Tuesday, April 2, 2019

Female Saint Sakkarai ammal- lalita sahasranama


ஒரு லலிதா ஸஹஸ்ரநாம ஞானி J K SIVAN

ஒரு நீண்ட இடைவெளிக்குப் பிறகு விட்ட இடத்திலிருந்து ஸ்ரீ லலிதா சஹஸ்ரநாமம் இனி தினமும் நிறைவு பெரும் வரை தொடரும் என்று ஒரு தீர்மானத்தை மனதில் உறுதிப்படுத்திக் கொண்டேன். உடல் ஒத்துழைப்பு கண்டிப்பாக இருக்க ஸ்ரீ அம்பாள் துணை செய்வாள்.

ஸ்ரீ லலிதா சஹஸ்ரநாமம் என்றாலே ஸ்ரீ சக்ரம் மனதில் எழுகிறது. அம்பாளுக்கும் சக்கரத்திற்கும் என்ன தொடர்பு?. சக்கரத்தோடு இன்னொரு பெயரும் சம்பந்தப்பட்டிருக்கிறது ஸ்ரீ சக்கரத்தம்மாள். காலப்போக்கில் அவரை சர்க்கரை அம்மாள் என்று இனிப்பாக மாற்றிவிட்டார்கள் நிறைய பேருக்கு அவரைத் தெரியாது என்பதாலும் அவசியம் தெரிந்து கொள்ளப்பட வேண்டியவர் என்பதாலும் இந்த கட்டுரை:

சித்தர்கள் ஞானிகள் என்றால் தாடி மீசை காவி ஆண்கள் மட்டுமில்லை. பெண்களும் சேர்க்கை. 
தமிழ் நாட்டின் பல பாகங்களிலிலிருந்து வந்து சென்னையில் சமாதி கொண்ட பரம ஞானிகள், பட்டினத்தார், பாம்பன் ஸ்வாமிகள் போன்றவர்கள்.அவர்களில் ஒருவர் சக்கரத்தம்மாள். திருவண்ணாமலை போளூர் அருகில் தேவிகாபுரத்தில் ஏறக்குறைய 200 வருஷங்கள் முன்பு 1854ல் பிறந்தவர் அனந்தாம்பாள். சென்னை கோமளீஸ்வரன் பேட்டை கோமளீஸ்வரர் மடத்தின் அதிபதியான சாம்பசிவனுடன் 8 வயதிலேயே கல்யாணம். சாம்பசிவனுக்கோ 23. இரண்டாவது திருமணமும் கூட. அப்போது பால்ய விவாகம் சட்ட பூர்வமாக வழக்கத்தில் இருந்தது. கோமளீஸ்வரன் பேட்டைக்கு (இன்றைய காயலான் கடை புதுப்பேட்டைதான்!) வந்து சேர்ந்தார். தேவிகா புரம் பெரிய நாயகி அம்மன் கோயிலில் அம்பாளைப்பார்த்தபடி மணிக்கணக்கில் தியானம் செய்தவர். லலிதா சகஸ்ரநாமம், ஸ்ரீஸ்துதி போன்றவற்றை தந்தையிடமிருந்து கற்றுக்கொண்டு தினமும் ஓதி வந்தாள் சிறுமி அனந்தாம்பாள். கோயிலின் மேல்நிலைக்குச் சென்று தனியாக அமர்ந்து தியானம் செய்வது அவளுக்கு மிகவும் விருப்பமான ஒன்று.

இளம் வயதிலேயே விதவை. அப்பா அந்த கோவில் அர்ச்சகர். அம்மா ஒரு சிவ பக்தை. கேட்கவேண்டுமா அனந்தாம்பாளின் பக்திக்கு.

போளூர் அருகிலேயே வில்வாரணியம் என்ற இடத்தில் ஒரு சிறு குன்றில் இருந்த யாரும் வராத ஒரு பாழ் மண்டபத்தில் தன்னந் தனியே குணாம்பா என்ற சந்நியாசினி அந்த காலத்தில் இருந்தார். அவரிடம் சென்ற அனந்தாம்பா, ஸ்ரீ சக்கர உபாசனை மார்க்கத்தை அடையும் உபதேசம் பெற்றார். சிறு பெண்ணான அனந்தம்பாவால் அடிக்கடி வந்து தரிசிக்க முடியாது என்று குரு குணாம்பா, உடம்பை லேசாகப்பண்ணிக்கொண்டு பறவைகள் போல் பறக்கும் சக்தியை (இதற்கு லஹிமா சித்து என்று பெயர் ) அளித்தார்.

ஸ்ரீ சக்ர உபாசனையில் சதா சர்வ காலமும் ஈடுபட்டதால் அனந்தாம்பா ஊரில் எல்லோருக்கும் சக்கரத்தம்மா ஆகிவிட்டார். வருஷங்கள் நூறுக்கு மேல் ஓடிவிட்டதே திருவல்லிக்கேணி ட்ரிப்ளிகேன் ஆனது போல் சக்கரத்தம்மாவை இப்போது சர்க்கரை அம்மாள் என்றால் தான் தெரியும்.

கல்வியற்ற 20 வயது இளம் விதவை தலை மொட்டை அடிக்கப்பட்டு, காவி உடுத்தி அனந்தாம்பா சென்னை கோமளீஸ்வரன் கோயில் வாசலில் அமர்ந்து தனக்குள் ஆத்ம ஞானத்தில் ஆழ்ந்து சிரிப்பார், அழுவார், பேசுவார்... 'யான் எனதென்பது அறியேன், பகலிரவாவது அறியேன் '' என்ற ப்ரம்ம ஞான நிலை. ஆகவே இலவசமாக பைத்தியம் பட்டம் கிடைத்தது. ஒருநாள் மைலாப்பூரில் ருந்து ஒரு பெரிய டாக்டர் எம். சி. நஞ்சுண்ட ராவ் கோமளீஸ்வரன் பேட்டை கோவிலில் சக்கரத்தம்மாவை பார்க்கிறார். அவரை அத்வைத ஞானி என்று உணர்கிறார். தமது குருவாக ஏற்கிறார். நஞ்சுண்டராவ் சென்னைக்கு விவேகானந்தர் வந்தபோது உலக பிரபலம் ஆகும் முன்பே அறிமுகமானவர். விவேகானந்தருக்கு ஆதரவளித்தவர்

28.2.1901 அன்று சக்கரத்தம்மாள் தேக வியோகம் அடைந்தார். நஞ்சுண்டராவ் அவருக்கு திருவான்மியூரில் சமாதி எழுப்பினார் இன்றும் இருக்கிறது. கலாட்சேத்திரா சாலையும் காமராஜர் சாலையும் சந்திக்கும் இடத்தில் உள்ளது. அவசியம் சென்று தியான மண்டபத்தில் கண்ணைமூடி அவரை வேண்ட வேண்டும்.

கணவன் அயோக்கியன் என்று தெரிந்தும்,கொடுமைப்படுத்தினாலும் தனது கடமையில் சக்கரத்தம்மாள் தவறவில்லை. ஆன்மீக நாட்டம் நாளுக்கு நாள் வளர்ந்த வண்ணம் இருந்தது. தினந்தோறும் அருகில் உள்ள கோமளீஸ்வரர் கோயிலுக்குச் செல்வார். தியானத்தில் ஈடுபடுவார். லலிதா சகஸ்ரநாமம் சொல்லுவார். இறைவனை வேண்டி, உளம் உருக வழிபட்டு வருவார்.

சக்கரத்தம்மாள் ஒரு 'ஞான சொருபிணி' 'பிரம்ம யோகினி' என்பதை கொஞ்சம் கொஞ்சமாக உலகம் அறிந்தது. சண்முக முதலியார் என்பவர் முதல் சீடரானார். தொடர்ந்து பலரும் அம்மாவை நாடி வந்து வணங்க ஆரம்பித்தனர். அவர்களுள் முக்கியமானவர் தான் டாக்டர் நஞ்சுண்டராவ்.

விவேகானந்தர், அமெரிக்காவிலிருந்து ஒரு கடிதத்தில் "எனக்கு சென்னையைப் பற்றி மிகப் பெரிய நம்பிக்கை உள்ளது. சென்னையிலிருந்து ஒரு மிகப்பெரிய ஆன்மீக அலை உருவாகப் போகிறது. அது இந்தியாவெங்கும் பரவி ஒளி வீசப் போகிறது. இதில் எனக்கு பெருத்த நம்பிக்கை இருக்கிறது" என்று டாக்டர் நஞ்சுண்டராவுக்கு எழுதிகதை நான் படித்திருக்கிறேன்.

நஞ்சுண்டராவ் சக்கரத்தம்மாளோடு திருவண்ணாமலை சென்று விருபாக்ஷி குகையில் தங்கியிருந்த பகவான் ரமணரையும் தரிசித்தார். ஆசி பெற்றார். நீண்ட நேரம் சமாதி நிலையில் இருப்பார் சக்கரத்தம்மாள். ஆழ்ந்த பரிபூரண ஞானநிலை. ஒரு சமயம் கண்ணைத்திறந்து ''நான் இப்போது திருவண்ணாமலை சென்று ரமண மகரிஷிளோடு உரையாடி விட்டு வந்ததாகவும், சேஷாத்ரி சுவாமிகளை தரிசனம் செய்து விட்டு வந்தேன் '' என்பார். நாம் கூசாமல் பைத்யம் என்கிறோம்.

தமிழறிஞர் திரு. வி.க. ஒருநாள் சக்கரத்தம்மா பறந்து வந்து மாடியில் இளைப்பாறியதை கண்ணால் பார்த்திருக்கிறார். அவர் எழுதிய ''உள்ளொளி'' நூலில் இப்படி எழுதி இருக்கிறார்:

"சென்னை கோமளீசுவரன் பேட்டையில் ஓர் அம்மையார் இருந்தார். அவர் காலஞ்சென்ற டாக்டர் நஞ்சுண்டராவின் குரு என்று உலகம் சொல்லும். அவ்வம்மையார் பறவையைப் போல வானத்தில் பறப்பார் . ஒருமுறை யான் வசித்த கல்லூரியின் மேல்மாடியில் பறந்துவந்து நின்றனர். மானுடம் பறக்கிறதெனில் உலகம் அதை எப்படி வியக்குமென்று சொல்ல வேண்டுவதில்லை. அக்காலத்தில் சென்னையில் வதிந்த விஞ்ஞானியர் பலர் சூழ்ந்து சூழ்ந்து அம்மையார் நிலையை ஆராய்வர். அப்பொழுது சென்னை மியூஸியத் தலைவராயிருந்த ஓர் ஐரோப்பியரால் பறவையார் நிலை பெரிதும் ஆராயப்பட்டது. அம்மையார் பறவை இனத்தைச் சேர்ந்தவரென்றும், அவரிடம் பறவைக்குரிய கருவி கரண அமைப்புகள் சில உள்ளன என்றும், கூர்தல் (Evolution) அறப்படி அத்தகையப் பிறவி இயற்கையில் அமைதல் கூடும் என்றும் அவரால் விளக்கப்பட்டன. அவர் விளக்கம் மற்றவரால் ஏற்றுக் கொள்ளப்படவில்லை. யான் 'தேசபக்தன்' ஆசிரியனாகியபோது டாக்டர் நஞ்சுண்டராவிடம் நெருங்கிப் பழகுதல் நேர்ந்தது. பறவையாரைப் பற்றி அவரை நான் விசாரித்தேன். அவர், 'அம்மையார் சித்தரினத்தில் சேர்ந்தவர்' என்று கூறினர். பறவை நாயகியார் நிலை மனோதத்துவத்துக்கு எட்டுவதா? உன்னிப் பாருங்கள்".
-- திரு.வி.க வுக்கு பொய் சொல்ல வேண்டிய அவசியம் இல்லை

ஒருமுறை நஞ்சுண்டராவ் காஞ்சி மகா பெரியவாளை தரிசனம் செய்த பொது '' சக்கரத்தம்மா சமாதி ஆலயம் ஒரு மகத்தான் சக்தி பீடம். நீங்களும் எல்லோரும் அங்கே தவறாமல் பூஜைகள் செய்யவேண்டும்.'' என்று கூறி இருக்கிறார்.

இறைவன் இருப்பது சர்வ நிச்சயம். கலப்படம் இல்லாத உண்மை. மனித அறிவுக்கு எட்டாத, விஞ்ஞானம் அறியாதவற்றை எல்லாம் மூட நம்பிக்கை என்று நாக்கு பேசும் வரை இதை உணர முடியாது.

  

No comments:

Post a Comment