Tuesday, April 23, 2019

Vishnu Sahasranama 268 to 276 in tamil

Courtesy:Smt.Dr.Saroja Ramanujam

விஷ்ணு ஸஹஸ்ரநாமம்- 29

268.துர்தர:-துஹ்கேன தார்யதே இதி துர்தர: . மோக்ஷத்தை விரும்புபவர்கள் யோகம் தியானம் இவற்றால் பகவனை மனதில் தரிக்க சிரமம் அடைகிறார்கள். ஏனென்றால் அவன் பக்தி மூலமே சுலபமாக் அடையக்கூடியவன் .

ராமாயணத்தில் லக்ஷ்மணன் நினைவின்றி கிடந்த போது ராவணன் அவனைத் தூக்கிச்செல்ல முயன்றான். அவனால் லக்ஷ்மணனை அசைக்கவே முடியவில்லை. ( ஆயிரம் தலை கொண்ட ஆதிசேஷன் ஆயிற்றே) ஆனால் ஹனுமான் அவனை நொடியில் தூக்கிச்சென்றான்.,

269. வாக்மீ-பிரசஸ்த வாக் அஸ்ய அஸ்தி இதி வாக்மீ. வேத ரூபமான சிறந்த வாக்கை உடையவர். யதா நிஸ்ஸ்ருதா வாங்மயீ வாக்- எவரிடம் இருந்து வாக்கு வந்ததோ. ( வாக் என்பது வேதம்)

பிரசஸ்த வாக் என்றால் சத்ய வாக் என்றும் பொருள். அவனுடைய சொல் சத்தியமானது. 'சத்யவாக் சத்ய சங்கல்ப: ' ராமன் கைகேயியிடம் 'ராமோ த்விர்நாபிபாஷதே' என்கிறான். அதாவது ராமனுக்கு ஒரு சொல்தான் மறு சொல்லில்லை. ஒரு சொல், ஒரு வில், ஒரு இல்.

கிருஷ்ணனும் த்ரௌபதியினிடம் " வானமே இடிந்து விழுந்தாலும், இமயமலை பொடிப்பொடியாய் தகர்ந்தாலும் , கடலே வற்றினாலும் என் சொல் மாறாது:" என்கிறான்.

270. மஹேந்திர:- தேவர் தலைவன் . (இந்திரன் உள்பட) இந்த் என்றால் ஜ்வலிப்பது என்றும் பொருள். இந்தே தேஜோபி: இதி இந்திர:- தேஜஸ்ஸினால் ஒளிர்பவன் இந்திரன். ( தேவலோக இந்திரன் அல்ல பொதுவான பொருள். )

மஹேந்திர: என்றால் எல்லோருடைய அந்தராத்மாவாக இருந்து ஒளிரச்செய்பவன்.

271. வஸுத:-வஸுப்ரத: செல்வத்தை கொடுப்பவர். எல்லாம் கொடுப்பவர் அவரே. அவர் கொடுக்க ஆரம்பித்தால் யாராலும் தடுக்க இயலாது. அவர் கொடுக்கவில்லை எனில் யாராலும் கொடுக்க முடியாது.

272. வஸு:-அவனே செல்வம். 
செல்வத்தின் உருவமான லக்ஷ்மிதேவி ஒரு இடத்தில் நிலையாக இருக்க மாட்டாள் என்றாலும் நாராயணனைப் பிடித்துவிட்டால் லக்ஷமி அங்கு நிரந்தர வாசம் செய்வாள் ஏனென்றால் "அகலகில்லேன் என்றுரையும் அலர்மேல் மங்கை மார்பன்" அல்லவா அவன்!

நாராயண பட்டத்ரி சொல்கிறார். 
"லக்ஷ்மீ தேவி ஏன் ஓரிடத்திலேயும் நிலையாக இருக்கமாட்டாள் என்றால் அது அவள் உன்மேல் கொண்ட அன்பினால் உன்னை விட்டுப் பிரியமாட்டாமையால்தான் . அதனால் அவளுக்கு இந்த கெட்ட பெயர்." அதாவது நாராயணன் இல்லாத இடத்தில் லக்ஷ்மி தங்க மாட்டாள்.

வேதாந்த தேசிகர் கூறினார், 'அஸ்தி மே ஹஸ்திசைலாக்ரே வஸ்து பைதாமஹம் தனம்,' என்று வரதனைக் குறித்து. அதுபோல் நம் முன்னோர்கள் நமக்கு சேர்த்து வைத்த செல்வம் பகவான்தான்.

273. நைகரூப: - வடிவம் ஒன்றல்லாதவர். 
'ரூபம் ரூபம் பிரதிரூபம் பபூவ.' – உபநிஷத் . இதன் பொருள் , எல்லா ரூபமும் ஆனது பிரம்மம். 
நம்மாழ்வார் சொல்கிறார். 'பலபலவே ஆபரணம் பெரும் பலப் பலவே பலபலவே சோதிவடிவு. '
விஸ்வரூப தரிசனத்தில் அவன் எல்லாமும் ஆகக் காண்கிறான்.

274. ப்ருஹத்ரூப: - பிரம்மாண்டமான வடிவம் கொண்டவர். உலகளந்த வடிவத்தையும் மஹாவராஹ ரூபத்தையும் குறிக்கும் சொல்.

275. சிபிவிஷ்ட: -சிபி என்றால் கிரணம். விஷ்ட: என்றால் பிரவேசித்தல். அவருடைய கிரணங்கள் எங்கும் பரவி உள்ளன.

சிபி என்றால் உயிருள்ள பிராணிகளையும் குறிக்கும் . இந்த அர்த்தத்தில் பார்த்தால் எல்லா உயிரினுள்ளும் அந்தர்யாமியாக உறைகிறான் என்பது பொருள்.

276. பிரகாசன:-எல்லாவற்றையும் பிரகாசிக்கச்செய்பவன் 
'தஸ்யபாஸா சர்வமிதம் விபாதி,' –உபநிஷத். சூரியன் சந்திரன் முதலிய எல்லா ஒளிவடிவங்களும் அவனுடைய ஒளியால் பிரகாசிக்கின்றன.

  

No comments:

Post a Comment