அப்பனே!
யாரப்பா நீ?
மல்லர்களெல்லாம்
திறை செலுத்தும்
மாமல்லன் நான்!
பெயரோ வில்லிதாசன்!
இதனை விடப் பெருமையானது
நான் பொன்னாச்சியின் தாசன்!
வில்லிதாசரே!
நீர் என்ன காரியம் செய்தீர்?
கருடசேவையைப் பார்க்க
அனைவரும் கால்கடுத்து நிற்க,
அனைவரையும் தள்ளியபடி,
நடைபாவாடை விரித்தபடி,
குடையினைப் பிரித்தபடி,
இதில் உனக்கு வெட்கமில்லையா?
பெரியவரே!
இதற்கு பதில் சொன்னால்
அது உமக்குப் புரியாது!
நீரோ சந்நியாசி ஆவீர்!!
பரவாயில்லை!
தாராளமாகச் சொல்லுங்கள்!
அவளது கண்களைத்
தாங்கள் பார்த்ததுண்டா?
இதுவரை பார்க்கவில்லை!
பார்த்தாலும் என்ன இருக்கிறது?
கேவலம் மாமிசக் கண்கள்!!
அதனால்தான் சொன்னேன்!
அது உமக்குப் புரியாது!
மற்றவர்களின் கண்களைப் போன்றதல்ல
என்னவளின் கண்கள்!
அதன் அழகே தனித்துவமானது!
அதனை நான் காக்க வேண்டும்!
அதுவே எனக்கான கடமையாகும்!
அமுதம் வழியும் கண்கள் அவை!!
அத்தனைச் சிறந்ததுவா
உன்னவளின் கண்கள்?
கண்கள் என்பதா?
காந்தம் என்பதா?
மல்லனாய் இரும்பான
என் தேகமானது,
அவள் கண்கள் காட்டும்
திசையெல்லாம் தானாய் நகரும்!!
அய்யா!
அவளின் கண்கள்
கதைகள் பேசும்!
கவிதைகள் சொல்லும்!
சற்றே அவள் தன்
கண்களை மூடித் திறந்தால்
இருட்டாகிப் போவேன் நான்!!
ஓவியனும் வரைய முடியா
அழகானது அவள் கண்கள்!!
அன்றொருநாள்
காவிரிக் கரையோரம்
முதன் முதலாய் அவளின்
கண்களைத் தரிசித்தேன்!
பிறந்ததன் பலனை நான்
அன்றே அடைந்தேன்!!
அவள் மேலான
அடியேனின் காதலானது
கண்களில் தொடங்கி
கண்களிலேயே தங்கியது!!
கோயிலுக்கு அழகு
கோபுரம்தானே!
என்னவளுக்கு அவள்
கண்களே பேரழகு!!
மதயானை என்றே என்னை
மல்லர்கள் அழைப்பர்!
அவளது கண்களின் பள்ளத்தில்
தடுக்கி விழுந்த
மத களிறும் நானே!!
பகைவரின் தாெடைகளைக்
கிழித்தே போடும்
ஒரு வல்லியன் நான்!
அந்தக் கண்களை
அடியேன் தரிசித்த பின்
மெல்லியன் ஆனேன்!
அவளின் காதலனும் ஆனேன்!!
ஓ அப்படியா!
வில்லிதாசரே!
அவளது கண்களை விட அழகான
கண்களும் இருக்கின்றனவே!
வாய்ப்பே கிடையாது!
இருக்கவே முடியாது!
அடியேன் காட்டத் தயார்!
நீ காண்பதற்குத் தயாரா?
இதில் என்ன உள்ளது?
அந்தக் கண்களையும் பார்க்கிறேன்!
என்னவளின் கண்களுக்கு
அவைகள் ஈடாகாது என்பதையும்
தங்களுக்குக் காட்டுகிறேன்!!
வில்லிதாசரே!
உன்னவளின் கண்களை விட
ஆழமுள்ளதாயும்
கருமையானதாயும்
கடலினும் பெரியவையுமான
அந்தக் கண்களை
உனக்குக் காட்டினால்
என்ன செய்வாய் நீ?
அப்படிப்பட்ட கண்களை
நான் பார்க்க நேர்ந்தால்
அதற்கே அடிமையாவேன்!
வார்த்தை மாற மாட்டாயே?
மாற மாட்டேன்!
இது என்னவளின் கண்களின் மீது
சத்தியமான வார்த்தையாகும்!
அரங்கனின் சன்னதி நோக்கி
விரைந்து நடந்தார் இராமானுஜர்!
கருட சேவை முடிந்து
நம்பெருமாளும் உள் வந்தார்!
சேவார்த்திகள் எல்லோரும்
வெளியேறினர்!
அரங்கன் மட்டும் தனித்திருந்தான்!
வில்லியின் கைகளைப்
பிடித்துக் கொண்டு
அரங்கனின் கர்ப்பகிரகம் சென்றார்!
ஆண்டானும் பின் தொடர்ந்தார்!
ஆச்சரியப்பட்டார்
முதலியாண்டான்!
சில நாட்களுக்கு முன்
தான் எழுந்திருக்கவே
சிரமப்பட்ட எம்பெருமானார்,
சிம்மகதியில் அரங்கனின்
சன்னதி நோக்கி நடக்க
ஆச்சரியப்பட்டார் அவர்!!
உடையவரைக் கண்டதும்
கர்ப்பக்கிரக கதவுகள்
தானாய் திறந்தன!!
பார்!
இந்தக் கண்களைப் பார்!
அரங்கனின் முன்னே
வில்லியை நிறுத்தினார்!
அரங்கனை நோக்கினான்!
அர்ச்சா ஸ்வரூபியான அரங்கன்
கடலினும் பெரியவாய தன்
கண்களை அகல விரித்தான்!
வில்லியின் அப்போதைய நிலையை
வார்த்தைக்குள் அடக்க முடியாது!!
எம் முறை அரங்கம் சென்றாலும்
வில்லியை நினையுங்கள்!
வில்லியாய் உம்மை நினையுங்கள்!
அப்போது மட்டும்தான்
அந்தக் கண்களைப் பற்றியும்
அன்றைய வில்லியின்
நிலைமையைப் பற்றியும்
நம்மால் உணர முடியும்!
அப்போதும் எழுத முடியாது!!
என் அமுதனைக்
கண்ட கண்கள்
மற்றொன்றினைக் காணாவே!!!
பாணனின் பாசுரத்தினை
உடையவரே உரக்க ஒலிக்க,
ஐந்து இந்திரியங்களும்
உறைந்து போய் நின்ற வில்லி
சற்றே உடையவரை நோக்க,
நம்பெருமாளைப் போலே
அங்கே நின்றிருந்தார் அவர்!!
வேரற்ற மரம் போல
எம்பெருமானாரின் திருவடிகளில்
விழுந்தான் வில்லிதாசன்!!
தனது இரண்டு கரங்களால்
அவனைத் தூக்கி நிறுத்தினார்
எம்பெருமானார்!!
சுவாமி!
தாங்களா என்னை இப்போது
தூக்கி நிறுத்தியது?
மல்லனாய் நான் இங்கே
மாமிச மலையாய் நிலம் கிடக்க,
வயதால் தளர்ந்த நீங்கள்
என்னை எப்படித் தூக்கினீர்?
வில்லிதாசா!
சக்தி என்பது மனம் சம்பந்தப்பட்டது!
தேக சம்பந்தம் சக்தியாக ஆகாது!
நம்முள் அந்த மனவலிமையைத்
தருபவனே அரங்கன்!
அப்படியா!
அந்த சக்தியைப் பெற
மந்திரம் ஏதேனும் உண்டா?
கட்டாயம் உண்டு!
நீ கற்றுக் கொள்கிறாயா?
மந்திரங்களை
ரகசியம் என்பார்களே!
அப்படித்தான் இருந்தது!
திருக்கோட்டியூரில்
அது உடைந்து போய்விட்டது!
நீ கற்றுக் கொள்கிறாயா?
மிகவும் கடினமானதோ
சுவாமி?
எட்டே எழுத்துக்கள்!
எட்டுக்குள்ளே
அத்தனை சக்தியா சுவாமி?
ஆமாம் வில்லிதாசரே!!
அவரை மீண்டும் வணங்க
எத்தனித்த வில்லியை
இராமானுஜர் தடுத்தார்!
உம்மை இன்னொரு முறை சேவிக்க
அடியேனுக்கு அறுகதை இல்லையா?
அப்படியில்லை!
எத்தனை முறை வேண்டுமானாலும்
என்னை நீ சேவிக்கலாம்!
நீ ஒருமுறை சேவித்ததற்கே
அடியேன் உனக்கு
கடனாளியாகி விட்டேன் !
மீண்டும் மீண்டும் சேவித்தால்
அந்தக் கடன்களை அடியேன்
எப்படியடா தீர்ப்பேன்?
சுவாமி!
தாங்கள் சொல்வது
அடியேனுக்குப் புரியவில்லை!
சதைகளைக் கிழித்து
உடலின் உள் பார்க்கும் எனக்கு
வார்த்தைகளைக் கிழித்து
வாசிக்கத் தெரியவில்லையே?
வில்லிதாசா!
உன் கைகளைக் கூப்பிக் கொண்டு
பெருமாளைப் பாரேன்!
இப்போது நீ சரியாகச் செய்தாய்!
இரண்டு முறைகள் கைகளைத்
திரும்பத் திரும்ப கூப்புகிறோமா?
இல்லை சுவாமி!
நீ செய்ததற்கு பெயர் அஞ்சலி!
அம் ஜலயதி
இதி அஞ்சலி என்பார்கள்!
நாம் ஒருமுறை சேவித்தவுடன்
பெருமான் உனக்குக் கடனாளியாகிறான்!
உனது சுக துக்கங்களை
அவன் சுமக்க ஆரம்பிக்கிறான்!
மீண்டும் மீண்டும் நாம் அவனை
கடனாளி ஆக்கலாமா?
அப்படித்தான் சேவையும்!
நீ எத்தனை முறை சேவித்தாலும்
உனக்கான பலன்
முதல் சேவிப்பிலே கிடைப்பதுதான்!
இப்போது புரிந்து கொண்டாயா?
மீண்டும் என்னை
சேவிக்க வேண்டாம்!
வா வெளியே போகலாம்!
சுவாமி!
ஒரு சின்ன சந்தேகம்!
தாராளமாய் கேள்!
தாங்கள் அடியேனைத்
தொட்டுத் தூக்கினீர்கள்!
அதனாலென்ன வில்லிதாசா?
அடியேன் கீழ்குலத்தவன்!
அப்படியா?
அதோ பெருமானுக்குப் பக்கத்திலே
இங்கே நிற்பவர் யார் தெரியுமா?
திருப்பாணாழ்வார்!
அவர் குலத்திலே பஞ்சமர்!
அவரைத் தோளில் தூக்கிவரும்படி
லோகசாரங்கருக்கு
கட்டளையிட்டவன் அரங்கன்!
இன்று உன் கைகளைப் பிடித்து
அடியேனை நடக்கச்
செய்தவனும் அவனே!!
வில்லிதாசா!
அரங்கனுக்கு முன்
நாம் அனைவருமே சமம்!!
#எம்பெருமானார் (48)
#கோமான் #இரகுநாதன்#
ஸ்ரீவைஷ்ணவிஸம் முகநூல் 2லிருந்து எடுத்தது
No comments:
Post a Comment