ஸ்ரீமத்பாகவதம் தசமசஸ்கந்தம்
அத்தியாயம் 15
கிருஷ்ணனும் பலராமனும் பாலப்பருவத்தைக் கடந்து பௌகண்டப் பருவத்தை அடைந்தபோது (ஆதாவது 5 முதல் 15 வரை) அவர்கள் பசுக்களை மேய்ப்பதில் தேர்ச்சி உள்ளவரானார்கள் .
அவர்களுடைய பாதஸ்பரிசம் பெற்று பரம பாக்கியம் நிறைந்த பிருந்தாவனத்தில் மனம் மகிழ்ந்து கிருஷ்ணன் தன் தோழர்களுடன் மலையடிவாரங்களில் உள்ள ஆற்றங்கரையில் பசுக்களை மேய்த்துக் கொண்டு விளையாடினார்.
சில சமயம் ஹம்சங்களின் த்வனியைப் போல கூவுவார். சில சமயம் மயில்களோடு சேர்ந்து ஆடுவார். சில சமயம் பசுக்களையும் இடையர்களையும் மகிழ்விக்கும் தன் குரலால் தூரத்தில் சென்றுவிட்ட பசுக்களை அன்புடன் கூப்பிடுவார். சில சமயம் விளையாடிக் களைத்து தோழர்கள் மடியில் தலை வைத்து இளைப்பாறும் தமையனுக்கு கால் பிடித்து விடுவார்.
இவ்வாறு விளையாடுகையில் ஒருநாள் பனைமரங்கள் நிறைந்த ஒரு வனத்திற்குச் சென்றனர். பலராமன் தன் வலிமையால் மரங்களை உலுக்கி பழங்களை விழச்செய்தார். அபோது அங்கிருந்த தேனுகாசுரன் என்ற கழுதை உருக்கொண்ட அசுரன் ஓடி வந்து பின்னங்காலால் அவரை உதைக்க முயன்றான். அவர் அவன் கால்களைப் பற்றி மரங்களின் மேல் எறிந்தார். அவன் உயிரிழந்தான். பிறகு அவனுடைய உறவினர்களான மற்ற அசுரர்கள் எதிர்க்க அவர்களை கிருஷ்ணனும் பலராமனும் கொன்றனர்
பின்னர் ஒருநாள் பலராமனின்றி கிருஷ்ணர் மட்டும் தோழர்களுடன் வந்த்திற்குச் சென்றார். அது வேனிற்காலமானதால் தாகத்தால் வருந்திய இடைச்சிறுவர்கள் அந்தப்பகுதியில் இருந்த நதியின் நீரைப் பருகினர். பசுக்களும் பருகின. அது விஷத்தால் கெட்டிருந்ததால் அனைவரும் உயிரிழந்து அங்கேயே விழுந்தனர்.
யோகிகளுக்கும் ஈஸ்வரரான கிருஷ்ணர் தம்மையே நம்பி இருக்கும் அவர்கள் உயிரிழந்ததைக் கண்டு அமிர்தத்தைப் பொழியும் தன் பார்வையால் அவர்களை உயிர்ப்பித்தார்.
அந்த விஷத்திற்குக் காரணமான காளியனை வென்றது அடுத்துக் கூறப்படுகிறது.
No comments:
Post a Comment