Courtesy:Smt.Dr.Saroja Ramanujam
யாதவாப்யுதயம் - அத்தியாயம் 4 தொடர்ச்சி
கண்ணன் உரலை இழுத்துக்கொண்டு போகையில் அது இரு மரங்கள் நடுவில் அகப்பட்டுத் தடுக்கப்படுகிறது. அவன் மேலும் இழுக்க முயற்சிக்கையில் அந்த இரு மரங்கள் முறிந்து விழ குபேரனின் புதல்வர்களாகிய நளகூபரன் மணிகிரீவன் இருவரும் நாரதரின் சாபத்தால் மரங்களாக சபிக்கப்பட்டு அதன் முடிவு கண்ணனின் சேர்க்கையால் ஆகும் என்று அருளியதை ஒட்டி இப்போது சுய உருவம் அடைந்தனர்.
பாகவதம் கூறுகிறது,
"நாரதர் எனக்கு பிரியமான பக்தர். இந்த இருவரின் தந்தையாகிய குபேரனும் அவ்வாறே . ஆகையால் நாரதரின் வாக்கை உண்மையாக்க இவர்களை சாபத்திலிருந்து விடுவிக்கிறேன்" என்று எண்ணினானாம்.
ப்ரஹ்லாதனின் வாக்கை மெய்ப்பிக்க அன்று தூணிலிருந்து வெளிப்பட்டவன் இன்று நாரதர் வாக்கை மெய்ப்பிக்க உரலில் கட்டுண்டான் . என்னே அவன் கருணை!
பூதனை சகடாசுரன் முதலிய தீங்குகளைக் கண்டு கோபர்கள் கோகுலத்தை விடுத்து பிருந்தாவனம் சென்றனர். கிருஷ்ணன் தன் சங்கல்பத்தினால் ப்ருந்தாவனத்தை வளம் நிறைந்ததாகச் செய்தான்.
தேசிகர் கூறுகிறார் , எந்த மனத்தைக் கொண்டு ஓஷதிகளுக்கு அதிபதியாகவும் உலகுக்கு ஆனந்தத்தை அளிப்பவனாகவும் உள்ள சந்திரனை படைத்தானோ அந்த மனத்தினாலே ஆனிரையின் க்ஷேமத்தை விரும்பி பிருந்தாவனத்தை செழிப்புறச் செய்தான்.
இவ்வாறு பசுவே தனம் என்றிருக்கும் ஆயர்கள் வம்சத்திற்கு சந்திரனான கண்ணன்(கோதனவம்ச சந்த்ர:) தன் பொங்கும் அலைகள் போன்ற கடாக்ஷத்தினால் பிருந்தாவனத்தை புற்களும் பூக்களும் பழங்களும் நிறைந்ததாக ஆக்கினான்.
இனிய புற்களும் கற்களும் முட்களும் இன்றி மிருதுவான நிலங்களும் கொண்ட அந்த பிருந்தாவனம் கோபர்களுக்கு ஆனந்தத்தை விளைவித்தது. மரங்கள் கற்பகதருவுக்கு மேலாக பலனை அளித்தன.
இவ்வாறு பரமபதத்திற்கு மேலாக இருந்து பிருந்தாவனம்.
பெரியாழ்வார் கூறியபடி 'திவத்திலும் பசுநிரை மெய்ப்பு உவத்தி ,' என்று பகவான் வைகுண்டத்தையும் விட்டு பசு மேய்ப்பதில் ஈடுபாடு கொண்டு பூலோகம் வந்தான் என்பது போல் தோன்றியது.
தேசிகர் த்ருணாவர்தன் பகாசுரன் இவர்களை அழித்ததை சுருக்கமாகக் கூறிவிட்டு கோப கன்னியர் பாவை நோன்பு நோற்றதையும் கோபி வஸ்த்ராபஹரணத்தையும் விவரிக்கிறார். அதை அடுத்து காணலாம்.
No comments:
Post a Comment