Sunday, December 12, 2021

Smabar & I - Periyavaa

*மஹா பெரியவா தரிசன அனுபவங்கள் - நீங்க எல்லாரும் பெரிய ஞானிகள்!* 

பெரியவாளைச் சுற்றிலும் அடியார்கள் கூட்டம். ஒருபுறம் ஆண்கள்;இன்னொரு புறம்,பெண்கள்.

அன்றைய தினம் பெரியவாள்,இலேசான விஷயங்களைப் பேசி, அடியார்களை சிரிப்பு வெள்ளத்தில் ஆழ்த்திக் கொண்டிருந்தார்கள்.

திடீரென்று, ஆண்கள் பக்கம் திரும்பி,"உங்களில் யாருக்கு சமையல் செய்யத் தெரியும் என்று கேட்டார்கள். அடுக்களைப் பக்கம் எட்டிப் பார்த்திராதவர்கள் உள்பட, எல்லோரும், 'எனக்குத் தெரியுமே!' என்று ஒரு குரலாகச் சொன்னார்கள்.

"குழம்பு எப்படிச் செய்வே?" என்று அடுத்த கேள்வி.

முதலில் நின்றவர், ஆரம்பித்தார்; "புளியைக் கரைத்து, மிளகாய்ப் பொடியும் உப்பும் போட்டு, நன்றாகக் கொதி வந்ததும் இறக்கணும்."

அடுத்தவர்; முதலில்,கடுகு-மிளகாய் தாளித்துக் கொள்ளணும்.புளி-உப்பு-மிளகாய்ப்பொடி சேர்த்து, வெந்த பருப்பைப் போட்டு ஒரு கொதி வந்ததும், கறிவேப்பிலை-கொத்தமல்லித் தழை போடணும்..."

இன்னொருவர்;"புளி-மிளகாய் இரண்டையும் அம்மியில் அறைத்து உப்பு போட்டு, வெந்த பருப்பைச் சேர்த்து,பெருங்காயம் துளியூண்டு போட்டு வேக வைக்கணும்..."

.....இப்படியெல்லாம், அதி அற்புதமான முறைகளை ஒவ்வொருவராகச் சொல்லி முடித்தார்கள்.

பின், பெரியவாள் முறை வந்தது.

"நீங்க எல்லாரும்...பெரிய ஞானிகள்! அகங்காரத்தை மறந்தேவிட்டவர்கள்! நானும்கூட.... இன்னும் முயற்சி பண்ணிண்டிருக்கேன்...."

பெரியவாள் என்ன சொல்கிறார்கள்?

"ஜனங்கள் குழம்பிப் போவதற்குக் காரணம், தான் என்ற நினைவுதான். நீங்கள் எல்லோரும், தான் என்ற நினைவே இல்லாதவர்கள்! புளி-மிளகாய்-உப்பு-பெருங்காயம் மட்டும் நினைவில் இருக்கு; தான் என்ற எண்ணமே வரவில்லை".

ஞானிகள் நிலை இதுதானே. குழம்புக்கு தான் (காய்) சேர்க்காததை புரிந்து கொண்ட அடியார்கள், கயிலாய மலையின் அடிவாரத்துக் கற்சிலைகளாக நின்றார்கள்.

பெரியவா சரணம்!

 _தொகுப்பு: பெரியவா குரல்_ | https://t.me/perivakural

 *An initiative of Kanchi Periva Forum - www.periva.org | www.anusham.org | www.mahaswami.org*

No comments:

Post a Comment