Tuesday, April 30, 2019

Seshadri swamigal

ஒரு அற்புத ஞானி J K SIVAN 
சேஷாத்திரி ஸ்வாமிகள்

ஸ்வாமிகள் மஹிமை ஒரு பிரவாஹம்

நான் இந்த தொடரில் எழுதுவது எனது கற்பனை அல்ல. ஸ்வாமிகள் காலத்தில் அவரோடு வாழ்ந்த ஒரு பக்தர் ஒரு சிறந்த மஹான் பிரம்ம ஸ்ரீ குழுமணி நாராயணசுவாமி சாஸ்திரிகள் பிற்காலத்தில் எத்தனையோ பக்தர்கள் படித்து மகிழ ஒரு நூலை அளித்திருக்கிறார். அதன் சாராம்சம் தான் எழுதுவது. நான் பிறப்பதற்கு 10 வருஷங்கள் முன்பே ஸ்வாமிகள் மறைந்துவிட்டார்.. நான் சொன்ன நூலில் அதிசயங்களை கொட்டி இருக்கிறார் சாஸ்திரிகள். அவற்றில் சிலவற்றை தான் ''ஒரு அற்புத ஞானி'' என்ற தலைப்பில் ஒரு புத்தகமாக வெளியிட்டேன். அதையே இங்கும் தந்து வருகிறேன்.

R .சுப்ரமணிய முதலியார் சேலத்தில் ஒரு வக்கீல். ஸ்வாமிகளின் பக்தர். குடும்பம் நண்பருடன் நிறைய பழங்கள் பக்ஷணங்கள் எல்லாம் எடுத்துக் கொண்டு திருவண்ணாமலை வந்தவர் எங்கு தேடியும் ஸ்வாமிகள் கண்ணில் படவில்லை. கூட வந்தவர்கள் '' நாம் ஒரு நடை காஞ்சிபுரம் போய் வந்து விடலாமா. வந்த பிறகு ஒரு வேளை ஸ்வாமிகள் தென்படலாம்'' என்றனர். இந்த யோசனையை ஏற்று அவர்கள் கார் காஞ்சிபுரம் புறப்பட தயாராயிற்று. அந்த நேரம் பார்த்து தூரத்தில் ஸ்வாமிகள் கண்ணில் பட்டது அவர்களுக்கு ஆச்சர்யமாக இருக்கவே எல்லோரும் அவரை சென்றடைந்து வணங்கினார்கள் .

ஸ்வாமிகள் நேராக காரை நோக்கி வந்தார். அதைத் தொட்டு ''இது காஞ்சிபுரம் போகுமா?''என்று கேட்டதும் அதிர்ந்து விட்டார்கள். எப்படி அவருக்கு காரில் அவர்கள் காஞ்சிபுரம் போக திட்டமிட்டது தெரிந்தது???

++

டி .கே. சுந்தரேச அய்யர் அப்போது ஏழாம் வகுப்பில் படித்துக் கொண்டிருந்தவர். வீட்டுத் திண்ணையில் ஸ்லேட்டில் கணக்கு பாடம் விடை எழுதிக் கொண்டிருக்கிறார். நாலு கணக்கு. கஷ்டமாக இருந்தது. விடை தெரியவில்லையே. ஆசிரியர் கோபிப்பாரே, அடிப்பாரே என்ன செய்வது?. கண்ணில் ஜலம் வந்தது.

வாசலில் அப்போதுதான் சேஷாத்திரி ஸ்வாமிகள் போய்க் கொண்டிருந்தவர் திண்ணை அருகே வந்து தானாகவே நின்றார்.

''சுந்தரேசா, நான் சொல்றதை எழுதிக்கோ.

முதல்லே, நாலு ரூபாய் மூணு அணா எட்டு தம்பிடி. 
ரெண்டாவது ஒம்பது பசு மூன்று கன்னுக்குட்டி. 
மூணாவது ரெண்டுபடி நாலு ஆழாக்கு பால். 
நாலாவது ரெண்டு வீசை எண்ணெய் எட்டு பலம் நெய். போ ''

என்று சொல்லிவிட்டு போய்விட்டார். அந்த நாலு கணக்குக்கு அவர் சொன்னது தான் சரியான விடை. எப்படி ஸ்வாமிகளுக்கு சுந்தரேசனின் ப்ராப்ளம் தெரிந்தது. கணக்கு என்னவென்று எப்படி தெரிந்து சரியான விடையை சொன்னார்?
சுந்தரேசனுக்கு வயதானபிறகும் இந்த கேள்விக்கு பதில் தெரியாமலேயே காலமானார்.

++

மேலே சொன்ன இதே சுந்தரேசய்யருக்கு ஒரு சந்தேகம். உலகம் இப்படி கெட்டுப்போய்க் கொண்டே வருகிறதே . அதர்மம் அநியாயம், அஞ்ஞானம் எல்லாம் பெருகிக் கொண்டே வருகிறதே. எல்லோருமாக சேர்ந்து ஏதாவது சமஷ்டி கர்மா பண்ணினால் அல்லவோ யாராவது ஒரு அவதார புருஷர் வருவார் என்று சாஸ்திரங்கள் சொல்கிறது. சமஷ்டி கர்மாவுக்கு என்ன செய்வது? இதை யாரிடம் கேட்பது? என்று அவர் ஒருநாள் யோசித்துக் கொண்டே கம்பத்து இளையனார் ஆலயத்தில் நின்றார்.

ஸ்வாமிகள் தூர இருந்தே அவரை கை காட்டி அழைத்தார்.

''சமஷ்டி கர்மா என்கிறது யாக யஞம். அதை யார் பண்ணனுமோ அவர்கள் பண்ணுவார்கள். உனக்கு எதுக்கு அந்த கவலை எல்லாம்? இன்னும் அவதார புருஷன் வரதுக்கு ரொம்ப காலம் இருக்கு '' என்கிறார்.

சுந்தரேசய்யர் கம்பத்து இளையனார் கோவிலில் இன்னொரு கம்பமாக அசையாது நின்று திகைத்தார்.

என்னது இது ஆச்சர்யம்? எப்படி என் மனதில் தோன்றுவதை ஸ்வாமிகள் பட்டென்று வெளியே எடுத்து சொல்கிறார்?? நான் ஒரு ஈ காக்காவுக்கு கூட என் மனத்தில் உள்ள எண்ணத்தை வெளியிடவில்லையே?

  

No comments:

Post a Comment