courtesy:Smt.Dr.Saroja Ramanujam
யாதவாப்யுதயம் -அத்தியாயம் 4 தொடர்ச்சி
அடுத்து கிருஷ்ணனும் பலராமனும் பசுக்களை மேய்க்கச் செல்லும் காட்சி.
நந்தகோபர் கண்ணனை பசு மேய்க்க அனுப்புகையில் யசோதை கண்ணனின் மெல்லிய பாதங்கள் கல்லிலும் முள்ளிலும் நடந்தால் நோகுமே என்று வருந்தினாளாம். இங்கு பெரியாழ்வாரின் "குடையும் செருப்பும் கொடாமே ----கொடியேன் என் பிள்ளையை போக்கினேன் எல்லே பாவமே ," என்ற பாசுரம் நினைவுக்கு வருகிறது.
வேதங்களைக் காப்போன் மேய்ப்பவனாக ஆனபோது வேதங்களே பசுக்களாக ஆனவாம். தேசிகர் கூறுகிறார்,
கோபாயமானே புருஷே பரஸ்மின் கோரூபதாம் வேதகிரோ பஜன்த்ய:
பாவை: அசேவந்த பதம் ததீயம்
ஸ்தோபப்ரதிச்சந்தநிபை: ஸ்வசப்தை:
தங்களைக் காக்கும் பரமபுருஷன் இடையனானபோது வேத வாக்குகள் பசுவாக உருக்கொண்டு 'ஹும்பா' என்ற ஒளியோடு அவன் திருவடிகளைத் தொட்டு மகிழ்ந்தன.அது ஸாமகானத்தின்போது சொல்லப்படும் ஹும் ஹாஉ போன்ற சொற்களுடன் வேதங்களே பகவானின் திருவடியில் தங்களை அர்ப்பணம் செய்வது போல இருந்தது.
உலக நாயகனான் கண்ணன் அறியாச்சிறுவன் போல் பசுக்களை கட்டுவதும் விடுவதும் செய்கின்றவனாய் ஜீவர்களின் பந்தமோக்ஷத்திற்கு அதிபன் என்பதை தெரிவிப்பவன் போல் காணப்பட்டான்.
காலால் மெறித்தும் நாக்கால் நெருடியும் விளையாடுகின்ற கன்றுகளின் அன்பைக் கொண்டாடுகின்றவனாய் (வாத்சல்யசிக்ஷாம் இவ வாசுதேவாத்) வாத்சல்யம் என்ற குணத்தை பசுக்களுக்கு கற்பிப்பது போல இருந்தான்.
தோழர்களான இடைப் பிள்ளைகள் பசி எடுத்த போதெல்லாம் மதுரமாகவும் தேன் பெருகியதுமான தயிர் அன்னத்தை தங்களுக்காக தன் கரத்தாமரையில் வைத்துள்ள அவனைக் கண்டு களித்தனர். அவர்கள் காட்டில் உள்ள இனிய கனிகளைக் கொணர்ந்து தருகையில் முதலில் பலராமனுக்கு அளித்து மிகுதியை தானும் தன நண்பர்களோடு உண்டு அனுபவித்தான். (சேஷனின் சேஷம்)
ராமக்ருஷ்ணர்களாகிய இருவராலும் காக்கப்பட்ட அந்த பிருந்தாவனமானது சிறப்பாக விளங்கிற்று. கொடிய கோடையிலும் ஆழமான பொய்கைகளுடன் குறைவற்ற புற்களுடன் அடர்ந்த நிழலுடன் பசுக்களும் கன்றுகளும் உறங்கவும் இளைப்பாறவும் உகந்ததாயிருந்தது.
நாராயணனே தன் புஜம் போன்ற பலராமனுடன் காக்கும்போது வியாதியினால் வருத்தமோ அசுரர்களிடமும் காட்டு மிருகங்களிடமும் பயமோ அங்கு இல்லை. மழையின்மை , வெள்ளப பெருக்கு முதலிய இயற்கை இன்னல்களும் இல்லை. அதனால் ஆயர்கள் நான்கு யுகங்களிலும் காணாத செழிப்பையும் ஆனந்தத்தையும் அடைந்தனர்.
இந்த இடத்தில் தேசிகர் விஷ்ணுவின் கிரீடம் பலியினால் அபகரிக்கப்பட்டு அதை கருடன் கிருஷ்ணாவதாரத்தில் மீண்டும் கொண்டுவந்து செர்ப்பித்ததைக் கூறி யக்ஞ பத்னி உபாக்யானத்தையும் சுருக்கமாகக் கூறி மீண்டும் கண்ணன் ஆனிறைகளுடன் இன்புற்றிருந்ததையும் பின்னர் அவன் காட்டில் இருந்து திரும்பி வருவதையும் வர்ணிக்கிறார். அதை அடுத்து காணலாம்.
No comments:
Post a Comment