Courtesy: Smt.Dr.Saroja Ramanujam
அத்யாத்ம ராமாயணம் -ஆரண்ய காண்டம்
அத்தியாயம் 6
ராவணன் மாரீசன் இருக்கும் இடம் அடைந்தான். அங்கு மாரீசன் முனிவர்களைப் போல் சடையும் மரவுரியும் தரித்து நிர்குணபிரம்மத்தின் தியானத்திலே அமர்ந்திருந்தான். ராவணனைக் கண்டதும் வரவேற்று உபசரித்து என்ன காரணமாகத் தன்னைக் காண வந்திருக்கிறான் என்று கேட்டான். தன்னால் செய்யமுடிந்த எதுவானாலும் பாபமற்றதாகவும் நியாயமாகவும் இருப்பின் செய்வதாகக் கூறினான்.
ராவணன் அதற்கு ராமன் தன்னுடைய அழகிய மனைவியுடன் காட்டுக்கு வந்திருப்பதாகவும் கரன் முதலியவர்களைக் கொன்று சூர்ப்பனகையை அங்க பங்கம் செய்ததாகவும் அதற்குத் தான் பழிதீர்த்துக் கொள்ள சீதையை அபகரிக்கப் போவதாகக் கூறி மாரீசன் மாய மான் உரு எடுத்து ராமனையும் லக்ஷ்மணனையும் ஆஸ்ரமத்தில் இருந்து வெகு தூரம் இழுத்துக் கொண்டு போக வேண்டும் என்று கூறினான். மாரீசன் அதைக் கேட்டு அதிர்ச்சி அடைந்தான்.
மாரீசன் ராவணனிடம் கூறிய பதில் வால்மீகி ராமாயணத்தில் உள்ளது போலவே அமைந்துள்ளது. அவன் கூறியதாவது ,
"ராவணா , இந்த ஆலோசனையை உனக்கு யார் கூறினாலும் அவர்களை உன் விரோதிகள் என்றறி. ராமனுடைய பராக்ரமத்தை நான் நன்கறிவேன்.அவ்னபெயரைக் கேட்டாலே என் மனம் நடுங்குகிறது. சிறுவனாக இருந்த போதே என்னை ஒரே பாணத்தினால் கடலில் விழச்செய்தவன். பின்னர் ஒரு சமயம் நான் பயங்கர மிருகம் உருக்கொண்டு அவன் மீது பாய்ந்தேன் அப்போதும் அவன் ஒரே பாணத்தினால் தாக்கி ஆகாய மார்க்கத்திலே சுழல வைத்து மீண்டும் கடலிலே மூழ்கச்செய்தான்.
அன்றிலிருந்து எங்கு காணினும் அவன் உருவையே கண்டு பயந்துள்ளேன். 'ர,' என்ற எழுத்துள்ள அதைக்கண்டாலும் அவன் நினைவு தோன்றி அச்சம் தருகிறது. ஆதலால் இங்கு வந்து தவக்கோலம் பூண்டு இருந்து வருகிறேன். ஆதலால் இந்த எண்ணத்தை விட்டு விடு. "
இவ்வாறு கூறிய மாரீசன் ராமன் ஸ்ரீமான் நாராயணனே என்றும் சாதாரண மனிதனல்ல என்று மகரிஷிகள் மூலம் அறிந்திருப்பதாகவும் அவனை எதிர்த்தால் ராவணன் அழிவது நிச்சயம் என்றும் கூறி அவனை இலங்கைக்கு திரும்புமாறு கூறினான்.
அதற்கு ராவணன் ராமன் தன்னை வதம் செய்ய அவதரித்துள்ளது உண்மையானால் அது அவ்விதமே நடக்கட்டும் என்று கூறி அவன் பரமாத்மாவானால் அவனால் வதம் செய்யப்பட்டு பரமபதத்தை அடையலாம் இல்லையேல் சீதையுடன் கூடி இருக்கலாம். ஆகையால் மாரீசன் தடை சொல்லாமல் புறப்படாவிடில் அவனைக் கொன்றுவிடுவதாக மிரட்டினான்.
மாரீசனும் இந்த அரக்கன் கையால் மடிவதைக் காட்டிலும் ராமன் கையால் மடிந்தால் மோக்ஷம் கிட்டும் என்றெண்ணி சம்மதித்து ராவணனுடன் தேரில் புறப்பட்டு ராமனுடைய ஆஸ்ரமத்தின் சமீபம் சென்றான். அங்கு ஒரு பொன்மான் வடிவெடுத்து ரத்னங்கள் கூடிய கொம்புகள், மனிமயமான குளம்புகள் நீலமணி போன்ற கண்ங்கள் இவற்றோடு பார்ப்பவர் மனம் கவருமாறு மின்னலைப் போல் அங்கும் இங்கும் துள்ளி விளையாடினான்.
No comments:
Post a Comment