Wednesday, September 29, 2021

Parivattam Sanyasi - Periyavaa

*மஹா பெரியவா தரிசன அனுபவங்கள் - தலைப்பாகை சாமியார்*

சொன்னவர்-ஸ்ரீமடம் பாலு

தொகுத்தவர்-டி.எஸ்.கோதண்டராம சர்மா

"பெண்ணுக்குக் கல்யாணம். மடத்திலேர்ந்து ஏதாவது உதவி செய்யணும்...."

ஏழைத் தம்பதிகள், அம்மாள் கழுத்தில் மஞ்சள் சரடு, மெல்லியதாக ஒரு வடம் செயின். இவர்களுக்கு உதவி செய்யவேன்டியதுதான்.

"நான் ஒரு சந்நியாசி, ஒரு பைசாவைக்கூட கையால் தொட்டதில்லை.என்னிடம் போய் பண உதவி கேட்கிறாயே!" என்று வெளிப்படையாகப் பேசிக் கொண்டிருக்கும் போதே அந்தரங்கத்தில் திட்டம்.

அதேசமயம், காமாட்சி கோயில் தலைமை ஸ்தானீகர் பிரசாதம் கொண்டு வந்தார். முதலில், பெரியவாளுக்குப் பரிவட்டம் கட்டினார். பின்னர், குங்குமப் பிரசாதம் சமர்ப்பித்தார்.

பெரியவாள் பரிவட்டத்தைக் கழற்றி, பெண் கல்யாணத்துக்கு உதவி கேட்டு வந்தவரை சுட்டிக்காட்டி "அவருக்குக் கட்டு" என்று உத்தரவிட்டார்கள்.

யாசகம் கேட்டு வந்தவருக்கு அடித்தது யோகம்!

பெரியவாள் குங்குமப் பிரசாதத்தையும் அவரிடமே கொடுத்து,"எல்லோருக்கும் நீயே கொடு" என்றார்கள்.

திமுதிமுவென்று மார்வாடிக் கூட்டம் உள்ளே நுழைந்தது. திருத்தலப் பயணம்.வாடகை வாகனத்தில் வந்திருந்தார்கள்.

பரிவட்டத்துடன், எதிரே குங்குமப் பிரசாதத்துடன், உட்கார்ந்திருந்தவர்தான், ஸ்ரீ காமகோடி பீடாதிபதி என்று நினைத்து, காலில் விழுந்து, இருநூறும், முன்னூறுமாகக் காணிக்கை செலுத்தினார்கள். யாசகர் (பெரியவா முன்னரே சொல்லியிருந்தபடி) எல்லோருக்கும் குங்குமம் இட்டுவிட்டார்.

இந்த லீலா நாடகம் நடந்து முடிந்ததும் ,பெரியவாள் எழுந்து வந்து, மார்வாடிகளிடம் பேசி, ஆசீர்வதித்து,பிரசாதமாகப் பழங்களைக் கொடுத்தார்கள்.

"ஒரு பைசாவைக் கூட கையால் தொட்டதில்லை" உண்மைதான். ஆனால் கல்யாணத்துக்கு வேண்டிய பணம் கிடைத்துவிட்டது - தலைப்பாகை சாமியாருக்கு!

*பெரியவா சரணம்!*

_தொகுப்பு: பெரியவா குரல்_ | https://t.me/perivakural

*An initiative of Kanchi Periva Forum -* www.periva.org | www.anusham.org | www.mahaswami.org

No comments:

Post a Comment