Thursday, November 21, 2019

Matapalli Narasimha temple

அதிசய நரசிம்மர்

-----------------------------

நரசிம்மர் விடும் மூச்சில் ஒரு விளக்கில்  தீபம் அசைகிறது. ஒன்றில் அசையாமல் இருக்கிறது. இந்த அதிசய நரசிம்மர்  ஆந்திரமானிலம்  நல்கொண்டா மாவட்டம் வாடபல்லியில் தரிசிக்கலாம்.

பல்லாயிரம் ஆண்டுகளுக்கு முன் அகத்திய  முனிவர் சில விக்ரங்களை அன்னபூர்ணா காவடியில் வைத்து மூன்று  உலகங்களுக்கும் சென்றார். பூலோகம் வந்த அவர் கிருஷ்ணர் மற்றும் மூசி நதிகள்  இணையும் இடத்திற்கு வந்தார். அப்போது அசரீரி ஒலித்தது.

" அகத்தியரே இந்த நதிகள் சேருமிடத்தில்  நரசிம்மரின் விக்ரகம் ஒன்று உள்ளது. அதை இந்த இடத்தில் பிரதிஷ்டை செய்த  பிறகு உங்கள் பயணத்தைத் தொடருங்கள் " என்றது. அகத்தியர் சைவராயினும் இந்த  இறைக்கட்டளையை ஏற்று இந்த இடத்தில் நரசிம்மரை பிரதிஷ்டை செய்தார்.

  இதையறிந்த வியாசமகரிஷி இங்கு வந்தார். நரசிம்மர் மிகவும் உக்ரமாக இருப்பதை  உணர்ந்தார்.

ஏனெனில்  நரசிம்மரிடமிருந்து மூச்சு வெளிப்பட்டுக் கொண்டிருந்தது. " இரண்யனை வதம்  செய்த கையோடு உக்ரம் தணியும் முன் அவர் இங்கு வந்திருக்கவேண்டும். அதனால்  தன் பெருமூச்சு வெளிப்படுகிறது என்று ஊகித்தார்.

நீண்ட காலத்துக்குப் பிறகு மன்னர்களுக்கு  இந்த நரசிம்மரின் வரலாறு தெரிய வந்தது. அவர்கள் பூஜைக்கான ஏற்பாடுகளைச்  செய்தனர். இதன் பிறகு  கோயில் சிதிலமடைந்து சிலையும் புதைந்து போனது.  நான்காம் நூற்றாண்டில் மீண்டும் இந்தக் கோயில் பற்றிய விவரம் வெளியே தெரிய  வந்தது. ரெட்டி ராசுலு என்பவர் இப்பகுதியில் ஒரு நகரத்தை உருவாக்கினார்.  இதற்காக ஆங்காங்கே குழிகள் தோண்டியபோது உள்ளிருந்த விக்ரகம் வெளிப்பட்டது.

கி பி 1377 இங்கு அவர் ஒரு கோயிலைக் கட்டி  அதில் நரசிம்மரை பிரதிஷ்டை செய்தார். அப்போதும் நரசிம்மரிடமிருந்து மூச்சு  வெளிப்படுவதை அறிந்த அர்ச்சகர் இதைச் சோதிப்பதற்காக மூக்கின் அருகில் ஒரு  விளக்கை ஏற்றி வைத்தார். நரசிம்மரின் மூச்சுக்காற்றில் தீபம் அசைந்தது. அதே  நேரம் அவரது பாதம் அருகில் ஏற்றி வைத்து தீபம்  நிலையாக எரிந்தது.  இப்போதும் இந்த விளக்குகள் இவ்வாறு எரியும் அதிசயத்தைக் காணலாம்.

சிறப்பம்சம்:

திருப்பதி மற்றும் ஸ்ரீரங்கம் செல்லும்  ஆந்திர மக்கள் இந்த நரசிம்மரை வணங்கிய பிறகு கிளம்பினால் நற்பலன் விளையும்  என்கின்றனர்.  ஆந்திராவில் நல்கொண்டா கிருஷ்ணா குண்டூர் மாவட்ட மக்கள்   இவரை வணங்கிய பிறகே பிற கோயில்களுக்குச் செல்வதை ஐதீகமாகக் கொண்டுள்ளனர்.    . ராமன் சீதா லட்சுமணன் ஆஞ்சனேயர் சுதைச் சிற்பமாக அழகே வடிவாய் காட்சி  தருகின்றனர். லட்சுமி தாயார் தனியாக உள்ளார். இங்குள்ள கருடன் அனுமன்  வாகனங்கள் பார்ப்பதற்கு மிகவும் வித்தியாசமாக உள்ளன.

ஆன்மிக உபன்யாசகர் முக்கூர் லட்சுமி  நரசிம்மாச்சாரியர் 1992 ல் இந்தக் கோயிலில் யாகம் ஒன்றை நடத்தினார்.  அதன்பிறகு இந்தக் கோயில் மிகவும் வளர்ச்சியடைந்தது. அளவில் சிறியது  என்றாலும் உயிரோட்டமுள்ள நரசிம்மரின் தரிசனத்தால் பக்திப்பரவசத்தில்  பக்தர்களை மூழ்க வைக்கும் கோயில் இது. வாடபல்லி சிறிய கிராமமாக உள்ளது.  கிருஷ்ணா மற்றும் மூசி நதிகள் இணைந்து எல் வடிவில் காட்சியளிப்பது   விசேஷம்.  ஆந்திராவின் பஞ்ச நரசிம்மத் தலங்களில் இதுவே முதலாவதாகப்  போற்றப்படுகிறது.

இருப்பிடம்:

மட்டபல்லி நரசிம்மர் கோயிலில் இருந்து  ஹூசூர் நகர் வழியாக குண்டூர் செல்லும்  ரோட்டில் 100 கிமீ கடந்தால்  மிரியாலக்குடா. 2 கி மீ சென்றால் வாடபல்லியை அடையலாம்.

ஸ்ரீ நரஹரி சரணம்.

No comments:

Post a Comment