வாரியார் சொன்ன "சாமியாரும் குரங்கும்" என்ற அருமையான கதை
ஒரு சாமியாரின் ஆசிரமத்துக்கு நண்பர் ஒருவர் வந்தார்.
அவருக்கு உணவு கொடுக்க விரும்பிய சாமியார் தான் வளர்த்த குரங்கைப் பார்த்து இலை போடு என்றார். குரங்கு வாழை இலை எடுத்து வந்து போட்டது. உடனே சாமியார் தன் கையில் வைத்திருந்த பிரம்பால் குரங்கின் தலையில் ஓங்கி அடித்தார். சாதம் போடு என்றார். குரங்கு சாதம் கொண்டு வந்து பரிமாறியது. திரும்பவும் தலையில் அடித்தார். அவர் சொன்னதை எல்லாம் குரங்கு சரியாகச் செய்தாலும் அடி விழுந்து கொண்டே இருந்தது.
நண்பருக்கு மனம் பொறுக்கவில்லை. சாமி குரங்கு தான் நீங்கள் சொன்னதை எல்லாம் சரியாகச் செய்கின்றதே. அந்த வாயில்லாச் ஜீவனை ஏன் அடித்துத் துன்புறுத்துகிறீர்கள் என்று கேட்டார். சாமியார் எதுவும் பேசவில்லை. சிரித்து விட்டுப் பிரம்பை தானிருந்த பாயின் கீழே ஒளித்து வைத்தார்.
சற்று நேரத்தில் குரங்கு தாவிப் பாய்ந்து சாப்பிட்டுக் கொண்டிருந்தவரின் தோளில் ஏறி இருந்தது. காதைப் பிடித்து இழுத்தது. தலை மயிரைப் பிரித்துப் பேன் பார்த்தது. சாப்பிட்ட இலையில் வாலைத் தொங்க விட்டு ஆட்டியது. ஐயோ சாமி இந்தக் குரங்கின் தொல்லை தாங்க முடியவில்லை அடி போடுங்கள் என்றார் நண்பர்.
சாமியார் பிரம்பை எடுத்துக் குரங்கின் தலையில் அடித்தார். அது போய் ஒரு மூலையில் அமைதியாக இருந்தது.
சாமியார் சொன்னார். இந்தக் குரங்கைப் போலத் தான் மனித மனங்களும். நாம் சொன்னதை எல்லாம் மனம் கேட்டு நடக்கின்றதே என்று விட்டு விடக் கூடாது.
தேவாரம், திருவாசகம் தியானம்
தவவிரதங்கள் என்னும் பிரம்புகளால் தொடர்ந்து தட்டிக் கொண்டே இருக்க வேண்டும். சற்று ஓய்வு கொடுத்தாலும் தாவத் தொடங்கி விடும் என்றார்.
❤சிவனென்றிரு மனமே❤
No comments:
Post a Comment