விஷ்ணு ஸஹஸ்ரநாமம் - 32
292.பூத பவ்ய பவன் நாத: - இருந்தவர் இருப்பவர் இருக்கப்போகிறவர் எல்லோருக்கும் நாயகனாக இருப்பவர்.
293. பவன:- பவன: என்றால் காற்று. கீதையில் பவன: பவதாம் அஸ்மி அசையும் பொருள்களில் நான் காற்று என்று பகவான் கூறுகிறார். பவ என்ற வினைச்சொல்லிற்கு அசைவது என்று பொருள். அசைவது எல்லாம் அவராலே என்பதனால் அவர் பவன: எனப்படுகிறார்.
294. பாவன:- பாவயதி இதி பாவன: - தூய்மைப் படுத்துவது. கங்கைக்கு தூய்மை அவருடைய பாதங்களில் இருந்து வந்ததனால். பீஷ்மர் ஸஹஸ்ரநாமத்தை ஆரம்பிக்கும்போது . 'பவித்ராணாம் பவித்ரம் யோ மங்களானாம் ச மங்களம்,' அவர் பவித்திரமானவைகளுக்கு பவித்திரத்தை அளிப்பவர் , மங்களமானவற்றிற்கு மங்களத்தை கொடுப்பவர் என்று கூறினாரல்லவா?
295. அனல: அனந்தி இதி அனா: , பிராணிகள்:, தான் லாதி இதி அனல:. எல்லா பிராணிகளையும் காப்பவர்.
அலம் என்றால் போதும் என்று பொருள்.அனலம் என்றால் போதாது. பகவான் பக்தர்களுக்கு எவ்வளவு செய்தாலும் போதாது என்று நினைப்பவன்.
296. காமஹா—முக்தியை விரும்புவோரின் ஆசைகளை அகற்றுபவன்.
297.காமக்ருத்-காமான் கரோதி- பக்தர்களின் இச்சைகளை பூர்த்தி செய்பவன். காமன் என்றால் மன்மதன். அவன் கிருஷ்ண அவதாரத்தில் அவர் மகன் ப்ரத்யும்னனாக்ப் பிறந்தான். அதனால் அவர் காமக்ருத் , காமனை உண்டாக்கியவர்.
298. காந்த:- உருவத்தாலும் குணத்தாலும் கவர்ச்சியுடையவர் .
299.காம:- காம்யதே , விரும்பப்படுகிறவர். காமனைப்போல் அழகுடையவர்,ஸாக்ஷாத் மன்மத மன்மத: என்கிறது பாகவதம். அதாவது மன்மதன் மனதையும் மயக்குகிறவர்.
300. காமப்ரத: - வேண்டுவதைத் தருபவர். உலக சுகங்ககளை விரும்பினாலும் அல்லது அவரையே அடைய வேண்டும் என்று விரும்பினாலும் கேட்டதைக் கொடுப்பவர். ப்ரஹலாதன் அவருடைய சேவையையே விரும்பினான். துருவன் உயர்ந்த பதவி வேண்டும் என்று தவம் செய்தாலும் அவரைக் கண்டபின் மனமா மாறி கைவல்யத்தையே விரும்பினான் ஆனாலும் அவன் முதலில் கேட்டதைக் கொடுத்துப் பிறகு கைவல்யத்தைக் கொடுத்தார்.
301. பிரபு:- சகல உலகிற்கும் அதிபன்.
No comments:
Post a Comment