Tuesday, April 23, 2019

Rama nama

ஸ்ரீ ராம நவமி ஸ்பெஷல் ! 13.4.19. !

இராமாயணத்தில் ஒரு சம்பவத்தின் நிகழ்ச்சியால் ராம மந்திர மகிமையை உணரமுடியும். ஹனுமான், ஸ்ரீஇராமனின் சிறந்த பக்தர். சதா ராமநாமம் சொல்லும் மகா வியாகரண பண்டிதர். சிரஞ்சீவியான வாயுபுத்திரன். இராமனின் அடிமையான சேவகன். ராம நாமமே அவரின் உயிர் மூச்சு. ராம நாமம் ராம பாணத்தைவிடச் சிறந்தது என்று நிரூபித்தார்.
அப்படி பராக்கிரமசாலியான ஸ்ரீஆஞ்சனேயர், ஒரு சமயம் ஓர் அரசனுக்கு அடைக்கலம் கொடுத்தார். அவனை எந்த சக்தியிடமிருந்தும் காப்பாற்றுவேன் என்று வாக்குறுதி கொடுத்தார். இராமபிரானே அந்த அரசனை ஆஞ்சனேயரிடமிருந்து மீட்க யுத்தம் மேற்கொண்டார். அது இராம ஆஞ்சனேய யுத்தமாக உருவெடுத்தது. ஆஞ்சனேயர் தன் வாலை சுருட்டியுள்ள கோட்டையில் அந்த அரசனை பத்திரப்படுத்தி, அந்த வாலின் அரியணையில் அமர்ந்து "ராம ராம" என்று தியானம் செய்து கொண்டிருந்தார். ராமபாணங்கள் எகிறின. ஆனால் அவை ஆஞ்சனேயரை ஒன்றும் செய்யாது, பூமாலைகளாக விழுந்தன. இராமரே முன்னின்று போர் நடத்தியும், 'ராம நாம ஜபம்' செய்த ஆஞ்சனேயர் தான் வெற்றியடைந்தார். அதை இராமரே ஒப்புக்கொள்கிறார். அந்த ராம மந்திரமே தாரக மந்திரமாக இருக்கிறது என்பதைப் புரிந்து கொள்ளலாம்.
இன்னோர் உபகதையும் உண்டு. இராமாயணத்திலே விபீடணன் புஷ்பக விமானத்தில் அயோத்தி மாநகருக்கு வந்து இராமபட்டாபிஷேகம் கண்டும், எல்லாரையும் கண்டு ஆனந்தித்தும், இலங்கைக்குச் செல்லும் வேளையில், விபீடணனின் அயோத்தி நண்பர் ஒருவர், தனக்கு அந்த இலங்கையைச் சுற்றிப் பார்த்திட ஆசையுள்ளது என்று சொன்னதால், புஷ்பகத்தில் அவனையும் அழைத்துக் கொண்டு இலங்கைக்குச் சென்றார். அரசரின் விருந்தினராக பலநாள்கள் இலங்கையில் தங்கி எல்லா இடங்களையும் சுற்றிப் பார்த்த பின்னர், அயோத்திக்குச் செல்ல ஆசைப் பட்டான். உடன் அவன் "நான் எவ்வாறு கடல் கடந்து போக முடியும்?" என்று விபீடணனிடம் வினவ அதற்கு விபீடணன் "ஒரு மகா மந்திர ஓலையை உன் அரைக்கச்சத்தில் கட்டி விடுகிறேன். அது உன்னை கடலின் அக்கரைக்குக் கொண்டு சேர்க்கும்." என்று சொல்லி மகா மந்திரம் எழுதிய ஓலையை அவனுடைய அரையில் கட்டி விட்டார். எக்காரணம் கொண்டும் அந்த ஓலையை வழியில் எடுத்துப்பிரித்துப் படிக்காமல் கரை சேரவும். கரை சேர்ந்ததும் கடலில் அந்த ஓலையை எறிந்து விடவும்" என்றும் சொன்னார். அப்படிப் பிரித்துப் பார்த்தால் வழியிலேயே கடலில் மூழ்கிவிடுவாய்." என்றும் கூறினார்.
அவன் புறப்படும் சமயம் அந்த மந்திர ஓலையை நன்கு முடிந்து கொண்டான். கடற்கரையை அடைந்தான். ஒவ்வோர் அடியாக கடலில் அடியெடுத்து வைத்தான். அவன் தரையில் நடப்பது போலவே உணர்ந்தான். பின் வேகமாகவும், ஓட்டமாகவும் நடந்து முன்னேறினான். பல காத தூரங்கள் கடந்து, இயற்கையையும் கடல் வாழ் ஜந்துக்களையும் ரசித்துக் கொண்டே நடந்து சென்றான். 'எப்படிப்பட்ட மகாமந்திரம் இந்த ஓலைச் சுவடியில் உள்ளது! அது என்னை இந்த மகாசமுத்திரத்தையே கடக்க வைத்து விட்டதே! உண்மையிலேயே இது ஒரு மகாமந்திரம்தான். அதன் மகிமை பெரியதுதான்' என்று வியந்தான்.
தூரத்தில் கரை தெரிய ஆரம்பித்தது. 'இன்னும் சில காத தூரமே தானிருக்கிறது. நான் மந்திர ஓலையால் மா கடலை கடந்து வந்து விட்டேன்? அவனுக்குள் ஓர் ஆர்வம். இந்த மகா மந்திரம் என்னவாக இருக்கும். அப்படிப்பட்ட மகிமையுள்ள மந்திரத்தைத் தெரிந்து கொள்ள வேண்டாமா? என்று ஏற்பட்ட ஆவல் உந்துதலால் அந்த ஓலையை எடுத்துப் பிரித்து உரக்கவே படித்தான். அதில் ராம் ராம் என்று பலமுறை எழுதியிருந்ததைக் கண்டான். ஆச்சர்யத்துடன் 'பூ' இவ்வளவுதானா? இந்த ராம மந்திரம் தான் எனக்கும் தெரியுமே! இதில் ரகசியம் என்ன?' என்று நினைப்பதற்குள், அவன் தண்ணீரில் மூழ்கினான். அந்த மந்திர ஓலை கையில் இருந்ததால் நீந்திக்கரை சேர்ந்தான் என்பது அதன் சுவாரஸ்யம். அதன் சாராம்சம் 'ராம' என்ற நாம மகிமைதான் காரணம். அதுதான் தாரக மந்திரமுமாகும்.
தியாகராஜ சுவாமிகள் மும்மூர்த்திகளுள் ஒருவர். தெலுங்கில் பல கீர்த்தனங்கள் எழுதி இசை உலகுக்குப் பெருமை சேர்த்தவர். இராமனுடைய கதைச் சம்பவங்களை வைத்தே பல பாடங்கள் புனைந்துள்ளார். இராமனையும், ராம நாமத்தையும் சிறப்பித்துப் பல பாடல்கள் தானே ரசித்து, பாடி, தோத்தரித்திருக்கிறார். அவர் தன்னுடைய கீர்த்தனையில் 'ராம என்பது மகாமந்திரம். அந்த மந்திரம், சைவாகமத்திற்கும், வைஷ்ணவாகமத்திற்கும் உரியது. இரண்டும் கலந்த சேர்க்கைதான் ராம மந்திரம்' என்று விளக்கியிருக்கிறார். அவர் ராம நாமத்தை தொண்ணூறு கோடி வரை ஜபம் செய்தவராம். இராமபிரானையே தரிசனம் செய்த மகாபுண்ணியவான்.
விஷ்ணுவும் சிவமும் கலந்த கலவை ராம நாமம் என்பதைச் சொல்லுகிறார். "ஓம் நமோ நாராயணாயா" என்று அஷ்டாட்சரத்திலிருந்துள்ள 'ரா' என்ற சப்தத்தையும், "ஓம் நமசிவாயா" என்ற பஞ்சாட்சரத்திலிருந்து 'ம' என்ற சப்தத்தையும் வேறுபடுத்தி விட்டால் "நாயணாயா" என்றும் "நசிவாயா" என்றும் மாறுபடும். அப்பொழுது அதன் அர்த்தமே அனர்த்தமாக ஆகிறது. அப்படியானால் இந்த இரண்டு நாமாக்களுக்கும் ஜீவனானது 'ரா'வும் 'ம'வுந்தான். அந்த இரு ஜீவன்களையும் ஒன்று சேர்த்தால் வருவதே 'ராம' மந்திரம். இந்த சப்த ஒலியினால் அந்த மந்திரம் மகாமந்திரம் என்று பெருமை உடையதாகிறது. இரு மத சாராருக்கும் இந்த மந்திரம் பொதுவாகிறது என்பதால் இதுவே 'தாரக மந்திரமாகும்'. "தாரகம்" என்றாலே சம்சாரமான சாகரத்தைக் கடக்க வல்லது என்பதாகிறது. நம்மைக் கரையேற்றும் அல்லது கரை சேர்க்கும் மந்திரம் 'ராம' மந்திரம்.
ராம மந்திரம் முக்தி மோட்சம் ஆகியவற்றுக்குக் காரணமாகிறது. ஒருவர் இறக்கும் தறுவாயில் அவருடைய காதுகளில் 'ராம ராம' என்று ஓதுவார்கள், அவருக்கு நற்கதி கிடைக்க வேண்டுமென்று. காசியில் இன்னும் இதை நடைமுறையாகச் செயல் படுத்துகிறார்கள். காசி விஸ்வநாதரே, ராம மந்திரம் உச்சாடனம் செய்வதாக ஐதீகம் சொல்லப்படுகிறது.
இலங்கைக்குச் செல்ல குரங்குகளால் சேது பந்தனமான பாதை அமைக்கையில் குரங்குகள் எல்லாம் மலைகளையும் பெரிய பாறைகளையும் கடலில் போடும் பொழுது ஹேராம் ஹேராம் என்று சொல்லித்தான் போட்டார்களாம். இராமனே கூட இருக்கையில் அங்கு ராம நாமம்தான் துணையாகியது. அப்பாறைகள், மலைகள் எல்லாம் கடலில் மிதந்தே பாதை யாக்கியது.
'இராமன்' என்பது தெய்விகமான பெயர். அது ஆன்மிகமானதும், பரிசுத்தமானதும், உயர்வானதுமான பெயராகும். வசிஷ்டமகரிஷி எப்போதும் ராம நாமத்தை உச்சரிப்பதால் தான் இராமருக்கே அப்பெயரைச் சூட்டினாராம். அதே போல் இராம நாமமும் தெய்விகமும் ஆன்மிகமும் புனிதமும் உடைய பரிசுத்த தாரக மந்திரம்.
அதனால்தான் வாழ்க்கை நடைமுறையில் 'ராம' நாமத்தை தினம் எழுதுவதும் ஆஞ்சனேயர் பாதங்களில் சமர்ப்பிப்பதும், மாலையாகப் போடுவதும், கோடி நாமாக்கள் எழுதுவதும் இன்று நடைமுறையாக இருப்பதிலிருந்தே ராமநாம மந்திர மகிமை புரியும்.
கம்பர் தன்னுடைய இராமாயணத்தில் ஆரம்ப பலசுருதியாக
"நன்மையும் செல்வமும் நாளும் நல்குமே
திண்மையும் பாபமும் சிதைந்து தேயுமே
ஜென்மமும் மரணமும் இன்றித் தீருமே
இம்மையே ராம என்றிரண்டெழுத்தினால்"
என்று ஆணித்தரமாகச் சொல்லுவதால் ராம நாம மகிமை நன்குபுரியும்.

ஸ்ரீ ராம ஜெயம் !

No comments:

Post a Comment