Sunday, December 12, 2021

Yadavabbyudayam part5 in Tamil

Courtesy: Smt Dr. Saroja. Ramanujam
யாதவாப்யுதயம் - அத்தியாயம் 5

பிருந்தாவனத்தில் கோடை காலம் ஆரம்பித்தது. கோடையிலும் காட்டிலுள்ள மரங்கள் கண்ணனின் கீதத்தால் வளர்ந்தவைபோல் செழிப்புற்று மாடுகளுக்கு குடையாக விளங்கின. பெருங்காற்று மரங்களை முறிப்பது, சூரியனால் நீர் உஷ்ணமாவது, காட்டுத்தீ கொளுத்துவது போன்ற  கஷ்டங்கள் இன்றி கோடை இன்பமாகவே இருந்தது. கண்ணனென்ற காளமேகத்தின்  அமுத வெள்ளத்திற்கு ஒப்பான  மேனி ஒளியால் மாடுகள் கோடையின் கொடுமையின்றி ஆனந்தமாக மேய்ந்தன.

பிறகு மாரிக்காலம் ஆரம்பித்தது. மலைகள் மழை மேகங்களால் அபிஷேகமும் மின்னல்களால் நீராஜனமும் செய்யப்பட்ட மன்னர்கள் போல் விளங்கின. தேசிகரின் மழைக்கால வர்ணனை காளிதாசனின் வர்ணனை போல் கவித்துவம் நிரம்பி காணப்படுகிறது.  

 மேகங்களின் வரிசை மன்மதனின் சேனைஎன விளங்கிற்று. மின்னலே கத்தியொளியாகவும்,இடியே சிங்கநாதமாகவும் , வான்வில் பெரும் தனுஸ் போன்றும், கொக்குகளின் வரிசை த்வஜம் போன்றும்  இருந்தது. மன்மதன் மின்னல் கொடிகளாகிய நாட்டிய ஸ்திரீகளை வானத்தில் ஆடச்செய்வது போலவும் இடிகளே மிருதங்க ஒலியாகவும்  நவரசம் கொண்ட மன்மதனின் நாட்டியத்தின் அரங்கமாக வானம் விளங்கிற்று. 

இங்கு நவரசம் என்பது புதிய ஜலங்கள் என்று கொள்ளலாம் . நவம் என்பது ஒன்பது அல்லது புதியது என்று இரு பொருள் கொண்டது. இது வடமொழியின் சிறப்பு. 

அதிக மழையான சமயத்தில் கோவர்தன மலையின் குகைகளில் கோபர்கள் தங்கும்படி கண்ணன் செய்தான். பிறகு கண்ணனின் சங்கல்பத்தாலே மழை நின்றது. இதை தேசிகர் கண்ணன் தன் இரண்டு நேத்திரங்களாகிய சந்த்ரசூர்யர்களை மேகங்களாகிய கைகளை பரப்பி மறைக்கின்ற விளையாட்டை  நிறுத்தினான் என்கிறார்.

அடுத்து சரத்கால வர்ணனை . இதை வர்ணிக்கும் தேசிகர் வேதாந்தாச்சர்யர் என்னும் பெயருக்கிணங்க வெளுப்பும் கறுப்புமான மேகங்கள் வானில் உலாவுவது புதிதாக விவேகம் பெறுகின்றவர்களுடைய மனம்  முதலில் சில சந்தேகங்கள் தீராமல் தடுமாறுகின்றதை ஒத்து இருந்தது என்கிறார்.

பகவானின் யோக நித்திரை  போல் காணப்பட்ட மேகக்கூட்டமானது மறைந்து சரத் ருது தொடங்கிற்று. மேகங்கள் உள்ளும் புறமும் வெளுத்த சாதுக்களை ஒத்திருந்தது. மானசரோவரில் இருந்து திரும்பிய அன்னங்கள் சாதுர்மாஸ்யம் முடிந்து திரும்பி  வரும் யதிகளை ஒத்திருந்தது.

சரத் காலத்தில் யமுனையின் சிறப்பை அத்புதமாக வர்ணிக்கிறார். எளிதில் இறங்கி நீராடக் கூடியதாகவும் , தூயதாகவும், இனியதாகவும், பாபத்தை போக்குவதாகவும்  இருந்த யமுனையை கண்டு  அது  அவனுக்கு பக்தர்களின் மனதை நினைவூட்டியதால் கண்ணன் ஆனந்தமுற்றான்.  

இது எப்படி என்று பார்த்தோமானால பக்தர்கள் உள்ளமும் நல்லோர்களால் சுகமாக நெருங்கத் தக்கவையாக இருக்கும். துர் எண்ணங்கள் இல்லாமையால் அழுக்கற்றதாக இருக்கும் . இனியதாகவும் அமைதியுடனும் பிறர் பாபங்களை போக்கும் நல்ல  எண்ணங்கள் கொண்டதாகவும் இருக்கும்.

நாள் தோறும் யமுனையில் தண்ணீர் வடிந்து வந்தது. வடிந்து வந்த அலைகளால் ஏற்பட்ட கோடுகள் தாமரைக் காட்டிற்கு வரும் மகாலக்ஷ்மிக்காக ஏற்படுத்தப்பட்ட படிகள் எனத் தோன்றிற்று.

மழைக் காலம் என்பது பகவானின் யோகநித்திரையை ஒக்கும். அப்போது எல்லாமே அவனுள் அடங்குகிறதுது. சரத் காலம் என்பது மறுபடி சிருஷ்டி தொடங்குவதைக் காட்டுகிறது. ஏனென்றால் மழைக்காலத்தில் ஒன்றும் நடைபெறுவதில்லை. எல்லாம் உள்ளே ஒடுங்குகிறது. மறுபடி சரத் காலம் வந்த பின் எல்லாம் தொடங்குகின்றது.

இங்கு ஒரு அத்புதமான ஸ்லோகம் திருப்பாவை பாசுரத்தை நினைவூட்டுகிறது.
லக்ஷ்மி தேவி பூதேவியுடன் பகவான் பள்ளி கொள்கையில் அவன் பாதத்தை பற்றுகிறாள். அவன் கண் விழிக்கும் தருணம் முதல் கடாக்ஷம் தங்கள் மேல் விழ வேண்டும் என்பதற்காக. அதற்காக அவள் தன் கையில் உள்ள தாமரையைக் கீழே வைத்துவிடுகிறாளாம்.   ஏனென்றால் வேத மணமுள்ள அவன் திருவடி தாமரையைப்போல் இல்லாமல்  அழிவற்றதும் அற்புதமும் ஆன பரிமளம் கொண்டது. 
 
முதல் பார்வை தங்கள் மேல் விழ வேண்டும் என்று திருமகளும் நிலமகளும் வேண்டுவது ஏன்? அவன் பார்வை நம் முன் விழுந்தால் நம் குற்றங்களைக் கண்டு அருளமாட்டானோ என்று நமக்காக அவனருளை வேண்டும் கருணையே. 

அங்கண் மா ஞாலத்து என்ற திருப்பாவை பாசுரம் நினைவுக்கு வருகின்றதல்லவா? அதில் கோதை மெல்ல மெல்ல விழிக்கும் முதல் பார்வை தங்கள் மேல் விழ வேண்டும் என்று கோருகிறாள். அவள் பூதேவியின் அவதாரம் அல்லவா? 

பிறகு கோபர்கள் இந்திர பூஜைக்கான ஆயத்தம் செய்யத்தொடங்கினர். அதை நிறுத்தி கோவர்தன பூஜை செய்யும்படி கண்ணன் கூறுவது அடுத்த அத்தியாயம். இது சிறப்பு வாய்ந்தது. கவித்வம் நிறைந்தது.

No comments:

Post a Comment