Friday, April 26, 2019

Vishnu Sahasranama 285 to 291 in tamil

Courtesy:Smt.Dr.Saroja Ramanujam

விஷ்ணு ஸஹஸ்ர நாமம்- 31

285. அம்ருதாம்சூத்பவ:
அம்ருதாம்சு என்றால் சந்திரன் அமுதக் கிரணங்களை உடையவன் என்ற பொருளில்.,பகவானே சந்திரனாக இருப்பவன்.'புஷ்ணாமி ச ஔஷதீ: ஸர்வா: ஸோமோ பூத்வா ரஸாத்மக: ,' (ப.கீ.15.13) "நான் சந்திரனாக இருந்து உயிர் கொடுக்கும் ரசத்தை மூலிகைகளுக்குக் கொடுக்கிறேன். "

அம்ருதாம்சு +உத்பவ: என்று எடுத்துக்கொண்டால் சந்திரனை தோற்றுவித்தவர் என்று பொருள். 'சந்த்ரமா மனஸோ ஜாத:,' – சந்திரன் பரமபுருஷனின் மனதிலிருந்து தோன்றினான்- புருஷ சூக்தம்

286. பானு:-பாதி இதி பானு:- ஒளிர்வது என்று பொருள் பகவானாலே எல்லாம் ஒளிர்கிறது ஆதலால் அவன் பானு: எனப்படுகிறான்.

287. சசபிந்து: - இந்தச்சொல் சாதாரணமாக சந்திரனைக் குறிப்பது. சச என்றால் முயல் பிந்து என்றால் புள்ளி. சந்திரனில் முயல் போல் ஒரு புள்ளி தெரிவதால் இந்தப் பெயர்.

ஆனால் சச என்றால் துள்ளித் துள்ளிச் செல்வது என்றும் பொருள். சுற்றி சுற்றிச் செல்வது என்றும் வைத்துக்கொள்ளலாம் அதனால்தான் முயல் சச எனப்படுகிறது.

பிந்து என்பது பித் அல்லது பிளத்தல் என்ற வினைச்சொல்லில் இருந்து வந்தது.பகவானை சச பிந்து என்று சொல்வது ஏன் என்றால் நல்லவழியில் இருந்து துள்ளி வளைவான கதியில் செல்பவரை அவன் விளக்கி விடுவான் என்று அர்த்தம்.

சுற்றிச் சுற்றிச் செல்லும் கிரகங்களின் மையம் போல் இருப்பவன் என்றும் பொருள் கொள்ளலாம்.

288. ஸுரேஸ்வர:- ர என்றால் கொடுப்பது. ஸுர என்றால் நல்லவைகளை கொடுப்பது. அதனால்தான் தேவர்கள் ஸுரர் எனப்படுகிறார்கள். தேவ்ரகளுக்கேல்லாம் ஈஸ்வரன் ஆனபடியால் பகவான் ஸுரேச்வரன் எனப்படுகிறான்.

289. ஔஷதம்- ஸம்சாரத்தின் துன்பங்களுக்கெல்லாம் மருந்தாக இருப்பவன்.

குலசேகர ஆழ்வார் சொல்கிறார்.
வ்யாமோஹபிரசமௌஷதம் முனி மனோ வ்ருத்திப்ரவ்ருத்யௌஷதம் 
தைத்யேந்த்ரார்த்திகரௌஷதம் த்ரிஜகதாம் ஸஞ்ஜீவனைகௌஷதம் 
பக்த்யாத்யந்தஹிதௌஷதம் பவபயப்ரத்வம்ஸனைகௌஷதம்
ச்ரேய: ப்ராப்திகரௌஷதம் பிப மன: ஸ்ரீக்ருஷ்ண திவ்யௌஷதம் (முகுந்தமாலா)

இதன் பொருள்,
மனமே, எல்லாவித மயக்கத்தையும் போக்கக் கூடியதும், முனிவர்கள மனதை ஒருமுகப்படுத்துவதும், அசுரர் தலைவர்க்கு கஷ்டத்தைக் கொடுப்பதும், மூவுலகிற்கும் உயிர் கொடுப்பதும், பக்தர்களுக்கு மிகவும் ஹிதமானதும், சம்சார பயத்தை ஒழிப்பதும், எல்லா நன்மைகளும் அளிப்பதுமான ஸ்ரீக்ருஷ்ணன் என்ற திவ்யௌஷதத்தை பருகுவாயாக.

290. ஜகத: சேது:-ஸிநாதி பத்நாதி இதி சேது:-இணைப்பது அதாவது பாலம். பகவான் உலகின் பாலம் , ஜகத: சேது: ஏனென்றால் உலகத்தை இணைக்கும் சக்தியாக இருப்பதால்.

பகவான் கீதையில், 'மயி சர்வம் இதம் ப்ரோக்தம் சூத்ரே மணிகணா இவ' என்கிறார். " என்னிடம் எல்லாமே நூலில் மணிகளைப் போல கோக்கப் பட்டிருக்கின்றன."

ப்ருஹதாரண்ய உபநிஷத்தில், 
'ஏஷ சேது: விதரண ஏஷாம் லோகானாம் அஸம்பேதாய ,' – பிரம்மமே உலகங்களை எல்லாம் ஒரு பாலத்தைப் போல் தாங்குகிறது , அவைகள் ஒழுங்கு மாறாமல் இருப்பதற்காக , என்ற வாக்கியம் காணப்படுகிறது.

291. ஸத்யதர்ம பராக்ரம: - தர்மம் என்பது பகவானுடைய தர்மம், அதாவது அவனுடைய , வாத்சல்யம், சௌசீல்யம், சௌலப்யம், ஸ்வாமித்வம் முதலிய அனந்த கல்யாண குணங்கள். இவையும் அதேபோல அவருடைய பராக்ரமமும் ஸத்யமாக அதாவது வீண்போகாமல் உலகத்தை உய்விப்பவை

  

No comments:

Post a Comment