மஹாபாரதம்(முழுவதும்)-பாகம்-217
உத்யோக பர்வம்
..
குந்தியின் சோகம்
...
வைசம்பாயனர் {ஜனமேஜயனிடம்} சொன்னார், "எதிரிகளைத் தண்டிப்பவனான ஜனார்த்தனன் {கிருஷ்ணன்} விதுரனைச் சந்தித்தபிறகு, பிற்பகலில், தனது அத்தையான {தந்தையின் சகோதரியான} பிருதையிடம் {குந்தியிடம்} சென்றான். சூரியனைப் போல ஒளிரும் முகத்தைக் கொண்ட கிருஷ்ணன், தனது இல்லத்திற்கு வந்ததைக் கண்ட அவள் {குந்தி}, தனது கரங்களால் அவனது கழுத்தைக் கட்டிக் கொண்டு தனது மகன்களை நினைத்து அழுது புலம்ப ஆரம்பித்தாள்.
தனது பெரும்பலமிக்க மகன்களின் துணைவனான விருஷ்ணி குலத்துக் கோவிந்தனை {கிருஷ்ணனை} நீண்ட காலம் கழித்துக் கண்டதால், பிருதையின் {குந்தியின்} கண்ணீர் வேகமாக வழிந்தது. வீரர்களில் முதன்மையான கிருஷ்ணன், விருந்தோம்பல் சடங்குகள் முடிந்து இருக்கையில் அமர்ந்த பிறகு, துயரால் சுண்டிய முகம் கொண்ட பிருதை {குந்தி - கிருஷ்ணனிடம்}, கண்ணீரால் தடைபட்ட குரலுடன், "ஆரம்பக் காலத்திலிருந்தே பெரியோர்களுக்காக மரியாதையாக எப்போதும் காத்திருந்தவர்களும் {பணிவிடை செய்தவர்களும்}; தங்கள் ஒவ்வொருவருக்குள்ளும் நட்பால் இணைந்தவர்களும்; நண்பர்களுடனும் பணியாட்களுடனும் வாழத் தகுதியிருப்பினும், வஞ்சனையால் தங்கள் நாடு பறிக்கப்பட்டு விலகியவர்களும், கோபத்தையும் மகிழ்ச்சியையும் அடக்கி, அந்தணர்களுக்கு அர்ப்பணிப்புடன் இருந்தவர்களும், உண்மைநிறைந்த பேச்சு கொண்டவர்களுமான எனது பிள்ளைகள், நாட்டையும், இன்பங்களையும் கைவிட்டு, துக்கத்தில் இருந்த என்னையும் விட்டுவிட்டு காட்டுக்குச் சென்று எனது இதயத்தின் வேரையே பிடுங்கிப் போட்ட ஒப்பற்ற அந்தப் பாண்டுமகன்கள் {பாண்டவர்கள்}, ஓ! கேசவா {கிருஷ்ணா}, துயரத்திற்குத் தகாதவர்களாக இருப்பினும் துன்பப்பட்ட அவர்கள் {பாண்டவர்கள்}, ஐயோ, சிங்கங்களும், புலிகளும், யானைகளும் நிறைந்த ஆழ்ந்த காட்டுக்குள் எப்படி வாழ்ந்தார்கள்?
குழந்தையாக இருந்தபோதே {சிறு வயதிலேயே} தந்தையைப் பறிகொடுத்து என்னால் மென்மையாக {அன்பாக} வளர்க்கப்பட்ட அவர்கள் {பாண்டவர்கள்} அனைவரும், பெற்றோர் இருவரையும் காணாமல் அந்தப் பெருங்காட்டில் எப்படி வாழ்ந்தார்கள்? ஓ! கேசவா {கிருஷ்ணா}, பாண்டவர்கள் தங்கள் சிறுவயதிலிருந்தே சங்குகள், பேரிகைகள் மற்றும் புல்லாங்குழல்களின் இசையால் தங்கள் படுக்கையில் இருந்து எழுப்பப்பட்டவர்கள். வீட்டில் இருக்கும்போது, உயர்ந்த அரண்மனை அறைகளில் மென்மையான போர்வைகள் மற்றும் ரங்கு மான் தோல் ஆகியவற்றில் உறங்கியவர்கள். காலையில் யானைகளின் பிளிறல், குதிரைகளின் கனைப்பு, தேர்ச்சக்கரங்களின் சடசடப்பொலி, சங்கு, கைத்தாள {ஜால்ரா} ஒலியாலும், யாழ் மற்றும் குழலின் இசையாலும் எழுப்பப்பட்டவர்கள். அந்தணர்களால் உச்சரிக்கப்பட்ட புனித ஒலி கொண்ட பாடல்களால் அதிகாலையிலேயே துதிக்கப்பட்டு, அவர்களில் தகுந்தவர்களை ஆடைகள், ஆபரணங்கள் மற்றும் நகைகளால் வணங்கியவர்கள். மறுபிறப்பாள வகையின் ஒப்பற்ற உறுப்பினர்கள் {அந்தணர்கள்} அடைந்த விருந்தோம்பலுக்குப் பதிலாக, அவர்களிடம் மங்கல ஆசிகளைப் பெற்றவர்கள். ஓ! ஜனார்த்தனா {கிருஷ்ணா}, அப்படிப்பட்ட அவர்கள் {பாண்டவர்கள்}; இரைதேடும் விலங்குகளின் கீச்சொலி மற்றும் அலறல்கள் போன்ற துன்பங்களுக்குத் தகாத அவர்கள்; ஆழமான காடுகளில் உறக்கம் கொண்டார்கள் என்பதை நம்பமுடியவில்லை. ஓ! மதுசூதனா {கிருஷ்ணா}, தொழில்முறை காரிகள் {ஓதுவார்கள்} மற்றும் பாணர்களின் துதிமுழக்கங்கள், பாடல் மகளிரின் தேன்குரலுடன் கூடிய கைத்தாளங்கள், பேரிகைகள், சங்குகள் மற்றும் குழல்களின் இசையால் படுக்கையில் இருந்து எழுப்பபட்டவர்கள், ஐயோ, காட்டு விலங்குகளின் அலறல்களுடன் கூடிய ஆழ்ந்த காட்டுக்குள் எப்படி எழுந்தார்கள்?
பணிவு கொண்டவனும், உண்மையில் {சத்தியத்தில்} உறுதி கொண்டவனும், புலன்களை அடக்கியவனும், அனைத்து உயிர்களிடமும் கருணை கொண்டவனும், காமத்தையும், தீமையையும் வீழ்த்தி, எப்போதும் நீதியின் பாதையில் நடப்பவனும், அம்பரீஷன், மாந்தாதா, யயாதி, நகுஷன், பரதன், திலீபன், உசீநரனின் மகனான சிபி மற்றும் பழங்கால அரசமுனிகள் தாங்கியது போலப் பெரும்பாரத்தைத் தாங்க இயன்றவனும், அற்புத குணமும், மனநிலையும் கொண்டவனும், அறத்தை அறிந்தவனும், கலங்கடிக்கப்படாத ஆற்றல் கொண்டவனும், தான் கொண்ட சாதனைகள் அனைத்தின் விளைவாக, மூவுலகத்திற்கும் ஏகாதிபதியாகக் கூடிய தகுதி கொண்டவனும், கல்வி மற்றும் மனநிலையால் நீதி நிறைந்த குருக்கள் அனைவரிலும் முதன்மையானவனும், அழகானவனும், வலிமைமிக்கக் கரங்கள் கொண்டவனும், எதிரியற்றவனும், சுத்தமான தங்கம் போன்ற நிறமுடையவனும் அறம்சார்ந்த ஆன்மா கொண்டவனுமான அந்த யுதிஷ்டிரன் எப்படி இருக்கிறான்?
ஓ! மதுசூதனா {கிருஷ்ணா}, பத்தாயிரம் {10,000} யானைகளின் பலத்தைக் கொண்டவனும், காற்றின் வேகம் கொண்டவனும், பலமிக்கவனும், பாண்டு மகன்களில் எப்போதும் கோபம் நிறைந்தவனும், தனது சகோதரர்களுக்கு எப்போதும் நன்மை செய்பவனும், அதனால் அவர்கள் அனைவருக்கும் அன்பானவனும், உறவினர்கள் அனைவருடனும் கூடிய கீசகனைக் கொன்றவனும், குரோதவாசர்கள், ஹிடிம்பன் {இடும்பன்}, பகன் ஆகியோரைக் கொன்றவனும், சக்ரனுக்கு {இந்திரனுக்கு} நிகரான ஆற்றலும், காற்று தேவனுக்கு {வாயுத்தேவனுக்கு} நிகரான வலிமையும் கொண்டவனும், பயங்கரமானவனும், மாதவனுக்கு இணையான கோபம் கொண்டவனும், அடிப்பவர்கள் அனைவரிலும் முதன்மையானவனும், கோபம்நிறைந்த பாண்டு மகனும், எதிரிகளைத் தண்டிப்பவனும், கோபம், வலிமை, பொறுமையின்மை, ஆகியவற்றை ஒடுக்கி, தனது ஆன்மாவைக் கட்டுப்படுத்தி, தனது அண்ணனின் {யுதிஷ்டிரனின்} கட்டளைகளுக்குக் கீழ்ப்படிந்து இருப்பவனும், அளவற்ற வீரம் கொண்டவனும், விருகோதரன் {பீமன்} என்ற தனது பெயருக்கு நியாயம் கற்பிப்பவனும், கதாயுதத்தைப் போன்ற கரங்களைக் கொண்டவனும், ஓ! ஜனார்த்தனா {கிருஷ்ணா}, பாண்டுவின் வலிமைநிறைந்த இரண்டாவது மகனுமான பீமசேனன் எப்படி இருக்கிறான்?
ஓ! கிருஷ்ணா, பழங்காலத்தின் ஆயிரங்கரங்கள் படைத்த அர்ஜுனனின் {கார்த்தவீர்யார்ஜுனனின்} பெயரைக் கொண்டிருப்பதால், தன்னை எப்போதும் மேலானவனாகக் கருதும் அந்த இருகரங்கள் கொண்டவனும், ஒரே இழுப்பில் ஐநூறு {500} கணைகளை அடிக்கவல்லவனும், மன்னன் கார்த்தவீரியனுக்கு இணையாக ஆயுதங்களைப் பயன்படுத்தும் {மூன்றாவது} பாண்டுமகனும், சக்தியில் ஆதித்தியனுக்கு இணையானவனும், புலனடக்கத்தில் பெரும் முனிவருக்கு நிகரானவனும், பொறுமையில் பூமிக்கு நிகரானவனும், ஆற்றலில் இந்திரனுக்கு நிகரானவனும், ஓ! மதுசூதனா {கிருஷ்ணா}, தனது ஆற்றலால் பூமியில் உள்ள மன்னர்கள் அனைவரைக்காட்டிலும் பரந்த நாட்டைக் குருக்களுக்கு உண்டாக்கிக் கொடுத்தவனும், பிரகாசத்தில் சுடர் விடுபவனும், கரங்களின் வலிமைக்காகப் பாண்டவர்களால் கொண்டாடப்படுபவனும், தேர்வீரர்கள் அனைவரிலும் முதன்மையானவனும், கலங்கடிக்கப்படாத ஆற்றல் கொண்டவனும், தன்னிடம் போரிட்ட எதிரியை உயிருடன் தப்பவிடாதவனும், ஓ! அச்யுதா {கிருஷ்ணா}, அனைவரையும் வென்றவனும், எவராலும் வெல்லப்படாதவனும், தேவர்களுக்கு வாசவனைப் {இந்திரனைப்} போலப் பாண்டவர்களுக்குப் புகலிடமாய் இருப்பவனும், உனது சகோதரனும் {மைத்துனனும்} நண்பனுமான அந்தத் தனஞ்சயன் {அர்ஜுனன்} இப்போது எப்படி இருக்கிறான்?
அனைத்து உயிர்களிடமும் கருணையுள்ளவனும், பணிவு கொண்டவனும், பலமிக்க ஆயுதங்களை அறிந்தவனும், மென்மையானவனும் {மென்மையான மேனியும்}, நுட்பமானவனும் {நுட்பமான அறிவும்}, அறம் சார்ந்தவனும், எனக்கு அன்பானவனும், ஓ! கிருஷ்ணா, வலிமைமிக்க வில்லாளியும், வீரனும், சபைகளின் ரத்தினமும், வயதில் இளையவனும், தனது அண்ணன்களுக்குச் சேவை செய்வதற்குத் தன்னை அர்ப்பணித்தவனும், அறம், பொருள் அறிந்தவனும், ஓ! மதுசூதனா {கிருஷ்ணா}, தன் மனோநிலைக்காக, தனது அண்ணன்களால் மெச்சப்படுபவனும், நன்னடத்தை மற்றும் உயர்ந்த ஆன்மா கொண்ட எனது மகனும், ஓ! விருஷ்ணி குலத்தோனே {கிருஷ்ணா}, வீரர்களில் முதன்மையானவனும், தனது அண்ணன்களுக்கு அடக்கமாகக் காத்திருப்பவனும் {பணிவிடை செய்பவனும்}, என்னிடம் மரியாதை கொண்டவனும், மாத்ரியின் மகனுமான அந்தச் சகாதேவனைக் குறித்து எனக்குச் சொல்வாயாக.
மென்மையானவனும், வயதால் இளையவனும், வீரமுடையவனும், மேனி அழகு கொண்டவனும், நம் அனைவரிடமும் தனது சகோதரர்களிடமும் அன்புடன் இருக்கும் பாண்டுமகனும், {தனது சகோதரர்களைப் பொறுத்தவரையில்}, தனி உடல் கொண்டு நடக்கும் தங்கள் உயிர் போன்றவனும், பல்வேறு வகையான போர்முறைகளை அறிந்தவனும், பெரும் பலம் கொண்டவனும், வலிய வில்லாளியும், ஆடம்பரமாக வளர்க்கப்பட்டவனும், அன்புக்குரிய எனது மகனுமான அந்த நகுலன், ஓ! கிருஷ்ணா, இப்போது நல்ல உடல்நிலையும் மனநிலையும் கொண்டிருக்கிறானா? வலிமைமிக்கத் தேர்வீரனும், அனைத்து ஆடம்பரங்களிலும் வளர்க்கப்பட்டவனும், துயருறத் தகாதவனுமான எனது நகுலனை நான் மீண்டும் காண்பேனா? ஓ! வீரா {கிருஷ்ணா} கண்ணிமைக்கும் குறுகிய நேரம் கூட நகுலனிடம் இருந்து பார்வையை அகற்றினால் அமைதியடையாத நான், இன்றும் உயிருடன் இருப்பதைப் பார்" {என்றாள் குந்தி}.
{குந்தி தொடர்ந்தாள்}, "ஓ! ஜனார்த்தனா {கிருஷ்ணா}, எனது மகன்களுக்கு மேலாக, துருபதனின் மகள் {திரௌபதி} எனது அன்புக்குரியவள் ஆவாள். உயர்குலப் பிறப்பும், பெரும் அழகும் கொண்ட அவள் {திரௌபதி} அனைத்து சாதனைகளையும் கொண்டவளாவாள். உண்மை நிறைந்த பேச்சுடன் கூடிய அவள் {திரௌபதி}, தனது மகன்களின் துணையை விட்டு, தனது தலைவர்களின் துணையைத் தேர்ந்தெடுத்தாள். உண்மையில், தனது அன்புக்குரிய மகன்களை விட்டுவிட்டு, பாண்டுவின் மகன்களைப் பின்தொடர்ந்து சென்றாள். ஒரு காலத்தில் பணியாட்களின் பெரிய வரிசையால் காக்கப்பட்டவளும் {பணிவிடை செய்யப்பட்டவளும்}, இன்ப நோக்கம் அனைத்திலும் தனது கணவர்களால் புகழப்பட்டவளும், ஓ! அச்யுதா {கிருஷ்ணா}, மங்கலக்குறிகள் மற்றும் சாதனைகள் அனைத்தையும் கொண்டவளுமான அந்தத் திரௌபதி இப்போது எப்படி இருக்கிறாள்?
அக்னிக்கு நிகரான சக்தியைக் கொண்டவர்களும், எதிரிகளை அடிப்பவர்களும், வலிய வில்லாளிகளுமான ஐந்து வீரக் கணவர்களைக் கொண்டிருந்தும், ஐயோ, துருபதன் மகள் {திரௌபதி} அடைந்த துன்பம் பெரியதே. ஓ! எதிரிகளைத் தண்டிப்பவனே {கிருஷ்ணா}, பதினான்கு {14} நீண்ட வருடங்களாகப் பாஞ்சால இளவரசியான எனது மருமகளை {திரௌபதியை} நான் காணவில்லை. தொடர் இடர்களுக்கு இரையான அவளும், அவ்வளவு காலம் தன் மகன்களைக் காணவில்லை. இப்படிப்பட்ட நிலையைக் கொண்ட துருபதனின் மகளே {திரௌபதியே}, தடங்கலில்லா இன்பத்தை அனுபவிக்க இயலாத போது, ஓ! கோவிந்தா {கிருஷ்ணா}, ஒருவன் அனுபவிக்கும் மகிழ்ச்சி, அவனது செயல்களின் கனி அல்ல என்றே தோன்றுகிறது.
வலுக்கட்டாயமாகச் சபைக்கு இழுத்துச் செல்லப்பட்ட திரௌபதியை நினைக்கும்போது, பீபத்சுவோ {அர்ஜுனனோ}, யுதிஷ்டிரனோ, பீமனோ, நகுலனோ, சகாதேவனோ என் பற்றுக்கு ஆட்படவில்லை. கோபமும், பேராசையும் கொண்ட இழிந்த துச்சாசனன், மாதவிலக்கான காலத்தில் ஒற்றையாடையுடுத்தியிருந்த திரௌபதியை, அவளது மாமனார் {திருதராஷ்டிரரின்} முன்னிலையிலேயே இழுத்துவந்து, குருக்கள் அனைவரின் பார்வைக்கும் அவளை {திரௌபதியை} வெளிப்படுத்தியபோது ஏற்பட்டதைவிடக் கனமான துயரம் எனக்கு வேறு எதுவும் கிடையாது.
அங்கே இருந்தவர்களில் மன்னன் பாஹ்லீகன், கிருபர், சோமதத்தன் ஆகியோர் இந்தக் காட்சியால் துளைக்கப்பட்டனர் என்பது அறியப்பட்டதே. ஆனால், அந்தச் சபையில் இருந்தோர் அனைவரைக்காட்டிலும் நான் விதுரனையே வழிபடுகிறேன். கல்வியாலோ, செல்வத்தாலோ ஒருவன் விருந்தோம்பலுக்குத் தகுந்தவனாகமாட்டான். ஒருவன் தனது மனநிலையாலேயே மதிப்புக்குரியவன் ஆகிறான். ஓ! கிருஷ்ணா, பெரும் புத்திசாலித்தனமும், ஆழ்ந்த ஞானமும் கொண்ட ஒப்பற்ற விதுரனின் குணம், இந்த முழு உலகத்தையும் (அவன் அணிந்திருக்கும்) ஆபரணம் போல அலங்கரிக்கிறது" என்றாள் {குந்தி}.
வைசம்பாயனர் {ஜனமேஜயனிடம்} தொடர்ந்தார், "கோவிந்தனின் {கிருஷ்ணனின்} வரவால் மகிழ்ச்சியையும், (தனது மகன்கள் நிமித்தமான) சோகத்தாலும் பாதிக்கப்பட்ட பிருதை {குந்தி}, தனது பல்வேறு துயரங்களுக்குமான உணர்ச்சிகளை வெளிப்படுத்தினாள். அவள் {குந்தி}, "ஓ! எதிரிகளைத் தண்டிப்பவனே {கிருஷ்ணா}, பழங்காலத்துத் தீய மன்னர்கள் அனைவரின் தொழிலான சூதும், மான்வேட்டையும், பாண்டவர்களின் மகிழ்ச்சிக்குகந்த தொழிலாகுமா? ஓ! கேசவா {கிருஷ்ணா}, திருதராஷ்டிரர் மகன்களால் தங்கள் சபையில் குருக்கள் {கௌரவர்கள்} அனைவரின் முன்னிலையில் இழுத்துவரப்பட்டு, மரணத்தைவிடக் கொடுமையான அவமானங்கள் கிருஷ்ணையின் {திரௌபதியின்} மீது குவிக்கப்பட்டதையும், ஓ! எதிரிகளைத் தண்டிப்பவனே {கிருஷ்ணா}, எனது மகன்கள் தங்கள் தலைநகரில் இருந்து விரட்டப்பட்டுக் காட்டில் உலவியதையும், இன்னும் எனது பல்வேறு துயரங்களையும் நினைக்கும்போதெல்லாம் எனக்கு {எனது மனம்} எரிகிறது. ஓ! மாதவா {கிருஷ்ணா}, ஒரு அந்நியரின் வீட்டில் அடைந்து கிடந்து, தங்கள் காலத்தை மறைந்திருந்து கழிக்க வேண்டிய நிலையைக் காட்டிலும் எனக்கோ, எனது மகன்களுக்கோ வேறு எதுவும் அதிக வலியைத் தராது.
என் மகன்களைத் துரியோதனன் துரத்தியது முதல் பதினான்கு {14} வருடங்கள் முழுமையாக முடிந்திருக்கிறது. பாவங்களின் கனிகளை {பலன்களை} துன்பம் அழிக்கும், அறத்தகுதியைச் சார்ந்தே மகிழ்ச்சி இருக்கும் என்றால், இவ்வளவு துன்பங்களுக்குப் பிறகு, மகிழ்ச்சி என்பது எங்களுடையதே ஆகும். (தாய்ப்பாசத்தைப் பொறுத்தவரை) நான் திருதராஷ்டிரர் மகன்களிடமும் எனது மகன்களிடமும் எந்தப் பாகுபாட்டையும் காட்டவில்லை. அந்த உண்மையின் காரணமாகவே, ஓ! கிருஷ்ணா, பாண்டவர்களது எதிரிகள் கொல்லப்பட்டு, அவர்களால் நாடும் மீட்கப்பட்டு, தற்போதைய கலவர நிலையில் இருந்து வெளியே பாதுகாப்பாக வரும் அவர்களோடு {பாண்டவர்களோடு} உன்னையும் நான் நிச்சயம் காண்பேன். அறத்தை ஒட்டியிருக்கும் உண்மைநிறைந்த நோன்பை நோற்றப் பாண்டவர்கள், எதிரிகளால் வீழ்த்தப்பட முடியாதவர்களாக இருக்கிறார்கள்.
எனினும், தற்போதைய எனது சோகங்களின் காரியத்தில் நான் என்னையோ, சுயோதனனையோ {துரியோதனனையோ} பழி கூறாமல் எனது தந்தையை {சூரசேனரை} மட்டுமே கூறுவேன். செல்வந்தன் ஒருவன் பணத்தைக் கொடையாகக் கொடுப்பது போல, என் தந்தை {சூரசேனர்}, என்னைக் குந்திபோஜருக்குக் கொடுத்துவிட்டார். சிறுபிள்ளையாகக் கைகளில் பந்துடன் விளையாடிக் கொண்டிருந்த என்னை, உனது பாட்டன் {சூரசேனர்}, ஓ! கேசவா {கிருஷ்ணா}, தனது நண்பரான ஒப்பற்ற குந்திபோஜருக்குக் கொடுத்துவிட்டார். எனது தந்தையாலும், எனது மாமனாராலும் கைவிடப்பட்ட நான், ஓ! எதிரிகளைத் தண்டிப்பவனே {கிருஷ்ணா}, ஓ! மாதவா, தாங்கமுடியாத துயரங்களால் பீடிக்கப்பட்டு, வாழ்வதில்தான் என்ன பயன் இருக்க முடியும்? {பிறந்த இடத்திலும் கைவிடப்பட்டேன், புகுந்த இடத்திலும் கைவிடப்பட்டேன். அப்படிப்பட்ட நான் வாழ்ந்துதான் என்ன பயன்?}.
சவ்யசச்சின் {அர்ஜுனன்} பிறந்த அன்றிரவு, பிரசவ அறையில், உருவமற்ற ஒரு குரல், "இந்த உனது மகன் உலகம் முழுதையும் வெல்வான். இவனது புகழ் சொர்க்கத்தையே எட்டும். பெரும் போரில் குருக்களைக் கொன்று, நாட்டை மீட்கும் உனது மகன் தனஞ்சயன் {அர்ஜுனன்}, தனது சகோதரர்களுடன் சேர்ந்து, மூன்று பெரிய வேள்விகளை நடத்துவான்" என்றது. நான் அந்த அறிவிப்பை சந்தேகிக்கவில்லை. படைப்பைத் தாங்கிப்பிடிக்கும் தர்மத்தை {அறத்தை} நான் வணங்குகிறேன். தர்மம் {அறம்} என்பது கட்டுக்கதை {தொன்மம்} அல்ல என்றால், ஓ! கிருஷ்ணா, அந்த உருவமற்ற குரல் சொன்ன அனைத்தையும் நீ சாதிப்பாய்.
ஓ! மாதவா {கிருஷ்ணா}, எனது பிள்ளைகளின் பிரிவைப் போன்ற வலிநிறைந்த துயரை, எனது கணவரின் இழப்போ, செல்வத்தின் இழப்போ, குருக்களிடம் {கௌரவர்களிடம்} கொண்ட பகையோகூட எனக்கு அளிக்கவில்லை. ஆயுதம் தாங்குவோர் அனைவரிலும் முதன்மையான தனஞ்சயனை {அர்ஜுனனை}, அந்தக் காண்டீவதாரியை {அர்ஜுனனை} என் முன்னே காணாமல், என் இதயம் என்ன சமாதானத்தை அடையும்? ஓ! கோவிந்தா {கிருஷ்ணா}, யுதிஷ்டிரன், தனஞ்சயன் {அர்ஜுனன்}, விருகோதரன் {பீமன்} ஆகியோரை பதினான்கு {14} வருடங்களாக நான் காணவில்லை. நீண்ட நாட்கள் காணாமல் போனவர்களை [1] இறந்ததாகக் கருதி மனிதர்கள் ஈமச்சடங்குகளைச் செய்கின்றனர். நடைமுறைப்படி, ஓ! ஜனார்த்தனா {கிருஷ்ணா}, எனக்கு எனது பிள்ளைகள் அனைவரும் இறந்தவராவர். அதே போல, நானும் அவர்களுக்கு இறந்தவளாவேன்" {என்றாள் குந்தி}
[1] பழங்காலத்தில் பனிரெண்டு வருடங்கள் தொடர்ச்சியாக ஒருவரைக் காணவில்லையென்றால், அவரை இறந்தவராகக் கருதுவார்களாம்.
{குந்தி கிருஷ்ணனிடம் தொடர்ந்தாள்}, "ஓ! மாதவா {கிருஷ்ணா}, அறம்சார்ந்த மன்னன் யுதிஷ்டிரனிடம், "ஓ! மகனே {யுதிஷ்டிரனே} உனது அறம் நாளுக்கு நாள் குறைந்து வருகிறது. எனவே, அறத்தகுதி அழிந்து போகாத வகையில் செயல்படுவாயாக" என்று {நான் சொன்னதாகச்} சொல்வாயாக. ஓ! ஜனார்த்தனா {கிருஷ்ணா}, பிறரைச் சார்ந்து வாழ்வது இழிவே. அற்பத்தனம் மூலம் {கெஞ்சி வாழ்வதன் மூலம்} வாழ்வாதாரத்தைப் பெறுவதைவிட மரணமே மேலானது.
தனஞ்சயனிடமும் {அர்ஜுனனிடமும்}, எப்போதும் தயாராக இருக்கும் விருகோதரனிடமும் {பீமனிடமும்}, "ஒரு க்ஷத்திரியப் பெண் எதை நோக்கமாகக் கொண்டு ஒரு மகனைப் பெறுகிறாளோ, அந்நிகழ்வுக்கான நேரம் வந்துவிட்டது. நீங்கள் எதையும் சாதிக்காமல் நேரத்தை நழுவ விட்டீர்களேயானால், இப்போது உலகமனைத்தாலும் மதிக்கப்படும் நீங்கள், பின்பு, இழிந்ததாகக் கருதப்படும் ஒன்றையே செய்ய வேண்டியிருக்கும். நீங்கள் இகழ்ச்சியை அடைந்தால், நான் உங்களை என்றென்றைக்கும் கைவிட்டுவிடுவேன். நேரம் வரும்போது, அன்பிற்குரிய {தனது} உயிர்கூட விடப்பட வேண்டும்" என்று சொல்வாயாக.
ஓ! மனிதர்களில் முதன்மையானவனே {கிருஷ்ணா}, க்ஷத்திரிய வழக்கங்களுக்கு எப்போதும் அர்ப்பணிப்புடன் இருக்கும் மாத்ரியின் மகன்களிடம் {நகுல சகாதேவனிடம்}, "க்ஷத்திரிய வழக்கங்களின் படி வாழ விரும்பும் மனிதனின் இதயத்தை, தன் ஆற்றலால் வெல்லப்பட்ட பொருட்கள் மட்டுமே மகிழ்ச்சிப்படுத்தும். எனவே, ஆற்றலால் {வீரத்தால்} அடையத்தக்க இன்ப {மகிழ்ச்சியைத் தரக்கூடிய} பொருட்களை வெல்ல முயலுங்கள்" என்று சொல்வாயாக.
ஓ! வலிய கரங்களைக் கொண்டவனே {கிருஷ்ணா}, அங்கே சென்று, ஆயுதம் தாங்கியோர் அனைவரிலும் முதன்மையானவனும், பாண்டுவின் வீரமகனுமான அர்ஜுனனிடம், "திரௌபதி சுட்டிக்காட்டும் பாதையில் நீ நடப்பாயாக" என்று சொல்வாயாக. ஓ! கேசவா {கிருஷ்ணா}, அண்டத்தை அழிப்பவனைப் போன்ற பீமனும் அர்ஜுனனும், கோபத்தால் தூண்டப்படும்போது, தேவர்களையே கூட அவர்களால் கொல்ல இயலும் என்பது நீ அறிந்ததே. அவர்களது மனைவியான கிருஷ்ணையை {திரௌபதியை} துச்சாசனனும், கர்ணனும் சபைக்கு இழுத்து வந்து அவமதித்துப் பேசியது, அவர்களுக்கு {பீமனுக்கும் அர்ஜுனனுக்கும்} இழைக்கப்பட்ட பெரும் அவமானமாகும்.
குரு {கௌரவத்} தலைவர்களின் முன்னிலையிலேயே பெரும்பலமிக்க சக்தி கொண்ட பீமனை துரியோதனனே அவமதித்திருக்கிறான். அந்த நடத்தைக்கான கனியை {பலனை} அவன் {துரியோதனனே} அறுவடை செய்வான் {அடைவான்} என்பதில் நான் உறுதியாக இருக்கிறேன். ஏனெனில், எதிரியால் தூண்டப்பட்டால், விருகோதரன் {பீமன்} அமைதியை அறியமாட்டான். உண்மையில், ஒரு முறை தூண்டப்பட்டுவிட்டால், நீண்டகாலத்துக்கு அதைப் பீமன் மறக்க மாட்டான். அந்த எதிரியும், அவனது கூட்டாளிகளும் அழியும் வரை அந்த எதிரிகளைக் கலங்கடிப்பவன் {பீமன்} மறக்க மாட்டான். நாட்டை இழந்தது என்னைத் துயர்கொள்ளச் செய்யவில்லை; பகடையில் தோற்றதும் என்னைத் துயர்கொள்ளச் செய்யவில்லை. ஒற்றையாடை உடுத்தியிருந்தவளும், ஒப்பற்றவளும், அழகானவளுமான பாஞ்சால இளவரசி {திரௌபதி} சபைக்கு இழுத்துவரப்பட்டு, கசப்பான வார்த்தைகளைக் {அவள்} கேட்குமாறு செய்யப்பட்டதே என்னை மிகவும் துன்புறுத்தியது. ஓ! கிருஷ்ணா, இதைவிட எனக்குப் பெரிய வருத்தத்தை அளிக்கக்கூடியது வேறு என்ன இருக்க முடியும்?
ஐயோ, க்ஷத்திரிய வழக்கங்களுக்கு என்றும் அர்ப்பணிப்புடன் இருந்தவளும், பெரும் அழகுடையவளுமான அந்த இளவரசி {திரௌபதி}, மேனி சுகமில்லாத போது {மாதவிலக்காய் இருந்த போது}, இப்படிக் கொடூரமாக நடத்தப்பட்டாளே. வலிமைமிக்கப் பாதுகாவலர்களைக் கொண்டவளாய் இருந்தாலும், யாருமற்றவளைப் போல, அப்போது ஆதரவற்று இருந்தாளே. ஓ! மதுசூதனா {கிருஷ்ணா}, உன்னையும், பலமிக்க மனிதர்களில் முதன்மையான அந்த ராமனையும் {பலராமனையும்}, வலிமைமிக்கத் தேர் வீரனான பிரத்யும்னனையும் எனக்கும் எனது பிள்ளைகளுக்கும் பாதுகாவலர்களாய்க் கொண்டிருந்தும், ஓ! மனிதர்களில் முதன்மையானவனே {கிருஷ்ணா}, எனது மகன்களான யாரும் வெல்லமுடியாத பீமன், புறமுதுகிடாத விஜயன் {அர்ஜுனன்} ஆகிய இருவரும் உயிரோடு இருந்தும், நான் இத்தகு துயரைத் தாங்க வேண்டியிருப்பது நிச்சயம் விசித்திரமாகவே இருக்கிறது!" என்றாள் {குந்தி}.
வைசம்பாயனர் {ஜனமேஜயனிடம்} தொடர்ந்தார், "இப்படி அவளால் {குந்தியால்} சொல்லப்பட்டதும், பார்த்தனின் {அர்ஜுனனின்} நண்பனான சௌரி {கிருஷ்ணன்}, தன் மகன்களைக் குறித்த துயரில் பாதிக்கப்பட்டிருந்த தனது அத்தை {தந்தையின் சகோதரி} பிருதையைத் {குந்தியைத்} தேற்றினான். மேலும் அந்த வாசுதேவன் {கிருஷ்ணன் - குந்தியிடம்}, "ஓ! அத்தை {குந்தி}, உன்னைப் போன்ற எந்தப் பெண் இந்த உலகில் இருக்கிறாள்? மன்னன் சூரசேனருக்கு மகளான நீ, திருமணத்தால் அஜமீட குலத்தை {குருகுலத்தை} அடைந்தாய். உயர்ந்த பிறப்பும், உயர்ந்த மணமும் கொண்ட நீ, ஒரு பெரிய தடாகத்தில் இருந்து மற்றொரு பெரிய தடாகத்திற்கு மாற்றப்பட்ட தாமரையைப் போன்றவளாவாய்.
செழிப்புகள் அனைத்தையும், பெரும் நற்பேறையும் பெற்ற நீ, உனது கணவரால் {பாண்டுவால்} வணங்கப்பட்டாய். அறங்கள் அனைத்தையும், பெரும் அறிவையும் உடைய நீ, இன்பம் துன்பம் ஆகிய இரண்டையும் பொறுமையுடன் தாங்கிக் கொள்வதே உனக்குத் தகும். உறக்கம், தளர்வு, கோபம், மகிழ்ச்சி, பசி, தாகம், குளிர்ச்சி, வெப்பம் ஆகியவற்றில் இருந்து மீண்ட உனது பிள்ளைகள், வீரர்களுக்குத் தகுந்த மகிழ்ச்சியை அனுபவிக்கிறார்கள். பெரும் முயற்சியும், பெரும் பலமும் கொண்ட உனது மகன்கள், தாழ்ந்த மற்றும் சராசரியானவர்களுக்கு மட்டுமே மனநிறைவைத் தருகின்றதும், புலன்களால் பெறப்படுவதுமான வசதிகளால் பாதிக்கப்படாமல், வீரர்களுக்குத் தகுந்த இன்பத்தை எப்போதும் தொடர்ந்து செல்கிறார்கள். அதே போலச் சராசரி ஆசைகளைக் கொண்ட சிறிய மனிதர்களைப் போல, அவர்கள் மனநிறைவை அடைவதில்லை.
மகிழ்ச்சிகரமானதையும், துன்பகரமானதையும், அறிவுடையோர், அதே இன்பத்துடனோ துன்பத்துடனோ பெற்றுக் கொள்கிறார்கள். உண்மையில், குறைந்த அல்லது சராசரி மனிதர்களை மனநிறைவு கொள்ளச் செய்யும் வசதிகளால் பாதிக்கப்பட்டு, எந்த வகையான உற்சாகமும் அற்ற மந்த நிலைக்கு இணையான நிலையையே சாதாரண மனிதர்கள் விரும்புகின்றனர். எனினும், மேன்மையானவர்களோ, மனித துயரங்களில் தீவிரமானதையோ, அல்லது, மனிதனுக்கு அளிக்கப்படும் மகிழ்ச்சிகள் அனைத்திலும் உயர்ந்ததையோ தான் விரும்புகிறார்கள். அறிவுடையோர் எல்லை கடந்தவற்றிலேயே {அதீத [தீவிர] நிலைகளிலே} இன்புறுகின்றனர். இடைநிலைகளில் அவர்கள் இன்பத்தைக் காண்பதில்லை; எல்லை கடந்தவற்றையே {அதீதமான இரு நிலைகளையே} அவர்கள் இன்பமாகக் கருதுகிறார்கள். அதே வேளையில், {இரு நிலைகளுக்கும்} இடைநிலையைத் {அதீத நிலை இரண்டுக்கும் நடுவில் இருப்பதைத்} துயரமாகக் கருதுகிறார்கள். கிருஷ்ணையுடன் {திரௌபதியுடன்} கூடிய பாண்டவர்கள் என் மூலமாக உன்னை வணங்குகிறார்கள். தாங்கள் நன்றாக இருப்பதாகச் சொல்லி, உனது நலத்தை விசாரிக்கிறார்கள். தங்கள் எதிரியைக் கொன்று, செழிப்பை முதலீடாக்கிக் கொண்டு, முழு உலகத்தின் தலைவர்களாக அவர்களை {பாண்டவர்களை} நீ விரைவில் காண்பாய்", என்றான் {கிருஷ்ணன்}.
இப்படிக் கிருஷ்ணனால் தேற்றப்பட்டவளும், தன் மகன்கள் குறித்த துயரத்தால் பாதிக்கப்பட்டவளுமான குந்தி, தனது புரிதலை தற்காலிகமாக இழந்திருந்ததால் விளைந்த இருளை விரைவாக அகற்றி, ஜனார்த்தனனிடம் {கிருஷ்ணனிடம்}, "ஓ! வலிமைமிக்கக் கரங்களைக் கொண்டவனே, ஓ! மதுசூதனா {கிருஷ்ணா}, எதைச் செய்வது முறையானது என்று நீ கருதுகிறாயோ, ஓ! எதிரிகளைத் தண்டிப்பவனே {கிருஷ்ணா}, சிறு கபடமும் இல்லாமல், நீதியைத் தியாகம் செய்யாமல் அது செய்யப்படட்டும். ஓ! கிருஷ்ணா, உனது உண்மை {சத்தியம்} மற்றும் உனது பரம்பரையின் பலம் என்ன என்பதை நான் அறிவேன். உனது நண்பர்கள் சம்பந்தமானவற்றைச் செய்து முடிக்க, என்ன தீர்ப்பையும், என்ன ஆற்றலையும் நீ வெளிப்படுத்துவாய் என்பதையும் நான் அறிவேன். எங்கள் குலத்தில், நீயே அறம் {தர்மம்}, நீயே உண்மை {சத்தியம்}, நீயே தவத்துறவுகளின் உருவகமும் ஆவாய். நீயே அந்தப் பெரும் பிரம்மம், அனைத்தும் உன் மீதே இருக்கின்றன. எனவே, நீ சொன்னது அனைத்தும் உண்மையாகத்தான் இருக்க வேண்டும்" என்றாள் {குந்தி}.
வைசம்பாயனர் {ஜனமேஜயனிடம்} தொடர்ந்தார், "அவளை {குந்தியை} வலம் வந்து, அவளிடம் பிரியாவிடை பெற்றவனும் வலிய கரங்களைக் கொண்டவனுமான கோவிந்தன் {கிருஷ்ணன்}, {அங்கிருந்து} துரியோதனனின் மாளிகைக்குப் புறப்பட்டான்" என்றார் {வைசம்பாயனர்}.
வைசம்பாயனர் {ஜனமேஜயனிடம்} சொன்னார், "பிருதையிடம் {குந்தியிடம்} விடைபெற்றுக் கொண்டு, அவளை வலம் வந்தவனும், எதிரிகளைத் தண்டிப்பவனும், சௌரி என்றும் அழைக்கப்பட்டவனுமான கோவிந்தன் {கிருஷ்ணன்}, புரந்தரனின் {இந்திரனின்} வசிப்பிடத்தைப் போன்றதும், அழகிய இருக்கைகளால் அலங்கரிக்கப்பட்டதும், பெரும் செல்வம் நிறைந்ததுமான துரியோதனனின் அரண்மனைக்குச் சென்றான். வாயில் காப்போரால் தடுக்கப்படாத அந்தப் பெரும் புகழ் கொண்ட வீரன் {கிருஷ்ணன்}, தொடர்ச்சியாக மூன்று கட்டுகளைக் கடந்து, சுடர்விட்டுப் பிரகாசிப்பதும், மலையின் சிகரத்தைப் போன்று உயர்ந்ததும், மேகத்திரள் போன்று தெரிவதுமான அந்த மாளிகைக்குள் நுழைந்தான் {உப்பரிகையில் ஏறினான்}.
அங்கே, குருக்கள் அனைவராலும் சூழப்பட்டு, ஆயிரம் {1000} மன்னர்களுக்கு மத்தியில் தனது அரியணையில் அமர்ந்திருந்த வலிய கரங்களைக் கொண்ட திருதராஷ்டிரன் மகனைக் {துரியோதனனைக்} கண்டான். மேலும், அங்கே, துச்சாசனன், கர்ணன், சுபலனின் மகனான சகுனி ஆகியோர் தங்களுக்குரிய இருக்கைகளில் துரியோதனனுக்குப் பக்கத்தில் அமர்ந்திருப்பதையும் கண்டான். அந்தத் தாசார்ஹ குலத்தோன் {கிருஷ்ணன்} சபைக்குள் நுழைந்ததும், அமைச்சர்களுடன் கூடியவனும், பெரும் புகழைக் கொண்டவனுமான திருதராஷ்டிரன் மகன் {துரியோதனன்}, அந்த மதுசூதனனுக்கு {கிருஷ்ணனுக்கு} மரியாதை செலுத்தும் விதமாகத் தனது ஆசனத்தில் இருந்து எழுந்தான்.
பிறகு, கேசவன் {கிருஷ்ணன்}, திருதராஷ்டிரர் மகன்களையும், அவனது ஆலோசகர்கள் அனைவரையும், அங்கே இருந்த மன்னர்கள் அனைவரையும், அவரவர் வயதுக்குத் தகுந்தபடி நலம் விசாரித்தான். பிறகு, அந்த விருஷ்ணி குலத்து அச்யுதன் {கிருஷ்ணன்}, தங்கத்தாலானதும், தங்க வேலைப்பாடுகள் கொண்டதுமான அழகிய இருக்கை ஒன்றில் அமர்ந்தான். குரு {கௌரவ} மன்னன் {துரியோதனன்}, ஜனார்த்தனனுக்கு {கிருஷ்ணனுக்கு} ஒரு மாட்டையும், தயிர்க்கடைசலையும், நீரையும் காணிக்கையாக்கி, தனது அரண்மனைகள், மாளிகைகள் மற்றும் முழு நாட்டையும், அவனது {கிருஷ்ணனின்} பயன்பாட்டுக்காக வைத்தான். பிறகு அங்கிருந்த மன்னர்கள் அனைவருடன் கூடிய கௌரவர்கள், சூரியனைப் போன்ற பிரகாசத்துடன் தனது இருக்கையில் இருந்த கோவிந்தனை {கிருஷ்ணனை} வழிபட்டனர்.
வழிபாடுகள் முடிந்ததும், மன்னன் துரியோதனன், வெற்றியாளர்களில் முதன்மையானவனான அந்த விருஷ்ணி குலத்தோனை {கிருஷ்ணனை}, தனது இல்லத்தில் உண்ண அழைத்தான். எனினும், கேசவன் {கிருஷ்ணன்} அந்த அழைப்பை ஏற்கவில்லை. குருக்களுக்கு {கௌரவர்களுக்கு} மத்தியில் அமர்ந்திருந்தவனும், குரு {கௌரவ} மன்னனுமான துரியோதனன், மென்மையான குரலில், ஆனால், தனது வார்த்தைகளுக்குப் பின்னால் மறைபொருளுடன் கூடிய ஏமாற்றுத்தனங்களுடன், கர்ணனை {ஓரக்கண்ணால்} பார்த்துக் கொண்டே, கேசவனிடம் {கிருஷ்ணனிடம்} உரையாடி, பிறகு {கிருஷ்ணனிடம்}, "ஓ! ஜனார்த்தனா {கிருஷ்ணா}, உனக்காகத் தயாராக வைக்கப்பட்டுள்ள பல்வேறு வகையான உணவுகளையும் பானங்களையும், ஆடைகளையும், படுக்கைகளையும் நீ ஏன் ஏற்க மறுக்கிறாய்? உனது உதவியை நீ இரு தரப்புக்கும் அளித்திருக்கிறாய்; நீ இரு தரப்புகளின் நன்மையிலும் ஈடுபட்டுக் கொண்டிருக்கிறாய். மேலும், நீ திருதராஷ்டிரரின் உறவினர்களில் முதன்மையானவனும், அவரால் மிகவும் விரும்பப்படுபவனும் ஆவாய். ஓ! கோவிந்தா {கிருஷ்ணா}, அறம், பொருள் ஆகிய இரண்டையும், அனைத்தின் விபரங்களையும் நீ முழுமையாக அறிவாய். எனவே, ஓ! சக்கரம் மற்றும் கதாயுதம் தாங்குபவனே {கிருஷ்ணா}, உனது மறுப்புக்கான உண்மைக் காரணம் என்ன என்பதை நான் கேட்க விரும்புகிறேன்" என்றான் {துரியோதனன்}.
வைசம்பாயனர் {ஜனமேஜயனிடம்} தொடர்ந்தார், "உயர் ஆன்மா கொண்டவனும், தாமரை இதழ்களைப் போன்ற கண்களைக் கொண்டவனுமான கோவிந்தன் {கிருஷ்ணன்}, தனது வலிய (வலது) கரத்தை உயர்த்தி, அந்த மன்னனுக்கு {துரியோதனனுக்கு} மறுமொழியாக, மேகங்களைப் போன்ற ஆழ்ந்த குரலில், காரணங்கள் நிறைந்தவையும், தெளிவானவையும், தனித்துவமானவையும், சரியாக உச்சரிக்கப்பட்டவையும், ஓர் எழுத்தும் விடுபடாதவையுமான அற்புத வார்த்தைகளில், "ஓ! மன்னா {துரியோதனா}, தங்கள் காரியங்கள் வெற்றியடைந்த பிறகு மட்டுமே, தூதர்கள் உண்ணவும், வழிபாட்டை ஏற்றுக் கொள்ளவும் செய்வார்கள். எனவே, ஓ! பாரதா {துரியோதனா}, எனது காரியம் வெற்றியடைந்ததும், நீ என்னையும், எனது பணியாட்களையும் உற்சாகப்படுத்தலாம்" என்றான் {கிருஷ்ணன்}.
இப்படிப் பதிலுரைக்கப்பட்டதும், திருதராஷ்டிரன் மகன் {துரியோதனன்}, மீண்டும் ஜனார்த்தனனிடம் {கிருஷ்ணனிடம்}, "ஓ! கேசவா {கிருஷ்ணா}, நீ எங்களிடம் இப்படி நடந்து கொள்வது உனக்குத் தகாது. {வந்திருக்கும் காரியத்தில்} நீ வெற்றியடைந்தாலும், வெற்றியடையாவிட்டாலும், ஓ! மதுசூதனா {கிருஷ்ணா}, நீ எங்களுடன் கொண்ட உறவின் காரணமாகவே நாங்கள் உன்னை நிறைவு செய்ய முயல்கிறோம். எனினும், ஓ! தாசார்ஹ குலத்தோனே {கிருஷ்ணா}, எங்களது அந்த முயற்சியெல்லாம் கனியற்றதாகத் தோன்றுகிறது. அல்லது, ஓ! மதுசூதனா {கிருஷ்ணா}, நட்பாலும் அன்பாலும் நாங்கள் வழங்கும் வழிபாட்டை நீ ஏற்காததன் விளைவில் எந்தக் காரணத்தையும் நாங்கள் காணவில்லை. {எங்கள் விருந்தோம்பலை நீ ஏற்காததற்கான காரணத்தை நாங்கள் அறியவில்லை}. ஓ! கோவிந்தா {கிருஷ்ணா}, எங்களுக்கு உன்னிடம் பகையோ, சண்டையோ கிடையாது. எனவே, சிந்தித்துப் பார்த்தால், இது போன்ற அந்த வார்த்தைகள் உனக்குத் தகாது என்பது உனக்குத் தெரியும்" என்றான் {துரியோதனன்}.
வைசம்பாயனர் {ஜனமேஜயனிடம்} தொடர்ந்தார், "மன்னனால் {துரியோதனனால்} இப்படிச் சொல்லப்பட்ட தாசார்ஹ குலத்து ஜனார்த்தனன் {கிருஷ்ணன்}, தனது கண்களைத் திருதராஷ்டிரன் மகன் {துரியோதனன்} மற்றும் அவனது ஆலோசகர்கள் மீது செலுத்தியபடி {கிருஷ்ணன் துரியோதனனிடம்}, "ஆசையாலோ, கோபத்தாலோ, அகந்தையாலோ, பொருளீட்டவோ, வாதத்தின் பொருட்டோ, மயக்கத்தாலோ நான் ஒருபோதும் அறத்தைக் கைவிடமாட்டேன். துயரத்தில் இருக்கும்போது ஒருவன் மற்றொருவரின் உணவைக் கொள்கிறான். எனினும், தற்போதோ, ஓ! மன்னா {துரியோதனா}, உனது எந்தச் செயலாலும் நீ என்னிடம் அன்பை ஈர்க்கவில்லை, அல்லது நானும் துயரில் மூழ்கிவிடவில்லை.
ஓ! மன்னா {துரியோதனா}, அனைத்து அறங்களையும் கொண்டவர்களும், அன்பான மற்றும் மென்மையான உனது சகோதரர்களுமான பாண்டவர்களை, அவர்கள் பிறந்ததிலிருந்தே, எக்காரணமும் இன்றி நீ வெறுக்கிறாய். பிருதையின் {குந்தியின்} மகன்களிடம் {பாண்டவர்களிடம்} நீ கொண்டிருக்கும் நியாயமற்ற வெறுப்பு உனக்குக் கெடுதியையே செய்யும். பாண்டுவின் மகன்கள் அனைவரும் அறத்திற்கு அர்ப்பணிப்போடு இருப்பவர்கள். உண்மையில், எவனால் அவர்களுக்குச் சிறு காயத்தையும் ஏற்படுத்த முடியும்? அவர்களை வெறுப்பவன், என்னையே வெறுக்கிறான்; அவர்களை விரும்புபவன், என்னையே விரும்புகிறான். அறம்சார்ந்த பாண்டவர்களுக்கும் எனக்கும் பொதுவான ஆன்மா ஒன்றே {நாங்கள் வேறு வேறு அல்ல} என்பதை அறிந்து கொள்வாயாக.
காமம் மற்றும் கோபத்தின் தூண்டுதலைத் தொடர்ந்து, தன் ஆன்மாவின் இருளால், அனைத்து நல்ல குணங்களையும் கொண்டவனை வெறுத்து, அவனைக் காயப்படுத்த முயல்பவன் மனிதர்களில் படுபயங்கரமானவனாகக் கருதப்படுகிறான். அனைத்து நற்குணங்களையும் கொண்டிருந்தாலும், கோபம் நிறைந்த பாதகன் ஒருவன் மனிதர்களில் படுபயங்கரமானவனாகக் கருதப்படுகிறான். கட்டுபாடற்ற ஆன்மா கொண்ட கோபம் நிறைந்த அந்தப் பாதகன், தனது அறியாமையாலும் பேராசையாலும், அனைத்து மங்கலகரமான குணங்களையும் கொண்ட தனது இரத்த உறவினர்களை வெறுத்தால், அவன் தனது செழிப்பில் நீண்ட காலம் இன்புற முடியாது. {அவனால் தனது செழிப்பை நீண்ட காலம் தக்க வைத்துக் கொள்ள முடியாது}. மறுபுறம், தனது நல்ல அலுவல்களால், நற்குணங்கள் கொண்ட மனிதர்களை வென்றெடுக்கும் ஒருவன், தனது இதயத்தில் அவர்கள் மீது வெறுப்பைக் கொண்டிருந்தாலும், செழிப்பையும், புகழையும் சதாகாலமும் அவன் அனுபவிப்பான். எனவே, தீமையால் அசுத்தமான இந்த உணவு அனைத்தும், என்னால் உண்ணத்தக்கது அல்ல. விதுரரால் வழங்கப்படும் உணவை மட்டுமே, நான் உண்ணலாம் என நான் நினைக்கிறேன்" என்று மறுமொழி கூறினான் {கிருஷ்ணன்}.
தனது விருப்பங்களுக்கு எதிரான எதையும் எப்போதும் தாங்கிக் கொள்ள இயலாதவனான துரியோதனனிடம் இதைச் சொன்ன வலிய கரங்களைக் கொண்ட கேசவன் {கிருஷ்ணன்}, திருதராஷ்டிரன் மகனின் {துரியோதனனின்} சுடர்மிகும் அரண்மனையில் இருந்து வெளியே வந்தான். உயர்ந்த ஆன்மாவும், வலிய கரங்களையும் கொண்ட அந்த வாசுதேவன் {கிருஷ்ணன்}, அம்மாளிகையில் இருந்து வெளியே வந்து, ஒப்பற்ற விதுரனின் இல்லத்தை நோக்கி அடியெடுத்து வைத்தான். அந்த வலிய கரங்களைக் கொண்டவன் {கிருஷ்ணன்}, விதுரனின் இல்லத்தில் தங்கியிருந்த போது, துரோணர், கிருபர், பீஷ்மர், பாஹ்லீகன் மற்றும் பல கௌரவர்கள் அங்கே வந்தனர். அங்கே வந்த அந்தக் கௌரவர்கள் மாதவனிடம், அந்த வீர மதுசூதனனிடம் {கிருஷ்ணனிடம்}, "ஓ! விருஷ்ணி குலத்தோனே {கிருஷ்ணா}, எங்கள் இல்லங்களையும், அதில் இருக்கும் செல்வங்களையும் நாங்கள் உன் ஆளுகைக்குள் வைக்கிறோம்" என்றனர்.
பெரும் சக்தி கொண்ட அந்த மதுசூதனன் {கிருஷ்ணன்}, அவர்களிடம், "நீங்கள் செல்லலாம். உங்கள் காணிக்கைகளால் நான் பெருமையடைகிறேன்" என்றான். அந்தக் குருக்கள் அனைவரும் சென்ற பிறகு, விதுரன், அந்தத் தாசார்ஹ குலத்தின் வீழாத வீரனை {கிருஷ்ணனை}, விருப்பத்திற்குரிய அனைத்துப் பொருட்களுடன் கவனித்து உற்சாகப்படுத்தினான். அந்த ஒப்பற்ற கேசவனின் {கிருஷ்ணனின்} முன்பு, குந்தி, சுத்தமானதும், சுவை நிறைந்ததுமான உணவைக் அபரிமிதமாக வைத்தாள். அதைக் கொண்டு, மதுசூதனன் {கிருஷ்ணன்}, முதலில் அந்தணர்களை நிறைவு செய்தான். உண்மையில், நிறையச் செல்வங்களுடன் சேர்த்து அந்த உணவின் ஒரு பகுதியை வேதமறிந்த பல அந்தணர்களுக்குக் கொடுத்தான். பிறகு, விதுரனால் வழங்கப்பட்ட சுவை நிறைந்த சுத்தமான உணவில் மீந்ததைக் கொண்டு, மருதர்களுக்கு மத்தியில் இருக்கும் வாசவனைப் {இந்திரனைப்} போல, தனது பணியாட்களுடன் சேர்ந்து அவன் உண்டான்", என்றார் {வைசம்பாயனர்}.
வைசம்பாயனர் {ஜனமேஜயனிடம்} சொன்னார், "கேசவன் {கிருஷ்ணன்} (உணவு)உண்டு புத்துணர்ச்சி பெற்றதும், இரவில், விதுரன் அவனிடம் {கிருஷ்ணனிடம்}, "ஓ! கேசவா {கிருஷ்ணா}, இந்த உனது வருகை நன்கு தீர்மானிக்கப்பட்ட ஒன்றாக இல்லை. ஏனெனில், ஓ! ஜனார்த்தனா {கிருஷ்ணா}, திருதராஷ்டிரரின் மகன் {துரியோதனன்} பொருள் மற்றும் அறம் ஆகிய இரண்டின் விதிகளையும் மீறுபவனாவான். புகழை விரும்புபவனாக இருப்பினும், தீயவனாகவும், கோபம் நிறைந்தவனாகவும் இருந்து கொண்டு, பிறரை அவமித்து வருகிறான். முதியோர் கட்டளைகளுக்கு அவன் {துரியோதனன்} கீழ்ப்படிவதில்லை.
ஓ! மாதவா {கிருஷ்ணா}, அவன் {துரியோதனன்}, சாத்திரங்களை மீறுபவனும், அறியாமை கொண்ட தீய ஆன்மா கொண்டவனும், ஏற்கனவே விதியில் மூழ்கியவனும், எளிதில் வசப்படுத்த முடியாதவனும், அவனுக்கு நன்மை செய்ய முயல்பவர்களுக்குத் தீமை செய்யும் மனநிலை கொண்டவனும் ஆவான். அவனின் {துரியோதனனின்} ஆன்மா, ஆசையாலும் காமத்தாலும் பீடிக்கப்பட்டிருக்கிறது. அவன் {துரியோதனன்} தன்னைத்தானே அறிஞன் என மூடத்தனத்தால் கருதிக் கொள்கிறான். உண்மையான தனது நண்பர்கள் அனைவருக்கும் அவன் எதிரியாக இருக்கிறான். எப்போதும் சந்தேகத்துடன், தனது ஆன்மா மீது எவ்விதக் கட்டுபாடுமின்றி, நன்றி கெட்டவனாகி, அறம் அனைத்தையும் கைவிட்ட அவன் {துரியோதனன்}, இப்போது பாவத்துடன் காதலில் இருக்கிறான்.
பண்படுத்தப்படாத புரிதலைக் கொண்ட மூடனான அவன் {துரியோதனன்}, புலன்களுக்கு அடிமையாய், காமம் மற்றும் பேராசையின் தூண்டுதலுக்கு எப்போதும் அடிபணிந்தவனாய், செய்யப்பட வேண்டிய ஒவ்வொரு செயலிலும் தயக்கம் உள்ளவனாய் இருக்கிறான். இவற்றையும், இன்னும் பல தீமைகளையும் அவன் {துரியோதனன்} கொண்டிருக்கிறான். அவனுக்கு நன்மை யாதென நீ சுட்டிக் காட்டினாலும், செருக்காலும் கோபத்தாலும் அவன் அவற்றை அலட்சியப்படுத்துவான்.
பீஷ்மர், துரோணர், கிருபர், கர்ணன், துரோணரின் மகன் {அஸ்வத்தாமன்}, ஜெயத்ரதன் ஆகியோரிடம் அவன் {துரியோதனன்} பெரும் நம்பிக்கை வைத்திருக்கிறான். எனவே, ஓ! ஜனார்த்தனா {கிருஷ்ணா}, சமாதானத்தில் தன் இதயத்தை அவன் செலுத்தவில்லை. கர்ணனுடன் கூடிய திருதராஷ்டிரர் மகன்கள் {கௌரவர்கள்}, 'பீஷ்மர், துரோணர் மற்றும் பிற வீரர்களைப் பாண்டவர்களால் {எதிர்த்துப்} பார்க்கக்கூட இயலாது எனும் போது, அவர்களுடன் {இந்த கௌரவர்களுடன்} அவர்கள் {அந்த பாண்டவர்கள்} போரிடுவதைக் குறித்து என்ன சொல்வது' என்ற உறுதியான நம்பிக்கையில் இருக்கிறார்கள். மட்டுப்பட்ட பார்வை கொண்டவனான முட்டாள் துரியோதனன், ஒரு பெரிய படையைக் கூட்டிவிட்டதால், தனது நோக்கங்கள் ஏற்கனவே நிறைவேறிவிட்டதாகக் கருதுகிறான்.
அவனது {துரியோதனனின்} எதிரிகளை, கர்ணன், தனியாளவே வெல்லத் தகுந்தவன் என்ற தீர்மானத்திற்குத் திருதராஷ்டிரரின் முட்டாள் மகன் {துரியோதனன்} வந்திருக்கிறான். எனவே, அவன் {துரியோதனன்} சமாதானத்திற்கு உடன்படமாட்டான்.
ஓ! கேசவா {கிருஷ்ணா}, நீயோ இருதரப்புக்கும் இடையில் சமாதானத்தையும், சகோதர உணர்வுகளையும் நிறுவ விரும்புகிறாய். உண்மையில், பாண்டவர்களுக்கு உரிமையிருந்தாலும் கூட, அவர்களுக்கு {பாண்டவர்களுக்கு அவர்களது பங்கைக்} கொடுப்பதில்லை என்ற முடிவுக்குத் திருதராஷ்டிரரின் மகன்கள் அனைவரும் வந்திருக்கின்றனர் என்பதை அறிந்து கொள்வாயாக. அப்படிப்பட்ட தீர்மானத்துடன் இருக்கும் அவர்களிடம் {கௌரவர்களிடம்} உனது வார்த்தைகள் வீணாவது நிச்சயம். ஓ! மதுசூதனா {கிருஷ்ணா}, எங்கே நல்ல வார்த்தைகளுக்கும், தீய வார்த்தைகளுக்கும் ஒரே விளைவு இருக்கிறதோ, அங்கே, காது கேளாதவன் முன்பு பாடுபவன் போல, அறிவுள்ள ஒரு மனிதன், தனது மூச்சைக்கூட வீணாக்க மாட்டான்.
சண்டாளர்கள் கூட்டத்திற்கு முன்பான ஓர் அந்தணன் போல, ஓ! மாதவா {கிருஷ்ணா}, அறியாமைகொண்டவர்களும், இழிந்தவர்களும், தீயவர்களும், மதிப்புக்குரிய அனைவரையும் மதிக்காதவர்களுமான அவர்களுக்கு மத்தியில் உனது வார்த்தைகளுக்கு மரியாதை இருக்காது. அவனிடம் நீ எந்த வார்த்தைகளைப் பேசினாலும் அது முற்றிலும் பலனற்றதாகவே இருக்கும். ஓ! கிருஷ்ணா, தீய மனம் கொண்ட இந்த இழிந்தவர்களுக்கு மத்தியில் அவர்களுடன் ஒன்றாக நீ அமர்வது எனக்குச் சரியாகத் தோன்றவில்லை. ஓ! கிருஷ்ணா, எண்ணிக்கையில் வலுவாக, நீதியற்றவர்களாக, மூடர்களாக, தீய ஆன்மா கொண்டவர்களாக இருக்கும் அவர்களை {கௌரவர்களை} எதிர்த்து அங்கே நீ பேசப்போவது எனக்குச் சரியாகத் தோன்றவில்லை.
அவர்கள் முதியோரை வழிபடாததன் விளைவாகவும், செழிப்பு, செருக்கு ஆகியவற்றால் குருடானதன் விளைவாகவும், இளமையின் செருக்கு மற்றும் கோபத்தாலும், அவர்களுக்கு முன்னிலையில் நீ வைக்கப் போகும் நல்ல அறிவுரையை அவர்கள் ஏற்கவே மாட்டார்கள். ஓ! மாதவா {கிருஷ்ணா}, அவன் {துரியோதனன்} பலமான படையைத் திரட்டியிருக்கிறான். மேலும், அவன் {துரியோதனன்} உன்மீது சந்தேகம் கொண்டிருக்கிறான். எனவே, அவன் உனது எந்த ஆலோசனைக்கும் கீழ்ப்படியவே மாட்டான்.
ஓ! ஜனார்த்தனா {கிருஷ்ணா}, தற்போதைய நிலையில், இந்திரன் தலைமையிலான தேவர்களே வந்தாலும், போர்க்களத்தில் தங்களை வீழ்த்த முடியாது என்ற உறுதியான நம்பிக்கையில் திருதராஷ்டிரர் மகன்கள் ஈர்க்கப்பட்டுள்ளனர். எப்போதும் விளைவுகளை உண்டாக்கும் உனது வார்த்தைகள், இது போன்ற நம்பிக்கையால் ஈர்க்கப்பட்டவர்களிடமும், காமம் மற்றும் கோபத்தின் தூண்டுதல்களை எப்போதும் பின்பற்றுபவர்களிடமும் எந்த விளைவையும் ஏற்படுத்தாது. தனது யானைப் படை, தேர்ப்படை மற்றும் வீரமிகுந்த காலாட்படை ஆகியவற்றிற்கு மத்தியில் இருக்கும் மூடனான தீய துரியோதனன், அச்சங்கள் அனைத்தும் விலகிய நிலையில், முழு உலகமும் ஏற்கனவே தன்னால் அடக்கப்பட்டதாகக் கருதுகிறான். உண்மையில், திருதராஷ்டிரர் மகன் {துரியோதனன்}, எந்த எதிரிகளும் அற்ற பரந்த பேரரசுக்காகப் பேராசைப் படுகிறான். எனவே, அவனிடம் சமாதானம் கொள்வது என்பது அடையப்பட முடியாதது ஆகும்.
தன் உடைமையாக இருக்கும் அனைத்தும் மாற்றமில்லாமல் தனதே என அவன் {துரியோதனன்} கருதுகிறான். ஐயோ, துரியோதனனுக்காகப் பூமியில் ஏற்படப்போகும் அழிவு அருகிலிருப்பதாகத் தெரிகிறதே. ஏனெனில், க்ஷத்திரிய வீரர்கள் அனைவருடன் கூடிய பூமியின் மன்னர்கள், விதியால் உந்தப்பட்டு, பாண்டவர்களுடன் போரிட விரும்பி ஒன்றாகச் சேர்ந்திருக்கிறார்கள். அந்த மன்னர்கள் அனைவரும் உன்னுடன் பகை கொண்டிருக்கின்றனர். ஏற்கனவே, அவர்கள் அனைவரும் உன்னால் தங்கள் உடைமைகளை இழந்தவர்களாகவும் இருக்கின்றர். உன்னிடம் கொண்ட அச்சத்தின் காரணமாக, அந்த வீர ஏகாதிபதிகள் அனைவரும் கர்ணனுடன் சேர்ந்து கொண்டு, திருதராஷ்டிரன் மகன்களுடன் {கௌரவர்களுடன்} ஒரு கூட்டணியை ஏற்படுத்தியிருக்கின்றனர். தங்கள் உயிரைத் துச்சமாக நினைக்கும் அந்த வீரர்கள் அனைவரும் துரியோதனனுடன் இணைந்திருக்கின்றனர்.
ஓ! தாசார்ஹ குலத்து வீரா {கிருஷ்ணா}, அவர்களுக்கு மத்தியில் நீ நுழைவது மெச்சத்தகுந்ததாக எனக்குத் தெரியவில்லை. ஓ! எதிரிகளைக் கலங்கடிப்பவனே {கிருஷ்ணா}, தீய ஆன்மாக்களைக் கொண்ட எண்ணற்ற உனது எதிரிகள் ஒன்றாக அமர்ந்திருக்கையில், அவர்களுக்கு மத்தியில் நீ எப்படிச் செல்வாய்? ஓ! வலிய கரங்களைக் கொண்டவனே {கிருஷ்ணா}, உண்மையில், தேவர்களாலும் வீழ்த்தப்பட முடியாதவன் நீ என்பதையும், ஓ! எதிரிகளைக் கொல்பவனே {கிருஷ்ணா}, உனது ஆண்மை மற்றும் புத்திக்கூர்மையையும் நான் அறிவேன். ஓ! மாதவா {கிருஷ்ண}, உன்னிடம் நான் கொண்ட அன்பானது, பாண்டுவின் மகன்களிடம் நான் கொண்டிருப்பதற்கு ஈடானதாகும். எனவே, நட்பு, மரியாதை மற்றும் எனது பாசத்தினாலேயே நான் இந்த வார்த்தைகளை உனக்குச் சொல்கிறேன். ஓ! தாமரை இதழ்களைப் போன்ற கண்களையுடையவனே {கிருஷ்ணா}, உடல்படைத்த அனைத்து உயிர்களின் உள்ளுறை ஆன்மாவாக இருக்கும் உன்னைக் காண்பதில் நான் அடையும் மகிழ்ச்சியை வெளிப்படுத்த என்ன தேவைதான் இருக்கிறது?" என்றான் {விதுரன்}.
அந்தப் புனிதமானவன் {கிருஷ்ணன் விதுரனிடம்} சொன்னான், "உண்மையில், பெரும் ஞானம் கொண்டவர் சொல்ல வேண்டியதே அஃது; உண்மையில், பெரும் முன்னறிவு கொண்டவர் சொல்ல வேண்டியதே அஃது; உண்மையில், உம்மைப் போன்ற ஒருவன், என்னைப் போன்ற நண்பனுக்குச் சொல்ல வேண்டியதே அஃது; உண்மையில், அறம், பொருள் மற்றும் இன்பம் ஆகியவற்றை நன்கு அறிந்த உம்மால் சொல்லத்தகுந்ததே அஃது; ஓ! விதுரரே, எனக்குத் தந்தையும் தாயும் போன்ற உம்மால் சொல்லத்தகுந்ததே அஃது. நீர் என்னிடம் கூறியது நிச்சயம் உண்மையானது; பாராட்டுக்குத் தகுதியானது; மற்றும் அறிவுக்கு இசைவானது. எனினும், ஓ! விதுரரே, நான் வந்ததற்கான காரணத்தைக் கவனமாகக் கேளும்.
ஓ! விதுரரே, திருதராஷ்டிரர் மகனின் {துரியோதனனின்} தீய தன்மையையும், அவன் தரப்பை அடைந்திருக்கும் க்ஷத்திரியர்களின் பகையையும் நன்கு அறிந்தே குருக்களிடம் நான் வந்திருக்கிறேன். யானைகள், தேர்கள் மற்றும் குதிரைகளுடன் கூடிய முழு உலகமும் பேராபத்தில் மூழ்கி மரணவலைக்குள் அகப்படுவதில் இருந்து அதை விடுவிப்பவன் பெரும் தகுதியை {புண்ணியத்தை} ஈட்டுவான். ஓர் அறச்செயலைச் செய்யத் தன் திறமைகளில் சிறந்தவற்றால் {இயன்றவரை} முயன்று, ஒரு மனிதன் தோற்றாலும், ஒருபுறம் அது தோல்வியாக இருந்தாலும், அந்தச் செயல் ஈட்டிய தகுதி {புண்ணியம்} அவனுடையதாகிறது, என்பதில் சிறு ஐயத்தையும் நான் கொள்ளவில்லை. ஒரு மனிதன் பாவம்நிறைந்த ஒரு செயலைச் செய்ய மனதில் நினைத்திருந்தாலும், அவன் அதை உண்மையில் செய்யவில்லையென்றால், அந்தச் செயலின் கெட்ட தகுதி {பாவம்} அவனுடையதாகாது என்பதைச் சாத்திரம் மற்றும் அறம் ஆகியவற்றை அறிந்தவர்கள் அறிவார்கள்.
ஓ! விதுரரே, போரில் கொல்லப்படப்போகும் குருக்களுக்கும், சிருஞ்சயர்களுக்கும் இடையில் சமாதானத்தைக் கொண்டுவர நான் உள்ளப்பூர்வமாக முயல்வேன். (அவர்கள் அனைவருக்கும் மேல் தொங்கிக் கொண்டிருக்கும்) பயங்கரமான பேராபத்து, குருக்களின் நடத்தையில்தான் தன் தோற்றத்தைக் கொண்டுள்ளது. ஏனெனில், துரியோதனன் மற்றும் கர்ணன் ஆகியோரின் நேரடி செயல்பாட்டின் காரணமாகவே, இந்த இருவரின் தலைமையில் பிற க்ஷத்திரியர்கள் அதைப் {அந்தப் பேராபத்தைப்} பின்தொடர்கிறார்கள். ஆபத்தில் மூழ்கப்போகும் ஒரு நண்பனைத் தனது வேண்டுதலின் மூலம் காக்க முயலாத ஒருவனை, இழிந்தவனாகவே கற்றோர் கருதுகின்றனர். தனது வலிமையில் சிறந்ததால் {இயன்றவரை} முயன்று, தன் நண்பனின் முடியைப் பற்றி இழுக்கும் அளவுக்குச் சென்றாவது, முறையற்ற செயலில் இருந்து அந்த நண்பனை விலகச்செய்ய முயல வேண்டும். இப்படி ஒருவன் {அந்த மனிதன்} செயல்படும்போது, அவனுக்குப் பழி நேராமல், புகழை அறுவடை செய்கிறான்.
எனவே, ஓ! விதுரரே, அறம் மற்றும் பொருளுக்கு ஏற்புடையதும், தற்போதைய பேரிடரை விலக்கவல்லதுமான நன்மையை விளைவிப்பதுமான எனது நல்ல ஆலோசனைகளைத் தனது ஆலோசகர்களுடன் சேர்ந்து ஏற்பதே திருதராஷ்டிரர் மகனுக்குத் {துரியோதனனுக்குத்} தகும். எனவே, திருதராஷ்டிரர் மகன்களுக்கும், பாண்டவர்களுக்கும், பூமியில் உள்ள அனைத்து மன்னர்களுக்கும் நன்மையைக் கொண்டு வரவே நான் உள்ளப்பூர்வமாக முயற்சி செய்வேன். (எனது நண்பர்களுக்கான) நன்மையைக் கொண்டுவர நான் முயலும்போது, துரியோதனன் என்னைத் தவறாக எடுத்துக் கொண்டால், நான் எனது மனசாட்சிக்கு நிறைவுடன் இருப்பேன். உறவினர்களுக்கிடையில் சச்சரவு உண்டாகும்போது, இடைநிலை வேலைகளை {மத்தியஸ்த வேலைகளை} ஏற்பவனே உண்மையான நண்பனாவான்.
நீதியற்றவர்களும், மூடர்களும், பகையாளர்களுமான அவர்கள் {கௌரவர்கள்}, 'கோபக்கார குருக்களும், பாண்டவர்களும், தங்களுக்குள் ஒருவரையொருவர் கொல்வதைத் தடுக்கத் தன்னால் {கிருஷ்ணனால்} முடியுமென்றாலும், கிருஷ்ணன் எந்த முயற்சியையும் மேற்கொள்ளவில்லை' என்று பின்னர்ச் சொல்லக்கூடாது என்பதற்காகத்தான் நான் இங்கு வந்திருக்கிறேன். உண்மையில், இருதரப்புக்கும் உதவி செய்யவே நான் இங்கே வந்திருக்கிறேன். சமாதானத்தைக் கொண்டுவர நான் முயற்சி செய்வதால், நான் மன்னர்கள் அனைவரின் நிந்தனையில் இருந்து தப்புவேன்.
அறம் மற்றும் பொருள் நிறைந்த எனது மங்கலகரமான வார்த்தைகளைக் கேட்ட பிறகும், மூடனான துரியோதனன் அதை ஏற்கவில்லையென்றால், அவன் {துரியோதனன்} தன் விதியையே {மரணத்தையே} அழைத்துக் கொள்வான். ஓ! உயர்ந்த ஆன்மா கொண்டவரே {விதுரரே}, பாண்டவர்களின் விருப்பங்களைத் தியாகம் செய்யாமல், என்னால் குருக்களிடம் {கௌரவர்களிடம்} சமாதானத்தை உண்டாக்க முடியுமென்றால், எனது நடத்தை உயர்ந்த தகுதியைப் {புண்ணியத்தைப்} பெற்றதாகக் கருதப்படும், கௌரவர்களும் மரண வலைகளில் இருந்து விடுதலை பெறுவார்கள்.
கெடுதியில்லாததும், நீதிக்கு இசைவானதும், அறிவு நிறைந்ததுமான நான் சொல்லப்போகும் வார்த்தைகளைத் திருதராஷ்டிரர் மகன்கள் கவனமாகக் கேட்டால், எனது நோக்கமான சமாதானம் எட்டப்படும். (அதற்குத் தூதனாக இருந்த) என்னைக் கௌரவர்கள் வழிபடுவார்கள். மறுபுறம், அவர்கள் {கௌரவர்கள்} எனக்குக் காயமேற்படுத்த முயன்றால், பூமியில் உள்ள அனைத்து மன்னர்களும் ஒன்றாகக் கூடி வந்தாலும், கோபமடைந்திருக்கும் சிங்கத்திற்கு முன் நிற்க இயலாத மான் கூட்டம் போல, அவர்கள் எனக்கு ஈடாக இருக்கமாட்டார்கள் என்பதை நான் உமக்குச் சொல்லிக் கொள்கிறேன்" என்றான் {கிருஷ்ணன்}.
வைசம்பாயனர் {ஜனமேஜயனிடம்} தொடர்ந்தார், "யாதவர்களுக்கு மகிழ்ச்சியை ஊட்டும் விருஷ்ணி குலத்துக் காளை {கிருஷ்ணன்} இவ்வாறு சொல்லிவிட்டு, தனது மென்மையான படுக்கையில் உறங்குவதற்காகப் படுத்தான்."
….
தொடரும்..
..
மகாபாரதம் தொடர் முழுவதும் படிக்க இந்துமதம் வாட்ஸ்அப் குழுவில் இணைந்திருங்கள்
No comments:
Post a Comment