Courtesy:Smt.Dr.Saroja Ramanujam
யாதவப்யுதயம் -அத்தியாயம் 3
அத்தியாயம் 3
சர்வேச்வரனாகிய சூரியன் உதயமான போது உலகங்கள் உறக்கக் கலக்கம் இன்றி உணர்வு பெற்றன. திக்குகள் இருள் விலகி நன்கு விளங்கின. சுவர்க்கத்தில் அப்சரஸ்கள் ஆட வாத்யங்கள் முழங்க பத்து திக்குகளிலும் ஜயஜய என்ற அசரீரி வாக்கு உண்டானது. மேகங்கள் திக்கஜங்கள் துதிக்கையிலிருந்து நீரை இரைப்பது போல, எங்கும் தூவி முழங்கின. ஜீவர்கள் மனதில் இருந்த கலக்கமெல்லாம் ஒன்று சேர்ந்து அருகலேல்லாம் கூடி கடலில் விழுவதைப்போல கம்சனின் மனதில் புகுந்தன.
வசுதேவர் மூன்றாவது கடன் ஆகிய பித்ரு ருணத்திலிருந்து விடுபட்டதைப் போல் அவருடைய விலங்குகள் விடுபட்டன. கண்ணன் தேவகியின் மடியில் இந்திரநீலக்கல்லைத் தாங்கி நிற்கும் மேருமலையின் சிகரத்தைப் போல் காணப்பட்டாள்.
ஒரு அழகான ஸ்லோகம்,
வித்ருத சங்க ரதாங்க கதாம்புஜ: சபலித: சுபயா வநமாலையா
பிதுரசூத முதம் ப்ருதுக: ததா ஜலதிபிம்பநிபோ ஜனநீத்ருத: (யாத.3.13)
தாயான தேவகியின் மடியில் இருந்த கடல் வண்ணனாகிய பகவான் ,சங்கம் சக்கரம், கதை, தாமரை இவைகளைத் தரித்து சிறிய கடல் போலத் தோன்றி தந்தைக்கு ஆனந்தத்தை விளைவித்தார்.
அதைக்கண்ட வசுதேவர் பகவானை துதிக்கலானார்.
பகவான் வேத ஸ்வரூபன். அவன் திவ்ய மங்கள விக்ரகம் வேதாந்தத்தில் (உபநிஷத்) விளங்குவதொன்று. சுத்தசத்துவமான பரம்பொருள் உலகை உய்விக்க ,கடலில் காற்றினால் கிளப்பப்பட்டு பல அலைகள் எழுவது போல பல அவதாரங்கள் எடுக்கிறான்.
இவ்வாறு துதித்த வசுதேவர் அசுரர்கள் அவனை சாமான்ய மனிதனாக எண்ணி எதிர்த்து அழிய வேண்டும் என்பதால் தன் தெய்வ உருவத்தை மறைத்துக் கொள்ளும்படி வேண்டினார்.
உடனே பகவான் அவர் அஞ்சுவதைப் பார்த்துத் தன்னை கோகுலத்திற்கு எடுத்துச் சென்று விட்டுவிட்டு அங்குப் பிறந்துள்ள பெண் குழந்தையை எடுத்துன் வருமாறு கூறி சாமான்ய மனிதக் குழந்தையாக மாறினார்.
அவர் சொல்படி வசுதேவர் குழந்தையைக் கையில் எடுத்துக்கொண்டு புறப்படுகையில் சிறைக் கதவுகள் தாமாகத் திறந்து கொண்டன. காப்போரெல்லாம் அசைவின்றி சிலை போல ஆயினர். வீதியில் வந்ததும் கண்ணனின் மேனி ஒளியால் திக்குகள் பிரகாசமாக விளங்கின. வேதமூர்ததியான கருடன் எம்பெருமானைச் சுற்றி வட்டமிட , ஆதிசேஷன் குடைபிடிக்க சந்திரனால் நேர்வழி காண்பிக்கப்பட்டு வசுதேவர் யமுனையாற்றை வந்தடைந்தார். ( இங்கு தேசிகர் ஆதிசேஷனை பூதரபன்னக: , பூமியைத்தாங்குபவன் என்று குறிப்பிடுகிறார். இதன் பொருள் , பூமியைத்தாங்கும் சேஷனுக்கும் பூமிபாரம் குறைந்தால் எளிதாகும் என்பது. )
வசுதேவர் ஆற்றைக் கடக்கையில் யமுனையின் நிலையை தேசிகர் ஒரு அழகான ஸ்லோகத்தால் வர்ணிக்கிறார்.
நிமிஷிதாஸித நீரஜ லோசனா முகிளிதாப்ஜ முகீ ஸவிது: சுதா
லலிதா தீன ரதாங்க யுகஸ்வனா குஹகதைன்யம் அசோசத இவ பிரபோ: (யாத. 3.38)
இரவு நீங்கும் தருணம் அல்லி மலர்கள் மூடிவிட்டன, தாமரைகள் இன்னும் மலரவில்லை. இரவில் தன் பேடை பக்கத்தில் இருந்தும் பார்க்க முடியாத் சக்ரவாக பக்ஷிகளின் தீனக்குரலும் சேர்ந்து யமுனையே சர்வசக்திமானாகிய பெருமான் தன சக்தியை ஒளித்து வளரப்போகும் எளிமையைக் கண்டு வருந்துவது போல இருந்ததாம். ,
சூரியன் மகளான யமுனை ஆறு அலைகளை எறிகின்றதைப் பார்க்கும்போது இதெல்லாம் கண்ணனின் விளையாட்டு என்று அறியாமல் கம்சனால் ஆபத்து வந்துவிடுமோ என அஞ்சிக் கைகளை உதறிக்கொண்டது போல் தோன்றிற்று.
யோகிகள் சம்சாரத்தைக் கடப்பது போல் வசுதேவர் அந்த ஆற்றைக் கடந்தார். அவருக்கு வழி விடுவதைப் போன்று யமுனை தன் வெள்ளத்தை நிறுத்திக் கொண்டது. காலளவு நீரே உடையதாக ஆயிற்று.
இவ்வாறு வசுதேவர் கோகுலம் அடைந்து கண்ணனை அங்கு விட்டு அங்கு பிறந்த பெண் குழந்தையை எடுத்துக் கொண்டு மதுரை வந்தார்.
யாதவாப்யுதயம் -அத்தியாயம் 3 தொடர்ச்சி
தேவகியின் எட்டாவது குழந்தை பிறந்ததை அறிந்த கம்சன் அங்கு வந்து அந்தக் குழந்தையை கால்களைப் பிடித்து பாறையில் அடிக்க முனையும்போது அந்தப் பெண் குழந்தை உதைத்து அவன் கைகளில் இருந்து விடுபட்டு ஆகாசத்தில் எழும்பி பெரிய யுவதி உருவெடுத்து பேசியது. அவளுடைய வாக்கு எப்படி இருந்தது என்பதை, 'படு கபீரம் உதாரம் அனாகுலம் ஹிதம் அவிஸ்தரம் அர்த்யம் அவிப்லவம்,' என்று தேசிகர் வர்ணிக்கிறார். அதாவது, கடுமையாகவும், கம்பீரமாகவும், பெருந்தன்மையாகவும், கலக்கமற்றதாகவும், ஹிதமாகவும், சுருக்கமாகவும், பொருள் செறிந்ததாகவும், சத்தியமாகவும் இருந்தது.
அவள் கூறியது,
"நான் தேவர்கள் அசுரர்கள் எல்லோரையும் மோகத்தில் ஆழ்த்துகிறவள். மதுகைடபரை அழித்த பகவானின் மாயையான அவன் உண்மை ஸ்வரூபத்தை மறைக்கும் திரை என்றறிவாய். தேவர்களின் விரோதிகளை அழிக்க வசுதேவரின் குமாரனாகப் பிறந்தவன் நந்தகோபரின் இல்லத்தில் இருக்கிறான். அவனே உன்னை அழிக்கப்போகிறான்."
பாகவதத்தில் யோகமாயை கண்ணனின் இருப்பிடத்தை தெரிவிக்கவில்லை. ஆனால் இங்கு தேசிகர் தைரியமாக அதை தெரிவிப்பது அவன் இருப்பிடம் தெரிந்தாலும் கம்சனால் ஒன்றும் செய்ய இயலாது என்பதை உணர்த்துவதன் பொருட்டேயாகும்.
மூடனான கம்சன் பகவானின் மாயையாலே பரிஹசிக்கப் பட்டவனாய் தேவகியஓயும் வசுதேவரையும் சிறையில் இருந்து விடுவித்து ஓர் இல்லத்தில் தங்க வைத்தான் ( like house arrest). பிறகு கண்ணனுக்கு எவ்விதம் தீங்கு விளைவிப்பது என்று சிந்திக்கலானான்.
நிற்க, கோகுலத்தில், யசோதை மாயையால் ஏற்பட்ட மயக்கத்தில் இருந்து விழித்தவளாய் தன் பக்கத்தில் இருந்த ஆண் குழந்தையைக் கண்டாள். தேசிகர் பகவானை எது வேதங்களுக்கு பூஷணமோ, எந்த வேதாந்தங்களில் விளங்கும் தத்துவத்தை முனிவர்கள் இன்னமும் தேடிக்கொண்டிருக்கின்றனரோ அந்த தத்துவமானது ஆய்ப்பாடிக்கும் பூஷணமாயிற்று என்கிறார்.
கண்ணன் அவதரித்த பின் ஆய்ப்பாடி கன்றுகள் நோயின்றியும், கறவைகள் புல் நீர்களுக்கு அலையாமலும், பால் பெருகியும், கள்ளர் பயம் இல்லாமலும், எல்லா பிரஜைகளும் பிணி இல்லாமலும் க்ருத யுகம் போல் விளங்கியது. நந்தன் மகனின் பிறப்பு விழா கொண்டாட்டத்தில் கல்பதருவையும் சிந்தாமணியையும் மிஞ்சி விட்டான் என்கிறார் தேசிகர். அதனால் கோகுலத்தில் உள்ளவர்கள் இந்திரலோகத்தையும் சாரமில்லாததாக எண்ணினர்.
இவ்விதம் பலராமனும் கிருஷ்ணனும் கோகுலத்தில் புதிய சந்திரனின் ஒளியுடனும் அழகுடனும்,தேவர்களும் களிக்கும்படி வளம் பெற்றனர்.
No comments:
Post a Comment