Tuesday, August 18, 2020

Ramo vigrahavaan dharma-Told by Mareecha to Ravana

Courtesy:Sri.Balasubramanian Vaidyanathan

மாரீச ராவண ஸம்வாதம்

முன்பு ஒரு பதிவில் குறிப்பிட்டிருந்த அகம்பனன் கர, தூஷண வதங்களையும், ஜனஸ்தானத்தில் ராக்ஷஸர்களின் அழிவையும் கூறி ராமனை அறிமுகப்படுத்தியதோடு நில்லாமல் ஸீதையைக் கவரும் படியும் கூறுகிறான். ராவணன் அடுத்த நாளே மாரீசனைச்சந்தித்து யோசனை கேட்க, மாரீசன் அந்த எண்ணம் தகாதென அறிவுறுத்தித்திருப்பியனுப்பி விடுகிறான்(31 வது ஸர்கம்). அடுத்த நாள் சூர்ப்பனகை சபையில் வந்து அரற்றி, ராவணனைக்கடுமையாகப்பேசி (இதே போலப்பேசித்தான் கரனுடைய முடிவிற்கும் வழிவகுத்தாள்) தன்னுடைய செய்கைகளைக்கூறாமல் ராவணனுக்கு ஸீதையைக்கொணர முயன்ற தான் விரூபிதையாக்கப்பட்டதாகவும், ராக்ஷஸர் அனைவரும் அழிந்ததாகவும், அழகியான ஸீதையைக்கவர்ந்து அதன்பின் ராமலக்ஷ்மணர்களைக் கொல்லவும் வேண்டுகிறாள்(ஸர்கம் 34). ராவணன் மீண்டும் யாருமறியாமல் மாரீசனைச் சந்திக்கிறான். மாரீசன் ராவணன் மீண்டும் வந்த காரணத்தை வினவ, ராவணன் தன் திட்டத்தை விளக்குகிறான்.

அப்போது, ராமனை நிந்திக்கும் விதமாக பின்வருவனவற்றைக்கூறுகிறான்

पित्रा निरस्तः क्रुद्धेन सभार्यः क्षीणजीवितः।
स हन्ता तस्य सैन्यस्य रामः क्षत्रियपांसनः।।3.36.10।।
दुश्शीलः कर्कशस्तीक्ष्णो मूर्खो लुब्धोऽजितेन्द्रियः|।
त्यक्तधर्मो ह्यधर्मात्मा भूतानामहिते रतः || 3.36.11।।

"கோபமுற்ற பிதாவால் பார்யையுடன் இடமற்றவனானவன், க்‌ஷீணமான வாழ்வினன், க்ஷத்ரியர்களுக்கு களங்கமானவன் - அந்த ராமன் அவனுடைய (கரனுடைய) ஸைன்யத்துடைய கொலையாளி. துர்நடத்தையினன், கடுமையானவன், கடுநோக்கினன், மூர்க்கன், பேராசைக்காரன், இந்த்ரியங்களை அடக்காதவன், தர்மத்தைத்துறந்தவன், அதர்மாத்மா, உயிர்களுக்கு ஹிதமற்றதில் நடப்பவன்."

இதன்பின் ராவணன் ஸீதையைக்கவர மாயமான் திட்டத்தை முன்வைக்கிறான். 

அடுத்த ஸர்கத்தில் மாரீசன் மீண்டும் ராவணனை இடித்துரைக்கிறான். அப்போது இவ்வாறு ராவணனின் சொற்களுக்குப் பின்வருமாறு பதிலளிக்கிறான். 

न च पित्रा परित्यक्तो नामर्यादः कथञ्चन।
न लुब्धो न च दुश्शीलो न च क्षत्रियपांसनः।।3.37.8।।
न च धर्मगुणैर्हीनः कौसल्यानन्दवर्धनः।
न तीक्ष्णो न च भूतानां सर्वेषामहिते रतः।।3.37.9।।
वञ्चितं पितरं दृष्ट्वा कैकेय्या सत्यवादिनम्।
करिष्यामीति धर्मात्मा तात प्रव्रजितो वनम्।।3.37.10।।
कैकेय्याः प्रियकामार्थं पितुर्दशरथस्य च।
हित्वा राज्यं च भोगांश्च प्रविष्टो दण्डकावनम्।।3.37.11।।
न रामः कर्कशस्तात नाविद्वान्नाजितेन्द्रियः।
अनृतं दुश्श्रुतं चैव नैव त्वं वक्तुमर्हसि।।3.37.12।।
रामो विग्रहवान् धर्मस्साधुस्सत्यपराक्रमः।
राजा सर्वस्य लोकस्य देवानां मघवानिव।।3.37.13।।

"ஒருபோதும் பிதாவால் துறக்கப்பட்டோனல்லன், மரியாதை இல்லாதவனல்லன், பேராசையினனல்லன், துர்நடத்தையினனல்லன், க்ஷத்ரியர்களின் களங்கமுமல்லன். கௌஶல்யாநந்தவர்தனன் தர்மஹீனனல்லன், கடுநோக்கினனல்லன், அனைத்துயிர்களுக்கும ஹிதமற்றதில் நடப்பவனல்லன். 

தர்மாத்மாவானவன் ஸத்யவாதியான பிதா கைகேயியினால் வஞ்சிக்கப்பட்டதைக்கண்டு 'நான் செய்வேன்' என வனத்திற்குச்சென்றவன். பிதாவான தஶரதனுடைய கைகேயியினுடைய ப்ரியமான விருப்பத்தின் பொருட்டு ராஜ்யத்தையும், போகங்களையும் துறந்து தண்டகாவனத்தில் நுழைந்தனன். ராமன் கடுமையானவனல்லன், அவித்வான் அல்லன், இந்த்ரியங்களை அடக்காதவனல்லன். நல்லவனான, ஸத்யத்தையே பராக்ரமமாகவுடைய ராமன் தர்மத்தின் பேருரு. (மிகவும் ச்லாகித்துக் கூறப்படும் 'ராமோ விக்ரஹவான் தர்ம:' வரும் இடம் வால்மீகி ராமாயணத்தில் இங்கே தான். கூறுபவன் மாரீசன்). தேவர்களுக்கு மகவான் (இந்திரன்) போன்று, அனைத்துலகத்திற்கும் ராஜா."

பிறகு முன்னர் அவனால் உயிர்ப்பிச்சையைப் பெற்றதை, அவன் பலத்தைக்கூறி திட்டத்தைத்தவிர்க்கும்படி மன்றாடுகிறான் மாரீசன்...

#ராமம்பஜேஶ்யாமளம்


No comments:

Post a Comment