கடவுளின் குரல்: தொகுப்பு -ஸ்ரீராமஜெயம்
10/03/2021 குமுதம் இதழிலிருந்து..
"கண்டத்திலிருந்து பக்தனைக் காத்த காஞ்சி மகான்!"
மகாபெரியவருடன் சதாசர்வகாலமும் இருக்கும் வாய்ப்பைப் பெற்ற அணுக்கத் தொண்டர்களுள் ஒருவர், ஸ்ரீகண்டன்.
மகான் தனது அன்றாடச் செயல்களைத் தொடங்குவது முதல் இரவு நித்திரைக்குச் செல்லும்வரை அத்தனை விஷயங்களிலும் அவரோடு இருப்பார் அவர்.
ஒருநாள், சோதனையாக ஒரு சங்கடம் அவருக்கு நேர்ந்தது. ஸ்ரீமடத்து வேலையாக ஸ்ரீகண்டன் கொஞ்சம் வெளியே சென்றிருந்த நேரத்தில், மகாபெரியவர் திடீரென்று ஒரு திருக்கோயிலுக்கு யாத்திரை புறப்பட்டுவிட்டார். சென்ற வேலை முடிந்து மடத்திற்குத் திரும்பிய ஸ்ரீகண்டன், மகான் தல யாத்திரை சென்றுவிட்டதை அறிந்தார்.
மகான் ஏன் இப்படித் தான் வருவதற்குள் யாத்திரை புறப்பட்டுவிட்டார்? ஒருவேளை, தான் உடன் வரவில்லை என்பதையே அவர் கவனித்திருக்க மாட்டாரோ! என்றெல்லாம் மருகிக் கொண்டிருந்தார், ஸ்ரீகண்டன்.
அன்றிரவு சரியாகக் கூட தூங்காமல், மனதுக்குள் மகானையே நினைத்தபடி, "என்னை இப்படி விட்டுவிட்டுப் போய்விட்டீர்களே...நான்தான் உங்களையே நினைத்துக் கொண்டிருக்கிறேன்..உங்களுக்கு என் நினைவாவது இருக்கிறதா? இருந்திருந்தால், எங்கே இவனைக் காணோம் என்றாவது நினைத்திருப்பீர்களா?" என்றெல்லாம் மனதுக்குள்ளேயே புலம்பிக் கொண்டிருந்தார்.
மறுநாள், விடியற்காலையில் எழுந்தவர், தினசரி கடமைகளை முடித்துவிட்டு, உக்ராண அறையின் (சமையலறை) ஒரு மூலையில் இருந்த திருகையில் ஸ்ரீமடத்துக்குத் தேவையான மாவினை, திரிக்கத் தொடங்கினார்.
அந்த சமயத்தில் வேகவேகமாக ஓடி வந்தார், ஒரு தொண்டர். மகாபெரியவரோடு திருக்கோயில் யாத்திரைக்குச் சென்றிருந்தவர் அவர்.
அவ்வளவு பரபரப்பாக அவர் ஓடிவந்ததைப் பார்த்ததும் என்னவோ ஏதோ என்று திகைப்போடு பார்த்தார்கள், பலர்.
மடத்தின் உக்ராண அறையை நெருங்கிய அந்தத் தொண்டர், "ஸ்ரீகண்டன் எங்கே..ஸ்ரீகண்டா..ஸ்ரீகண்டா..என்ன செஞ்சுண்டு இருக்கே...எங்கே இருந்தாலும் உடனே எழுந்து வெளியே வா...!" என்று உரக்கக் குரல் எழுப்பியபடியே உக்ராண அறைக்குள் நுழைந்தார்.
மாவு அரைத்துக் கொண்டிருந்த ஸ்ரீகண்டன் காதில் அது விழுந்ததும், "இதோ மாவரைத்துக் கொண்டிருக்கிறேன்..இரு.. கையை அலம்பிவிட்டு வருகிறேன்...!" என்று குரல் கொடுத்தார்.
அவர் அப்படிச் சொன்ன நொடியிலேயே ஓடி வந்த தொண்டர், "ஸ்ரீகண்டா கையெல்லாம் அலம்ப வேண்டாம். இப்பவே உடனடியா வெளியே வா...மகாபெரியவா உன்னைக் கூப்பிடறார்!" என்று கொஞ்சம் படபடப்பாகவே குரல் கொடுத்தார்.
மகாபெரியவா கூப்பிடறார் என்ற வார்த்தை காதில் கேட்டதோ இல்லையோ, கொஞ்சமும் தாமதிக்காமல், கையில் அப்பிக் கொண்டிருந்த மாவு தெறிக்க அப்படியே ஓடிவந்தார், ஸ்ரீகண்டன்.
அடுத்த நொடி நடந்தது, அந்த விபரீதம்!
இவ்வளவு நேரம் ஸ்ரீகண்டன் எங்கே உட்கார்ந்து மாவு திரித்துக் கொண்டிருந்தாரோ சரியாக அந்த இடத்தில், உத்தரத்தில் இருந்த பெரிய கட்டை ஒன்று, "தடால்" என்ற பெரும் சத்தத்தோடு, முறிந்து விழுந்தது.
அதிர்ந்துபோனார்கள் அத்தனை பேரும். குறிப்பாக, ஸ்ரீகண்டன் அப்படியே ஆடிப்போனார்.
மகாபெரியவர் கூப்பிட்டதாக வந்தவர் மட்டும் தன்னைக் கூப்பிடவில்லை என்றால், என்ன ஆகியிருக்கும் என்று நினைத்தார், நடுங்கினார்.
வந்தவரின் கையைப் பிடித்துக்கொண்டு, "மகாபெரியவர் என்ன சொன்னார்?" என்று கேட்டார்.
"நேத்து சாயந்தரம் நாலு மணி இருக்கும். என்னைக் கூப்பிட்ட பெரியவா, நாளைக்குக் கார்த்தால விடிஞ்சதும் நீ எழுந்து வேகமா ஸ்ரீமடத்துக்குப் போ..! அங்கே ஸ்ரீகண்டன் என்ன செஞ்சுண்டு இருந்தாலும் அப்படியே விட்டுவிட்டு உடனே வெளியில வரச்சொல்லு. அதுவும் நான் சொன்னேன்னு கூப்பிடு!" அப்படின்னார். அதான் உன்னை உடனடியா கூப்பிட்டேன்.
வந்தவர் சொல்லச் சொல்ல, சிலிர்த்துப் போனது ஸ்ரீகண்டனுக்கு. "என் நினைவாவது உங்களுக்கு இருக்கிறதா? என்று நினைத்தோமே..அந்த மகானுக்கு நம் மீது எவ்வளவு அக்கறை இருந்தால், எனக்கு வரப்போகிற கண்டத்தை முன்கூட்டியே தெரிந்து கொண்டு, காப்பாற்றுவதற்கு இவரை அனுப்பி இருப்பார்!" என்று மனதுக்குள் நெகிழ்ந்தவர், உடனே புறப்பட்டார்.
கண்களில் நீரத் தளும்ப, மகான் திருவடிகளில் சென்று விழுந்தார். "உன் ஞாபகம் எப்பவும் எனக்கு இருக்கு!" என்பதுபோல், திருக்கரம் உயர்த்தி அவரை ஆசிர்வதித்தார், மகான்.
"ஹர ஹர சங்கர! ஜய ஜய சங்கர! காஞ்சி சங்கர! காமகோடி சங்கர!"
"மகாபெரியவா சரணம்!! குருவே சரணம்!!"
"ராம் ராம் ராம் ராம் ராம் ராம் ராம் ராம் ராம்!!"
No comments:
Post a Comment