிகளையும் கொல்வது குறித்த) பீமனின் சபதம் ஏற்கனவே நிறைவேறிவிட்டதாகவே கருதினான்" {என்றான் சஞ்சயன்}.(41)

சஞ்சயன் {திருதராஷ்டிரனிடம்} சொன்னான், "அலாயுதனைக் கொன்ற ராட்சசன் கடோத்கசன் மகிழ்ச்சியால் நிறைந்தான். படையின் முன்னணியில் நின்று கொண்டு பல்வேறு வகைகளில் அவன் {கடோத்கசன்} முழக்கமிடத் தொடங்கினான்.(1) ஓ! ஏகாதிபதி {திருதராஷ்டிரரே}, யானைகளையே நடுங்கச் செய்த அந்த உரத்த முழக்கங்களைக் கேட்ட உமது போர்வீரர்களின் இதயங்களில் பேரச்சம் நுழைந்தது.(2) வலிமைமிக்கக் கரங்களைக் கொண்ட கர்ணன், பீமசேனனின் வலிமைமிக்க மகன் {கடோத்கசன்} அலாயுதனுடன் போரிட்டுக் கொண்டிருப்பதைக் கண்டு, பாஞ்சாலர்களை எதிர்த்து விரைந்தான்.(3) தன் வில்லை முழுமையாக வளைத்த அவன் {கர்ணன்}, திருஷ்டத்யும்னன் மற்றும் சிகண்டி ஆகியோர் ஒவ்வொருவரையும் உறுதியான, நேரான பத்து கணைகளால் துளைத்தான்.(4) பிறகு, அந்தச் சூதன் மகன் {கர்ணன்}, பெரும் எண்ணிக்கையிலான வேறு பலமான கணைகளால் யுதாமன்யு, உத்தமௌஜஸ் மற்றும் பெரும் தேர்வீரனான சாத்யகி ஆகியோரை நடுங்கச் செய்தான்.(5)


ஓ! மன்னா {திருதராஷ்டிரரே}, அனைத்துப் பக்கங்களில் இருந்தும் அந்தப் போர்வீரர்கள் கர்ணனைத் தாக்கிக் கொண்டிருந்த போது, வட்டமாக வளைக்கப்பட்ட நிலையிலேயே அவர்களது விற்களும் காணப்பட்டன.(6) அந்த இரவில், அவர்களது நாண்கயிறுகளின் நாணொலியும், அவர்களது தேர்ச்சக்கரங்களின் சடசடப்பொலியும், (ஒன்றாகக் கலந்து) கோடையின் முடிவிலான மேகங்களின் முழக்கத்தைப் போல ஆழமான பேரொலியாக இருந்தன.(7) ஓ! ஏகாதிபதி {திருதராஷ்டிரரே}, அந்த இரவுப்போரானது மேகத் திரள்களின் குவியலுக்கு ஒப்பாக இருந்தது. நாண்கயிறுகளின் நாணொலியும், தேர்ச்சக்கரங்களின் சடசடப்பொலியும் அதன் {மேகக்குவியலின்} முழக்கமாக இருந்தன. (போர்வீரர்களின்) விற்கள் அதன் மின்னல் கீற்றுகளாகவும்; கணைமாரிகள் அதன் மழைப்பொழிவாகவும் இருந்தன.(8) மலையைப் போல அசையாமல் நின்றவனும், மலைகளின் இளவரசனுடைய பலத்தைக் கொண்டவனும், எதிரிகளைக் கலங்கடிப்பவனும், விகர்த்தனன் {சூரியனின்} மகனுமான அந்தக் கர்ணன், தன் மீது ஏவப்பட்ட அற்புதமான கணைமழையை அழித்தான்.(9) உமது மகன்களின் நன்மையில் அர்ப்பணிப்புக் கொண்ட அந்த உயர் ஆன்ம வைகர்த்தனன் {கர்ணன்}, அந்தப் போரில் இடியின் சக்தி கொண்ட வேல்களாலும், அழகிய தங்கச் சிறகுகளைக் கொண்ட கூரிய கணைகளாலும் தன் எதிரிகளைத் தாக்கத் தொடங்கினான்.(10) விரைவில் சிலரது கொடிமரங்கள் கர்ணனால் வெட்டப்பட்டன, வேறு சிலரின் உடல்கள் துளைக்கப்பட்டுக் கூரிய கணைகளைக் கொண்டு அவனால் {கர்ணனால்} சிதைக்கப்பட்டன; விரைவில் சிலர் சாரதிகளை இழந்தனர், சிலர் தங்கள் குதிரைகளை இழந்தனர்.(11)

அந்தப் போரில் சூதன் மகனால் {கர்ணனால்} மிகவும் பீடிக்கப்பட்ட பலர், யுதிஷ்டிரனின் படைக்குள் நுழைந்தனர். அவர்கள் அணிபிளக்கப்பட்டுப் புறமுதுகிடக் கட்டாயப்படுத்தப்படுவதைக் கண்ட கடோத்கசகன் சினத்தால் வெறிகொண்டவனானான்.(12) தங்கத்தாலும், ஆபரணங்களாலும் அலங்கரிக்கப்பட்ட தன் சிறந்த தேரில் ஏறிய அவன் {கடோத்கசன்} உரத்த சிங்க முழக்கம் செய்தபடியே, விகர்த்தனன் {சூரியன்} மகனான கர்ணனை அணுகி, இடியின் சக்தி கொண்ட கணைகளால் அவனைத் துளைத்தான்.(13) அவர்கள் இருவரும், முள்பதித்த கணைகள் {கர்ணிகள்}, துணிக்கோல் கணைகள் {நாராசங்கள்}, தவளைமுகக் கணைகள் {சிலீமுகங்கள்}, நாளீகங்கள், தண்டங்கள், அசனிகள், கன்றின் பல் {வத்ஸதந்தங்கள்}, அல்லது பன்றியின் காது போன்ற தலை கொண்ட கணைகள் {வராஹகர்ணங்கள்}, அகன்ற தலை கொண்ட கணைகள் {பல்லங்கள், விபாண்டங்கள்}, கொம்புகள் போன்ற கூரிய கணைகள் {சிருங்கங்கள்}, கத்திகளைப் போன்ற தலைகளைக் கொண்ட பிற கணைகள் {க்ஷுரப்ரங்கள்} ஆகியவற்றால் ஆகாயத்தை மறைக்கத் தொடங்கினர்.(14)

அந்தக் கணைமாரியால் மறைந்த ஆகாயமானது, அதனூடாகத் தங்கச் சிறகுகளையும், சுடரும் காந்தியையும் கொண்ட கணைகள் கிடைமட்டமாகச் சென்றதன் விளைவால், அழகிய மலர் மாலைகளால் அலங்கரிக்கப்பட்டதைப் போலக் காட்சியளித்தது.(15) சம ஆற்றல் கொண்ட அவர்கள் ஒவ்வொருவரும், பலமிக்க ஆயுதங்களால் சமமாகவே ஒருவரையொருவர் தாக்கிக் கொண்டனர். அந்தப் போரில் அவ்வீரர்கள் இருவரில் ஒருவரிடமும் {ஒருவர் மேல் ஒருவர்} ஆதிக்கமடைவதற்கான அறிகுறியை எவரும் காணவில்லை.(16) உண்மையில், சூரியன் மகனுக்கும் {கர்ணனுக்கும்}, பீமனின் மகனுக்கும் {கடோத்கசனுக்கும்} இடையில் நடந்த அந்தப் போரானது, அடர்த்தியான, கனமான ஆயுத மழையால் வகைப்படுத்தப்பட்டு மிக அழகாகத் தெரிந்தது. மேலும் ஆகாயத்தில் ராகுவுக்கும், சூரியனுக்கும் இடையில நடக்கும் கடும் மோதலைப் போன்ற ஒப்பற்ற காட்சியை அஃது அளித்தது."(17)

சஞ்சயன் {திருதராஷ்டிரனிடம்} தொடர்ந்தான், "ஓ! மன்னா {திருதராஷ்டிரரே}, ஆயுதமறிந்தோர் அனைவரிலும் முதன்மையான அந்தக் கடோத்கசன், கர்ணனைத் தன்னால் விஞ்சமுடியவில்லை என்பதைக் கண்ட போது, கடுமையானதும், வலிமையானதுமான ஆயுதம் ஒன்றை அவன் {கடோத்கசன்} இருப்புக்கு அழைத்தான்.(18) அந்த ஆயுதத்தால், அந்த ராட்சசன் {கடோத்கசன்} முதலில் கர்ணனின் குதிரைகளையும், பிறகு பின்னவனின் {கர்ணனின்} சாரதியையும் கொன்றான். அந்தச் சாதனையை அடைந்த ஹிடிம்பையின் மகன் {கடோத்கசன்} விரைவில் கண்ணுக்குப் புலப்படாதவனாகத் தன்னை ஆக்கிக் கொண்டான்" {என்றான் சஞ்சயன்}.(19)

அப்போது திருதராஷ்டிரன் {சஞ்சயனிடம்}, "வஞ்சக வழிகளில் போரிட்டுக் கொண்டிருந்த அந்த ராட்சசன் {கடோத்கசன்} இப்படி மறைந்த போது, ஓ! சஞ்சயா, என் படையின் போர்வீரர்கள் என்ன நினைத்தனர்?" என்று கேட்டான்.(20)

சஞ்சயன் {திருதராஷ்டிரனிடம்} சொன்னான், "அந்த ராட்சசன் மறைவதைக் கண்ட கௌரவர்கள் அனைவரும், "வஞ்சகமாகப் போரிடும் அந்த ராட்சசன் {கடோத்கசன்}, அடுத்துத் தோன்றும்போது நிச்சயம் கர்ணனைக் கொன்றுவிடுவான்" என்று உரக்கச் சொன்னார்கள்.(21) ஆயுதப் பயன்பாட்டில் அற்புத நளினத்தைக் கொண்ட கர்ணன், அப்போது கணைமாரிகளால் அனைத்துப் பக்கங்களையும் மறைத்தான். அந்த அடர்த்தியான கணைமாரியால் உண்டான இருளானது, ஆகாயத்தை மறைத்ததால் உயிரினங்கள் அனைத்தும் கண்களுக்குப் புலனாகாதவையாக ஆகின.(22) அந்தச் சூதனின் மகன் {கர்ணன்}, எப்போது தன் விரல்களால் தனது அம்பறாத்தூணிகளைத் தீண்டினான்? எப்போது நாண்கயிற்றில் தன் அம்புகளைப் பொருத்தினான்? எப்போது குறி பார்த்து அவற்றை ஏவினான்? என்பனவற்றை எவரும் காணமுடியாத அளவுக்கு அவன் {கர்ணன்} வெளிப்படுத்திய கர நளினம் மிகப்பெரியதாக இருந்தது. அப்போது மொத்த ஆகாயமும் கணைகளால் மறைக்கப்பட்டிருப்பதாகத் தெரிந்தது.(23)

பிறகு அந்த ராட்சசனால், கடுமையான, பயங்கரமான ஒரு மாயை ஆகாயத்தில் உண்டாக்கப்பட்டது. சுடர்மிக்க நெருப்பின் கடுந்தழலுக்கு ஒப்பாகத் தோன்றிய சிவப்பு மேகங்களின் திரளை நாங்கள் வானத்தில் கண்டோம்.(24) அந்த மேகத்திலிருந்து, ஓ! குரு மன்னா {திருதராஷ்டிரரே}, மின்னலின் கீற்றுகளும், சுடர்மிக்கப் பந்தங்கள் பலவும் வெளிவந்தன. ஆயிரம் பேரிகைகள் ஒரே சமயத்தில் முழக்கப்படுவதைப் போன்ற பிரம்மாண்டமான ஒலி அதனில் இருந்து வெளிவந்தது.(25) தங்கச் சிறகுகளைக் கொண்ட கணைகள் பலவும், ஈட்டிகள் {சக்திகள்}, வேல்கள், கனமான தண்டங்கள் {உலக்கைகள்}, அதே போன்ற பிற ஆயுதங்கள், போர்க்கோடரிகள், எண்ணெயில் கழுவப்பட்ட {எண்ணெயில் தீட்டப்பட்ட} கத்திகள், சுடர்மிக்க முனைகளைக் கொண்ட கோடரிகள், சூலங்கள்,(26) ஒளிரும் கதிர்களை வெளியிடும் முள்பதித்த கதாயுதங்கள் {பரிகங்கள்}, இரும்பாலான அழகிய கதாயுதங்கள், கூர்முனைகளைக் கொண்ட நீண்ட ஈட்டிகள், தங்கத்தால் அலங்கரிக்கப்பட்டு, இழைகளால் சுற்றிலும் பின்னப்பட்ட கனமான கதாயுதங்கள், சதக்னிகள் ஆகியன அதனில் இருந்து சுற்றிலும் பாய்ந்தன.(27) பெரும் பாறைகள் அதனில் இருந்து விழுந்தன. உரத்த வெடிச்சத்தம் கொண்ட ஆயிரக்கணக்கான வஜ்ரங்களும், நெருப்பின் காந்தியைக் கொண்ட நூற்றுக்கணக்கான சக்கரங்களும், கத்திகளும் அதனில் இருந்து பாய்ந்தன.(28)

கணைமாரிகளை ஏவிக்கொண்டிருந்த கர்ணன், அடர்த்தியானதும், சுடர்மிக்கதுமான ஈட்டிகள், வேல்கள், வாள்கள் மற்றும் கதாயுதங்களின் மழையை அழிக்கத் தவறினான்.(29) அந்தக் கணைகளால் கொல்லப்பட்டு விழுந்த குதிரைகளாலும், வஜ்ரத்தால் தாக்கப்பட்ட வலிமைமிக்க யானைகளாலும், பிற ஆயுதங்களால் உயிரை இழந்த பெரும் தேர்வீரர்களாலும் ஏற்பட்ட பெரும் ஆரவாரமானது பேரொலியாக இருந்தது.(30) அந்தக் கணை மாரியைக் கொண்டு கடோத்கசனால் சுற்றிலும் பீடிக்கப்பட்ட துரியோதனின் படையானது, பெரும் வலியோடு களத்தில் திரிவது காணப்பட்டது.(31) மிகவும் உற்சாகமற்று, "ஓ", "ஐயோ" என்ற கதறல்களுடன் திரிந்து கொண்டிருந்த அந்தப் படை அழிவடையும் தருணத்தில் இருப்பதாகத் தெரிந்தது. எனினும் தலைவர்கள் தங்கள் இதயத்தின் உன்னதத்தன்மையால், களத்தில் முகம் திருப்பித் தப்பி ஓடாமல் இருந்தனர்.(32) அந்த ராட்சசனின் {கடோத்கசனின்} மாயையால் உண்டாக்கப்பட்டதும், மிகப் பயங்கரமானதும் அஞ்சத்தக்கதுமான அந்த வலிமையான ஆயுதங்களின் மழை களத்தில் பாய்வதைக் கண்டும், பரந்த தங்கள் படை இடையறாமல் கொல்லப்படுதவதைக் கண்டும் உமது மகன்கள் பேரச்சம் கொண்டனர்.(33)

நெருப்பைப் போன்ற சுடர்மிக்க நாக்குகளுடன், பயங்கரமாகக் கூச்சலிடும் நரிகள் ஊளையிடத் தொடங்கின. மேலும், ஓ! மன்னா {திருதராஷ்டிரரே}, கூச்சலிடும் ராட்சசர்களைக் கண்ட (கௌரவப்) போர்வீரர்கள் உற்சாகத்தைப் பெரிதும் இழந்தனர்.(34) தீ நாவுகளையும், சுடர்மிக்க வாய்களையும், கூரிய பற்களையும், மலை போன்ற பெரிய வடிவங்களையும் கொண்டு ஆகாயத்தில் ஈட்டிகளைப் பிடித்து நின்ற அந்தப் பயங்கர ராட்சசர்கள், மழைத்தாரைகளைப் பொழியும் மேகங்களைப் போலத் தெரிந்தனர்.(35) அந்தக் கடுங்கணைகளாலும், ஈட்டிகள், வேல்கள், கதாயுதங்கள், சுடர்மிக்கக் காந்தி கொண்ட பரிகங்கள், வஜ்ரங்கள், பினாகங்கள், அசனிகள், சக்கரங்கள், சதக்னிகள் ஆகியவற்றாலும் அந்த (கௌரவத்) துருப்புகள் தாக்கப்பட்டு, நசுக்கப்பட்டு விழத் தொடங்கன.(36) அந்த ராட்சசர்கள், உமது மகனுடைய {துரியோதனனுடைய} போர்வீரர்களின் மீது நீண்ட ஈட்டிகளையும் {சூலங்களையும்}, பாகுகளையும், சதக்னிகளையும், உருக்காலானதும், சணல் இழைகளால் பின்னப்பட்டதுமான ஸ்தூணங்களையும் பொழியத் தொடங்கினர். அப்போது போராளிகள் அனைவரும் மலைப்பை அடைந்தனர்.(37) ஆயுதங்கள் உடைந்து, அல்லது தங்கள் பிடியில் இருந்து ஆயுதங்கள் தளர்ந்த நிலையை அடைந்த வீரப் போர்வீரர்கள், தங்கள் தலைகளை இழந்தும், அல்லது தங்கள் அங்கங்கள் உடைந்தும், போர்க்களத்தில் விழத்தொடங்கினர். பாறைகள் விழுந்ததன் விளைவால், குதிரைகள், யானைகள் மற்றும் தேர்கள் ஆகியன நசுங்கத் தொடங்கின.(38) கடோத்கசனின் மாயா சக்தியால் உண்டான பயங்கர வடிவிலான யாதுதானர்கள், பயந்தவர்களையோ, தஞ்சம் கேட்டவர்களையோ கூட விடாமல் [1] வலிமைமிக்க அடர்த்தியான கணைமாரியைப் பொழிந்தனர்.(39)

[1] வேறொரு பதிப்பில், "அவ்விடத்தில் கடோத்கசனாலே உண்டுபண்ணப்பட்ட மாயைகள் கெஞ்சுகிறவனையும், பயந்தவனையும் விடவில்லை" என்றிருக்கிறது. மன்மதநாததத்தரின் பதிப்பில் கங்குலியில் உள்ளதைப்போலவே இருக்கிறது.

காலனால் நடத்தப்பட்ட குருவீரர்களின் அந்தக் கொடூரமான படுகொலையின்போது, அந்த க்ஷத்திரியர்களின் அழிவின் போது, திடீரென அணிபிளந்து வேகமாகத் தப்பி ஓடிய கௌரவப் போர்வீரர்கள்,(40) "கௌரவர்களே ஓடுங்கள். யாவும் தொலைந்தன. இந்திரனைத் தலைமையாகக் கொண்ட தேவர்களே பாண்டவர்களுக்காக நம்மைக் கொல்கின்றனர்" என்று உரக்கக் கூச்சலிட்டனர். அந்நேரத்தில் மூழ்கும் பாரதத் துருப்புகளைக் காக்க எவரும் இருக்கவில்லை.(41) அந்தக் கடும் ஆரவாரம், முறியடிப்பு மற்றும் கௌரவர்களின் அழிவின் போது, எத்தரப்பு என்று வேறுபடுத்திப் பார்க்க முடியாத அளவுக்கு {படை} முகாம்கள் தங்கள் தனித்தன்மைகளை இழந்தன.(42) உண்மையில்,படைவீரர்கள் ஒருவருக்கொருவர் எந்தக் கருணையும் பார்க்காத அந்தப் பயங்கர அழிவின் போது, களத்தின் எந்தத் திசையைக் கண்டாலும், அது வெறுமையாகத் தெரிந்தது. ஓ! மன்னா {திருதராஷ்டிரரே}, கர்ணன் மட்டுமே அந்த ஆயுத மழையில் மூழ்கிய நிலையில் அங்கே தெரிந்தான்.(43)

அப்போது கர்ணன் அந்த ராட்சசனின் தெய்வீக மாயையுடன் மோதி தன் கணைகளால் ஆகாயத்தை மறைத்தான். பணிவுள்ளவனும், மிகக் கடினமான சாதனைகளைச் செய்பவனும், உன்னதச் செயல்களைப் புரிபவனுமான அந்தச் சூதன் மகன் {கர்ணன்}, அந்தப் போரில் தன் உணர்வுகளை இழக்காதிருந்தான்.(44) அப்போது, ஓ! மன்னா {திருதராஷ்டிரரே}, அந்தப் போரில் தன் உணர்வுகளை நிலைக்கச் செய்த கர்ணனை, சைந்தவர்கள் மற்றும் பாஹ்லீகர்கள் அனைவரும் அச்சத்துடன் பார்த்தனர். ராட்சசனின் {கடோத்கசனின்} வெற்றியைக் கண்டவாறே {கண்டாலும்}, அவர்கள் அனைவரும் அவனை {கர்ணனை} வழிபட்டனர்.(45) பிறகு, கடோத்கசனால் ஏவப்பட்டதும், சக்கரங்களுடன் கூடியதுமான ஒரு சதக்னியானது, கர்ணனின் நான்கு குதிரைகளையும் அடுத்தடுத்துக் கொன்றது. உயிர், பற்கள், கண்கள் மற்றும் நாவுகளை இழந்த அவை, மூட்டுகள் மடங்கிப் பூமியில் விழுந்தன.(46) அப்போது குதிரைகளற்ற தன் தேரில் இருந்து கீழே குதித்த கர்ணன், கௌரவப் படை ஓடுவதையும், அந்த ராட்சச மாயையால் தன் தெய்வீக ஆயுதம் கலங்கடிக்கப்பட்டதையும் கண்டு, தன் உணர்வுகளை இழக்காமல், மனத்தை உள்முகமாகத் திருப்பி, அடுத்ததாக என்ன செய்யப்பட வேண்டும் என்று நினைக்கத் தொடங்கினான்.(47)

அந்த நேரத்தில் கர்ணனையும் (ராட்சசனால் உண்டாக்கப்பட்ட) அந்தப் பயங்கர மாயையையும் கண்ட கௌரவர்கள் அனைவரும், "ஓ! கர்ணா, உனது ஈட்டியை {சக்தி ஆயுதத்தைக்} கொண்டு இந்த ராட்சசனை விரைந்து கொல்வாயாக. இந்தக் கௌரவர்களும், தார்தராஷ்டிரர்களும் அழிவின் விளிம்பில் இருக்கின்றனர்.(48) பீமனும், அர்ஜுனனும், நம்மை என்ன செய்வார்கள்? இந்த நள்ளிரவில் நம் அனைவரையும் எரிக்கும் இந்தப் பொல்லாத ராட்சசனைக் கொல்வாயாக. இந்தப் பயங்கர மோதலில் இன்று தப்புபவர்களே போரில் பார்த்தர்களோடு போரிடுவார்கள்.(49) எனவே, வாசவன் {இந்திரன்} உனக்கு அளித்த அந்த ஈட்டியால் {சக்தி ஆயுதத்தால்} இந்தப் பயங்கர ராட்சசனை இப்போது கொல்வாயாக. ஓ! கர்ணா, இந்தப் பெரும்போர்வீரர்கள், இந்தக் கௌரவர்கள், இந்திரனுக்கு ஒப்பான இளவரசர்கள் ஆகியோர் அனைவரும் இந்த இரவு போரில் அழியாதிருக்கட்டும்" என்று கூச்சலிட்டனர்.(50) அந்த நள்ளிரவில், கர்ணன், அந்த ராட்சசன் {கடோத்கசன்} உயிரோடிருப்பதையும், குரு படை அச்சத்தில் பீடிக்கப்பட்டிருப்பதையும் கண்டும், பின்னவர்களின் உரத்த ஓலங்களையும் கேட்டும், தன் ஈட்டியை {சக்தி ஆயுதத்தை} ஏவுவதில் தன் இதயத்தை நிலைநிறுத்தினான்.(51)

கோபக்கார சிங்கம் ஒன்றைப் போலச் சினத்தால் தூண்டப்பட்டவனும், அந்த ராட்சசர்களின் தாக்குதல்களைப் பொறுத்துக் கொள்ள முடியாதவனுமான கர்ணன், கடோத்கசனுக்கு அழிவை ஏற்படுத்த விரும்பி, வெற்றியைத் தரும் வெல்லப்பட முடியாத ஈட்டிகளில் {சக்திகளில்} முதன்மையான அந்த ஈட்டியை {சக்தி ஆயுதத்தை} எடுத்துக் கொண்டான்.(52) உண்மையில், ஓ! மன்னா {திருதராஷ்டிரரே}, போரில் பாண்டுவின் மகனை {அர்ஜுனனைக்} கொல்வதற்காக வருடக்கணக்கில் சூதன் மகனால் {கர்ணனால்} வழிபடப்பட்டுப் பாதுகாக்கப்பட்டு வந்ததும், ஈட்டிகளில் முதன்மையானதும், பின்னவனின் {கர்ணனின்} காது குண்டலங்களுக்கு மாற்றாகச் சக்ரனால் {இந்திரனால்} கொடுக்கப்பட்டதும்,(53) இழைகளால் பின்னப்பட்டுச் சுடர்விடும் பயங்கரமான ஏவுகணையும், குருதி தாகம் கொண்டதாகத் தெரிந்ததும், அந்தகனின் நாக்கைப் போன்றதும், அல்லது மிருத்யுவின் சகோதரியைப் போன்றதும், பயங்கரமானதும், பிரகாசமானதுமான அந்த ஈட்டியையே {சக்தி ஆயுதத்தை}, இப்போது வைகர்த்தனன் {கர்ணன்}, அந்த ராட்சசனின் {கடோத்கசனின்} மீது ஏவினான்.(54)


அற்புதமானதும், சுடர்மிக்கதும், எதிரிகள் ஒவ்வொருவரின் உடலையும் துளைக்கவல்லதுமான அந்த ஆயுதத்தைச் சூதன் மகனின் {கர்ணனின்} கரங்களில் கண்ட ராட்சசன் {கடோத்கசன்}, விந்திய மலைகளின் காலைப் போன்ற பெரும் உடல் அளவை ஏற்று, அச்சத்துடன் தப்பி ஓடத் தொடங்கினான்.(55) உண்மையில், ஓ! மன்னா {திருதராஷ்டிரரே}, கர்ணனின் கரங்களில் அந்த ஈட்டியைக் கண்டவையும், வானத்தில் இருந்தவையுமான உயிரினங்கள் அனைத்தும் உரக்கக் கூச்சலிட்டன. காற்று சீற்றத்துடன் பாயத் தொடங்கியது, உரத்த வெடிச்சத்தத்துடன் கூடிய இடிகள் பூமியின் மீது விழத் தொடங்கின.(56) கடோத்கசனின் சுடர்மிக்க மாயையை அழித்து, சரியாக அவனது மார்பைத் துளைத்துச் சென்ற அந்தப் பிரகாசமான ஈட்டியானது {சக்தி ஆயுதமானது}, அந்த இரவில் வானத்தில் உயரப் பறந்து வான்வெளியின் நட்சத்திரக்கூட்டங்களுக்குள் நுழைந்தது.(57) பல்வேறு அழகிய தெய்வீக ஆயுதங்களைப் பயன்படுத்தி, ராட்சச வீரர்கள் பலருடனும், மனிதப் போர்வீரர்களுடனும் போரிட்ட அந்தக் கடோத்கசன், பயங்கரமாகப் பல்வேறு வகையில் அலறி, சக்ரனின் அந்த ஈட்டியால் {சக்தி ஆயுதத்தால்} உயிரிழந்து கீழே விழுந்தான்.(58)


அந்த ராட்சசன் {கடோத்கசன்}, ஓ! மன்னா {திருதராஷ்டிரரே}, தன் எதிரிகளின் அழிவுக்காக மற்றொரு அற்புத சாதனையைச் செய்தான்; அந்நேரத்தில், அந்த ஈட்டியால் இதயம் பிளக்கப்பட்ட அவன் {கடோத்கசன்}, ஒரு வலிமைமிக்க மலையைப் போன்றோ, மேகங்களின் குவியலைப் போன்றோ பிரகாசித்தான்.(59) உண்மையில், பயங்கரச் செயல்களைப் புரியும் அந்தப் பீமசேனன் மகன் {கடோத்கசன்}, அச்சந்தரும் அந்தப் பயங்கர வடிவை ஏற்ற பிறகே கீழே விழுந்தான். ஓ! மன்னா {திருதராஷ்டிரரே}, அப்படி அவன் மடிகையில் உமது படையின் ஒரு பகுதியின் மேல் விழுந்து, அந்தத் துருப்புகளைத் தன் உடலின் கனத்தால் நசுக்கினான்.(60) வேகமாகக் கீழே விழுந்தவனும், மேலும் விரிவடைந்து கொண்டிருந்த பெரும் உடலுடன் கூடியவனுமான அந்த ராட்சசன் {கடோத்கசன்}, பாண்டவர்களுக்கு நன்மை செய்ய விரும்பி, தன் இறுதி மூச்சிலும் ஒரு முழு அக்ஷௌஹிணி அளவிலான உமது துருப்புகளைக் கொன்றான்.(61) அப்போது சிங்க முழக்கங்களாலும், சங்கு முழக்கங்களாலும், பேரிகைகள் மற்றும் முரசுகளின் ஒலியாலும் அங்கே உரத்த ஆரவாரம் எழுந்தது. உண்மையில், கௌரவர்கள், அந்த ராட்சசனின் மாயை அழிக்கப்பட்டதையும், ராட்சசன் கொல்லப்பட்டதையும் கண்டு மகிழ்ச்சியால் பேராரவாரம் செய்தனர்.(62) பிறகு கர்ணன், (அசுரன்} விருத்திரனைக் கொன்ற சக்ரன் {இந்திரன்} மருத்தர்களால் வழிபடப்பட்டது போலக் குருக்களால் வழிபடப்பட்டு, உமது மகனின் {துரியோதனனின்} தேரில் ஏறி, அனைவராலும் பார்க்கப்பட்டவாறே குரு படைக்குள் நுழைந்தான்" {என்றான் சஞ்சயன்}.(63)
….
தொடரும்..
..
மகாபாரதம் தொடர் முழுவதும் படிக்க இந்துமதம் வாட்ஸ்அப் குழுவில் இணைந்திருங்கள்  

No comments:

Post a Comment