Monday, August 24, 2020

Gopala vimsati slokas 6 to 11 in tamil

Courtesy:Smt.Dr.Saroja Ramanujam

கோபாலவிம்சதி

6. வ்ரஜயோஷிதபாங்க வேதநீயம் 
மதுரா பாக்யம் அனந்யபோக்யம் ஈடே 
வசுதேவவதூஸ்தனந்தயம் தத்
கிமபி பிரம்ம கிசோரபாவ த்ருச்யம்

வ்ரஜயோஷிதபாங்க வேதநீயம்- கோபியர்களின் கடைக்கண் பார்வைகளால் அம்புபோல் அடிக்கப்பட்டவனும், 
மதுராபாக்யம் – வட மதுரையின் செல்வனும்
அனன்யபோக்கியம் – அவனைத் தவிர வேறு ஒன்றையும் நாடாதவர்க்கு அனுபவிக்க இனியதாய் உள்ளவனும்
வசுதேவவதூஸ்தனந்தயம்- வசுதேவர் பத்னிக்கு குழந்தையுமான 
கிசோரபாவ த்ருச்யம்- பாலன் வடிவில் உள்ள 
தத் கிமபி பிரம்ம- அந்த அத்புத பரப்ரும்மத்தை 
ஈடே- துதிக்கிறேன்

தேசிகர் முந்தைய ஸ்லோகத்தில் மித்யாகோபன் என்று குறிப்பிட்ட கண்ணனின் நிஜ ஸ்வரூபத்தை இங்கு உணர்த்துகிறார். பின்னால் வரும் வேணுகானம், ராசக்ரீடை, இவைகளை உணர்த்தும் சொல் வ்ரஜயோஷிதபாங்க வேதநீயம் என்பது. கோபியரின் (வ்ர்ஜயோஷித்) கடைக்கண் பார்வைகள் (அபாங்க) கண்ணனை அம்புகள் போல் துளைக்கின்றனவாம்.

அவன் மதுரா நகர் மக்களுக்கு கிடைத்த பாக்கியம் ஏனென்றால் கம்சனால் அவர்கள் பட்ட துன்பம் தீர்க்க பிறந்தவன் ஆயிற்றே. மேலும் பகவான் பக்தர்களின் மதுரமான பாக்கியம் அல்லது கிடைத்தற்கரிய செல்வம். அதனால் தான் தேசிகர் ராஜ சபைக்கு அழைக்கப்பட்டபோது து 'அஸ்தி மே ஹஸ்தி சைலாக்ரே வஸ்து பைதாமஹம் தனம் ,' அத்திகிரிமேல் என் மூதாதையர் செல்வம் எனக்கு உள்ளது என்று கூறினார்.

கிருஷ்ணன் எல்லோருக்கும் மதுரபாக்கியம். மதுராதிபதேரகிலம் மதுரம் என்றபடி. அவன் ஆனந்த லஹரி, சௌந்தர்ய லஹரி, ஸ்ருங்கார லஹரி, மாதுர்ய லஹரி. ( லஹரி என்றால் கடல்)

தேசிகர் பரப்ரம்மமே கோகுலத்தில் சிறுவனாகக் காணப்படுகிறதே , இது என்ன அதிசயம் என்கிறார்.

மதுசூதன சரஸ்வதி என்பவர் ஒரு அத்வைத சிரோமணி. அதே சமயம் சிறந்த கிருஷ்ண பக்தர். அவர் கூறுகிறார்,

"இந்த்ரியங்களை அடக்கி தவம் செய்யும் யோகிகள் நிர்குணமானதும் செயலற்றதுமான பரஞ்சோதியான பிரம்மத்தை சிரமப்பட்டுக் காண்கிறார்கள். அவர்கள் தாராளமாக அப்படி செய்யட்டும் ஆனால் நமக்கு இங்கே அதே பரப்ரம்மம் யமுனைக்கரையில் நம் கண்களுக்கு விருந்தாக நீலநிறத்தில் ஒரு சிறுவனாக ஓடிக்கொண்டிருக்கிறதே! "

.அடுத்த ஸ்லோகம் கண்ணன் உரலில் கட்டுண்டது.

  

கோபால விம்சதி

8. நிகடேஷு நிசாமயாமி நித்யம் நிகமாந்தரை: அதுனா அபி ம்ருக்யமாணம்
யமலார்ஜுனதிருஷ்டபாலகேலிம் யமுனாசாக்ஷிக யௌவனம் குமாரம்

உபநிஷத்துக்களால் (வேதாந்தை:), இப்பொழுதும் (அதுனா அபி) தேடப்படுபவனாய் (ம்ருக்யமாணம்), நளகூபரர்களான இரட்டை மரங்களால் (யமலார்ஜுன), காணப்பட்ட(திருஷ்ட), பாலலீலைகளை உடையவனாய் (பாலகேலிம்) யமுனை நதி கண்கூடாகக் கண்ட (யமுனாஸாக்ஷிக), யௌவனசெயல்களை உடையவனும் ஆன(யௌவனம்) (குமாரம்) கண்ணன் என்னும் குமரனை , அருகில் எங்கும், (நிகடேஷு நித்யம்) ,காண்கிறேன் (நிசாமயாமி)

. இங்கு யௌவனம் என்று காணப்பட்டாலும், 15 வயதிற்குப் பிறகுதான் யௌவனம். யௌவனப்பருவம் அடையும்போது கண்ணன் மதுரை சென்றுவிடுகிறான். யௌவனம் என்பது அவன் நித்யயுவா என்று கூறப்படுவதைக் குறிக்கிறது.

.தேசிகர் கூறுவது என்னவென்றால், அவனுடைய பாலலீலைகளைக் கண்டு அவன் சாதாரண சிறுவன் என்று நினைக்க வேண்டாம். அவன் வேதங்களால் இன்றும் தேடப்படும் பரப்ரும்மமே. யாதவாப்யுதயத்தில் வேதங்கள் அவனுடைய ஒரு குணத்தை வர்ணிக்கப் புகுந்து முழுவதும் கூற முடியாமல் களைப்புற்றன என்று கூறுகிறார்.

  

கோபால விம்சதி

9. பதவீம் அதவீயஸீம் விமுக்தே: அடவீஸம்பதம் அம்புவாஹயந்தீம் 
அருணாதரஸாபிலாஷவம்சம் கருணாம் காரணமானுஷீம் பஜாமி

முக்திக்கு மிக சமீபமான வழியாய், பிருந்தாவனத்தின் செழிப்பைத் தரும் நீருண்ட மேகம் போன்றதாய் ,சிவந்து அதரத்தில் ஆசை கொண்ட குழலை உடையதாய், ஜகத்காரணமாய், மானிட உருக்கொண்ட கருணை வடிவத்தைத் தொழுகிறேன்

இதில் கிருஷ்ணனுக்கு நான்கு அடைமொழிகள் கூறப்படுகின்றன.

கருணாம்- கருணையே வடிவானவன் என்பதற்கு நான்கு விளக்கங்கள்.

1. காரண மானுஷீ-மனித உருக்கொண்ட உலகக்காரணன் . சாதுக்களைக் காக்கவும் பூமிபாரத்தைக் குறைக்கவும் எடுத்த வடிவம். ஆயர்குலத்தையும் ஆவினங்களையும் மட்டும் அல்ல, அரசகுலத்தோரான பாண்டவர்களையும் காக்கும் கருணை.

2. அடவீஸம்பதம் அம்புவாஹயந்தீம்-நீருண்ட மேகம்போன்ற அவன் இருப்பதாலேயே பிருந்தாவனம் செழித்தது.

தேசிகர் யாதவாப்யுதயத்தில் கூறுகிறார்.

யேநௌஷதீனாம் அதிபம் புரஸ்தாத் 
ஆஹ்லாத ஹேதும் ஜகதாம் அகார்ஷீத்
தேனைவ ததௌ மனஸா வனம் தத் 
கிருஷ்ண: கவாம் க்ஷேமஸம்ருத்திம் இச்சன் (யாத. 4.40)

இதன் பொருள், ஓஷதிகளுக்கு அதிபனான் சந்திரனை, உலகுக்கு ஆனந்தமளிக்க எவ்வாறு மனதிலிருந்து ஸ்ருஷ்டித்தானோ அதே போல இங்கு பசுக்களின் க்ஷேமத்திற்காக பிருந்தாவனத்தை புல்செடிகொடிவகைகளுடன் செழிப்புறச் செய்தான்

சந்த்ரமா மனஸோ ஜாத: -புருஷ சுக்தம்.

.3. அருணாதர ஸாபிலாஷ வம்சம் –அவனுடைய சிவந்த உதடுகளில் உள்ள குழல் அவன் அதராம்ருதத்தைப் பருக ஆசையுற்றது போல் காண்கிறது. அவன் கருணை ஜடவஸ்துக்களிடமும் காணப்படுகிறது.

4. பதவீம் அதவீயஸீம் விமுக்தே:-பதவி என்பது பாதை என்றும் சேரும் இடம் என்றும் கொள்ளலாம். பகவான் அடையும் இடமாகவும் அடையும் மார்க்கமாகவும் இருக்கிறான்.அதவீயஸீ என்றால் மிகவும் சமீபமான என்பது பொருள்.அதாவது எபோதும் பகவான் சமீபத்திலேயே எளிதில் அடையும்படி இருக்கிறான். வைகுண்டம் கூப்பிடு தூரம் , ஏனென்றால் கஜேந்திரன் கூப்பிட்டவுடன் வந்துவிட்டான் அல்லவா.

  

கோபாலவிம்சதி

1௦.அனிமேஷநிமேஷணீயம் அக்ஷ்ணோ; 
அஜஹத் யௌவனம் ஆவிரஸ்து சித்தே
கலஹாயிதகுந்தளம் கலாபை: 
கரணோன்மாதகவிப்ரமம் மஹோ மே

இமைகொட்டாமல் காணத்தகுந்ததும் (அனிமேஷநிமேஷணீயம்), என்றும் இளமையானதும் (அஜஹத் யௌவனம்), மயில் பீலிகளோடு (கலாபை:), போட்டியிடும் (கலஹாயித), குழல் கற்றைகள் உடையதும் (குந்தளம்), இந்த்ரியங்களை பித்துக்கொள்ளச் செய்யும் லீலைகளை உடையதுமான (கரணோன்மாதகவிப்ரமம்),ஒளியானது (மஹ; ) என் மனதில் (சித்தே மே) தோன்றட்டும். (ஆவிரஸ்து)

கண்ணனின் என்றும் இளமையான திருமேனி அழகை கண்கொட்டாமல் அனுபவிக்க வேண்டும் என்கிறர். ஏனென்றால் கண்ணிமைக்கும் நேரத்தில் அவன் மறைந்துவிடக்கூடும். அவன் கேசத்தில் அணிந்துள்ள மயில்தோகை அவனுடைய குழற்கற்றைகளுடன் போட்டியிட்டு அழகு செய்கிறது. ஒவ்வொரு இந்த்ரியங்களையும் பித்துக்கொள்ளச் செய்கிறது அவன் மேனி லாவண்யம். அந்த ஒளிமயமான தோற்றம் இதயத்தில் எப்போதும் தோன்ற வேண்டும் என்கிறார்.

தேசிகர் யாதவாப்யுதயத்தில் கண்ணன் காட்டிலிருந்து திரும்பிவருவதை வர்ணிக்கும்போது அதைக்கண்ட கோபியர் மனம் முழுவதும் மயிற்பீலியால் மூடப்பட்டதைப்போல் உணர்ந்தார்கள் என்கிறார். மயிற்பீலி சாதாரணமாக மந்திரவாதிகளிடம் இருக்கும். இங்கு அவன் மாயையால் கட்டுண்டு மந்திரவசப்பட்டதைப் போல் நின்றார்கள்.

எல்லா இந்த்ரியங்களுக்கும் இன்பம் அளிப்பது கிருஷ்ணாவதாரம். 'ரஸோ வை ஸ:,' என்கிறது உபநிஷத். பகவானே எல்லா ரஸங்களுக்கும் இருப்பிடம் ஆதலால் சகல இந்த்ரியங்களுக்கும் சுகம் அளிக்கிறான்.

11.அனுயாயி மனோக்ஞவம்சநாலை: அவது ஸ்பர்சிதவல்லவீ விமோஹை:
அனகஸ்மிதசீதலை: அஸௌ மாம் அனுகம்பாஸரிதம்புஜை: அபாங்கை:

மனோக்ஞவம்சநாலை:-இனிய குழலிசை தண்டுபோல தொடரப்பட்டு ஸ்பர்சிதவல்லவீ விமோஹை:- அதை உணரும் கோபியருக்கு மோகததைத் தருவதாய் , அனகஸ்மிதசீதலை: , கபடில்லாத புன்சிரிப்பால் குளிர்ந்ததாய், அனுகம்பாஸரிதம்புஜை: -கருணை என்னும் நதியில் மலர்ந்த தாமரைகளாயுள்ள , அபாங்கை: -கடாக்ஷங்களால் , அஸௌ – இந்த கண்ணன், மாம்- என்னை , அவது காக்கட்டும்.

தாமரை போன்ற கண்களின் பார்வைக்கு கண்ணன் குழலோசை தண்டாக உவமிக்கப்படுகிறது. நால என்றால் மூங்கில் என்றும் பொருள்.குழலிசை அவனுடைய கருணை பொங்கும் கடைக்கண் பார்வையைத் தொடர்கிறது. கருணை என்னும் நதியில் மலர்ந்த தாமரைகளாகிய கண்கள் தாமரையின் இதழ்களைப்போலக் குளிர்ந்து காணப்படுகின்றன.

அவன் கடைக்கண் பார்வையும் குழலிசையும் சேர்ந்து கோபியரை மோகிக்கச் செய்கினறன. அதனால குழலிசை கேட்டதும் அவர்கள் தன் வசமிழந்து அவனை நாடி வருகிறர்கள். வந்ததும் அவனுடைய கடைக்கண் பார்வை கருணை மிகுந்து அவர்களை தன்னிலை மறக்கச் செய்கிறது.

  

No comments:

Post a Comment